Loading

இரண்டு வருடங்களுக்குப் பிறகு

 

அன்று திருவம்பட்டி ஆட்சியர் அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

 

சனத் திரள் வரிசை கட்டி நிற்க, தன் ஆட்களுடன் அங்கு வந்து சேர்ந்தார் ராஜதுரை. கூடவே மாரியும் இருந்தான்.

 

இந்த இரண்டு வருடங்களில் ராஜதுரையிடம் பெரிதாக ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை.

 

வேண்டும் என்றால் அவரது மீசை மட்டும் அரை இன்ச் அதிகமாக வளர்ந்து இருக்கும்.

 

கீழ் சாதி என ராஜதுரையால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களும் அக் கூட்டத்தில் இருக்க, ராஜதுரையின் வருகையைக் கண்டதுமே அவர்களின் மொத்த எதிர்ப்பார்ப்பும் வடிந்து போனது.

 

அவர்களைக் கேவலமாகப் பார்த்த ராஜதுரை, “எலேய் மாரி… எப்போலே அந்த புது கலெக்டர் வருவாரு… இவியலுக்கு சொல்லு… எப்படியும் அந்த புது கலெக்டரும் நம்ம பேச்ச தான் கேட்டு ஆகணும்னு… இல்லன்னா எம்புட்டு நாளைக்கு தான் இங்குட்டு இருக்க முடியும்…” எனக் கூறி இகழ்ச்சியாக சிரிக்க, அவருடன் மாரி உட்பட ராஜதுரையின் ஆட்கள் அனைவருமே ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்தனர்.

 

அதனைப் பார்த்து கீழ் சாதி மக்கள் வருத்தப்பட, அவர்களில் ஒருவன், “எலேய்… இனிமே நம்ம இங்குட்டு இருந்து ஒரு பிரயோசனமும் இல்லலே… எப்படியும் அந்தாளு வரப் போற புது கலெக்டரையும் கைக்குள்ள போட்டுக்குவாரு… கிளம்புலே அம்புட்டு பேரும்…” என்க, “செத்த நேரம் இருலே… வந்தது வந்துட்டோம்… இருந்து பார்த்துட்டு தான் போலாமே… நமக்கு என்ன இப்படி ஏமாறுறது புதுசா…” என ஒருவன் கூறவும் அனைவரும் அதனை ஆமோதித்தனர்.

 

சற்று நேரத்திலே ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் ஒரு வெள்ளை நிற சைரன் வைத்த அரச மகிழூந்து வந்து நிற்கவும் அவ் இடமே அமைதியானது.

 

“எலேய்… எடுலே அந்த மாலைய…” என்ற ராஜதுரை மாரியின் கையிலிருந்த மாலையை வாங்கிக் கொண்டு மகிழூந்தின் அருகில் சென்றார்.

 

ஒருவர் ஆட்சியர் இறங்குவதற்காக மகிழூந்தின் கதவைத் திறந்து விடவும் ராஜதுரை, “வணக்கம் கலெக்டர் ஐயா…” என்றவாறு ஆட்சியரை வரவேற்பதற்காக அவரின் கழுத்தில் மாலை இடச் செல்ல, மகிழூந்திலிருந்து இறங்கியவனைக் கண்டு தூக்கிய கைகள் அந்தரத்திலே நின்றன.

 

ஏனென்றால் மகிழூந்தில் இருந்து இறங்கியவன் துருவ்.

 

கருநீல நிற இன் செய்த சட்டை, கறுப்பு ஜீன்ஸ், கண்ணில் கூலர்ஸுடன் இறங்கியவனைக் கண்டு ராஜதுரை அதிர்ந்து நின்றிருக்க, அவரைப் போலவே அவரின் அருகில் நின்ற மாரியின் நிலையும் இருந்தது.

 

இருவரின் மனதிலும் ஒரே கேள்வியே எழுந்தது. ‘இவன் எப்படி மீண்டும் உயிரோடு வந்தான்?’.

 

துருவ், “என்ன சார்… புது கலெக்டர வெல்கம் பண்ண மாட்டீங்களா…” எனக் கேலியாகக் கேட்கவும், அவனது குரலில் தெரிந்த ஆளுமையில் ராஜதுரையின் கரங்கள் தானாக மாலையிட்டன.

 

துருவ்வின் உதடுகள் ராஜதுரையைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைக்க, அவன் கண்களோ கோபத்தில் சிவந்து இருந்தன.

 

ஆனால் அவன் கூலர்ஸ் அணிந்து இருந்ததால் அது யாருக்கும் தெரியவில்லை.

 

“வாங்க சார்… உள்ள போலாம்…” என அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன் வந்து அழைக்கவும் அவனுடன் சென்றான் துருவ்.

 

தங்களைக் கடந்து செல்லும் துருவ்வையே ராஜதுரையும் மாரியும் கண்களில் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“எலேய் மாரி… எப்படிலே இவன் பொழச்சான்… ‌இவன் அந்த மலைல இருந்து கீழ விழுறத நம்ம கண்ணாலயே பார்த்தோமே… அதுல விழுந்த ஒரு பயலும் இம்புட்டு காலமும் பொழச்சி வந்ததே இல்ல… பின்ன இவன் மட்டும் எப்படிலே…” எனக் கோபமாகக் கேட்க,

 

மாரி, “அதாங்கய்யா எனக்கும் புரியல… நாம உள்ளார போலாம்… இந்த ***சாதிக்காரனுக்கு எம்புட்டு நாளைக்கு தான் இங்குட்டு தாக்கு பிடிக்க முடியும்னு பார்க்கலாம்லே…” என்றதும் அதனை ஆமோதித்த ராஜதுரை மாரியுடன் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

 

துருவ்வை எங்கு எதிர்ப்பார்க்காத மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, கீழ் சாதி மக்களோ, ‘இனிமே தங்களுக்கு நல்ல நேரம் தான்…’ என எண்ணி சிலாகித்தனர்.

 

ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான் துருவ்.

 

உள்ளே நுழையும் போதே துருவ்வின் பெயரும் பட்டமும் பதிக்கப்பட்ட பெயர் பலகை மேசை மீது வைக்கப்பட்டிருக்க, அதனைக் கையால் வருடியபடி இருக்கையில் அமர்ந்தான் துருவ்.

 

அதனைக் காணும் போதே துருவ்வின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.

 

எத்தனை வருட கனவு. எத்தனை இழப்புகள்.

 

அதனை நினைத்து கலங்கியபடி இருந்தவனின் அறைக்குள் திடீரென ராஜதுரையும் மாரியும் நுழையவும் ஆத்திரம் அடைந்த துருவ், “பர்மிஷன் கேட்டுட்டு உள்ள வரணும்னு தெரியாதா? இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” எனக் கடுமையான குரலில் கேட்கவும், “யாரப் பார்த்து என்னலே கேட்ட?” எனக் கோபமாக மாரி துருவ்வை அடிக்கப் பாய, அதற்குள் அவனைத் தடுத்த ராஜதுரை,

 

“எலேய்… கம்முன்னு இருலே… புதுசா பதவி பட்டம் கிடச்சதும் தலைக்கனம் கூடிடுச்சு போல…” என்றார் கேலியாக.

 

துருவ், “செக்கியூரிட்டி…” எனக் கத்தவும் துருவ்வின் அழைப்பில் அங்கு வந்த செக்கியூரிட்டியிடம், “யாரைக் கேட்டு இவங்கள உள்ள விட்டீங்க… மணு கொடுக்க வரவங்கள மட்டும் தான் எந்த நேரமும் உள்ள வர அனுமதி கொடுக்க சொன்னேன் இல்லயா… இப்படி கண்டவங்களும் வரும் வரை சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்களா?” எனக் கோபமாகக் கேட்கவும் பல வருடங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் கடமையில் இருந்த அந்த செக்கியூரிட்டி ராஜதுரையைப் பற்றி தெரியும் என்பதால் என்ன செய்வது எனப் புரியாமல் பார்க்க,

 

“சொன்னது புரிஞ்சுதா இல்லையா? நீங்க இவங்கள வெளிய அனுப்புறீங்களா இல்ல நானே கழுத்த பிடிச்சு வெளிய தள்ளட்டுமா?” எனக் கோபமாகக் கேட்டான் துருவ்.

 

ராஜதுரை, “யாரலே கழுத்த பிடிச்சு வெளிய தள்ளுவேன்னு சொல்றீய… அம்புட்டு தில்லா… நான் நெனச்சா உன்ன இந்த நிமிஷமே இந்த வேலையில இருந்து தூக்கிருவேன்…” என்றார் ஆவேசமாக.

 

துருவ் அந்த செக்கியூரிட்டியை அழுத்தமான பார்வை பார்க்கவும் தன் வேலைக்கு வேட்டு விழும் எனப் புரிந்து கொண்டவர் ராஜதுரையிடம், “ஐயா… தயவு செஞ்சி வெளிய போயிருலே…” எனத் தயங்கியபடி கூறவும், “எங்க ஐயனையே வெளிய போக சொல்றியாலே?” எனக் கோபமாகக் கேட்டான் மாரி.

 

ராஜதுரை, “எலேய்.. வாலே போலாம்… இந்த ராஜதுரையையே வெளிய போக சொல்றியா? பார்த்துக்குறேன்லே..” எனக் கோபமாகக் கூறி விட்டு வெளியேற, துருவ்வை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றான் மாரி.

 

துருவ், “இனிமே இந்த தப்பு நடக்க கூடாது… இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சி வெளிய நிக்கிறவங்கள ஒவ்வொருத்தரா உள்ள அனுப்பி வைங்க…” என்றதும் சரி எனத் தலையசைத்து விட்டு வெளியேறினார் செக்கியூரிட்டி.

 

ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ராஜதுரை, “எலேய்… அந்த பழனிக்கு ஃபோன போட்டு கேளுடா யாரு இந்த நாய நம்மூரு கலெக்டரா போட்டான்னு… இவன உடனே தூக்க சொல்லுலே..” எனக் கோபமாகக் கூறவும் தன் தந்தை சொற்படி மாரி பழனி என்பவருக்கு அழைத்துப் பேசினான்.

 

மாரி, “அது.. ஐயா…” என இழுக்க, “என்னலே… எதுக்கு இப்போ இழுத்துட்டு இருக்கீய..” என ராஜதுரை கேட்கவும், “மந்திரியே அப்பொய்ன்ட் பண்ணி வந்திருக்கானுங்கய்யா… ஸ்பெஷல் ஆர்டராம்…” என்க,

 

ராஜதுரை, “எப்படிலே இந்த ****சாதிக்கார நாய்க்கு மந்திரி கூடவெல்லாம் சகவாசம் வந்துச்சு…” எனக் கோபமாகக் கேட்க,

 

“எல்லாம் அந்த முத்துராசு மூலமா தான்லே இருக்கும்… அன்னைக்கே அவனையும் போட்டுத் தள்ளி இருக்கணும்…” என மாரி கூறவும் கோபத்தில் பல்லைக் கடித்தார் ராஜதுரை.

 

_______________________________________________

 

துருவ் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் முத்துராசுவின் புகைப்படத்தைக் கையில் எடுத்தவன், “இன்னைக்கு உங்க கனவ நான் நிறைவேத்திட்டேன்… இதுக்காக தான் இத்தனை வருஷம் காத்துட்டு இருந்தேன்… நீங்க கலெக்டர் ஆகி என்னென்ன செய்யணும்னு நினைச்சீங்களோ அத்தனையையும் உங்க இடத்துல இருந்து நான் நிச்சயம் செய்வேன்… இது அம்மா மேல சத்தியம்… இந்த வாழ்க்கை நீங்க கொடுத்தது… நீங்க இல்லைன்னா இந்த துருவ் எப்போதோ மண்ணோட மண்ணா போயிருப்பேன்… உங்களுக்காக என்னால செய்ய முடிஞ்சது இது தான்…” என்றான் கண் கலங்க.

 

பின் அப் புகைப்படத்தை தன் நெஞ்சுடன் சேர்த்து அணைத்தவாறு இருக்கையில் சாய்ந்து கண் மூடினான்.

 

_______________________________________________

 

ஃப்ளாஷ்பேக்

 

“ஆத்தா… ஆத்தா… எந்திரிங்க ஆத்தா… சீமைக்கு கூட்டிட்டு போய் என்னை படிக்க வைக்கிறதா ராத்திரி சொன்னீயலே…” என்றவாறு விடியற் காலையிலேயே தூங்கிக் கொண்டிருந்த அலமேலுவை எழுப்பினான் முத்துராசு.

 

அலமேலு, “எலேய்… எதுக்குலே இம்புட்டு காலங்காத்தால எழுப்புனீய…” என சலிப்பாகக் கேட்கவும், “நீயி தானே ஆத்தா சீமைக்கு கூட்டிட்டு போறதா சொன்னியேலே.. அப்போ அம்புட்டும் பொய்யா…” எனக் கேட்ட முத்துராசுவின் முகம் வாடியது.

 

தன் புதல்வனின் மகிழ்ச்சியை சிதைக்க விரும்பாத அலமேலு, “நெசமா தான்லே… ஆத்தா எதுக்கு உன் கிட்ட பொய் சொல்ல போறேன்… செத்த விடிஞ்சதும் கடைத்தெருவுக்கு போயிட்டு வரலாம்லே… அப்புறம் என் மயேன சீமைக்கு கூட்டிட்டு போய் நல்ல பள்ளியா பார்த்து சேர்த்து விடுறேன்…” எனப் புன்னகையுடன் கூறவும், “ஹேய் நான் படிக்க போறேன்… படிக்க போறேன்… ஐயன் ஆசைப்பட்டபடி பெரிய ஆஃபீஸரா ஆக போறேன்…” எனத் துள்ளிக் குதித்தான் முத்துராசு.

 

பொழுது நன்றாக விடிந்த பின் முத்துராசு தன்னிடமிருந்த ஓரளவு புதிய சட்டையை அணிந்து கொண்டு தன் தாயுடன் கடைத் தெருவிற்கு கிளம்பத் தயாரானான்.

 

வீட்டின் மூலையில் வைத்திருந்த தன் கணவனின் புகைப்படத்தின் அருகில் சென்ற அலமேலு அங்கு வைத்திருந்த தன் கணவனின் கடைசி சொத்தான தன் மாங்கல்யத்தைக் கையில் எடுத்தவர், “நம்ம மயேனுக்காக தான்லே இந்த காரியத்த பண்றேன்… நம்ம மயேனுக்கு உங்க ஆசிர்வாதம் எப்பவும் இருக்கணும்…” என்று அதனைக் கண்களில் ஒற்றிக் கொண்டு முத்துராசுவுடன் கிளம்பினார்.

 

தன் மாங்கல்யத்தை விற்றுப் பெற்ற பணத்துடன் தான் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு முத்துராசுவுடன் சென்னைக்குச் செல்லும் பேரூந்தை நோக்கிச் சென்றார்.

 

திடீரென தூரத்தில் தெரிந்த பேரூந்து தீப்பற்றி எரியவும் முத்துராசுவை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார் அலமேலு.

 

“ஆத்தா…” என முத்துராசு அழ, “ஒன்னும் இல்ல கண்ணா… அழாதேலே… எதுவும் ஆகாது…” என்று அவனை சமாதானப்படுத்திய அலமேலு என்ன நடக்கிறது எனப் புரியாமல் பார்த்தார்.

 

சற்று நேரத்திலே அவ் இடமே கலவர பூமியாகியது.

 

அங்கு நடந்து கொண்டிருந்தது ஒரு சாதிக் கலவரம்.

 

கடைத் தெருவிற்கு வந்திருந்த கீழ் சாதி ஒருவனை ராஜதுரையின் ஆட்களில் ஒருவன் அவனின் சாதியைக் குறிப்பிட்டு மிகவும் கேவலமாகப் பேச, சற்று நேரத்தில் அது வாக்குவாதமாக மாறி கலவரத்தில் முடிந்தது.

 

ராஜதுரையின் ஆட்கள் கீழ் சாதி மக்களை கட்டைகளால் போட்டு அடிக்க, சிலர் தம் அருவாளைக் கொண்டு வெட்ட, அதனைத் தடுக்கத் தான் யாருமே முன் வரவில்லை.

 

கீழ் சாதி மக்களில் பல பேர் காயமடைய, தன் மகனுடன் எங்கிருந்தோ ஓடி வந்த மோகன் என்ற ஒரு சமூக சேவகர் அவர்களைத் தடுக்க முயன்றார்.

 

கலவரம் பெரிதாவதைக் கண்டு அலமேலு முத்துராசுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்லப் பார்த்தார்.

 

ஆனால் கலவரம் பெரிதாகி இருவரும் நடுவில் மாட்டிக் கொண்டனர்.

 

கலவரத்தில் கீழ்சாதி மக்களில் சிலருக்கு உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்க, அவர்களில் நான்கு வயது துருவ்வின் தந்தையும் அடங்கி இருந்தான்.

 

இறந்து கிடந்த தன் தந்தையின் அருகில் அமர்ந்து, “அப்பா எந்திரிப்பா… பயமா இருக்கு… அப்பா… அப்பா…” என துருவ் தன் தந்தை இனி திரும்பி வரவே மாட்டார் என்பது கூட அறியாது அழுது கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த சாதி வெறி பிடித்த மனித ரூபத்தில் இருந்த மிருகமொன்று, ” ****சாதிக்கார நாய்ங்க… நீயி உசுரோட இருந்தா என்ன… செத்தா என்னலே…” என துருவ்வின் நெஞ்சில் காலால் எட்டி உதைக்கவும், “அம்மா….” எனக் கத்திக் கொண்டு தூரச் சென்று விழுந்தான் துருவ்.

 

முத்துராசு, “ஆத்தா… பயமா இருக்குலே… எதுக்கு இவிய அடிக்கிறாய்ங்க…‌ இங்குட்டு இருந்து போலாம்…” என அழ, “என் தங்கம்லே.. அழாதே ராசா… ஆத்தா உன்னை எப்படியாவது வூட்டுக்கு கூட்டிட்டு போறேன்…” என அலமேலு அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போது துருவ்வின், “அம்மா” என்ற கதறல் கேட்டு திரும்பிப் பார்த்தவர் அதிர்ந்தார்.

 

அலமேலு, “எங்குட்டும் போகாதேலே… ஆத்தா வெறசா வந்துடுறேன்… பாவம்லே அந்தப் புள்ள… உனக்கு தம்பி மாதிரி தானே..” என்றவர் முத்துராசு, “ஆத்தா.. போகாதேலே…” என அவரின் சேலையைப் பிடித்து இழுக்க இழுக்க துருவ்வை நோக்கி சென்றார்.

 

ஆனால் அலமேலு துருவ் விழுந்து கிடந்த இடத்தை அடையும் முன்னே, “ஆத்தா…” என்ற முத்துராசுவின் கதறல் கேட்கவும் திரும்பிப் பார்த்தவர், “ஐயோ…. என் மயேன்…” எனக் கதறியவாறு முத்துராசுவிடம் ஓடினார்.

 

ராஜதுரையின் ஆள் ஒருவன் வீசிய கட்டை அங்கு நின்று அழுது கொண்டிருந்த முத்துராசுவின் தலையில் பட்டு அவ் இடத்திலேயே சரிந்து விழுந்தான் அவன்.

 

அலமேலு, “எலேய் கண்ணா… என் ராசா… ஆத்தாவ பயமுறுத்தாதேலே… கண்ண தெறப்பா…” என சுயநினைவற்றுக் கிடந்த முத்துராசுவின் கன்னத்தில் தட்டி அழுதார்.

 

சற்று நேரத்திலேயே போலீஸ் மற்றும் அம்பியூலன்ஸ்கள் அவ் இடத்துக்கு வந்து சேர்ந்தன.

 

போலீஸ் வந்ததும் ராஜதுரையின் ஆட்கள் தப்பித்துச் செல்ல, கலவரம் சற்று அடங்கியது.

 

கீழ் சாதி மக்களின் அழுகுரல்கள் அவ் இடத்தை நிறைத்து இருந்தன.

 

அடிபட்டவர்கள், இறந்தவர்கள் என அனைவரையும் ஏற்றிக் கொண்டு அம்பியூலன்ஸ்கள் அரச மருத்துவமனையை நோக்கிப் புறப்பட்டன.

 

மோகன் என்ற சமூக சேவகரே அங்கு தன் மகனுடன் அனைவருக்கும் உதவியாக இருந்தார்.

 

மருத்துவமனையில் முத்துராசுவை அனுமதித்திருந்த அறையில் அலமேலு, “என் புள்ளைய எப்படியாவது காப்பாத்திருலே… உங்க கால்ல கூட விழுறேன்… உங்கள தான் கடவுளா நம்பி இருக்கோம்லே..” என மருத்துவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, “நீங்க இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தா எங்களால ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது… தயவு செஞ்சு அமைதியா இருங்க… நாங்க எங்களால முடிஞ்ச முயற்சிய பண்றோம்..” என்று விட்டு சென்றார் மருத்துவர்.

 

இன்னொரு அறையில் துருவ்விற்கு பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்க, மருத்துவர் ஒருவர் அங்கு நின்ற மோகனிடம், “அந்தப் பையனோட ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு… உடனடியா சர்ஜரி பண்ணி ஹார்ட மாத்தணும்… இல்லன்னா அந்தப் பையன் பிழைக்கிறது கஷ்டம்…” என்க, “எம்புட்டு செலவானாலும் நான் பார்த்துக்குறேன்லே… உடனடியா ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்… அந்தப் புள்ள பிழைக்கணும்..” என்றார் மோகன்.

 

வைத்தியர், “ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு சார்… அந்த பையனோட பிளட் குருப் ஓ நெகடிவ்… ரொம்ப ரேர்… எங்க ஹாஸ்பிடல் பேங்க்ல கூட அந்த பிளட் குருப்புக்கு மேட்ச் ஆன ஹார்ட் இல்ல… நாங்க மத்த ஹாஸ்பிடல்ஸ்ல சொல்லி பார்க்குறோம்… கிடைச்சா லக்..” என்றார்.

 

இங்கு முத்துராசுவைப் பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் அறைக்கு வெளியே அழுது கொண்டிருந்த அலமேலுவை நோக்கி வர, “டாக்டரைய்யா.. என் மயேன் நல்லா இருக்கான்லே… அவனுக்கு ஒன்னும் இல்லயே…” என அலமேலு தவிப்பாகக் கேட்க, “சாரி… எங்களால முடிஞ்ச முயற்சிய பண்ணோம்… ஆனா அந்தப் பையனோட தலைல அடிபட்டதால அவரோட மூளை இறந்திடுச்சு… இதை ப்ரைன் டெத்னு சொல்லுவோம்… அவரோட மற்ற உடல் பாகங்கள் உயிரோட இருந்தாலும் மூளை இறந்திடுச்சு… அதனால அவரும் இறந்தது போல தான்…” என்க, அவரின் சட்டையைப் பிடித்த அலமேலு, “என்னலே சொல்ற… என் மயேன் செத்துட்டானா… நீயி பொய் சொல்லுறீய… விளையாடுறியாலே… செத்த நேரம் முன்ன தான் என் கூட சிரிச்சி பேசிட்டு இருந்தான் என் மயேன்… அவன நான் சீமைக்கு அனுப்பி படிக்க வைக்க போறேன்லே… அவன் ஐயன் ஆசைப்பட்டது போலவே பெரிய ஆஃபீஸரா வருவான்…” எனக் கதற, “சாரிம்மா… நீங்க மனச தேத்திக்கோங்க…” என மருத்துவர் கூறவும், “எப்படிலே நீயி அப்படி சொல்லலாம்… அவன் என் மயேன்… எனக்குன்னு இருந்த ஒரே சொத்து… அவன இப்படி பொணமா பார்க்கவாலே நான் இம்புட்டு கஷ்டப்பட்டேன்…” என ஆவேசமாகி அழ, சரியாக அங்கு வந்த மோகன், “என்னாச்சு டாக்டர்..” என்கவும் மருத்துவர் நடந்ததை விவரித்தார்.

 

அலமேலு கீழே மடிந்து அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ, மோகனுக்கும் அவரைத் தேற்ற வழி தெரியவில்லை.

 

உலகிலே மிகக் கொடுமையானது புத்திர சோகம்.

 

மோகன் அலமேலுவின் நிலையை எண்ணி வருத்தப்பட, துருவ்வைப் பரிசோதித்த மருத்துவர் அங்கு வரவும், “என்னாச்சு டாக்டர்… ஆப்பரேஷன் பண்ணலாமா… ஹார்ட் கிடைச்சதா..” என மோகன் ஆவலாகக் கேட்க, “சாரி சார்… எந்த ஹாஸ்பிடல்லையும் அந்த பிளட் குருப்புக்கு மேட்ச் ஆன ஹார்ட் கிடைக்கல… இனிமே கடவுள் விட்ட வழி தான்..” எனக் கை விரித்தார் மருத்துவர்.

 

அப்போது தான் மோகனுக்கு சற்று நேரம் முன் மருத்துவர் கூறியது நினைவு வந்து கீழே அமர்ந்து அழுது கொண்டிருந்த அலமேலுவிடம் சென்றவர், “அம்மா… நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதேலே… புள்ளய இழந்துட்டு நிக்கிற நேரத்துல நான் இப்படி கேக்குறது தப்பு தான்… ஆனா எனக்கு வேற வழி இல்ல… உங்க புள்ள வயசு தான்லே அந்த புள்ளைக்கும் இருக்கும்… உசுருக்கு போராடிட்டு இருக்கான்… உங்க புள்ளயோட இதயத்தை அந்தப் பையனுக்கு நீங்க தர ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும்மா…” எனத் தயங்கித் தயங்கிக் கேட்க, 

 

“என்னலே சொல்ற… செத்துட்டான் என் மயேன்… அவன் இதயத்தை கேக்குறீய… அவனுக்கு வலிக்கும்…” என ஒரு தாயாய் யோசித்து அலமேலு அழ, “உங்க புள்ள மூலமா அந்தப் பையன் உயிரோட இருப்பான்மா… அங்க உசுருக்கு போராடிட்டு இருக்குற அந்தப் பையன் மூலமா உங்க புள்ளைய உங்களால பார்க்க முடியும்மா… தயவு செஞ்சி மனசு வைங்க…” என மோகன் வேண்ட, இறந்தும் தன் மகன் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறான் என அலமேலுவிற்கு பெருமையாக இருந்தது.

 

அலமேலு சம்மதிக்கவும் முத்துராசுவின் இரத்த வகையைப் பரிசோதித்து விட்டு அது துருவ்வுடன் பொருந்தவும் முத்துராசுவின் இதயத்தை எடுத்து துருவ்விற்கு பொருத்தினர்.

 

துருவ்விற்கு இங்கு சிகிச்சை நடைபெற மோகனின் உதவியால் முத்துராசுவின் இறுதிக் கிரியைகளை முடித்தார் அலமேலு.

 

தன் மகனுடன் கூடவே அவனின் கனவும் எரிந்து சாம்பலாவதைக் கண்டு கதறி அழுதார் அலமேலு.

 

அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கே மீண்டும் அழைத்து வந்தார் மோகன்.

 

துருவ்வின் சிகிச்சை முடியும் வரை அறை வாயிலிலே கிடந்த அலமேலுவின் சேலை நுனியைப் பிடித்து யாரோ இழுக்கவும் கீழே குனிந்து பார்த்த அலமேலு கிழிந்த சட்டையுடன் உடம்பெல்லாம் அழுக்காக நின்று அலமேலுவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் உயரத்துக்கு குனிந்தவர், “யாருலே நீயி… உன் பேர் என்ன கண்ணா..” என்க, “ஜெய்…” என்றான் அச் சிறுவன்.

 

அலமேலு, “எங்கலே உன் ஆத்தா… வழி மாறி வந்துட்டியா ராசா…” என்க, மறுப்பாகத் தலையசைத்த ஜெய் தூரத்தில் கை காட்டி, “அங்குட்டு ரூம்ல தான் ஆத்தாவ வெச்சிருக்காய்ங்க… எங்க ஆத்தா செத்திடுச்சாம்… எனக்கு பசிக்குது… ஏதாவது திங்க தரியாலே…” என்கவும் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்ட அலமேலு, “என் தங்கமே… உனக்கு நான் இருக்கேன்லே… இந்த ஆத்தா இருக்கேன்… உனக்கு பசிக்குதா… வாலே… நாம கேன்டீனுக்கு போய் ஏதாச்சும் திங்கலாம்…” என்றவர் ஜெய்யை அழைத்துக் கொண்டு கேன்டீன் சென்று அவனின் பசியை ஆற்றினார்.

 

இருவரும் கேன்டீனிலிருந்து திரும்பி வரும் போது துருவ்வின் சிகிச்சை முடிந்திருக்க, “அந்தப் பையன் ரொம்ப நல்லா இருக்கான்… ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சது… ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்… அதுக்கப்புறம் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்…” என மருத்துவர் கூற, “ரொம்ப நன்றி டாக்டர்..” எனக் கை எடுத்துக் கும்பிட்டார் மோகன்.

 

வைத்தியர், “எல்லாம் அந்த கடவுளோட அருள் தான்… நன்றி சொல்றதா இருந்தா இந்த அம்மாவுக்கு சொல்லுங்க… இவங்க மட்டும் இவங்க பையனோட ஹார்ட்ட தர ஒத்துக்கலன்னா இது நடந்து இருக்காது…” என்கவும் அலமேலுவை நன்றியுடன் நோக்கினார் மோகன்.

 

பின் அங்கு வந்த தாதி ஒருவர், “டாக்டர் இந்த மெடிசின்ஸ எடுத்துட்டு வர சொன்னாங்க…” என மோகனிடம் கூறவும் சற்று தள்ளி நின்ற தன் மகனைப் பார்த்த மோகன், “எலேய் முத்துராசு… போய் இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வாலே… நான் போய் டாக்டர பார்த்துட்டு வரேன்…” என்கவும் அவரிடம் வந்தான் மோகனின் மகன் முத்துராசு.

 

அவனின் பெயரைக் கேட்டு கண்கலங்கிய அலமேலு, “கண்ணா.. உன் பேரும் முத்துராசா… என் மயேன் பேரும் அதான்லே… என்ன கண்ணா படிக்கிறீய… எங்க உன் ஆத்தா… எம்புட்டு அழகான புள்ளய பெத்து இருக்கா… இப்பவே இம்புட்டு பொறுப்பா இருக்கியேலே..” என்க, “நான் டென்த் படிக்கிறேன்மா… சென்னைல… லீவுக்கு அப்பாவ பார்க்க வீட்டுக்கு வந்தேன்… எனக்கு அம்மா இல்ல…” என முத்துராசு கூறவும், “எலேய்… நீயி இனிமே என்னை ஆத்தான்னு கூப்பிடுறியாலே… எனக்கு உன்ன பார்த்தா என் மயேன பார்க்குறது போலவே இருக்கு… அவனும் உன்ன மாதிரி தான்லே… ரொம்ப பொறுப்பா இருப்பான்…” எனக் கண்ணீர் சிந்தவும், “சரி ஆத்தா..” எனப் புன்னகையுடன் முத்துராசு கூறவும் அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் அலமேலு.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்