Loading

வள் அவனின் கோபத்தைக் கண்டு மானசீகமாக மனதினுள் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருக்க, “விசயத்த சொல்லிட்டு கெளம்புன்னேன்என வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்தி உறுமினான் பாரிவேந்தன்.

அவனின் கோப வார்த்தைகளில் அதிர்ந்தவள், அவன் கோபத்தை மட்டுப்படுத்த எண்ணி அவன் கரங்களைப் பற்றப்போக, மின்சாரம் தாக்கியதுபோல் அவன் கைகளை உதறி தள்ளினான்.

அதில் நிலைகுலைந்தவளின் கண்கள் நீர்த்துளிகளைச் சுரக்க, “கணேஷ் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்என்றாள். அவளின் குரல் கரகரப்பிலேயே அவளின் வேதனையை உணர்ந்தவனின் மனம் அவளைப் திரும்பிப் பார்க்க எத்தனிக்க, அவனின் அறிவோ கோபத்தை விட மறுத்தது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “எந்த கணேஷ் புள்ள?” என்றான். “நம்ம ராமலிங்கம் தாத்தா பேரன்என்றவள், அவரைப் பற்றிக் கூறி முடித்தவள்,

இப்போ அவரோட வலிக்குத் தான் என்னால மருந்து கொடுக்க முடியும், ஆனா அவர கணேஷ் அடிக்கிறத நிறுத்த உங்கனால தான் முடியும். அதான் உங்கள பார்த்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்என்றாள் மலர்விழி.

சரி, நான் பார்த்துக்கிறேன். அவன் கொஞ்சம் அடங்காம தான் குடிச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கான்னு நினைச்சேன், இவ்ளோ வேலத்தனம் பண்றானா

அவன்! இனி இப்படி நடக்காது, நான் பார்த்துக்கிறேன். நீ கெளம்புஎன்றான் பாரிவேந்தன்.

தேங்க்ஸ்என்றவாறே அவள் அங்கிருந்து கிளம்ப, “எப்புடி வந்த புள்ள?” என்றான் அவளைப் பார்த்துத் திரும்பியவாறே.

நடந்துதான்என அவள் பதிலளிக்க, “இத்தன வெயில்ல நடந்து வந்தியா புள்ள? இத சொல்லணும்னா ஃபோன் பண்ணி இருக்க வேண்டியது தான! இல்லனா சாயந்தரம் அந்தப் பக்கம் தோட்டத்துக்கு வரும்போது சொன்னா போதும்ல. அவ்ளோ அவசரம் என்ன?” எனக் கடிந்துக் கொள்ள,

அவனின் அக்கறை கலந்த பேச்சில் தலையைத் தாழ்த்திக் கொண்டு, “அந்தத் தாத்தாவ பாத்தோனே ரொம்ப மனசு கஷ்டமாகிருச்சு. அதான், நேரா உங்கள பாத்து விசயத்த சொல்லிட்டுப் போகலாம்னுஎன்றவளைப் பார்த்தவன்,

செருப்பு எங்க புள்ள? வெறுங்காலோடயாவா வந்த?” என்றவாறே அவள் அருகில் வந்தான். மணல் சூட்டை தாங்க முடியாமல் அவள் பாதத்தை மாற்றி மாற்றி ஒரு பாதத்தின்மேல் இன்னொரு பாதத்தை வைத்துக்கொண்டு தான் அவனின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.

வரப்பு மேல நடக்கும்போது செருப்பு பிஞ்சு போச்சு, அதான் அங்கயே கழட்டி விட்டுட்டு வெறுங்காலோட வந்தேன்என்க, அவளை முறைத்தவன்,

அவள் முன் அமர்ந்து காலைத் தொடப்போக, அவள் பதறி விலகவும், “செத்த ஒழுங்கா நில்லு புள்ளஎன அதட்டியவன், அவள் பாதங்களைத் தன் கரத்தில் ஏந்த அதில் தடுமாறியவள் அவனின் தோள்பட்டையை ஆதரவிற்குப் பற்றிக் கொண்டாள்.

குத்துகாலிட்டு அமர்ந்திருந்தவன், அவள் பாதத்தின் அடிப்பகுதி சிவந்திருப்பதைக் கண்டு, “அறிவிருக்கா புள்ள! பாரு பாதம் ரெண்டும் செவந்துக் கெடக்குஎன்றவாறே நிமிர்ந்து அவளைப் பார்க்க,

அவளோ குனிந்து அவன் தோள் பற்றியிருந்ததால், இருவரின் முகமும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டன. அவன் கண்கள் அவளின் கண்களோடு கலக்க முயல, அவளின் பின்னல் முன்பக்கம் விழுந்து அவர்களின் சிந்தனையைக் கலைத்தது.

அவள் விலகிக் கொள்ள, எழுந்துக் கொண்டவன், “வா புள்ள, வண்டில கொண்டுப் போய் விடறேன்என அவன் முன்னால் நடக்க,

பரவால்லநா…” என அவள் வார்த்தைகளை முடிப்பதற்குள், அவளைத் திரும்பிப் பார்த்து முறைக்க அவனின் முறைப்பில் அமைதியானாள் மலர்விழி.

இரண்டடி எடுத்து வைத்தவன், பின் தன்னுடைய செருப்பைக் கழட்டி அவள்புறம் நகர்த்தியவன், “இதப் போட்டுட்டு நட புள்ளஎன்றவன், வெறுங்காலில் நடக்கத் துவங்கினான்.

உங்களுக்கு கால் சுடும்ல…” என அவள் இழுக்க, “இந்த சூடெல்லாம் பாத்தா விவசாயம் பண்ண முடியுமா புள்ள? நம்ம மண்ணு தான, சுட்டாலும் பரவால்ல. எனக்குப் பழகிப் போன ஒன்னுதான்என்றவாறே அவனது வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றான்.

அவனது செருப்பின் அளவு அவளது பாதங்களுக்குச் சற்று பெரியதாக இருக்க, சற்று நடக்க சிரமப்பட்டுக் கொண்டே மெதுவாக அவள் நடந்துவர, தன் வண்டியை இயக்கியவன் அவள் வருகைக்காகக் காத்திருந்தான்.

அவள் அவன் அருகில் வந்து சற்று தயக்கத்துடன் வண்டியில் ஏறி அமர, அங்கு வேலை செய்துகொண்டிருந்த சிலர் தங்களைப் பார்ப்பது போலவே தோன்ற, இருவருக்குமிடையே சற்று இடைவெளிவிட்டே அமர்ந்தாள்.

கண்ணாடி வழியே தெரிந்த அவளின் முகபாவனைகளைக் கண்டு புன்னகைத்தவாறே, வண்டியை இயக்கினான் பாரிவேந்தன்.

ஹரி குழப்பத்தோடு முற்றத்தை தனது நடையால் அளந்துக் கொண்டிருக்க, ‘இவன் ஏன் இப்போ குட்டிப் போட்ட பூனையாட்டம் ஹால அளந்துக்கிட்டு இருக்கான்என நினைத்தவாறே அவன் எதிரில் சென்று நின்றாள் இந்திராகாந்தி.

அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் நடப்பதையும் நிறுத்தாமல் நடந்து கொண்டிருக்க, “இப்போ எதுக்குடா எரும, இப்படி வீட்ட அளந்துக்கிட்டு இருக்க?” என்றாள்.

அவன் பதிலளிக்க வாய்திறக்கும் முன், வெளியே வண்டி சப்தம் கேட்க, இருவரும் வெளியே வந்தனர். அங்கு அவன் கண்ட காட்சி ஆச்சரியமூட்டியது.

பின்னே, மலர்விழி இத்தனைநாள் ஒருவனை பார்த்தும் பார்க்காததுபோல் கடந்து சென்றுக் கொண்டிருந்தவனுடன் ஒன்றாக வண்டியில் வந்து இறங்கினால் அவனின் சிறு இதயம் தாங்குமா என்ன!

வண்டியிலிருந்து இறங்கியவள், “தேங்க்ஸ்என்றவாறே வீட்டினுள் நுழைய, ‘ஒரு வார்த்தை வீட்டுக்குள்ள கூப்டறாளா பாரு!’ என மலரை செல்லமாய் கடிந்துக் கொண்டான் பாரி.

அப்பொழுது, அங்கு வந்த குணவதி, பாரிவேந்தனை பார்த்துவிட்டு, “வாப்பா பாரி, ஏன் வந்துட்டு வாசலோட திரும்பிப் போற. உள்ள வந்து காஃபி குடிச்சுட்டு போகலாம் பாஎன்றார்.

மலரோ, “ம்மா, அவருக்குப் பல வேலைகள் கெடக்கும், நம்ம வீட்ல காஃபி குடிக்கிறதுக்குலாம் அவருக்கு நேரமிருக்குமா? புது மாப்பிள்ளை, அவசரமா போறவர ஏன் தடுக்குறீங்க?” என்றாள்.

ஆரம்பிச்சுட்டா டாகடவுளே, என்னை ரொம்ப சோதிக்காதய்யா!” என வாய்விட்டுப் புலம்பியவன், அவளின்அப்படியே திரும்பிப் போய்ருஎன்ற மறைமுக எச்சரிக்கையை ஏற்று, “இல்ல த்தை, தோட்டத்துல மோட்டார் போட்டு விட்ருக்கேன். போய் தண்ணி கட்டணும், சாயந்தரம் வரேன் த்தைஎன்றவாறே அப்படியே வண்டியைத் திருப்பிக் கொண்டு செல்ல,

ஏன் டி வீட்டுக்கு வந்தவங்கள வானு கூப்டலனாலும் பரவால்ல. உள்ள வர்றவங்கள அப்படியே வாசலோடயே அனுப்பி வைக்கற மாதிரியா பேசுவ?” என்றார் சற்று கோபத்துடன்.

அம்மா, இந்த வீட்டுக்குள்ள நான் இருக்கணும்னு நீ நினைச்சா அமைதியா உள்ளப் போயிரு. நான் என்ன பண்றேன், ஏது பேசறேன்னு தெரிஞ்சு புரிஞ்சு தான் பேசறேன். போதுமா!” என்றாள் மலர்விழி.

போதும் டி யம்மா போதும். எல்லாம் உங்க அப்பன் கொடுத்து வளர்த்த செல்லம் தான், இப்போ அந்தச் செல்லமே அவர காவு வாங்குது. நான் சொல்றத யாருதான் கேட்கறா!” என்ற அவர் புலம்பலைக் கேட்டு,

சாமி கிட்ட இப்படி பேசாதனு எத்தனவாட்டி உன்கிட்ட சொல்றது? உள்ளப் போய் வேலயப் பாருஎன அதட்டலான குரல் ஒன்று ஒலிக்க, திரும்பிப் பார்க்காமல் தனதறைக்கு சென்று விட்டாள் மலர்விழி.

அவ பேசறதுக்கு எல்லாம் இப்படி என்னை அதட்டுறதால தான் இன்னிக்கு அவ இத்தன வீம்பு புடிச்சுக்கிட்டு கெடக்கறா. அப்பனும் மவளும் எக்கேடோ கெட்டுப் போங்க, என்னைய ஆள விடுங்க சாமிஎன்றவாறே அவர் அடுக்களைக்குள் நுழைய, பாவம் இந்திராவும் ஹரிஹரனும் தான் இந்தக் குடும்ப சண்டையின் இடையே மாட்டிக் கொண்டு பேந்த பேந்த முழித்தனர்.

அவர்களைக் கண்ட சுந்தரபாண்டியன், “முதல் நாள் முகாம் எப்படி போச்சுங்க தம்பி?” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர, அவருக்கு எதிரே அமர்ந்த ஹரிஹரன், “பரவால்ல அங்கிள், பாரி பிரதர் கூட இருந்து உதவி பண்றதால கொஞ்சம் எங்களுக்கும் வேல ஈசியா இருக்குஎன்றான் புன்னகை முகமாய்.

நாளைக்கும் நம்ம வூர்லயேவா தம்பி?” என வினவ, “இல்லங்க அங்கிள், நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகணும். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒவ்வொரு கிராமத்துக்கா முகாம் போடலாம்னு இருக்கோம்என்றான் ஹரி.

சரிங்க தம்பிஎனும்போதே அடுக்களையிலிருந்து பாத்திரம் உருளும் சப்தம் கேட்க, மெலிதாய் புன்னகைத்தவர், “இங்க கோபத்த காட்ட முடியாம சட்டி, பானைல கோபத்த காட்டிட்டு இருக்கா. உள்ள போய் என்னனு பாத்துட்டு வரேன் தம்பிஎன்றவாறே அவர் எழுந்து செல்ல,

 

ரெண்டு வீட்லயும் இப்படி பாத்திரம் உருண்டா பாத்திரம் வாங்கவே இவரு சம்பாதிக்கணும் போலயேஎன ஹரிஹரன் புலம்ப, “அவரோட சம்பாத்தியத்த பத்தி அப்பறம் பேசிக்கோ டா. இப்போ வா, மலர சமாதானம் பண்ணுவோம்என்றவாறே அவனை இழுத்துச் சென்றாள் இந்திராகாந்தி.

மதிய உணவைச் சமைத்துக் கொண்டிருந்த குணவதியின் அருகில் சென்று நின்றவர், “கோபமா மா?” என்றார். அவரைக் கண்டு முகத்தைச் சிலுப்பிக் கொண்டவர், “உங்க மேலயும் உங்க மவ மேலயும் கோபப்பட எனக்கென்ன அருகதை இருக்கு? எக்கேடோ கெட்டுப் போங்கஎன மூக்கை உறிஞ்சியவாறே குணவதி சமையல் செய்துக் கொண்டிருக்க,

அவ சின்னப்புள்ள குணவதி, ஏதோ கோபத்துல அப்படி பேசறா. அதுக்கு நீயும் இப்படிலாம் பேசலாமா?” என்றார் தன் மகளை விட்டுக் கொடுக்காமல்.

இப்படியே அவளுக்கு நீங்க செல்லம் கொடுக்கிறதால தான் அவ உச்சில ஏறி ஆடறா. எங்க என் பேச்ச அப்பனும் மவளும் என்னிக்குத் தான் கேட்டுருக்கீங்க?” என முனகிக்கொண்டே தாளித்துக் கொண்டிருக்க, எண்ணெய் அவர் கையில் பட்டுவிட வெடுக்கெனக் கையை உதறினார் குணவதி.

பாத்து செய்ய மாட்டியா?” என்றவாறே அவர் கையில் இருந்த கரண்டியை பிடுங்கிக் கொண்ட சுந்தரபாண்டியன், “செத்த நேரம் தள்ளி நின்னு எங்கள அரைச்சுக்கோ. அதுவரை நான் சமைக்கறேன்என்றவாறே வேஷ்டியை எடுத்து மடித்துக் கட்டிக் கொண்டு சட்டையைக் கழற்றி குணவதியின் கையில் திணிக்க,

அட அத நான் பண்ண மாட்டனாயா? நீங்க தான் இதெல்லாம் பண்ணனுமா!” எனக் குறைபட்டார் குணவதி.

ஷ்…” என்றவர், “என் சாமிக்காக நான் பண்றேன்என்றவாறே அவர் சமையலைச் செய்யத் தொடங்க, குணவதியின் கண்களில் நீ்ர் தளும்பின.

எவ்ளோ பெரிய மனுஷன், அவளுக்காக வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு சமைக்கறாரு, ஆனா அவளுக்கு திமிரு உச்சாணி கொம்புல ஏறிருச்சுஎன மனதினுள் தன் மகள்மேல் கோபப்பட,

என் சாமிய மனுசுக்குள்ளயே திட்டியாச்சா?” என்றார் புன்னகையுடன். “க்கும். அவள அப்படியே நீங்க திட்ட விட்டுட்டாலும். அவ பேசாதப்பவே இவ்ளோ பண்றீங்க, அவ மட்டும் உங்க கூட பேசிட்டா அப்பறம் என்னனென்ன பண்ணுவீங்களோ!” என்றாலும் தன் மகள் தன்னவருடன் பேசும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டுதான் இருந்தார்.

என் சாமி கோவிச்சுக்கிட்டு எங்கப் போய்ற போறா குணவதி! எல்லாம் பேசுவாஎன்றவாறே வாழைக்காய் பஜ்ஜி செய்யக் கடலை மாவை தேடி எடுக்க,

ஏங்க யாழு எப்படிங்க இருக்கா? கண்ணால வேலைலாம் எப்படி போகுது?” என்றார் குணவதி.

பத்திரிகை எல்லாம் வச்சாச்சு மா. யாழுக்கென்ன சந்தோசமா தான் இருக்காஎன்றவர், “ஏன் குணா, என்மேல கோபமேதும் இல்லயே?” என்றார் சற்று தயக்கத்துடன்.

அவரின் கேள்வியில் பதறிப் போனவர், “என்னங்க இது, பெரிய வார்த்தைலாம் பேசிக்கிட்டு! நான் ஏன் உங்கமேல கோபப்படப் போறேன், கோபப்பட வேண்டிய காலத்துலயே கோபப்படாதவ நான். இப்போ என்னத்துக்கு கோபப்படணும்?” என்றார் குணவதி.

இல்ல, யாழுக்கு மூத்தவ மலரு. அப்படியிருக்க, ஒரு தகப்பனா நான் மலருக்குத் தான் கண்ணாலம் மொதல்ல முடிக்கணும். ஆனா, காலமும் நேரமும் யாழுக்கு அமைஞ்சவுடனே கண்ணால தேதி குறிச்சதால உனக்கு ஏதும் வருத்தமா குணா?” என்றார் தயக்கத்துடன்.

யாழுவும் நமக்குப் பொண்ணு தானங்க. என் வயித்துல பொறக்கலனாலும் உங்க ரத்தம்ங்க அவ, ரெண்டு புள்ளைகள்ள யாருக்கு மொதல்ல நேரம் கூடி வருதோ அவங்களுக்கு கண்ணாலம் பண்றதுல என்ன தப்புங்க இருக்கு! அதுவும் இல்லாம, மலரு இப்போதான் டாக்டர் படிப்ப முடிச்சுருக்கா. அவக்கிட்டப் போய் இப்போ கண்ணால பேச்ச எடுக்க முடியாதுல்லங்கஎன்றார் குணவதி.

அவரின் வார்த்தைகள் அவருக்கு நிம்மதியைக் கொடுத்தன. இதுவே கமலமாக இருந்தால், ஊரே வேடிக்கைப் பார்க்குமளவிற்கு பெரிய சண்டையை இழுத்திருப்பாள். குணவதியின் இந்தக் குணம்தான் அவரை இந்தளவு இழுத்துக் கொண்டு வந்துவிட்டிருந்தது.

இல்ல மா, பாரிய உனக்குப் பிடிக்கும். மருமவனா வரணும்னு நீயும் எதிர்பார்த்திருப்பல்ல, இப்போ யாழுக்கு பேசி முடிச்சதால…” என அவர் முடிக்காமல் குணவதியை பார்க்க,

இப்பவும் பாரி என் மருமவன் தாங்க. யாழுவும் நம்ம மவ தானங்க!” என்றாலும் அவர் மனதில் இந்த ஏக்கம் இருந்தது என்னவோ உண்மை தான். பாரிவேந்தன் படிப்பறிவு இல்லை என்றாலும் அவனின் திறமைக்கும், அன்புக்கும் எந்தவிதத்திலும் தன் மகளுக்குக் குறைந்தவனில்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தார்.

ஆனால் தனது மகள் அவனைக் கண்டாலே ஒதுங்கிச் செல்வதைக் கண்டு, தனது மகளுக்குப் பிடிக்கவில்லை எனும்போது தனது விருப்பத்தை அவள்மேல் திணிக்க விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார்.

யாழினிக்கும் பாரிக்கும் நிச்சயம் பேச, எப்படியோ ஒரு வகையில் பாரி தங்களது மருமகன் ஆவதே சந்தோஷம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் குணவதி.

சமையலை முடித்தவர், “நான் கெளம்புறேன் குணா, சாமிய கூப்பிட்டு சாப்பாடு போடு, நேரமாச்சு பாருஎனக் கிளம்ப, “ஏங்க நீங்க ஒரு வாய் சாப்பிட்டுட்டு போகலாம்லஎன்றார் குணவதி.

இல்ல மா, காலைலயே இங்க தான சாப்டேன். இப்போ அங்க சாப்ட்டுக்கறேன், இல்லனா கமலா கோபப்படுவாஎனும்போது குணவதியின் முகம் சுருங்கிப் போனது.

எத்தனை வருடங்கள் ஆனாலும், தனது கணவன் இன்னொருத்திக்கும் சொந்தமானவன் என்ற உண்மை கசக்கத் தானே செய்யும். சட்டெனத் தனது முகபாவனைகளை மாற்றிக் கொண்டவர், “சரி, பாத்து போய்ட்டு வாங்கஎன்க,

அவரின் நொடிநேர மாற்றத்தைக் கண்டுக் கொண்டவர், “ரெண்டு வாய் சோறு போடு. அப்புறம் அங்க போய்ச் சாப்டுக்கறேன்என்க, அவரின் கூற்றில் முகம் மலர்ந்தாலும்,

பரவால்லங்க. நீங்க அங்க போய்ச் சாப்பிடுங்க, இல்லனா அக்கா உங்ககூட சண்டைதான் போடுவாங்கஎன்றார் குணவதி.

அத நான் பாத்துக்கிறேன், நீ சாப்பாடு எடுத்து வைஎன்றவர் அங்கயே அமர்ந்துக் கொள்ள கொஞ்சமாகச் சாதம் எடுத்து வைத்தார் குணவதி.

சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்பியவர், “பிள்ளைகள கூப்பிட்டு சாப்பாடு போடு மாஎன்றவர், அங்கிருந்து செல்ல, அவர் சென்றபின் தான் தன் அறையை விட்டு வெளியே வந்தாள் மலர்விழி.

அதன்பின் மதிய உணவைச் சாப்பிடும்போது, முதல் வாய் உணவை எடுத்து வைக்கும்போதே அதன் சுவையில் அதனை யார் செய்திருப்பார்கள் என்றுணர்ந்த மலர்விழி தனது தாயை பார்த்தாள்.

அவரோ, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து இந்திராவிடம், “இன்னும் கொஞ்சம் சாதம் வச்சுக்கமாஎன்றவாறே மற்றவர்களுக்கும் பரிமாற எதுவும் பேசாமல் உண்டு முடித்தாள் மலர்விழி.

எப்பொழுதும் உண்பதைவிட சற்று அதிகமாகவே அன்று உணவருந்தியிருந்தாள் மலர்விழி. தனது தந்தையின் சமையல் என்றால் அவளுக்கு அவ்வளவு விருப்பம். பல வருடங்கள் கழித்து அவரின் கைப்பக்குவத்தில் உண்பதால் சற்று அதிகமாகவே உள்ளிறங்கி இருந்தது.

மதிய உணவிற்குப் பின் அனைவரும் சற்றுநேரம் ஓய்வெடுக்கச் சென்றனர். மலர்விழியோ தனதறையில், பாரியின் நினைவலைகளோடு உறங்காமல் விழித்திருந்தாள்.

இங்கு பாரிவேந்தனின் இல்லத்திலோ, திண்ணையில் அமர்ந்திருந்த ராமாயி அப்பாயி, தெருவையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததார்.

மருமவளே, இன்னும் உன்ற மவன காணோம். மதிய சாப்பாட்டுக்கு வரேனு தான சொல்லிப்புட்டுப் போனான்என இத்தோடு பத்துமுறைக்கும் மேல் கேட்டிருக்க, உள்ளே இருந்து வெளியே வந்த ரேவதி,

வந்துருவான் த்த. நீங்க ஏன் இவ்ளோ பரபரக்குறீங்க? ஏதாவது அவன்கிட்ட சொல்லணுமா?” என்றார்.

நான் சொல்ல என்ன கெடக்கு, எல்லாம் அவன்தான் சொல்லணும்என்க, “என்னத்த சொல்றீங்க, அவன் சொல்லணுமா! என்ன சொல்லணும்?” என்றார் ரேவதி குழப்பத்துடன்.

அதெல்லாம் உனக்குப் புரியாது, நீ போய் வேலயப் பாருஎன்றவாறே தனது பேரனின் வருகைக்காய் காத்திருக்கத் தொடங்கினார் ராமாயி அப்பாயி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பாட்டி செம.❤️❤️❤️.மலர் அப்பா பாசம் செம.பாரி மலர் காதல் சூப்பர்.

    2. பாட்டி சூப்பர்.🥰🥰🥰 பாரி ❤️ மலர் சூப்பர்