Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 25

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 25

நாட்கள் யாருக்கும் நிற்காமல் கடந்து கொண்டு இருந்தது. இடைப்பட்ட நாட்களில் ஆதி மற்றும் கயல் இருவருக்கும் இடையே ஒருவித புரிதல், அதையும் தாண்டி ஒரு நட்பு உணர்வும் ஏற்பட்டு இருந்தது. வெண்பாவுடன் சேர்ந்து கயலும் கொஞ்சம் அதிகம் பேச கற்றுக்கொண்டாள். கல்லூரியில் ஆரம்பித்த அவளின் பேச்சுக்கள் ஆதியிடம் தான் நிறைவு பெரும். சிறு பிள்ளை போல சுற்றி கொண்டு இருந்தாள். திவ்யாவிற்கு இதை நினைத்து மிகவும் சந்தோசம். கயலின் வாழ்வில் சிறுவயது முதலே கருப்பு பக்கங்களால் நிறைந்து இருந்ததால் அவளின் சின்ன சின்ன ஆசைகள் கூட கயிறு இல்லாத பட்டம் போல திசை மாறி போய்விட்டது. அதனாலோ என்னவோ, அனைத்து ஆசைகளும் சந்தோஷத்தையும் இப்போது அனுபவித்து கொண்டு இருந்தாள்.

செல்வத்திடம் கேட்டு கயலின் பிறப்பு முதல் அனைத்தையும் தெரிந்து கொண்ட ஆதிக்கு மனம் முழுக்க வேதனை நிறைந்து இருந்தது. எத்தனை கஷ்டங்கள், கண்ணீர், வேதனை, ஏக்கம் என வாழ்ந்து இருக்கிறாள். இத்தனை கஷ்டங்களையும் கடந்து வந்த கயலை நினைத்து ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் அதையும் தாண்டிய துக்கம் தொண்டையை அடைக்க தான் செய்தது . அவள் இழந்த எல்லாமே இவனால் தர முடியுமா என தெரியவில்லை. ஆனால் முடிந்த அளவுக்கு அவளை சந்தோசமாக பார்த்து கொள்ள வேண்டும் என தனக்குள் உறுதி எடுத்து கொண்டான்.

வெண்பா மூலமாக அவளின் ஆசை கனவு எல்லாம் அவனால் முடிந்த அளவிற்கு நிறைவேற்றி கொண்டு இருந்தான். சீதாவிற்கு கயலை நினைத்து பரிதாபமாக இருக்க இன்னும் அன்பாக பார்த்து கொண்டார். கயலும் அவரின் முந்தானையை பிடித்தே சுற்றி கொண்டு இருந்தாள். கயலுக்கு தெரியாமல் எல்லாம் எதார்த்தமாக நடப்பது போல எல்லாவற்றையும் ஆதி பார்த்து கொள்ள கயல் அவளின் உலகில் சந்தோசமாக இருந்தாள்.

மாதம் ஒருமுறை அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு இருக்கும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுவது, நண்பர்களுடன் வெளியில் செல்வது, சீதாவின் மடியில் படுத்து கதை பேசுவது, வெண்பா மற்றும் அருண் உடன் சேர்ந்து விளையாடுவது என அடுக்கி கொண்டே போகலாம். இதை எல்லாம் ஆதி தூரத்தில் இருந்து பார்த்து சந்தோசபட்டு கொள்வான். ஆதிக்கு கயல் வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தாள். அவனும் அவர்களுக்கு என இருக்கும் உலகில் அடிக்கடி வெளியில் அழைத்து செல்வது, எப்போதாவது டின்னர், இரவு நேரத்தில் கடற்கரை, கைகள் கோர்த்து கொண்டு நடந்து செல்லும் அந்த பாதை எப்போதுமே முடியாமல் நீளாதா என்ற ஏக்கம் இருவரிடமுமே உண்டு. இருவருமே அந்த நிமிடங்களை பொக்கிஷமாக சேர்த்து கொண்டனர்.

மாலை மயங்கிய நேரம். பறவைகளும் மனிதர்களும் தன் தன் கூட்டிற்கு திரும்பி கொண்டு இருக்க, சற்று ஆட்கள் குறைவாக உள்ள அந்த சிறுவர் பூங்காவில் திவ்யா மட்டும் காத்திருந்தாள் சிவாவிற்காக. அவன் தான் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என அவளை கல்லூரி முடிந்த உடனே இங்கே வர சொல்ல அவளும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள். இவனை தான் இன்னும் காணவில்லை. திவ்யாவின் மனநிலை சொல்லில் அடங்காது. இல்லாத மூளையை கசக்கி யோசித்து கொண்டு இருந்தாள். ‘எதற்காக வர சொல்லிருப்பான்… ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னானே… ஒரு வேலை காதலை சொல்ல போறானோ…’ என நினைக்க நினைக்க வெட்கம் வேறு வந்து ஒட்டி கொண்டது. எத்தனை நாள் ஏக்கம், கனவு, உயிருக்கு உயிரான காதல் என எல்லாமே அவளுக்கு மட்டும் இருக்க, அதை இப்போது அவனும் புரிந்து ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் … என யோசித்து கனவிலே அவனுடன் டூயட் ஆடி கொண்டு இருந்தாள்.

சிவா அருகில் வந்து அவளை அழைக்கும் வரைக்கும் அவளின் டூயட் மட்டும் முடியவில்லை…. அவனின் அழைப்பில் நிகழ்காலத்திற்கு வந்தவள் தன்னை தானே செல்லமாக திட்டி கொண்டு அருகில் இருக்கும் அவனை பார்வையால் திருட ஆரம்பிக்க அவனுக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது. அவளின் கண் அசைவில் தொலைய இருந்த மனதை இழுத்து பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

“திவி… ஒரு முக்கியமான விஷயம்… அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை…” என தயங்கினாலும் சொல்ல ஆரம்பித்தான். “உனக்கே தெரியும் சின்ன வயசுல இருந்து என் கனவு லட்சியம் எல்லாமே சிபிஐ ஆகணும்னு… அதுக்காக தான் இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… என் குடும்பத்தை பத்தி சொல்லவே தேவை இல்லை… பணம் பணம்-னு ஓடிட்டு என்கிட்டே பாசம் காட்டாம தனியா தவிக்க விட்டுட்டாங்க… ஒரு கட்டத்துக்கு மேல நானே அவங்களை விட்டு பிரிஞ்சு வந்து எனக்குன்னு ஒரு படிப்பு, கனவு லட்சியம்னு ஓடிட்டு இருக்கேன்… பாசத்துக்கு நான் நிறைய ஏங்கி இருக்கேன் இப்போ வரைக்கும்… காலேஜ் வந்து நீயும் கயலும் தான் எனக்கு எல்லாமே… அவளை நான் என் கூட பிறந்த தங்கச்சியா தான் பாக்குறேன்… நீயும் எனக்கு ரொம்ப முக்கியமான பிரிஎண்ட் தான்….” என நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவளும் இமைக்க மறந்து அவனை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.

“எனக்கு தெரியும்… நீ என்னைய ரொம்ப லவ் பண்ற… ஆனா எனக்கு உன்மேல லவ் இருக்கானு தெரியலை… உன்னைய ரொம்ப புடிக்கும் எப்பவுமே… சொல்ல போனா உன் காதலுக்கு நான் தகுதி இல்லை… என்கிட்டே எதுவுமே இல்லை படிப்பு, வேலை, இருக்க ஒரு இடம் கூட இல்லை… இது தான் உண்மை… ஏதோ என் மாமா என்மேல கொஞ்சம் பாசம்… அவரு தான் இப்போ வரைக்கும் என்னைய பாத்துக்குறாரு… படிப்பு சாப்பாடுனு எல்லாமே… எனக்கு இப்போ இருக்க மனநிலை என்னால வேற எத பத்தியும் யோசிக்க முடியாது… முக்கியமா இந்த லவ்… லைப் இப்படி… அதனால நீ உன் மனச மாத்திக்கிட்டு உன் அப்பா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு… இன்னும் கொஞ்ச நாள் நமக்கு காலேஜ் முடுஞ்சுரும்… அப்புறம் நான் எனக்குன்னு ஒரு கனவு அதை பாத்துட்டு போய்டுவேன்… உன்னைய கஷ்ட படுத்திட்டு நான் போக விரும்பல… அதனால தான் இப்போ சொல்றேன்… நீ தேவை இல்லாம ஆசைபட்டு ஏமாந்து போக கூடாது… அதனால தான் இவ்ளோ தூரம் பேசிட்டு இருக்கேன்… புரியுதா…” என கேட்க அவளும் எதுவும் சொல்லாமல் அவனை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள். இவன் தான் பொறுமை இழந்து, “எதாவது பேசு… நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன் நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற…” என கேட்க அவளும் இன்னும் அவனின் அருகில் நெருங்கி வந்து அவனின் கைகளை பிடிக்க இவன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டான்.

“நீயும் என்னைய லவ் பண்றேன்னு தெரியும்… உன் கண்ணுல எனக்கான காதலை நான் எப்போவோ பாத்துட்டேன்… இருந்தாலும் அதை நீ சொல்லி நான் கேக்கணும்னு தான் உன்னைய தொந்தரவு பண்ணலை.. உனக்குள்ள எவ்ளோ காதல் இருக்குனு எனக்கு தெரியும்… அத நீ தான் இன்னும் புருஞ்சுக்கல… உன்னைய நீயே ஏமாத்திட்டு இருக்க… சும்மா என்கிட்டே எதுவும் இல்லை… அது இல்லை இது இல்லைனு சொல்லிட்டு இருக்காத… அதெல்லாம் நான் உன்கிட்ட எப்போடா கேட்டேன்…. இங்க பாரு சிவா… நீ என்ன நினைக்குரியோ தெரியல… ஆனா என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க… சொல்லப்போனா நான் உன்கூட வாழ்ந்துட்டு இருக்கேன்… அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது… இப்போ என்ன நீ உன் கனவை தொடந்து போய்ட்டு இருக்க… அப்படி தானா… சரி போ… நான் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டேன்… நீ ஆசை பட்ட படியே சிபிஐ ஆகிட்டு வா… அது வரைக்கும் இதே காதலோட நான் காத்துட்டு இருப்பேன்… எப்பவுமே…. நீ நினைச்சு கூட பாக்க முடியாத காதலையும் பாசத்தையும் நான் உனக்கு தருவேன் சாகுற வரைக்கும்… இனிமேல் நான் உன் முன்னாடி வர மாட்டேன்… ஆனால் என் காதலும் நானும் எப்பவும் உனக்கு மட்டும் தான் சொந்தம்… காத்துட்டு இருப்பேன்… உனக்காக எப்பவுமே…” என கூறிக்கொண்டே அவனின் முகத்தின் அருகில் வந்து இதமாக ஒரு இதழ் முத்தத்தை அவனின் நெற்றியில் பதிக்க அவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

“நீ எப்பவும் ஹாப்பியா இருக்கனும்… இந்த முத்தம் உனக்கு நான் தர என்னோட நினைவு சின்னம்… சீக்கிரமா உன் லட்சியத்துல நீ ஜெயிச்சுட்டு வா… அதுவரைக்கும் நான் உன்னைய பாக்க மாட்டேன்… ஐ லவ் யு பார்எவர்…” என ஒட்டு மெத்த காதலையும் கண்களில் வைத்து சொல்லிவிட்டு அவனை கண்களில் நிறைத்து கொண்டு கடந்து சென்றுவிட்டாள் பேதை. இவன் தான் அதே இடத்தில வேரூன்றி போயிவிட்டான். கண்களில் வலியும் கண்ணீரை துடைக்க மறந்து நடந்து சென்று கொண்டு இருந்தால் பெண்ணவள்.

இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு மெல்லிய வெளிச்சத்தில் கை, கால் எல்லாமே நன்றாக கட்டிவைக்கப்பட்டு அரை மயக்கத்தில் இருந்தால் கயல்… அவளின் எதிரே கண்களில் கொலைவெறியுடன் கையில் கத்தியுடன் ஒருவன் அவளை நெருங்கி கொண்டு இருந்தான்.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்