“சிலும்பு, வெற்றி உங்கள…!” எனப் பல்லை நறநறவெனக் கடித்தவள், சர்வரிடம் ஈ என பல்லைக் காதுவரை இளித்து வைத்து, “ஒன் மினிட், ஹேண்ட் வாஸ் பண்ணிட்டு வந்தறேன்” என கைக்கழுவும் இடத்தைத் தேடிச் சென்று, அங்கு தஞ்சம் புகுந்தாள் இந்திராகாந்தி.
‘இவங்கள நம்பிட்டு வந்ததுக்கு கடைசில என்னை ஹோட்டல கழுவ விட்ருவாங்க போலயே… அய்யோ, அப்பவே என் ஆத்தா தலை தலையா அடிச்சுக்கிச்சு, வீட்ட மாப்பு போட்டுத் துடைச்சுப் பழகுனா தான் போற இடத்துல அந்த வேலை எல்லாம் ஒழுங்கா செய்ய முடியும்னு. வேலைக்காரங்க வச்சுக்குவோம்னு பீத்தல் விட்டேன், ஆனா கடைசில இந்த சிலம்பு என்னை வேலைக்காரி ஆக்கிருவா போலயே!’ நொந்தவள், கைக்கழுவதுப் போல் பாவ்லா காட்டிக் கொண்டே தான் அமர்ந்திருந்த டேபிள்புறம் எட்டிப் பார்த்தாள் சர்வர் அங்கு உள்ளானா என்று!
அங்குப் பார்த்தவளின் முகம் விளக்கெண்ணெய்யைக் குடித்ததுப் போல் அஷ்டக்கோணலானது. அவள் செல்லும்போது நின்ற இடத்திலேயே தான் இன்னும் அவன் நின்றிருக்க, “பாவிபய, விட்டா என்னைப் பாத்ரூமே கழுவ வச்சுருவான் போலயே! நகரவே மாட்டேன்ங்கிறான்” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே எதுவும் நடவாதது போல் கெத்தாக நடந்து டேபிள் அருகே சென்றாள்.
‘துடைக்க லைஷால் ஏதும் இருக்கானு கேட்க வேண்டியது தான், ஒருவேளை பாத்தரம் கழுவ விட்டுட்டா என்ன பண்றது?’ எனத் தன் இல்லாத மூளையை போட்டுக் குழப்பிக் கொள்ள, அவனிடம் கேட்கப் போகும்நேரம் அவளின் அலைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியை எழுப்பியது.
‘அட ச்சே, இது ஒன்னு, நேரங்காலந் தெரியாம!’ எனப் புலம்பியவாறே அலைப்பேசியை எடுத்துப் பார்த்தவளின் மனம் குத்தாட்டம் போட்டது.
மலர்விழி தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள், கூகுள் பே‘யில் பணம் அனுப்பி இருப்பதாக. ‘இத முதல்ல பண்ணிருந்தா நான் டர் ஆகி இருக்க மாட்டனே டி மலரு!’ எனத் தன் தோழியைக் கடிந்தவள், இப்பொழுது நிமிர்வாக, “கூகுள் பே‘ல அமௌண்ட் டிரான்ஸ்பர் பண்ணிறேன்” எனக் கூறினாள் இந்திராகாந்தி.
அவளின் டர்ரைக் கவனித்துக் கொண்டிருந்தவன், தற்பொழுது கெத்தாகக் கூறுவதைக் கண்டு, ‘எவன் பணத்தை அட்டைய போட்டாங்களோ! கெத்த பாரு‘ என மனதினுள் கூறிக் கொண்டே, கூகுள் பே மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டான்.
அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள், “கொஞ்சம் நேரத்துல உசுரே போய்ருச்சு டா சாமி!” எனப் புலம்பித் தீர்க்க, இத்தனைக்கும் காரணமான அந்த ஜோடிப் புறாக்கள் அப்பொழுது தான் அவள் முன் வந்து நின்றனர்.
“ஹேய் பிரியாணி! அதுக்குள்ள சாப்டியா என்ன?” என செந்தில் நக்கலாக வினவ, அவனை முறைத்தாள் இந்திராகாந்தி.
“சும்மா இரு டா!” என செந்திலின் கரத்தை அழுத்திய சிலம்புசெல்வி, “ஃபில் ஃபே பண்ணிட்டியா இந்து?” என்றாள்.
அவளை முறைத்தவள், “உங்களுக்குக் காவக் காக்க வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் டி. இனி, இந்த நாதாரி பயல பார்க்க என்னைக் கூப்பிட்ட உன்னை லெக் பீஸ் ஆக்கிருவேன் பாத்துக்கோ!” எனச் சடசடவென பொரிந்தாள்.
“அப்போ கூடப் பாரு திங்கறத விடறாளானு!” என செந்தில் நக்கல் அடிக்க, “டேய், ஒழுங்கு மரியாதையா ஓடிரு. இல்ல, கோபத்துல கடிச்சு வச்சுருவேன்” என்றாள் இந்திராகாந்தி சற்று கடுப்பாக.
“எவ்ளோ டி ஃபில், நான் அமௌண்ட் டிரான்ஸ்பர் பண்ணட்டுமா?” என்றவள், தன்னுடைய அலைப்பேசியில் கூகுள் பே செயலியை எடுக்க, “அத மலருக்கு அனுப்பி விட்ரு” என்றவள் கூறிய தொகையில் இருவருமே அதிர்ந்தனர்.
“ஏன் டி, ஒரு பிளேட் பிரியாணி இவ்ளோவா!” என சிலம்பு அதிர்ச்சியாக,
“முதல்ல ஒரு பிளேட் தான் வாங்குனேன், நீங்க வர லேட்டாகிருச்சா, அதான் அப்டியே ஒரு பக்கெட் பிரியாணி சாப்டேன்” என்றாள் இந்திராகாந்தி.
செந்திலின் வாய்க்குள் ஈ போகாத குறை தான். “அப்படி பாத்தாலும் ஒரு பக்கெட் பிரியாணி எப்படி டி இவ்ளோ அமௌண்ட்? உன்னை அந்த ஹோட்டல்காரன் ஏமாத்திட்டான். வா, என்னனு கேட்டுச் சண்டைப் போடுவோம். நியாயம், தர்மம் வேண்டாம்! ஒரு பக்கெட் பிரியாணி இவ்ளவா!” என சிலம்பு போருக்குத் தயாராவதுப் போல் அவளின் த்ரீ போர்த் சல்வாரை மடக்கி விட்டவாறே மீண்டும் அந்த ஹோட்டலுக்குள் நுழைய, அவளை வேகவேகமாகத் தடுத்தாள் இந்திராகாந்தி.
“ஏன் டி, தடுக்கற? உன்னைச் சின்னப் புள்ளனு நினைச்சு ஏமாத்த பாக்கறாங்க, வா என்னனு கேட்டு ஒரு கைப்பாத்துருவோம்” என்க, செந்திலோ இந்திராவைப் பற்றி நன்கு அறிந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாக நடப்பனவற்றை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
தலையைச் சொறிந்துக் கொண்டே, “கூடவே சைட் டிஷ்ஷா கொஞ்சம் சாப்டேன் டி, அதான் இவ்ளோ ஃபில்!” என்றாள் இந்திரா.
“அப்படி என்ன சைட் டிஷ் டி? அப்படியும் கணக்குப் பாத்தா சரியா வரலயே! உனக்குக் கணக்கு வராது, சரி தான். அதுக்காக இப்படியா ஏமாறுவ?” என இன்னமும் தன் தோழியை அந்த ஹோட்டல்காரர் ஏமாற்றி விட்டதாகவே சிலம்பு கூற,
“ஹனி, அவக்கிட்ட அப்படி என்ன சைட் டிஷ் சாப்பிட்டனு கொஞ்சம் கேளேன்!” என வந்த புன்னகையை தன் இதழ்களுக்குள் அடக்கி வைத்தவாறே கூறினான் செந்தில்.
“அதுவந்து,
சிக்கன் லாலி பாப்,
சிக்கன் 65,
பாப்கார்ன் சிக்கன்,
ஷவர்மா,.
.
.”
எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, செந்திலோ சாலை என்றும் பாராமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, சிலம்புவோ மயக்கம் போடாத குறைதான்.
“டேய், சிரிக்காத டா. சிரிக்காத டானு சொல்றேன்ல!” என இந்திரா செந்திலின் முதுகில் அடி வைக்க, சிலம்புவோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தாள்.
தனது தோழி பிரியாணி என்றால் உயிரை விடுவாளெனத் தெரியும் தான். ஆனால், அதற்காக இவ்வளவா! என்ற அதிர்ச்சியில் தான் உறைந்திருந்தாள்.
“அய்யோ, இத உடனே நம்ம மலருக்கும் ஹரிக்கும் சொல்லி ஆகணுமே!” எனத் தன் அலைப்பேசியை எடுக்கப் போக, “அவன்கிட்ட சொல்லிற வேண்டாம் டா, ப்ளீஸ்! அவன் ஊருக்கே மைக் போட்டுச் சொல்லுவான்” என இந்திரா கெஞ்ச, “சரி, சரி. நட்பாச்சேனு விடறேன், ஆனா இந்நேரம் மலரு சொல்லிருப்பா, அவ தான உனக்கு அமௌண்ட் அனுப்புனது!” என்றாள் செந்தில்.
அதன்பிறகு இந்திராவை கலாய்த்தவாறே சிலம்புவும் செந்திலும், தங்களின் காதலையும் நிலைநாட்டிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் ஐவரும் தான் ஐந்து நட்சத்திர குழுவினர். ஐவருமே கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது தான் மருத்துவப் படிப்பை முடித்துள்ளனர். ஐவருமே கலகலப்பானவர்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நகைப்புக்கு பஞ்சமிருக்காது.
இதில், நட்பாய் இருந்து காதலர்களாய் மாறியவர்கள் சிலம்புவும் செந்திலும். மற்ற நண்பர்களும் அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டிட, கடந்த இரண்டு வருடங்களாகக் காதல் ஆட்சி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் காதல் உலாக்களுக்கு எப்பொழுதும் சாட்சியானவள் இந்திரா தான். ஹரிஹரனும் மலர்விழியும் எப்படியாவது தப்பித்துக் கொள்ள, இந்திரா தான் அடிக்கடி சிலம்பு, செந்திலிடம் மாட்டிக் கொள்வாள்.
தன் தோழிக்குப் பணத்தை அனுப்பிவிட்டு கண்களை மூடியவளை, ‘சாமி!’ என்ற அழைப்பு ஞாபகத்தைக் கிளற, விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
அப்பொழுது தான் அவளின் அறைக்கு வந்த ஹரிஹரன், அவள் திடுமென எழுந்து அமர்ந்ததைக் கண்டு, “ஹே, பிளவர்! என்ன ஆச்சு?” என அவள் அருகில் அமர்ந்தான்.
‘ஒன்னுமில்ல‘ என அவள் தலையாட்ட, அவள் மனம் எதையோ போட்டுக் குழப்பிக் கொள்கிறது எனப் புரிந்துக் கொண்டவன், அவள் கேசத்தை வருடி விட்டவாறே, “கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடு” என்றான்.
“தூக்கம் வரல டா!” என்றவள், அவன் தோள் சாய, அவள் எப்பொழுதாவது மனம் சோர்வடைந்தால் மட்டுமே அவன் தோள் சாய்வாள் என்பதால் தன் தோழியின் மனதைப் புரிந்துக் கொண்டவன், தன் தோளில் அவளைத் தாங்கிக் கொண்டான்.
ஆண்களை வெறுப்பவள் அல்ல அவள். ஆனால், துரதிஷ்டவசமாக இரு ஆண்களை வெறுத்துக் கொண்டிருப்பவள். அவள் தந்தை, ஒட்டுமொத்த அன்பையும் அவள்மேல் கொட்டி, ‘சாமி!’ என்ற விளிப்புடன் அவளைத் தாங்குபவர்.
அவளின் பதினோரு வயதுவரை தன் தந்தையின் அன்பில் இளைப்பாறியவள். ஆனால், அதன்பின் விவரமறிய ஆரம்பிக்க ஆரம்பிக்கத் தான் பிரச்சனை பெரிதாக ஆரம்பித்தது.
சிறு வயதில் தன் தந்தை ஏன் தங்களுடன் இல்லையென எப்பொழுதும் சிந்தனை ஓடினாலும் அதனைத் தன் தாயிடம் ஓரிரு சமயம் கேட்டுமிருந்தாள்.
அப்பொழுதெல்லாம் அவர், “தாத்தா, பாட்டிக்கு நம்ம மேல கோபம் டா மலரு, அதான் அப்பா மட்டும் அங்க இருக்காரு!” என்பார்.
ஆனால், விவரம் புரியும் வயதில்தான் அவள் அறிந்து கொண்டாள் தன் தந்தை ஏன் தங்களுடன் வந்து தங்குவதில்லையென்று!
சுந்திரமூர்த்திக்கு இரு மனைவிகள். முதல் மனைவி கமலம், அவர்கள் இருவருக்கும் ஒரு ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரு முத்துகள். பெரியவன், சண்முகம். இளையவள், யாழினி. யாழினியும் மலரும் ஒத்த வயதுடையவர்கள்.
சுந்தரமூர்த்தியின் இரண்டாவது மனைவி தான் குணவதி. காதலித்து கரம் பற்றினார் குணவதியை. ஆனால், அவர் திருமணமானவர் என்பதை அறியாத குணவதி தன் கணவனின் மேல் உயிராய் இருக்க, காதல் திருமணத்தால் அவரைப் பெற்றவர்களும் விலக்கி வைக்க, தன் கணவனுடன் புகுந்த ஊர் வந்தபோது தான் அறிந்து கொண்டார் தன் கணவனின் முதல் மனைவியை.
கோபம், ஆற்றாமையென வரிசையாய் தன் கணவன்மேல் காட்டினாலும் அவரின் காதல் மனம் ஒருபுறம் தன் கணவனைத் தாங்கியது. இருவரும் காதலித்த நாட்களில் அவரின் நிழல் கூட குணவதியின் மேல் விழாமல் கண்ணியமாய் நடந்துக் கொண்டவரா தன்னை ஏமாற்றினாரென ஒருபக்கம் மனம் குமுறினாலும், தன் கணவன் தன் காலில் விழாக் குறையாய் தன் தவறை ஒப்புக் கொண்டு அவர்மேல் உள்ள காதலை வெளிப்படுத்தவும், பாழாய் போன மனம் அந்தக் காதலில் கரைந்து அந்த நதியோடு இரண்டற கலந்தது.
அந்தக் காதலின் சாட்சியாய் பிறந்தவள் தான் மலர்விழி. அந்த ஊரில் அவருக்கு மரியாதைகளில் எந்தக் குறையும் வைத்ததில்லை. ஊரிலே பெரிய தலைக்கட்டு சுந்தரபாண்டியனின் குடும்பம்.
அதனால் ஊரில் எந்த விஷேசம் என்றாலும் அவர்களின் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை. அதுவும் தவறாமல் குணவதிக்கு அளிக்கப்பட்டது.
காரணம், தனது மனைவி என்ற அங்கீகாரத்தோடு தான் குணவதியை ஊரார் முன்பு குணவதியை அறிமுகப்படுத்தினார். இரண்டாம் திருமணத்தை அப்பொழுது அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஊரில் சிலர் ‘சின்ன வீடு‘ என்று விளிப்பதை குணவதியும் கேட்டுள்ளார் தான்.
கமலமும் தன் வாழ்வைத் தட்டிப் பறிக்க வந்தவள், என்று குணவதியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டுவார். இயற்கையிலேயே பொறுமையைப் பெற்றவர் குணவதி.
அத்தனையும், தான் காதலித்து கரம்பிடித்தவருக்காகப் பொறுத்துக் கொண்டார். ஆனால், தன் மகளின் கோபம் ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும்போது தான் திணறிப் போனார்.
தன் தந்தையுடன் தோளும் சதையுமாய் ஒட்டி உறவாடியவள், தன் தாயை அவர் ஏமாற்றியுள்ளார் என்று அறிந்தவுடன் ஒட்டுமொத்த வெறுப்பையும் அவர்மேல் கொட்டினாள் மலர்விழி.
இன்றுவரை அந்த வெறுப்புப்படலம் தொடர்கின்றது. கல்லூரி வாழ்க்கையில் தான் அவள் சற்று கலகலப்பானாள்.
ஹரிஹரனிடம் தன் தந்தையிடம் உணர்ந்த பாதுகாப்பு உணர்வைப் பெற, அவள் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் அவன் தன் தோள்களில் தாங்குவான்.
மற்ற நண்பர்களைவிட ஹரிஹரனுக்கு மலர்விழி ஒருபடி மேல் தான். அதனை மற்றவர்களும் உணர்ந்திருந்தனர்.
தன் தோளில் சாய்ந்திருந்த தோழியைப் பார்த்தவன், ‘இந்தப் பிடிவாதத்தை மட்டும் விட்டுட்டா போதும், ராணி மாதிரி பார்த்துக்க உன் அப்பா தயாரா இருக்கும்போது அந்தப் பாசத்த ஒதுக்கி வச்சு தப்பு பண்ற ஃபிளவர்! இந்த உலகத்துல தப்பு பண்ணாத மனுஷங்களே இல்ல, அவர் பண்ணத் தப்ப உணர்ந்து மன்னிப்பும் கேட்டுட்டார். ஆனால், நீ இன்னமும் உன் பிடிவாதத்தை விட மாட்டேன்ங்கிற!’ என எப்பொழுதும் போல் மனதினுள் கூறிக் கொண்டான்.
அவன் தோளிலே உறங்கியவளை மெத்தையில் படுக்க வைத்தவன், ஜன்னலைத் திறந்து விட்டான் காற்றோட்டத்திற்காக. “நல்லதே நடக்கும்” என்றவாறே அங்கிருந்து தன்னறைக்குச் சென்றான்.
அவன் அறைக்குச் செல்லும்போது, யாரோ குணவதியிடம் பேசும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தான் ஹரிஹரன்.
அங்கு, இன்று மலர் தோட்டத்தில் கண்டவன் தான் குணவதியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டவனின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள் விழ, அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“அத்தை மலரு எங்க த்தை, மாமா வந்தாரு, அவள பாத்தாரா?” என்றான் பாரிவேந்தன்.
“இல்ல பாரி, இவ அவரக் கண்டோனே தோட்டத்துப் பக்கம் போய்ட்டா. அந்த மனுஷன் அழாத குறை, இவ்வளவு வீம்பு புடிச்சு என்னத்த சாதிக்கப் போறாளோ தெரியல!” என அவர் புலம்ப, தன்னவளின் வீம்பைப் பற்றி அவன் அறியாதவனா என்ன!
“இப்போ அவ எங்க அத்தை?” என்றான் பாரிவேந்தன். “அவ ரூம்ல தான் இருப்பா பாரி, தூங்கிருப்பான்னு நினைக்கிறேன்” என்றவர், பின்கட்டிலிருந்து மாடு கத்தும் சப்தம் கேட்க, அதனைப் பார்க்கச் சென்றார்.
மலர்விழியின் அறைவரை வந்தவன் அவள் அறை முன் சற்று தயக்கத்துடன் நடை தடைபட, ஹரிஹரன் அமைதியாக அவனைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அறையினுள்ளே எட்டிப் பார்த்தவன், அவள் உறங்குவதை கண்டு உள்ளே சென்றான். அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கரத்தைத் தன் கரத்தினுள் எடுத்து வைத்துக் கொண்டவன், அவளின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்மேல உள்ள கோபம் இன்னும் தீரலயா புள்ள! உன் கோபம் நியாயமானது தான். அன்னிக்கு நான் பேசாம இருந்திருக்கக் கூடாது தான், ஆனா அன்னிக்கு அப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல! உன்கிட்ட காதல சொன்ன அன்னிக்கே உன் கோபத்த சம்பாதிப்பேன்னு எதிர்பார்க்கல. மாமா மேல உள்ள கோபத்தால தான் என்கிட்ட பேசாம இருக்கனு நினைச்சேன், ஆனா என்னையும் நீ வெறுக்க ஆரம்பிச்சுட்டியா மலரு?” என்றவனின் தேகம் சிலிர்த்தது.
“யாழுக்கும் எனக்கும் கல்யாணம் பேசி இருக்காங்க, அது உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அத்தை சொன்னதா சொன்னாங்க, குறைந்தபட்சம் என்கிட்ட நீ வந்தோனே சண்டையாவது போடுவனு நினைச்சேன். ஆனா, என்னைப் பார்க்கக் கூடப் பிடிக்கலயா மலரு? நான் பண்ணத் தப்புக்கு உன் கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்க நான் தயாரா இருக்கேன் புள்ள, ஆனா என்னை நீ அப்பயாவது மன்னிப்பியா?” என உறங்கிக் கொண்டிருந்தவளிடம் தன் மனப் புலம்பல்களைக் கொட்டிக் கொண்டிருந்தான் பாரிவேந்தன்.
“என் மலரு இப்போ டாக்டருக்குப் படிச்சுருக்குனு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா! இந்தப் பட்டிக்காட்டான்கிட்ட எப்படி பேசறதுனு நினைச்சியா புள்ள? நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சதால இந்த மாமுவோட காதல் உனக்குப் பெருசா தெரியலயா மலரு?” என்றவனை குழப்பத்தோடு வெளியே நின்றிருந்த ஹரிஹரன், ‘இவர எங்கயோ நம்ம பார்த்துருக்கோமே! ஆனா எங்கனு தான் தெரியல, இவரு தான் ஃபிளவரோட மாமு போல! இந்த மனுஷன் இவளுக்காக உருகிக்கிட்டு கிடக்கறாரு, ஆனா இவ என்னடான்னா நல்லா தூங்கிட்டு இருக்கிறா! இப்போ இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற பொறுப்பும் நம்மளோடது தானா! ஆண்டவா, என்னை இப்படிலாம் சோதிக்கக் கூடாது‘ எனப் புலம்பியவன், மேலும் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து சென்றான்.
ஐந்து நிமிடத்தில் பாரிவேந்தனும் கிளம்ப, மலரோ நித்திராதேவியின் ஆளுமைக்குள் சிக்கிக் கொண்டிருந்தாள்.
ஹரி செம.பாரி யாழினி ஜோடியா?.இந்து சாப்பாட்டு ராமிப்பா.கவிதை செம.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
அருமை கதை 😁😁😁
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.