Loading

“எதுக்குலே வந்த நேரத்துல இருந்து ஒப்பாரி வெச்சிட்டு இருக்க… என்ன நடந்திச்சு… சொல்லிட்டு அழு புள்ள…” என வீட்டிற்கு வந்ததிலிருந்து ஹாலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அருணிமாவிடம் அவளின் அன்னை விஜயா கேட்க, அவருக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் அருணிமா.

 

விஜயா, “உன் ஐயன் வராருலே… அவியலுக்கு இப்படி வரும் போதே அழுதுட்டு இருக்குறதெல்லாம் பிடிக்காது… என்னைத் தான் வைய போறாருலே…” என ராஜதுரை வருவதைக் கண்டு அருணிமாவை அமைதியாக்க முயன்றார்.

 

அதற்குள் ராஜதுரை வீட்டிற்குள் நுழைய, அருணிமா அழுது கொண்டிருப்பதைக் கண்டவர், “என்னாச்சுலே… ஏன் அழுதுட்டு இருக்க… எலேய் விஜயா… நீ புள்ளய ஏதாச்சும் சொல்லிட்டியாலே…” என அவரின் மனையாளிடம் கோபமாகக் கேட்க,

 

“ஆமா… எனக்கு வேற சோலி இல்ல பாருங்க… எல்லாத்துக்கும் என்னை வையுறதே உங்களுக்கு சோலியா போச்சு… காலைலயே இவ கூட ஒன்னா படிச்ச புள்ளைங்கள பார்த்துட்டு வரதா போனா… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் வூட்டுக்கு வந்தா… வந்த நேரத்துல இருந்து இப்படி தான் ஒப்பாரி வெச்சிட்டு கிடக்குறா… எதுக்குன்னும் சொல்ல மாட்டேங்குறா…” என்றார் விஜயா.

 

ராஜதுரை, “ஏன்த்தா நீ அழுதுட்டு இருக்க… என் புள்ள இப்படி அழுதுட்டு இருக்கலாமாலே… யாராவது உன்னை ஏதாச்சும் சொல்லிட்டாய்ங்களா… ஐயன் கிட்ட சொல்லு தாயீ யாருன்னு… அவியல கண்டம் துண்டமா வெட்டிப் போடுறேன்ல…” என்கவும் ஆவேசமாக எழுந்த அருணிமா,

 

“ஏன்ப்பா இப்படி பண்ணீய… அவிய என்ன தப்பு பண்ணாய்ங்க… சம்பளத்த ஏத்தி கேட்டது ஒரு குத்தமாப்பா… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அம்புட்டு பேரு வூட்டையும் கொளுத்தி போட்டு இருக்கீய… அவிய என்ன தப்பு பண்ணாய்ங்க… அந்தச் சின்ன குழந்தை என்னப்பா தப்பு பண்ணிச்சு… இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தா அதோட உசுரே போயிருக்கும்… அப்படி என்னப்பா உங்களுக்கு சாதி வெறி… அவியலும் உங்கள போல மனுஷனுங்க தானே… எதுக்கு சாதி சாதின்னு அதையே கட்டிட்டு அழுறீய….” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளின் கன்னத்தில் இடி என இறங்கியது ராஜதுரையின் கரம்.

 

விஜயா அதிர்ந்து, “ஏங்க…” எனக் கத்த,

 

அருணிமாவோ கன்னத்தில் கை வைத்து ராஜதுரையையே கலங்கிய கண்களுடன் நோக்கினாள்.

 

ராஜதுரை இதுவரை அருணிமாவின் மீது கை வைத்ததில்லை. திட்டுவது கூட இல்லை. முதல் முறை தந்தை அடித்தது ஒரு பக்கம் வேதனை என்றால் இன்னொரு பக்கம் அவரின் செயல் அருணிமாவின் மனதை நொறுக்கி விட்டது.

 

ராஜதுரை, “வாயை மூடுலே… சீமைக்கு போய் இதைத் தான் கத்துட்டு வந்தியா… வியாக்கியானமா பேசுறதா எண்ணமா… எம்புட்டு தெணாவட்டு இருந்தா உன் ஐயனையே எதிர்த்து பேசுவலே‌… கால உடச்சி வூட்டுலயே அடச்சி வெச்சிடுவேன்…” என ஆத்திரமாகப் பேச,

 

“என்னங்க இது… அவ ஏதோ தெரியாம பேசிட்டா… இப்படி வயசு புள்ள மேல கை வெக்கிறீய… ஏய் அருணி… முதல்ல உன் ஐயன் கிட்ட மன்னிப்பு கேளுலே…” என ராஜதுரையிடம் கெஞ்சலாக ஆரம்பித்து அருணிமாவிடம் கட்டளையாக முடித்தார் விஜயா.

 

அருணிமா, “முடியாது ஆத்தா… நான் எதுவுமே தப்பா பேசல… என் கண்ணால இன்னைக்கு அந்நாண்ட நடந்தத பார்த்துட்டு தான் பேசுறேன்… நீ வேணா இம்புட்டு காலமும் புருஷனுக்கு பயந்து வாய தெறக்காம இருந்து இருக்கலாம் ஆத்தா… ஆனா என்னால அவிய பண்ணுறத வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது… அவிய அம்புட்டு பேரும் இப்போ சோத்துக்கும் வழி இல்லாம தங்குறதுக்கும் வழி இல்லாம இருக்காய்ங்க… எப்படித்தா நான் இதை எல்லாம் பார்த்துட்டு இருப்பேன்… இவிய போல நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரி கிடையாது…” என்க,

 

கோபத்தின் உச்சிக்கே சென்ற ராஜதுரை அருணிமாவின் கழுத்தைப் பற்ற, “ஐயோ… என்னங்க பண்ணுறீய… நம்ம புள்ளைங்க அது… விடுலே… ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிட போகுது…” என விஜயா அழுதவாறு அருணிமாவின் கழுத்திலிருந்து ராஜதுரையின் கரத்தை விலக்கப் போராட,

 

மறு கையால் விஜயாவின் கன்னத்தில் அறைந்த ராஜதுரை, “தள்ளிப் போலே… உன்னால தான் இவ இன்னைக்கு இம்புட்டு பேசுறா… அந்த *****சாதிக்கார பயலுங்களுக்காக நம்மாளுங்களையே தப்பா பேசுறா…” என்றார் கோபமாக.

 

விஜயா தன் இயலாமையை நினைத்து அழ, அருணிமாவோ ராஜதுரையின் கரம் தந்த அழுத்தத்தினால் ஏற்படும் வலியைக் கூட பொருட்படுத்தாது அவரையே கோபத்திலும் ஆற்றாமையிலும் கலங்கிய கண்களுடன் நோக்க,

 

“பெத்த புள்ளையாச்சேன்னு கம்முன்னு போறேன்ல… ஆனா என் சாதிக்கு ஒன்னுன்னா பெத்த புள்ளன்னு கூட பார்க்காம கண்டம் துண்டமா வெட்டி போட்டுறுவேன்… என்னலே சொன்ன… சாதியையே கட்டிட்டு அழுறேனா… ஆமாலே… உனக்கு என்னலே தெரியும் எங்க சாதிய பத்தி… அந்தக் *****சாதிக்காரங்களுக்கு ஒன்னுன்னா உனக்கு என்ன வந்துச்சு…. அப்படி தான்லே பண்ணுவேன்… இன்னைக்கு அவிய வூட்ட மட்டும் தான் கொளுத்தி இருக்கேன்… திரும்ப இப்படி ஏதாவது நடந்தா அவியலையே கொளுத்தி போடுவேன்…. அவிய எப்பவும் எங்களுக்கு கீழ இருக்க வேண்டியவிய தான்லே… அந்தக் கீழ் சாதிக்காரங்க எங்க செருப்பு… இல்ல இல்ல… செருப்பு கூட நாம விரும்பி தான்லே போடுறோம்… ஆனா அந்த *****சாதிக்காரங்க எங்க செருப்புக்கு கீழ ஒட்டி கிடக்குற மண்ணு… அவியலோட தகுதி அம்புட்டு தான்… அவிய எப்பவும் நமக்கு கீழ தான்லே… ஏதோ போனா போகுதுன்னு தான் எங்க ஃபேக்டரியில அவியலுக்கு வேலை போட்டு குடுத்து இருக்கேன்… இந்த ஊருல ஒரு பயலும் என்னை எதிர்த்து அவியலுக்கு வேலை குடுக்க மாட்டான்லே… அப்படி பட்டவிய எங்க கிட்டயே சம்பளத்த ஏத்திக் கேட்டு போராட்டம் பண்ணுவாய்ங்களா…. இதோ பாருலே… இது தான் நீயி எங்க சாதிய பத்தி தப்பா பேசுறது முதலும் கடைசியுமா இருக்கணும்… நீயும் அப்படி தான்லே இருக்கணும்… சாதி பார்த்து தான் பழகணும்… உன்னை அந்த *****சாதிக்காரங்க கூடவோ இல்ல அவிய இடத்துலயோ பார்த்தேன் அவியலுக்கு தான்லே ஆபத்தாகிடும்… இன்னைக்கு உன்ன சும்மா விடுறேன்… திரும்ப என்னையோ என் சாதியையோ எதிர்த்து பேசினியன்னா வெளிய எங்குட்டும் போக முடியாம வூட்டுக்குள்ளயே அடச்சி வெச்சிருவேன்லே… பார்த்து சூதானமா இருந்துக்கோ… என் சாதிக்கு ஒன்னுன்னா அது யாரா இருந்தாலும் அழிச்சிடுவேன்ல…” எனக் கோபமாக கூறிய ராஜதுரை அருணிமாவைக் கீழே தள்ளி விட்டு வெளியே சென்றார்.

 

அருணிமா கழுத்தைப் பிடித்துக் கொண்டு மூச்சு விட சிரமப்பட்டு இறும, அவளிடம் ஓடி வந்த விஜயா, “அருணி… என்னலே பண்ணுது… ஐயோ… பெத்த புள்ளன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டு போறானே பாவி மனுஷன்… என் தங்கம்…” என அழ,

 

அருணிமா கையால் குடிக்க தண்ணீர் கேட்டு சைகை செய்யவும் விஜயா அவசரமாக தன் மகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வைத்தார்.

 

தண்ணீரைக் குடித்தும் அருணிமாவிற்கு ஒழுங்காக மூச்சு விட முடியுமாகவும் அவளின் தலையை வருடி விட்ட விஜயா, “எதுக்குலே அப்படி பேசினீய… உனக்கு உன் ஐயன பத்தி தான் நல்லா தெரியும்ல… அவியலோட சாதி வெறிய எந்த ஆம்பளையாலுமே அழிக்க முடியாது… பொட்டச்சிங்க நாம என்னலே பண்ண முடியும்… இந்தக் கூத்தெல்லாம் நீயி பார்க்க வேண்டாம்னு தான் நீ சீமைக்கு போய் படிக்கணும்னு உன் ஐயன் கிட்ட கெஞ்சவும் நானும் உனக்கு ஆதரவா பேசினேன்ல… கடைசில நான் எது நடக்க கூடாதுன்னு நெனச்சேனோ அதுவே நடந்திடுச்சு…” என்றார் அழுது கொண்டே.

 

கண்களில் கண்ணீர் வடிய தன் தாயை அணைத்துக் கொண்ட அருணிமா, “நான் வேற என்ன ஆத்தா பண்ண முடியும்… எனக்கு நினைவு தெரிஞ்ச வயசுல இருந்தே ஐயன் அவிய கட்சிக்காகவும் சாதிக்காகவும் தான் உழைச்சிட்டு இருக்காய்ங்க… நீ தானே ஆத்தா என்னை வளர்த்தினீய… நீ தானே ஆத்தா எல்லாருமே கடவுளோட படைப்பு… அவிய கூட சாதி பார்க்காம பழகணும்னு சொல்லி குடுத்தீய… அப்போ என் கண்ணு முன்னாடியே ஐயனும் அவிய ஆளுங்களும் இந்த ஒன்னுக்கும் உதவாத சாதிய வெச்சிட்டு பண்ணுற அட்டூழியத்த பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியுமா ஆத்தா…” என்க,

 

“தப்பு தான்லே… எல்லாமே உன் ஆத்தாவோட தப்பு தான்… என் புள்ள அவிய ஐயன போல இல்லாம நல்லா வளரணும்னு நெனச்சது என் தப்பு தான்… உன் ஐயன கட்டிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் நான் படுற அவஸ்தைய என் புள்ளையும் படக்கூடாதுன்னு நெனச்சது தப்பு தான்லே….” எனத் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் விஜயா.

 

“ஆத்தா…” என அருணிமா அவரைத் தடுக்க, “என் புள்ள நல்லா வளரணும்னு தான்லே உனக்கு இந்த சாதி எல்லாம் தப்புன்னு சொல்லி குடுத்து வளர்த்தேன்… ஆனா இப்போ என் புள்ள அவிய ஐயன போல இல்லாம நல்லா வளருரத விட என் புள்ள உசுரோட இருக்குறது தான்லே எனக்கு முக்கியம்…” என்ற விஜயா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

 

“அருணி கண்ணு… இதோ பாருலே… ஆத்தா இப்படி சொல்லுறேன்னு கோச்சுக்காதே… உன் நல்லதுக்கு தான் ஆத்தா இப்படி சொல்றேன்… ஐயன எதிர்த்து பேசாதேலே.. அவிய சொல்ற படியே கேட்டு நடந்துகோ… ஆத்தா இப்படி சொல்றது தப்பு தான்லே.. ஆனா எனக்கு வேற வழி இல்ல கண்ணு… ஐயன் சொல்றது போல நீ அவிய கூட பழகாதே அருணி… உன் ஐயன் அவிய சாதிக்கு ஒரு இழுக்குன்னா உன்னை கொன்னு போட்டுடுவாருலே… என் தங்கம்ல… ஆத்தாக்காக இதைப் பண்ணுலே… உன் ஐயன போல அவிய கீழ் சாதின்னு நான் பழக வேணான்னு சொல்லல கண்ணு… இப்பவும் நான் சொல்றேன் இந்த உலகத்துல சாதின்னு ஒரு பிரிவ மனுஷங்களுக்குள்ள உருவாக்கினதே உன் ஐயன போல மனுஷங்க தான்… எப்போதுமே சாதி பிரிச்சு பார்க்குறது தப்பு தான்லே… ஆனா நீயி உசுரோட இருக்கணும் கண்ணு.. அதுக்கு தான்லே சொல்றேன்… கொஞ்சம் நாளைக்கு பொறுத்துக்கோ… உன் பரீட்சை முடிஞ்சதும் உன் ஐயன் கால்ல விழுந்தாவது சீமைல ஒரு மாப்பிள்ளையா பார்த்து உனக்கு கட்டி வெக்கிறேன்… இந்த ஊரு உனக்கு வேணாம்… நீ எங்குட்டு இருந்தாலும் ஆத்தாக்கு கவலை இல்லலே.. ஆனா என் புள்ள எங்குட்டு சரி உசுரோட இருந்தா எனக்கு போதும்லே… நீயி இங்குட்டு இருந்தா உன்னால இதை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது கண்ணு… அதனால தான் சொல்றேன்… ஆத்தாக்காக இதை பண்ணுவியாலே..” எனக் கண்ணீருடன் அருணிமாவின் கரங்களைப் பிடித்துக் கேட்டார்.

 

கலங்கிய கண்களுடன் தன் தாயையே நோக்கிய அருணிமாவின் மனக் கண்ணில் துருவ் வந்து செல்ல, கன்னத்தைத் தாண்டி வடிந்த கண்ணீருடன் விஜயாவின் கரத்திலிருந்த தன் கரத்தைப் பிரித்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

 

அருணிமா பதிலேதும் கூறாமல் ஓடியதும் அவ் இடத்திலேயே மடிந்து அமர்ந்த விஜயா, “அம்மா தாயே… என் புள்ளய நீ தான் காப்பாத்தணும் தாயே… இன்னைக்கு நடந்ததெல்லாம் பார்க்கும் போது பெத்த மனசு துடிக்குது தாயே…” என வேண்டிக் கொண்டு அழுதார்.

 

_______________________________________________

 

சாதி வெறி எனும் தீயில் அனைத்து வீடுகளும் சாம்பலாகி இருக்க, அவ்விடம் முழுவதும் மக்களின் அழுகுரல்களே கேட்டன.

 

தூரத்திலிருந்து கோபத்தில் கண்கள் சிவக்க, கை முஷ்டி இறுக அதனைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துராசு யாருக்கோ கைப்பேசியில் அழைத்து ஏதோ கூறி விட்டு வைத்தான்.

 

முத்துராசு, “ராஜதுரை… ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட…. என் ஐயனோட சாவுக்கு உன்னை பழி வாங்குற எண்ணத்துல தான்லே திரும்ப இந்த ஊருக்கு வந்தேன்… ஆனா இப்போ சொல்றேன்… இந்த அம்புட்டு பேரோட கண்ணீருக்கும் உன்னைப் பழி வாங்காம விட மாட்டேன்லே…” என்றான் கோபமாக.

 

_______________________________________________

 

“எலேய் துருவ் கண்ணா… என்னலே ஆச்சு… எப்படி அடி பட்டுச்சு… எதுக்கு இம்புட்டு பெரிய கட்டு போட்டு இருக்க… மூஞ்சில என்ன இது காயம்… யாரு கூடவாச்சும் சண்டை போட்டுக்கிட்டியாலே….” என கையில் பெரிய கட்டுடன் ஜெய்யுடன் வீட்டினுள் நுழைந்த துருவ்வைப் பார்த்து பதறிக் கேட்கவும்,

 

ஜெய், “ஆத்தா அது இன்னைக்கு…” என ஏதோ சொல்ல வர, அதற்குள் ஜெய்யின் பேச்சை இடை வெட்டிய துருவ், “ஒன்னுமில்லமா… சின்ன காயம் தான்… பைக்ல இருந்து கீழ விழுந்துட்டேன்… வெளிய சின்ன வேலை ஒன்னுக்கு பக்கத்து வீட்டு அண்ணன் பைக்க வாங்கிட்டு போனேன்… வேற ஒன்னுமில்லமா… நீங்க பயப்படாதீங்க… இந்த ஜெய் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வேற வேலை இல்லாம டாக்டர் கிட்ட சொல்லி பெரிய கட்டா போட்டு விட்டுட்டான்….” என்றான்.

 

“அப்படியாலே… பார்த்து ரோட்டுல போக தெரியாதா… ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா இந்த ஆத்தாக்கு உங்கள விட்டா யாருலே இருக்காய்ங்க… இம்புட்டு பெரிய கட்டோட வரவும் ஆத்தா பயந்துட்டேன்… சரிலே.. நீ போய் செத்த நேரம் ரூமுல ரெஸ்ட் எடு… ஆத்தா உனக்கு சூடா கஞ்சி கொண்டு வரேன்லே…” என்று விட்டு செல்ல,

 

ஜெய்யின் பக்கம் திரும்பிய துருவ், “டேய்… அம்மாக்கு ஊருல நடந்த பிரச்சினை எதுவும் தெரிய வேணாம்டா… அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க… எப்படியும் வீட்டுல தான் அம்மா இருக்க போறாங்க… அதனால அம்மாவுக்கு வெளியே யாரு மூலமாவும் இது தெரிய வராது…” என்கவும்,

 

“ஆமாலே… நீ சொல்றதும் நெசம் தான்… ஆத்தா ரொம்ப வருத்தப்படுவாய்ங்க… நல்ல நேரம் நீ என்னைத் தடுத்துட்ட… இல்லன்னா ஆத்தா கிட்ட உளறி வெச்சிருப்பேன்…” என்றான் ஜெய்.

 

_______________________________________________

 

சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்த அலமேலு வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சென்று கதவைத் திறந்தவர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.

 

ஏனென்றால் வாசலில் புன்னகையுடன் நின்றிருந்தான் முத்துராசு.

 

அலமேலு சந்தோஷத்தில், “ராசா…” என்றவாறு அவனை நெருங்க, “ஆத்தா…” என்றவாறு அலமேலுவை அணைத்துக் கொண்டான் முத்துராசு.

 

“வந்துட்டியாலே… என்னலே திடுதிப்புன்னு வந்து நிக்கிறீய… ஆத்தா கிட்ட நீ வரதா சொல்லவே இல்ல… எப்படி கண்ணா இருக்க… என் ராசா… நல்லா இருக்கியாலே… எம்புட்டு காலமாச்சு உன்னைப் பார்த்து…” என கண் கலங்கக் கூறினார் அலமேலு.

 

முத்துராசு, “ஆத்தா… என்ன ஆத்தா நீயி… சின்ன புள்ள மாதிரி கண்ண கசக்கிட்டு… அதான் நான் வந்துட்டேனே… கொஞ்ச நாளைக்கு என் ஆத்தா கூட தான் நான் இருக்க போறேன்…” என்றான் புன்னகையுடன்.

 

அலமேலு, “நெசமா தான் சொல்றியாலே… ஆத்தாக்கு எம்புட்டு சந்தோஷமா இருக்குதுன்னு தெரியுமா… மனசு நெறஞ்சி போச்சுலே… ஒரு வார்த்தை நீ வரதா ஆத்தா கிட்ட சொல்ல இருந்தது தானே… உனக்கு பிடிச்ச சாப்பாட்ட பண்ணி வெச்சி இருப்பேன்…” என்க,

 

“அதுக்கென்ன ஆத்தா… நீ எது செஞ்சி குடுத்தாலும் அதுல உன் பாசம் தான் இருக்கும்… அதான் நான் இங்குட்டு தானே இருக்க போறேன்… தினமும் எனக்கு பிடிச்சதா விதவிதமா செஞ்சி போடுத்தா…” என முத்துராசு கூறவும்,

 

மகிழ்ந்த அலமேலு, “நான் ஒருத்தி.. புள்ளய வாசல்லயே நிக்க வெச்சி பேசிட்டு இருக்கேன்… உள்ளார வாலே…” என்கவும் புன்னகையுடன் அவரைப் பின் தொடர்ந்தான் முத்துராசு.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்