Loading

    நேற்று ஆதி தனது அழைப்பை ஏற்காததால் கோபத்தில் இருந்த இசை இன்று அவன் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தான் இருந்தாள். ஆனால் அவள் வேலையின் மீது இருந்த ஈடுபாட்டால் இன்று ஏனோ ஆதியின் வீடு வரை வந்து விட்டாள். ஆனால் அவளால் வீட்டினுள் செல்ல முடியவில்லை அன்று அவ்வீட்டின் காவலாளி இசையிடம் அவளை நம்பாமல் பேசியது, ஆதி அவளை அவமானப் படுத்தியது என அனைத்தும் நினைவு வந்து அவளை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது.

  தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு, அப்பிராம்ண்டமான வீட்டை நோக்கி கொண்டு உள்ளே நுழையலாமா ? வேண்டாமா ? என சிந்தனை கடலில் மூழ்கியிருந்தாள் இசை.

    இசைப்பிரியா  வீட்டை பார்த்தவாறு நின்று இருக்க,அவளை பின்னால் இருந்து  கண்ட காவலாளி  “எம்மா.. யார் நீ எதுக்கு இந்த வீட்ட வாயப் பிளந்து பார்த்துட்டு இருக்க?” என கேள்வி கேட்க குரல் வந்த திசையில் திரும்பிய இசை, “அண்ணா அது வந்து..”  எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அக்காவலாளி,  “நீதானே அன்னிக்கு வந்த பொண்ணு. எம்மா உனக்கு எத்தனை முறை சொல்லுறது? அதான் ஆதி சார அன்னிக்கு பார்த்தல இன்னும் என்ன? சும்மா சும்மா எதுக்கு இங்க வந்து நின்னுட்டு இருக்க?” என அவர் கூற,  “அண்ணா!நா சொல்றத கொஞ்சம் கேக்குறீங்களா?..” என கிட்டத்திட்ட  கத்தியேவிட்டாள் இசை.

        அவள் கத்தவும் கோபமான காவலாளி, “என்னமா,கொஞ்சம் விட்டா, ஓவரா தான் பேசுற? முதல்ல இங்கிருந்து கிளம்புமா. ஆதி சார் வந்தார்னா கோபப்படுவாரு” என அவரும்  கத்தினார்.

             ஏற்கனவே அக்காவலாளியின் மீது கடுப்பாக இருந்த இசை, ஆதி சார் வந்தார்னா  கோபப்படுவாரு என அவர் கூறியவுடன் ஏகத்துக்கும் கடுப்பாகி, “என்ன சார் மோருனு என்கிட்ட வந்து கத்திட்டு இருக்கீங்க? அவன் தான் என்ன கூப்டான். வேணும்னா அவனை கூப்ட்டு நீங்க கேளுங்க. சும்மா என்கிட்ட கத்திகிட்டு இருக்காதீங்க”  எனக் கோபமாகக் கூறினாள்.

               “கதையவாவது மாத்தி சொல்லு மா. எப்போ வந்தாலும் அதே கதை திருப்பித் திருப்பி ஓட்டிட்டு இருக்கிறது” என அக்காவலாளி சலித்துக் கொள்ள, “என்ன பாத்தா கதை சொல்ற மாதிரியா இருக்கு? நான் உண்மையத்தான் சொல்றேன் வேணும்னா அவனயே கூப்பிட்டு கேட்டுக்கோங்க”  என இசையும் தக்க பதிலடி தந்தாள்.

            “ஆதி சார் தான் உன்னை கூப்பிட்டாராமா? உன்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?”  என காவலாளி முதல் முறை கேட்டது போலவே இம்முறையும் கேட்க, இசைக்கு கடுப்பாகி  “சரிங்க சார். அவர் என்ன கூப்பிடல தான்..”  எனக்கூறிவிட்டு வீட்டின் ஓரமாக நின்று கொண்டாள்.

    அக்காவலாளி   “அதான் நீயே ஒத்துகிட்ட இல்லம்மா அப்போ கிளம்ப வேண்டியது தானே,  ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்க?”  என அவளிடம் கேள்வி எழுப்ப, அவள்  “இது என்ன அவன் போட்ட ரோடா, இல்ல நீங்க போட்ட ரோடா? சும்மா சும்மா வந்து என்கிட்ட கத்திகிட்டு இருக்கீங்க.அவன  பார்க்கனும் என்ன உள்ள விடுங்கனு  நான் வந்து உங்க கிட்ட கேட்டேனா? நான் அமைதியா தானே இங்க நிக்கிறேன் உங்களுக்கு என்ன வந்துச்சு?” என இசையும் அவரிடம் விடாமல் கத்தினாள்.

“இது சார் போட்ட ரோடும் இல்ல நான் போட்ட ரோடும் இல்லை ஆனா நீ நிக்குறது சாரோட வீட்டுக்கு முன்னாடி. நான் என் வேலைய தான் பாத்துட்டு இருக்கேன்.இங்க இருந்து கிளம்புமா”  என அவர் கூறிக் கொண்டு இருக்கையில்,இசை,  “போதும் நிறுத்துங்க.அவன் வெளியே வந்து என்ன பாத்த அப்புறமும் கண்டுக்காம போய்த்தானா நானும் போய்டுறேன்.நானும் உங்கள மாதிரி அவன்கிட்ட வேலை தான் செய்றேன்.அவன் பேச்ச தான் நா கேட்டாகனும்” என  கோபமாக ஆரம்பித்து பின் வெறுமையாக கூறி முடித்தாள்.

இசையின் வெறுமையான குரலைக் கேட்டபின்  அக்காவலாளியின் மனதினுள் ஏதோ செய்ய அவர், “சரிமா சார் வந்து உன்ன பார்த்துத்து ஒன்னுமே சொல்லாம போய்ட்டாருனா நீயும் கிளம்பிடனும். இனி இங்க வந்துட்டு என்ன தொல்ல பண்ணிட்டு இருக்க கூடாது. சரியா?”  என கேட்க அவள் ஒன்றுமே கூறாமல் அமைதியாக ஒரு ஓரமாக போய் நின்று கொண்டாள். இசை ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டாலே தவிர, உள்ளுக்குள் ஆதி அவளை கண்டுக்காமல் சென்று விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது. ‘அவன் ஏற்கனவே படப்பிடிப்பு தளத்திலியே தனக்கு நன்றாக மதிப்பளிப்பான். இதில் இவ்வாறு வேறு கூறி விட்டோமே’  என்று இசைக்கு உள்ளுக்குள் உதறல் இருந்து கொண்டு தான் இருந்தது.

             உள்ளே ஆதி, இசைக்காக காத்துக் கொண்டிருந்தான். கடிகாரத்தையும் வாசலையும் நடந்து கொண்டே மாற்றி மாற்றி  பார்த்துக் கொண்டிருந்தான்.  ‘எட்டு மணிக்கே வர சொன்னா இன்னும் வரல.வரட்டும் அவ.இன்னிக்கு அவளுக்கு இருக்கு.சரியான இம்சை’ என  மனதில் இசைக்கு அர்ச்சித்துக் கொண்டே தனது கைப்பேசியை எடுத்து பார்த்தான். இசையிடமிருந்து  முப்பது மிஸ்டு காலை கண்டவன்,அவளுக்கு அழைக்கலாம் என நினைத்தான். கால் ஹிஸ்டரிலிருந்து இசையின் எண்ணை தொட போன அவனது விரல்களை அவனின் மூளை தடுத்து நிறுத்தியது.  ‘அவளே பண்ணட்டும். அவதான உன் கிட்ட வேலை செய்ற அப்போ அவளே பண்ணட்டும்’ என அவனின் அறிவு அவனுக்கு அறிவுரை வழங்க, இசைக்கு அழைப்பதை விடுத்து   வீட்டிற்கு நடுவே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆதி.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் அது ஒன்பது என காட்டவே கடுப்பானவன் படப்பிடிப்புக்கு இசையை அர்ச்சித்துக் கொண்டே கிளம்பினான்.  “பொறுப்பு இருக்கா அவளுக்கு? அவ என்கிட்ட வேல செய்றாளா? இல்ல அவகிட்ட நான் வேலை செய்றனானு தெரியல. கொழுப்பு அதிகமா ஆயிடுச்சு அவளுக்கு. இன்னிக்கு நல்ல அவள கவனிக்கனும். இம்சை இம்சை”  என அவனின் இம்சை இசையை திட்டிக்கொண்டே மகிழுந்தை எடுத்தான்.

கார் ஆதியின் வீட்டின் முன் வந்து நிற்க காவலாளி சரியாக அந்த நேரம் கதவை திறந்து விட்டார். இசையும் ஆதியின் வருகையை அறிந்து அவளும் அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து முன்னோக்கி வந்து ஆதியின் கார் அருகில் வந்து நின்றாள். அக்காவாளியும் சல்யூட் அடித்துவிட்டு இசை பற்றி கூற வர, அதற்குள் ஆதி வேகமாக சென்று விட்டான்.

ஆதி சென்றவுடன் காவலாளி இசையைக் காண, அவள் அங்கே நிற்க பிடிக்காமல் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

படப்பிடிப்பு தளத்திற்கு முதலில் சென்ற ஆதி இசையை தேட,அவள் அங்கு இல்லை என தெரிந்ததும் அவளுக்கு அழைத்து திட்டலாம் என தனது கைபேசியை எடுத்தான். சரியாக அச்சமயம் இசை உள்ளே நுழைய அங்கே நின்று கொண்டிருந்த அபினாஷ் அவளிடம் எதார்த்தமாக பேச ஆரம்பித்தான்.

” என்ன இசை இனிக்கு இவ்ளோ லேட்டா வந்திருக்க?”

” அது ஒரு பெரிய கத அபி..”

” சரி சரி அந்த கதையை நீ அப்புறமா சொல்லு. ஆதி சார் வந்துட்டாரு அவர முதலில் நீ போய் பாரு”

” ஓ! வந்துட்டானா?”

” இசை..” என்ன அபி ஏதோ கூற வரும்போது சரியாக அந்த நேரம் ஆதியும் அவர்கள் இருவர் அருகில் வந்து தனது தொண்டையை செருமினான்.

” வாங்க ஆதி சார்” ஆதியிடம் கூறிவிட்டு இசையிடம் ஆதி இடம் பொறுமையாக பேசுமாறு கண்களாலே சொல்லிவிட்டு சென்றான் அபி.

இசை தனது உத்தரவை மதித்து வீட்டிற்கு வரவில்லை என கோபமாக இருந்த ஆதி இப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்ததும் இல்லாமல் அபியுடன் பேசியது, அபி ஏதோ அவளுக்கு கண்களாலே கூறியது என அனைத்தும் சேர்ந்து அவனை இன்னும் கோபப்படுத்தியது.

       “நான் உன்கிட்ட என்ன சொன்ன?”  என ஆதி வினவ, இசை அபி கூறியதற்காக ஆதியின் மீது கோபத்தைக் காட்டாமல் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள்.

” உன்ன தான்டி இம்சை கேக்குறேன்.  இன்னிக்கி உன்ன வீட்டுக்கு வர சொன்னனா இல்லையா?” என கோபத்தை இழுத்துப் பிடித்து வினவியவனிற்கு இசையின் அனல் வீசும் பார்வையை பரிசாக கிடைத்தது.

தன்னிடம் வேலை செய்து கொண்டு தான் கூறுபவற்றை மதிக்காமல் நடந்து கொள்கிறாள் என நினைத்துக் கொண்டு கோபத்துடன் ஆதி, “இன்னிக்கு ஏன் வரல?” என வினவினான்.

தான் வந்து அத்தனை நேரம் அவனுக்காக காத்திருந்தும் தன்னை கண்டுக்காமல் சென்று விட்டு இப்போது வந்து இப்படி பேசுகிறானே என கோபம் தலைக்கேறி இசை “ஏதோ கோபத்துல தான் உனக்கு கண்ணு தெரியாதுனு இத்தன நாளா சொல்லிட்டு இருந்த. ஆனா இன்னிக்கு தான் உனக்கு உண்மையாவே கண்ணு தெரியலனு தெரிஞ்சிருக்கு”  என முறைத்துக் கொண்டே கூற,

” நான் என்ன கேட்டா நீ என்ன சொல்ற?” என்ன ஆதி இம்முறையும் வழக்கம் போல் அளவாக அதேசமயம் தான் கேட்க வரும் கேள்வியே தெளிவாகவும் கேட்டான்.

    “காதும் அவுட்டா? நீ ஒரு நல்ல டாக்டரா பார்த்து செக்கப் பண்றது நல்லது” என இசை நேரடியாக பதில் கூறாமல் தனது கோபத்தை ஆதிக்கு புரியாதபடி காட்டிக் கொண்டிருக்க, ஆதி  “கேட்ட கேள்விக்கு பதில்” என கோபமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் தனது கேள்வியை முன்வைத்தான்.

“அதான் சொன்னேன்ல. ஒரு நல்ல டாக்டரா..”  என இசை கூறும் போதே அவளை இடையில் வெட்டி ஆதி  “நான் ஒன்னும் உன்கிட்ட சொற்போர் நடத்திட்டு இல்ல. உனக்கு ஆர்டர் போடுறேன். புரியுதா?”  என அழுத்தமான பார்வையுடன் கூற,

    “இசை நான் உன் வீட்டுக்கு முன்னாடி தான் நின்னுட்டு இருந்தேன்.நீ பார்த்தும் பார்க்காத போயிட்டு இப்ப சும்மா என்கிட்ட வந்து கத்தாதே”  என அவளும் எகிறினாள்.

“நீ எப்ப வந்து நின்ன?”

” ஏழே முக்காலுக்கு”

“அப்ப  ஏன் என்ன உள்ள வந்து பாக்கல?”

” ஆல்ரெடி அங்க வந்து எனக்கு ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு பாரு” என இசை தன் ஆதங்கத்தை தன்னை மீறி வெளிக்காட்ட,

“வேலைக்கு லேட்டா வந்து விட்டு பொய் வேற”

” யார் இப்ப பொய் சொல்றது?”

” வேற யாரு பொய்களின் தலைவி நீ தான்டி  இம்சை”

” நான் பொய்களின் தலைவியா..?” என இசை தங்களது சண்டையை தொடர்ந்து கொண்டிருக்கும் போது மேக்கப் பார்த்து வந்து, ” சார் ஷுட்டுக்கு டைமாயிடுச்சு”  என தயங்கி கொண்டே கூற,

“ஹா இதோ வரேன்” என ஆதி கூறிவிட்டு இசையை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மேக்கப் போட்டுக்கொள்ள சென்று அமர்ந்தான்.

ராகுலின் வீட்டில் சாரா ராகுலின் அறைக்கதவை தட்டி கொண்டிருக்க, அவன் தான் திறந்தபாடில்லை.

“ராகுல் கதவ தொறடா..”  என அவள் விடாமல் நச்சரித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாது ராகுல்,

“இங்க இருந்து போறியா?” என கதவை திறக்காமலே உள்ளிருந்தே கோபமாகக் கூறினான்.

தான் இவ்வளவு நேரம் அவன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் எதற்கு வந்துள்ளாய் என்று கூட கேளாமல், சென்றுவிடுமாறு கூறும் அவனை நினைத்து கவலையும் கோபமும் ஒருசேர வந்து சாரா கதவை தட்டுவது நிறுத்திவிட்டு வீட்டை விட்டு செல்ல செல்லலானாள்.

               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்