Loading

மோதும் மேகங்கள்-5

     மருத்துவமனையில் இருந்து முகிலனும் இசையும் வீட்டிற்கு வந்ததும் முகிலன் அவனின் தாயான  கவிதாவிடம் இசைக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் மேலும் வேலை கொடுத்திருக்கும் ஆதி பரந்த மனம் உடையவர் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். இசை ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு வீட்டிற்குள் வந்தால், அங்கே முகிலன் ஆதியின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். இசை அவனின் தலையில் கொட்டி “ஹாஸ்பிடல இருந்து வந்தா, முதல்ல போய் குளிக்கனும். போய் குளிப் போ” எனக் கூறி அவனை துரத்தினாள். 
   
           சாப்பிட்டு விட்டு இசை ஒரு புத்தகத்தை மும்முரமாக வாசித்துக் கொண்டு இருக்க முகிலன் அவளிடம் வந்து ஆதியிடம் பொறுப்பாக வேலை செய்யுமாறு பல அறிவுரைகளை பெரிய மனிதன் போல் கூறிக் கொண்டிருந்தான்.

          “டேய் அவன் எல்லாம் ஒரு ஆளு, அவனுக்கு ஒரு அசிஸ்டன்ட் வேற, அதுல நான் அவனுக்குலாம் அசிஸ்டன்டா இருக்கனும். எல்லாம்  காலக் கொடுமை” என சலித்துக்கொண்டாள் இசைப்பிரியா.

           “ஹேய்! அவர் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா?  நீ அவரோட ஆக்டிங் எல்லாம் பார்த்தா நிஜமா இல்ல நடிக்கிறாரானே கண்டுபிடிக்க முடியாது.அவருக்கு எவ்வளவு பெரிய மனசு தெரியுமா? ஸ்வேதா அக்காக்கு ஹாஸ்பிடல் பில்லையும் அவரே பே பண்ணிட்டு மூணு மாசம் வேலைக்கு வரலனாலும் சம்பளம் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காரு அந்த மனசுலாம் யாருக்கு வரும்? ஒழுங்கா போய் வேலையை பாரு. ஸ்வேதா பேரையும் போய்க் கெடுத்து வைக்காதே. இப்ப போய் தூங்கு. அப்போ தான் நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து ஷூட் போக முடியும்” எனக் கூறிவிட்டு அவளின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டான்.

      ” எல்லாம் என் நேரம்”  என இசை புலம்பிக் கொண்டே  அவளது அறைக்கு சென்றாள்.

         மறுநாள் காலையில் பகலவன் தன் ஆட்சியைத் தொடங்கினார். ஆதி அவனது வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க அவனது உறக்கத்தை கலைக்கவே வந்தது ஒரு  அழைப்பு. கடுப்புடன் சலித்துக் கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ”  என்று கூறினான். அவனின் ஹலோ எனும் ஒரு வார்த்தையை வைத்தே அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என கணித்த அவள் “மணி ஒன்பதாச்சு இன்னும் கும்பகர்ணனோட தாத்தா மாதிரி தூங்கிட்டு இருக்க. நான் ஷூட்டிங் ஸ்பாட்ல தான் இருக்கேன். கிளம்பி வா” எனக் கூறினாள்.

         “ஹூ இஸ் திஸ்?” என  சற்றும் கடுப்பு குறையாமல் கேட்டான் ஆதி.

       “நான் இசை பேசுறேன்”  என  அவள் பல்லை கடித்துக் கொண்டு கோபமாக கூறினாள்.  “காலைல யாரது இசை நொசைனு?”  எனக் கேட்டவனுக்கு “உன் பேரு கூட தான் ஆதி பேதினு கேவலமா இருக்கு. நான் ஏதாச்சு சொன்னேனா? நீ ஏன்  என் பேரு கலாய்க்கிறா?” என ஆதியிடம் எகிறினாள் இசை.

       “வாட் ஆதி பேதியா? ஹலோ யாரு பேசுறது?”  என அவனது அசிஸ்டன்ட் நம்பரை தனது கைப்பேசியில் சேமிக்காமல் விட்டு அவளிடம் எகிறினான்.

        “நேத்து ஹாஸ்பிடல்ல உனக்கு அசிஸ்டன்ட்டா நீ நியமிச்சிட்டு வந்த அப்பாவி பிள்ளை தான் பேசுறேன்” என இசை கூற “நீ அப்பாவி பிள்ளையாடி?” என ஆதி கேட்க அவர்களின் சண்டை அலைபேசிக்கு வாய் இருந்தால் அழுது விடும் என்ற நிலைக்கு போனது.

       “உனக்கு பத்து மணிக்கு ஷுட்.நான் உனக்கு ஒன்பது மணிக்கு கால் பண்ணேன். இப்ப மணி ஒன்பதரை. இன்னும் அரை மணி நேரத்துல நீ கிளம்பி வந்தா வா. வராட்டி போ. நான் எனக்கு லீவுனு வீட்டுக்கு போயிடுறேன். வெட்டிய என் கூட சண்டை போட்டு போட்டு என்னோட அரை மணி நேரத்தை வேற வேஸ்ட் பண்ணிட்ட” என கோபமாக கூறி அழைப்பைத் துண்டித்தாள் இசை.

     “ஆமா இவ பெரிய அம்பானி. இவளோட அரை மணி நேரத்தை வேஸ்ட் பண்ணதால மேடம்க்கு நூறு கோடி ரூபாய்  லாஸ் ஆயிடுச்சு பாரு. ஆக்சுவல்லா எனக்கு தான் டைம் வேஸ்ட்.நான் நேர்ல இல்லைன்ற தைரியத்தில் பேசிட்டு இருக்கியா? நான் வந்தேன் வச்சுக்கோ..” என இசை அழைப்பை துண்டித்தது கூட தெரியாமல் அவன் பாட்டிற்கு கத்திக் கொண்டிருந்தான். அவளிடமிருந்து பதில் வராமல் போகவே அலைபேசியை காதில் இருந்து எடுத்து பார்த்தவன்  அவள் வைத்தது தெரிந்து “இருடி கிளம்பி வந்து உன்னை  வச்சிக்கிறேன்” எனக் கூறிவிட்டு இசை மேலிருக்கும் கோபத்துடனே அவசர அவசரமாகக் கிளம்பினான். பத்தேகாலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சேர்ந்த ஆதி முதலில் தேடியது இசையை தான்.

    ஆதியை கண்ட இயக்குனர் அவனிடம் வந்து “ஆதி உங்களுக்கு  இப்போ ஷூட் இருக்கு. நீங்க போயிட்டு ரெடி ஆயிட்டு வாங்க”  என அவனுக்கு நினைவூட்டினார். ஆதியும் தலையசைத்துவிட்டு அழகுக்கலை நிபுணரிடம் மேக்கப் போட்டுக்கொள்ள அமர்ந்தான்.

      மேக்கப் முடிந்த உடனும் இசை அவன் எதிரில் வரவில்லை. ஆதி நடிக்க இருந்த காட்சி கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருந்ததால் ஆதிக்கும் கஷ்டம் ஏதுமில்லை. சுலபமாக நடித்து விட்டான். சீன் முடிந்ததும் “பர்ஃபெக்ட் ஆதி. சூப்பர் அபி” என  காட்சியில் நடித்த இருவரையும் பாராட்டினார் இயக்குனர். நடித்து முடித்து வந்த ஆதி அவன் இடத்திற்கு வர அங்கு இசை அமர்ந்து நேற்று பாதியில் படிக்காமல் விட்ட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் “வந்தது லேட்டு இதுல மேடம் புக்கை வேற படிச்சுட்டு இருக்கீங்க. நீ எந்த வேலையும் செய்ய வந்தனு ஞாபகம் இருக்கட்டும்” எனக் கூறினான் ஆதி.

           இசை  “எனக்கெல்லாம் ஞாபகம் இருக்கு. உனக்கு தான் ஞாபகம் இல்லை. காலையில உன்ன எழுப்பி விட்டதே நான் தான். அப்புறம் எப்படி நான் லேட்டா வந்து இருப்பேன்? கண்ணு  மட்டும் தான் தெரியாதுனு  பார்த்தா உனக்கு ஞாபகம் மறதி  வேற இருக்கா? உன்னலாம் எப்படி நான் மேய்க்க போறேனோ தெரியல”  என சலித்துக் கொண்டாள் இசை.
       
         “ஏய்! நான் என்ன ஆடா மாடா என்ன மேய்க்க?”  என கோபமாக ஆதி கேட்க யோசனை செய்வது போல் பாவனை செய்து விட்டு இசை “ஆடு”  எனக் கூறினாள்.
      
          “என்னடி நக்கலா?” என ஆதி கேட்க இம்முறையும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
      
         அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து “சார் நெக்ஸ்ட் சீன்..”  என தயங்கிக் கொண்டே ஆதிக்கு அடுத்த காட்சி நடிக்க வேண்டி இருப்பதை ஞாபகப்படுத்த  “ஹா இதோ வரேன்”  என அவரிடம் கூறிவிட்டு மறுபடியும் மேக்கப் செய்து கொள்ள அமர்ந்தான் ஆதி.
  
       இசையை அழைத்து கண்ணாடியை பிடிக்குமாறு ஆதி கூறி வெறுப்பேற்ற “அத போய் உன் டச்சப் ஆர்டிஸ்ட் கிட்ட சொல்லு”  என ஆதியின் மூக்கை உடைத்தாள் இசை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்