Loading

அத்தியாயம்- 16

 

          லிங்கமும் அவன் ஆட்களும் அந்த ஆள் என்ன கூற போகிறாரென்று அவரை ஆவலாகப் பார்த்திருக்க, அவர் “பாத்துருக்கேன்…. நா பாத்துருக்கேன்…” என்றார். 

 

        லிங்கம் “எங்க சார் பாத்தீங்க… எப்ப பாத்தீங்க…” என்று கேட்க, 

 

      அவர் “பாத்துருக்கேன்… நா பாத்துருக்கேன்…” என்று மீண்டும் கூற, லிங்கம் “அதான் சார் எப்ப பாத்தீங்க….” என்று கேட்டான். 

 

      அவர் “அன்னிக்கு ஒருநாள்….” என்று ஆரம்பிக்கும்போதே ஒரு பெண்மணி “யோவ்… இன்னிக்கும் ஆரமிச்சுட்டியா… ரிட்டயர் ஆகி ஏன்ய்யா என் உசுர வாங்குர… டெய்லி இதே வேலயா அலையுறியேய்யா….” என்று வேகமாக அவர் முதுகில் நாலு அடி அடிக்க, 

 

      அந்த ஆள் தடுமாறியபடி “ஏய்…. சும்மா இரு டி….” என்று குழறியவன், 

 

       “நா பாத்துருக்கேன்… பாத்துருக்கேன்…” என்று தள்ளாடியபடி கண்கள் சொருக விரலை ஆட்டியபடி லிங்கத்திடம் கூறினார். 

 

      அப்போதுதான் லிங்கத்திற்கும் அவன் ஆட்களுக்கும் அவர் குடித்திருப்பதே தெரிந்தது. லிங்கத்தின் ஆள் ஒருவன் “அடப்பாவி… போதையில இருக்கானா இவன்…” என்று வடிவேலு பாணியில் கூற, 

 

     அதற்கு மற்றொருவன் “நம்மளே பெரிய குடிகாரனுங்க… நம்மளயே ஏமாத்திருக்கான் பாரு இந்த கெழவன்…” என்றான். 

 

      லிங்கம் எரிச்சலாக “டேய் வாய மூடுங்கடா… இந்தாம்மா…. உன் ஊட்டுகாரனா இந்தாளு…” என்று கேட்டான். 

 

        அப்பெண்மணி “ஆமா தம்பி…. நல்லாதான் இருந்தாரு…. வேலைலேர்ந்து எப்ப ரிட்டயர் ஆனாரோ… அப்பவே என் நிம்மதி போச்சு…. இனிமே என் இஷ்டத்துக்கு லைஃப என்ஜாய் பண்ண போறேன்னு டெய்லி குடிச்சுட்டு எதாவது ஏழரை இழுத்துட்டு வந்துவாரு… அதால என் நிம்மதி, மானம், மரியாத எல்லாம் போச்சு…. இவர் இப்டியிருக்றதால புள்ளங்ககூட வீட்டு பக்கம் வரமாட்டேங்குதுங்க… நல்லா உழச்சு ஓடா தேஞ்ச மனுஷன்… அதனால தான் இப்பயாவது அவர் இஷ்டத்துக்கு இருக்கட்டும்னு விட்டுட்டேன்…” என்று முந்தானையால் வாய் பொத்தி அழுக, 

 

     லிங்கம் “ச்ச ச்ச…. நெறுத்துமா…” என்றான். 

 

        அப்பொழுது அந்த ஆள் “பாத்துருக்கேன்… நா பாத்துருக்கேன்….” என்று கூற, 

 

       எரிச்சலான லிங்கம் “எம்மா… முதல்ல அந்தாள ஊட்டான்ட இட்னு போ… இல்லனா வர்ற கடுப்புக்கு போட்ற போறேன்… போ மா…” என்றான். 

 

       அப்பெண்மணி மேலும் அழுது “அய்யோ என்ன தம்பி…. இந்தாளு உங்கள்ட்ட பிரச்சனை பண்ணிட்டாரா…” என்று கேட்க, 

 

      லிங்கம் எரிச்சலாக முகம் திருப்பிக் கொள்ள, லிங்கத்தின் ஆள் தேன்மலரின் புகைப்படத்தைக் காட்டி “எம்மா… இந்த போட்டோவ இருக்ற பொண்ண பாத்துருக்கியான்னு கேட்டோம்… அதுக்கு கால் அவரா பாத்துருக்கேன் பாத்துருக்கேன்னு சொன்னதயே சொல்லிட்ருக்கான் இந்தாளு…” என்றான்.

 

               அப்பெண்மணி “அய்யோ தம்பி இந்தாள் சொன்னத நம்பியா இவன்ட்ட பேசிட்ருக்கீங்க…. போன வாரம் ஒருத்தன் அட்ரஸ் கேட்டதுக்கு தப்பான வழி சொல்லி…. அவன் மறுநாள் வந்து உன்னால முட்டு சந்துல முட்டிட்டு நின்னேய்யான்னு இவன மொத்திட்டு போனான்…. இவரு சொல்றதலாம் நம்பாதீங்க…. இப்டி தான் தம்பி தெனம் ஒரு பிரச்சனை இழுத்துட்டு வர்றான்…” என்றவாறு தன் கணவனை அடித்தாள். 

 

         லிங்கத்தின் ஆள் அப்பெண்மணியிடம் தேன்மலரை பார்த்திருக்கிறாரா? என்று கேட்க, அவர் இல்லை என்கவும் அவரின் கணவன் “இல்ல பாத்துருக்கேன்… நா பாத்துருக்கேன்….” என்று சொன்னதையே சொல்ல, 

 

          எரிச்சலான லிங்கம் “அடிங்க அரைபோதை நாயே….” என்று அவனை அடிக்க வர, 

 

      அவனின் ஆட்கள் அவனை தடுத்து அப்பெண்மணியிடம் “எம்மா…. சீக்ரம் உன் ஊடுக்காரன இட்னு போம்மா… அண்ணாத்த இருக்ற கடுப்புல போட்ற போறாரு….” என்றனர். 

 

        அப்பெண்மணி தன் கணவன் முதுகில் அடித்துக் கொண்டே “பாவி… பாவி… ஏய்யா இப்டி பண்ற… இவ்ளோ வருஷம் நல்லாதானேயா இருந்த…. இப்ப டெய்லி குடிச்சுட்டு வந்து என் உசுர வாங்குறியேயா…” என்று அழுதவாறு அவரை அழைத்துச் செல்ல, அவர் மறுபடியும் “பாத்துருக்கேன்… நா பாத்துருக்கேன்…” என்க, அப்பெண்மணி “யோவ்… பேசாம வாய மூடிட்டு வா…. இல்ல நானே உன்னை கொன்னு போட்ருவேன்…” என்றபடி அவர் கைப்பிடித்து தெருமுக்கிலிருந்த தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றாள். 

 

         எரிச்சலின் உச்சத்திலிருந்த லிங்கம் “ச்சை… எப்டி வந்து மாட்டுதுங்க பாரு… டேய் கார எட்றா… போதும் இங்க தேட்னது… எப்டியும் அவ சிட்டிக்குள்ள தான் இருப்பா பாத்துக்கலாம்….” என்று கூற, உடனே அவன் ஆள் காரை எடுத்துக் கொண்டு வர, லிங்கமும் மற்றவர்களும் காரில் ஏறி அந்தத் தெருவை விட்டு மறைந்தனர்.

 

                  தன் கணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அப்பெண்மணி “ஏய்யா… போதைல பொண்டாட்டியயே மறந்துருவ… இன்னிக்கு சரியா அந்த பொண்ண ஞாபகம் வச்சுருக்கியா நீ…. அந்த புள்ள நீ தெளிவா இருக்றப்ப தானே சொல்லிட்டு போச்சு…. அவனுங்களே ரௌடிங்க மாறி இருக்கானுங்க… அவனுங்கள்ட்ட பாத்துருக்கேன்னா சொல்ற…” என்று நாலு அடி அடிக்க, அவரோ போதையில் ஏதேதோ உளறி உருண்டு பிரண்டு பின் அப்படியே மயங்கி விட்டார். 

 

        அப்பெண்மணி “ச்ச இந்த மனுஷன கட்டிகிட்டதுக்கு இன்னும் என்னல்லாம் பாக்கணுமோ….” என்று அலுத்துக் கொண்டே, தன் கைப்பேசியில் தேவாவிற்கு அழைத்தார். 

 

    தேவா அழைப்பை ஏற்றதும் “தம்பி… நா காமாட்சி பேசறேன் பா…” என்றார். 

 

       தேவா “ம்ம்… சொல்லுங்க மா… நல்லார்க்கீங்களா… உங்க வீட்டுக்காரர் நல்லார்காரா…” என்று கேட்டான். 

 

     காமாட்சி “அவருக்கென்ன தம்பி… குடியும் கும்மாளமுமா நல்லாதான் இருக்காரு…” என்று சடைந்துக் கொள்ள, 

 

     தேவா “என்னமா… ஏதாவது முக்கியமான விஷயமா…” என்று கேட்டான். 

 

     காமாட்சி “ஆமா பா…. இன்னிக்கு இந்த மனுஷன் காரியத்தையே கெடுத்துருப்பாரு… நீங்க சொன்ன மாறியே அன்னிக்கு உங்ககூட இருந்த பொண்ண தேடி யாரோ நாலஞ்சு பேரு வந்தாங்கப்பா… இவர்கிட்ட பொண்ணு போட்டோ காட்டி கேட்டாங்க… இந்தாளு என்னிக்கும் இல்லாத திருநாளா பாத்துருக்கேன்ட்டாரு…” என்று கூற, 

 

       தேவா “அய்யோ அம்மா… என்ன சொல்றீங்க…” என்று பதறினான். 

 

       காமாட்சி “பதட்டபடாதீங்க தம்பி… அதுக்குள்ள நா போயி அவர நாலு சாத்து சாத்தி குடிச்சுட்டு பிரச்சனை பண்றியாயான்னு கேக்கவும்… அவனுங்களுக்கு சப்புன்னு ஆயிடுச்சு… பத்தாததுக்கு இவரு பாத்துருக்கேன் பாத்துருக்கேன்னு திரும்ப திரும்ப சொல்லவும் எரிச்சலாகி அவனுங்களே போய்ட்டானுங்க… இனி இந்த பக்கமே தேட வரமாட்டானுங்கன்னு நினக்கிறேன்…” என்றார்.

 

              அதன்பின்பே ஆசுவாசமடைந்த தேவா “ரொம்ப நன்றி மா… அன்னிக்கு நீங்க மட்டுமில்லனா நா யாரும் பாக்காம அந்த பொண்ண கூட்டிட்டு வந்துருக்க முடியாது…” என்றான். 

 

       காமாட்சி “அட என்ன தம்பி நீங்க… மனுஷனுக்கு மனுஷன் உதவி பண்ணலேனா எப்டி… அன்னிக்கு இந்தாளு காலைலயே குடிக்க கெளம்பிட்டாரு… அவர போக விடாம புடிச்சு இழுத்துட்டு வந்தப்ப தான் நீங்க மயங்குன அந்த பொண்ண யாரும் பாக்றாங்களான்னு பாத்துட்டே தூக்கி கார்ல வச்சது எனக்கு சந்தேகத்த குடுத்துச்சு… ஆனா நா பாத்துட்டேன்னதும் நேரா என்கிட்ட வந்து அந்த பொண்ணு யாருனு எனக்கும் தெரியாது… ஆனா அந்த பொண்ணுக்கு ஆபத்திருக்கு நா காப்பாத்த தான் முயற்சி பண்றேன்னு சொல்லி யாராவது பாத்தா நாளைக்கு அவளுக்கு தான் பிரச்சனை சொன்னீங்க பாருங்க… அப்ப உங்க கண்லயும் பேச்சுலயும் எந்த கள்ளமோ கபடமோயில்ல… உண்மைதான் இருந்துச்சு… வேற யாராவதுனா கார கிளப்பிட்டு போயிருப்பான்… அதோட உங்க அட்ரஸ் ஃபோன் நம்பரயும் குடுத்து நீங்க எப்ப வேணா என் வீட்டுக்கு வந்து அந்த பொண்ணு நல்லார்க்கான்னு பாத்துக்கோன்னு சொன்ன பாரு பா… நீ அந்த புள்ளைக்கு செய்ற உதவியவிடவா நா இப்ப செஞ்சுட்டேன்… அந்த புள்ளய நல்லா பாத்துக்கோப்பா… பாக்க நல்ல புள்ளயாட்டயம் தெரிஞ்சுது… அதுக்கு இந்த வயசுல என்ன பிரச்சனையோ இத்தன பேரு தேடி அலையுறானுங்க…” என்று கூறி உண்மையாக வருந்தினார். 

 

       தேவா “நா பத்ரமா பார்த்துக்கறேன் மா… மறுபடியும் யாராவது வந்து விசாரிச்சா தகவல் சொல்லுங்க மா…” என்று கூற, 

 

      காமாட்சி “கண்டிப்பா சொல்றேன் தம்பி…” என்றார். 

 

        தேவா “அம்மா… உங்களுக்கு விருப்பமிருந்தா எனக்கு தெரிஞ்ச ரிஹேப்லிடேஷன் சென்டர் ஒன்னிருக்கு… அங்க சார கூட்டிட்டு போறீங்களா… சாரோட குடிப்பழக்கத நிறுத்திறலாம்…” என்று தயங்கிக் கொண்டே கேட்டான். 

 

        காமாட்சி “அங்க கூட்டிட்டு போனா சரியாருவாரா ப்பா…” என்று குரலில் நம்பிக்கை ஒலித் தொனிக்கக் கேட்க, 

 

      தேவா “கண்டிப்பா மா… சார் பழைய மாறி மாறிடுவாரு…” என்றான். 

 

      காமாட்சி கண்கள் கலங்க குரல் கரகரக்க “ரொம்ப நன்றியா… ஃபோன் நம்பர் இருந்தா குடுய்யா… உன் நல்ல மனசுக்கு நீ புள்ள குட்டிங்களோட சந்தோஷமா இருக்கணும்யா…” என்று அவனை வாழ்த்த, 

 

        தேவா “அம்மா… என்ன ம்மா… நாந்தான் நன்றி சொல்லனும்…” என்று அவரை சமாதானப் படுத்தி அவருக்கு அலைப்பேசி எண்ணைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

      காமாட்சி கண்ணீர் மல்க “ஆத்தா மகமாயி… என் வேண்டுதல் உன் காதுல விழுந்துடுச்சா ஆத்தா… அந்த புள்ள யாரு என்னன்னு தெரில… அந்த புள்ள என்னைக்கும் பொண்டாட்டி, புள்ளனு சந்தோஷமா இருக்கணும்…” என்று வாய்விட்டு வேண்டிவிட்டு, தரையில் ஆடை நெகிழ்ந்தது கூட தெரியாமல் கிடக்கும் தன் கணவனது ஆடையை சரி செய்ய ஆரம்பித்தார். 

 

                 செஞ்ஞாயிறு தன் மஞ்சள் வண்ண கிரணங்களால் நிலமகளை தீண்டிய நேரம், தேன்மலர் மலர்ச்சியாக தோட்டத்திலிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அன்று தேவா சீக்கிரமே எழுந்துக் கீழே வந்தவன், தேன்மலர் தோட்டத்திலிருப்பதைக் கண்டு அங்குச் சென்றான். 

 

       தேவா “குட் மார்னிங் மலர்…” என்றவாறு அங்கு வர, தேன்மலரும் பளிச்சென்றப் புன்னகையோடு “குட் மார்னிங் சார்…” என்றாள். 

 

       மலர்ந்த அவளின் முகம் கண்டு அவனும் இதழ் வளைத்து “என்ன மலர்… இங்க பூத்துருக்ற பூகூட உன் முகம் போட்டி போடுது…” என்று கூற, 

 

      தேன்மலருக்கு அவன் கூறியது கேட்டு சிறிதே வெட்கம் எட்டிப் பார்க்க, அதை தன் மலர்ந்தப் புன்னகையில் மறைத்து “ஏன்னா நேத்து நைட் ஒரு குட் நியூஸ் கெடச்சுச்சு… அதோட எபெக்ட் தான் சார்…” என்றாள். 

 

     தேவாவும் முகம் மலர “ம்ம்ம்… நானும் ஒரு குட் நியூஸ் வச்சுருக்கேன்…” என்றான். 

 

       தேன்மலர் விழி விரித்து, ஆர்வம் பொங்க “என்ன சார்…” என்று கேட்க, 

 

      அவளின் செயலில் சிறு குழந்தையின் சாயலைக் கண்டவன் புன்னகைத்து “அம்மு கூட இப்டி தான்… சர்ப்ரைஸ்னு சொல்லிட்டா அவ கண்ணு சிரிக்கும்… ஆர்வம் பொங்கும்…” என்றான். 

 

     தேன்மலர் பதிலுக்குப் புன்னகைத்து “சார் என்னன்னு சொல்லுங்க சார்…” என்று கேட்க, 

 

     தேவா கைகளை மார்பின் குறுக்கேக் கட்டிக் கொண்டு தலை சாய்த்து “லேடீஸ் பர்ஸ்ட்…” என்றான். 

 

              அவன் நின்ற விதமும், இளங்காலைத் தென்றல் அவன் கேசம் கலைத்து விளையாடியதில் அவன் நெற்றியில் பிரண்ட கேசமும், கூர்மையான கண்களும், அவன் இதழ்களில் சிந்தியப் புன்னகையும் தேன்மலரை கவர, விழி அகலாமல் அவனை, தன்னை மறந்துப் பார்த்தாள். 

 

       திடுக்கிட்ட அவளது மனசாட்சி “என்னடி பண்ற… இப்டி பச்சையா சைட் அடிச்சா அவரு உன்னை பத்தி என்ன நினப்பாரு…” என்று வினவ, தேன்மலர் “நானும் அதத்தான் நினக்கிறேன்… ஆனா என் கண்ணு என் பேச்ச கேக்க மாட்டேங்குதே… இப்டி செமயா வந்து நின்னா சைட் அடிக்காம என்ன பண்றது…” என்றாள். 

 

       பதிலுக்கு அவளது மனசாட்சி “அடியேய் இப்டியே பாத்துட்ருந்த… உன் இமேஜ் அங்க சரிஞ்சுரும் பாத்துக்க…” என்று எச்சரிக்க, அவள் பெருமூச்சுடன் “ஹ்ம்ம்… இந்த மாறி பையனலாம் சைட் தான் அடிக்க முடியும்…” என்று கூறி விட்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் “ஹ்ம்ம்… ஆனா ஊனா லேடீஸ் பர்ஸ்ட்னு சொல்லிருங்க…” என்று உதடு சுழித்தாள். 

 

       அதில் தேவா சிரிக்க, தேன்மலர் “பரவால்ல சார் சிரிச்சுக்கோங்க… அப்பா கூட வந்த அந்த கருப்பாடு யாருன்னு கண்டுபுடிச்சாச்சு… கருப்பாடு இப்ப நம்ம ட்ராக் லிஸ்ட்ல… என்ன பண்ணாலும் தெரிஞ்சுடும்…” என்றாள். 

 

      தேவா ஆச்சர்யமாய் “எப்டி மலர்… இவ்ளோ சீக்ரம்… நேத்து தான் நா பாத்துக்றேன்ன… நைட்குள்ள எப்டி கண்டுபுடிச்ச… ஆமா யாரது…” என்று ஆர்வம் தாங்காமல் படபடவென்று கேட்டான். 

 

      தேன்மலர் மென்னகையோடு “சார் பொறுமை… அது யாருனு இப்ப சொல்ல மாட்டேன்… நாம சீக்ரமே யூ எஸ் போற மாறியிருக்கும்… ரெடியா இருங்க… அப்ப தெரிஞ்சுக்கோங்க… எப்டி கண்டுபுடிச்சேன்னு கேட்டீங்கள்ள… பிக் பி… அவரு யாரு என்னன்னு நேர்ல மீட் பண்ணி தெரிஞ்சுக்கோங்க… பட் ஹி இஸ் எ ஜெம்… மை லவ்வபில் பிக் பி…” என்றாள். 

 

       தேவா புன்னகைத்து “ம்ம்… ஓகே… ஆனா ஏன் யூ எஸ்…” என்று கேட்க, 

 

      தேன்மலர் “ம்ம்… சொல்றேன் சார்… எனக்கு ஒரு விஷயம் க்ளியர் ஆகணும்… அதுக்கப்றம் சொல்றேன்…” என்றாள். 

 

     தேவா தோள் குலுக்கி “ம்ம் ஓகே…” என்றான். 

 

            தேன்மலர் “இப்ப உங்க டர்ன்…” என்று கூற, 

 

      தேவா மெல்லிய முறுவலுடன் “நீ எப்டி ஆர்யன், ரகுவ சிக்க வைக்கிற துருப்பு சீட்ட புடிச்சியோ… அதுமாறி நானும் நாராயணசாமிய மாட்டிவிட்ற ஒரு துருப்பு சீட்ட புடிச்சுட்டேன்…” என்றான். 

 

      தேன்மலர் விழி விரித்து “சூப்பர் சார்… ஆமா என்னதது…” என்று கேட்க, 

 

     தேவா “ம்ம்… அவனோட இல்லீகல் அக்ட்டிவிட்டிக்கான எவிடென்ஸ் சிக்கிருக்கு… ஆனா அது என்ன ஏதுன்னு யூ எஸ் போய்ட்டு வந்து சொல்றேன்…” என்று கூற, 

 

      தேன்மலர் “ம்ம்ம்ம்ம்… உங்கள என்னமோன்னு நினச்சேன்… பரவால்ல…” என்றாள். 

 

     தேவா “என்னமோன்னு நினச்சியா…. என்ன நினச்ச…” என்று கேட்க, 

 

     தேன்மலர் “ம்ம்… நீங்க கொஞ்சம் கடுகடு ஆசாமின்னு…” என்க, 

 

     தேவா “என்னது… இவ்ளோ வாயா உனக்கு…” என்று அவளை அடிக்க வர, தேன்மலர் அங்கிருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

 

      தேவா இதழ்கள் விரிய அவள் செல்லும் திசை நோக்கியவனுக்கு தேன்மலரை போல் வாய்த்துடுக்காகப் பேசி குறும்பு செய்யும் அவனின் தங்கையின் ஞாபகம் வர, தன் தங்கையோடிருந்தப் பொன்னான நாட்களை எண்ணி கண்கள் கலங்க நின்றான். 

 

       தேன்மலர் “சார் காபி ரெடி…” என்று குரல் கொடுக்க, தேவா கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளேச் சென்றான். உள்ளே வந்த தேவாவின் முகம் சற்று நேரம் முன்னிருந்த புன்னகை மாறி இறுகியிருக்கவும், தேன்மலர் எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்குக் காபிக் கொடுத்து விட்டு தானும் குடித்தாள். 

 

      பின் தேவா உணர்ச்சிகளற்ற குரலில் “மலர் நா இன்னிக்கு ஆபிஸ் போறேன்… நைட் தான் வருவேன்… நீ வீட்ட பூட்டிக்கோ… பத்ரமா இரு… வெளில போகாத…” என்றான். 

 

       தேன்மலர் அமைதியாகத் தலையாட்டி “சரிங்க சார்… நீங்க போய் கெளம்புங்க…” என்றாள். தேவா அவளைத் திரும்பியும் பாராது விறுவிறுவென்று தன்னறைக்குச் சென்று விட்டான்.

 

                 தேவா தயாராகிக் கீழே வர, தேன்மலர் சமையல் முடித்து சாப்பாட்டு மேசையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். 

 

       தேவாவை கண்டவுடன் மென்னகையோடு “வாங்க சார் சாப்டலாம்…” என்றழைத்தாள். 

 

    தேவாவும் சென்றமர, சுடச்சுட இட்லியும் சாம்பாரும் பரிமாற, “நீ சாப்ட்லயா…” என்று கேட்டான். 

 

      தேன்மலர் “இல்ல சார்… உங்களுக்கு லேட்டாயிடும்னு அவசர அவசரமா பண்ணேன்… நா குளிச்சுட்டு சாப்ட்டுக்றேன்…” என்றாள். தேவா தலையசைத்து விட்டு உண்ண ஆரம்பித்தான். 

 

    தேவா உண்டு முடித்து கைக் கழுவி வந்தவன் “மலர் நா கிளம்புறேன்…. நீ கேர்புல்லா இரு… வெளில போகாத…” என்றான். 

 

      தேன்மலர் சரி என்று தலையாட்ட, தேவா “சரி நா வரேன்…” என்று கிளம்ப, தேன்மலர் “ஒரு நிமிஷம் சார்…” என்றுவிட்டு அடுக்களைக்குள் விரைந்தாள். 

 

     தேவா என்ன என்பது போல் நிற்க, தேன்மலர் கையில் ஒரு சிறு பையோடு வந்தாள். அந்தப் பையை தேவாவிடம் நீட்டி சார் “இதுல மதியத்துக்கு லன்ச் இருக்கு… சாப்ட்ருங்க…” என்றாள். 

 

      தேவா என்னவென்றே கூற முடியாத உணர்வில் அவளை விழி அகலாமல் பார்க்க, தேன்மலர் மென்னகையோடு “சார்… பைய புடிங்க…” என்றாள். 

 

    தேவா “இல்ல மலர்… நா எப்பவும் கேண்டின்ல சாப்ட்றதுதான் வழக்கம்…” என்று கூற, 

 

     அவள் “அப்டியா… சரி சார் பரவால்ல…” என்றாலும் முகம் வாடினாள். 

 

     தேவாவுக்கு அவளது வாடிய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் “பரவால்ல குடு மலர்…” என்று அவளிடமிருந்து பையை வாங்க, அவள் முகம் மலர்ந்தாள். 

 

     தேவா கண்கள் கலங்க இதழ் விரித்து “அம்மா கூட இப்டி தான்… லன்ச் ரெடி பண்ணி தருவாங்க… நா வேணானு சொன்னா இப்டி தான் அவங்க முகமும் டல்லாயிடும்… அம்மா போனதுக்ப்றம் நா லன்ச் எடுத்துட்டு போறதயே விட்டுட்டேன்… ஒரு வருஷத்துக்ப்றம் இன்னிக்கு தான் மறுபடியும் லன்ச் எடுத்துட்டு போறேன்…” என்றான். 

 

      அவன் கண்களில் கண்ணீரைக் கண்ட தேன்மலர் என்ன உணர்ந்தாளோ இப்பொழுது விழுந்துவிடுவேன் என்று நின்றிருந்த விழி நீரோடு சட்டென்று திரும்பி “போய்ட்டு வாங்க சார்…” என்றவள் வேகமாக அடுக்களைக்குள் விரைந்தாள். 

 

     அவனுக்குத் தெரியக் கூடாதென்று அவள் திரும்பினாலும் அவள் கண்களின் கண்ணீரைக் கவனித்துவிட்ட தேவா கலங்கிய விழிகளோடு அவள் செல்வதைப் பார்த்தவன், சில நொடிகளில் இறுக்கத்தை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றான். ஏன் அழுகை வருகிறதென்றறியாமல் அரை மணித்தியாலம் விழி நீர் சிந்திய தேன்மலர், தன்னைப் போலவே அவனும் உறவுகளின் பிரிவில் தவிப்பதைக் காண முடியாமல் வந்த அழுகையென்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு குளிக்கச் சென்றாள். 

 

                தேன்மலர் குளித்து, சாப்பிட்டு விட்டு வந்து ராஜேஷிற்கு அழைத்தாள். அழைப்பை ஏற்ற ராஜேஷ், நலம் விசாரிப்புகள் முடித்து “தேன்மலர்… அப்பாவுக்கு எல்லா டெஸ்ட்டும் ஸ்கேனும் எடுத்தாச்சு… ரெண்டு நாள்ல ஆப்ரேஷன் வச்சுக்கலாம்னு சொல்லிற்காங்க…” என்றான். 

 

      தேன்மலர் இறுக்கமாக “சரி ராஜேஷ்… நீங்க பாத்துக்கோங்க… எதாவது பணம் வேணும்னா ஸாம கேளுங்க… ஏன்னா இப்ப என் அக்கௌன்ட்லேர்ந்து பணம் அனுப்ப முடியாது… ஒருவேளை இன்னும் அவங்க ட்ராக் பண்ணிட்ருந்தா நானே அவங்களுக்கு நீங்க இருக்ற இடத்தையும் நா இருக்ற இடத்தையும் காட்டிக் குடுத்த மாறி ஆயிடும்…” என்றாள். 

 

      ராஜேஷ் “பரவால்ல தேன்மலர்… நாங்க பாத்துக்றோம்… நீங்க குடுத்த பணமிருக்கு… அதோட ஸாமும் கின்ஸியும் எங்கள செலவு பண்ண விட்றதில்ல… துர்கா உங்ககிட்ட பேசணுமாம்… தரவா…” என்று கேட்டான். 

 

     தேன்மலர் “ம்ம்… குடுங்க ராஜேஷ்…” என்று கூற, 

 

     துர்கா “அக்கா… ஏன் க்கா என்கூட போன தடவ பேசல…” என்று கேட்க, 

 

     தேன்மலர் “நீ அப்பாவுக்கு சாப்பாடு குடுத்துட்ருந்தியாம் அதான் டிஸ்டர்ப் பண்ண வேணானு… அப்பாக்கு நா பேசறேன்னு தெரிஞ்சா எமோஷ்னல் ஆயிடுவாரு…” என்றாள். 

 

      துர்கா “ம்ம்… நீங்க சொல்றதும் சரிதான் க்கா… அப்பா நீங்க ஃபோன் பண்ணீங்கலான்னு கேட்டுட்டே இருப்பாரு… அன்னிக்கு நீங்க கால் பண்ணத சொன்னப்றம் தான் ரிலாக்ஸ் ஆனாரு… அக்கா ராஜேஷ் எல்லாம் இங்க வந்தப்றம் தான் சொன்னாரு….. எப்டி க்கா தனியா எல்லாத்தையும் சமாளிக்றீங்க…. அப்பாவ இப்டி பண்ணவங்கள சும்மா விடக்கூடாதுக்கா… எவ்ளோ பெரிய மெடிக்கல் க்ரைம் பண்ணீற்காங்க…” என்று கோபப்பட்டாள். 

 

      தேன்மலர் “சும்மா விட மாட்டேன் துர்கா…” என்றாள் ஒருவித உறுதியானக் குரலில்… பின் “சரி மா… அப்பாவ பாத்துக்கோ… அப்பாயிகிட்ட ஃபோன் எடுத்துட்டு போய் ஸ்பீக்கர்ல போடு…” என்றாள். 

 

      துர்கா அவள் கூறியபடி செய்ய, தேன்மலர் “அப்பாயி… எந்தவித சூழ்நிலைலயும் கலங்காம நம்பிக்கை விடாமயிருந்தா ஒரு வழி கெடைக்கும்னு சொல்வியே…. அப்டி ஒரு வழி எனக்கு கெடச்சுருக்கு ப்பாயி… நல்லது நினச்சா அந்த ஆண்டவனே உதவிக்கு யாரையாவது அனுப்புவான்னு சொல்வியே அப்டி ஒரு உதவி உன் பேத்திக்கு திக்கு திசை தெரியாம நின்னப்ப கெடச்சுருக்கு அப்பாயி… நீ சொன்ன மாறி ஒரு நல்லவங்க இல்ல என்னை சுத்தி பல நல்லவங்கள இப்ப பாக்றேன் அப்பாயி…. நா உன்னை பாக்க வருவேன்… அதுக்குள்ள நீ எழுந்தட்டன்ற செய்தி என் காதுக்கு வரணும்… சொன்னத செய்யலனா நா என்ன பண்ணுவேன்னு உனக்கே நல்லா தெரியும்…. அதனால சமத்துப் புள்ளயா நீயே சீக்ரம் எந்திருச்சுரு… அதான் உனக்கு நல்லது…” என்றாள். 

பின் துர்கா, ராஜேஷோடு சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். அதன்பின் அவளுக்குத் தன் அப்பாயி மற்றும் அப்பாவின் கவலை மனதை வாட்ட, கண்கள் மூடி சாய்ந்தமர்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். 

 

              கவலையும் யோசனையுமாக அந்த நாள் நகர, மாலை தேவா அவளுக்கு அழைத்து அலுவலகத்தில் திடீர் வேலை ஒன்று வந்துவிட்டதால் மறுநாள் மாலை தான் வர முடியும் என்று கூறி அவளைப் பத்திரமாகயிருக்க சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான். தேன்மலர் இரவு பெயருக்கு ஏதோ சமைத்து உண்டு முடித்தாள். அன்றிரவு அருள், ராகவியின் நினைவு வாட்ட, அழுகையில் கரைந்தாள்.

 

      தேன்மலர், அருள் நினைவில் இருப்பது போல் அருளும் அங்கு அவள் நினைவில் தூங்காமலிருக்க, அப்போது அவன் கைப்பேசி ஒலியெழுப்ப அதை உயிர்ப்பித்துப் பேசியவன் முகத்தில் அவ்வளவு பிரகாசம். அருளுக்கு அழைத்த நபர் தேன்மலர் சென்னையில் தான் இருக்கிறாளென்று கூற, அருளுக்கு தேன்மலரை இனி சுலபமாகக் கண்டுப் பிடித்துவிடலாமென்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தந்தது.

 

       மறுநாள் ஸாமிற்கு அழைத்து சிதம்பரத்தின் அறுவை சிகிச்சை குறித்து விசாரித்தவள், அறுவை சிகிச்சை முடியும் வரை அவனை சற்று உடனிருந்து ராஜேஷ் மற்றும் துர்காவிற்கு உதவக் கேட்டுக் கொண்டாள். பின் அந்த வீட்டை ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்தவள், வீடு முழுவதும் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைத் துடைத்து மறுபடியும் மாட்டினாள். பின் தோட்டத்திற்குச் சென்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, வேண்டாத களைகளைக் களைந்தாள்.

 

       இப்படியே அவளுக்கு அந்த நாள் ஓட, இரவு எட்டு மணிபோல் மிகவும் வாடி, சோர்ந்துப் போய் தேவா வீடு வந்து சேர்ந்தான். அவனின் வாடிய முகம் கண்டவள் ஏதும் கேட்காது, அவனைச் சாப்பிட அழைக்க, தேவா உடை மாற்றி சாப்பிட வந்தமர்ந்தான். அவனுக்குப் பரிமாறிவிட்டு தேன்மலர் தானும் உண்ணமரந்தாள் ஒருவாய் உண்ட தேவா கைக்கழுவிமிடம் நோக்கி ஓடவும் இவளும் பதறி அவன் பின்னேச் செல்ல, அவன் அங்கு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். 

 

       தேன்மலர் அவசரமாக பின்னிருந்து அவன் தலைப்பிடிக்க, அப்போதுதான் அவன் உடல் அனலெனக் கொதிப்பை உணர்ந்தாள். தேவா முகம் கழுவி நிமிர்ந்தவன், தேன்மலரைப் பார்த்துப் புன்னகைக்க முயன்று கண்கள் சொருக அப்படியே சாய, தேன்மலர் “சார்…” என்ற கூவலோடு அவனைத் தாங்கிப் பிடித்து தன்மீது சாய்த்துக் கொண்டாள்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்