Loading

ராஜதுரையும் மாரியும் மட்டும் வந்திருந்தால் கூட துருவ் அவர்களைத் தனியே சமாளித்து இருப்பான்.

ஆனால் அவர்கள் தம் அடியாட்களுடன் வரவும் வேறு வழியின்றி ஜெய் கூறியது போல் அவன் அங்கிருந்து ஓட,

“அவன் ஓடுறான்லே… பிடிங்கடா அவன….” எனக் கத்திய ராஜதுரை துருவ்வைத் துரத்த,

ஒரு மலை உச்சியில் வந்து மாட்டிக் கொண்டான் துருவ்.

துருவ்வை நெருங்கிய ராஜதுரையின் ஆட்கள் அவனை சுற்றி வளைக்க, துருவ்வைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்த ராஜதுரை, “என்னலே ***** சாதிக்கார நாயே… உன் கூடப் பொறந்தவன் போல சுத்திக்கிட்டு இருந்தவனையே போட்டுத் தள்ளிட்டோம்… எங்க கஜா இம்புட்டு நேரத்துக்கும் உன் அண்ணன போட்டுத் தள்ளி இருப்பான்… நீயி மட்டும் எதுக்குலே உசுரோட இருக்க?” எனக் கேட்கவும் மாரி உட்பட அவரின் அடியாட்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர்.

மாரி, “ஐயா… இன்னும் எதுக்குலே பார்த்துட்டு நிக்கிறீய… இவன கொன்னுருங்க…” என்கவும், “செத்த பொறுமையா இருலே… எப்படியும் பயலு போய் சேர தான் போறான்… செத்த நேரம் இருந்துட்டு போகட்டும்… எலேய் மாரி… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் பெத்த ஒரு சனியன் இருக்காளே… அதுக்கு இந்த கீழ் சாதிக்காரன் மேல அம்புட்டு காதலாம்லே…” என ராஜதுரை கூறவும் அதிர்ந்தான் துருவ்.

இவ்வளவு நாளும் அருணிமாவின் காதல் பற்றி ராஜதுரைக்கு தெரியாது என துருவ் நினைத்திருக்க, அவரோ அனைத்தும் தெரிந்தும் அமைதியாக இருந்துள்ளார்.

ராஜதுரை, “எங்க சாதில எந்தப் பயலாவது இந்தக் காரியத்த பண்ணி இருந்தாலே சும்மா விட்டுருக்க மாட்டேன்லே… இது நான் பெத்த சனியனே இதைப் பண்ணா பார்த்துட்டு சும்மா இருப்பேனா? உன்னைக் கொன்னுட்டு உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அவளையும் உன் கூடவே அனுப்பி வைக்கிறேன்லே…” என்றவர், “எலேய் குடுலே அந்தக் கட்டைய… இவனும் ரொம்ப தான் என் கிட்ட வம்பு வெச்சிக்கிட்டான்… இவனை ஒரேயடியா கொல்லக் கூடாதுலே… என் கையால அடிச்சி கொல்லணும்…” என்றதும் மாரி ராஜதுரையின் கையில் ஒரு கட்டையை வழங்கியதும் அதனை எடுத்துக் கொண்டு துருவ்வை நோக்கிச் சென்றார் ராஜதுரை.

கண்களை மூடிக் கொண்ட துருவ், “என்னை மன்னிச்சிருமா… என்னால உங்க புள்ளையோட கனவ நிறைவேத்த முடியலமா… அண்ணனுக்கு எதுவும் ஆகி இருக்காதுமா… நானும் ஜெய்யும் இல்லன்னாலும் அண்ணன் உங்கள நல்லா பார்த்துப்பான்… நான் போறேன்மா…” என நினைக்கும் போதே அவன் விழிகளிலிருந்து கண்ணீர் கசிந்தது.

துருவ் கண்களை மூடி இருக்க, திடீரென அருணிமாவின், “மாமா…” என்ற கதறல் கேட்டதும் அதிர்ந்து விழி திறக்க, அவன் முன்னே ராஜதுரை கட்டையை ஓங்கியபடி நிற்க, துருவ்வின் காலின் கீழே பேச்சு மூச்சு இன்றி விழுந்து கிடந்தாள் அருணிமா.

ராஜதுரை துருவ்வை அடிக்கக் கட்டையை ஓங்க, அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த அருணிமா, ‘மாமா…’ எனக் கத்திக் கொண்டு இடையில் பாய்ந்து இருக்க, துருவ்விற்கு விழ வேண்டிய அடி அருணிமாவின் தலையில் பலமாக விழுந்ததும் மயங்கி விழுந்தாள் அருணிமா.

துருவ் அதிர்ச்சியில், “நிரு…” எனக் கத்திக் கொண்டு அருணிமாவைத் தன் மடியில் ஏந்தியவன், “நிரு… நிரு… உனக்கு என்ன ஆச்சு… கண்ண திற நிரு…” எனப் பயந்து பேச, “ச்சே..‌. சனியன் குறுக்கா வந்துட்டா…” என ராஜதுரை சலிப்பாகக் கூறவும், “எதுக்கு கவலைப்படுறீய ஐயா… எப்படியும் இந்தக் கழுதையும் போட்டுத் தள்ளத் தானே இருக்கோம்… ரெண்டையும் சேர்த்தே மேல அனுப்பிருவோம்… இந்த **** சாதிக்கார நாய அம்புட்டு காதலிச்சால்ல… சாவுற நேரத்துலயும் அவன் கூடவே போய் சேரட்டும்லே…” என மாரி கூறவும் அதனை ஆமோதித்தார் ராஜதுரை.

துருவ் அருணிமா கண் விழிக்காமல் இருக்கவும் பயந்தவன், “ஏன் டி இப்படி பண்ண? அப்படி என்ன டி உசுர விடுற அளவுக்கு காதல் உனக்கு? அதுவும் அதுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என் மேல… நிரு… நீ நான் சொன்னா கேட்ப தானே… கண்ண திற நிரு… ப்ளீஸ் டி…” என அழ அவனின் தலையில் கட்டையால் அடித்தான் மாரி.

துருவ் அதிர்ந்து தலையைப் பிடிக்க, அவனுக்கு சிந்திக்கவே நேரம் இன்றி ராஜதுரையும் மாரியும் மாறி மாறி அவனைப் போட்டு அடித்தனர்.

துருவ் மயங்கி அருணிமாவின் அருகிலே விழ, “எலேய் இதுங்க ரெண்டோட பொணத்தையும் இந்த மலைல இருந்து கீழ தள்ளி விடுலே… இந்த மலைல இருந்து விழுந்த எவனும் இது வரை பொழச்சது இல்ல… மலைல இருந்து விழுந்து தலை சிதறி சாகட்டும்லே…” என கொஞ்சம் கூட மனசாட்சியே இன்றி ராஜதுரை கூறவும், ராஜதுரையின் அடியாட்கள் துருவ், அருணிமா இருவரையும் மலையிலிருந்து தள்ளி விட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து செல்ல, அங்கு வந்த முத்துராசு அதனைக் கண்டு அதிர்ந்து நின்றான்.

கஜாவுடன் சண்டையிட்டு விட்டு உடனே வேகமாகப் புறப்பட்டு வந்த முத்துராசு தன் சகோதரர்களை எல்லா இடங்களிலும் தேடினர்.

பின் வயற் காட்டுப் பக்கம் வந்தவனின் பார்வையில் கத்தி குத்துப்பட்டு கீழே விழுந்து கிடந்த ஜெய் பார்வையில் படவும் அதிர்ந்தவன் அவனிடம் ஓட, ஜெய்யோ பேச்சு மூச்சின்றிக் கிடந்தான்.

முத்துராசு நடுக்கத்துடனே ஜெய்யின் நாசியில் விரல் வைத்துப் பார்க்க, ஜெய் மெதுவாக மூச்சு விட்டுக் கொண்டு இருந்தான்.

ஜெய்யின் இதயம் இன்னும் துடித்துக் கொண்டு இருப்பதை அவதானித்தவன் உடனே நகரத்தில் இருந்து தன்னுடன் வந்த ஆட்களை அங்கு வரவழைத்து ஜெய்யை உடனே மருத்துவமனையில் சேர்த்தான்.

பின் துருவ்வைத் தேடிச் சென்றவனின் பார்வையில் விழுந்தது என்னவோ ராஜதுரையின் ஆட்கள் அவனையும் அருணிமாவையும் மலையிலிருந்து கீழே தள்ளி விடுவதைத் தான்.

முத்துராசு மலையடிவாரத்தில் மண்டியிட்டு தலையில் அடித்துக் கொண்டு அழ, அவன் செவியில் விழுந்தது யாரோ வலியில் முனங்கும் சத்தம்.

அவசரமாக மலையிலிருந்து எட்டிப் பார்க்க, மலைக்கு கீழே பெரிய புல் பற்றை ஒன்றின் மீது துருவ்வும் அருணிமாவும் விழுந்து கிடந்தனர்.

திருவம்பட்டி ஊர் மக்கள் பலர் காதல் தோல்வியாலும் வறுமையினாலும் அம் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வர்.

அவர்களின் சாந்தி அடையாத ஆன்மா அவ் இடத்தில் சுற்றிக் கொண்டு இருப்பதாக அவ் ஊர் மக்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்.

அந்தப் பயத்திலேயே யாருமே அம் மலையடிவாரத்துக்குச் செல்வதில்லை.

அதனால் அம் மலையின் கீழ் புல் பற்றைகள் நிறைந்து காடாகி இருப்பதை யாரும் அறியவில்லை.

ராஜதுரையும் மாரியும் அடித்துப் போட்டதில் துருவ் மயங்கி இருக்க, அருணிமா மட்டும் மயக்கத்திலே வலியில் முணங்கிக் கொண்டு இருந்தாள்.

புல் பற்றையில் விழுந்ததால் இருவருக்கும் ஓரளவு காயமே ஆகி இருந்தது.

தன் ஆட்களை வரவழைத்த முத்துராசு உடனே இருவரையும் மருத்துமனையில் சேர்த்தான்.

முத்துராசு, துருவ், ஜெய் என தனக்குத் தொந்தரவாக இருந்த அனைவரையும் கொன்று விட்டோம் என்ற ஆனந்தத்தில் ராஜதுரையும் மாரியும் ஊர் முழுவதும் அதனைக் கூறி கொண்டாடினர்.

என்ன நடக்கிறது எனப் புரியாமல் அங்கு வந்த விஜயா, “எலேய்… என் பொண்ணு எங்கலே… உங்களைத் தேடி தானே அது உங்க பின்னாலயே வந்துச்சு…” என்கவும் மாரி அவரைப் பார்த்து ஏளனமாக சிரிக்க, விஜயாவின் முடியைப் பற்றிய ராஜதுரை, “புள்ளயா டி நீயி பெத்து வெச்சி இருக்கியேலே… என் மானத்த வாங்க வந்த சனியன் அது… எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அந்தக் கீழ் சாதிக்கார நாய அந்தக் கழுதை காதலிச்சி இருக்கா… அதான்லே அந்த சாக்கடைங்க கூடவே நீயி பெத்த சனியனையும் சேர்த்தே சமாதி கட்டிட்டோம்…. என் கையால அந்த கழுதைய கொன்னுட்டேன்லே…” என மனித ரூபத்தில் இருந்த அந்த சாதி வெறி பிடித்த மிருகம் ஆத்திரத்துடன் கூறியவர் மனைவி என்றும் பாராது விஜயாவைக் கீழே தள்ளி விட,

ராஜதுரை கூறிய செய்தியில் அதிர்ந்த விஜயா, “ஐயோ…. ஐயோ… ஐயோ… என் புள்ள யாருக்கு என்ன பாவம்லே செஞ்சது… உங்க சாதி வெறிக்கு என் புள்ளைய பலி கொடுத்துட்டியேலே பாவிங்களா… எனக்கு ஆறுதலா இருந்த ஒரே உறவும் போயிடுச்சே…” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

அவரைத் துச்சமென மதித்து விட்டு தந்தையும் மகனும் அங்கிருந்து சென்றனர்.

ராஜதுரையும் மாரியும் சாதி வெறி பிடித்து ஒரு குடும்பத்தையே அழித்த ஆணவத்தில் சுற்ற, அவரின் தொண்டர்களும் அடியாட்களும் அதனைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அலமேலுவிற்கு காலையில் இருந்தே ஏதோ தவறாக நடக்கப் போவதாக மனம் படபடப்பாக இருக்க, அதனை நிரூபிக்கும் விதமாக, “அலமேலுக்கா… அலமேலுக்கா…” எனக் கத்திக் கொண்டு அவரின் பக்கத்து வீட்டுப் பெண்மணி வரவும் பதறியவர், “எலேய் கங்கா… என்னாச்சுலே… எதுக்கு இப்போ என் பேரை ஏலம் விட்டுட்டு வரீய?” எனக் கேட்கவும் அந்த கங்கா என்ற பெண்மணி,

“அலமேலுக்கா… நம்ம எம்.எல்.ஏயும் அவிய மயேனும் சேர்ந்து உங்க மயேனுங்க துருவ்வையும் ஜெய்யையும் கொன்னுட்டாருலே…” என அலமேலுவின் தலையில் இடியை இறக்கவும் அதிர்ந்தவர், “எ…என்னலே சொல்ற நீயி… என் புள்ளைங்க… இல்ல… நீயி சொல்ற மாதிரி எதுவும் ஆகி இருக்காது… என் புள்ளைங்க நல்லா இருப்பாய்னுங்க…” எனக் கதறிய அலமேலு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழவும் பயந்த கங்கா உடனே முத்துராசுவுக்கு அழைத்து தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த முத்துராசு துருவ், ஜெய், அருணிமாவை சேர்த்திருந்த மருத்துவமனையிலேயே தன் தாயையும் சேர்த்தவன் தனி மரமாக மருத்துவமனை வராண்டாவில் மடிந்து அமர்ந்தான்.

அடுத்து என்ன செய்வது என்று கூட அவனுக்கு புரியவில்லை.

யாரும் அற்ற அநாதை போல் உணர்ந்தான் முத்துராசு.

இந்த நொடியே ராஜதுரையையும் மாரியையும் கொன்று போட்டு விடும் அளவுக்கு வெறி வந்தது.

ஆனால் தன் சொந்தங்களுக்காக அதனை அடக்கியவன் மருத்துவர் வரும் வரை காத்திருந்தான்.

துருவ், ஜெய், அருணிமா மூவருக்குமே பலத்த அடியும் காயமும் என்பதால் பல மணி நேரம் அவர்கள் சிகிச்சையில் இருந்தனர்.

அலமேலுவைப் பரிசோதித்து விட்டு மருத்துவர் வெளியே வரவும் அவரிடம் ஓடிய முத்துராசு, “டாக்டர்… எங்க ஆத்தாக்கு ஒன்னும் இல்லயேலே…” எனப் பதட்டமாகக் கேட்க, “அவங்க நல்லா தான் இருக்காங்க… ஆனா அவங்க ஒரு அதிர்ச்சியான தகவல் கேட்டதும் அந்த அதிர்ச்சியில அவங்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கு… அவங்களும் சேர்ந்து முயற்சி பண்ணினா கொஞ்ச நாள்ல உங்க அம்மாவைக் குணப்படுத்தலாம்…” என மருத்துவர் கூறவும் அதிர்ச்சியில் உறைந்தான் முத்துராசு.

அலமேலு இன்னும் மயக்கத்தில் இருக்கவும் அவரை சென்று பார்த்த முத்துராசு அலமேலுவின் கரத்தைப் பிடித்தவன், “என்னை மன்னிச்சிருலே ஆத்தா… நான் உனக்கு நல்ல மயேனாவே இல்ல… என் தம்பிங்களுக்கும் நல்ல அண்ணனா இல்ல… அவியல சரியான நேரத்துல என்னால காப்பாத்த முடியல… என் தம்பிங்க பிழைப்பாங்களா இல்லையான்னே தெரியல ஆத்தா…” என அழுதான் முத்துராசு.

சில மணி நேரத்தில் ஜெய்யிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியே வந்தவர், “டோன்ட் வொரி மிஸ்டர்.முத்துராசு… உங்க தம்பி ரொம்ப நல்லா இருக்காரு… கத்தி ஆழமா குத்துப்படல… அதனால அவரோட உயிருக்கு ஆபத்து இல்ல… கொஞ்சம் அதிகமா பிளட் லாஸ் ஆகிடுச்சு… அதனால தான் அவரு மயக்கத்துக்கு போய்ட்டாரு… அவர் கண் முழிச்சதும் நீங்க போய் பார்க்கலாம்…” என்க, “ரொம்ப நன்றிங்க டாக்டர்… என் மற்ற தம்பி துருவ்வும் அந்தப் பொண்ணும் எப்படி இருக்காய்ங்க?” என முத்துராசு வினவ,

“அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் அடி பலமா இருக்கு… அந்தப் பொண்ணுக்கு வேற தலைல பலமா அடி பட்டிருக்கு… நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கோம்… நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க…” என்று விட்டு சென்றார் மருத்துவர்.

சற்று நேரத்தில் ஜெய் கண் விழித்ததும் முத்துராசு அவனை சென்று பார்க்க, எப்போதும் முகத்தில் புன்னகையுடன் யாருடனாவது வம்பளத்துக் கொண்டே இருக்கும் தன் சகோதரன் கட்டிலில் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் படுத்துக் கிடப்பதைக் காணவும் முத்துராசுவால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.

ஜெய், “அண்ணே…” என அழைக்கவும் அவனை அணைத்துக் கொண்டு அழுதான் முத்துராசு.

“அழாதே அண்ணே… நான் தான் நல்லா இருக்கேனேலே…” என ஜெய் கூறவும் அவனை முறைத்த முத்துராசு, “என்னலே நல்லா இருக்குறீய? பாரு நீயி இருக்குற லட்சணத்த… உங்க ரெண்டு பேரையும் இழந்துட்டேன்னு எம்புட்டு பயந்துட்டேன்னு தெரியுமாலே?” என்கவும் அதிர்ந்த ஜெய், “அ..அண்ணே… துருவ்வுக்கு என்னாச்சுலே…” என பயந்து வினவவும் நடந்ததைக் கூறினான் முத்துராசு.

“எல்லாம் என்னால தான் அண்ணே… நான் மட்டும் துருவ் பேச்சைக் கேட்டு அந்தப் புள்ள பின்னால போகாம இருந்திருந்தா யாருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கும்லே…” என ஜெய் வருத்தப்பட, “எலேய்… சும்மா இருலே… நீயி என்ன பண்ண முடியும்… அதை விடு… நீயி நல்லா இருக்குறது தெரிஞ்சா ஆத்தாக்கு குணமாகிடும்லே…” என முத்துராசு கூறவும் புரியாமல் முழித்த ஜெய், “என்னண்ணே சொல்லுறீய? ஆத்தாக்கு என்னாச்சு?” என்க, “உனக்கும் துருவ்வுக்கும் இப்படி நடந்தது தெரிஞ்சதும் மயக்கம் போட்டு விழுந்திடுச்சுலே…  டாக்டர் அதிர்ச்சில அவியலுக்கு பெரலைஸ் வந்துட்டதா சொன்னாய்ங்க… நீயி கவலைப்படாதே… உன்னையும் துருவ்வையும் பார்த்தாக்க அவிய சரி ஆகிடுவாய்ங்க…” என முத்துராசு கூற, “துருவ் இப்போ எப்படி இருக்கான் அண்ணே?” எனக் கேட்டான் ஜெய்.

முத்துராசு, “அருணியும் துருவ்வும் இன்னும் கண்ணு முழிக்கல… அவிய தலைல அடிச்சிருக்காய்ங்க அந்த சாதி வெறி பிடிச்ச நாய்ங்க…” என்றான் ஆத்திரத்துடன்.

சற்று நேரம் அமைதி காத்த ஜெய், “அண்ணே… நான் உசுரோட இருக்குறது யாருக்கும் தெரிய வேணாம்லே…” எனத் திடீரென கூறவும், “என்னலே சொல்ற நீயி… நீயி நல்லா இருக்குறது தெரிஞ்சாலே ஆத்தா பாதி குணமாகிரும்…” என முத்துராசு மறுக்க, “ஆத்தாக்கு சரி ஆகிரும்லே… எனக்கு நம்பிக்கை இருக்கு… அந்த ராஜதுரைக்கும் மாரிக்கும் நானும் துருவ்வும் உசுரோட இருக்குறது தெரியக் கூடாதுலே… நானும் அவியல எதிர்க்குற அளவுக்கு என்னை பலப்படுத்திக்கணும்… முதல்ல துருவ் அவன் கனவ நிறைவேத்தணும்… அவியல போலவே கொலை கொள்ளைன்னு அவியல நாம அழிக்கக் கூடாதுண்ணே… நம்ம ஆத்தா சொல்லித் தந்தது போல சட்டத்தால தான்லே அவியல அழிக்கணும்…” என்றான் ஜெய்.

“உனக்கு என்ன பைத்தியமாலே? இப்போ எங்குட்டு தான் சட்டம் சரியா இருக்குது… சட்டமே அந்த ராஜதுரை போல அரசியல்வாதிங்க கைல தான் இருக்கு… உங்களுக்கு அந்தாளு பண்ண காரியத்துக்கு இப்பவே எனக்கு அவன கொன்னு போடுற அளவு வெறி இருக்குலே…” என முத்துராசு ஆத்திரத்துடன் கூற,

“அண்ணே… சட்டம் அவிய கிட்ட இருக்கும் வரை தான்லே அவியலுக்கு ஆட முடியும்… அந்த சட்டம் எங்க துருவ் போல நேர்மையானவங்களுக்கு கிடைக்கணும்லே… எனக்கு நம்பிக்கை இருக்கு..‌. என் துருவ் அந்த ராஜதுரையோட எல்லா ஆட்டத்தையும் அடக்குவான்லே…” என ஜெய் கூறவும் மனமே இன்றி சம்மதித்தான் முத்துராசு.

அதன்படியே மருத்துவரிடமும் ஜெய் பிழைத்ததை யாரிடம் கூறாமல் மறைக்கக் கூறினர்.

அன்று முழுவதுமே துருவ்வும் அருணிமாவும் கண் விழிக்கவில்லை.

இருவருக்குமே சிகிச்சை தொடர்ந்து நடக்க, இரவு கண் விழித்த அலமேலு தன் அருகில் அமர்ந்து இருந்த முத்துராசுவிடம் தன் புத்திரர்களைப் பற்றிக் கேட்க, முத்துராசு துருவ்விற்கு இன்னும் சிகிச்சை நடைபெறுவதைக் கூறியவன் தயங்கித் தயங்கி ஜெய் இறந்து விட்டதாகக் கூறவும் தன் மைந்தர்களை எண்ணிக் கதறினார் அலமேலு.

முத்துராசு, “ஆத்தா… அழாதேலே…” எனக் கெஞ்ச, “எப்படிலே அழாம இருக்க முடியும்? என் ஒரு மயேன் என்னை மொத்தமா வுட்டுப் போய்ட்டான்… இன்னொரு மயேன் பிழைப்பானா இல்லையான்னு கூட தெரியல… நான் சரியான ராசி கெட்டவ… என் புள்ளைங்க எல்லாம் என்னை வுட்டு போயிடுறாய்ங்க… கடவுளே… என் மயேனுங்கள எனக்கு திருப்ப குடுத்துடுலே..‌. இந்தக் கட்டை சும்மா தான் எல்லாருக்கும் பாரமா இருக்கு… என் உசுர எடுத்துக்கோலே…” என்று அலமேலு கதற, தாயின் கண்ணீரைக் கண்டவனின் மனமோ உண்மையைக் கூறக் கூற, தன் சகோதரர்களின் நலனுக்காக உண்மையை மறைத்தான் முத்துராசு.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்