Loading

பாரிவேந்தனை பரிதாபமாக ஹரிஹரன் பார்த்துவைக்க, அவனின் பார்வையை உணர்ந்த பாரி, ‘இவன் ஏன் நம்மள இப்படி பாத்து வைக்கறான், மலரு புள்ள ஏதும் நம்மள பத்தி சொல்லி வச்சுருக்குமோ!’ என மனதினுள் நினைத்தவன், ஹரிஹரனை பார்க்க பாரியின் பார்வையைக் கண்டு தன் கவனத்தை வேறுபுறம் திசைத் திருப்பினான் ஹரி.

திண்ணையில் அமர்ந்தவாறே அங்கு நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ராமாயி அப்பாயி, தனது பேரனை சைகையால், ‘இங்க வாஎன அழைத்தார்.

அப்பாயி கூப்டறத தொனியே சரியில்லயே, இது என்ன ஏழரைய இழுத்து வைக்கப் போகுதோ!’ என மனதினுள் புலம்பியவாறே அவர் அருகில் சென்றான் பாரிவேந்தன்.

இந்த புள்ளையாண்டான்களெல்லாம் யாரு டா பேராண்டி?” எனத் தெரிந்திருந்தும் தெரியாதது போல் வினவினார்.

இவங்க எல்லாம் நம்ம மலரோட காலேஜ் ஃபிரண்ட்ஸ் அப்பாயி, நம்ம பக்கத்து ஊரு கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரில தான் இனி வேல பாக்கப் போறாங்களாம். அதான், ஊர் ஊரா மருத்துவ முகாம் போட அப்பாகிட்டயும் மாமாகிட்டயும் உதவி கேட்டு வந்துருக்காங்கஎன்றான் பாரிவேந்தன்.

அப்படியா சங்கதிஎன இழுத்தவர், “அந்த மலரு புள்ள ஊர்ல இல்லனாலும் நம்ம ஊரு பழக்கவழக்கத்த எல்லாம் கத்துதான் வச்சுருக்கும் போல! எங்க கேட்டா வேல ஆகும்னு தன்னோட கூட்டாளிகள அனுப்பி வச்சுருக்காஎன்றவர்,

ஆமா, மலரு வரலயா?” என நெற்றியில் தனது வலது கரத்தைக் குவித்து கண்ணைச் சுருக்கி அங்கு மலர்விழியை தேட,

இங்க வரல அப்பாயி, கார்ல உக்காந்துருக்கும் போலஎன்றான் பாரிவேந்தன். “ஆஹான், நம்ம வீட்டு வாசப்படிய மிதிக்கமாட்டாங்களோ! நான் இருக்கிறப்போ அப்படியே போக விட்ருவனா என்ன?” என அருகில் இருந்த கைப்பிடி கம்பை எடுத்துக் கொண்டு மெதுவாக எழுந்தார் ராமாயி அப்பாயி.

அப்பாயி ஏதோ பெருசா பிளான் பண்ணிருச்சு, இதவேற சும்மா இல்லாம உசுப்பி விட்டுட்டமோ!’ என அவன் தனது அப்பாயியை பார்க்க, “நான் பாத்துக்கறேன் டா பேராண்டிஎன அவனின் தோளில் தட்டியவர், மெதுவாகக் காரை நோக்கி நடந்தார்.

மற்றவர்களோ பேசிக் கொண்டிருந்ததில் இவர்களைக் கவனிக்கத் தவறி இருந்தனர். தட் தட் எனக் கையில் ஊன்றியிருந்த கம்பை தரையில் தட்டிக் கொண்டே கார் அருகே சென்றார் ராமாயி அப்பாயி.

ஓட்டுநர் இருக்கையின் கண்ணாடிக் கதவை எட்டிப் பார்க்க, அது மூடி இருந்ததால் ஒன்றும் தெரியாமல் இருக்க, காரின் முன்பக்கம் சென்று இடப்பக்க கார் கதவின் கண்ணாடி வழியே உள்ளே பார்த்தார்.

தனது அலைப்பேசியில் மூழ்கி இருந்தவள் நிமிர்ந்துப் பார்க்க, அங்கு ராமாயி அப்பாயி பாதி இறக்கியிருந்த கண்ணாடியின் வழியே அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்தக் கண்ணாடியையும் மேல ஏத்தி விட்ருக்கணுமோ!’ என நினைத்தவள், அவரைக் கண்டு சிறு புன்னகையை சிந்தவிட்டவள், “நல்லா இருக்கீங்களா …” எனஅம்மாச்சிஎன அழைக்க வந்தவள், பாதியோடு நிறுத்திக்கொள்ள,

ஏன் டி வாய் நிறைய அம்மாச்சினு அழைச்சவ தான நீ, இப்போ என்ன வாய் கோணிக்கிட்டுப் போகுதுஎன முகத்தைச் சிலுப்பினார்.

ஆஹா, அம்மாச்சி ஆரம்பிச்சுருச்சு. இதுக்குத் தான் இங்க வரவே மாட்டேனு சொன்னேன், இந்த கரிச்சட்டி பய கேட்டா தானஎனத் தன் நண்பனையும் ஒருப்பக்கம் உள்ளுக்குள் கருவிக் கொண்டே, வெளியே சிரித்து வைத்து, “அப்டிலாம் ஒன்னுமில்ல அம்மாச்சிஎனச் சமாளித்தாள்.

பேத்தி அம்மாச்சிய பாக்க வர்றது தான் சம்பிரதாயம், ஆனா இங்க நான்ல வந்து பாக்க வேண்டியதா கெடக்கு. வாசல்வரை வந்துட்டு வண்டிக்குள்ளயே உக்காந்துட்டா என்ன அர்த்தம்? நாளைக்கு என் சாவுக்குக் கூட இப்படியே வாசல்ல நின்னுட்டு போய்ருவ போலஎன அவர் பங்குக்கு அவளைத் திட்டத் தொடங்கினார்.

கடவுளே!’ எனப் புலம்பியவள், “ஏன் அம்மாச்சி, பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு. கொள்ளுப் பேரன், பேத்திக எல்லாம் பேத்தி, பேரன் எடுக்கிறவரை நீங்க நல்லா இருப்பீங்க. அதுக்குள்ள, போக அவ்ளோ அவசரமா?” என்றாள் மலர்விழி.

மரியாதை நிமித்தமாக காரைவிட்டு இறங்க, “க்கும், பேத்தியே வந்து பாக்க மாட்டேங்கிறாளாம், இதுல கொள்ளுப்பேரனோட பேத்திக வந்து பாத்துட்டுதான் நான் சாவணுமாக்கும்என்றவர்,

இப்படியே நின்னுட்டு திரும்பப் போகலாம்னுலாம் கணக்குப் பண்ண அவ்ளோ தான், உள்ள வந்து உன் அத்தை, மாமாவ பாத்துட்டுப் போ. உன் அத்தை மவனுக்கு அடுத்த வாரத்துல கண்ணாலத்த வச்சுருக்கு, மாமன் மவ நீயே வீட்டுப் பக்கம் வராம இருந்தா எப்படி ஆகறதுஎன அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே நடந்தார்.

மலர்விழியோ சங்கடமாக அங்கேயே நின்றாள். “அட வா புள்ள!” என அவள் கரத்தைப் பற்றி ராமாயி அப்பாயி இழுக்க, அதற்குமேல் மறுப்புக் கூறாமல் அவருடன் மெதுவாக நடந்தாள் மலர்விழி.

பேசிக் கொண்டிருந்தவர்கள் மலர்விழியை ராமாயி அப்பாயி அழைத்து வருவதைக் கண்டு பேச்சை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்தனர்.

சுந்தரபாண்டியனோ பல வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வரும் மகளைக் கண்டு, “சாமி!” என எழுந்து நின்றார். பழனியப்பனும் புன்னகை முகமாய் அவளைப் பார்க்க, அவளின் நண்பர்களோ அங்கு நடப்பனவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மலரை கண்ட ரேவதி, “வா மா மலருஎன வரவேற்க, அவருக்குச் சிறுபுன்னகையை மட்டுமே பதிலளித்தாள் மலர்விழி.

வரேன்ங்க அத்தை னு வாய் நிறைய சொன்னா தான் என்ன! வாய்ல அடைச்சு வச்சுருக்கிற முத்து கொட்டிருமாக்கும்என ராமாயி அப்பாயி அவளை இடிக்க,

இந்த கெழவிய!’ என அவரை மனதினுள் கரிச்சுக் கொட்டியவள், “வரேன் அத்தைஎன இளித்து வைத்தாள் மலர்விழி.

நடக்கும் அனைத்தையும் இதழில் புன்னகை உறைய காதலோடு மலரை பாரிவேந்தன் ரசித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் நின்றிருந்த சுந்தரபாண்டியன், தனது மகளைத் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் மலருக்கோ முள்ளின்மேல் நிற்பதுபோல் இருந்தது. அவள் எங்கே திரும்பிச் சென்று விடுவாளோ என்றெண்ணி அவளது கையை இறுகப் பற்றி இருந்தார் ராமாயி.

ரேவதியோ, முகம் முழுக்க பூரிப்போடு மலரின் முகத்தை வருடியவர், “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பாத்தது, ஆளே மாறிப் போய்ட்ட கண்ணுஎன வாஞ்சையாய் கூற,

இத்தனை அன்பைப் பொழிபவர்களிடம் வெறுப்பைக் காட்ட முடியாமல் திணறிப் போனாள் மலர்விழி.

அவள் வருகையின் எதிரொளியாக சுந்தரபாண்டியனின் இல்லத்திற்குள் பாத்திரம் உருளும் சத்தம் கேட்க, அனைவரின் பார்வையும் ஒருநிமிடம் உள்ளே சென்று மீண்டது.

அங்கு உள்ளே கமலம் தான் பாத்திரத்தை எடுத்து டங்கென வைத்துக்கொண்டிருந்தார். அவரது வாய் தானாக, “அவ ஆத்தாகாரி என் வாழ்க்கைய சுடுகாடாக்குனா, இப்போ மவகாரி சீவி சிங்காரிச்சுட்டு வந்து என் வீட்டு வாசல்ல நிக்கறா. எவ குடிய கெடுக்க வந்தாளோ!” என அவர் இஷ்டத்துக்குப் பேசிக் கொண்டிருக்க,

திரும்ப வேற யார் குடிய கெடுக்கப் போறா, இப்போவும் உன் மவ வாழ்க்கைய தான் கெடுக்க வந்துருக்கா!’ என யாழினி மனதினுள் கூறிக் கொண்டே கொதித்துக் கொண்டிருந்தாள்.

மலர்விழியை ராமாயி அழைத்து வரும்போதே அவள் மூக்கு கோபத்தில் சிவந்தது என்றால், பாரிவேந்தனின் முகமலர்ச்சி முகத்தையும் சேர்த்தல்லவா கோபத்தில் சிவக்க வைத்தது.

எரிக்கும் சக்தி இருந்திருந்தால், இந்நேரம் மலர்விழி பஸ்பமாகிருப்பாள். ஆனால் ராமாயி அப்பாயியின் பார்வையில் அவளது கோபம் தப்பவில்லை.

நிலைமையைச் சரியாக்க, பழனியப்பன் பாரியிடம், “நம்ம தோட்டத்துல இருந்து எளநி வெட்டியாந்து கொல்லப் புறம் போட்ருக்கு, இவங்கள கூட்டிட்டுப் போய் அத வெட்டிக் கொடுப்பாஎன்றவர்,

தம்பி ஆளுக்கொரு எளநி குடிங்க, நம்ம மரத்து எளநி தான். நல்லா சுவையா இருக்கும்என்றார் ஹரிஹரனை பார்த்து.

ஹரிஹரன் பதிலளிக்கும்முன்சரிங்க அங்கிள்என இந்திரா முந்திக் கொண்டு பதிலளிக்க, அவளை எரிக்கும் பார்வைப் பார்த்தான் ஹரிஹரன்.

ஆனால் அவள் அதனை எல்லாம் கண்டுகொண்டால் தானே. “அண்ணா எனக்கு ரெண்டு எளநிஎன பாரியிடம் இரண்டு இளநீர் கேட்டு வைக்க, நண்பர்களோ தலையில் அடித்துக் கொண்டனர்.

வா மா தங்கச்சி, உனக்கு ரெண்டென்ன தோப்பயே வேணும்னாலும் வெட்டித் தரேன்என பாரிவேந்தன் புன்னகை முகமாய் கூற, “ச்சோ ஸ்வீட் அண்ணா!” எனக் கொஞ்சியவள்,

வாங்க, வாங்க எளநி குடிக்கப் போகலாம்என அவளே அவர்களை வழிநடத்தி வீட்டின் பின்பக்கம் சென்றாள்.

மலர்விழி தான் எங்கும் செல்லாமல் அதே இடத்தில் நிற்க, அதனைக் கண்ட ரேவதி, “நீயும் போய் இளநி குடி மாஎன்றார்.

இல்ல த்தை, பரவால்லஎன அவள் மறுக்க, “உடம்புக்கு எளநி தண்ணி நல்லது, மறுக்காம போய் குடி மலருஎன்றார் ராமாயி.

அதன்பின் மறுப்புக் கூறாமல் பின்பக்கம் சென்றாள் மலர்விழி. இரு வீட்டின் வாசலும், கொல்லைப்புறமும் சேர்ந்துதான் அமைந்திருக்கும்.

ஒரு பக்கம் மாடுகள் கட்டப்பட்டிருக்க, அருகிலேயே சிறியதாய் பட்டி இருந்தது. அதில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இருக்க, செந்திலும் சிலம்புவும் ஜோடியாய் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாரியுடன் சேர்ந்து ஹரி இளநீர் வெட்டிக் கொண்டிருக்க, இந்திராவோ இளநீருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

தனித்து நின்ற மலர்விழி, சுற்றி இருப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு ஓரம் மல்லிகைக் கொடி படர்ந்திருக்க, ரோஜா செடிகள் அணிவகுத்து இருந்தது ஒருபுறம். அதனை அடுத்து மாட்டிற்கு தண்ணீர் காட்டும் கழனிகள் இருக்க, வைக்கோல் போர் அருகில் இருந்தது.

வைக்கோல் போர் அருகே சென்றவளின் கரங்கள், வைக்கோல் போரை வருடிவிட்டது. சிறுவயதில் வைக்கோல் போரில் தான் பாதிநாள் தஞ்சம் புகுவாள். வைக்கோல் போரின் மேலே ஏறி, சுற்றி தெரியும் இடங்களைப் பார்க்க அவளுக்குச் சிறுவயதில் மிகவும் பிடிக்கும்.

அப்பொழுதெல்லாம் மாடி வீடு அரிதான ஒன்று. ஊரில் முக்கால்வாசி வீடு ஓட்டு வீடுகள் தான். ஒன்றிரண்டு கூரை வீடுகள். தற்போதும் பாரி, சுந்தரபாண்டியன் இருவரின் வீடுமே பழமை மாறாத ஓட்டு வீடுகள் தான்.

இன்றைய காலத்திற்கேற்ப உள்ளே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், பழைய வீட்டை மாற்றாமல் அதே ஓட்டு வீட்டில் தான் வசிக்கின்றனர்.

அவளது காலைச் சுற்றி சுற்றி ஆட்டுக்குட்டி ஒன்று ஓடிக் கொண்டிருக்க, அதனைக் கையில் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

மற்றவர்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தவன், மலருக்கும் இளநீர் வெட்டிக் கொண்டுவந்து அவளிடம் நீட்டினான் பாரிவேந்தன்.

சற்றுத் தள்ளி நின்று, ஹரிஹரன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் முன் வெறுப்பைக் காட்ட அவளால் இயலவில்லை.

ஆட்டுக்குட்டியை கீழே இறக்கி விட்டவள், அவன் நீட்டிய இளநீரை வாங்கிக் கொண்டாள் மலர்விழி.

பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த வாழ்க்கைய திரும்ப வாழற மாதிரி இருந்திருந்தா நல்லா இருக்கும்ல புள்ளஎன்றான் பாரிவேந்தன் எங்கோ பார்த்தபடி.

அவள் அமைதியாகவே இருக்க, “மௌனம் கூட ஒருத்தர கொல்ற அளவு வலிய கொடுக்கும்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன் புள்ளஎன்றவாறே அங்கிருந்து நகர்ந்தான் பாரிவேந்தன்.

என்ன கூறுகிறான், எனது மௌனம் அவனைக் கொல்லாமல் கொள்கிறது என்றா?’ என அவள் மனம் அவளையே கேள்வி கேட்க, அவளது கண்கள் குளமாகின.

அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல், கையில் இருந்த இளநீர் மேல் கோபத்தைக் காட்டி தூக்கி எறிந்தவள், காரை நோக்கி வேகமாகச் சென்றாள்.

அவளின் உணர்வு போராட்டங்களைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்த ஹரி, “உன் உணர்ச்சிகள எவ்ளோ நாள் வெளிக்காட்டாம இருக்கனு நானும் பாக்கறேன் ஃபிளவர்என்றவன், பக்கத்து வீட்டு பின்பக்க வாசல் வழியே வந்த யாழினியைக் கண்டு அவள்புறம் தன் கவனத்தை திருப்பினான்.

ஹேய் பட்டர்பிளை!” என அழைக்க, “இது ஒன்னும் உங்க ஊரு இல்ல, யார் காதுலயாவது நீங்க என்னைக் கூப்டறது விழுந்தா கை, கால் கூட மிஞ்சாது. சொல்றத சொல்லிப்புட்டேன், ஊருக்கு முழுசா போய்ச் சேரணும்னா வாய கொஞ்சம் அடக்கி வாசிங்கஎனப் பொரிந்தாள் யாழினி.

ஹேய், கூல் பட்டர்பிளை. வொய், டென்ஷன்? இந்தா சில்லுனு ஒரு எளநி குடி, கொஞ்சம் சூடு தணியும்எனத் தான் குடித்துக் கொண்டிருந்த இளநியை நீட்ட,

அதனை வாங்கி அவன் தலையில் எறியப் போனவள், அதே கோபத்தோடு வேறு திசையில் எறிந்துவிட்டு, “இன்னொரு தடவ இப்படி பேசுனீக இப்போ கீழ விழறது உங்க தலைல விழும், ஜாக்கிரதைஎன விரல் நீட்டி எச்சரித்தாள் யாழினி.

என் தலையை உடைப்பது நீயாக இருப்பின் தலையை என்ன என் முழு தேகத்தையும் உனக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் வண்ணத்துப்பூச்சியே!

இந்த இதயமே உனதானப் பிறகு இந்தத் தேகமெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது கண்மணியே!” எனக் காதல் பித்தம் தலைக்கேறி பிதற்ற,

கீழே கிடந்த விளக்கமாறை எடுத்தவள், பத்ரகாளியாய் அவனை நோக்கிப் பாய்ந்தாள் யாழினி.

நீ வெளக்கமாத்த தூக்கறது கூட என் கண்ணுக்கு அழகோவியமா தெரிகிறது பட்டர்பிளை. இது என் விழிப் பிழையா, அல்லது உன்னைப் படைத்த அந்தப் பிரம்மனின் பிழையா!” என மொக்கை போட்ட படியே அவளிடமிருந்து தப்பித்து காரை நோக்கிச் சென்றான்.

பின்னர் நண்பர்கள் ஐவரும் அங்கிருந்து கிளம்ப, அவர்கள் கிளம்பும் நொடிவரை சுந்தரபாண்டியனின் பார்வை மலர்விழியின் மேல் ஏக்கத்தோடு சுற்றி வந்தன.

ஆனால், அவள் தான் அவரை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. மறந்தும்கூட அவரின் வீட்டுப்பக்கம் காலடி எடுத்து வைக்கவில்லை மலர்விழி.

அதனை பாரிவேந்தனும் ராமாயி பாட்டியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்கள் கிளம்பிய பின், தனது மாமியார் முன் அமர்ந்திருந்த ரேவதி, “ஏங்கத்தை, மலரு அண்ணன் முகஜாடைல, அப்படியே அவர உரிச்சு வச்சுருக்காஎனச் சிலாகிக்க,

ராமாயி பாட்டி அமைதியாகத் தனது மருமகளின் முகத்தை ஆராய்ந்தார். தனக்கு மருமகளாய் வரப் போகும் யாழினியை பற்றிப் பேசும் போதெல்லாம் அவர்முகம் இத்தனை பூரிப்பு அடைந்ததில்லை. ஆனால் மலரைப் பற்றிப் பேசும்போது அவர் முகத்தில் அத்தனை பிரகாசம்.

யாழினி அவள் அம்மா ஜாடை. அருகருகே வீடு. தினமும் பார்த்துப் பேசக் கூடியவள். ஆனால், மலர்விழி என்னதான் தங்களை விட்டு ஒதுங்கி இருந்தாலும் தனது அண்ணனை உரித்து வைத்திருப்பவள். பொதுவாகவே, தனக்கு பிரியமானவர்களின் முக ஜாடையை கொண்ட அவர்களின் வாரிசுகள் நம் மனதில் நெருக்கமான இடத்தைப் பிடிப்பர்.

அதேப்போல் தான் யாழினியை விட மலர்விழியின்மேல் பிடித்தம் அதிகமாக இருந்தது ரேவதிக்கு.

குணவதி அண்ணி குணத்துலயும் தங்கம் தான். ஆனா, எங்க அவங்கள உரிமை கொண்டாட கூட நமக்கு வழி இல்லாம அண்ணன் பண்ணிட்டாருஎனப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டார் ரேவதி.

ஏன் டி, அவள உரிமை கொண்டாடறதுல என்ன தப்பு வேண்டிக் கெடக்கு. உன் அண்ணன் பொண்டாட்டி தான அவ, வப்பாட்டி ஒன்னுமில்லயேஎன்றார் ராமாயி.

என்னத்த, அவங்கள போய் அப்படியொரு வார்த்தைய சொல்லுவனா? சின்ன அண்ணிக்கிட்ட பேசுனா பெரிய அண்ணி கோவிச்சுக்க மாட்டாங்களா? ஏற்கெனவே அண்ணனால அவக மனசு ஒடைஞ்சு போய்க் கெடக்கறாங்க, நம்மதான ஆறுதலா இருக்கணும்என்றார் மெதுவாய்.

கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆசனு சொல்ற கணக்கால்ல இருக்கு உன் கத. சரி, அதவிடு. அவ தலையெழுத்துல என்ன இருந்தததோ அதான நடக்கும், இனி பேசிப் பிரயோசனமில்ல. நாளைக்கு உனக்கு சம்மந்தி ஆகப்போறவ, அவள அனுசரிச்சுத் தான் போய்க்கணும். ஒன்னுக்குள்ள ஒன்னா போய்ட்டு நம்ம வேற, அவக வேறனு போக முடியாது பாரு. யாரு என்ன சொன்னாலும் அந்த மலரு புள்ள உன் அண்ணன் மக தான்னு உன் அண்ணன உரிச்சு வச்சுல்ல வந்து நிக்கறா. இனி, அவ அம்மால யாராவது தப்பா பேசுனா அவக நாக்கு தான் அழுகிப் போயிரும்என்றார் ராமாயி.

சில நேரங்கள் ரேவதியின் நிலைதான் பெரும்பாலானோருக்கு. ஒரு சொந்தம் வேண்டுமென்றால் இன்னொரு சொந்தத்தை இழக்க வேண்டிய நிலை.

தனது மூத்த அண்ணியின் உறவிலும் பாதிப்பேர்படாமல் தனது இளைய அண்ணியை ஏற்க மனம் இருந்தும் அவரை ஒதுக்கி வைப்பது அவர் மனதில் நீண்ட காலப்போராட்டம்.

யாழினிக்கும் பாரிவேந்தனுக்கும் திருமண பேச்சை எடுக்கும்போதே தனது கணவரிடம், “என்னங்க, என்ன இருந்தாலும் மலரும் என் அண்ணன் மவ தான். யாழுக்கு மூத்தவ அவ, அவ இருக்கும்போது யாழுவ பாரிக்கு பேசி முடிக்கிறது நல்லா இருக்காதுங்கஎனத் தன் மனதில் உள்ளதை கூறி இருந்தார்.

நீ சொல்றது உண்மைதான் ரேவதி, ஆனா கமலத்த பகைச்சுக்கிட்டு நம்ம போய் குணவதிகிட்ட பொண்ணு கேட்டு நிக்க முடியாதே. நம்ம பாத்து கட்டி வச்சோம் கமலத்த, இப்போ அவங்கள நம்ம நட்டாத்துல விட்டுட்டு மலர கட்டிக்க கேட்கறது நியாயமில்லல!” என்றார் பழனியப்பன்.

தன் கணவரின் கூற்றில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்டவரால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஆனால், மனதோரம் சிறு வருத்தம் அவருக்கு இன்னமும் உண்டு.

கணவன், மனைவி இருவருக்குமே சுந்தரபாண்டியன் மேல்தான் வருத்தமே தவிர, குணவதியின் மேல் இல்லை. அவர் திருமணமாகி இந்த ஊருக்கு வந்த சில நாட்களிலேயே அவரின் குணத்தை அறிந்துக் கொண்டனர் இருவரும்.

ஆனால், பொதுப்படையாக ஒட்டி உறவாட முடியாத நிலை. கமலமும் பாவம், குணவதியும் பாவம். யார்பக்கம் நிற்க என்றுத் தெரியாமல் இன்றுவரை குழப்பத்தோடு தான் நிற்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

யாருக்கும் தெரியாமல் அவ்வபோது குணவதியிடம் நலம் விசாரிப்பார் ரேவதி. பழனியப்பனோ பார்த்தால் சிறு புன்னகை. அவ்வளவு தான் அவர்கள் உறவின் பாலம்.

இவர்களின் இந்தச் சிறு புன்னகையும் விசாரிப்புமே குணவதிக்கு மிகப்பெரிய ஆறுதல். கட்டியவரின் துணை இருந்தாலும், அவரின் சொந்தங்களின் துணையும் இருந்தால் தானே அந்த உறவின் ஆழம் வலுப்பெறும்.

ஒருவரின் தவறு எத்தனைப் பேரின் வாழ்வில் குழப்பத்தையும் வேதனையையும் உண்டாக்கும் என்பதற்கு சாட்சியானார் சுந்தரபாண்டியன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சுவாரஸ்யமாக போகுது.மலர் பாரி ஹரி யாழினி யாருக்கு யாரோ.

    2. சுந்தரபாண்டியன் 😈😈😈😈😈