Loading

மாயம் 4

 

மாலை நேரம் பள்ளி விட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் வெளிவந்து கொண்டிருக்க, அந்த பள்ளிக்குள் நுழைந்தான் ஹரிஹரன்.

 

“சார் சார்… ஹர்ஷி கிளாஸ் இந்த பக்கம்…” என்று அலெக்ஸ் அவனை அழைக்க, திரும்பிப் பார்த்தவன், “நான் என்ன அதுக்கா வந்தேன். நீ போய் உன் அண்ணா பொண்ணை கூப்பிடு மேன். நான் என் வேலையை பார்க்குறேன்.” என்றான்.

 

“அதான, நீங்க என்ன ஹர்ஷியை கூப்பிடவா வந்தீங்க?” என்று புலம்பியபடி அலெக்ஸ் தன் அண்ணன் மகளை அழைக்கச் சென்றான்.

 

ஹரிஹரனோ அந்த பள்ளியின் மத்தியில் இருந்த அறையான தாளாளரின் அறைக்கு அருகே செல்ல, எங்கிருந்தோ ஓடி வந்த பியூன், “சார் சார்… ஒரு நிமிஷம் நில்லுங்க. என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்று தயங்கியவாறே வினவினான்.

 

அவன் தயக்கத்திற்கான காரணம் ஹரிஹரனின் காவல் உடை என்றால், அவன் கேள்விக்கான காரணம் அவன் முதலாளியிடம் இருக்கும் பயம். அவளிடம் அனுமதி கேட்காமல் ஆட்களை உள்ளே விட்டால், அவன் அல்லவா திட்டு வாங்குவான்.

 

பியூனை பார்த்த ஹரிஹரனோ, “ஹ்ம்ம், அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. உங்க மேடம் கிட்ட தான் சொல்ல முடியும்.” என்று மிடுக்குடன் கூற, அதற்கு மேல் அவனை கேள்வி கேட்க எண்ணாமல், வெண்முகிலிடம் தகவலை கூற உள்ளே சென்றான்.

 

“மேடம், உங்களை பார்க்க போலீஸ் வந்துருக்காங்க.” என்று சொல்லும்போது தான் அவன் பெயரையோ அடையாளத்தையோ கேட்காத தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே திட்டியபடி, வெண்முகிலை பார்த்தான் பியூன்.

 

‘போலீஸா? காலைல வாசு சொன்ன காரணத்துக்காக இருக்குமோ?’ என்று எண்ணியவளிற்கு, காவல்துறை குறித்து நல்ல எண்ணம் இல்லை என்றாலும், தன் பள்ளி சம்பந்தப்பட்டது என்பதால் வந்திருந்த காவலனை சந்திக்க தயாரானாள்.

 

பியூன் வந்து உள்ளே செல்லுமாறு கூறியதும், ஹரிஹரன் தன் குளிர்க்கண்ணாடியை மாட்டிக்கொண்டு உள்ளே செல்ல, அதைக் கண்ட பியூனோ, ‘இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கான்னு தெரியலையே. எதுக்கும் வாசு சார் கிட்ட சொல்லுவோம்.’ என்று வாசுவை தேடி ஓடினான்.

 

பெரிதாக இருந்த அறைக்கு அழகு சேர்ப்பது போல மத்தியிலிருந்த நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

 

அவளின் கம்பீரத்தை தன்னையறியாமல் மனதிற்குள் ரசித்துக் கொண்டே அருகில் வந்தான் அவன். அவன் கண்ணிலிருந்து குளிர்க்கண்ணாடி அவன் ரசிப்பதை மறைத்தாலும், ஒருவித சந்தேகத்துடனே அவனைக் கண்டாள் பெண்ணவள்.

 

அவளின் சந்தேக பார்வையை கண்டதும், உடனே தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டவன், “ஹாய், ஐ’ம் ஹரிஹரன், டிஎஸ்பி.” என்று தன்னை அறிமுகப்படுத்த, அவளோ அதற்கு மறுமொழியாக ஒரு தலையசைப்பை தந்தாளே தவிர தன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

 

அதைக் கண்டவனும் மனதிற்குள் ‘அட’ என்று சொல்லிக் கொண்டு, மீண்டும் தன் பேச்சை துவங்கினான்.

 

“உங்க ஸ்கூல்ல தான் என் கலீக்கோட நீஸ் படிக்குறா. இங்க எஜூகேஷன் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அதை விட, டிசிப்ளினையும் சரியா சொல்லி தரீங்கங்கறதை நேர்லயே பார்த்தேன். அதுக்கு தான் உங்களை பாராட்டலாம்னு வந்தேன்.” என்று ஹரிஹரன் கூற, ‘இதற்காக தான் உண்மையிலேயே வந்தாயா?’ என்ற பார்வையை தான் தாங்கி இருந்தாள் வெண்முகில்.

 

அதையும் கண்டு கொண்டவனாக, “அதுக்கு மட்டும் இல்ல, என் பிள்ளைங்களையும் இங்க சேர்க்கலாம்னு ஒரு பிளானும் இருக்கு.” என்று அவன் கூற, அவனை மேலும் கீழும் பார்த்தவள், “ஓஹ், ஆனா மிடில் ஆஃப் தி அகாடெமிக் இயர்ல அட்மிஷன் போடுறது கொஞ்சம் கஷ்டம். அதுக்கான ப்ராபர் ரீசன் இருக்கணும்.” என்று பள்ளியின் தாளாளராக பதில் கூறினாள்.

 

“அட அது ஒன்னும் பிரச்சனை இல்லை. சேர்க்கணும்னா இன்னைக்கேவா? அதுக்கு இன்னும் சில வருஷங்கள் வெயிட் பண்ணனும்.” என்றவன், தன் கண்ணாடியை கழட்டியவாறு, “அந்த ‘சில’ வருஷக்கணக்கு உங்க கைல தான் இருக்கு மேடம்.” என்றான் சிறு சிரிப்புடன்.

 

அவன் கூறியது சில நொடிகளுக்கு பின் தான் அவளிற்கு புரிந்தது. முதலில் சற்று அதிர்ந்தவள், உடனே தன்னிலை அடைந்தவளாக, “உங்க ப்ரொஃபெஷன் மேல மரியாதை இல்லைன்னாலும், என் ப்ரொஃபெஷன் மேலயும், இந்த ஸ்கூல் மேலயும் எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அதை தாண்டி என்னை பிஹேவ் பண்ண வச்சுடாதீங்க. கெட் அவுட்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் சீறினாள் வெண்முகில்.

 

“உஃப் செம சூடா இருக்க போல ஒயிட் க்ளவுட். கூல் கூல். எனக்கு புரியுது, ஸ்கூல்ல வந்து பேசுறதால தான உனக்கு கோபம். நோ ப்ராப்ளம், எதுவா இருந்தாலும் வெளிய பேசிக்கலாம். ஓகே?” என்று சாதாரணமாக கூறியவன், அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அப்போது தான் பரபரப்பாக உள்ளே நுழைந்தான் வாசுதேவ்.

 

பியூன் அவனிடம் தகவலை கூறியிருக்க, காக்கிச்சட்டையை பார்த்தாலே கடுப்பாகும் தோழி, ஏதாவது ஏடாகூடமாக பேசி விடுவாளோ என்று பயந்தபடி ஓடி வந்திருந்தான் வாசு. அவனிற்கு தெரியவில்லை, இங்கு ஏடாகூடமாக பேசியது அந்த காக்கிச்சட்டை தான் என்பது.

 

உள்ளே நுழைந்ததும், “முகில், ஆர் யூ ஓகே?” என்று வாசு வினவ, அதற்கு அவள் பதிலளிப்பதற்கு முன்பே, “ரொம்ப டென்ஷனா இருக்காங்க உங்க பிரெண்டு.” என்றான் ஹரிஹரன்.

 

அவனைப் பார்த்ததும், “என்ன சார், என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.” என்று வாசு படபடக்க, “அப்படியா?’ என்று கேட்டபடி வெண்முகிலை பார்த்து சிரித்தான் ஹரிஹரன்.

 

அவள் அவனை முறைக்க, சூழ்நிலையை தவறாக கணித்த வாசுவோ, “சார், முகில் என்ன சொல்லியிருந்தாலும் சாரி. அவ ஏதோ டென்ஷன்ல பேசியிருப்பா.” என்று தேவையில்லாமல் ஆஜரானான்.

 

“வாசு…” என்று வெண்முகில் பல்லைக் கடிக்க, “நீ சும்மா இரு முகில்.” என்று அவளை அதட்டிய வாசு, ஹரிஹரனிடம் திரும்பி, “நீங்க வாங்க சார், வெளிய போய் பேசுவோம்.” என்று கையோடு அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

 

செல்லும்போது கூட, வெண்முகிலிடம் திரும்பி, “பை ஒயிட் க்ளவுட்” என்று வாயசைத்து விட்டே கிளம்பினான் ஹரிஹரன்.

 

வெண்முகிலோ, ‘இது என்ன புது பிரச்சனை?’ என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.

 

வெளியே அழைத்துச் சென்ற வாசுவோ, “என்ன பிரச்சனை சார்?” என்று பவ்யமாக வினவ, “பிரச்சனையா… என்ன பிரச்சனை?” என்று சாதாரணமாக வினவினான் ஹரிஹரன்.

 

அதை கேட்டு பேந்த பேந்த விழித்த வாசுவோ, “அப்போ எதுக்கு சார் வந்தீங்க?” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு சிரித்த ஹரிஹரனோ, “அதுவா… உங்க ஸ்கூல் நல்லா ரன்னாகுதுன்னு பாராட்டிட்டு, அப்படியே என் பிள்ளைங்களுக்கு அட்மிஷன் டீடெயில்ஸ் கேட்க வந்தேன்.” என்றான்.

 

“ஓஹ், அவ்ளோ தானா? அட்மிஷன் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல சார்.” என்று அதற்கும் யோசிக்காமல் வாசு பதிலளிக்க, “உங்க கரெஸ்பாண்டனட் என்னன்னா, அட்மிஷன் கஷ்டம்னு சொல்றாங்க.” என்று ஹரிஹரன் வேண்டுமென்றே பேசினான்.

 

‘அச்சோ, அவளுக்கு போலீஸ் அலர்ஜி இருக்குன்னு எப்படி சொல்வேன்?’ என்று யோசித்தவன், வெளியே சமாளிக்கும் விதமாக, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார். உங்க பிள்ளைங்களை கூட்டிட்டு நாளைக்கே கூட வாங்க. ஆமா, உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க? எந்த கிளாஸ் படிக்குறாங்க?” என்றும் வினவினான்.

 

பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிய ஹரிஹரன், ஒரு செருமலுடன், “க்கும், இன்னும் தெரியல.” என்று அங்கிருந்து செல்ல, வாசுவோ அதே இடத்திலேயே விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

ஹரிஹரன் சிறு சிரிப்புடன், வெண்முகிலின் ஒவ்வொரு அசைவுகளையும் மனக்கண்ணில் ஓட்டியபடியே நடந்து கொண்டிருக்க, எதிரே யாரின் மீதோ இடித்து விட்டான்.

 

அந்த நிகழ்வில் தன்னிலை அடைந்தவன் மன்னிப்பு கேட்க நினைக்க, அதற்கான பொறுமை இல்லாமல் சென்றவனை கண்கள் சுருங்க பார்த்துக் கொண்டிருந்தான். காரணம் அவன் அணிந்திருந்த சீருடை!

 

மேலும் யோசிக்க விடாமல் அலெக்ஸின் குரல் அவனை தடுத்தது. அப்போது தான் அந்த ‘பலியாடின்’ நினைவே வந்தது ஹரிஹரனிற்கு. சற்று தள்ளி தான் அலெக்ஸ் ஒரு ஆசிரியையுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

இதழோரம் சிறு சிரிப்புடன் அங்கு என்ன நடக்கிறது என்று தூரத்திலிருந்தே கவனித்தான் ஹரிஹரன்.

 

“மேடம், சொன்னா கேளுங்க. இவ என் அண்ணன் பொண்ணு தான். ஏதோ பழி வாங்குறதுக்காக, இப்போ உங்ககிட்ட என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றா. இதோ இந்த ஃபோட்டோவை கூட பாருங்க.” என்று அலெக்ஸ் கெஞ்ச, “சார், எத்தனை முறை சொல்றது, ஸ்கூல் ரூல்ஸ் படி, கார்டியன்னு ரெஜிஸ்டர் பண்ணவங்க கூட தான் பிள்ளைங்களை அனுப்புவோம். நீங்க போலீஸ் தான, உங்களுக்கே இப்போ இருக்க சிஷுவேஷன் புரியும். அப்பறம் ஏன் இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க? ஒன்னு ஹர்ஷினியோட பேரன்ட்ஸ் வரணும், இல்ல ரெஜிஸ்டர்ட் கார்டியன் வரணும். அப்போ தான் அனுப்புவோம்.” என்று அந்த ஆசிரியை கண்டிப்பான குரலில் கூறிக் கொண்டிருந்தார்.

 

ஆலெக்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குட்டி வாண்டை பார்க்க, அதுவோ அவனிடம் வக்கனை காட்டிக் கொண்டிருந்தது.

 

‘குட்டி மாடு, நேத்து சாக்லேட் வாங்கி தரலன்னு பழி வாங்குறேல.’ என்று மனதிற்குள் புலம்பிய அலெக்ஸ், மீண்டும் ஒரு முறை அந்த ஆசிரியையிடம் கெஞ்சி, தன் அலைபேசியிலிருந்து அண்ணிக்கு அழைத்து, அவரை பேச சொல்லி என்று தலையால் தண்ணீர் குடிக்காத குறையாக ஹர்ஷினியை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதியை வாங்கினான்.

 

அப்போதும், “இனிமே, இப்படி நடக்காம பார்த்துக்கோங்க போலீஸ்.” என்ற அறிவுரையை கூறிய பின்பே ஹர்ஷினியை அனுப்பி வைத்தார் அந்த ஆசிரியை.

 

செல்லும்போது, “கொரங்கு குட்டி, என்னை யாருன்னே தெரியாதுன்னு உங்க மிஸ் கிட்ட சொல்றியா?” என்று அலெக்ஸ் வலிக்காமல் அவள் தலையில் கொட்ட, “ஷ் ஆஹ்…” என்று தலையை தேய்த்தவாறே, “இப்படி அடிச்சுட்டே இருந்தா, வயலண்ட்டா பிஹேவ் பண்றீங்கன்னு எங்க முகில் மேம் கிட்ட கம்ப்லைன்ட் பண்ணிடுவேன்.” என்று மிரட்டினாள் குட்டி ஹர்ஷினி.

 

இத்தனை நாட்கள் அவள் ‘முகில் மேம்’ என்று கூறும்போது சாதாரணமாக எடுத்திருந்த அலெக்ஸினால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. காலையில் பார்த்த சம்பவம் அப்படி!

 

அதே சமயம், “பார்றா, அவ்ளோ டெரரா உங்க ‘முகில் மேம்’?” என்ற குரல் இருவருக்கும் கேட்க, யாரென்று பார்த்தவர்கள் கண்டது ஹரிஹரனை தான்.

 

ஹர்ஷினி ‘தெரியாத’ பார்வை பார்க்க, “ஓஹ் சாரி சாரி, என்னை இன்ட்ரோ கொடுக்கலல… ஐ’ம் ஹரிஹரன், அலெக்ஸா கூட தான் ஒர்க் பண்றேன்.” என்றான் ஹரிஹரன்.

 

‘க்கும், எங்ககிட்ட எகத்தாளமா பேசுனவரு, இந்த சில்வண்டு கிட்ட சிரிச்சுட்டு பேசிட்டு இருக்காரு!’ என்று அலெக்ஸ் யோசிக்க, ஹர்ஷினியோ ‘அலெக்ஸா’ என்ற விழிப்பில் பக்கென்று சிரித்தாள்.

 

மீண்டும் அவன் தலையில் கொட்ட முயன்ற அலெக்ஸை தடுத்த ஹரிஹரனோ, “என்ன அலெக்ஸா, முகில் மேம் மேல பயம் இல்லையா?” என்று கேட்டு ஹர்ஷினியுடன் ‘ஹை-ஃபை’ அடித்துக் கொண்டான்.

 

அடுத்த சில நொடிகளில் ஹரிஹரனும் ஹர்ஷினியும் சரளமாக பேசிக் கொண்டே நடக்க, அலெக்ஸோ தனியாக புலம்பியபடி பின்னே நடந்து கொண்டிருந்தான்.

 

பள்ளியை பற்றி பேச்சு எழுகையில் பேச்சுவாக்கில், “ஏன் ஹர்ஷி, உங்க ஸ்கூலுக்குள்ள மத்த ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸை அலோவ் பண்ணுவாங்களா?” என்று ஹரிஹரன் விசாரிக்க, “நோ நோ அங்கிள், மத்த ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸ் உள்ள வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ரூல் இருக்கு.” என்று ஹர்ஷினி கூற, ஹரிஹரனின் மூளையோ அதை வைத்து எதையோ கணக்கிட்டு கொண்டிருந்தது.

 

அதே சிந்தனையுடன் வீட்டை அடைந்தவனை வரவேற்றது ருக்மணியின் ஆச்சரிய குரல்.

 

“என்னடா பெரியவனே, அதுக்குள்ள வந்துட்ட? நீ இவ்ளோ சீக்கிரம் வருவன்னு தெரியாம மிச்சமிருந்த பாலை இப்போ தான் காஃபி போட்டு குடிச்சேன்.” என்று அவர் சலித்துக் கொள்ள, அவனோ பொய்யாக அவரை முறைத்தபடி, “ஊர்ல இருக்க எல்லாம் அம்மாக்களும், பிள்ளை சீக்கிரம் வந்துட மாட்டானான்னு நினைப்பாங்க. ஆனா, நீங்க சலிச்சுக்குறீங்க.” என்றபடி நீள்சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

“க்கும், நீ சீக்கிரமா வந்தா என்னை தான படுத்துவ.” என்று கூறியபடி அவனருகே அமர்ந்து கொண்டார் ருக்மணி. அறையில் இருந்த மதுவோ ஒரு காதை இங்கு வைத்தபடி அறைக்குள்ளேயே இருந்து கொண்டான்.

 

“என்னடா மகனே, உன் மூஞ்சியில ஏதோ வித்தியாசம் தெரியுதே?” என்று ருக்மணி சந்தேகத்துடன் வினவ, “அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது?” என்று ஹரிஹரன் இதழடக்கிய சிரிப்புடன் வினவினான்.

 

“என்னடா பொசுக்குன்னு ஒத்துக்கிட்ட?” என்று ருக்மணியும் அவனை கேலி செய்ய, அறையிலிருந்து வெளியே வந்த மதுகரன், “ம்மா, காலையில சொன்னதுக்கான ரியாக்ஷன் இவ்ளோ சீக்கிரமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ஒழுங்கா விசாரி ம்மா. எனக்கு என்னவோ, ஏற்கனவே இந்த இரும்புக்குள்ள காதல் வந்துருக்கும்னும், இப்போ சரியான நேரம் பார்த்து அதை வெளியே சொல்றான்னும் தோணுது.” என்று தன் பங்குக்கு ஏற்றி விட்டான்.

 

“அப்படியா சொல்ற?” என்ற ருக்மணி ஹரிஹரனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “அதுக்கெல்லாம் சான்ஸ் இல்ல டா மது. அப்படி இருந்திருந்தா, இப்போ கண்டுபிடிச்ச மாதிரி, மொச பிடிக்கிற மூஞ்சியை பார்த்ததும் கண்டுபிடிச்சுருக்க மாட்டேன்?” என்று ருக்மணி பேச, விட்டால் இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதை நன்கறிந்த ஹரிஹரன் தான் அவர்களின் உரையாடலை தற்காலிகமாக நிறுத்தினான்.

 

“ம்மா, இப்போ நான் சொல்லவா வேண்டாமா?” என்று ஹரிஹரன் வினவ, “வேண்டாம்னு சொன்னா மட்டும் சொல்லாமலா போயிடுவ?” என்று அதற்கும் கவுண்டர் கொடுத்து அவனிற்கு அன்னை என்று மீண்டும் நிரூபித்தார்.

 

“ப்ச், நான் போறேன்.” என்று ஹரிஹரன் எழுந்து கொள்ள, “சரி சரி சொல்லு டா. கொஞ்ச நேரம் பொழுதாவது போகும்.” என்றார் ருக்மணி.

 

சிறிது நேரம் பிகு செய்தாலும் காலையிலிருந்து மாலை வரை வெண்முகிலை பார்த்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

 

அதைக் கேட்ட ருக்மணியோ, அவன் முதுகிலேயே அடித்து, “டேய் நீயெல்லாம் ஒரு போலீஸாடா? இப்படி தான் ஒரு பொண்ணை ஹராஸ் பண்ணுவியா?” என்று கேட்க, அதிர்ந்தே போனான் ஹரிஹரன்.

 

“எதே? ஹராஸ்மெண்ட்டா? எம்மா, என்ன பேசிட்டு இருக்க? நான் எப்போ ஹராஸ் பண்ணேன்?” என்று ஹரிஹரன் வினவ, “பின்ன, முதல் தடவை பார்க்கும்போதே குழந்தையை பத்தி தான் பேசுவியாடா? நீயாச்சும் அந்த பொண்ணை அதுக்கு முன்னாடி பார்த்துருக்க. அந்த பொண்ணு உன்னை அப்போ தான் பார்க்குது. அதுகிட்ட போய் குழந்தை…” என்று கூற, அவரை இடைவெட்டியவன், “ம்மா, நிறுத்து நிறுத்து. இதுக்கு பேரு ஹராஸ்மெண்ட்டா?” என்று முறைத்தபடி வினவினான்.

 

அவன் முறைப்பை கண்ட ருக்மணியோ, ‘பயபுள்ள மூட் மாறிடுச்சு!’ என்று உஷாராகி, “அப்போ இதுக்கு பேரு ஹராஸ்மெண்ட் இல்லையா டா மது?” என்று இரண்டாவது மகனை கோர்த்து விட்டார்.

 

மது இந்த உரையாடலிற்குள் வராமலேயே அலைபேசியை பார்ப்பது போல அமர்ந்து கொண்டான்.

 

“ம்மா, கேள்வி கேட்டது நானு.” என்று அவரை தன் பக்கம் திருப்பிய ஹரிஹரன், “ம்மா, அந்த ஒயிட் க்ளவுட் பத்தி உனக்கு சரியா தெரியாது. டிரெக்ட்டா போய் ‘எனக்கு உன்னை பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிருந்தா என்னை மதிச்சிருக்க கூட மாட்டா. அதுக்காக தான் இப்படி… அட்லீஸ்ட் திட்டிட்டேயாச்சும் மேடம் என்னை பத்தி நினைச்சுட்டு இருப்பாங்க. இது ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ தான். இனிமே கொஞ்சம் கொஞ்சமா டிரை பண்ணி, அவளுக்குள்ள இறுக்கி பூட்டி வச்சுருக்கு மனசை திறக்கணும். அதுக்கு இப்படி சில பல குரங்கு சேட்டைகள் எல்லாம் பண்ண தான் வேண்டியதா இருக்கும். ஒருவேளை, எல்லா முயற்சிக்கு அப்பறமும், என்னை பிடிக்கலன்னு அவ ஸ்டிராங்கா இருந்தா, நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்று விளையாட்டாக ஆரம்பித்தவன், தீவிரமாக முடித்தான்.

 

ருக்மணிக்கும் மகனின் மனது புரிந்தே இருந்தது. இருப்பினும், ஒரே நாளில் இப்படி வந்து நிற்கும் மகனின் மனம் எத்தனை திடமாக இருக்கிறது என்று அவன் வாயாலேயே அறிந்து கொள்ளும் அன்னையின் சிறு முயற்சியே இது!

 

சூழலை இலகுவாக்க, “அது சரி, இன்னும் அந்த ஹராஸ்மெண்ட்ன்னா என்னன்னு சொல்லலையேடா?” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க, தன் மனதிலுள்ளதை உரைத்ததற்கு ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்திருந்த ஹரிஹரனோ, “உன்கிட்ட போய் என் ஃபீலிங்ஸை சொன்னதுக்கு மொட்டைமாடில மல்லாக்க படுத்துட்டு நிலா கிட்ட சொல்லியிருக்கலாம்!” என்று விருட்டென்று அறைக்கு சென்று விட்டான்.

 

“என்னடா இவன் இப்படி போறான்?” என்று மதுவிடம் ருக்மணி வினவ, “ம்மா, உன் பையன் லாஸ்ட்ல சொன்னதை கேட்டியா? காதல்ல விழுந்துட்டேன்னு கோட்வோர்ட்ல சொல்றாராமாம்.” என்றான்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் காக்கிச்சட்டையிலிருந்து இலகு உடைக்கு மாறி வெளியே வந்த ஹரிஹரனை பார்த்து, “என்ன ப்ரோ, மொட்டைமாடிக்கா? அச்சோ, இருட்டிடுச்சே… ஒயிட் க்ளவுட் மறைஞ்சுருக்குமே!” என்று வம்பிழுத்தான் மதுகரன்.

 

அவன் தலையிலேயே கொட்டிய ஹரிஹரன், அவனை படுத்தியெடுத்து பால் வாங்கி வரச்சொல்லி, அன்னையின் கையால் குளம்பியை பருகி விட்டே அங்கிருந்து கிளம்பினான்.

 

“ஷப்பா, இவனோட தொல்லையா இருக்குடா சின்னவனே.” என்று ருக்மணி சலித்துக்கொள்ள, “ஹாஹா, அவன் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு மா. அவன் சொல்ற ‘ஒயிட் க்ளவுட்’ மட்டும் அண்ணியா வந்தாங்கன்னா, அப்போ இருக்கு அவனுக்கு.” என்று சிரிக்க ஆரம்பிக்க, ருக்மணியும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டார்.

 

தொலைக்காட்சியிலோ மத்திய அமைச்சர் சதாசிவத்தின் மகன் காணாமல் போன செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

 

******

 

பிரேக்கிங் நியூஸ்… மத்திய அமைச்சர் சதாசிவத்தின் ஒரே மகனான கார்த்தி காணவில்லை. லண்டனிலிருந்து இன்று தாயகம் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்திருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் என்ற செய்தி அமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க, அதில் ஒரு முனையில் சதாசிவத்தின் படமும், மற்றொரு முனையில் கார்த்தியின் படமும் இருந்ததை பார்த்த நாகேந்திரன் அதிர்ச்சியுடன் மகளின் முகத்தை பார்த்தார்.

 

அவளோ எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாத நிர்மலமான முகத்துடன் தேநீரை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

 

மாயங்கள் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்