ஐந்து நட்சத்திர குழுப் பட்டாளம் தங்களது சேவையை முதன்முதலாக அவர்கள் ஊரிலேயே தொடங்கினர்.
ஊர் மந்தையில் அரசமரம் ஒன்றிருக்க, அதன் நிழலில் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. மருத்துவமனையிலிருந்து இரு செவிலியர்கள் உடன் வந்திருந்ததால் அவர்களது பணி இன்னும் இலகுவானது.
வெள்ளை நிற கோட் உடுத்தி, டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியவாறு உட்கார்ந்திருந்தவளை சற்று தள்ளி நின்றிருந்த தனது ராயல் என்பீல்டில் அமர்ந்தவாறே கண்களால் பருகிக்கொண்டிருந்தான் பாரிவேந்தன்.
பாரிவேந்தனின் பார்வையை உணர்ந்துதான் இருந்தாள் மலர்விழி. அவளது இதழ்களோ, ‘அடுத்த வாரம் கல்யாணத்த வச்சுக்கிட்டு இங்க என்ன வேல பண்ணிக்கிட்டு இருக்க மாமு?’ என அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.
அவளின் முக அசைவுகளை வைத்தே அவளது எண்ணவோட்டத்தை உணர்ந்த ஹரிஹரன், “பாரி பிரதர், அப்படியே உங்க வருங்கால மனைவியையும் கூட்டிட்டு வந்திருந்தா சும்மா உக்காந்திருக்கிற நேரத்துல அவங்க கூட கடல போடலாம்ல” என்றான் நக்கலாய்.
அதற்குப் பதில் அளிக்காமல், மலர்விழியை பார்த்தான் பாரிவேந்தன். அவனின் பார்வையை எதிர்நோக்காமல் தலையைக் குனிந்து கொண்டவள்,
“எதுக்கு, நீ சைட் அடிக்க யாழுவ கூட்டிட்டு வரச் சொல்றியா?” என அடிக்குரலில் மலர் அவன் காதை கடிக்க, “ப்ச், ஃபிளவர் நான் நல்ல எண்ணத்துல சொன்னா கூட நீ தப்பா புரிஞ்சுக்கிற பாரு. அடுத்த வாரம் யாழு கூட கல்யாணத்த வச்சுக்கிட்டு என் பிரண்ட்ட சைட் அடிச்சுட்டு இருக்காரு. தப்பில்ல, அதான் அப்படி சொன்னேன், பக்கத்துல யாழு இருந்தா அவ அக்காமேல கண்ணு போகாதே, அந்த நல்லெண்ணம்” என இளித்துவைக்க, அவள் தான் பத்ரகாளி ஆனாள்.
“மூடிட்டு வேலய பாரு” என உறுமியவள், அங்கிருந்து எழுந்து செல்ல, “என்ன டி பட்டுனு இப்படி சொல்லிட்ட, இத சென்சார் கட் பண்ணுங்க டா மொதல்ல” என ஹரிஹரன் கூறியவாறே, பக்கத்தில் பார்வையாலே காதல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த செந்திலிடம், “டேய், வந்த பேஷண்ட்ஸ்ஸ பாருங்க டா. அப்புறம் நீங்க பேமிலி பிளான் பண்ணுவீங்களாம்” என்றான்.
“இந்த குட்டி யானை எங்க போனா?” என்றவாறே இந்திராவை தேட, அவளோ ஏதோ சிந்தனையில் நகத்தைக் கடித்துக் கொண்டே இருக்க, “இவ, ஏன் இப்போ இவ்ளோ டென்சனா இருக்கா?” எனப் புலம்பியவாறே அவள் அருகில் செல்லப் போக, அந்நேரத்தில் பாரிவேந்தன் இந்திராவை அழைத்தான்.
அவன் அழைத்தவுடன் புன்னகை முகமாய் அவள் அவனை நோக்கி நகர, “எதுக்கு இப்போ தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியற மாதிரி பிரகாசமாகறா?” என்ற யோசனையிலேயே அங்குப் பார்த்தான்.
பாரிவேந்தனின் அருகே நின்றிருந்தவன் ஒரு பாலிதீன் பையை நீட்ட அதனை வாங்கி இந்திராவிடம் கொடுத்தான் பாரிவேந்தன்.
“தேங்க்ஸ் ண்ணா” என்றவாறே அந்தப் பையை வாங்கிக் கொண்டு மரத்தடிக்கு வர, அவளது கையில் இருந்த பையைப் பிடுங்கிக் கொண்ட ஹரிஹரன், “என்ன குட்டியானை இது?” என்றவாறே அதனைப் பிரிக்க, உள்ளே கமகமக்கும் மட்டன் பிரியாணி வாசம் ஆளைத் தூக்கியது.
“அடிப்பாவி! எங்கள விட்டுட்டு பிரியாணி துன்றியா நீ?” என அவன் முறைக்க, “அது எனக்கு டா எரும, ஒழுங்கு மரியாதையா கொடுத்துரு” என இருவருக்கும் அந்த பிரியாணியால் மோதல் ஏற்பட்டது.
ஊர் மக்களுக்கு இலவச முகாம்பற்றி ஏற்கெனவே பாரி தனது ஆட்கள்மூலம் தெரிவித்திருக்க, காலை நேரமென்பதால் ஒரு சிலர் வந்திருந்தனர்.
“டேய் எருமைங்களா, ஒழுங்கா வந்தவங்கள செக் பண்ணுங்க. அப்புறம் சண்டை போடுவீங்களாம்” என்றாள் மலர்விழி.
“பிரியாணி ஃபிளவர்” என அவன் முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு கூற, “ஏதாவது சொல்லிறப் போறேன், இந்து இப்போ ஒழுங்கா வேலய பாக்குறியா இல்லயா?” என்றாள் மலர்விழி.
“சாரி டி, அம்மா வீட்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு நான்வெஜ் செய்யக் கூடாதுனு சொன்னதால தான் பாரி அண்ணா கிட்ட வெளிய வாங்கிட்டு வரச் சொன்னேன், உனக்குத் தான் தெரியும்ல. எனக்கு பிரியாணி சாப்டாம இருக்க முடியாதுனு” என அவள் உதட்டைப் பிதுக்க,
“உன்னை!” எனத் தலையில் அடித்துக் கொண்டவள், “அத அப்புறம் சாப்டு, இப்போ வந்தவங்களுக்கு ஒழுங்கா செக்கப் பண்ணு” என்றவள்,
“டேய் கரிச்சட்டி, இன்னொரு தடவை என்னை டென்சன் பண்ண அப்புறம் விஷ ஊசி தான்” என மிரட்டியவாறே தன்முன் அமர்ந்திருந்த பாட்டியிடம், அவரது உடல்நலனை பற்றி விசாரிக்கத் தொடங்கினாள்.
அவருக்கான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தவள், “வேளா வேளைக்கு ஒழுங்கா மாத்திரை போடணும் பாட்டி” என்க, அந்த பாட்டியோ “ஏ தாயி, நீ நம்ம சுந்தரபாண்டியனோட ரெண்டாவது சம்சாரம் மவ தான?” என்றது.
பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள், “ஆமா பாட்டி” என்றவாறே கையில் இருந்த நோட் பேட்–ல் கவனத்தைச் செலுத்த, “உனக்கு இளையவ தான அந்த கமலத்தோட புள்ள?” என அந்த பாட்டி கேட்டுவைக்க,
ஹரிஹரனோ, “ஃபிளவர் கிட்ட அடி வாங்காம போகாது போலயே இந்த கெழவி!” எனப் புலம்பினான்.
“அவ மூத்தவளா இருந்தா என்ன, இளையவளா இருந்தா என்ன பாட்டி?” எனச் சற்று கடுப்பாகப் பதிலளிக்க, “மூத்தவ இருக்கிறப்ப இளையவளுக்கு கண்ணாலம் பண்றது சரிப்பட்டு வராதுனு கேட்டுப்புட்டேன். அப்புறம் நாளைக்கு உனக்குக் கண்ணாலம் பண்றப்போ பிரச்சனையாகுமேனு கேட்டேன். நீ ஏன் இப்படி மூக்கு செவக்கிற” என்றவர்,
“இங்க எல்லாம் மொறைப்படி தான் நடக்குதாக்கும், நமக்கெதுக்கு வம்பு” எனத் தாவக்கட்டையை தோளிற்கு மேல் சிலுப்பிக் கொண்டு கிளம்ப,
“ஆரம்பமே அமர்க்களமா இருக்கே” என்றாள் இந்திரா. மலர்விழியோ அமைதியாய் அடுத்து இருந்தவரைப் பார்க்கத் தொடங்க, இதனையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாரிக்கு அந்த பாட்டியின் மேல் கோபமெழுந்தது.
ஆனால் அதனை வெளிக்காட்ட முடியாத நிலை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அங்கு அதற்குமேல் நிற்க முடியாமல் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்றான்.
முகாமிற்கு வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர் வயதோகிதர்கள் தான். நண்பகல் வரை வந்த அனைவருக்குமே என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து, சாதாரண உடல்நல பிரச்சினை என்றால் மாத்திரையும், தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
வந்திருந்த ஒன்றிரண்டு பேரும் கிளம்பியிருக்க, அங்கு நண்பர்களும் செவிலியர்களும் மட்டுமே இருந்தனர்.
நண்பர்கள் அரட்டை அடிக்க ஆரம்பிக்க, அப்பொழுது தான் ஒரு பெரியவர் இடுப்பில் கோமணத்தை மட்டும் கட்டியவாறு, வேஷ்டியை தோளில் போட்டுக் கொண்டு அங்கு வந்தார்.
“ஏன் தாத்தா, அந்த வேஷ்டிய இடுப்பில கட்டிக்க வேண்டியது தான?” என்றான் ஹரிஹரன்.
“அழுக்காகிரும் தம்பி” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர, அவர் எதிரில் அமர்ந்த மலர்விழி, “இவ்ளோ வெயில்ல உடம்புல துணி இல்லாம சுத்துனா உடம்பு என்னத்துக்கு ஆகறது தாத்தா, முதல்ல அந்த வேட்டிய எடுத்து இடுப்புல கட்டுங்க” என்றாள்.
அவரும் அதனை இடுப்பில் கட்டிக் கொண்டு, “ஆடு மேய்க்க போறப்ப காடுகழனியா அலைய வேண்டிக் கெடக்கும் தாயி, வேட்டி அழுக்காகிருச்சுனா துவைக்க முடியாதே” என்றவரைப் பார்த்தால் பரிதாபம் தான் தோன்றியது.
வயதோகிதத்தின் காரணமாகத் தோள் சுருக்கமடைந்திருக்க, விலா எலும்புகளை எண்ணிவிடலாம் போலும். எலும்போடு தோள் ஒட்டிஉறவாட, சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போல் தோற்றமளித்தார்.
அவர் யாரென ஞாபக அடுக்கில் அவள் நினைவுக்குக் கொண்டுவந்து, “தாத்தா, நீங்க நம்ம கணேஷோட தாத்தா தான?” என வினவினாள் மலர்விழி.
“ஆமா தாயி, என் பேரன உனக்குத் தெரியுமா தாயி?” என்றார் அந்த முதியவர். அவ்வளவாக அவன் பழக்கம் இல்லை என்றாலும், சிறுவயதில் அவளுடன் ஒன்றாகப் படித்தவன் என்ற முறையில் நினைவிருக்க,
“தெரியும் தாத்தா, கணேஷ் என்ன பண்றான் தாத்தா? இந்த வயசுல நீங்க ஆடு மேய்க்கணுமா?” என்றாள் மலர்விழி.
அவள் யாரெனக் கூர்ந்துப் பார்த்தவர், அவளின் முக ஜாடையை வைத்து, “நம்ம குணவதியோட மவளா மா நீ?” என்றார்.
“ஆமா தாத்தா” என்றவாறே அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள். “எங்க மா, உன்னோட படிச்சவன் தான என் பேரன், ஆனா உருப்படாம போய்ட்டான். இந்நேரம் எந்த டாஸ்மாக் கடைல குடிச்சுட்டு உருண்டுட்டு கெடக்கறானோ?” என்றார்.
“நீங்க அவன கண்டிச்சு வைக்க வேண்டியது தான தாத்தா?” என்றவள், “இனி ஆடு மேய்க்கறேனு வெயில்ல அலையாதீங்க தாத்தா” என்றவாறே அவரது முதுகைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
முதுகு முழுவதும் வரிவரிகளாய் தழும்போடு காயங்கள் இருக்க, “என்ன தாத்தா இது?” என்றாள் மலர்விழி.
வலியோடு புன்னகைத்தவர், “எல்லாம் அவன் அடிச்சது தான் தாயி, என்ன பண்ண. அப்பன், ஆத்தா இல்லாத புள்ளைனு கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்தேன், ஆனா இப்போ அவன் தினமும் குடிச்சுட்டு வந்து அடிப்பான். ஆடு மேய்ச்சாவது கஞ்சி குடிக்கலாம்னு பாத்தா, கைல காசு இல்லனா ஆட்டத் தூக்கிட்டுப் போய்ச் சந்தைல வித்துப்புட்டு மொடா குடி குடிப்பான். அவன் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா தாயி?” என்றார்.
அவரின் இறுதி வாக்கியத்தில் உறைந்துப் போயினர் நண்பர்கள். “அவன் யாருனு சொல்லுங்க தாத்தா, ரெண்டு அடி போடணும் அவன” என ஹரிஹரன் ஆவேசமாய் எழ,
“அச்சோ டாக்டர் தம்பி, அப்படி ஏதும் பண்ணிறாதீங்க. அவன் அடிச்ச அடில என் பொண்டாட்டி என்னைவிட்டு போன வருஷமே போய்ச் சேந்துட்டா, என் காலமும் முடியப் போகுது. அப்படியே போய்ச் சேர்ந்துட்டா அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும், நீங்க ஏதாவது அவன சொல்லப் போயி உங்கள அவன் ஏதும் பண்ணிறப் போறான் தம்பி. என் பேரன் தான் இருந்தாலும், அவன் பொல்லாதவன் தம்பி” என்றார் அந்த முதியவர்.
“அதுக்காக அவன்கிட்ட தினமும் அடி வாங்குவீங்களா தாத்தா? ஊர்காரங்க ஒன்னும் அவன கேட்கமாட்டாங்களா?” என்றான் ஹரிஹரன் கோபமாய்.
“அடி வாங்கும்போது கத்துனா அவன் இன்னும் அடிப்பான்னு கண்ண மூடிக்குவேன் தம்பி, பழகிப் போச்சு. வலி தெரியாம இருக்க ஏதாவது மாத்திர, மருந்து இருந்தா கொடுங்க தம்பி” என்றவரின் வேஷ்டியிலிருந்து அரளி விதைகள் கீழே விழுந்தன.
அதனைக் கண்டு பதறிய மலர்விழி, “என்ன தாத்தா இது? அரளி விதைய வேட்டில முடிஞ்சு வச்சுக்கிட்டு?” என்றாள் கோபமாய்.
“முடியலனா அரைச்சுக் குடிச்சுட்டு அவ போன இடத்துக்கே போகலாம்னு தான் பறிச்சேன். ஆனா, இவன விட்டுட்டும் போக முடியல தாயி, என்ன இருந்தாலும் அவன் என் ரத்த வாரிசு. நான் போய்ட்டா அவனுக்குனு யார் இருக்கா சொல்லு” என்றவரின் கண்கள் கலங்க, அதனைத் துடைத்துக் கொண்டார்.
அந்தப் பெரியவரின் நிலை கண்ணீரை வரவழைத்தாலும் அதனை அடக்கிக் கொண்டவள், “இதுல மாத்திரை இருக்கு தாத்தா. நேரநேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடுங்க, ரொம்ப அலைய வேண்டாம். அப்புறம் இதுல இருக்கிற மருந்த காயத்துமேல போடுங்க, சீக்கிரம் சரியாயிரும்” என்றாள் மலர்விழி.
அதனை வாங்கிக் கொண்டு, “நல்லா இருப்ப தாயி” எனக் கையெடுத்துக் கும்பிட்டவர் மெதுவாய் நடந்து செல்ல, “ச்சே, என்ன வாழ்க்கை ஃபிளவர் இது? இவரோட மகன், மருமக எங்க ஃபிளவர்?” என்றான் ஹரிஹரன்.
“அவங்க ரெண்டுபேரும் கணேஷ் சின்ன வயசா இருக்கும்போதே ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க டா. தாத்தாவும் அம்மாச்சியும் தான் அவன வளர்த்தது, ஆனா இப்படி மாறிப் போவான்னு எதிர்பார்க்கல, மிருகம் மாதிரி அவரப் போட்டு அடிச்சுருக்கான்” என்றாள் மலர்விழி.
“அரளி விதைய அரைச்சு குடிச்சா செத்துப் போய்ருவாங்களா மலர்?” என இந்திரா தனது அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டு வைக்க, “வேணும்னா அரைச்சு குடிச்சுப் பாத்து ட்ரையல் பாக்குறியா?” என்றான் ஹரிஹரன்.
“போ டா கரிச்சட்டி” என அவனை முறைத்தவள், “நான் மலர்கிட்ட தான் கேட்டேன், உன்கிட்ட ஒன்னும் இல்ல” என்றாள் இந்திரா.
“ஆமா, ஆமா. பெரிய டவுட் கேட்டுட்டாங்க அம்மணி, நீ எல்லாம் ஒரு டாக்டர்னு வெளிய சொல்லிக்கிட்டு திரியாத? அப்பறம் மென்டல் ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேத்து விட்ருவாங்க” என்க மீண்டும் ஒரு போர் மூளத் தொடங்கியது.
“இதுங்களோட இதே தொல்லையா போச்சு” என்றவாறே மலர்விழி அங்கிருந்து எழுந்து அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றாள்.
அந்தக் கோவிலின் எதிரே இருந்த அரச மரத்தடியில் தான் அமர்ந்திருந்தனர். சிந்தனையுடனே அவள் அங்குச் செல்ல, செந்திலும் சிலம்புவும் அந்த முதியவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
கோவிலுக்குள் மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, சிறிது நேரம் மன அமைதிக்காக அங்கு இருந்தாள்.
பின் ஏதோ முடிவெடுத்தவளாய், வெளியே வந்தவள், “இன்னிக்கு கேம்ப் அவ்ளோ தான டா, கிளம்பலாமா?” என்க,
“கிளம்பலாம் ஃபிளவர், இதுக்குமேல யாரும் வரமாட்டாங்க” என்றவாறே மருத்துவ உபகரணங்களை எடுத்துக் வைக்கத் தொடங்க, மற்றவர்களும் கிளம்ப ஆயுத்தமானார்கள்.
சில நொடிகளில் அங்கிருந்து அனைவரும் கிளம்ப, வீட்டிற்குப் புறப்பட்டனர். பாதி வழியிலேயே இறங்கிக் கொண்ட மலர்விழி, “நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. எனக்கு ஒரு வேல இருக்கு, அத முடிச்சிட்டு வந்தறேன்” என்றவள்,
அவர்களின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவள் இறங்கிய பாதையின் எதிர் திசை பாதையில் நடக்கத் துவங்கினாள்.
“எங்க போறா ஃபிளவர்?” என்ற யோசனையிலேயே ஹரிஹரன் அவள் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களும் அவளது செயல் புரியாமல் முழித்தனர்.
“அவ வந்தோனே கேட்டுக்கலாம் டா, நீ வண்டிய எடு” என இந்திரா கூற, அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
மலர்விழியின் வீட்டருகே உள்ள தோட்டம் மட்டுமில்லாமல், இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு அடுத்தும் அவர்களுக்குச் சொந்தமான தோட்டம் இருந்தது.
அங்குதான் பாரிவேந்தன் இந்நேரம் இருப்பான் என்றெண்ணி தான் அங்குச் சென்றுக் கொண்டிருந்தாள் மலர்விழி.
இடையே இருந்த ஒரு தோட்டத்தின் வழியே புகுந்தவள் குறுக்கு வழியில், ஐந்து நிமிடத்தில் அங்கு போய்ச் சேர்ந்திருந்தாள்.
அந்தத் தோட்டத்தில் தொன்னை மரங்களும், வாழை மரங்களும் பயிரிடப்பட்டிருந்ததால் அவ்வபோது அங்கும் சென்று தோட்டத்தைப் பார்த்துக் கொள்வான் பாரிவேந்தன்.
வாழை மரங்களுக்கிடையே வளர்ந்திருந்த அகத்தி கீரைகளை பறித்துக் கொண்டிருந்த பாரி, மூச்சிறைக்க வந்தவளைக் கண்டு அப்படியே கீரையை கீழே போட்டுவிட்டு தான் காண்பது கனவா, நனவா என்ற ரீதியில் நின்றிருந்தான்.
வெயில் வேறு சுட்டெரிக்க, நெற்றியில் வழிந்த வேர்வைத் துளிகளைத் துடைத்தவள், “எப்போ மழ பெய்யும், எப்போ வெயில் அடிக்குதுனே தெரிய மாட்டேங்குது. நேத்து இந்நேரம், மழை பேஞ்சுது, இன்னிக்கு இப்படி வெயில் அடிக்குது” எனப் புலம்பியவாறே அவன் அருகில் சென்றாள் மலர்விழி.
அவனின் முகம் மலர்விழி தன்னைத் தேடி வந்துள்ளாள் என்ற நினைப்பே தித்திப்பை ஏற்படுத்த, மலர்ந்த முகத்துடன் அவள் எதிரே நின்றிருந்தான்.
அவள் மூச்சிறைக்க நின்றிருக்க, “இந்த வெயில்ல ஏன் புள்ள இப்படி தோட்டத்துக்கு வந்த? ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்லி இருந்தா நானே கொண்டு வந்துருப்பேன்ல” என்றான் பாரிவேந்தன்.
அவனின் ‘புள்ள‘ என்ற அழைப்பு அவளுக்கு இதமாய் இருந்தாலும், அவனின் அன்பிற்கு தான் உரித்தானவள் அல்ல என்ற நினைப்பை மீண்டும் மனதினுள் உருபோட்டுக் கொண்டு,
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் மலர்விழி. “சொல்லு புள்ள” என்றவனின் குரலில் இருந்த குதூகலத்தை அவளும் உணர்ந்திருந்தாள்.
“நீங்க நினைக்கிற விசயமில்ல இது” என அடிக்குரலில் அவள் கூறியவாறே அவனுக்கு முதுகு காட்டி நிற்க, “அப்போ நான் என்ன நினைக்கிறேனு தெரியுமா புள்ள” என்றவனின் குரல் அவள் காதோரம் ஒலித்தது.
அவனின் குரல் காதோரத்தில் கிசுக்கிசுக்க, வேகமாகத் திரும்பியவள் அவன் மார்பில் மோதி நின்றாள்.
“நான் பேச வந்தது வேற விசயத்த பத்தி, ப்ளீஸ் அதப் பத்தி மட்டும் பேசுவோம். முடிஞ்சுப் போன விசயத்தப் பேசி ஒரு புரயோசனமும் இல்ல” என்றவளை,
தன் நெஞ்சோரம் இழுத்து பாதி அணைத்துக் கொண்டவன், “என் கண்ணப் பாத்து சொல்லு புள்ள, நம்ம வாழ்க்கை முடிஞ்சுப் போன விசயமா?” என்றான் பாரி சற்று அழுத்தமாக.
“இப்போ நீங்க யாழுவோட கணவன். நிச்சயம் ஆனாலே பாதி கல்யாணம் நடந்த மாதிரி, அத மறந்துட்டு என்கிட்ட நீங்க இப்படி நடந்துக்கிறது சரியில்ல” என்றவள் அவனின் பிடியிலிருந்து தன்னை உருவிக் கொள்ள முயன்றாள்.
அவளின் கூற்றில் அவனின் பிடி இன்னும் இறுகியது. “அப்போ உன்னையே நினைச்சுட்டு வாழ்ற என் மனசோட வாழ்க்கை?” என்றான்.
அவன் பார்வையை எதிர்நோக்க முடியாமல், குனிந்து கொண்டவள், “நான் உங்கள நினைக்கச் சொல்லலயே, அதுக்கு நான் பொறுப்பில்ல. முதல்ல என்னை விடுங்க, யாராவது நம்மள இப்படி பாத்தா கேவலமாகிரும்” என்றவளின் குரல் உள்ளே சென்றிருந்தது.
“எது கேவலம் புள்ள?” என்றவனின் குரல் இறுகி இருக்க, “ம், இப்போ நீங்க பண்றது தான். தாலி கட்டி வாழ்ற என் அம்மாவயே இன்னும் இந்த ஊர் வப்பாட்டியா தான் பாக்குது, இதுல என்னை உங்ககூட பாத்தா என்னையும் அப்படித்தான் சொல்லுவாங்க. அதக் கேட்கற சக்தி எனக்கில்ல” என்றவளின் வார்த்தைகளில் நொருங்கிப் போனான் பாரிவேந்தன்.
தனது பிடியிலிருந்து அவளை உதறியவன், “வந்த விசயத்த சொல்லிட்டு கெளம்பு” என்றவாறே மறுபுறம் திரும்பிக் கொண்டான்.
தன் வார்த்தைகளின் வீரியத்தை அவள் உணர்ந்திருந்தாலும், அவனின் எதிர்காலமாய் ஒருத்தி காத்துக் கொண்டிருக்கும்போது அவன் இன்னமும் தன்னை நினைத்து வாழ்வது சரியில்லை என்பதால் தான் அவள் தன்னை தாழ்த்தி அவனை வார்த்தைகளால் சாடினாள்.
அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயல்வதை, பின்புறம் நின்றிருந்தவளுக்கு அவனின் அங்க அசைவுகள் காட்டிக் கொடுத்தன.
‘என்னை மன்னிச்சுருங்க மாமு‘ என மானசீகமாக மன்னிப்பு வேண்டிக்கொண்டிருந்தாள் அவனிடம்.
தாத்தா பாவம்.மலர் காதலை யாழிக்காக விட்டு கொடுத்து விட்டளா?.இந்து சாப்பாட்டு ராமி.
பாவம் மலரும் மாரியும்😭😭😭