Loading

அத்தியாயம்- 13

 

          தேவாவும் தேன்மலரும் ஒரே நேரத்தில் மீரா என்றழைத்துவிட்டு ஒருவரையொருவர்ப் பார்க்க, தேவா நொடியில் தலைக்கோதியவாறு வேறுபுறம் திரும்பிக் கொள்ள, தேன்மலர் எவ்வித சலனமுமின்றி சிறு சிரிப்போடு அமீராவிடம் பேச ஆரம்பித்தாள். 

 

     தேன்மலர் மென்னகையோடு “அப்ப போகனும்னு தான் சொன்னேன் மீரா… ஆனா சார்க்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு இருந்துட்டேன்…” என்று கூற, தேவா திரும்பி அவளை முறைக்க, அவளோ தன் சிரிப்பை மாற்றாமல் என்ன என்பது போல் அவனைப் பார்த்து வைக்க, தேவா தான் மீண்டும் முகம் திருப்பிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. 

 

     அமீரா ஆச்சர்யப் புன்னகையுடன் “பார்ரா… ம்ம்ம்… இவ்ளோ பேசுவியா நீ…” என்று கூற, 

 

     தேன்மலர் சிறுசிரிப்புடன் “சும்மா மீரா… கிண்டலுக்கு சொன்னேன்… சார் தான் நேத்து சொன்னாரு நீ வெளிய போனாலும் உன்னால தனியா தேட முடியாது… ஏன்னா உன்னை நெறய பேர் தேட்றாங்கன்னு… எனக்கும் அவர் சொன்னது சரின்னு பட்டுச்சு… அதான் ரெண்டு பேரும் சேந்தே தேடலான்னு முடிவு பண்ணிட்டோம்…” என்றாள். 

 

      அதன் பின்பே தேவா அவர்கள் புறம் திரும்பினான். அமீரா புருவம் நெறித்து கண்களால் அப்படியா என்று தேவாவிடம் கேட்க, அவனும் இமை மூடி திறக்கவும் அமீரா அவனை என்னவென்றே கணிக்க முடியாதப் பார்வைப் பார்க்க, அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்த அவனோ நீ நினைப்பதுப் போலில்லை என்று கண்களால் உரைக்க, அமீரா விழியால் சிரித்து பாக்கலாம் என்று உரைக்க, தேவா மூக்கு விடைக்க அவளை முறைத்து வைத்தான். இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்த தேன்மலருக்கு அவர்கள் என்ன பேசுகிறார்களென்று புரியாவிட்டாலும் அது தன்னைப் பற்றி தான் என்று மட்டும் புரிந்தது. 

 

                தேவா தான் கூறியதைத் தவறாக எடுத்துக் கொண்டானோ என்று எண்ணமிட்ட தேன்மலர் “சார்… நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… அது தப்பா இருந்தா… சாரி…” என்று தேவாவிடம் மன்னிப்புக் கேட்க, அவன் “ம்ம்…” என்று தலையாட்டினான். தேன்மலருக்கு தான் துடுக்குத் தனமாகப் பேசிவிட்டோமோ என்று என்னவோ போலாகிவிட்டது.

 

      பின் “ஆமா… மலர் இப்ப எப்டி ஃபீல் பண்ற…” என்ற அமீராவின் கேள்வியில் யோசனையிலிருந்து விடுபட்ட தேன்மலர் “இப்போ பரவால்ல மீரா… நல்லார்க்கேன்…” என்றாள். 

 

     அமீரா “மலர்… இருந்தாலும் நீ டேப்லட்ஸ ஒரு வாரத்துக்கு சாப்டு ரொம்ப வீக்கா இருக்க…” என்று கூற, தேன்மலர் சரியென்று தலையாட்டினாள். 

 

      பின் அமீரா “ஆமா… நீ ஏன் அங்க போன…” என்று கேட்க, அவளிடம் கூறலாமா என்று யோசித்த தேன்மலர் தயங்கியவாறு தேவாவை பார்த்தாள். 

 

        இவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த தேவா, தேன்மலர் தயங்குவதுப் புரிந்து “மீரா… அவளும் என்னை மாறி அவங்களால பாதிக்கப் பட்டவ… இப்போதிக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும்…” என்று கூற, 

 

      அமீரா “ம்ம்… சரி தேவா… ஆனா ரெண்டு பேரும் ஸேஃபா இருங்க…” என்று கூற, தேன்மலர் ம்ம் கொட்ட, தேவா அமீராவை பார்த்தப் பார்வையில் வலியா? துக்கமா? ஏக்கமா? தவிப்பா? என்று கணிக்க முடியாத உணர்வுக் கலவை. 

 

      அமீராவும் பதிலுக்கு தவிப்பும் ஏக்கமுமாய் அவனைப் பார்த்தவளின் விழிகள் அன்னிச்சையாய்க் கலங்கிவிட, தேவா தேன்மலரை சுட்டிக் காட்டவும் அமீரா விழி நீரை உள்ளிழுத்துக் கொண்டு தேன்மலரை பார்த்து மென்னகைப் புரிந்தாள். இவர்கள் இருவரையும் கவனித்த தேன்மலர் எவ்வுணர்வும் முகத்தில் காட்டாது பதிலுக்குப் புன்னகைப் புரிந்தாள். 

 

                பின் தேவா “மீரா… நேத்து அங்கிள் எதுவும் திட்டலல…” என்று கேட்க, அமீரா “இல்ல தேவா… அத்தா வெளில போய்ட்டாங்க… அமி தான் அத்தா வந்துருவாங்களோன்னு பயந்துட்டு என்னை எதிர்ப்பாத்து நின்னாங்க… நா போகவும் தான் அவங்க முகத்துல நிம்மதியே வந்துச்சு…” என்று கூற, 

 

     தேவா “சாரி மீரா… என்னால தானே… உன்னை நேத்து தொந்தரவு பண்ண வேண்டியதாயிடுச்சு…” என்றான். 

 

      அமீரா “ஏய் ச்சீ… உனக்கு எத்தன தடவ சொல்லிற்கேன் இப்டிலா சாரி கேக்காதன்னு… உனக்கு ஒன்னுன்னா நா வரமாட்டனா…” என்று கோபித்துக் கொள்ள, 

 

      தேவா “இல்ல மீரா… நா அப்டி சொல்லல… அங்கிள்கிட்ட என்னால நீ திட்டு வாங்க கூடாது…” என்னும் பொழுதே அமீரா அவனை முறைக்க, 

 

     தேவா கோபமாக “சரி நா எதுவும் சொல்லல…” என்று முக்த்தைத் திருப்பிக் கொண்டான். 

 

      தேன்மலர் தன்னால் தான் இவர்கள் கோபித்துக் கொள்கிறார்களோ என்றெண்ணியவள் “நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்போ கோவிச்சுக்ரீங்க… என்னால தானே… சாரி மீரா… சாரி சார்…” என்று கூற, முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த தேவாவும் அமீராவும் இப்போது தேன்மலரை முறைக்க, தேன்மலர் கப்பென்று தன் வாயை மூடிக் கொண்டாள். 

 

       அமீரா “மலர் இன்னொரு வாட்டி இப்டி எதாவது பேசுனன்னு வச்சுக்கோ… நா உன்கூட பேசவே மாட்டேன்… எல்லாம் இவனால வந்தது… சாரி கேக்றான் சாரி…” என்று தேவாவின் தோளில் அடிக்க, 

 

      தேவா அவளை முறைக்க, அமீரா “முறைச்சா… பெரிய இவனா நீ… தொலைச்சுருவேன்…” என்று விரல் நீட்ட, 

 

        தேவா மீண்டும் அவளை முறைத்து “ச்சீ பே…” என்றுவிட்டு முகம் திருப்பிக் கொள்ள, அமீரா நமட்டு சிரிப்போடு அவனைப் பார்த்தாள். 

 

     தேன்மலருக்கு இவர்கள் இருவரின் சண்டையைக் கண்டு அருள் மற்றும் ராகவியின் ஞாபகமெழ, ஏக்கமாக அவர்களைப் பார்த்தவள் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினாள்.

 

                தேன்மலர் முகம் சோகமானதைக் கண்ட அமீரா “அவன் கெடக்குறான்… கொஞ்ச நேரம் தான் அவன் கோவம்லாம்… அப்றம் மலர்…” என்று பேச ஆரம்பிக்க, 

 

        அச்சமயம் “அமீ… நேராம்ச்சு அத்தா வாக்கிங் முடிச்சு வந்துருவாரு… ஃபோன ஏன் வீட்ல வச்சுட்டு வந்த…” என்றவாறு அமீராவை தேடிக் கொண்டு அவளது அன்னை வந்தார். 

 

       அமீரா “அய்யோ மறந்துட்டேன் அமி… சரி வா போலாம்…” என்று எழுந்து அவளது அன்னையை நோக்கிச் செல்ல, 

 

     அவளின் அன்னை “தேவா… என்ன பா நல்லார்க்கியா… ம்ஹ்ம் பக்கத்துல இருந்தும் கூட நானும் வந்து பாக்க முடில நீயும் அங்க வர முடில… இவ அத்தா எப்ப தான் திருந்துவாரோ… அல்லாஹ் தான் அவருக்கு புரிய வைக்கணும்…” என்று வருத்தமாகக் கூற, 

      

        தேவா “நல்லார்க்கேன் ஆன்ட்டி… அங்கிள் மேல என்ன தப்பு ஆன்ட்டி… அவரு யோசிக்றதும் ஒருவிதத்துல சரி தானே…” என்று கூற, அமீரா அவனைத் தீர்க்கமாகப் பார்க்க, அவளின் விழி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத தேவா தலையைக் குனிந்துக் கொண்டான். 

 

        தேன்மலரை கண்ட அமீராவின் அன்னை “ஆமா தேவா… யாரிது புதுசா… சொந்தக்கார பொண்ணா…” என்று கேட்க, தேவா என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் தடுமாற, தேன்மலரும் அவரின் திடீர் கேள்வியில் தடுமாற, 

 

        அமீரா நிலைமையுணர்ந்து “அமி… நா சொன்னேன்ல நேத்து… அது இந்த பொண்ணு தான்… தேவாவோட அத்தை பொண்ணு… இங்க ஹாஸ்டல்ல தங்கி வேல பாக்ரா… உடம்பு சரியில்ல அதான் தேவா இங்க கூட்டிட்டு வந்துட்டான்…” என்று கூற, தேவா, தேன்மலர் இருவருமே அதிர்ந்து அமீராவைப் பார்த்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்தவர்கள் சட்டென்று முகத்தைத் திருப்பி மீண்டும் அமீராவையே பார்த்தனர். 

 

        தேவா, அவள் நிலைமையை சமாளிக்கக் கூறினாலும் ஏனோ அது அவனுக்கு கோபத்தைக் உண்டாக்கியதில் அவளை முறைக்க, 

 

       அமீரா “ப்ளீஸ் டா…” என்று கண்களால் கெஞ்ச, தேவா “என்னமோ பண்ணு…” என்றவாறு அவளின் அன்னையைப் பார்த்தான்.

 

                 அவர் “ஓஓஓ… அந்த பொண்ணா…” என்றவர் தேன்மலரிடம் “உன் பேர் என்ன மா… இப்போ உடம்புக்கு பரவால்லயா…” என்று வினவ, 

 

        தேன்மலர் “தேன்மலர் மா… இப்போ நல்லார்க்கேன் மா…” என்று கூறி புன்னகைக்க, 

 

       அவரும் புன்னகைத்து “தேன்மலர் நல்ல பேரு மா… ஆமா நீ தேவாக்கு தூரத்து சொந்தமா… தேவா அம்மா இப்டி ஒரு சொந்தமிருக்கும்னு சொன்னதேயில்லயே…” என்று கேட்க, 

 

       தேன்மலர் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து, பின் “ஆமா மா… இவரு அப்பாவுக்கு சின்ன தாத்தா பேத்தி நா… எங்க அம்மா இவரு அப்பா… ஐ மீன் மாமாவுக்கு தங்கச்சி முறை வேணும்… அப்பாக்கு யூ எஸ்ல வேல… அதனால நாங்க இந்தியால இல்ல… அம்மா இறந்தப்பறம் நா இங்க வந்துட்டேன்… அப்பா மட்டும் இப்ப அங்க இருக்காங்க…” என்று தன்னைப் பற்றி உண்மையும் பொய்யும் கலந்துக் கூறினாள். 

 

        அமீராவின் அன்னையின் கேள்வியில் அதிர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இதயம் படபடக்கயிருந்த தேவாவும் அமீராவும் தேன்மலரின் திணறலில்லாதப் பதிலைக் கேட்ட பின்பே ஆசுவாசமடைந்தனர். 

 

       அமீராவின் அன்னை “அப்டியா மா… சந்தோஷம்… உடம்பு சரியானதுக்கப்றமா நீ போ… நானும் உன்னை அடிக்கடி வந்து பாக்ரேன்…” என்று கூற, 

 

       அமீரா மீண்டும் தன் அன்னை ஏதேனும் கேட்கும் முன்பு “அமி… அத்தா வர டைமாச்சு… வா வீட்டுக்கு போகலாம்…” என்று அவரின் கைப்பிடித்திழுக்க, 

 

     அவரும் “ஆமால்ல… மறந்தே போய்ட்டேன்… சரி மா உடம்ப பாத்துக்கோ… நா வரேன்… தேவா அவள நல்லா கவனிச்சுக்கோடா…” என்க, 

 

       அமீரா “அமி அதெல்லாம் அவன் பாத்துப்பான்… வா போலாம்… தேவா, மலர் பை… ஹாஸ்பிட்டலேர்ந்து சீக்ரம் வந்துட்டா முடிஞ்சா ஈவ்னிங் வரேன்…” என்று கூற, தேவாவும் தேன்மலரும் தலையசைக்க, அவள் தன் அன்னையை அழைத்துக் கொண்டு நான்கு வீடு தள்ளியிருந்த அவளின் வீட்டை நோக்கி விரைந்தாள். அதன் பின்பே தேவாவிற்கும் தேன்மலருக்கும் அப்பாடா என்றிருந்தது. 

 

      தேவா “தேங்க்ஸ் மலர்…” என்று கூற, 

 

     தேன்மலர் “நீங்க ஏன் சார் தேங்க்ஸ் சொல்றீங்க… நாந்தான் சொல்லணும்… என்னை இங்க தங்க வச்சு எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு… என்னால தானே உங்களுக்கு இந்த சங்கடம்… அப்ப நாந்தானே அத போக்கணும்… நா ஒன்னும் பொய் சொல்லயே… என்னை பத்தி அப்டியே சொல்லிற்கேன்… என்ன என் அம்மாவ உங்க அத்தைன்னு சொல்லிட்டேன்… அவ்ளோ தானே…” என்றுவிட்டு காலியானக் காபிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு அவள் உள்ளேச் சென்றாள். 

 

      தேவாவிற்கு எப்படி இவள் எல்லா சூழ்நிலைகளையும் இவ்வளவு இலகுவாக சமாளிக்கிறாள்? என் பெற்றோர் இறந்தபோதும் என் தங்கை உயிருக்கு போராடும் போதும் உணர்ச்சியின் பிடியில் சிக்கக் கொண்டேன், ஆனால் இவள் ஒரே நாளில் தன் உயிரானவர்கள் அடுத்தடுத்து முடியாமல் படுத்தும் எப்படி இப்படி இருக்கிறாள்? அதோடு தன்னை சுற்றி ஆபத்திருப்பதறிந்தும் தெளிவாக சிந்தித்து தனக்கு வேண்டியவர்களை அதிலிருந்து விலக்கி விட்டாளே! தன் நண்பன் உடனிருந்தால் விரைவாக உண்மையைக் கண்டறிய முடியுமென்று அறிந்தும் அவனையும் பிரச்சனையிலிருந்து விலக்கி தனியாளாய் அனைத்தையும் சமாளிக்க எப்படி இவளால் முடிவெடுக்க முடிந்தது? என்ற கேள்விகளில் ஆச்சர்யம் மேலோங்க வியப்பாய் அவள் சென்ற திசையையே சிறிது நேரம் வெறித்திருந்தான். பின் அவன் தன் சிந்தனை விடுத்து உள்ளே எழுந்து தன்னறைக்குச் சென்றான்.

 

                    தேவா குளித்து முடித்து தயாராகி வர, தேன்மலர் அதற்குள் காலை உணவைத் தயார் செய்து சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். 

 

       அதைக் கண்ட தேவா “ஏன் மலர்… உனக்கு சிரமம்… நானே சமச்சுருப்பேனே…” என்று கூற, தேன்மலர் “உங்ககிட்ட கேக்காம கிச்சனுக்கு போனது தப்புதான்… எனக்கு வேற வேலயில்லை போர் அடிச்சது அதான் நானே சமச்சுட்டேன்… பயப்படாதீங்க சார் நல்லாவே சமைப்பேன்…” என்றாள். 

 

        தேவா “நா அதுக்கு சொல்லல… உனக்கு ஏன் கஷ்டம்னு தான்… நீ நல்லா சமைப்பன்னு நேத்து நைட்டே தெரிஞ்சுருச்சு…” என்று அவள் கூறியது போலவே இவனும் கூற, தேன்மலர் இதழ்களில் சிறிதான வளைவு.

 

       தேவா அவளைப் பார்த்து விட்டு “சரி குளிச்சுட்டு வா… சேந்து சாப்டலாம்…” என்று கூற, 

 

       தேன்மலர் தயங்கி “சார் நா குளிச்சுட்டேன்…” என்று கூற,

 

       தேவா “அப்றம் ஏன் அழுக்கு ட்ரஸ போட்ருக்க…” என்று ஏதோ சொல்ல வந்தவன் ஞாபகம் வந்தவனாக நாக்கைக் கடித்து “ஓஓ சாரி மா… நா யோசிக்கல… உன்ட்ட வேற ட்ரஸில்லல…” என்றான். 

 

        பின் தேவா விறுவிறுவென்று தன் தங்கை அறைக்குச் சென்றவன் கையில் ஒரு உடையோடு திரும்பி வந்து, “மலர்… இது அம்மு ட்ரஸ் தான்… இந்த அழுக்கு ட்ரஸ மாத்திக்கோ…” என்று கூற, தேன்மலர் தயங்க, தேவா “ம்ம் புடி…” என்கவும் மெல்ல அதை வாங்கியவள் “தேங்க்ஸ் சார்…” என்றாள். 

 

        தேவா “நீ போய் பர்ஸ்ட் சேன்ஞ்ச் பண்ணிட்டு வா…” என்று கூற, தேன்மலர் சென்று உடை மாற்றி வந்தாள். 

 

      அந்த சுடிதார், அம்மு அவளைவிட மெலிந்தத் தோற்றமுடையவள் ஆதலால் அவளுக்கு சற்று பிடித்தாற் போலிருக்க, தேன்மலர் அதை இழுத்து விட்டுக் கொண்டே வந்தாள். தேவா “இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மலர்… உனக்கு வேற வாங்கலாம்…” என்று கூற, 

 

        தேன்மலர் “எதுக்கு சார் உங்களுக்கு சிரமம்… பரவால்ல… நா அட்ஜஸ்ட் பண்ணிக்றேன்…” என்று கூற, 

 

      தேவா அவளை முறைத்து “அதான் தெரியுதே… இந்த ட்ரஸ்ல உன்னால மூச்சே விடமுடில… இதுல எப்டி அட்ஜஸ்ட் பண்ணுவ… வெளில தான் போறேன் வரும்போது உனக்கு தேவையானத வாங்கிட்டு வரேன்… அவ்ளோ தான் அதுக்கு மேல எதுவும் பேசாத…” என்றான். 

 

      தேன்மலர் அவனின் கோபமுகம் கண்டு தயங்கி “சரி சார்… ஆனா கடனா தான்… என்னால முடியுறப்ப திருப்பி தந்துடுவேன் நீங்க வாங்கிக்றதா இருந்தா ஓகே… இல்லனா எனக்கு இந்த ட்ரஸே போதும்…” என்று உறுதியாகக் கூறினாள். 

 

      அவளை ஊன்றிப் பார்த்த தேவா, அவளின் உறுதியும் தன்மானமும் கண்டு உள்ளுக்குள் மெச்சியவன் “சரி… இப்ப சாப்ட வரியா… பசிக்குது…” என்று கூற, 

 

        தேன்மலர் மென்னகைப் புரிந்து “சரிங்க சார்… வாங்க…” என்றுவிட்டு அவனுக்கு பரிமாறி விட்டு தனக்கும் தட்டில் இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க, தேவா அவளின் உடையின் அளவை வாங்கிக் கொண்டு தான் வெளியேச் சென்று வருவதாகக் கூறி கிளம்பினான். 

 

       அவன் கிளம்பும் முன் தேன்மலர் “சார்… நா மெயில் செக் பண்ணனும்… உங்ககிட்ட லேப்டாப் இருக்கா…” என்று கேட்க, 

 

       அவளைப் பார்த்த தேவா வேகமாகத் தன்னறைக்குச் சென்றவன் ஒரு மடிக்கணினியையும் கைப்பேசியையும் கையில் கொடுத்து “இந்தா மலர்… இது அம்முவோட லேப்… இது அம்மாவோட ஃபோன்…. அதுல சிம் இன்னும் ஆக்டிவேட்ல தான் இருக்கு… நீ இங்க இருக்கறவர இத யூஸ் பண்ணிக்கோ…” என்றான். 

 

      தேன்மலர் “தேங்க்ஸ் சார்… ஆனா உங்களுக்கு இதுனால எதுவும்…” என்று ஆரம்பிக்கும்போதே, தேவா “மலர்… இப்டி சும்மா சும்மா தயங்கி பார்மலா பேசாத… ஃப்ரியா இரு… எனக்கு இதுல எந்த ப்ராப்ளமும் இல்ல… ஓகே…” என்று கூற, தேன்மலர் சரி என்று தலையசைக்க, அவன் கிளம்பி வெளியேச் சென்றான்.

 

                    ஸோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியை உயிர்ப்பித்த தேன்மலர் திரையிலிருந்த தேவாவின் குடும்பப் புகைப்படம் கண்டு ஒருகணம் அமைதியாய் வெறித்திருந்தவள், பின் பெருமூச்சு விட்டு, தான், ஸாம், கின்ஸி மூவர் மட்டுமே பொதுவாகப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிக்குள் சென்று ஒரு வாரமாக ஸாம் வரைவில் வைத்திருந்த செய்தியைப் பார்த்தவள், தன் அப்பா, அப்பாயி, ராஜேஷ் மற்றும் துர்காவின் நலமறிந்துக் கொண்டாள். கல்லூரி படிக்கும் போது தங்கள் நட்பை யாருக்கும் தெரியாமல் காக்கும் பொருட்டு கைப்பேசி வழியேப் பேசிக் கொள்ளாமல் மூவரும் தங்களுக்குப் பொதுவான ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதில் தாங்கள் ஒருவருக்கொருவர் பகிர விரும்பும் செய்திகளை அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பாமல் வரைவில் சேமித்து வைத்து, மூவருக்குமே அதன் கடவுச்சொல் தெரியுமாதலால் தினமும் அதைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்பொழுது அந்த மின்னஞ்சல் முகவரி தான் தேன்மலருக்கு கைக் கொடுத்தது. அந்த வரைவுகளை முழுதாகப் படித்தவள் மணியைப் பார்த்தவள் அது பத்து என்று காட்ட அங்கு இந்நேரம் இரவு எழரை தானிருக்கும் என்று கணக்கிட்டு, தேவா கொடுத்துச் சென்ற கைப்பேசி மூலம் ஸாம் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு அழைத்தாள். 

 

      முதல் அழைப்பு முழுதாகச் சென்று முடிய, இரண்டாம் அழைப்பின் முடிவில் ராஜேஷ் அழைப்பை ஏற்று “ஹலோ தேன்மலர்…” என்று கூற, 

 

    தேன்மலர் “ஆமா ராஜேஷ் நாந்தான்… எப்டியிருக்கீங்க…” என்று கேட்டாள்.

 

     ராஜேஷ் “அப்பாடா… இப்பதான் நிம்மதியா இருக்கு… உங்ககிட்டருந்து ஒரு வாரமா ஃபோனேயில்ல… உங்களுக்கு என்னாச்சோன்னு பயந்துட்டேயிருந்தேன்… நா நல்லார்க்கேன்… நீங்க நல்லார்க்கீங்களா… அருள் நல்லார்க்காரா…” என்று கேட்டான். 

 

     தேன்மலர் ஆழ மூச்செடுத்து “ம்ம்… நல்லார்க்கேன் ராஜேஷ்… அவனும் நல்லார்ப்பான்… அப்பாவும் அப்பாயியும் எப்டியிருக்காங்க…” என்று கேட்க, 

 

      ராஜேஷ் “என்ன சொல்றீங்க… அப்போ அருள்…” என்னும்போதே “ராஜேஷ் இப்போதிக்கு என்கிட்ட எதுவும் கேக்காதீங்க… அருள் இதுல இன்வால்வ் ஆகறது அவனுக்கு ஸேஃப் இல்ல… நா ஸேஃபா இருக்கேன்… நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்று இறுக்கமானக் குரலில் கூறினாள். 

 

             ராஜேஷ் “ம்ம்… சரிங்க தேன்மலர்… நீங்க ஸேஃபா இருந்தா அதுவே போதும்… அப்பாயி கன்டிஷன் அப்படியே தான் இருக்கு… பட் அப்பாக்கு இங்க வந்தப்றம் நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு… தேன்மலர் நாம ஹாஸ்பிட்டல்ல குடுத்த மருந்த அப்பாவுக்கு குடுக்றத நிறுத்துனது ரொம்ப நல்லதா போச்சு… அத கன்டினியூ பண்ணிருந்தா ப்ரைன்ல நிறைய ப்லட் க்லாட்ஸ் பார்மாகி அவரு கன்டிஷன் ரொம்ப க்ரிட்டிக்கலாகிருக்கும்…” என்றான். 

 

       அதைக் கேட்ட தேன் மலருக்கு உள்ளுக்குள் கோபம் மூன்டாலும் “நாம நிறுத்துனது ரொம்ப நல்லது… சரி ராஜேஷ் டி கிட்ட அப்பாவோட சர்ஜரி பத்தி பேசிர்ந்தேனே… அவரு உங்கள கான்டாக்ட் பண்ணாரா?” என்று வினவ, 

 

       ராஜேஷ் “பண்ணாரு தேன்மலர்… அவரு சொன்ன ஹாஸ்பிடல் போனோம்… அங்க அப்பாவுக்கு அந்த மருந்துனால க்ளாட்ஸ் எதுவும் பார்மாயிருக்கான்னு ப்லட் டெஸ்ட், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன், செரிப்ரல் ஆன்ச்ஞியோகிராம்லா கம்ப்ளீட்டா எடுத்துப் பாத்துட்டு தான் சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணனுனு டாக்டர்ஸ் சொன்னாங்க… ப்லட் டெஸ்ட்க்கு சாம்பிள் குடுத்தாச்சு… ஸோ நாளை மறுநாள் ஸ்கேனிங்க்கு போகணும்…” என்றான். 

 

       தேன்மலர் “சரி ராஜேஷ்… பாத்துக்கோங்க… எதாவது வேணுனா ஸாம கேளுங்க… அப்றம் துர்கா எப்டியிருக்கா… அப்பா என்னை பத்தி எதுவும் கேட்டாரா…” என்று கேட்டாள்.

 

       ராஜேஷ் “துர்கா நல்லார்க்கா… அப்பாவுக்கு சாப்பாடு குடுத்துட்ருக்கா… அப்பா கேட்டாரு… எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரில… அப்றம் அவரே எனக்கு தெரியும் அவ வரமாட்டானார்ரு…” என்று கூற, 

 

      தேன்மலருக்கு சிதம்பரத்தின் புரிதலை நினைத்து கண் கலங்கி விட்டது, “தெரியும் ராஜேஷ்… அவருக்கு நா வரமாட்டேன்னு… உங்கள தனியா அனுப்பும்போதே கெஸ் பண்ணிருப்பாரு… அவர்கிட்ட நா ஸேஃபா இருக்கேன்னு மட்டும் சொல்லுங்க… அப்றம் துர்காவ கேட்டதா சொல்லுங்க…” என்று கூற,

 

       ராஜேஷ் “துர்கா இப்ப வந்துடுவா தேன்மலர்… அவகிட்டயும் அப்பாகிட்டயும் ஒரு வார்த்த பேசிடுங்களேன்…” என்று கூற, 

 

     தேன்மலர் “இல்ல ராஜேஷ் வேணாம்… அப்பா கிட்ட நா அழுதுட்டு பேசறத சின்ன வயசுலயே விட்டுட்டேன்… இப்ப வேணாம் ப்ளீஸ்…” என்றாள். ராஜேஷ் அவளின் நிலை புரிந்து “சரி தேன்மலர்… உடம்ப பாத்துக்கோங்க… அப்பப்போ ஃபோன் பண்ணுங்க…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க, தேன்மலர் அப்படியே இரண்டு நிமிடம் கண்கள் மூடி அமர்ந்தவள் விழிக்குள் குளம்கட்டியிருக்கும் கண்ணீர் வெளியே சிந்தாமலிருக்க பிரயத்தனம் செய்தவள் அதில் வெற்றியும் கண்டு தன்னை நிலைப் படுத்தி, தன் நண்பன் ஸாமிற்கு அழைத்தாள். 

 

       ஸாமுடன் கின்ஸியுமிருக்க வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு ராஜேஷ் அவர்களிடம் கொடுத்த சிதம்பரத்திற்கு பரிந்துரைத்திருந்த மருந்தின் மாதிரியை சோதித்ததில் கிடைத்த தகவல்களை தேன்மலரிடம் கூறினார்கள். அதைக் கேட்ட தேன்மலருக்கு கண்மண் தெரியாதக் கோபம் அனலென உள்ளே அலையலையாய் எழ உடல் விரைக்க, கண்களில் கோபம் மின்ன அமர்ந்திருந்தாள்.

தொடரும்…..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்