Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 18

சுமதி வீட்டில் நுழையும்போது அவள் கண்களில் கோவம் கனன்று கொண்டு இருந்தது. அவளின் கோவமான அழைப்பில் இது வரை இருந்த அமைதியான மனநிலை மாறி ஒரு பதட்டம் வந்து ஒட்டி கொண்டது கயலுக்கு. மெதுவாக கீழே இறங்கி வந்த கயலை எரித்து கொண்டு இருந்தாள் சுமதி. கயலை பார்த்து கொண்டே அருகே வந்த சுமதி ஒரு அடியை இடியாக இறக்க தலை சுற்றி கீழே விழுந்து விட்டாள். எறிந்த கன்னத்தை பிடித்து கொண்டு கண்களில் கண்ணீருடன் பரிதாபமாக பார்க்க சுமதியின் கோவம் குறைந்த பாடு தான் இல்லை.

“ஏண்டி… எவன்கூட காலேஜ்ல சுத்திட்டு இருந்த… நடந்த எதுவும் சொல்லாம பொய் பேசிட்டு இருந்துருக்க… சொல்லுடி யாரு அவன்… அவனுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்… நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டு வந்துருக்க… அப்படி அவன் என்னடி பண்ணான்… அவனை கட்டிபுடுச்சு போட்டோ எல்லாம் எடுத்திருக்க.. ச்சி வெக்கமா இல்லை உனக்கு… இந்த அசிங்கத்தை நானும் கண்ணால பாத்துவேற தொலைச்சேன்… அதுக்குள்ள உனக்கு ஆம்பள சுகம் கேக்குதா!!… என்னடி பண்ணான் அவன் அப்படி அவன்கிட்ட மயங்கி கிடக்குற அளவுக்கு… எத காட்டி உன்னைய மயக்குனான்… சொல்லுடி… நல்ல வசதியான பையனா பாத்து வளைச்சு போட்டு ஓடி போலாம்னு பிளான் போட்ருந்தியா… அதான் யாருகிட்டயும் எதுவும் சொல்லாம இருந்துருக்க…. வாயை திறந்து பதில் பேசுடி…” கயலின் முடியை பிடித்து ஆட்டி கொண்டு இருந்தாள்.

மாத்திரையை போட்டு செல்வம் தூங்கிவிட்டதால் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. இப்போது தான் லேசாக முழித்து பார்க்க சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் இங்கே நடந்ததை பார்த்து தடுக்க வந்தார். “சுமதி என்ன பண்ற.. ஏன் எப்போ பாத்தாலும் அவளை அடுச்சுட்டே இருக்க…” என்று கதற “யோவ்… வாய மூடுயா.. என்னமோ உன் பொண்ணு பத்தினி மாதிரி பேசுவ… அவ என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கா தெரியுமா… எவன் கூடவோ சுத்திட்டு இருந்துருக்கா….” என ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல செல்வா அதிர்ச்சியுடன் கயலை பார்க்க அவளும் தகப்பனை கண்களில் கண்ணீருடன் பார்த்தாள். என்ன நம்புங்கப்பா… நான் எதுவும் பண்ணல… என பார்வையிலே அவரிடம் மன்றாடி கொண்டு இருந்த மகளை பார்த்தவர் சுமதியிடம், “என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்… எதையும் விசாரிக்காம நீ எப்படி அவளை பேசலாம்…” என மகளுக்காக பேச கயலுக்கு தன் தந்தை தன் மேல் நம்பிக்கை வைத்து உள்ளதே காயம்பட்ட அவளின் இதயத்திற்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

“என்னையா… என்னைய பாத்தா உனக்கு கேனச்சி மாதிரி இருக்கா… இவ பெரிய பத்தினி… இவளை நாங்க நம்பணுமா… நீ வேணும்னா உன் ஆசை மகளை நம்பு.. ஆனா எனக்கு தெரியும் இவ எப்படிபட்டவனு…” என வார்த்தையில் அமிலத்தை கலந்து பேச கயல் மொத்தமாக உடைந்து விட்டாள். தன் பக்க நியாத்தை சொல்ல அவளும் முயற்சிக்க அந்தோ பரிதாபம் அதை நின்று கேட்க சுமதிக்கு பொறுமையும் இல்லை… அதை நம்பும் அளவுக்கு அவள் நல்லவளும் இல்லை… அதையும் தாண்டி கயல் மேல் சுத்தமாக நம்பிக்கையும் இல்லை. விரலுக்கு இறைத்த நீராக தான் போனது கயல் சொன்னது எல்லாம்.

“இங்க பாருடி… நல்லா கேட்டுக்கோ… இனிமேல் உன்னைய விட முடியாது… நம்பவும் முடியாது.. நீ ஓடி போய் இன்னும் கொஞ்ச நஞ்ச இருக்க குடும்ப மானத்தை வாங்குறதுக்கு நான் விட மாட்டேன்… அடுத்த வாரம் உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம்… அதுவரைக்கும் நீ வீட்டை விட்டு எங்கையும் போக கூடாது… மீறி இந்த வாசலை தாண்டுன கொன்னு போட்ருவேன்… இனிமேல் கல்யாணம் ஆகுற வரைக்கும் நீயும் உங்க அப்பனும் என் கட்டுப்பாட்டுல தான் இருக்கனும்… என்னைய மீறி எதாவது பண்ணனும்னு நினச்சிங்க அவ்ளோதான்…” என மிரட்டி விட்டு செல்ல கயல் நிற்க முடியாமல் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். செல்வத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகளின் கண்ணீர் அவரை உயிருடன் கொன்ற உணர்வு. அழுது அழுது ஓய்ந்து போனவள் தந்தையின் நிலையை பார்த்து தன் கஷ்டங்களை எப்போதும் போல அடக்கி கொண்டு அவருக்கு ஆறுதலாக மாறி போனாள்.

சுமதி இங்கே தன் தம்பி வெற்றிமாறன்-க்கு அழைத்து அனைத்தும் சொல்ல அவனுக்கு கோவம் தான். அதெப்படி தனக்கு சொந்தமானவள் வேறு ஒருவனுடன் பழகலாம் என. இருந்தாலும் கல்யாணம் முடியட்டும் பார்த்து கொள்ளலாம் என நினைத்து அதை வெளி காட்டாமல் சாதாரணமாக பேசிவிட்டு வைத்து விட்டான். ஒரு புறம் கோவம் இருந்தாலும், மறுபுறம் அவள் மேல் சிறிது நம்பிக்கையும் இருந்தது. பல வருஷங்களாக பார்த்து கொண்டு தான் இருக்கிறான். அதனால் அவள்மேல் கொஞ்சமேனும் நம்பிக்கை இருந்தது. ஆனால் கூடவே இருக்கும் சுமதிக்கு இல்லாமல் போனது தான் பரிதாபம்….!!

கயலின் புகைப்படத்தை பார்த்து கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தவனை ஒரு குரல் கலைத்தது.
மாமா… என்ற அழைப்பில் திரும்பியவனின் திருமுகத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்… பூவரசி… பெயர்க்கு ஏற்றார் போல பூ போன்ற மென்மையானவள். அதிர்ந்து கூட பேச தெரியாத அடக்கமான அழகி அவள். வெற்றியின் அத்தை மகள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்து உனக்கு அவள், அவளுக்கு நீ என்று வளர்த்து விட்டனர். இதில் வெற்றிக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பூவரசி அவனை உயிரினும் மேலாக சுவாசிக்க ஆரம்பித்து விட்டாள்.

சிறு வயதில் ஒன்றும் தெரியவில்லை… ஆனால் அவள் பூப்பெய்து முதல் பாவாடை தாவணி அணியும் போது வராத வெட்கம் தாவணியுடன் முதல் முதலில் அவன் முன்பு நிற்கும் போது வந்தது. அவனின் மேல் இருந்து கீழ் வரை வலம் வந்த அந்த ரசனையான பார்வையில் எக்கு தப்பாக துடிக்க தொடங்கின இதயம், இன்று வரை அவனுக்காக மட்டும் தான் துடித்து கொண்டு இருக்கிறது. அதை அடக்க தான் வழி தெரியவில்லை பேதை பெண்ணிற்கு. அவளிடம் வந்து அழகா இருக்க… என்று கன்னம் கிள்ளி அவன் சொன்ன வார்த்தையில் அவள் முகம் செங்கொழுந்தாக சிவந்து போனது. அன்றில் இருந்து இறுதி மூச்சு வரை அவனையே நினைத்து அவனுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் பூவரசி.

எதுவும் எளிதாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும் அல்லவா. அது போல தான் இங்கேயும். வெற்றிக்கு இவளை சுத்தமாக பிடிக்காது. அத்தை மகள் என்று பேசுவான். ஆனால் எப்போது அவள் காதலை சொன்னாலோ அன்றில் இருந்து முழுவதுமாக ஒதுங்கிவிட்டான். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவான். இவர்கள் வீட்டிலும் போக போக சரி ஆகிவிடும் என நினைத்து விட்டுவிட்டனர். சரி ஆகுமா..? பூவரசியின் முரட்டு மாமா அவளை பூ போல தாங்குவானா…? பாப்போம்.

வெற்றியின் எதிரே… இப்போது தான் குளித்து விட்டு தலையில் துண்டை கட்டி கொண்டு, மஞ்சள் நிற ரவிக்கை, சிவப்பு நிற தாவணி, சிவப்பும், மஞ்சளும் கலந்த ஜரிகை வைத்த பாவாடையுடன் நின்று கொண்டு இருந்தாள் பூவரசி. இன்னும் குளித்த ஈரம் காயாத மஞ்சள் பூசிய முகம், காற்றில் ஆடிய ஒற்றை கூந்தல், அதை காதோரம் ஒதுக்கி விடும் கண்ணாடி வளையல்கள் அணிந்த கைகள், காதில் ஜிமிக்கி, திருஷ்டிக்காக கழுத்தில் ஒரு மச்சம், செர்ரி பல உதடுகள், உதட்டில் எப்போதும் இருக்கும் வசீகர புன்னகை என ஆளை கொள்ளும் அழகுடன் நின்று இருந்தால் பூவரசி. அவளை ரசிப்பதற்கு பதில் அவன் முகத்தில் வெறுப்பு மட்டுமே இருந்தது. என்னடி..? என ஒரு வித எரிச்சலுடன் கேட்க அவளும் எப்போதும் இருக்கும் புன்னகை மாறாமல் “அத்தை வர சொன்னாங்க மாமா…” என பணிவாக சொல்ல அதை கேட்டு எந்த பதிலும் சொல்லாமல் அவளை கடந்து சென்று விட்டான்.

முறுக்கிய மீசை, முழங்கை வரை மடித்துவிட்ட நீல நிற சட்டை, ஒற்றை கையில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு, அவிழ்த்து விட்ட காளை போல வீரப்பாக நடந்து சென்ற வெற்றியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே சென்றால் பூவு. அவளின் பார்வையை உணர்ந்தும், தவிர்த்து கொண்டே வந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து அவளை திரும்பி முறைக்க அதற்கும் அசராமல் காதல் பார்வை வீசியவளை இவனால் தான் எதிர் கொள்ள முடியவில்லை. இது திருந்தாது… என தலையில் அடித்து கொண்டு வேகமாக சென்று விட்டான். ‘முறைக்குறதை பாரு முரட்டு மாமா… ஆனாலும் அழகா தான்டா இருக்க… உம்மா…’ என பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க வைத்து விட்டு, அவனை செல்லம் கொஞ்சிகொண்டே அவன் பின்னே ஓடினாள்.

கயல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள். அவளுடைய போன்-யும் சுமதி வாங்கி கொண்டார். என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தந்தையிடம் நடந்ததை அனைத்தும் சொல்ல அவருக்கும் புரிந்தது தன் மகள் மேல் வீண் பழி சுமத்தப்பட்டது என. அதை சொன்னால் சுமதி நம்புவது நடக்காத ஒன்று. திருமணத்தை எப்படி நிறுத்துவது என்றும் தெரியவில்லை. கடைசியாக ஒரு பிளான் தோன்ற அதை முயற்சி செய்து பாப்போம், அதன்பிறகு கடவுள் விட்ட வழி என நினைத்து கொண்டாள்.

தேவா சில நாட்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் தகப்பனார் வந்து அவனிடம் புகைப்படங்களை காட்டி சத்தம் போட அவனுக்கு அப்போது தான் விஷயம் தெரிந்தது. தேவாவின் கோவம் பன்மடங்கு ஆனது. இருவரும் சத்தம் போட்டு கொண்டு இருக்க மேலே வந்த அவனின் தாய் தான் இருவரையும் சமாதானபடுத்த, கோவத்தை கட்டுப்படுத்திய தேவா இழுத்து பிடித்த பொறுமையோடு நடந்ததை விளக்க இப்போது தான் அவனின் தகப்பனுக்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்க வேண்டுமோ… அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டதை உணர்ந்து தலை கவிழ்ந்து நின்றார். தேவா கல்லூரியில் என்ன நடந்தது என விசாரிக்க ஒரு வித தயக்கத்துடன் அனைத்தையும் சொல்லி முடித்தார்.

அவரின் மனைவிக்கே தன் கணவரை பார்க்க அருவெறுப்பாக இருந்தது. பணம், கவுரவம் எல்லாம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றும் என இப்போது உணர்ந்து கொண்டவர் அவரை வெறுப்புடன் பார்க்க அந்த பார்வையில் கூனி குறுகி தான் போனார். தேவா அவரை பார்த்து, “இது வரைக்கும் அந்த பொண்ண பத்தி எனக்கு எதுவும் தெரியாது.. சொல்ல போனா பெயர் கூட தெரியாது… ஆனா நான் இப்போ முடிவு பண்ணிட்டேன்… எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்த அது அந்த பொண்ணு கூட தான்… எந்த பொண்ண பத்தி நீங்க கேவலமா பேசி அசிங்க படுத்தி செய்யாத தப்புக்கு தண்டனை குடுத்தீங்களோ அப்போவே முடிவு பண்ணிட்டேன்… இனி அவ தான் உங்க மருமக… அதை யாராலும் மாத்த முடியாது… முயற்சியும் பண்ணாதீங்க… இனிமேல் அவளுக்கு எதாவது ஒன்னு ஆச்சு உங்க பையன் உங்களுக்கு இல்லன்னு முடிவு பண்ணிக்கோங்க…” என கோவமாக கத்தி விட்டு சென்று விட்டான்.

“உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி தான் பேசிருப்பிங்களா… நீங்க இப்படி மாறுவீங்கன்னு நான் எதிர்பாக்கல… உங்களை பாக்கவே எனக்கு புடிக்கல… இனிமேல் எப்பவும் என்கிட்ட பேசிறாதிங்க…” என சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார். மகன் மற்றும் மனைவியின் பேச்சில் கண்ணீருடன் அவமானத்தில் சிலையாக நின்றுவிட்டார். யோசிக்காமல், தீர விசாரிக்காமல் அவர் செய்த செயல், பேசிய பேச்சு எல்லாம் அவருக்குள் குற்றஉணர்ச்சியாக நெஞ்சில் அழுத்தி கொண்டு இருந்தது.

கயலை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று சபதம் எடுத்து கொண்ட தேவா…..!! தன்னவளுக்கு என்ன நேர்கிறது என்று தெரியாமல் எப்போதும் போல சந்தோசமாக தன் வேலையை செய்து கொண்டு இருக்கும் ஆதி..!! கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருக்கும் வெற்றி…!!

யாருக்கு என்ன நடக்க போகிறதோ… பொறுத்து இருந்து பாப்போம்….!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Pppppaaaaa aadi ku competition kudikitte poguthe

    2. வலிய போய் காட்ற அன்புக்கு இப்படி தான் நெறய டைம் value இருக்காம போகும்…

      என்ன ஆக போகுது….????

      கதை நல்லா போகுது dr… ❤