Loading

அத்தியாயம்- 18

 

          தேவா தந்த அதிர்ச்சியில் உறைந்திருந்த தேன்மலர், என்ன நடக்கிறதென்றக் குழப்பத்தில் ஆழ்ந்தாள். ஒருவேளை தான் கனவேதும் காண்கிறோமா? என்று எண்ணமிட்டவள், உடனே எழுந்துக் குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரை வாரி வாரி முகத்திலடித்தாள். எவ்வளவு நீரை அடித்தாலும் அவன் இதழ் பட்ட நெற்றியில் குறுகுறுப்பை உணர்ந்தவள், தன் துப்பட்டாக் கொண்டு நெற்றியை அழுந்தத் துடைத்தாள். அப்போதும் அந்த குறுகுறுப்புக் குறையாமலிருக்க, மெல்ல கையால் அவன் முத்தமிட்டு இடத்தைத் தடவியவளுக்கு, சில்லென்று ஏதோ உள்ளே படர்வதையும் அதே சமயம் தாயின் கதகதப்பான அரவணைப்பையும் ஒரு சேர உணர முடிந்தது.

 

     இதுவரை அனுபவித்திராத அவ்வுணர்வில் திளைத்தவள், “காபி குடிக்க வர்றியா வர்லயா…” என்ற தேவாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள், வேக வேகமாக தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு அறை விட்டு வெளியேறினாள். தேன்மலரை தேவா ஏன் அப்படி நடந்துக் கொண்டான்? ஒருவேளை தன்னை அவனுக்குப் பிடித்திருக்கிறதா? இல்லை தன்மீது கொண்ட அன்பால் அப்படி நடந்துக் கொண்டானா? என்ற பல கேள்விகளும் குழப்பங்களும் ஒருபுறம் அவளை அலைக் கழிக்க, மறுபுறம் தேவா நடந்துக் கொண்ட விதத்தால் அவளுள் தோன்றிய வெட்கமும் அவனை எப்படி எதிர்கொள்வதென்ற தயக்கமும் பாடாய்ப் படுத்தியெடுத்தது. தேன்மலர் இப்படி கலவையான உணர்வுகளோடு அறை விட்டு வர, தேவா கையில் இரு காபிக் கோப்பைகளுடன் இதழ்களில் புன்னகைத் தவழ அவளைப் எதிர்நோக்கி நின்றிருந்தான். 

 

      தேன்மலர் தான் அவன் புன்னகையில் திணறிப் போனாள். எப்போதும் அவன் கண்ணைப் பார்த்து பேசும் தேன்மலரால் இன்று அவனை நிமிர்ந்துக் கூட பார்க்க முடியாமல் போக, “ஏய் தேனு… இப்டி வெக்க பட்றது தயக்க பட்றதுலாம் உனக்கு வரவே வராத விஷயம்…. அவரு ஒருவேளை, நேத்து நீ அவர கவனிச்சுக்கிட்டதுனால கூட ஒரு பாசத்துல அப்டி நடந்துட்ருந்துருக்கலாம்… கண்டதையும் கற்பனை பண்ணாம… அவரோட எப்பயும் போல பேசு…” என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட பின்புதான் அவளுள் ஒரு தெளிவு ஏற்பட்டது. 

 

                அதன் பின்பே அவனை நிமிர்ந்து நோக்கி, மென்னகையோடு “குட் மார்னிங் சார்…” என்றாள். 

 

      தேவாவும் எதுவும் நடவாதது போல் இயல்பாக “குட் மார்னிங் மலர்…” என்றான். 

 

    தேன்மலர் “ஏன் சார் நீங்க காபி போட்டீங்க… உங்களுக்கு உடம்பு சரியில்லல… ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே… நா போட மாட்டனா…” என்றாள். 

 

     தேவா அவளைப் பார்த்து சிரித்து “யார் நீ போடுவியா… நீ எழுந்து அரைமணி நேரமாச்சு… நா கூப்டதுக்ப்றம் தான் வர… நானும் வெயிட் பண்ணி பாத்தேன்… சரி அதிர்ச்சிலேர்ந்து நீ இன்னும் தெளியல போலன்னு நானே போட்டுட்டேன்…” என்றான். 

 

     தேன்மலருக்கோ அவனது சிரிப்பும் பேச்சும் தான் நினைத்துதான் சரியோ என்று நினைக்க வைக்க, பின் இருக்காது இவன் விளையாடுகிறான் என்று உள்ளுக்குள் கூறி கொண்டவள் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி தயங்கி “அது… அது…” என்றாள். 

 

     தேவா அவளின் திணறுலும் தயக்கமும் கண்டு இன்னும் சிரித்தவன் “நைட் என்னால சுத்தமா முடில…. ஆனா இப்போ எழுந்ததுலேர்ந்து ரொம்ப ப்ரஷா எனர்ஜெடிக்கா ஃபீல் பண்றேன்…” என்று அழுத்திக் கூறி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான். 

 

     அவன் பேச்சில் தேன்மலர் திகைத்து இதயம் படபடக்க அவனைப் பார்க்க, அவனோப் புன்னகை மாறாமல் தலை சாய்த்து அவளைப் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கினான். தேன்மலருக்கு அவனது பார்வையும் புன்னகையும் மாலை நேரத்து மழைச் சாரலாய் அவளுள் குளுமையைப் பரப்ப, அன்னிச்சையாய் அவளது இதழ்கள் மென்னகைப் புரிய, கன்னம் சிவந்து அவனது விழிகளை சந்திக்க முடியாமல் பெண்ணவள் திணறிப் பார்வையை வேறுபுறம் திருப்பினாள். அவளைக் கண்ட தேவாவிற்கு இதழ்கள் மந்தகாசப் புன்னகையை சிந்த, உள்ளம் குளிர்ந்து குதூகலமாய்க் கூத்தாட, விழிகள் அவளது நாணத்தை ரசனையாய்த் தழுவியது. அந்த நிலை இருவருக்குமே பிடித்திருக்க, இருவரும் மௌனம் விலக்காது இருந்தனர். தேவாவின் ரசனையானப் பார்வை தன் மேல் படர்வதை உணர்ந்தாலும், தேன்மலர் அவன் புறம் திரும்பாமல் பார்வையை எங்கெங்கோ சுழல விட்டாள். 

 

      அச்சமயம் அமீரா அங்கு வர, அவளைக் கண்ட தேன்மலர் “அப்பாடா…” என்றுணர்ந்து “வா மீரா…” என்றழைக்க, அவளது அழைப்பில் சுயம் பெற்ற தேவா, தன் பார்வையை தேன்மலரிடமிருந்து விலக்கி அமீராவை நோக்கியவன் அகமும் முகமும் மலர, புன்சிரிப்போடு “வா மீரா…” என்று குரலில் ஒருவித உற்சாகம் கலந்து அழைத்தான். 

 

            அமீரா தேவாவை விழி விரித்து ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள். தேவா “என்ன மீரா… அங்கயே நின்னுட்ட… உள்ள வா…” என்றழைக்கவும் தான் அமீரா உள்ளே வந்தாள். 

 

    அமீரா தேவாவை தொட்டுப் பார்த்து “தேவா…. நீ நல்லா தானே இருக்க…” என்று கேட்க, 

 

     தேவா புன்னகையுடன் “எனக்கென்ன மீரா… நல்லாதான் இருக்கேன்…” என்றான்.

 

     அமீரா “இல்லடா உனக்கு நேத்து பீவர் இருந்துச்சே… நா கூட வந்து இன்ஜெக்ஷன் போட்டேன்…” என்று கேட்க, 

 

      தேவா “காலைலேயே காய்ச்சல்லாம் காணாம போயிருச்சு…” என்று தேன்மலரை ஓரக்கண்ணால் அர்த்தமாகப் பார்த்து அமீராவிற்கு பதில் கூறினான். 

 

     அமீரா “ம்ம்…. காய்ச்சல் சரியானா சரி தான்… ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்துல பழைய சிரிப்பும் மலர்ச்சியும் பாக்றேன் தேவா…” என்று மனம் நிறைந்துக் கூறியவள், ஸோஃபாவில் அமர்ந்தாள். 

 

     தேவா “இனி அடிக்கடி நீ என்னை இப்டி பாக்கலாம் மீரா….” என்றவாறு தேன்மலரை விழியால் ஊடுருவ, ஏற்கனவே அவனதுப் பேச்சில் இதயம் படபடக்க நின்றிருந்த தேன்மலர், 

 

       அவனின் இந்த விழிப் பார்வை தாளாது மீராவிடம் திரும்பியவள் “மீரா… நீங்க பேசிட்ருங்க… நா போய் காபி எடுத்துட்டு வரேன்…” என்றுவிட்டு அவசர அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்தாள். 

 

      அவளின் பதட்டமும் படபடப்பும் கண்டு மெல்லிதாகப் புன்னகைத்த தேவா “அப்றம் மீரா… எப்டி இவ்ளோ காலைலேயே அங்கிள் உன்னை இங்க விட்டாரு…” என்றவாறு அவனும் ஸோஃபாவில் அமர்ந்தான். 

 

      அமீரா “அத்தா இனி இங்க வர எதுவும் சொல்ல மாட்டாரு… நேத்து நா அவர்கூட பேசனத பாத்து அத்தாக்கு ரொம்ப சந்தோஷம்…” என்று சிறிது வெட்கத்தோடுக் கூற, 

 

      தேவா “பார்றா… எப்பவும் இப்டி சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும் மீரா… அவர எப்போ எனக்கு இன்ட்ரோ தர…” என்று கேட்டான். 

 

     அமீரா “தேவா… கிண்டல் பண்ணாத…. அது என்னவோ தெரில அவர நினச்சாலே இந்த வெக்கம் வந்து ஒட்டிக்குது…. நீ என்கேஜ்மென்ட்க்கு வா இன்ட்ரோ தரேன்…” என்றாள். 

 

     தேவா நிறைவாக அவளைப் பார்த்து “உன் முகத்துல எப்பவும் இந்த சிரிப்பும் பூரிப்பும் இருக்கணும் மீரா…” என்று மனதில் நினைத்தவன் “ம்ம்… முடிஞ்சளவு வர பாக்றேன்…” என்றான். 

 

     அமீரா உதடு சுழித்து “சரி போனா போகுது போ… அத்தாவே காலைல என்னை கூப்ட்டு இனி நா உனக்கு எந்த கன்டிஷனும் போட மாட்டேன்னுட்டாரு… நானும் சிரிச்சுட்டு உனக்கு பீவர் பாத்துட்டு வரவான்னு கேட்டேன்… அவரும் சிரிச்சுட்டே போய்ட்டு வான்னாரு… நா வந்துட்டேன்….” என்று கூற, தேவா மென்னகைப் புரிந்தான். 

 

             அடுக்களைக்குச் சென்ற தேன்மலருக்கு இதயம் வெளியே வந்து குதித்து விடுமோ என்னுமளவுக்கு எகிறித் துடிக்க, படபடப்பில் கை, காலெல்லாம் அவள் பேச்சைக் கேட்பேனா என்று சதி செய்ய, பால் சுட வைக்க எடுத்தப் பாத்திரத்தைக் கீழே நழுவ விட்டாள். அந்த சத்தம் கேட்டு பேசிக் கொண்டிருந்த தேவாவும் அமீராவும் அங்கு விரைய, தேன்மலர் அவர்களைக் கண்டு “ஒன்னுமில்ல பாத்திரம் கைலேர்ந்து தவரிருச்சு… நீங்க போங்க நா காபி கொண்டு வரேன்…” என்று கூறி பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்தாள். 

 

     தேன்மலரை பார்த்த தேவா, அமீராவை போகச் சொல்லிவிட்டு “மலர்…” என்றழைத்தான். தேன்மலர் திரும்பி அவனைப் பார்க்க, தேவா அவள் விழிகளை கூர்மையாக நோக்க, தேன்மலர் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். தேவா அவளை நெருங்கி நாடிப் பிடித்து அவள் முகம் நிமிர்த்தி அவளதுக் கண்களைப் பார்க்க, அவனதுக் கண்களைக் கண்ட தேன்மலர் விழிகள் கலங்கினாள். 

 

      தேவா “மலர்… என்னாச்சு இப்போ… நாம பேசலாம்… பதட்டப்படாம இப்போ காபி போட்டு எடுத்துட்டு வா…” என்று கூறி கொண்டே அவளது முகத்தில் தவழ்ந்த முடிகளைக் காதோரம் ஒதுக்கியவன் அவளதுத் தலை வருடி விட்டுச் சென்றான். அவனது பேச்சிலும் செயலிலும் அமைதியடைந்த தேன்மலர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டுக் காபிப் போட்டு எடுத்துச் சென்றாள். அமீராவிற்கு காபியைக் கொடுத்துவிட்டு மென்னகையோடு அவளும் அமர்ந்தாள். அமீராவும் தேவாவும் பேசிக் கொண்டிருக்க, தேன்மலர் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

            தேன்மலரின் தெளிவில்லாத முகம் கண்ட தேவா “பேசிட்ருங்க…. இதோ வரேன்….” என்று அடுக்களைக்குச் சென்றான். 

 

     அமீரா “மலர்… ஏன் அமைதியா இருக்க… நேத்து நைட் நா பேசுனதுல எதுவும் கோவமா…” என்று கேட்க, 

 

      தேன்மலர் அவசரமாக மறுத்து “அதெல்லாம் இல்ல மீரா… ஏதோ யோசனைல இருந்துட்டேன்… நிச்சய வேலைலாம் எப்டி போகுது…” என்றாள். அமீரா புன்னகைத்து “ம்ம்… அதெல்லாம் சிறப்பா போகுது… நீயும் வந்தா நல்லார்க்கும்…” என்றாள். தேன்மலர் “இல்ல மீரா…” என்று ஏதோ கூற வந்தவள் தேவா வரவும் அமைதியாகி விட்டாள். 

 

      அவளைப் பார்த்துக் கொண்டே வந்த தேவா பிஸ்கட்கள் இருந்தத் தட்டை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்தான். தேன்மலர் தான் அவன் செயலில் ஏற்பட்ட படபடப்பை மறைக்க பெரிதும் சிரமப்பட்டாள். தேவா இயல்பாக அமர்ந்து அமீராவோடு பேச ஆரம்பித்தவன், மெல்ல தேன்மலரின் கைப்பற்றி அழுத்தம் கொடுத்தான். 

 

     தேன்மலர் அந்த அழுத்தத்தில் என்ன உணர்ந்தாளோ? அவள் அவன் முகம் நோக்க, அவன் இமை மூடித் திறக்கவும் ஆசுவாசமடைந்து நிம்மதிக் கொண்டாள். 

 

     அமீரா இதை அமைதியாகக் கவனித்தவள், தேவாவிடம் கண்களால் வினவ, அவன் புன்னகைக்கவும் சிறு சிரிப்போடுத் தலையாட்டியவள் தேன்மலரை கண்டு சிநேகமாகப் புன்னகைப் பூத்தாள். தேன்மலரும் பதிலுக்கு மென்னகைப் புரிந்தாள். அமீரா பேசிவிட்டு போகும் வரை தேவாவும் பற்றிய கை விலக்கவில்லை, தேன்மலரும் விலக்க முயற்சிக்கவில்லை. 

 

     தேன்மலர் அவனின் கைப் பற்றுதலில் ஒருவித நிம்மதியும் பாதுகாப்பையும் உணர, இப்படியே அவன் கைப்பற்றியே வாழ்க்கையைக் கடந்துவிட வேண்டுமென்று எண்ணினாள். எண்ணிய மறுகணம் தன் எண்ணத்தை எண்ணி திடுக்கிட்டாள். தனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது? தன் மனம் அவனின் பால் சாய்ந்து விட்டதா? என்று மீண்டும் குழம்பினாள். 

 

            அமீரா விடைபெற்று கிளம்ப, தேவா தேன்மலரின் குழம்பிய முகத்தைத் கண்டவன், அவளைத் தன் கண் பார்க்க வைத்தான். தேவா “மலர்…. நீ என்ன நினக்கிற… ஏன் குழம்புற எல்லாமே உன் முகமே எனக்கு சொல்லுது… உன்னை மாறி தான் நானும் குழம்புனேன்… ஆனா நேத்து தான் தெளிவானேன்… உடனே உன்கிட்ட நா என்ன ஃபீல் பண்றேன்னு சொல்லனுனு தோனுச்சு… அத என் செயல் உனக்கு உணர்த்திருச்சு… அதான் உனக்கு இவ்ளோ பதட்டம், குழப்பமெல்லாம்… இது என் விருப்பம் தான்… உனக்கு விருப்பமா இல்லயானு நீ தான் முடிவு பண்ணனும்…. ஆனா எனக்கு மனைவியா ஒருத்தி வரணுனா… அது நீ மட்டும் தான்ன்றதுல நா தெளிவா இருக்கேன்…” என்றான். 

 

     தேன்மலர் அதைக் கேட்டு கண்கள் கலங்க “வந்து நா…” என்று ஏதோ கூற வர, தேவா அவள் உதட்டில் கை வைத்து “ஷ்ஷ்ஷ்… நீ எதுவும் சொல்ல வேணாம்… உனக்கு விருப்பம்னா அது எனக்கு தெரிஞ்சுரும்…” என்றான். 

 

    தேன்மலர் கேள்வியோடுப் பார்க்க, தேவா இதழ் விரித்து, அவள் விழி பார்த்து “எப்டினு தானே கேக்ற…” என்று கேட்க, தேன்மலர் ஆமென்று தலையாட்ட, தேவா “இந்த கண்ணு எனக்கு சொல்லிடும்…” என்றான். தேன்மலர் இதழ் விரிக்க, தேவாவும் புன்னகைத்தான். 

 

     அச்சமயம் தேன்மலரின் கைப்பேசி ஒலியெழுப்ப, தேவா அவளது கைவிட்டு “எதுவும் யோசிக்காம போ… இயல்பா இரு… மனசு தெளிவாகும் போது அதுவே உனக்கு வழிகாட்டும்…” என்றான். 

 

     தேன்மலரும் புன்னகைத்து தலையாட்டி, தன் கைப்பேசிக்கு வந்த அழைப்பை ஏற்றாள். அந்தப் பக்கம் என்ன பேசினார்களோ? அதுவரை மலர்ந்திருந்த தேன்மலரின் முகம் உணர்ச்சிகளற்று இறுக, “சரி… நீங்க பாத்துக்கோங்க…. எதாவது வேணும்னா கால் பண்ணுங்க…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள். 

 

     அவளின் முகமாறுதல்களைக் கவனித்த தேவா அவளை அமைதியாகப் பார்க்க, தேன்மலர் “அப்பாவுக்கு சர்ஜரி ஸ்டார்ட் பண்ண போறாங்க… முடிஞ்சு அப்பா கண்முழிக்க ரெண்டு நாளாகும்…” என்றவள் அமைதியாக அமர்ந்து விட்டாள். 

 

    அவளருகில் அமர்ந்த தேவா, அவளதுக் கைப்பற்றி “மாமாவுக்கு ஒன்னும் ஆகாது மா… கவலப்படாம இரு… மாமா பழைய மாறி உன்கூட சீக்ரம் பேசுவாரு….” என்று கூற, தேன்மலர் தலையை மட்டும் ஆட்டினாள். 

 

              தேவா “சரி எழுந்து போய் குளிச்சிட்டு வா…” என்று கூற, தேன்மலர் எதுவும் கூறாமல் சாவிக் கொடுத்தப் பொம்மையாக எழுந்துச் சென்றாள். 

 

        தேவா அவள் செல்வதைப் பெருமூச்சோடுப் பார்த்தவன், அவனும் அவனறைக்குச் சென்றான். தேவா தயாராகி வந்து காலை உணவை சமைத்து முடித்தவன், குளித்துவிட்டு வந்து சாமி அறையில் விளக்கேற்றி ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த தேன்மலரை சாப்பிட அழைத்தான். தேன்மலர் அவன் அழைத்ததெல்லாம் காதில் வாங்காமல் சாமிப் படத்தையே வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். 

 

      தேவா அவளை எவ்வளவு அழைத்துப் பார்த்தும் அவளிடம் அசைவில்லாதுப் போக, அவளருகில் அமர்ந்து அவளைத் தொட்டு உலுக்க, தேன்மலர் திரும்பி அவனைப் பார்த்து விட்டு மீண்டும் இறுக்கமாக அமர்ந்துக் கொள்ள, தேவா தான் அவளைப் பார்த்த வண்ணம் அருகில் அமர்ந்து விட்டான். மதியம் வரை அவள் அப்படியே அமர்ந்திருக்க, தேவா, காய்ச்சல் கண்ட உடம்பு ஆகையாலும் காலையிலிருந்து அன்னமிறங்காமலிருக்கவும் சோர்ந்து மயக்கம் வரும்போல் அமர்ந்திருந்தான். 

 

     அப்போது தான் தேவாவின் நிலை உணர்ந்த தேன்மலர் தன்னைத் தானேக் கடிந்துக் கொண்டு அப்போதும் இறுக்கம் தளர்த்தாமல் “சார்… நீங்க ஏன் சாப்பிடாம இருக்கீங்க…” என்னும் போதே தேவா பார்த்தப் பார்வையில் வாயை மூடிக் கொண்டாள். அவன் பார்த்தப் பார்வை “நீ சாப்படாம நா மட்டும் எப்டி சாப்டுவேன்…” என்றிருந்தது. 

 

      பின் எழுந்து “சரி வாங்க சார் சாப்டலாம்…” என்றழைக்க, தேவா மெல்ல எழுந்து சோர்வாக நடந்து வந்தான். தேன்மலர் ஒரு தட்டில் உணவைப் பரிமாறி, இட்லியைப் பிய்த்து சாம்பாரில் குழைத்து தேவாவின் வாய் முன் நீட்ட, அவனும் இட்லியைப் பிய்த்து அதேபோல் அவள் வாய் முன் நீட்டினான். அவன் கண்களைப் பார்த்த தேன்மலர் வாய்த் திறக்க, அவளுக்கு ஊட்டினான். பின் அவன் வாய்த் திறக்க, அவள் தேவாவிற்கு ஊட்டினாள்.

 

       தேன்மலர் இரண்டு இட்லி சாப்பிட்டதுமே போதுமென்று விட, அவள் இவ்வளவு சாப்பிட்டதேப் பெரிது என்று உணர்ந்த தேவா தட்டை அவள் கையிலிருந்து வாங்க, அவள் தராமல் அவனுக்குத் தொடர்ந்து ஊட்ட, தேவா அவள் விழிகளை நோக்கியவாறே உண்டான். அவள் கண்களில் இறுக்கத்தைத் தாண்டியத் தன்மீதான அக்கறையை உணர்ந்தவன், அமைதியாக உண்டு முடிக்க, தேன்மலர் கைக் கழுவி, அவனுக்கு மாத்திரைக் கொடுத்து விட்டு மீண்டும் சாமி அறைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டாள். தேவா அவளின் வேதனைக் கண்டு வருந்தி, அவளைத் தொந்தரவுச் செய்யாமல் கூடத்தில் கண்கள் மூடி அமர்ந்து விட்டான்.

 

            தேவா மாத்திரையின் வீரியத்தாலும் உடல் சோர்விலும் அப்படியே உறங்கி விட, மீண்டும் கண் விழித்தவன், வெளியே இருள் கவிழ்ந்திருப்பதைக் கண்டு “ச்ச… இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்….” என்று தன்னை நொந்துக் கொண்டு வேக வேகமாக சாமி அறைக்குச் சென்றுப் பார்க்க, அங்கு தேன்மலர் இல்லை. பதட்டமடைந்து கூடத்திற்கு வந்தவன், அடுக்களையில் ஏதோ சத்தம் கேட்கவும், அங்குச் சென்றுப் பார்க்க, தேன்மலர் இரவு உணவு சமைத்து மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். 

 

     அதன் பின்பே நிம்மதிக் கொண்டவன், இன்னும் இறுக்கம் குறையாமலிருந்த அவளைப் பார்க்க, அவனைப் பார்த்த தேன்மலர் அழுத்தமாக அவனைப் பார்த்து வைத்தாள். 

 

      தேவா “இல்ல மா… உன்னை காணோம்னு பயந்துட்டேன்…” என்றவாறு இருக்கையில் அமர, தேன்மலர் மௌனமாக அவனுக்கு உணவைப் பரிமாறினாள். தேவா சாப்பிடாமல் அவளைப் பார்க்க, தேன்மலர் தானும் ஒரு தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு அமர்ந்தப் பின்பே உண்ண ஆரம்பித்தான். 

 

       தேன்மலர் அவனுக்காக இரண்டு வாய் உண்டாலும், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை உணவை அளைந்துக் கொண்டேயிருந்தாள். தேவா அதைக் கண்டும் காணாமலும் உண்டு முடித்தவன், அவளை விலக்கிவிட்டு தானே அனைத்தையும் எடுத்து வைத்து அடுக்களையை சுத்தம் செய்தான். தேவா கூடத்திற்கு வர, தேன்மலர் எங்கோ வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். அவளின் இறுக்கமும் மௌனமும் அவனைக் கொல்ல, அவளை எப்படி கையாள்வதென்று தெரியாமல் தவித்துப் போனான். 

 

      பின் “மலர்… இப்டியே உக்காந்துருக்க போறியா… வா…” என்று அவளைக் கைப் பிடித்து அவளறைக்கு அழைத்துச் சென்றான். தேவா அவளைப் பார்க்க, தேன்மலர் அவனைக் கட்டிலில் அமர வைத்து அவன் மடி மீது தலை வைத்துப் படுத்து இமை மூடினாள். தேவா அவளைப் பார்த்தவாறே அவளது தலை வருடினான். 

 

    அவள் இமை மூடியிருந்தாலும் அவள் தூங்கவில்லை என்பதை அவளது விழிப்பாவையின் அசைவில் உணர்ந்த தேவா, அவளது முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். அவளது வேதனையை அவனால் உணர முடிந்தது. அன்பான தந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது அவள் அருகில் இல்லையே என்ற அவளது தவிப்பும் வேதனையும் அவனையும் பாதித்தது. முப்பத்தியாறு மணி நேரம் அவளுக்கு முள் மேல் நிற்பது போலத்தான். இன்னும் ஒருநாள் இவளை எப்படி கையாள்வதென்ற யோசனையிலேயே தேவா உறங்கி விட்டான். 

 

                   காலை அவன் விழித்தப் போது தேன்மலர் அறையிலில்லாமல் இருக்க, தேவா வெளியேச் சென்றுப் பார்க்க தேன்மலர் குளித்து முடித்து சாமி அறையில் அமர்ந்திருந்தாள். முதல் நாள் போலவே அன்றும் தேன்மலர் மௌனமாகவும் இறுக்கமாகவும் இருக்க, மதியம் வரைப் பொறுத்துப் பார்த்த தேவா, அவளை இப்படியே விட்டால் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து வெளியில் அழைத்துச் சென்றாலாவது இயல்பாவாளென்று அவளை வற்புறுத்தி வெளியில் செல்ல சம்மதிக்க வைத்தான்.

 

      எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், அவள் இயல்பானால் போதுமென்று அவளை வெளியில் அழைத்துச் சென்றான். தேவா அவளின் பாதுகாப்பிற்காக அமீராவிடம் வாங்கி வைத்திருந்த புர்காவை அவளை அணியச் செய்தான். 

 

     அன்று காய்ச்சலிருந்தபடியால் அவனது காரை அலுவலகத்திலேயே விட்டு கால் டாக்ஸியில் வந்திருந்தான். இருசக்கர வாகனத்தில் அவளை தற்போது அழைத்துச் செல்வது நல்லதில்லை என்று கருதி டாக்ஸி புக் செய்திருந்தான். டாக்ஸி வந்ததும் தேன்மலரோடு பின்னால் அமர்ந்த தேவா, அவளது கையைப் பிடிக்க, தேன்மலர் அவனைப் பார்க்க, தேவா அவளைத் தான் பார்த்திருந்தான். இருவரும் மாலை மலரும் வேளையில் கடற்கரைக்கு வந்திருந்தனர். 

 

      அதனால் கூட்டமென்று ஒன்றுமில்லாது மனிதத் தலைகள் இங்கொன்றும் அக்கொன்றுமாய்த் தென்பட்டது. தேன்மலர் அலையாடும் கடலைக் கண்டவள் சற்று அமைதிக் கொண்டாள். தேவாவும் தேன்மலரும் ஓரிடத்தில் கடலைப் பார்த்தபடி அமர்ந்தனர். அப்போதும் தேவா தேன்மலரின் கைப் பற்றியிருந்தான். தூரத்தில் ஆர்ப்பரித்து வரும் அலை கரைத்தொடும் வேளை வேகம் குறைந்து சிறிதாய் சிதறி மீண்டும் கடலையே தஞ்சம் புகுவதைப் பார்த்த தேன்மலருக்கு மனித வாழ்க்கையும் அப்படி தான் என்று தோன்றியது. எல்லையில்லாது எங்கும் விரவியிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து உதித்த ஆன்மா உடல் என்னும் மண்க்கூட்டில் புகுந்து பூமியில் பிறப்பெடுத்து தன்னியல்பு தொலைத்து அம்மண்க்கூட்டின் உணர்வுகளான ஆசை, இச்சை,கோபம், மோகம், காமம், அழுகை, விருப்பு, வெறுப்பு என்பவைகளால் ஆட்கொண்டு ஆடி பின் தன் காலம் முடியும் தருவாயில் மண்க்கூட்டின் உன்னத உணர்வுகளான பாசம், நேசம், அன்பு என்பவைகளே மகத்துவம் வாய்ந்ததென்று உணர்ந்து அமைதிக் கொண்டு நிம்மதியாக மண்கூட்டை துறந்து மீண்டும் பிரபஞ்சத்தின் மடியையேச் சேர்கிறது. 

 

              இவ்வாறான எண்ணங்களோடு கடலை வெறித்திருந்த தேன்மலர், சிறு குழந்தையொன்று தான் விளையாடிக் கொண்டிருந்தப் பந்தைக் கடலில் எறிந்து விட்டு அதை எடுக்கச் செல்வதைப் பார்த்தாள். அவள் சுற்றி முற்றி பார்க்க, அக்குழந்தையின் பெற்றோர் இருவரும் புகைப்படம் எடுப்பதில் முனைப்பாய் இருப்பதுக் கண்டு, தேன்மலரே எழுந்துச் சென்று அந்தக் குழந்தைக்குப் பந்தை எடுத்துத் தந்தாள். பந்தை வாங்கிய அக்குழந்தை அவளது முகத்தை மூடியிருந்தத் திரையை விலக்கி, அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு மீண்டும் விளையாட ஓடிச் சென்றது. தேன்மலர் புன்னகைத்தவாறு திரும்பி தேவாவை பார்க்க, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த தேவாவும் முகம் மலர இதழ் விரித்தான்.

 

       பின் தேன்மலர் மீண்டும் முகத்தை மறைத்துக் கொள்ள, அவளருகில் வந்த தேவா “ஏதாவது சாப்ட்லாமா…” என்று கேட்க, 

 

      தேன்மலர் “சோளம் சாப்ட்லாம்…” என்று கூறவும், இருவரும் சோளம் விற்கும் இடம் நோக்கி நடந்தனர். தேவா சோளம் வாங்கிக் கொண்டிருக்க, தேன்மலர் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

       அப்போது அவர்களை நோக்கி நான்கைந்து பேர் வேகமாக வருவதைக் கண்டவள், அவர்களில் ஒருவன் தன்னை கடத்தியவன் போல் தெரியவும் “தேவா…. வாங்க…” என்று தேவாவின் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். 

 

     தேவா “என்னாச்சு மலர்… ஏன்…” என்று கேட்டவன், பின்னால் திரும்பி பார்க்க, நான்கைந்து பேர் அவர்களைத் துரத்தி வரவும், தேவா கேள்வி ஏதும் கேட்காமல் அவளோடிணைந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். 

 

       அக்குழந்தை தேன்மலரின் முகத்திரையை விலக்கியப் போது, லிங்கத்தின் ஆள் ஒருவன் அவளை அடையாளம் கண்டு தன்னோடு வந்தவர்களை அழைத்து வர, அதற்குள் தேன்மலர் அவர்களைக் கவனித்ததைக் கண்டவர்கள் அவளைத் துரத்த ஆரம்பித்தனர். லிங்கத்தின் ஆளோடு சேர்த்து தேன்மலரை அடையாளம் கண்டுக் கொண்ட இன்னும் ஒரு ஜோடி கண்களுக்குச் சொந்தக்காரன், அவளை யாரோ துரத்துவதைப் பார்த்ததும் வேகமாகத் தன்னோடு வந்த நண்பனை அழைத்துக் கொண்டு தாங்கள் வந்தக் காரை வேகமாக எடுத்து வந்து ஓடிக் கொண்டிருந்த தேவாவும் தேன்மலரும் சாலையை நெருங்கியதும் அவர்களை மறித்து நிறுத்தி, அவர்களை ஏறச் சொன்னான். காரில் இருந்தவனைக் கண்டு திகைத்து அதிர்ந்த தேன்மலர், அவர்களை துரத்தி வந்தவர்கள், அவர்களை நெருங்குவது அறிந்ததும் தேவா வேண்டாம் என்று சொல்லியும் கேளாது அவனையும் பிடித்திழுத்துக் கொண்டு காரில் ஏற, கார் சாலையில் வேகமெடுத்தது.

தொடரும்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்