Loading

           இமைகளின் மீது இரு கனமான கற்களை வைத்து கட்டியதை போல கண்கள் இறுக்கமாக இருக்க, சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள் அவள். சூரிய வெளிச்சம் சற்றும் அந்த அறையில் புகாத வண்ணம் நாலாபக்கமும் சுவர்களால் அடைக்கப்பட்டிருக்க இரவா பகலா என ஒன்றும் புரியவில்லை. எங்கு இருக்கிறோம் என்றும் விளங்கவில்லை.

மெதுவாக கண்களை சுழற்றியதில், மெல்லிய விளக்கொளி அறையின் மையத்தில் இருந்து கசிந்து அறையின் அமைப்பை காட்டியதில் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்த ஒரு படுக்கை அறை என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. விழிகள் கொடுத்த கனம் தாளாமல் மீண்டும் கண்களை மூடிக் கொள்ள அறைக்கதவு திறந்தது.

“பரவாயில்லையே. நல்ல மருந்தா தான் குடுத்து இருக்கானுங்க. இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் மயக்கம் தெளியல போல.” என பேசிக் கொண்டே அவள் அருகில் வந்தான் சிவநேத்ரன். அவனது குரல் செவிகளுக்குள் ஒலிக்க, விழிகளை திறக்காமலே குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்டாள் அவள்.

அவன் அவளது படுக்கை அருகில் வந்து நிற்கவும் சடாரென எழுந்து அவனது கழுத்தை நெரிக்க ஆரம்பித்தாள் அவள். எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் ஒரு கணம் நிலை குலைந்தாலும் அடுத்த கணமே அவளது கைகளை எடுத்து விட ஆரம்பித்தவன், “ரதி விடு. சொன்னா கேளு.” என்றபடியே அதில் வெற்றியும் கண்டான்.

அவளை பிடித்து தள்ளிவிட்டதில் தடுமாறி படுக்கையில் விழுந்த ரதி, சட்டென எழுந்து நின்றாள். “எதுக்குடா என்னை கடத்திட்டு வந்து இப்படி அடைச்சு வைச்சிருக்க?” என கேள்வி கேட்க, “எதுக்குன்னு உனக்கு தெரியாதா?” என்றபடி அவளது கண்களை ஆழ்ந்து நோக்கியவன், “ஆனா அதுலயும் ஒரு சின்ன திருத்தம். நான் உன்னை கடத்திட்டு வந்து அடைச்சு வைக்கல. பாரு உன்னை கட்டி கூட போடல. ஏன் ரூம் கூட திறந்து தான் இருக்கு.” என்றான் அவன்.

“ரொம்ப சந்தோஷம். அப்ப தள்ளு நான் கிளம்பறேன்.” என அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, “போயி… அவன் கையால தாலி கட்டிக்க போறீயா?” என கிண்டலாக கேட்டான் சிவா. “நான் என்னவோ பண்றேன். அது உனக்கு தேவையே இல்ல. உன் வேலையை மட்டும் பாரு.” என்றாள் ரதி கோபமாக.

“அப்படி விட முடியாதே டார்லிங். அவ்வளவு தானா நம்ப பழக்க வழக்கம் இருந்திருக்கு.” என சிவா கேட்க, “அதான் நீயே சொல்லிட்டியே. இருந்திருக்குன்னு. இப்ப எதுவும் இல்ல. அதனால பிரச்சனை பண்ணாம வழியை விடு.” என அவனை தள்ளிக் கொண்டு சென்றவளை மேலும் நிர விடாமல் கைகளை அழுத்தமாக பற்றி இருந்தான் அவன்.

ரதி திரும்பி பார்க்கவும், “நான் எல்லா நேரமும் பொறுமையா இருக்க மாட்டேன் ரதி.” என்றவனின் முகத்தில் இருந்த ரௌத்திரம் அவளை சற்றே அசைத்து பார்த்தது. ஆனால் சட்டென்று அவனது முக பாவனையை மாற்றிக் கொண்டவன், “நாம நம்ம கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு கொஞ்சம் நிதானமா பேசலாமா? ப்ளீஸ்.” என கேட்டவனின் குரலில் இருந்த ஏதோவொன்று ரதியை தலையாட்ட வைத்தது.

              அதே நேரத்தில் இங்கு மண்டபத்தில், மணப்பெண் அறையில் ரதியை காணவில்லை என கலை மாணிக்கத்திடம் கூற, அவரோ, கலையை ஓங்கி அறைந்து விட்டு, “எங்கடி போனா உன் பொண்ணு? நீ கூடவே தானே இருந்த. உனக்கு தெரியாம எங்க போனா அவ?” எனக் கேட்க, “இங்கதான் ரெடியாகிட்டு இருந்தா. நான் ஒரு வேலையா சமையல்கட்டுக்கு போய்ட்டு வந்து பார்த்தா அவளை காணோம்ங்க.” என்றார் கலை.

“இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல. அவ மேல கண்கொத்தி பாம்பா கவனம் வைச்சிருன்னு சொல்லி இருந்தேன்ல. கொஞ்சம் நீ விட்டதும் அவ வேலையை காட்டிட்டா பார்த்தியா?” என மாணிக்கம் சீற, “இல்லங்க. அவ கண்டிப்பா இங்கதான் இருப்பா. எங்கையும் ஓடி போக மாட்டேன்னு என்கிட்ட சொன்னா. நாம நல்லா தேடி பார்க்கலாம்.” என்றார் கலை.

“ஆமா அவ ரொம்ப உத்தமி பாரு. அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும். எல்லா ஏற்பாடும் பண்ணப்பறம் அவ நைசா கம்பி நீட்டிட்டா.” என மாணிக்கம் கூற, “என்னங்க நீங்க. பெத்த புள்ளையை பத்தி இப்படியெல்லாம் பேசறீங்க. அவதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு எத்தனை தடவை சொன்னா. நீங்க கேட்கல.” என்றார் கலை.

“ஓ இப்பதான் விசயமே புரியது. அந்த பக்கம் பகுமானமா பொண்ணை அனுப்பி வைச்சுட்டு இங்க என்கிட்ட நியாயம் பேசிட்டு இருக்கியோ. எவ்வளவு பெரிய சம்பந்தம் இதுன்னு தெரியுமாடி உனக்கு. இப்ப மாப்பிள்ளை வீட்ல நான் என்ன பதில் சொல்லுவேன்.” என்ற மாணிக்கம் இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ, அதற்குள் அங்கு ரத்னாவின் தாய் சாவித்திரி வந்து விட்டதால் அவரின் பேச்சு நின்றது.

உடனடியாக ஒரு செயற்கை புன்னகையை பூசிக் கொண்டவர், “வாங்க சம்பந்தியம்மா. சொல்லுங்க‌.” என அழைக்க, அவரோ, “ரதி ரெடியாகிட்டாளா? இது எங்களோட பரம்பரை ஆரம். அலங்காரம் முடிஞ்சதுன்னா இதை போட்டு விடலாம்னு வந்தேன்.” என்றபடி அவர் காட்டிய ஆரத்தின் மதிப்பு எப்படியும் சில லட்சங்கள் தேறும்.

அதை கண்ட மாணிக்கத்தின் கண்கள் அதன் மீதுள்ள ஆசையை அப்பட்டமாக காட்ட, அதை வெறுப்போடு பார்த்தார் கலை. மாணிக்கம் உடனே, “ஆங். ரெடியாகிட்டா சம்பந்தி. நீங்க குடுங்க. நான் குடுத்தடறேன். இப்பதான் பாத்ரூமுக்கு போனா.” என கைகளை நீட்டியே விட்டார். “அது இல்ல சம்பந்தி. நானே என் மருமகளுக்கு போட்டு விடலாம்னு நினைச்சேன்.” என்றார் சாவித்திரி.

“இல்ல சம்பந்தி.” என மாணிக்கம் இழுக்க, “நீங்க இருங்க.” என்ற கலை, “இல்ல அண்ணி. இனிமேல் இதை நீங்க ரதிக்கு போட்டுவிட முடியாது. ஏன்னா ரதி இங்க இல்லை.” என போட்டு உடைத்துவிட்டார். “என்ன.. என்ன சொல்றீங்க அண்ணி.” என அவர் பதற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல சம்பந்தியம்மா. அவ ஏதோ உளருறா.” என்ற மாணிக்கம், எதுவும் கூறக்கூடாதென கண்களாலேயே கட்டளை வேறு இட்டார்.

அதெயெல்லாம் கலை கண்டு கொண்டால் தானே. ‘முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு’ என நினைத்துவிட்டார் போல. “உங்ககிட்ட முன்னாடியே சொல்லாதது என் தப்புதான் அண்ணி‌. ரதிக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. இவர்தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சார்.” என்றதும் சாவித்திரி அதிர்ந்து விட்டார்.

அவரின் அதிர்ந்த முகத்தை பார்த்ததும் கலை சற்றே தன் பேச்சை நிறுத்த, “இவர் கட்டாயப்படுத்தினா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. இப்ப வந்து சொல்றீங்க. ரதியை கூப்புடுங்க முதல்ல.” என அவர் சத்தம் போட, “இப்ப எங்க போனான்னு தெரியல. ஒருவேளை திரும்ப வந்தாலும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டா.” என்றார் கலை முடிவாக.

“என்னங்க.” என வேகமாக அவரது கணவரை அழைத்தவர், தளர்ந்து போய் அமர்ந்துவிட, வேகமாக உள்ளே வந்தார் ரத்னாவின் தந்தை செல்வபதி. “என்னாச்சும்மா.” என அவர் கேட்கவும், நடந்ததை அவரிடம் சுருக்கமாக உரைத்தவர், “நானே என் பையன் வாழ்க்கையை வீணாக்கிட்டேனே.” என அழுக ஆரம்பித்து விட்டார்.

“நீ ஏன்மா அழற. ஏமாத்துனது இவங்க. இப்பவே இவங்களை என்ன பண்றேனு பாரு.” என தனது அலைபேசியை எடுக்க, “என் பொண்ணு இப்படி என்னை ஏமாத்துவான்னு நினைக்கல சம்பந்தி. என்னை மன்னிச்சிடுங்க.” என கையெடுத்து கும்பிட்டார் மாணிக்கம். “என்ன எல்லாருமா சேர்ந்து விளையாடுறீங்களா?” என குரலை உயர்த்தினார் செல்வபதி.

“இல்லைங்க சம்பந்தி. அது வந்து…” என மாணிக்கம் இழுக்க, அதுதான் கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சே. அப்பறம் என்னய்யா சம்பந்தி. என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம என்கிட்டயே விளையாடி பார்த்துட்டல்ல. அதுக்கான பலனை இன்னும் கொஞ்ச நேரத்துல அனுபவிக்க போற.” என்றபடியே காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார் செல்வபதி.

அந்த பக்கம் அழைப்பை ஏற்கும் முன்பே, அறையினுள் வந்து ரத்னா நிற்க, அழைப்பை துண்டித்தவர், “ரத்னா‌. நீ எங்க இங்க? உன் ரூம்ல தானே இருந்த.” என்றார் பதட்டமாக. அவனோ அவரை அழுத்தமாக பார்த்துவிட்டு, கண்ணீருடன் நின்றிருந்த தனது தாயிடம் சென்று, “இங்க என்னமா நடக்குது?” எனக் கேட்டான்.

“இந்த பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம். இப்ப வந்து சொல்றாங்க.” என சாவித்திரி கண்ணீருடன் உரைக்க, அவன் முகத்தில் மெல்லிய அதிர்வு. ஆனால் நொடியில் அதை மாற்றிக் கொண்டவன், “இருங்கம்மா. இவங்க பொய் சொல்லக்கூட வாய்ப்பு இருக்கு இல்லையா? எதுவா இருந்தாலும் ரதியே வந்து சொல்லட்டும்.” என்றான் ரத்னா.

“இல்ல தம்பி. அவ இங்க இல்ல. எங்க போனான்னு தெரியல.” என கலை கூறவும், “அதைத்தான் நானும் கேட்கிறேன். அவ எங்க போனான்னு. இங்க என்ன கைய கால கட்டியா கல்யாணம் பண்ண போறோம். பிடிக்கலன்னா நேராவே இருந்து சொல்லி இருக்கலாமே. எதுக்கு ஓடனும்?” என்றான் ரத்னா.

“அப்படித்தான் பண்ண போறதா என்கிட்ட சொன்னா தம்பி. ஆனா இப்ப என் பொண்ணை காணோம். எங்க போனோளா தெரியலையே.” என கலை அழுக ஆரம்பிக்க, “அடச்சீ நிறுத்து. இவ்வளவு நேரம் அவ வந்தாலும் கல்யாணம் நடக்காதுன்னு வீரமா பேசிட்டு, இப்ப தெரியாத மாதிரி அழுகறீயா? இன்னும் பத்து நிமிஷத்துல உன் பொண்ணு இங்க இருக்கனும். இல்லனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என மிரட்டினார் மாணிக்கம்.

“யோவ். நிறுத்துயா. இப்ப மட்டும் நீ என்ன மனுஷனாவா இருக்க? எதுவும் தெரியாத மாதிரி நடிச்சா உன்னை சும்மா விட்டுடுவேனா.” என பதிலுக்கு செல்வபதி பேச, சற்று நேரத்தில் அங்கு கலவரம் மூண்டது. “கொஞ்சம் நிறுத்தறீங்களா எல்லாரும்.” என ரத்னா போட்ட சத்தத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க, கலையிடம் சென்றவன், “நீங்க சொன்னது உண்மைதானே. ரதிக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைதானே.” எனக் கேட்டான்.

அவர் ஆமாமென்று தலையாட்ட, “அவ்ளோதான். இனிமே இங்க யாரும் எதுவும் பேசக்கூடாது.” என்றவன் மாணிக்கத்திடம் திரும்பி, “உங்களுக்கு அஞ்சு நிமிஷம்தான் டைம். அதுக்குள்ள உங்க மூட்டை முடிச்சை கட்டிட்டு சொந்த பந்தம் எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு மண்டபத்தை காலி பண்ணி இருக்கனும். புரியுதா?” என்றான் குரலில் கோபம் காட்டி.

“இல்ல மாப்பிள்ளை அதுவந்து…” என மாணிக்கம் ஆரம்பிக்க, “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நீங்க கிளம்பலாம்.” என்றான் ரத்னா வாசலை நோக்கி கைகாட்டி. “என்னப்பா இவங்க பண்ண வேலைக்கு அப்படியே விட சொல்ற. நாம போலீஸ்க்கு போகலாம்.” என செல்வபதி கூற, “தேவையில்லப்பா விடுங்க. பார்த்துக்கலாம்.” என்றான்.

அவர்கள் அறையை விட்டு வெளியேறியதும், “அதே மாதிரி நம்ம சொந்த பந்தங்ககிட்டயும் கல்யாணம் நின்னு போச்சுன்னு சொல்லிடுங்க.” என ரத்னா கூற, திகைத்து போய் பார்த்தார் சாவித்திரி. மண்டபத்தில் இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, இது எதுவுமே தெரியாமல் மகிழ்ச்சியாக ஆட்டோவில் வந்து மண்டப வாசலில் இறங்கினாள் ரதி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்