Loading

 

 

அத்தியாயம் – 1

இந்த விடியலுக்காக தான் பல நாட்கள உண்ணாமல் உறங்காமல் தன் மொத்த உழைப்பையும் போட்டு பகல் இரவு பார்க்காது உழைத்தது. ஆனால் நாளை ஆதவன் உதயமாக போகிறதா? அஸ்தமிக்க போகிறதா? என்பது எல்லாம் பதியப்படும் வாக்குகளே முடிவு செய்யும்.

இதற்கு மேல் தன் கையில் எதுவும் இல்லை என்று நினைத்தவளுக்கு இங்கு வர அவள் பட்டப்பாடு எல்லாம் தொலைக்காட்சி இல்லாமலே நிழல்படமாக ஓடியது. பழையதை நினைக்க மனம் இல்லாமல் கடிகாரத்தை பார்க்க அது அதிகாலை மூன்று மணியை காட்டியது. படுக்கையறையை நோக்கி நடந்தவளது அலைபேசி ஒலிக்க, ‘இந்த நேரத்தில் யாரது?’ என்று யோசனையோடு உயிர்ப்பித்தாள்.

“ஹலோ!”
“ஹலோ ருத்ரா! நான் நகர செயலாளர் ராமமூர்த்தி பேசுறேன்”
“சொல்லுங்க அண்ணா என்ன புது நம்பர்ல இருந்து கூப்பிட்டிருக்கீங்க?”
“போன்ல சார்ஜ் இல்லைம்மா அதுதான் டிரைவர் நம்பர்ல இருந்து கூப்பிட்டேன்.”
“என்ன அண்ணா இந்த நேரத்தில்? ஏதாவது பிரச்சனையா? ” என்று கேட்பவளுக்கு நன்றாக தெரியும் ஏதோ பெரியதாக நடந்திருப்பது.

“ஆமாம்மா அந்த சு.ம.க பசங்க எதையோ மறைச்சு மறைச்சு தொகுதிக்குள்ள எடுத்துட்டு போறதா பனிரெண்டு மணிக்கு நம்ப கணேசன் போன் போட்டான். என்னனு பார்க்க வந்தா கட்சியாள் ஒருத்தன் வீட்ல    பட்டுசேலை இறக்கி இருக்கானுங்க. நைட்டோட நைட்டா போன்ல கூப்பிட்டு டோக்கன் வைச்சி எல்லா வீட்டுக்கும் கொடுத்திருக்கானுங்க.”
“ம்ப்ச் என்ன அண்ணா சொல்றிங்க? அந்த எலெக்ஷன் கமிஷன் ஆளுங்க கண்ணுல மண்ணை தூவிட்டு எப்படி இதை செஞ்சானுங்க?”

“அதுதான் எனக்கும் தெரியல? சரி இப்போ நம்ப பக்கம் என்ன செய்ய அதை சொல்லு. நமக்கு நேரம் அதிகமா இல்லை இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது செய்யணும். இல்லைன்னா இத்தனை நாள் நம்ப பட்டப்பாடு எல்லாமே வீணாப்போயிடும்.”
‘என்ன பண்ண?… இப்போ என்ன பண்ண?…’ என்று யோசித்தவளுக்கு ஒரு யோசனை வர,

“அண்ணா தலைமைல இருந்து வந்த நிதி இன்னும் எவ்வளவு இருக்கு?”
“நேத்து கணக்கு கொடுத்ததுக்கு அப்பறம் எடுக்கல அப்படியே தான் இருக்கும்மா”
“சூப்பர் அண்ணா. நம்ப கிட்ட இருக்க லிஸ்ட்ல ஆன்லைன் பேமென்ட் நம்பர் எல்லாம் தனியா நோட் பண்ணியிருக்கு. நம்ப ஐடி டீமை வர சொல்லி எல்லார் அக்கௌன்ட்லையும் ரெண்டாயிரம் போட சொல்லுங்க.”

“அப்போ நம்பர் இல்லாதவங்களுக்கு?”
“நான் இப்பவே கட்சி ஆபீஸ் போறேன். மத்தவங்க லிஸ்ட் அதுக்குள்ள ரமேஷை தனியா எடுக்க சொல்றேன். ஒரு ஐம்பது பசங்கள ஆபீஸ்க்கு அனுப்பி வைங்க அண்ணா”
“சரிம்மா அரைமணி நேரத்தில் எல்லாம் வந்துருவானுங்க. நான் கிளம்பிட்டேன் அங்க பார்க்கலாம்” என்று அழைப்பை துண்டித்தார்.

சிறிது நேரம் கண்ணுக்கு ஒய்வளிக்கலாம் என்று நினைத்தவளுக்கு பின்னோடு வேலை வர அவசரமாக குளித்து கிளம்பி கட்சி அலுவலகத்திற்கு சென்றாள். அவளுக்கு தேவையானது அங்கே ஆயத்தமாக இருந்தது.

“ரமேஷ் பசங்க எல்லாரையும் ஏரியாக்கு அஞ்சு பேரா பிரிச்சு கைல லிஸ்ட் கொடுத்து அனுப்பு.”
“அக்கா எல்லாருக்கும் லிஸ்ட் கொடுத்துட்டேன். நீங்க வந்ததும் மத்ததை கொடுத்து அனுப்ப தான் வைட்டிங்!”

“அதெல்லாம் நம்ப பசங்க சரியா செஞ்சுருவாங்க. நீ பணத்தை கொடுத்து விட்டுரு!” என்றவள் பக்கவாட்டில் நின்றவர்களை நிதானமாக பார்த்து,
“பசங்களா லிஸ்ட்ல யாரையும் விட்டுறாதிங்க. பால்காரன் பேப்பர்காரன் காய்காரனு எந்த மாதிரி போவீங்களோ எனக்கு தெரியாது. மணி இப்போ நாலரை ஆறு மணிக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுட்டு இங்க வந்துருங்க”
“சரிங்க அக்கா” என்று ஆளாளுக்கு அவர்கள் பாணியில் கூறி கொடுத்த வேலையை செய்ய சென்றனர்.

அவர்களை அனுப்பியவள் நேராக ஐடி டிபார்ட்மென்ட் என்று அழைக்கப்படும் குழு இருக்கும் அறைக்கு சென்றாள். அங்குப் பரபரப்பாகப் பணத்தைக் குறிப்பிட்ட எண்ணுக்கு அனைவரும் அனுப்பி அதைக் கொடுத்த பட்டியலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வளவு நேரம் இருந்த அழுத்தம் சற்று மட்டுப்பட்டிருந்தாலும் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற பதற்றம் அவளிடம் இன்னும் குறையவில்லை.

அந்த நேரம் மீண்டும் அவள் அலைபேசி அடிக்க எடுத்தவளுக்கு மீண்டும் தலைவலி, “எப்படி கணேஷ் அண்ணா இவ்வளவு நேரம் வராத எலெக்ஷன் கமிட்டி இப்போ வந்திருக்காங்க! சரி நீங்க என்ன பண்றீங்கனா நீங்களே போய் மாட்டிக்கோங்க.  கையில் இருக்கக் காசை பசங்ககிட்ட கொடுத்துட்டு ஒரு லட்சம் மட்டும் வைச்சுக்கோங்க. மதியம் வர மேனேஜ் பண்ணுங்க அதுக்குள் உங்களை வெளியே எடுக்க வேலையை ஆரம்பிச்சிடறேன்.”

“சரிம்மா! இந்த பணம் ஏதுன்னு கேட்டா என்ன சொல்ல?”
“நேத்து நைட் தான் சீட்டு எடுத்தேன் அந்த காசு தான் இதுனு திரும்பி திரும்பி சொல்லுங்க எப்படி கேட்டாலும் நான் அதுக்குள்ள ஆள் ரெடி பண்ணி ஸ்டேஷன் அனுப்பறேன்”

“சரிம்மா மத்ததை நான் பார்த்துகிறேன்”
“பார்த்து இருங்கண்ணா  நான் கொஞ்சம் பிஸி ஆகிடுவேன் தான் ஆனால் மறந்திடமாட்டேன்.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு நாள் தான நான் பார்த்துகிறேன். நீ பூத்துக்கு போயிடு.”

“ஓகே அண்ணா போனையும் நம்ப ஆளுங்கக்கிட்ட கொடுத்துருங்க. நான் வைக்கிறேன்!” என்றவள் அடுத்து அவரை எப்படி எப்பொழுதும் வெளியே எடுக்கவேண்டும் என்று ஒரு நபரை அழைத்து கூறினாள்.
பின் நேரமாவதை பார்த்தவள் ஒருமுறை மாவட்ட தலைவரை காணலாம் என்று அவரை பார்க்க சென்றாள்.

                        **********

“2023 தேர்தல் பற்றிய நியூஸ் 10 உடன் நான் இந்திரஜித். தேர்தலின் நோக்கம் நல்லாட்சியா? பணமாட்சியா? என்ற கருத்தரங்த்தில் நம்முடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சியின்  பேச்சாளர்களும் இணைந்து இருக்கிறார்கள்.

வணக்கம் திரு.ராமலிங்கம் அவர்கள், தேர்தல் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதுவதாக களத்தில் இருக்கும் நம் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த முறை பணபட்டுவாடா குறித்து உங்களது கருத்து என்ன?”

“ஒரு கவலைக்குரிய விசயம் என்னனா, இந்தமுறை பணப்பட்டுவாடா அடுத்த கட்டத்திற்கு போய் விட்டது . கூகுள் பே யூ.பி.ஐ என்று ஆன்லைன் மூலம் பணம்பட்டுவாடா செய்திருக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் பிசிக்கலாவே 437 கோடி பிடித்துள்ளதாக நெருங்கிய வட்டத்திலிருந்து செய்தி வந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

ஏன் இன்று கூட குறிப்பிட்ட ஒரு தொகுதியில் ஒரு கட்சி பொதுவான வீட்டில் வைத்து பட்டு புடவை கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்கு நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை.

பணத்தை கொடுத்தால் மக்கள் வாக்கு பதிவு செய்யப் போகிறார்கள் என்று பரவலான எண்ணம் இங்கு இருக்கும் பல கட்சிகளில் பதிந்து போன கூற்று.” என்று அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே எதிர்க்கட்சி சார்பாக பேச  வந்தவர் இடைப்புகுந்தார்.

“இது கட்சிகளை குறித்து அவதூறு பரப்பும் சிலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு உளறுவது போல் இருக்கு”

“காசு வாங்கிகிட்டு இது மாதிரி பேசணும்னு இல்ல. இங்க நடக்கிற உண்மையை உடைச்சு பேசுறவங்களுக்கும் அதே மரியாதை தான்னு இதோ நிரூபிச்சிட்டார்.”

நிலைமையை சரி செய்யவும் அதேசமயம் மக்களுள் ஒருவனாக பேச வேண்டிய சூழ்நிலையில் இருந்த இந்திரஜித்தை ஊடுருவி மூலம் கட்டிப் போட்டிருந்தார் அந்த நிகழ்ச்சியின் டைரக்டர்.

“ராமலிங்கம் அவர்களே ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மொத்த அரசியலையும் குற்றம் கூறுவது வருத்தத்துக்குரியது” என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர் பேச, அவரை இடைமறித்த ராமலிங்கம்.

“அதைப் பற்றி அப்புறம் பேசலாம், உங்க கட்சியை சேர்ந்த ஒருவரை தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்யும்போது பிடிச்சிருகாங்க. இதுக்கு உங்களோட கருத்து என்ன?” என்றார் நகைப்புடன்.

“ஆளும் கட்சிக்கு எதிரான சிலரின் சதியாக தான் அதை நான் பார்க்கிறேன். தனது வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து தனக்கு தெரிந்த ஒருவரிடம் கடந்த இரண்டு வருடமாக குலுக்கள் சீட்டு போட்டிருந்தார் திரு.கணேசன்.

தனது மகளின் படிப்பிற்காக நேற்று இரவு அந்த பணத்தை பெற்றுள்ளார். அந்த நேரம் தொகுதியில் ஏதோ முறைகேடு நடப்பதாக கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு விரைந்துள்ளார். கையில் ரொக்கமான பணத்துடன் தொகுதியில் உலா வந்தவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகமே தவிர அவர் மீது எந்த குற்றமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன் திரு ராமலிங்கம் அவர்களே.” என்று தங்கள் தரப்பு நியாயத்தை அவர் கூற சிறு சிலசலப்பு ஏற்பட்டது.

“இந்திரா எனக்கு இது வேண்டாம். ஒரு காரசாரமான ஒரு விவாதம் தான் எனக்கு வேணும். அதுக்கு ஏதாவது கான்ட்ரோவர்சியான விஷயத்தை வைத்து அவர்களை ட்ரிகர் பண்ணு” என்று அவனுக்கு எதிர்புறம் இருந்து உத்தரவு வந்தது.

பெருமூச்சு ஒன்றை விட்டு கேமராவை ஒரு நொடிக்கும் குறைவாக வன்மமாக பார்த்தான்.
பின் குரலை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

“வஞ்சிபுரம் தொகுதியில் நிற்கும் செல்வி. ருத்ரா ஞானவேல் குறுகிய காலத்தில் மற்ற உறுப்பினர்களை தாண்டி எப்படி இந்த தேர்தலில் களமிறங்கி இருக்காங்க. அவங்களது பின்பலம் என்ன? முதலமைச்சர் அவரது…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே சின்னதாக இருந்த சலசலப்பு பெரியதாய் வெடிக்க ஆரம்பித்தது.

இதலோரத்தில் காணக்கிடைக்காத அளவில் ஒரு புன்னகை அவனை மீறி வந்திருந்தது. எதற்கு இந்த வன்மம் அதுவும் ஒரு பெண்ணை தன் சுயநலத்திற்காக பொதுவெளியில் ஆதரமின்றி குற்றச்சாட்டி எதை பெற நினைக்கிறான் என்பது எல்லாம் அவன் சித்தம் மட்டுமே அறிந்தவை. சில நொடியில் தன்னை மீட்டவன் விவாதத்தில் அவ்வப்போது எண்ணையை உற்றுவது போல அவன் வேலையை செவ்வென செய்தான்.

                        ***********

மாவட்ட செயலாளரை காண சென்றவளின் அலைபேசி சிணுங்கியது, இப்போ என்ன என்ற யோசனையில் பெயரை பார்க்காமல் ஏற்று இருந்தாள்.

“என்ன ருத்ரா இன்னைக்கு தேர்தல், எப்படியும் ஜெயிச்சுருவ! அப்பறம் சீட் கொடுத்த என்னை மறந்திருவ அப்படி தான?” என்று வயதான கரகரப்பான குரல் கேட்டது.
குரலே அது யாரென்று கூற, எதிர்புறம் இருக்கும் நபரின் எதிர்பார்ப்பு புரியாமல் இல்லை.

‘அரசியல் ஒரு சாக்கடை அதில் நீ விழப் போகிறாயா?’ என்று பெற்றவள் கேட்டது தவறே இல்லை என இதோடு லட்சம் முறை நினைத்து விட்டாள்.

யோசனையில் இருந்தவளை மீண்டும் நிகழ்விற்கு கொண்டுவந்தது அந்த குரல், “ருத்ரா இருக்கியா? நான் பேசுறது கேட்குதா?”.
“இப்போ தான் கேட்குது. சொல்லுங்க என்ன விசயம் இந்த நேரத்தில் கூப்பிட்டீருக்கீங்க?” என்று இதற்கு முன் அவர் பேசிய எதுவும் அவள் காதில் விழவில்லை என்பது போல் பேசினாள்.

“உனக்கு சமாளிக்க சொல்லியா தரணும். நீ தான் ருத்ரா, ருத்ரா ஞானவேல் ஆச்சே!” என்று அவர் அழுத்தி கூற,
“இப்போ எதுக்கு தேவை இல்லாதது எல்லாம் பேசிட்டு. நேரா விசயத்தை சொல்லுங்க”.

“இப்போ கிளம்பி என் கெஸ்ட் ஹவுஸ் வா. உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசணும். ஓர் ஏழு மணிக்கு பூத்துக்கு போயிடலாம்”
‘இத்தனை நாள் எப்படியோ தப்பிச்சுட்டோம் இப்போ என்ன சொல்லி தப்பிக்க’ என்று யோசித்தவளுக்கு எந்த வழியும் கிடைக்காமல் போக,
“தேர்தல் முடிச்சிட்டு இதைபத்தி பேசிக்கலாம்.” என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

‘எப்படி பேசினாலும் நழுவி போறாளே இவளை இப்படி சும்மா விடவா, ஒரு கோடி கொடுக்கிறேன்னு சொல்லியும் அந்த மருது பயலுக்கு பதில் இவளுக்கு கொடுத்தேன்’ என்று மனதில் பேசி,
“சரிம்மா நாளைக்கு காலையில் வா. பேச வேண்டியதும் முடிக்க வேண்டியதும் நெறய இருக்கு” என்று அவர் பேச பாதியிலேயே துண்டித்திருந்தாள்.

“போனை வா கட் பண்ற, சிக்கு டி அப்பறம் இருக்கு உனக்கு!” என்று முதலமைச்சருக்கு வாழ்த்து கூற அவர் அலுவலகத்திற்கு சென்றார் அரசியலில் பழம் தின்று கொட்டையை கூட மென்று தின்ன மல்லிகாபுரம் மணிவண்ணன்.

ருத்ராவின் மனமோ உலைக்களமாக கொதித்திருக்க, அதில் அமிலம் இட்டத்தை போல இருந்தது தொலைக்காட்சியில் இந்திரஜித்தின் கேள்விகள். கண்கள் சிவக்க அதை பார்த்தவள், ‘என்னை கேவலப் படுத்திட்டோம்னு சந்தோசமா இருக்க உனக்கு என்னோட வெற்றியாளா பதில் சொல்லுறேன். உன்னை இதைவிட கேவலமா பழி வாங்கல. இந்த கட்சிக்காக செத்துப்போன ஞானவேல் பொண்ணு ருத்ரா இல்லை டா நானு’ என்று சபதமிட்டு செயலாளரின் அறைக்குள் சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்