Loading

ட்டிலில் அமர்ந்திருந்தவனின் மனம் அலைப்புற்று இருக்க, எழுந்து ஜன்னலின் அருகே நின்றான் பாரிவேந்தன். பாதி திறந்திருந்த ஜன்னலின் வழியே வீட்டின் பின்பக்கம் இருந்த மல்லிகைத் தோட்டத்தின் மணம் காற்றில் பரவி அவனது நாசியை வருடியது. மல்லிகை மணத்தையும் தாண்டி அவனவளின் மணம் அவன் நாசியை இதமாய் வருடி, அவள் அறையினுள் வந்துவிட்டதை அவனுக்கு உணர்த்திச் சென்றது.

தன்னவளை கரம் பிடித்து, வாழப் போகும் வாழ்க்கையை பற்றி ஒரு காலத்தில் கனவுகளோடு சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தவன் தான். ஆனால், அவையெல்லாம் ஒரே நாளில் மூட்டைக் கட்டி வைத்துவிட காரணமாகியவளும் அவளே தான். விதியோ இன்று அவர்களை மீண்டும் சேர்த்து வைத்திருந்தாலும், சந்தோசத்திற்கு பதில் மனதில் பயமே உண்டாகி இருந்தது.

மலர்விழியோ அறைக்குள் வந்ததிலிருந்து திரும்பி நின்றிருந்த அவனின் முதுகை தான் வெறித்துக்கொண்டிருந்தாள். தன் வருகையை உணர்ந்து அவன் திரும்புவானென அவள் எதிர்பார்த்திருக்க அவனோ இன்னும் திரும்பாமல் இருக்கவும் அவனை அழைக்கவும் மனமில்லாமல் இருக்க, லேசாகத் தொண்டையை செருமினாள்.

அவளின் தொண்டை செருமல் தனக்கான அழைப்பு தான் எனப் புரிந்து கொண்டவன், அவளின் புறம் திரும்ப, அவன் கண்ணில் படும் வண்ணம் பால் சொம்பை அங்கிருந்த கண்ணாடி டேபிள் மேல் வைத்தவள் எதுவும் பேசாமல் மூலையில் இருந்த கோரப் பாயை எடுத்துத் தரையில் விரித்தாள் மலர்விழி.

அவளின் அமைதி அவனுக்கு நிம்மதியாக இருந்தாலும், மனதின் ஓரம் தன்னை அவள் ஒதுக்குவதை ஏற்க முடியாமல் வலிக்கவும் செய்தது. ஒரு தலையணையை எடுத்துப் போட்டவள், போர்வையை தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டு படுத்தாள்.

அவளைத் தாண்டிச் சென்று கட்டிலின் விளிம்பில் அமர்ந்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்திருந்தாலும் உறங்குவது போல் கண்களை மூடிக் கொண்டவளின் மனம் ஊமையாய் அழுதது. தான் விரும்பிய வாழ்க்கை தான், ஆனால் கிடைத்த விதம்?

உறங்குவது போல் நடித்தவள் சிறிது நேரத்தில் உண்மையாகவே உறங்கிவிட, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் உறங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

அவளது கரத்தைத் தனது கரங்களுக்குள் எடுத்துப் புதைத்துக் கொண்டவன், “என்னை மன்னிச்சுரு புள்ள, உன் மனசு நோகற மாதிரி நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான். ஆனா, எனக்கு வேற வழி தெரியல புள்ள. உன்னை நினைச்சுட்டு நான் யாழுவ கட்டி இருந்தா அது நரக வாழ்க்கை புள்ள. இதெல்லாம் பெரிய விசயமானு உனக்குத் தோணலாம், ஆனா உன்னை என் பத்து வயசுல இருந்தே நெஞ்சுல சுமக்கிறவன் புள்ள நான். எனக்கு நீயும் யாழுவும் வேற வேற இல்ல தான்…. ஆனா கணவன், மனைவிங்கிற உறவ என்னால கண்டிப்பா யாழு கூட பங்கு போட முடியாது. அப்புறம் ஏன் மாமு அவள கட்டிக்க சம்மதம் சொன்னனு நீ கேட்கலாம். என்னால மாமா கஷ்டப்படறத பார்க்க முடியல புள்ள. அதான் சம்மதம் சொன்னேன், ஆனா சம்மதம் சொல்லிட்டு தினந்தினம் நான் செத்துப் பொழைச்சேன் புள்ள. உன் கழுத்துல தாலி கட்ற அந்த நொடிவரை நான் ஆயிரம் முறை செத்து பொழச்சுருப்பேன், என்கூட எவ்ளோ வேணும்னாலும் நீ சண்டைப் போடு. ஏன் நாலு அடி கூட அடிச்சுக்கோ, ஆனா என்னை விட்டு மட்டும் போய்றாத புள்ளஎன வாய்விட்டுப் புலம்பியவன் அவளின் இரு கரத்தையும் தன் கரத்தால் பொத்தி அதில் தன் இதழை ஒற்றி எடுத்தான் பாரிவேந்தன்.

அவனின் கன்னங்களோரம் வழிந்த கண்ணீர் துளி, அவளின் கரத்தில் பட்டுத் தெறிக்க இமைகளை மூடி இருந்தவளின் கண்களும் பனித்தது. அவள் உடல் அசைவதை உணர்ந்தவன், அவசரமாக எழுந்து அவளுக்குப் போர்வையை நன்கு போர்த்தி விட்டவன் கட்டிலின் மறுபுறம் தானும் பாய் ஒன்றை விரித்துப் போட்டுப் படுத்தான்.

கண்களைத் திறக்கா விட்டாலும் அவனின் ஒவ்வொரு அசைவையும் அவள் உணர்ந்து தான் இருந்தாள். சிறிது நேரத்திலேயே அவன் உறங்கி விட்டதன் அடையாளமாய் அந்த அறை முழுக்க நிசப்தம் நீடிக்க, அவன் புறம் திரும்பிப் படுத்தாள் மலர்விழி.

இருவருக்குமிடையே கட்டில் மட்டுமே தடையாய் இருந்தது. கட்டிலின் கீழுள்ள இடைவெளியில் அவனை ஜன்னலின் வழியே வந்த நிலவொளி மூலம் பார்க்க முடிந்தது. அவன் இதழ்கள் ஒற்றிய கரத்தைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவளின் இதழ்கள் மலர்ந்தது.

யாழினியின் இல்லத்தில், அவளின் அறையில் குட்டிப் போட்ட பூனைபோல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

அப்பொழுது யாழினியும் அறையினுள் நுழைய அவளைக் கண்டவனின் கால்கள் அதே இடத்தில் தடைப் போட்டது. இளம் பச்சை வண்ண ஜார்ஜெட் புடவையில் செயற்கை ஒப்பனையின்றி இரு புருவங்களுக்குமிடையே வட்ட வடிவ பொட்டு வைத்திருந்தாள்.

தோளின் இருபுறமும் மல்லிகையின் ஆளுமை நிறைந்திருக்க, கையில் பால் சொம்புடன் உள்ளே வந்தாள். அவனின் திகைப்பை அவள் உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் பால் சொம்பை அவனிடம் நீட்ட, அதனை மறுக்காமல் அவன் வாங்கிக் கொள்ளவும் கட்டிலில் போய் அமர்ந்துக் கொண்டாள் யாழினி.

சொம்பை அங்கு ஓரமாக வைத்துவிட்டு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன், “பட்டர்பிளை…” என ஆரம்பிக்கப் போகும் முன், தனது கரத்தால் அவன் பேசுவதைத் தடுத்தவள், “என்ன வேணும் உங்களுக்கு? இந்த ஊருக்கு எதுக்காக வந்தீங்க? என்னைப் பார்த்த நாள்ள இருந்து வம்பிழுத்தீங்க. சரி, ஏதோ வெளியூர் ஆச்சேனு நானும் சும்மா இருந்தேன். எனக்கு நிச்சயமானது தெரிஞ்சும் என்னை வம்பிழுத்தீங்க, அப்புறம் என் கல்யாணம் நின்னு நான் அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு நிக்கும்போது நீங்க நல்லவராகப் பெரிய மனசு பண்ணி எனக்கு வாழ்க்கையும் கொடுக்கறேன்னு சொல்லி, இதோ இந்த தாலியவும் கட்டியாச்சு. இதெல்லாம் இதுக்காக தான?” எனக் கட்டிலைப் பார்த்து அவள் விஷமமாய் வினவ, ஒரு கூடை நெருப்பை அள்ளித் தன்மேல் கொட்டியதைப் போல் துடிதுடித்தான் ஹரிஹரன்.

அவளை பார்த்து பத்து நாட்கள் தான் ஆனது என்றாலும் அவன் மனதில் காதல் என்ற சிம்மாசனமிட்டல்லவா அவள் அமர்ந்திருக்கிறாள். ஆனால், அவளின் வார்த்தைகளில் அவன் அவளுக்காகச் செய்தததை ஒரே வார்த்தையில் கேவலப்படுத்தி விட்டாளே என்ற கோபம் தலைக்கேறியது.

அவளை அடிக்க ஓங்கிய கை அந்தரத்திலே தொங்க தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அதே கோபத்தை எதிரே இருந்த சுவரின் மீது காண்பித்தான். அதிலிருந்தே அவன் கோபத்தின் அளவை அவளாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

என்னை கேவலப்படுத்துறேனு உன்னை நீயே தரம் தாழ்த்திக்காத டி. என்னை பார்த்தா இதுக்கு அலைறவன் மாதிரியா இருக்குஎனக் கட்டிலை காண்பித்துக் கூறியவன், “என் மனசு பூரா…” எனக் கூற வந்தவன், பாதியோடு நிறுத்திவிட்டு, “இப்ப நினைச்சா கூட நான் எதிர்பார்க்கிறதா நீ சொன்னத என்னால நிறைவேத்திக்க முடியும், அது தடுக்க நீயே நினைச்சாலும் முடியாது. ஆனா, அதுக்கு இது தேவை இல்ல டிஎன அவளின் தாலியை காண்பித்தவன், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்று, “போ, போய் படு. உன் சம்மதம் இல்லாம என் விரல் கூட உன்மேல படாது, இது என் ஃபிளவர் மேல சத்தியம்என்றவன், தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான் ஹரிஹரன்.

அவனின் கோபத்தைக் கண்டு அவள் ஒரு நொடி தடுமாறி இருந்தாலும் அவனின் இறுதி வாக்கியத்தில் அவளின் கோபம் சுர்ரெனத் தலைக்குமேல் ஏறியது. அதே கோபத்தோடு அவள் கட்டிலில் படுக்க, ஹரிஹரனின் தூக்கம் தான் தொலைந்துப் போனது.

கரிசல்பட்டியின் அன்றைய விடியல் இரு ஜோடி தம்பதியரின் புது வாழ்க்கைக்கான விடியலாக எண்ணி கதிரவன் தன் ஒளிக்கதிர்களை நிலமகளின் மீது படர விட்டிருந்தான்.

காலை எழுந்தவுடன் எப்பொழுதும் போல் மலர்விழி தனது டியூட்டிக்கு தயாராக, அதனைக் கண்ட குணவதி, “இன்னும் கட்டுன தாலியோட ஈரம் கூடக் காயல, அதுக்குள்ள வேலைக்குப் போகணுமா மலர்?” எனக் கடிந்துக் கொண்டார்.

ம்மா, நம்ம இஷ்டத்துக்குலாம் லீவு போட முடியாது ம்மா. அதுவும் இல்லாம நான் டியூட்டில ஜாய்ன் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது, ஹாஸ்பிட்டல்ல இன்னிக்கு தான் எனக்கு ரெண்டாவது நாளு. கரிச்சட்டியும் வரமாட்டான், அவங்க மூணு பேர் தான் கேம்ப்க்கு கிளம்பறாங்க. நானும் லீவு போடறதுக்கு வாய்ப்பே இல்ல. நான் கிளம்பறேன், எதுவா இருந்தாலும் டியூட்டி முடிஞ்சு வந்து பேசிக்கறேன்என அவள் கிளம்பினாள்.

நீங்களாவது சொல்லுங்க மாப்பிள்ளை, இன்னிக்கு அண்ணாவும் அண்ணியும் உங்கள அழைச்சுட்டுப் போக வரும்போது இவ இங்க இல்லாம இருந்தா நல்லா இருக்குமா?” எனத் தன் மருமகனையும் துணைக்கு இழுக்க, அவனோமலரு சொல்றதும் சரி தான் அத்தை, அவ வேலைக்குச் சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது. வேற வேலைனா கூடத் தள்ளிப் போடலாம், இது அப்படி இல்லையே அத்தை. அவ போய்ட்டு வரட்டும், மதியம் வந்துருவாள்ள, அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போய்க்கறோம் அத்தைஎனத் தன் மனைவிக்கு ஆதரவாகப் பேச, “என்னமோ பண்ணுங்க, என் பேச்ச யார் தான் கேட்கிறாங்கஎனப் புலம்பியவாறே சமையற்கட்டிற்குள் நுழைந்தார்.

இதனை எல்லாம் கேட்டுக் கொண்டே தங்கள் அறையிலிருந்து வந்த இந்திரா, “அம்மா சொல்றதும் நியாயம் தான மலர், அண்ணாவோட அப்பா, அம்மா வரும்போது நீ இங்க இல்லாம இருக்கிறது நல்லா இருக்குமா?” என்றாள்.

அத்தை கிட்ட நான் பேசிக்கிறேன் இந்து, நீங்களும் சீக்கிரமா கேம்ப் கிளம்புங்க. மூணு பேர் இருக்கீங்க, பாத்துக்குவீங்க தான?” என வினவ, “ஆமா இங்க பேஷண்ட்ஸ் வந்து கியூல நிக்கிறாங்க பாரு, வர்றதே ஒன்னு ரெண்டு. இதுக்கு நாங்க மூணு பேர் பத்தாதா!” என அவள் சடைந்துக் கொள்ள, சிறு புன்னகை ஒன்றை சிந்தியவள், “சரி இந்து, நான் கிளம்பறேன்என அவள் வாசல் படியில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில், உள்ளே இருந்து வேகமாக வெளியே வந்த குணவதி, “மாப்பிள்ளையோட தான மலர் போகற?” என்க, அதுவரை தனியாகச் சென்றுவிடலாம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு தன் அன்னையின் கேள்வி தடுமாற வைத்தது.

அதுவந்து ம்மா…” என அவள் இழுக்க, அதற்குள் கையில் தன்னுடைய புல்லட்டின் சாவியோடு வந்து நின்றான் பாரிவேந்தன்.

பாத்து போய்ட்டு வாங்கஎன குணவதி இருவரையும் பார்த்துக் கூற, தன் அன்னையின் முன் மறுக்க முடியாமல் வெளியே சென்றாள். “எப்போ எப்போனு இருந்தீங்களா ண்ணா?” என இந்து நமட்டு சிரிப்பு சிரிக்க, பாரிவேந்தனின் முகம் செம்மையுற்றது.

பார்றா, அண்ணா வெட்கம்லாம் படறாங்கஎன அவள் கிண்டல் செய்ய, அதே புன்னகையுடன் வண்டியை இயக்கினான். வேறு வழி இல்லாமல் வண்டியில் அவள் அமர, வண்டி மருத்துவமனையை நோக்கிப் பயணப்பட்டது.

ஐந்து நிமிடங்களும் பாரிவேந்தனுக்கு நொடிப் பொழுதாய் கரைய, அவளுக்கோ ஒரு யுகமாய் தோன்றியது. மருத்துவமனை முன் அவளை இறக்கிவிட, இறங்கியவளின் மனம் முதல்நாள் பணியை நினைத்தது. அவள் முகம் வாட, அவளின் எண்ணத்தைப் படித்தவன் போல், “பழச நினைக்காம உள்ள போ புள்ளஎன்றான் பாரிவேந்தன்.

அவளோ பதிலளிக்காமல் உள்ளே சென்றவள், பின் என்ன நினைத்தாளோ திரும்பிப் பார்க்க, அவன் இன்னும் அவளின் பார்வைக்காக அங்கு தான் காத்திருந்தான். “பாத்து போஎன இதழசைத்தவன், கை காட்ட அவள் இதழ்கள் சிறு புன்னகையை தத்தெடுத்தது.

அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்க, விசிலடித்தவாறே வண்டியை இல்லம் நோக்கித் திருப்பினான்.

பத்மாவும் ராஜனும் காலையிலேயே யாழினியின் இல்லத்திற்கு வந்திருந்தனர். காலை உணவு முடிந்தவுடன் ராஜன், “தம்பியவும் மருமகளையும் கோயம்புத்தூர் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கோம் சம்பந்திஎன்றார் சுந்தரபாண்டியனிடம்.

இன்னிக்கு ரெண்டாம் நாள் சம்மந்தி, நாளைக்கு நாள் கணக்குப் பார்த்துப் போகலாங்களே!” என அவர் தயங்கியபடியே கூற, “புரியுது சம்பந்தி, ஆனா எலெக்சன் வேற பக்கத்துல வந்துருச்சு. நான் அங்க இருந்தாக வேண்டிய சூழ்நிலை, அதே நேரம் இவங்களுக்கும் அங்க சின்னதா ஒரு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கோம். கல்யாணம் தான் அவசர அவசரமா நடந்துருச்சு, ரிசப்ஷனும் வைக்கலனா சொந்தக்காரங்க மத்தில நல்லா இருக்காது. அதப்பத்தி உங்ககிட்ட பேசிட்டு அவங்களையும் கையோட ஊருக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு தான் காலைல சீக்கிரமா வந்தோம்எனத் தங்களின் எண்ணத்தைக் கூறினார் ராஜன்.

இவ்ளோ நீங்கச் சொல்லும்போது நாங்க வேண்டாம்னா சொல்லப் போறோம் சம்பந்தி, தாராளமா கூட்டிட்டுப் போங்க. மறுவீட்டு விருந்துலாம் அப்புறம் கூடப் பார்த்துக்கலாம்என அவர் அரைமனதோடு சம்மதிக்க, பத்மாவோ யாருக்கோ வந்த விருந்து என்ற ரீதியில் தான் அங்கு அமர்ந்திருந்தார்.

சுந்தரபாண்டியனே கமலத்திடமும் யாழினியிடமும் கூறி, வீட்டின் மூத்தவரான ராமாயி பாட்டியிடமும் கூற, அனைவரின் சம்மதத்தோடு அன்றே நல்ல நேரத்தில் மணமக்களை கோயம்புத்தூர் அழைத்துச் செல்ல ஏற்பாடானது.

தாலி கட்டியது மட்டுமே அவனின் முடிவாக இருக்க, அதன்பின் நடப்பவைகளுக்கு எல்லாம் வெறும் பார்வையாளாராக மாறி இருந்தான் ஹரிஹரன். இவற்றில் எதிலும் அவனது கவனம் லயிக்கவில்லை. நீண்ட நேரம் யாருக்கோ அவன் அலைப்பேசியில் தொடர்புக் கொள்ள முயற்சித்து மறுமுனையில் அழைப்பு எடுக்காமல் போக அந்த டென்ஷனில் அமர்ந்திருந்தான்.

முகாமிற்கு செல்வதற்கு முன் நண்பர்கள் மூவரும் ஹரிஹரனை பார்க்க அங்கு வந்திருக்க, அவனின் முகமாறுதலைக் கண்டு, “என்னாச்சு டா மச்சான், ஏன் ஒரு மாதிரி இருக்க? நைட் ஆக்ஷன் கொஞ்சம் அதிகமோ!” என அவன் காதில் கிசுகிசுத்தான் செந்தில்.

இவன் வேற, நேரங்காலம் தெரியாம கடுப்பேத்தறான்எனப் புலம்பியவாறே, “காலைல இருந்து ஃபிளவருக்கு ட்ரை பண்றேன் டா. அவ கால் அட்டெண்ட் பண்ணவே மாட்டேங்கிறாஎன்றான் சோகமாய்.

இதான் மேட்டரா, அவ நீ இன்னிக்கு லீவு, அதுனால எங்க மூணு பேரயும்ல கேம்ப் அட்டெண்ட் பண்ண சொன்னா. அப்போ நீ பேசலயா?” என்றாள் சிலம்பு. “இல்ல சிலம்பு, அவ என்மேல இன்னும் கோபமா இருக்கா போல. ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ணவே மாட்டேங்கிறாஎன்றான்.

சரி விடு, அதான் அவ லீவுனு சொல்லிட்டாளே. நீ நல்லா உன் புது மனைவி கூட ஜமாய் டா மச்சான்என இந்திரா கிண்டல் அடிக்க, “நீ வேற ஏன் டி கடுப்பேத்தற, அக்காவும் தங்கச்சியும் என்னை பந்து மாதிரி மாத்தி மாத்தி அடிக்கிறாளுங்க. அவ சொல்லாமலே இதான் நான் பண்ணனும்னு ஆர்டர் போட்டுட்டு அவ வேலைக்கு கிளம்பிட்டாளுக்கும்என்றான் ஹரிஹரன் சற்று கடுப்புடன்.

இது மறைமுக ஆர்டரா! அப்போ அத எக்ஸிக்கியூட் பண்ணு மச்சான், நாங்க கேம்ப்க்கு கிளம்பறோம்என்றவர்கள், ராஜனிடமும் பத்மாவிடமும் பேசிவிட்டு கிளம்பினர்.

அவர்கள் இன்றே ஹரிஹரனையும் யாழினியையும் கோவைக்கு அழைத்துச் செல்வதை அறிந்தவர்கள், ஹரிஹரனுக்கு தேவையான விடுமுறையை தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு செல்ல, அங்கு நடப்பவைகளுக்கு தலையாட்டியவண்ணம் அமர்ந்திருந்தான் ஹரிஹரன்.

பத்தரை மணிக்கு மேல் நல்ல நேரம் ஆரம்பிப்பதால் அந்த நேரத்தில் ஹரிஹரனையும் யாழினியையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய, கிளம்பும் முன் தன் மகளிடம் ஒரு டஜன் அறிவுரைகளை அள்ளி வீசினார் கமலம்.

திடீரென மாற்றப்பட்ட மணமகன், புது உறவுகள் அனைத்தையும் தாண்டித் தான் வாழப் போகும் இடத்தில் தனக்குப் பிடிக்காத, தான் வெறுக்கும் மலர்விழியே அந்த வீட்டின் ராணியாக இருக்கின்றாள் என்ற கோபம், என அனைத்தும் கலந்த கலவையான உணர்வுகளோடு அவள் இருக்க, அந்த நேரத்தில் தன் தாய் கூறிய அனைத்து அறிவுரையும் விழலுக்கிறைத்த நீராகின.

அவளின் புது வாழ்க்கைப் பயணம் ஹரிஹரனுடன் கோயம்புத்தூரை நோக்கிப் பயணமானது. அவர்களுடன் கமலமும், யாழினியின் தாய் வீட்டு உறவினர் சிலரும் உடன் சென்றனர்.

சுந்தரபாண்டியனுக்கோ ஒரு மகளை அவளது கணவனின் இல்லத்திற்கு அனுப்பி வைத்த நிம்மதியுடன், அடுத்த மகளைப் பார்க்க மலர்விழியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்