Loading

கார்காலத்தின் காலை வேளை, கருத்த மேனிக் கொண்ட பஞ்சுப்பொதிகளான மேகங்கள் சுட்டெரிக்கும் செஞ்ஞாயிற்றின் செவ்வொளியை தன்னுள் மறைத்து விடும் நோக்கோடு அவனைச் சுற்றியும் அவன் மேல் படர்ந்தும் தங்களின் போர் தந்திரங்களை கட்டவிழ்த்த வண்ணமிருந்தன. ஆனால் செஞ்ஞாயிறோ அவர்களின் மேனியை ஊடுருவியும் அவர்களைச் சுற்றியும் தன் மஞ்சள் ஒளியை சிதறவிட்டு அவர்களின் தந்திரங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினான். பின் தன் காதலியான நிலமகளை தழுவிச் சென்ற மழையின் சுவடை அவள் மறக்கும் வண்ணம் தன் கதகதப்பான இளமஞ்சள் கிரணங்களால் தீண்டி அவளின் கன்னமெங்கும் மஞ்சள் பூசிக் கொண்டிருந்தான்.

இவ்வாறு செஞ்ஞாயிறு தன் காதலியான நிலமகளிடம் காதல் புரிந்துக் கொண்டிருந்த வேளை, திருச்சியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த வாளாடி என்னும் அழகிய கிராமத்திலுள்ள ஒரு வீட்டின் முன் “அடியேய்… சொன்னா கேக்க மாட்ட… சொல்ல சொல்ல மழை தண்ணில ஆடிட்டுருக்கா பாரு… கொஞ்சமாவது அறிவிருக்காடி உனக்கு… அந்த சில்வண்டு பயலுங்க தான் ஆட்றானுங்கன்னா… நீயும் அவனுங்களோட சேந்து இப்டி நடு வீதில ஆட்டமா போட்ற… இந்தா வாரேன் இரு…” என்றவாறு எழுபத்தி ஐந்து வயது வேலாயி கையில் துடைப்பத்துடன் மழை நீரில் குழந்தைகளோடு குழந்தையாய் தேங்கி நின்ற மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்த குமரியை நோக்கி வந்தார்.

அவர் வருவதைக் கண்ட சில்வண்டுகளலெல்லாம் “ஏய் கெழவி வருதுடா…” என்ற கூவலோடு ஓட அதில் ஒருவன் ஓடிக்கொண்டே “ஏய் கெழவி… தேனு எங்ககூட விளையாண்டாவே உனக்கு மூக்கு வேத்துருமா… இப்டியே தேன எங்ககூட விளையாடாம விரட்டிருக்க… ஒருநாள் உன்னய வழுக்கி விழ வச்சு உன் கால ஒடைச்சு… உன் முன்னாடியே நாங்க தேனுகூட ஆட்டம் போட்டு அட்டகாசம் பண்ணல…” என்று சவால் விட்டான்.

வேலாயி கையிலிருந்த துடைப்பத்தை அவன்மீது எரிந்து “போடா பொசகெட்ட பயலே… கால ஒடைக்கிற முகரைய பாரு… இனி அப்பாயி குழம்பு குடு, இட்லி தூள் குடு, தோசை குடுனு சட்டிய தூக்கிட்டு வீட்டு பக்கம் வா கால ஒடச்சு அடுப்புல வக்கிறேன்… தோசை கேக்ற அந்த வாய்ல தோசை திருப்பிய பழுக்க காச்சி பட்ட பட்டயா இழுத்து உட்றேன்…” என்றார்.

அவன் அடிபட்ட இடத்தைத் தேய்த்துக் கொண்டே “அய்யயோ… கெழவி சோத்துல கை வக்கிதே…. நமக்கு சோறு தான் முக்கியம்…” என்று நினைத்தவன் “ஈஈஈ… அப்பாயி நா சொன்னத சீரியஸா எடுத்துக்காத… நா சும்மா உலுலூலாய்க்கு சொன்னேன்… சோத்துல கீத்துல கைய வச்சுராத அப்பாயி… நா உன் செல்ல பேராண்டில…” என்றவாறு ஓடினான்.

வேலாயி “போடா எடுபட்ட பயலே…” என்று அவனை திட்டி விட்டு அவர்களது உரையாடல்களை சிரிப்போடு பார்த்து நின்ற தேன்மலரின் காதை திருகி “ஏன்டி பொச கெட்டவளே… அறிவிருக்காடி உனக்கு… எத்தனவ தரவ சொல்றது அவனுங்களோட சேந்து குதியாட்டம் போடாதனு… வயசு புள்ள மாறியா நடந்துக்ற…. ஊர் கெடக்ற கெடயில வீதியில நின்னு ஆம்பள பயலுகளோட ஆடிட்ருக்க… ஏற்கனவே இந்த ஊர் இளவட்ட பயலுவலா ரொம்ப நல்லவனுவ… வாடி உள்ள…” என்று காதைப் பிடித்து இழுத்துக் கொண்டே அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

தேன்மலரோ வேலாயியின் கையை தன் கை வைத்து விலக்கப் போராடிக் கொண்டு “ஆஆ அப்பாயி காது வலிக்குது… விடு அப்பாயி… சரி இனி அவனுங்களோட வீதில வெளயாடல… விடு அப்பாயி வலிக்குது…” என்றவாறே வீட்டினுள் வந்தாள்.

வேலாயி அவள் காதை விட்டு “ஊர் கெட்டு போய் கெடக்கு தாயி… உன்ன என் பொறுப்புல விட்டுட்ல உங்கப்பன் அங்க சீமையில வேல பாக்றான்… வயசு புள்ள நீ உனக்கு ஏதாவது ஒன்னுன்னா உங்கொப்பனுக்கு நாந்தானே பதில் சொல்லனும்… ஒத்த பொம்பள புள்ள நீ நாந்தானே உன்ன பத்ரமா பாத்துக்கணும்… கீழ மேல விழுந்து அடிபட்டா என்னால என்ன பண்ண முடியும் சொல்லு… நாளைக்கு இன்னொருத்தன் ஊட்டுக்கு போற புள்ள நீ… ஏதாவது அடிகிடி பட்டா உன்ன கண்ணும் கருத்துமா பாத்துக்கலனு நீ போற இடத்துல என்னை தானே வைவாங்க… உங்க அப்பனுக்கும் சரி எனக்கும் சரி நீ தான் உசுரு… உன்னை விட்டா எங்களுக்கு யாரு இருக்கா…” என்று கண்களை கசக்க,

தேன்மலர் அவர் கண்ணை தன் துப்பட்டாவால் துடைத்து விட்டு “அய்யோ அப்பாயி… தெருவுல விளையாண்டது ஒரு குத்தமா… இனி நா விளையாடவே போகல போதுமா… காலையிலேயே கண்ண கசக்கி படம் ஓட்டாத… எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு… நா போய் குளிச்சுட்டு வரேன்… அதுக்குள்ள நீ சமைச்சு வச்சுரு…” என்றாள்.

வேலாயி “என்னடி இது மழை பெஞ்சதுனால பள்ளிகூடம் காலேச்சுலா லீவ்வுனு தானே சொன்னானுவ செய்தில… நீ என்னடான்னா காலேச்சு போவணும்ங்கற…” என்று வினவினார்.

தேன்மலர் குறுநகை புரிந்து அவர் தோள்களில் தன் கைகளை மாலையாகப் போட்டு “அப்பாயி…. அது புள்ளைங்களுக்கு தான் லீவ்… நா ப்ரொபஸர் தானே அதனால எங்களுக்கெல்லாம் உண்டு…” என்றாள்.

வேலாயி முகவாயில் கைவைத்து “என்னாத்த போ… இந்த வாத்தியாரச்சி வேல வேணானா கேக்றியா… சரி போ மளமளனு குளிச்சுட்டு வா அடுத்த பாட்டம் மழை வாரத்துக்குள்ள கிளம்பு… நா சுரேஸு பயல வரச் சொல்றேன்… கார்லயே போ…” என்றார்.

தேன்மலருக்கு மழையில் நனைவதென்றால் மிகவும் பிடித்தம். ஸ்கூட்டியில் சென்றால் மழையை நனைந்து ரசித்தபடி கல்லூரிக்கு வண்டியை உருட்டிக் கொண்டு போகலாம் என்று நினைத்திருந்தாள். இப்போது வேலாயி காரில் செல்ல கூறவும் திருதிருவென முழித்து “ஏன் அப்பாயி… சுரேஷ் அண்ணனுக்கு சிரமம்… நா வண்டிலயே போறேன்…” என்றாள்.

வேலாயி “திருட்டு கழுத… உன் முழிய பாத்தாலே தெரிது… ஒழுங்கா கார்லயே போ…” என்றார்.

தேன்மலர் அவர் கன்னத்தை பிடித்து “என் செல்ல அப்பாயில… ப்ளீஸ் அப்பாயி…” என்று கொஞ்சி கெஞ்ச, வேலாயி “அடியேய்… நீ கொஞ்சுனாலும் சரி கெஞ்சுனாலும் சரி… உன் பாட்சாலா என்கிட்ட பலிக்காது… போய் கிளம்பு போ…” என்று கூறி அவள் கையைத் தட்டி விட்டு அடுக்களை நோக்கி விரைந்தார்.

தேன்மலர் உதடு சுழித்து “போ கெழவி… நா அப்ப வீதியில விளையாட போவேன்…” என்று கூற, வேலாயி நின்று திரும்பி பார்த்தவர் அருகே மேசை மீதிருந்த சொம்பை எடுத்து அவளை நோக்கி வீசியெறிந்தவாறே,

“போவடி போவ… கால உடைச்சு வீட்ல உக்காரவச்சுருவேன் சாக்ரத… முதல்ல உங்கப்பன்கிட்ட சொல்லி ஒரு பய கைல உன்ன புடிச்சு குடுத்தா தான் எனக்கு நிம்மதி…” என்று அவர் பாட்டுக்குப் பேசியவாறு அடுக்களைக்குச் சென்றார். தேன்மலர் தன்னை நோக்கி பறந்து வந்த சொம்பிடமிருந்து தப்பிக்க கீழே குனிய, அது அவளைத் தாண்டி பறந்து போய் சுவற்றில் மோதி கீழே விழுந்து உருண்டோடி நின்றது.

தேன்மலர் மூக்கு விடைக்க நிமிர்ந்தவள் “ஏய் கொலகார கெழவி… சொம்ப விட்டெறிஞ்சு கொல்ல பாத்ததுமில்லாம… எனக்கு கல்யாணம் பண்ணி வேற கொல்ல ப்ளான் போட்றியா… நல்லா கேட்டுக்கோ… எனக்கு வர்றவன நாந்தான் ஸெலக்ட் பண்ணுவேன்… நீ பாக்ற மாப்ளயலாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது… எனக்கு வர போறவன் என் மனசுக்கு புடிச்சவனா, நா எப்டியிருக்கேனோ என்னை அப்டியே ஏத்துக்கறவனா இருக்கணும்…. அப்டி ஒரு மாப்ள தான் எனக்கு வேணும்… லவ் பண்ணி கல்யாணம் பண்ணா இன்னும் நல்லார்க்கும்…ம்ஹ்ம்… ஆனா நா இன்னும் அப்டி ஒருத்தன பாக்கலயே…” என்று கோபமாக ஆரம்பித்து பின் அவள் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருந்தாள்.

வேலாயி “இன்னும் குளிக்க போவலயாடி நீ…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்து அவளை நோக்கி கரண்டியை வீச, அதிலிருந்து லாவகமாக தப்பித்த தேன்மலர் “ஐய்யோ… இதோ போய்ட்டேன் அப்பாயி…” என்று மாற்றுடையை கையில் அள்ளிக் கொண்டுக் குளியலறை நோக்கி ஓடினாள்.

வேலாயி “காதல் கண்ணாலம் பண்ணுவாலாம்ல… முதல்ல இவ அப்பன்கிட்ட மாப்ள பாக்க சொல்லணும்… அப்பதான் இவ அடங்குவா… ஆம்பள பயலுவலோட சேந்து ஆட்டம் போட்றா ஆட்டம்…” என்று தேன்மலரை அர்ச்சித்துக் கொண்டே சமையலைக் கவனித்தார். அவங்க அவங்க வேலய பாக்கட்டும்… நாம அவங்கள பத்தி பாப்போம் வாங்க…

வேலாயி- முத்துச்சாமி தம்பதிகளின் ஒரே மகன் சிதம்பரம். சிதம்பரம் சிறு வயதிலிருந்தே நன்றாக படித்ததால், திருச்சியைத் தாண்டாத மக்கள் கொண்ட அவர்கள் ஊரில் வெளியூருக்குச் சென்று கல்லூரி படித்தப் பெருமை சிதம்பரத்தையே சாரும். சிதம்பரத்தின் தந்தை முத்துச்சாமி அந்த ஊரில் பெரிய தலைக்கட்டுக் குடும்பத்துக்காரர். மூன்று தம்பிகளோடும் நான்கு தங்ககைகளோடும் பிறந்த அவருக்கு சிதம்பரம் ஒரே மகனாகிட வேலாயியும் முத்துச்சாமியும் சிதம்பரத்தின் மேல் தங்களின் முழு அன்பையும் செலுத்தி சீராட்டி வளர்த்தனர். எவ்வளவு தான் சிதம்பரம் செல்லமாகயிருந்தாலும் வேலாயி அவரை ஒழுக்கமாக வளர்த்தார். சிறு வயதிலிருந்தே சிதம்பரம் படிப்பில் கெட்டியாக இருந்தார். அவர் நன்றாக படித்ததால் முத்துச்சாமி மேற்படிப்புக்கு அவரைச் சென்னை அனுப்பி வைத்தார். சென்னையில் படிப்பு முடித்த சிதம்பரம் இன்னும் படிக்க வெளிநாடு செல்ல வேண்டுமென்று கூற முத்துச்சாமியும் வேலாயியும் தன் மகன் விருப்பத்தை நிறைவேற்ற சரி என்றனர். முத்துச்சாமி தன் மூன்று தம்பிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

முத்துச்சாமி சிதம்பரத்தை வெளிநாடு அனுப்புவது குடும்பத்திலுள்ள மற்றவர்கள்ளை அனைத்து சொத்துக்களையும் தன் மகனுக்கே அவர் செலவழித்து விடுவார் என்று எண்ண வைத்தது. ஆதலால் அவரின் தம்பி குடும்பத்தார் பாகப் பிரிவினை பற்றி பேச்செடுக்க, முத்துச்சாமியும் வேலாயியும் அவர்களின் எண்ணம் புரிந்து உடைந்துப் போயினர். இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து தாங்கள் இருக்கும் பூர்வீக வீடு மற்றும் ஐந்து ஏக்கர் பரம்பரை நிலம் தவிர்த்து மற்ற சொத்துக்களை தன் தம்பிகளுக்கு மட்டுமல்லாது தன் தங்கைகளுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தனர். தனியே போன தன் உடன் பிறந்தவர்கள் எப்போதாவது வந்து செல்ல இருந்தவர்கள் சிதம்பரத்தின் படிப்பிற்காக முத்துச்சாமி பிறரிடம் கடன் வாங்கியதை அறிந்ததிலிருந்து அதையும் கைவிட்டனர்.

முத்துச்சாமி கடன் வாங்கி சிதம்பரத்தை லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்தார். சிதம்பரமும் தங்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து நன்றாக படித்து பட்டம் பெற்று அமெரிக்க வேலையோடு நாடு திரும்பினார். முத்துச்சாமி வேலாயியும் இத்தனை வருடங்கள் பிரிந்திருந்த தங்கள் ஒற்றை மகன் மறுபடியும் வெளிநாட்டு வேலையோடு வந்து நிற்க, அவர்கள் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றனர். பின் சிதம்பரம் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களின் ஒரு நிபந்தனையை ஏற்று தன்னை வெளிநாடு அனுப்ப அவர்களை சம்மதிக்க வைத்தார்.

சிதம்பரத்தின் பெற்றோர் போட்ட நிபந்தனை அவர் தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்து பின் வெளிநாடு செல்லட்டும் என்பதுதான். அதுபோலவே அவர்கள் தங்கள் சொந்தத்தில் கல்லூரி வரை படித்திருந்த வள்ளியை சிதம்பரத்திற்கு திருமணம் முடித்து வைத்தனர். வள்ளிக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தனர். வள்ளியின் பெற்றோர் வள்ளி சிறிய பிள்ளையாக இருக்கும்போதே நோய்க் கண்டு இறந்துவிட, அவரின் அண்ணன்கள் இருவரும்தான் வள்ளியை வளர்த்தனர். வள்ளி இருவருக்கும் செல்லம் என்பதால் அவர் ஆசைப்பட்ட படி கல்லூரி வரை படிக்க வைத்தனர். வேலாயி அவர்களின் தூரத்து சொந்தம் என்பதாலும் சிதம்பரமும் நன்கு படித்து ஒழுக்கமானவராக இருந்ததாலும் வேலாயி வள்ளியை பெண் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டனர்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் இந்தியாவிலிருந்த சிதம்பரம், வள்ளி வயிற்றில் தேன்மலர் ஒரு மாதக் கருவாக இருந்தபோது அமெரிக்கா சென்றார். தேன்மலருக்கு இரண்டு வயதானபோது முத்துச்சாமி ஈசனடி சேர்ந்துவிட, அதன்பின் வள்ளியும் தேன்மலரும் மட்டுமே வேலாயிக்கு ஆதரவாக இருந்தனர். தேன்மலர் பள்ளி செல்ல ஆரம்பித்தபோது சிதம்பரம் வேலாயி, வள்ளி, தேன்மலர் மூவரையும் தன்னோடு அமெரிக்காவிற்கு வரும்படி அழைக்க, வேலாயி தன் கணவன் வாழ்ந்த வீட்டை விட்டு வர மறுத்து விட, வள்ளியைவிட வேலாயியோடு ஒட்டிக் கொண்டு திரிந்த தேன்மலரும் தன் அப்பாயியை விட்டு எங்கும் வர மாட்டேன் என்று அழுது அடம்பிடிக்க, வேறு வழியின்றி சிதம்பரம் தன் மனைவி வள்ளியோடு அமெரிக்கா சென்றார்.

தேன்மலர் என்னதான் தன் தாய் மாமன்கள் வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்றாலும் ஒருகட்டத்தில் தன் அத்தைகளின் பேச்சும் அத்தை மகன்களின் பேச்சும் பிடிக்காதவள் அங்கு செல்லவதை முற்றிலும் தவிர்த்து விட்டாள். தேன்மலரின் அத்தைகள் இருவரும் ஆளுக்கொரு மகன் பெற்றிருக்க, சிதம்பரத்தின் வெளிநாட்டு சம்பளமும் வேலாயியின் சொத்தும் அவர்களின் கண்ணை உருத்த, தன் மகன்களிடம் தேன்மலரை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் பணக்காரர்கள் ஆகலாம் என்று சிறு வயதிலிருந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனால் தேன்மலர் விடுமுறைக்கு வரும்பொழுதெல்லாம் தன் மாமன் மகன்கள் இருவரும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு தேன்மலர் அவர்களை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சண்டையிட ஆரம்பித்தனர். அது போதாதென்று அவளின் அத்தைகளும் தன் மகனை தான் அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவளிடமே தனி தனியே பேச, அது பிடிக்காத தேன்மலர் அவர்களோடு பேசுவதையும் அங்கு போவதையும் தவிர்த்து விட்டாள்.

வேலாயி நிழலிலேயே வளர்ந்த தேன்மலர் சுட்டியாக இருந்தாலும் ஒழுக்கமாக, படிப்பிலும் கெட்டியாக இருந்தாள். தேன்மலர் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் எடுத்து தேர்ச்சி பெற, சிதம்பரம் அவளை மேற்படிப்புக்கு வெளிநாடுதான் வர வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறவும் வேலாயியை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது அரற்றியவாறே வெளிநாடு செல்ல கிளம்பினாள். அவளுக்கு அப்போதிருந்த ஒரே ஆறுதல் தன் தாய் தந்தையோடு சில காலம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதே.

இளங்கலை படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பும் முன் தேன்மலர் தன் தாய் தந்தையோடு இந்தியா எடுத்துச் செல்ல சில பொருள்கள் வாங்கிக் கொண்டுக் குடும்பமாக சிரித்துப் பேசி வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அதில் வள்ளி இறந்துவிட, சிதம்பரம் பலத்த அடியோடும் தேன்மலர் சிறு காயங்களோடும் உயிர் தப்பினர். மகிழ்ச்சியாக இந்தியா திரும்ப நினைத்திருந்த தேன்மலர், இறந்த தன் தாயின் உடலோடு இந்தியா திரும்பினாள். சொந்த ஊர் வந்து வேலாயி முகத்தைப் பார்த்த தேன்மலர் அதுவரை தான் அடிக்கி வைத்திருந்த அழுகை, துக்கம் எல்லாவற்றையும் அவரைக் கட்டிக் கொண்டு கொட்டித் தீர்த்தாள். சிதம்பரமோ மனைவியின் பிரிவை ஏற்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் இருந்தார். வேலாயி தான் அவரையும் தன் பெயர்த்தியையும் தேற்றினார்.

அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து வேலாயி சொல்ல சொல்ல கேட்காமல், வேலை மீதிருந்த பிடத்ததினாலும் தன் மகளின் எதிர்காலத்திற்காகவும் வெளிநாடு சென்றார். வேலாயியின் அரவனைப்பால் மெல்ல மெல்ல தாயை இழந்த துக்கத்திலிருந்து மீண்ட தேன்மலர் தமிழகத்தில் இன்ஞ்சினியரிங்கிற்கு பெயர்ப் போன பல்கலைக் கழகத்தின் திருச்சிக் கிளையில் தன் மேற்படிப்பை தொடர்ந்தாள். பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்த தேன்மலர், தன்னை தேடி வந்த பல உள்நாட்டு வேலைகளையும் வெளிநாட்டு வேலைகளையும் புறகனித்து அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்ற ஆரம்பித்தாள். அவள் பேராசிரியராக பணியாற்ற ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது.

தேன்மலர் குளித்து முடித்து இளமஞ்சள் நிற காட்டன் புடவை உடுத்தி காதில் சிறிய ஜிமிக்கியும் கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும் ஒரு கையில் தங்க வளையலும் ஒரு கையில் கைக்கடிகாரமும் அணிந்து இடைவரை நீண்டிருந்த தன் கார்குழலை அழகாக பின்னலிட்டு ஒற்றை வெள்ளை செவ்வந்திச் சூடினாள்.

தேன்மலர் மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம். ஐந்தரையடி உயரம். கலையான முகம், காந்தமாய் கவர்ந்திழுக்கும் கண்களும் எதிர்படுபவரையும் மகிழ்ச்சிக் கொள்ளச் செய்யும் எப்போதும் அதரங்களில் தவழும் புன்னகையுமாய் இருப்பாள்.

தேன்மலர் தயாராகி “அப்பாயி… நா கிளம்பிட்டேன்… சாப்பாடு ரெடியா…” என்று கேட்டுக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள். வேலாயி சுடச்சுட ஆவி பறக்க இட்லியை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன்மேல் கோழிக் குழம்பை ஊற்றிக் கொடுத்தார்.

அதைக் கண்ட தேன்மலர் “என்ன அப்பாயி… காலையிலேயே கோழி அடிச்சு குழம்பு வச்சுருக்க…” என்று கேட்டவாறே இட்லியைப் பிய்த்து குழம்பில் குழைத்து வாயில் வைத்தாள்.

பரம்பரை வீடாக, பெரிய வீடாக ஆறு ஏழு அறைகள் கொண்ட, சாப்பாட்டுக்கூடம் தனியேக் கொண்ட வீடாக இருந்தாலும் தேன்மலருக்கும் வேலாயியுக்கும் அடுக்களையில் பேசிக் கொண்டே சாப்பிடுவது தான் பிடித்தம். வேலாயி அதைக் கண்டு சிரித்துக் கொண்டே “வயசு புள்ள நீயி… நல்லா சாப்ட்டு நல்லாருந்தா தானே… நாளை பின்ன கண்ணாலமானா புள்ள குட்டிகள பெத்து போட வலுயிருக்கும்…” என்று கூற,

தேன்மலர் அவரை முறைத்து “அப்பாயி… காலைலேர்ந்து கல்யாணத்த பத்தியே பேசுற… அத விட்டா உனக்கு வேற பேச்சேயில்லயா…” என்று கேட்டாள்‌.

வேலாயி “என்னத்தா பண்றது… வயசாயிடுச்சுல்ல… இன்னிக்கு இருப்பேனோ நாளைக்கு இருப்பேனோ தெரில… நா போறத்துக்குள்ள உன் கண்ணாலத்த கண்ணால பாத்துபுடனும்… அதுதான் என் ஆசை…” என்று கூற

தேன்மலர் கோபமும் அழுகையுமாய் “அப்பாயி…” என்றழைக்க, தேன்மலரை பார்த்து பதறிய வேலாயி அவள் கண்களை துடைத்து விட்டு “வேணா தாயி அழுகாத… அப்பாயி தெரியாம பேசி புட்டேன்…. இனிமே அப்டி பேச மாட்டேன்… நீ சாப்டுத்தா…” என்று அவளுக்கு ஊட்டி விட தேன்மலரும் சாப்பிட்டாள்.

தேன்மலர் சாப்பிட்டு முடித்து வேலாயியை கட்டிக் கொண்டு “அப்பாயி… இன்னொரு முறை அப்டி பேசாத… அம்மா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி என் அம்மாவா உன்னதான் நா நினச்சுட்ருக்கேன்… நீ மட்டும் என்னை விட்டு போகனுனு நினச்ச… அந்த நினப்பே உனக்கு வரக்கூடாது…” என்று கூற

வேலாயியும் கலங்கிய தன் கண்களை துடைத்து விட்டு “உன்னவிட்டு நா எங்கயும் போக மாட்டேன் தாயி…” என்று கூற, தேன்மலர் அவரை விட்டு விலகி நின்று புன்னகைக்க அவரும் புன்னகைத்தார். பின் தேன்மலர் வேலாயியிக்கு ஊட்டி விட இன்று ஏனோ கண் கொட்டாமல் தன் பெயர்த்தின் சிரித்த முகத்தை தன் கண்களில் நிறப்பியவாறே உண்டு முடித்தார்.

பின் தேன்மலர் கல்லூரிக்குக் கிளம்ப, வேலாயி அவளுக்கு மதிய உணவாக சோற்றில் நாட்டுக் கோழி குழம்பும் நல்லெண்ணெயும் ஊற்றி கிளறி ஒரு டிபன் பாக்ஸில் வைத்துக் கொடுக்க, தேன்மலர் வேலாயி கன்னத்தில் முத்தமிட்டு அதை வாங்கிக் கொண்டாள்.

பின் சுரேஷ் வர, அவனையும் சாப்பிட வைத்த வேலாயி “சுரேஸு… தேன பத்ரமா கொண்டு போய்விடு… மழை வேற பெஞ்சுருக்கு வேகமாலா ஓட்டாத சரியா… பாத்து பத்ரம்…” என்றார்.

சுரேஷ் சிரித்து “அப்பாயி… இத நீ என்கிட்ட சொல்லவே தேவயில்ல… நம்ம தேனுக்கு நா பொறுப்பு… தேன எப்டி பத்ரமா கூட்டிட்டு போய்ட்டு பத்ரமா கூட்டி வரேன்னு மட்டும் பாரு…” என்றான்.

வேலாயி சிரித்து “அது தெரியும்… தெரிஞ்சு தானே உன்னய நம்பி தேன உன்கூட அனுப்றேன்…” என்றார்.

இருவரையும் அதரங்களில் குறுநகையைத் தவழ விட்டவாறு பார்த்திருந்த தேன்மலர் “அண்ணே நேரமாச்சு கிளம்பலாமா…” என்று சுரேஷிடம் கேட்க,

சுரேஷ் “போலாம் மா… இதோ கார் எடுத்துட்டு வாசல்ல நிக்றேன் நீ வந்துரு…” என்றுவிட்டு அவன் வெளியேச் சென்றான்.

தேன்மலர் “அப்பாயி… மழை பெஞ்சு தரையெல்லாம் ஈரமா கெடக்கு… வழுக்குது வேற… திரும்ப மழை வந்தா… நீ மாடு நனையுது மாட்ட புடுச்சு கட்றேன்னு கொல்லை பக்கம் போன…” என்று விரல் நீட்டி எச்சரித்தவள் “மாட்டுக்கு தண்ணி காட்டனுனா… நீ போய் மாட்ட அவுக்காத… அது ஏற்கனவே இழுத்துட்டு ஓடும்… இப்ப தரை ஈரமா வேற கெடக்கு… உன்ன இழுத்து கீழ தள்ளிரும்… மாட்ட அவுக்கனுனா சுமதி அக்காட்ட சொல்லு அவங்க அவுத்து கட்டுவாங்க சரியா…” என்றாள். வேலாயி “சரி த்தா… நீயும் பத்ரமா போய்… மத்தியானம் மறக்காம சாப்ட்ரு…” என்றார்.

தான் ஏதாவது கூறினால் வழக்கமாக “போடி பொச கெட்டவளே… பெரிய மனுசி இவ… என்னை சொல்ல வந்துட்டா…” என்று வசைப்பாடும் வேலாயி இன்று ஏனோ தன் பேச்சுக்கு சரி என்கிறாரே என்று ஆச்சர்யபட்டுப் போன தேன்மலர் உள்ளம் மகிழ்ந்து வேலாயியை கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் இதழ் பதிக்க, வேலாயியும் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தார்.

இருவரும் மாறி மாறி முத்தம் வைத்துக் கொஞ்சி முடிக்க, வாசலில் கார் ஒலி கேட்கவும் சரியாகயிருக்க, தேன்மலர் மறுபடியும் தன் அப்பாயிக்கு அறிவுரைக் கூறி விட்டு விடைபெற்று கிளம்ப, வேலாயி சிரித்த முகமாய் விடைபெற்று செல்லும் தன் பெயர்த்தியையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார். தேன்மலரும் திரும்பி திரும்பி அவரைப் பார்த்தவள் என்ன தோன்றியதோ ஓடிவந்து அவரை ஒருமுறை கட்டியணைத்து முத்தமிட்டு விட்டு,

“அப்பாயி… நீ மாப்ள பாக்க ஆரம்பி… நீ பாக்ற மாப்ளயையே நா கட்டிக்றேன்…” என்று கூறி சிரித்துவிட்டு காரை நோக்கிச் சென்றாள்.

தேன்மலர் காரில் ஏறி விடைபெற்று, கார் தெருமுனையைத் தாண்டும் வரை வாசலிலேயே நின்றிருந்த வேலாயிக்கு அன்று ஏனோ மனதை ஏதோ ஒன்று அழுத்த பாரமாய் உணர்ந்தவர் “முதல்ல சிதம்பரத்துட்ட தேனுக்கு மாப்ள பாக்ற விசியமா பேசிரணும்… அவன் இன்னிக்கு போன் போடும்போதே பேசிருவோம்…” என்று சிந்தனை வயப்பட்ட வண்ணமே வீட்டிற்குள் சென்று மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்