Loading

டிராவல்ஸ் பஸ் பாரிவேந்தனின் இல்லம் முன் நின்றிருக்க, ஊரின் முக்கிய உறவுகள் சிலர் அதில் ஏறிக் கொண்டிருந்தனர். “அப்பாயி பாத்து ஏறுஎன ராமாயி பாட்டியை பேருந்து படியில் ஏற கைப்பிடித்து உதவிக் கொண்டிருந்தான் பாரிவேந்தன்.

கமலமும் சுந்தரபாண்டியனும் நேற்றே கோயம்புத்தூர் சென்றிருக்க, இன்று மாலை நடக்கவிருக்கும் ஹரிஹரன்யாழினி திருமண வரவேற்பிக்காக தங்களது நெருங்கிய உறவினர்களை மட்டும் பழனியப்பனும், பாரிவேந்தனும் அழைத்துச் செல்ல பேருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்றே அனைவரையும் அழைத்துச் செல்லலாம் என கமலம் பிடிவாதம் பிடிக்க, “இங்க பாரு கமலா, நம்ம போய் அங்க தங்கற மாதிரி இருந்தா மாப்பிள்ளை வீட்டுக்கு தான் சிரமம், ஒருத்தர் ரெண்டு பேர்னா பிரச்சினை இல்லஊரே நமக்கு சொந்தம், அத்தனை பேரையும் அங்க முந்தின நாளே கூட்டிட்டு போனா அவங்களுக்கும் சங்கடம் தானநாளைக்கு சாயந்தரம் தான விழா, நம்ம இன்னிக்கு போய் அங்க கூடமாட வேல செய்வோம். நாளைக்கு பழனி மச்சானும் பாரி மாப்பிள்ளையும் இவங்கள கூட்டிட்டு வந்துருவாங்கஎன்றார் சுந்தரபாண்டியன்.

ஆமா பொல்லாத மச்சான், பொல்லாத மாப்பிள்ளைநம்ம மவ வாழ்க்கைல விளையாண்டவங்க தான் உங்களுக்கு எப்பவும் பெருசுஎன நொடித்துக் கொண்டார் கமலம்.

சுந்தரபாண்டியன் பதில் ஏதும் கூறவில்லை. எதிர்பாராதது நடந்துவிட்டது தான். ஆனால், தற்போதும் பாரிவேந்தன் அவருக்கு மாப்பிள்ளை தானே. தன் கணவன் அமைதியாக வரவும் மேலும் எதுவும் பேசாமல் அமைதியானார் கமலம். ஆனால் மனம் தகித்துக் கொண்டு தான் இருந்தது.

ரேவதியும் ஓரிரு முறை அவரிடம் பேச முயற்சிக்க கமலமோ முகத்தை திருப்பிக் கொண்டார். பழனியப்பன் எப்பொழுதுமே அதிகம் பேசாதவர். அதனால், அவர் எதுவும் கமலத்திடம் பேசவில்லை என்றாலும் அவரைப் பார்க்கும்போது குற்றவுணர்வோடு தான் இருந்தார்.

ராமாயி பாட்டியிடம் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் அதுவும் அவராக பேசினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற ரீதியில் இருந்தது உறவுமுறை

குணவதி கோவை வரத் தயக்கம் காண்பிக்க, ஹரிஹரன் அலைப்பேசியில் அவரை கட்டாயம் வர வேண்டும் என கட்டளை பிறப்பித்திருந்ததால் பேருந்தில் ஏறினார். கரிசல்பட்டி சொந்ததங்களோடு பேருந்து புறப்பட, அதன் பின்னால் காரில் பாரிவேந்தனும் மலர்விழியும் கிளம்பினர். உடன் மலரின் நட்பு பட்டாளங்கள் இருக்க, போகும் வழியெங்கும் அவர்களின் ஆட்டம் பாட்டத்தோடு பயணம் களைக் கட்டியது.

செந்தில் பாரிவேந்தனின் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருக்க பின்னால் அமர்ந்திருந்த தோழியர் மூவரும் கதைப் பேசிக் கொண்டே வந்தனர்.

அவ்வபோது மிரரில் தன்னவளின் புன்னகை ததும்பி இருந்த முகத்தை ரசித்துக் கொண்டே காரை ஓட்ட, அதனை கவனித்த இந்திராவும் சிலம்புவும் பாரிவேந்தனை கலாய்த்தனர்.

அவர்களின் கேலியில் கன்னத்தில் குழி விழுக புன்னகைத்தவனை இமை மூடாமல் பார்த்தாள் மலர்விழி. வழக்கம்போல் இல்லாமல் இன்று ஜீன்ஸ், டிஷர்ட்டில் இருந்தான்.

அவன் ஜீன்ஸ், டிஷர்ட் அணிவது மிகவும் அரிதானது. எப்பொழுதும் வேஷ்டி, சட்டையில் தான் காட்சியளிப்பான். இன்று அவள் கண்களுக்கு அவன் பேரழகனாகத் தெரிய, இமைக்க மறந்திருந்தாள் மலர்விழி.

வலது கை ஸ்டியரிங்கை இயக்க, இடது கை அவனது தாடியை தடவிக் கொடுத்தது. கார் கண்ணாடி சற்று இறக்கப்பட்டிருந்ததால் இளந்தென்றல் அவன் சிகையை தழுவ, அது அழகாய் அசைந்தாடியது.

அவளது பார்வையை அவன் உணர்வதற்குள் தோழிகள் இருவரும் உணர்ந்திருக்க, “க்கும்என ஒருசேர இருமினர். அவர்கள் கண்டுக் கொண்டதை உணர்ந்தவள், தன் நெற்றியில் புரண்டிருந்த சிறு கற்றை முடியை காதோரம் ஒதுக்கியவாறே கண்ணாடி வழியே தெரிந்த இயற்கையை ரசிப்பது போல் நடித்தாள் மலர்விழி.

அவளின் செயலை ஓரக்கண்ணால் பார்த்தவாறே பாரிவேந்தன் விசிலடிக்க, “அண்ணா…” என்றனர் சிலம்புவும் இந்திராவும் கோரசாக.

என்ன மா…” என அவனும் அதே தொனியில் வினவ, “இல்ல, இங்க உங்க கூட நாங்களும் இருக்கோம், பார்த்து பார்த்துஎன்றாள் இந்திராகாந்தி.

பார்த்ததால தான பிரச்சினையே!” என அவன் தலை கோத, அவனின் முணுமுணுப்பு அவர்களுக்கும் கேட்டது. மலரின் கனகாம்பர இதழ்களோ நமட்டு சிரிப்பை உதிர்த்தது.

ஒரு வழியாக கேலி கிண்டல்களுடன் மூன்றரை மணி நேர பயணத்தில் கோவையை வந்தடைந்தனர். ராஜனும் பத்மாவும் வந்தவர்களை வரவேற்க, அப்பொழுது தான் தங்கள் அறையில் இருந்து யாழினியும் ஹரிஹரனும் கீழே இறங்கி வந்தனர்.

ஏற்கெனவே வீட்டின் பிரமாண்டம் யாழினியின் சொந்தங்களை வாயடைக்க வைத்திருக்க தன் கணவனுடன் ஜோடியாக படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்த யாழினியைக் கண்டு பிரமித்தனர்.

இளஞ்சிவப்பு வண்ண ஜார்ஜெட் புடவையில் முந்தானையை மடிக்காமல் அப்படியே தோளில் படரவிட்டிருக்க, அவளது சங்கு கழுத்தில் முத்தும் வெள்ளைக் கற்களும் பதித்த ஆரம் கச்சிதமாய் பொருந்தி இருந்தது.

ஊரில் சல்வாரிலும் பாவாடை தாவணியிலும்  சுற்றிக் கொண்டிருப்பவள் இன்று படத்தில் காணும் நடிகையருக்கு இணையான அலங்காரத்துடன் இறங்குபவளை ஆவென்று பார்த்தனர்.

கமலத்திற்கோ ஏகபெருமை. தன் சொந்தங்களிடம் மகளின் புகுந்த வீட்டின் அருமை பெருமைகளை அள்ளி அளந்தார். மலர் வீட்டினுள் நுழையும்போதே அவளைக் கண்டுகொண்ட பத்மா, “மலர்!” என்று சந்தோச மிகுதியில் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ள, “எப்படி இருக்கீங்க டார்லிங்என்றாள் மலர்விழி.

உன்ன பார்க்காததால நாலு கிலோ எடை கூடிட்டாங்களாம் உன் டார்லிங்என்றவாறே அவளருகில் வந்து ஹரிஹரன் நிற்க, எதுவும் பேசாமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள் மலர்விழி.

இதே முன்பு நடந்திருந்தால் அவனை ஒருவழியாக்கி இருப்பாள் மலர்விழி. ஆனால் இன்றோ அவளின் மௌனம் அவனைக் கொன்று புதைக்க, போகும் அவளையே வருத்தத்துடன் பார்த்தான் ஹரிஹரன்.

இதுக்கே வருத்தப்பட்டா எப்படி தம்பி? இனி தான ஆட்டமே ஆரம்பிக்கப் போகுதுஎன அவன் தோளில் கைப்போட்டபடி கூறினான் பாரிவேந்தன்.

அவ விலகிப் போறது ரொம்ப வலிக்கிது பிரதர்என்றவனின் கண்களில் உள்ள வலியை பாரியும் பத்மாவும் உணர்ந்தனர். சூழலை மாற்றும் பொருட்டு, “அம்மாவுக்கு நீயா என்னை அறிமுகப்படுத்துவனு பார்த்தா அது இந்த ஜென்மத்துல நடக்காது போலயே…” என்றவன், பத்மாவிடம், “வணக்கம் ம்மா, நான்…” என அவன் ஆரம்பிப்பதற்குள்,

பாரிவேந்தன், மலரோட…” என இழுத்தார் பத்மா. அதற்கு புன்னகைத்தவாறே, “இப்போதிக்க அத்தை பையன் மட்டும் தான் ம்மா, எதிர்காலத்துல வேணும்னா…” என அவனும் அதேப் போல் இழுக்க, அவனின் பதிலில் புன்னகைத்தவர், “எல்லாம் நல்லதே நடக்கும் பா, கவலைப்படாதஎன்றார் பத்மா.

பாரிவேந்தனை பழனியப்பன் அழைக்க, அங்கிருந்து அவன் நகரவும், “அம்மா!” என்றான் ஹரிஹரன். “இங்க நின்னுட்டு என்ன பண்ற, அங்க உன் பொண்டாட்டி மட்டும் தனியா இருக்கறா பாரு. போய் அவக்கூட இருஎன கட்டளையிட்டவாறே அவர் வந்தவர்களிடம் பேச செல்ல, தனது அன்னையை பார்த்து புன்னகைத்தவாறே யாழினியின் அருகில் சென்றான் ஹரிஹரன்.

இதுவரை போலியாகவாவது புன்னகைத்துக் கொண்டிருந்தவள், மலரையும் பாரியையும் ஒன்றாக பார்த்தபின் அந்த போலி புன்னகையும் மறைந்தது.

அவளின் உணர்வுகளை அவள் முகபாவனைகளில் இருந்தே புரிந்து கொண்டவன், அதிலிருந்து திசைத்திருப்ப, இந்திராவையும் சிலம்புவையும் அழைத்து அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.

இவங்க என் பிரண்ட்ஸ்…” என்றவன், பேரை கூறப் போகும் முன், “தெரியும், நம்ம ஊர்ல தான இருக்காங்கபேர் கூட தெரியாம இருக்குமா!” என்றாள் யாழினி.

அவனோ குறும்புடன் அவள் காதருகில் குனிந்து, “அப்போ என்னை பத்தியும் தெரியுமா பட்டர்பிளை!” என்க, அவனின் மூச்சுக்காற்று கழுத்தோரத்தில் படர, பாவையவள் தடுமாறிப் போனாள்.

முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு, “இனி இப்படி கிசுகிசுனு பேசாதீங்கஅடிக்குரலில் உறும, “ஏன் பட்டர்பிளை, என்ன பண்ணுது!” என மீண்டும் அவன் விட்ட இடத்திலேயே கிசுகிசுக்க, அவளுக்கு கூசியது.

இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கும்போதே இந்திராவும் சிலம்புவும் அங்கிருந்து நழுவி இருந்தனர்

அவனை முறைத்தவாறே தனது சொந்தங்களுக்கிடையே புகுந்துக் கொண்டவள், அதன்பின் அவனுடன் தனித்திருக்கும் வாய்ப்பை தவிர்த்தாள்

மாலை கொடீசியா வளாகத்தில் திருமண வரவேற்பு நடைபெற இருந்ததால், சற்று முன்னரே அங்கு சென்றிருந்தனர் இரு குடும்பத்தினரும்

ஹரிஹரனும் யாழினியும் தயாராக, வந்தவர்களை வரவேற்க்கும் விதமாக வாயிலில் நின்றிருந்தனர் இரு வீட்டு பெரியவர்களும். ராஜன் அரசியல்வாதி என்பதால் பல பெரிய தலைகள் அங்கு வருகை தர இருந்ததை ஒட்டி, பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆறரை மணி போல் மணமக்கள் இருவரும் மணமேடையில் நிற்க வைக்க, இந்த கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி சிறிதும் இல்லாமல் முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள் யாழினி.

கொஞ்சம் சிரிச்ச முகமா இரு யாழுஎன அவளுடைய மாலையை சரிசெய்வது போல் அவள் பக்கம் குனிந்து கிசுகிசுக்க, அவளோ எங்கோ வெறித்த பார்வையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வை சென்ற திக்கை அவனும் நோக்க, அங்கு மலர்விழியும் பாரிவேந்தனும் ஜோடியாக நின்றிருந்தனர். யாழினியின் மனம் நெருப்பை கக்கிக் கொண்டிருக்க, அவளின் நிலையை எப்படி மாற்றுவது எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

வந்தவர்கள் மணமக்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். மண்டபத்திற்கு வந்ததில் இருந்து மலரின் முகம் வாடியிருக்க, “என்னாச்சு டி, ஏன் டல்லா இருக்க?” என்றவாறே அவளை இடித்தாள் இந்திராகாந்தி.

அவள் நிலையாக நின்றிராததால், தடுமாறப் போக, அவளை பிடித்து நிற்க வைத்தவள், “என்னாச்சு டி?” என அவளை உலுக்கினாள் இந்திராகாந்தி.

ஒன்னுமில்ல இந்துஎன்றவள், தன் அன்னையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள். வந்தவர்களுடன் பேசிக் கொண்டே அவளையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர் இரு ஜீவன்கள்.

தன் அருகே வந்து அமர்ந்த மலரிடம், “நம்ம ஊர்லயும் இப்படி உனக்கும் மாப்பிள்ளைக்கும் பண்ணலாமா மலர், கல்யாணத்த தான் பார்க்க முடியல. இப்படி ரிசப்ஷன் வச்சாவது நம்ம சொந்தபந்தங்கள கூப்பிட்டா நல்லா இருக்கும்லஎன்றவருக்கு அவளின் பதில் அதிர்ச்சியளித்தது.

அதெல்லாம் சொந்தபந்தம் உள்ளவர்களுக்கு ம்மா, அனாதைகளுக்கு இல்லஎன்றவள், “உனக்கு சொந்தபந்தம் இருக்காங்கனு இன்னும் நம்புறியா ம்மா?” என வார்த்தைகள் கடுமையாக குணவதி பேச்சற்றுப் போனார்.

என்று அவர் சுந்தரபாண்டியனை கரம் பிடித்தாரோ அன்றே அவரின் பிறந்த வீட்டு சொந்தம் வேரோடு அறுந்தது. புகுந்த வீட்டிலும் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு என்றுமே ஆதரவு கிட்டியதில்லை. அப்படி இருக்க, தங்களுக்கென எந்த சொந்தமும் இல்லை தானே. நாளை இதே போல் விழா வைத்தாலும் யாரை அழைத்திட முடியும்

தனது மகளுக்கு தாத்தா, அம்மாச்சி, தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பா, அத்தை என எந்த உறவும் இல்லாமல் தானே வளர்த்தார். உறவின் வலிமையையும், அதன் சிறப்பையும் அவளுக்குக் கொடுக்க முடியாத பாவி ஆகி விட்டேனே என அவர் கண்கள் கலங்க, அதனைக் கண்டவள், அவரின் கரத்தை அழுத்தி, “சும்மா சும்மா கண்ணீர வீணாக்கக்கூடாது ம்மா. அப்புறம் தேவைப்படும்போது நமக்கு கிடைக்காம போய்ரும், சொந்தம் இல்ல தான். அதுக்காக நம்ம ஒன்னும் வாழாம போய்டலயே. அதெல்லாம் தள்ளி வச்சுட்டு கொஞ்சம் சிரிச்ச முகமா இரு, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கஎன சமாதானமும் அளித்தாள்.

எம்.பி, எம்.எல். என அரசியல் பிரமுகர்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவிக்க, அவர்களிடத்தில் ஹரிஹரன் புன்னகை முகமாய் பேசிக் கொண்டிருந்தான். யாழினியோ யாருக்கோ வந்த விருந்து என்ற ரீதியில் இருக்க, கல்லூரி நண்பர்கள் வந்தபின் விழா களைகட்டியது.

மலரிடம் பலர் கோவித்தும் கொண்டனர். “எங்ககிட்டலாம் சொல்லாம கூட ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கஎன கோபம் கொண்டாலும், இரு ஜோடிகளுக்கும் கேக் வாங்கி வந்து வெட்டச் சொல்ல மலர் மறுத்தாள்.

ஆனால் நண்பர்கள் அவளை விடாமல் நச்சரித்து சம்மதிக்க வைத்து இரு ஜோடிகளையும் ஒன்றாக மேடையில் நிற்க வைத்தனர். மலரின் திருமணத்தை அறிந்திருந்த நண்பர்கள் பலர் அவளுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருக்க மறுக்க முடியாமல் பாரிவேந்தனுடன் நின்று வாங்கிக் கொண்டாள்.

இதனைக் கண்ட உறவுகள் சிலர், “என்ன பா சுந்தரபாண்டி, ரெண்டு மக வரவேற்பையும் ஒரே மேடைல பண்ணிட்ட போல!” என்றனர். இன்னும் சிலரோ, “இந்த மலருக்கு வந்த வாழ்வ பாரு, அந்த பக்கம் அவ நண்பனாம், இந்த பக்கம் புருஷன். ரெண்டு ஆம்பளைகளையும் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டா, பாவம் இந்த யாழு புள்ளை தான். மாமன பறிகொடுத்தா, இப்போ புருஷனையும் அவக்கிட்ட பறிகொடுத்துருவா போலஎன நொச்சுக் கொட்டினர்.

இதனை எல்லாம் கேட்ட கமலத்திற்கோ கோபம் தலைக்கேறியது. கோபமாக தன் கணவனிடம் சென்றவர், “இங்க என்னங்க நடந்துட்டு இருக்கு? நடக்கிறது நம்ம மவ வரவேற்பா, இல்ல அவ மவ வரவேற்பாஅவ தான் சீவி சிங்காரிச்சு ஆடிக்கிட்டு இருக்கிறா! என் மவ என்ன பாவம் பண்ணா, இப்படி எல்லாரும் அவள போட்டு வாட்டி வதைக்கிறீங்கஎன சத்தமிட, “கொஞ்சம் மெதுவா பேசு கமலம். யார் காதுலயாவது விழுந்திடப் போகுதுஎன மனைவியை அமைதிப்படுத்த முயல,

அவரோ, “ஆமா, இனி நான் பேசறத கேட்டுத் தான் பேசப் போறாங்களாக்கும். ஊரே சிரிக்குது, இப்போ நான் மெதுவா பேசணுமாம். என் வாயை அடைச்சுருவீங்க, ஊர் வாய எப்படி அடைப்பீங்கஎன்றார் ஆவேசமாய்.

காலேஜ் பசங்க எல்லாம் ரெண்டு ஜோடியவும் வாழ்த்த வந்துருக்காங்க. சின்னப் பசங்க, ஆசைப்பட்டு பண்றாங்க, இதுல என்ன தப்பு இருக்கு கமலம். மலருக்கும் யாழுவுக்கும் ஒன்னா தான கண்ணாலம் நடந்தது, அவங்களும் சின்னஞ்சிறுங்க தான!” என அவருக்கு புரிய வைக்க முயன்றார் சுந்தரபாண்டியன்.

ஆனால் கமலமோ, “என் பேச்ச என்னிக்கு கேட்ருக்கீங்க, எப்பவும் அவ மவளுக்குத் தான வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்து பேசுவீங்க. நானும் என் மவளும் எக்கேடோ கெட்டுப் போறோம், நீங்களும் உங்க மவளும் நல்லா இருங்கஎன்றவர், கண்களைக் கசக்கிக் கொண்டே செல்ல சுந்தரபாண்டியனின் நிலை மோசமானது.

அங்கே மேடையை பார்க்க, அவர்களிடம் மறுக்கும் மலரை சம்மதிக்க வைத்து கேக் வெட்ட வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக விழா இறுதிக் கட்டத்திற்கு நெருங்க ஹரிஹரனையும் யாழினியையும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் புகைப்படக்காரர்.

இருவரும் நெருங்கி நிற்கும் காட்சிகளில் அவள் மேல் பட்டும் படாமலும் தான் நின்றிருந்தான் ஹரிஹரன். புகைப்படக்காரரோ, “கொஞ்சம் மேடம ஒட்டி நில்லுங்க சார், அப்போ தான் ஸ்னாப் நல்லா வரும்என்க, “சாரி யாழு, உனக்கு .கே வா!” என அவளிடம் சம்மதம் வேண்டி நின்றான் ஹரிஹரன்.

நான் .கே சொன்னா மட்டும் தான் பக்கத்துல வர்ற மாதிரி பில்டப்என முணுமுணுத்தவள், மறுக்க முடியாமல் சம்மதித்தாள். கீழே அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் தான் இருந்தது. இதில் லைவ் டெலிகாஸ்ட் போல் ஆங்காங்கே பெரிய திரையில் மணமேடையில் இருப்பது அப்படியே ஒளிபரப்பப்பட்டிருக்க, தன்னுடைய சிறு முகச் சுளிவும் அப்பட்டமாய் காட்டிக் கொடுக்கும் என்றெண்ணியவள், வேறுவழி இல்லாமல் சம்மதித்தாள்.

அந்த புகைப்படக்காரரோ ஹரிஹரனுக்கு ஆதரவாக செயல்படுவது போல் இருவரையும் மேலும் நெருங்க வைத்தார். யாழினி தயங்குவதைக் கண்ட அவர், “இப்பலாம் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி போட்டோஸ் எடுக்க யாரும் தயங்கிறது இல்ல மேடம், நீங்க ஏன் இவ்ளோ நெவ்வர்ஸ்ஸா இருக்கீங்கஎன்றிட, அவளின் பல் அறைபடும் சப்தம் ஹரிஹரனுக்கு கேட்டது.

அவன் முகத்தில் புன்னகை மலர, அவளை மேலும் நெருங்கி நின்றான். அவனின் அருகாமையில் பெண்ணவள் தவித்து தான் போனாள். தன் தந்தையின் அருகாமையை மட்டுமே அனுபவித்திருந்தவள், தற்போது ஒரு அந்நிய ஆணின் அருகாமை பெண்ணவளை தகிக்கத் தான் வைத்தது

என்னதான் அவனின் சீண்டல்கள் அவளை கோபமடைய செய்திருந்தாலும் அவனின் அருகாமையில் அவளை அறியாமல் அவள் கன்னங்கள் சிவப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தன்னவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கி இருந்தான் ஹரிஹரன்.

ஒருவழியாக புகைப்படம் எடுத்து முடிக்க, நீண்ட பெருமூச்சோடு அங்கிருந்த நாற்காலியில் பொத்தென அமர்ந்தாள் யாழினி. ஹரிஹரனோ புகைப்படக்காரரிடம் ஏதோ பேச, அவரும் சரியென தலையாட்டினார்.

உடனே இந்திராவை அழைத்த ஹரி அவள் காதில் ஏதோ கூற, அவளும் புன்னகைத்த வண்ணம் தலையாட்டியவள் மலரை நோக்கிச் செல்ல, செந்திலை அழைத்தவன் அவனிடமும் ஏதோ கூற அவனும் தலையாட்டிய வண்ணம் பாரியை தேடிச் சென்றான்.

சில நிமிடங்களில், “என்ன எங்க டி கூட்டிட்டுப் போறஎன்றவாறே இந்திரா இழுத்த இழுவைக்கு தகுந்தவாறே நடந்து வந்தாள் மலர்விழி.

கொஞ்சம் அமைதியா தான் வாயேன் டிஎன்றவாறே இந்திரா மேடையருகே அழைத்து வந்திருக்க, செந்திலும் பாரிவேந்தனை அழைத்து வந்திருந்தான்.

மலரின் முகத்தை ஆராய்ந்த இந்திரா, “இது .கேஎன்றவாறே, அவள் முடிகளை ஓரமாக ஒதுக்கிவிட்டு அவளின் பட்டுப் புடவையின் மடிப்பையும் சரிசெய்து விட்டாள்.

இப்போ இத எதுக்கு டி சரி பண்றஎன நொந்தவாறே வினவினாள் மலர்விழி. “ஷ்என வாயில் விரல் வைத்தவள், ஒரு ஐந்து நிமிடம் ஆராய்ச்சி செய்து, “ஹரி, மலர் ரெடிஎன்க, செந்திலும் அங்கு பாரிவேந்தனுக்கு அதைத் தான் செய்து கொண்டிருந்தான்.

ஹரிஹரன் புகைப்படக்காரரிடம் கண்ஜாடைக் காட்ட, “மேடம் நீங்களும் சாரும் கொஞ்சம் இங்க வந்து நில்லுங்கஎன்க, மலரோ இந்திராவை முறைக்க, “அட போ டிஎன அவளைத் தள்ளி விட்டாள் இந்திரா.

அங்கு மறுப்பதற்கு இருவருக்குமே அவகாசம் கொடுக்கப்படவில்லை. இருவரையும் நெருங்கி நிற்க சொல்ல, பாரி மலரின் முகத்தைப் பார்த்தான். மலரோ சுற்றி உள்ளவர்களைத் தான் பார்த்தாள்.

அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் தான் இருக்க, வேறுவழி இல்லாமல் சம்மதித்து தன்னவனின் அருகே நெருங்கி நின்றாள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருவரையும் பிரிந்திருக்க அனுமதிக்கவில்லை அந்த புகைப்படக்காரர்.

பாரிவேந்தனின் காட்டில் அடைமழை தான். போட்டோஷூட் முடிந்து அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். வீட்டினுள் செல்வதற்கு முன் இம்முறை பத்மாவே மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார். இதனை எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லை யாழினி.

வீட்டினுள் வந்தவள் நேராக தங்கள் அறையை நோக்கி செல்ல, அனைவருமே தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் உறங்கச் சென்றனர். அறைக்குள் நுழைந்தவள், தன் கழுத்தில் போட்டிருந்த மாலையை கழட்டி எதிரே இருந்த சுவற்றில் வீசி எறிந்தாள். விழாவில் நடந்தவைகளை நினைக்கும்போதே அவளது கோபம் பலமடங்காக கைக்கு கிடைத்ததை எல்லாம் வீசி எறிந்துக் கொண்டிருந்தாள். அவள் வீசிய பூ ஜாடி ஒன்று அறையின் வாசலில் நின்றிருந்த ஹரிஹரனின் மீது படப்போக அதனை லாவகமாக பற்றி இருந்தான் அவன். அவனைக் கண்டவளின் கோபம் இன்னும் அதிகமாக, அவனோ கூலாக இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிய வண்ணம் நின்றிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
9
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. எம்மா யாழ்க்கு செய் கோவம்👿👿👿