மோதும் மேகங்கள்-8💝
‘நான் என்ன பண்ண? நியாயமா அவன் என் கிட்ட சொல்லாம போயிட்டான்னு, நான் தான் கோச்சிக்கனும்’ என மனதில் வருந்திக் கொண்டே தனது ஸ்கூட்டியை நோக்கி நடந்த இசையை அந்த காவலாளி “எம்மா நில்லு. ஆதி சார் உன்ன கூப்பிட்டாரு. அங்க போயும் என்கிட்ட பேசின மாதிரி அவர் கிட்ட எல்லாம் பேசி வைக்காத” என அறிவுரை கூறி வீட்டினுள் அவளை அனுமத்தித்தார். ஆதி தான் தன்னை காண வந்திருக்கும் இசையை பார்க்காமல் அனுப்ப மனம் கேட்காமல் வர கூறி இருந்தான்.
இசை ஸ்கூட்டியை வெளியே விட்டுவிட்டு அவ்வீட்டின் அரண்கள், அழகாக அமைக்கப்பட்டிருந்த தோட்டங்கள்,அவுட் ஹவுஸ் என அனைத்தையும் தாண்டி அம்மாளிகை போன்று வீட்டினுள் நுழைந்தாள். ‘மதியாதோர் தலைவாசல் மிதியாதே’ என அவளது மூளை கூறினாலும் ‘ஏன் இவ்வாறு செய்தான் என தெரிந்து கொள்’ எனஅவளது மனமும் கூறியது.
மூளைக்கும் மனதிற்கும் நடந்த போரில் இசையின் மனமே வென்றது. அவள் எப்போதும் மூளையை பயன்படுத்தாமல், மனம் கூறுவதை கேட்டு நடப்பவள். அவள் மூளை சொல்வதை கேட்டு இருந்தால் ஆதியுடன் எதர்ச்சையாக நடந்த அவளது முதல் சந்திப்பிலேயே அவன் கொடுத்த ஐநூறு ரூபாய் தாள்களை அவளது ஆடையை சேதப்படுத்தியதற்கு வாங்கி இருப்பாள். அதைவிட்டுவிட்டு மனம் சொல்வதை கேட்டு ‘தன்மானம் தான் பெரிது’ எனக் கூறிக் கொண்டு அவன் கொடுத்த ஐநூறு ரூபாய் தாள்களை தன் ஆடையை அழுக்காக்கிய அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டாள். இரண்டாம் சந்திப்பிலும் ‘ஆதி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றவன், முந்தினம் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் விலை உயர்ந்த காரில் வந்தவன் இவன்’ என சிந்தித்து அவன் பணக்காரனாக தான் இருப்பான் என அவனிடம் வம்பு வளர்க்க வேண்டாம் என அனைவர் போலும் யோசிக்காமல் “யார் நீ ?” என கேள்வி கேட்டு ஆதியை கடுப்பேற்றி இருக்க மாட்டாள். மூன்றாம் சந்திப்பிலும் முகிலனும் ஸ்வேதாவும் ஆதி ஒரு பெரிய பிரபலமான நடிகன் என அவனை பற்றி முழுவதும் கூறிய பிறகும் கூட அவனிடம் சண்டை போட்டு வம்பு இழுத்து இருக்க மாட்டாள். இப்போது கூட தன் வேலை முடிந்தது என எண்ணி செல்லாமல் ‘அவன் கோபமாக சென்றானே அவனுக்கு என்னவாயிற்றோ?’ என கேட்க அவனது வீடு வரைக்கும் வந்து இருக்க மாட்டாள். வந்தவளுக்கு மிஞ்சியது என்னவோ அவமானமே இருந்தும் தன் மூளையை பயன்படுத்தாமல் உள்ளே செல்கிறாள்.
தன் வீட்டிற்கு வந்தவளை அமருமாறு கூட கூறாமல் தான் மட்டும் சோபாவில் வசதியாக அமர்ந்து கொண்டு “இப்ப எதுக்கு இங்க வந்து சண்முகம் அண்ணன் கிட்ட கத்தி சண்டை போட்டுட்டு இருக்க?” என வினவினான் ஆதி.
இசைக்கு தலைக்கு மேல் கோபம் வந்தாலும் “நீ கோபமா போனியே உனக்கு என்ன ஆச்சனோ வருத்தப்பட்டு வந்த பாரு என்ன சொல்லனும். நியாயமா பார்த்திருந்தா நீ என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நா கூப்பிட கூப்பிட என கண்டுக்காம போனதுக்கு, நா இங்க வந்தே இருக்க கூடாது. ஆனா மனசு கேட்காம வந்து உன்னப் பார்க்கிறதுக்காக நீ என்ன யாரோ மாதிரி ட்ரீட் பண்ணி அசிங்கப்படுத்திய அப்புறமும், உன் கூட உன் முன்னாடி நின்னுட்டு பேசிட்டு இருக்கேன் பாரு, என்ன என்னன்னு சொல்றது? எனக்கு உன் வேலையே வேணாம்.நீ தயவுசெய்து வேற ஆள பார்த்துக்கோ. அப்புறம் ப்ளீஸ் என பழிவாங்கறனு நெனச்சிட்டு ஸ்வேதாவுக்கு நீ கொடுக்கிறனு சொன்ன மூணு மாசம் சம்பளத்த நிறுத்திராத. நான் வேலைக்கு போய் நீ அவளுக்கு கட்டின ஹாஸ்பிடல் பில்லையும், நீ அவளுக்கு இந்த மூணு மாசம் கொடுக்கிற சம்பளத்தையும், உனக்கு வட்டியும் முதலுமா சேத்து தந்துறேன்” என இப்போவா அப்போவா என விழ தயாராக இருக்கும் கண்ணீருடன் கூறினாள்.
இவன் முன்னாடிலாம் அழுகிதிடவே கூடாது என வம்படியாக கண்ணீரை கண்ணுக்குள்ளே தேக்கி வைத்திருந்த இசை “குட் பாய்” என அவள் கூறும் போது அவளை அறியாமலே இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வந்துவிட்டது. அவளது கண்ணீரை துடைத்துக் கொண்டே தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டாள் இசை.
வீட்டிற்கு போகும் வழியிலே முகம் கழுவிவிட்டு தான் அழுவது யாருக்கும் தெரியாதவாறு முகத்தை இயல்பாக்கி கொண்டே வீட்டிற்கு சென்றடைந்தாள் இசை.
அவள் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக முகிலன் அவளைப் பிடித்துக் கொண்டு “ஹேய் இசை வா வா” என என்றுமில்லாத திருநாளாய் இன்று பலமாக அவளை வரவேற்றான். அவளது கைப்பையை வாங்கி வைத்து விட்டு “முதல் நாள் வேர்க் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு? ஆதி சார் எப்படி இருந்தாரு?..” என அவன் பேசிக்கொண்டே போக “நல்லா இருந்துச்சுடா” எனக் குரலில் சுரத்தே இல்லாமல் ஒரே வரியில் பதில் கூறினாள் இசை.
“ஆதி சார் எத்தனை டேக்ல இசை நடிச்சாரு?” என அவன் சினிமா ஆர்வத்தால் கேட்க, எங்கே இசை படப்பிடிப்பை கவனித்திருந்தால் தானே கூற. அபி மதியம் தானும் ஆதியும் சிங்கிள் டேக்கிலே நடித்து முடித்து விட்டதாக கூறியது நினைவு வரவே “சிங்கிள் டேக்ல நடிச்சாரு” என அவன் பிடித்து வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால் கடமையே என பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்கு ஃபுல்லா என்னன்னா இசை நடந்துச்சு?” என அவன் மேலும் மேலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, ஆதியும் அபியும் இன்று நடித்தது, இயக்குனர் அவர்களை பாராட்டியது, அபி அவளிடம் நன்றாக பேசி பழகியது என ஆதியிடம் சண்டையிட்டது, அவன் மாலை கோபமாக சென்றது,அவன் வீட்டிற்கு சென்று இன்று வேலையை விட்டுவிட்டு வந்தது என பிற்பகுதியை மற்றும் மறைத்துவிட்டு மற்றவற்றை தன் தம்பி முகிலனிடம் கூறினாள்.
“வாவ் சூப்பர் இசை. அபி கூட வளரும் நடிகர் தான். அவர் கூட செம்மையா நடிப்பாரு. ஆனா அவருக்கு இன்னும் படத்துல எல்லாம் ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைக்கல. ஆனா ரெண்டு மூணு சீரியல்லலாம் ஹீரோவா நடிச்சிருக்காரு. என அவன் அறிந்தவற்றை எல்லாம் இசையிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.
இசைக்கு அபியை பிடித்திருந்தது தான். அவள் நல்ல மனநிலையில் இருந்து இருந்தால் முகிலன் கூறியவற்றை ஆர்வமுடன் கேட்டு இருப்பாள். ஆனால் இப்போதுள்ள மனநிலையில் இசை தலையெழுத்தே என அவனுக்கு உம் கொட்டி தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவர்களது தாயார் கவிதா “டேய் ஏன்டா புள்ளைய வந்ததும் வராததுமா போலீஸ்காரன் மாதிரி, இவ்வளவு கேள்வி கேட்டுட்டு இருக்க? இசைமா இந்த பணியாரத்தை சாப்பிடு” என மகளுக்காக சுடசுட செய்து வைத்திருந்த பணியாரத்தை அவளுக்கு கொடுத்தார் .
“அம்மா எனக்கு..” என முகிலன் சண்டைக்கு வர “கிச்சன்ல தான்டா இருக்கு. போய் எடுத்து போட்டு சாப்பிடு” என அலட்சியமாக கூறிவிட்டு இசைக்கு ஊட்ட ஆரம்பித்தார் கவிதா.
“நடக்கட்டும் நடக்கட்டும். இந்த முகிலனும் ஒருநாள் பெரிய ஆளா வருவான். அப்போ என்னோட பயோபிக் படங்கள எடுப்பாங்க. அப்ப நானு எனக்கு பணியாரம் கொடுக்காத அம்மானு உன்ன சித்தரிக்க சொல்றேன் இரு” என அவரை மிரட்டிவிட்டு சமையலறைக்கு பணியாரத்தை உண்ண சென்று விட்டான்.
மறுநாள் மாலையில் இசை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர , ஆதிஅவன் அவனது கூலர் கழற்றி விட்டு ‘இவ ஏன் இப்போ வரா?’ என சிந்தித்துக் கொண்டே அவளுக்காக எழுந்து நின்றான்.