Loading

ரிஹரன் மலர்விழியை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டே காரை செலுத்த, அவளோ எதுவுமறியாத குழந்தைபோல் முகத்தை வைத்திருந்தாள். மற்ற மூவரும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்தனர்.

 

ஊர் மந்தைக்கு ஐவரும் வந்து சேர, ஊர் பெரியவர்களாக நான்கைந்து பெரியவர்கள் நடுநாயகமாக அமர்ந்திருந்தனர். மலர்விழி காரை விட்டு இறங்க, அனைவரின் பார்வையும் அவள்மீது தான் பதிந்திருந்தது.

 

அவள் கூட்டத்தில் வந்து நிற்க, “ஏப்பா அதான் அந்த புள்ளை வந்துருச்சுல்ல, கூட்டத்த ஆரம்பிக்கலாம்ல” என கூட்டத்திலிருந்து ஒருத்தர் குரல்கொடுக்க, “ஆரம்பிக்கலாமா பா” என அனைவரிடமும் சம்மதம் கேட்டு, பெரியவர் ஒருத்தர் ஆரம்பித்தார்.

 

அனைவரும் சம்மதிக்க, “அம்மாடி மலரு, இன்னிக்கு உன் அத்தை மவனுக்கும், உன் தங்கச்சிக்கும் கண்ணாலம் நடக்க இருந்தது தெரியுமா?” என்றார் மலர்விழியிடம்.

 

அவள் தெரியும் என்று தலையாட்ட, “தாலி கட்டப் போற சமயம் பாரிவேந்தன் தனக்கு ஏற்கெனவே கண்ணாலம் ஆகிட்டதா சொல்லி மணவறைல இருந்து எந்திரிச்சுப்புட்டான். யார கண்ணாலம் கட்டிக்கிட்டனு கேட்டா அவன் உன்னை கை நீட்றான், அதுக்கு நீ என்ன சொல்ற மா?” என்றார்.

 

அவளோ பதிலேதும் பேசாமல், மறைத்து வைத்திருந்த தாலியை வெளியே எடுத்துப் போட்டாள். அதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, யாழினியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

 

கமலமோ, “என் வாழ்க்கைய உன் அம்மா நாசமாக்குனதும் இல்லாம இப்போ என் மவ வாழ்க்கையவும் கெடுக்க வந்துட்டியே டி பாவி” என அவளை அடிக்கவர, அதற்கு முன் சுந்தரபாண்டியன், கமலத்திற்கும் மலர்விழிக்கும் இடையில் நின்று தடுத்தார்.

 

“ஏய்யா என்னைத் தடுக்குற? அன்னிக்கு அவ அம்மா உன்னை முந்தானைல முடிஞ்சுக்கிட்டா. இப்போ அவ மவ என் மவ வாழ்க்கையவும் கெடுக்க வந்துட்டா. இன்னும் என்னை அமைதியா இருக்கச் சொல்றியா?” என அக்னி ரூபமாய் அவர் எதிர்க்க, “என்னைய என்ன வேணும்னாலும் சொல்லு கமலம். ஆனா, என் சாமிய எதுவும் சொல்லாத. என் சாமி நினைச்சதால தான் இன்னிக்கு கண்ணாலம் வரைக்கும் வந்தது. உன் மவ ஆசைப்பட்டானு அவ ஆசைய விட்டுக் கொடுத்தவ, இன்னொரு வார்த்தை என் மவ மேல தப்பு சொன்னா நான் பொல்லாதவனாகிடுவேன்” என மலர்விழிக்கு ஆதரவாய் பேச, தன் முன் தனக்கு ஆதரவாய் நிற்கும் தன் தந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்விழி.

 

“அவ தான் உங்க மவ’னா, இவ யாரு மவங்க? இவள உங்களுக்குத் தான பெத்தேன், இவ வாழ்க்கைய அழிச்சவளுக்கு ஆதரவா நிக்குறதும் இல்லாம என்னையும் தடுக்கிறது நியாயமா?” என கமலம் கூற, “அம்மாடி கமலம், அதப்பத்தி பேசத் தான கூட்டம் போட்ருக்கோம். செத்த நேரம் கம்முனு இரு மா, நாங்க விசாரிச்சுட்டு இருக்கும்போதே நீங்க இப்படி அடிச்சுக்கிட்டா அப்புறம் ஊர் பெரியவங்கனு நாங்க எதுக்கு இருக்கிறோம்” என்றார் பெரியவர்.

 

“ஊர் பெரியவங்க என்னத்த கிழிச்சுப்புட்டீங்க, இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன இதே கூட்டத்துக்கு முன்னாடி என் மவள மாதிரி தான நானும் நின்னேன். அப்போ எனக்கு யாரு நீதி கொடுத்தா, இன்னிக்கு என் மவ நிக்கிறா. அவளுக்கும் நீதி கிடைக்கப் போறது இல்ல, பெருசா பேச வந்தீட்டீங்க வெள்ளை வேஷ்டிய கட்டிக்கிட்டு” எனக் கோபமாய் வார்த்தைகளை விட்டார் கமலம்.

 

“உன் கோபம் புரியுது தாயி, ஆனா உன் கதையவும் உன் மவ கதையவும் ஏன் முடிச்சுப் போடுற. அன்னிக்கு உன் புருஷன் இதோ இங்க நிக்கிற குணவதி கழுத்துல தாலிய கட்டிட்டுல்ல இங்க நின்னாரு. தன் மாமன மாதிரி இல்லாம உன் மவ வாழ்க்கையவும் அழிக்கக் கூடாதுன்னு தான் இந்த பய தாலி கட்டாம எந்திரிச்சான். இப்போ இங்க அவன் கட்டுன தாலிய சுமந்து நிக்கிற மலருக்குத் தான் நியாயம் கேட்கணும். அத விட்டுட்டு பழைய கதையெல்லாம் பேசறது நல்லா இல்ல மா” என்றார்.

 

அதற்குமேல் எதுவும் பேசாமல் கமலம் அமைதியாக நிற்க, “பாரிக்கு இன்னிக்கு உன் பெரியம்மா பொண்ணோட கண்ணாலம்னு தெரிஞ்சும் ஏன் மா நீ எதுவும் பேசாம இருந்த? கண்ணாலத்த வந்து நீ தான் நிறுத்தி நியாயம் கேட்டு இருக்கணும். ஆனா, பாரி சொல்லித் தான இந்த விஷயமே வெளிய தெரிய வருது. அவனும் சொல்லாம அந்த புள்ள கழுத்துல தாலிய கட்டி இருந்தா அந்த புள்ளை வாழ்க்கைக்கு யாரு மா பதில் சொல்றது?” என்றார் ஊர் பெரியவர்.

 

“முதல்ல நான் எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். எனக்கும் பாரி மாமாவுக்கும் கல்யாணம் ஆனது உண்மை தான், ஆனா அது நானே எதிர்பாராத சூழல்ல அப்படி நடந்துருச்சு. இதோ இங்க நிக்கிற அம்மாச்சி தான் என் கழுத்துல அவரு தாலி கட்டுனதுக்கு சாட்சி. முந்தா நேத்து நைட்டு இதே கோவில்ல தான் என் கழுத்துல தாலி கட்டுனாரு. இன்னிக்கு அவருக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணது தெரிஞ்சும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அவர் யாழு கழுத்துல தாலி கட்ட மாட்டாருன்னு தான். எல்லாரும் என் அம்மாவோட புருஷன் மாதிரி தான் இருப்பாங்கன்னு இல்லயே, என் மாமன மாதிரி கட்டுன மனைவிக்கு உண்மையாவும் இருப்பாங்கன்னு நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கணும்ல” என்றவள் சுந்தரபாண்டியனை பார்க்க, அவரோ தன் மகளின் வார்த்தையில் சுக்குநூறாகிக் கொண்டிருந்தார்.

 

யாழினியை பார்த்து, “என்ன மன்னிச்சுரு யாழு, உன் வாழ்க்கைய நான் தட்டிப் பறிக்கணும்னு என்னிக்கும் நினைச்சது இல்ல. ஆனா, இந்த கல்யாணம் நானே எதிர்பாராதது, எதிர்பாராத விதமா நடந்து இருந்தாலும் என் புருஷன உனக்கு விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் நல்லவளும் இல்ல. இந்த கல்யாணம் நின்னதால உன் மனசு படுற கஷ்டத்த என்னால புரிஞ்சுக்க முடியுது. உன்கிட்ட மன்னிப்ப தவிர வேற எதுவும் என்னால கேட்க முடியாது. எங்களை மன்னிச்சுரு யாழு” என அவள் கூறி முடித்தாள்.

 

“ஏப்பா பழனி, இப்போ நீங்க என்ன சொல்றீங்க. உன் மவன் ஆசைப்பட்டு தான் அந்த புள்ள கழுத்துல தாலிய கட்டி இருக்கான், அதுவும் அவங்க அப்பாயி முன்னாடி தான். தங்கச்சிக்கு பதிலா அக்காவ கட்டிட்டு வந்து நிக்கிறான், உங்க முடிவு என்ன?” என்றார் பெரியவர்.

 

“அவன் இத முன்னயே சொல்லி இருந்தா நாங்களே கண்ணாலத்த பண்ணி வச்சுருப்போம் பெரியப்பா. இப்போ மணவறை வந்து தாலி ஏறாம யாழினி நிக்கிறது தான் சங்கடமா இருக்கு, இதுக்கு நீங்க தான் ஒரு நல்ல முடிவ சொல்லணும்” என்றார் பழனியப்பன்.

 

“பழனி சொல்றதும் சரி தான். பொட்டப் புள்ளைக்கு மணவறை வந்து கண்ணாலம் நின்னா அது நாளைக்கு தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுக்கும். நாளைக்கு அந்த புள்ளைய யாரு கட்டிப்பா!” என்றார் அவர்.

 

“நான் அந்த பொண்ண கட்டிக்கறேன்” என்ற குரலில் ஒட்டுமொத்த கூட்டமும் அது யாரென்று திரும்பிப் பார்த்தனர். மலர்விழியின் பின்னால் நின்றிருந்த ஹரிஹரன் தான் இந்த வார்த்தைகளை உதிர்த்தது.

 

அவனின் வார்த்தைகளில் திடம் இருந்தாலும் கண்களோ மலர்விழியை பயத்துடன் பார்த்தது. அவளோ அவனைப் பார்க்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, “நீ மலரோட படிச்ச பையன் தான பா?” என்றார் அந்த பெரியவர்.

 

“ஆமாங்க ஐயா. நான் மலரோட பிரண்ட் தான், நான் யாழினிய கட்டிக்க சம்மதிக்கிறேன்” என்றவன் யாழினியை பார்க்க, அவளோ நிமிர்ந்தும் பார்க்காமல் தலை குனிந்திருந்தாள்.

 

அவர் ஏதோ கேட்க வரும்முன் அவனே, “என்னடா இது இந்தப் பையன் இப்படி சொல்றான்னு நீங்க எல்லாரும் நினைக்கலாம். ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னா அது அந்தப் பொண்ணுக்கு எந்தளவு மனஉளைச்சல கொடுக்கும்னு எனக்கும் தெரியும். அதேநேரம், என் தோழியோட வாழ்க்கை இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சுட்டு ஆரம்பிக்கக் கூடாது” என்றவன் மலர்விழியை பார்க்க, அவள் கண்கள் அவனை நேராகச் சந்தித்தன.

 

“என் பேரு ஹரிஹரன், நானும் மலர்கூட தான் டாக்டர் படிப்ப முடிச்சேன். சொந்த ஊர் கோயம்புத்தூர், அப்பா அரசியல்ல இருக்காரு. நல்ல வசதியான குடும்பம் தான் எங்களோடது, நீங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது எந்த மாதிரியான குடும்பம் எதிர்பார்ப்பீங்களோ அதே மாதிரி தான் எங்க குடும்பமும். நான் வீட்டுக்கு ஒரே பையன், இன்னமும் என்னைப் பத்தி நீங்க விசாரிக்கணும்னு தோணுச்சுன்னா இது என் அப்பாவோட விசிட்டிங் கார்ட். தாரளமா விசாரிச்சுக்கலாம்” எனத் தனது தந்தையின் விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கிப் பார்த்தார் அந்த பெரியவர்.

 

“திடீர்னு அந்தப் புள்ளைய கட்டிக்கிறேன்னு சொல்ற, உங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா தம்பி?” என்றார் பெரியவர். “என் விருப்பத்துக்கு மாறா என் வீட்ல எதுவும் நடக்காது ஐயா. என் அப்பா, அம்மா கண்டிப்பா ஏத்துக்குவாங்க, இதே முகூர்த்தத்துல யாழினி கழுத்துல நான் தாலி கட்ட ரெடி. அவங்க வீட்ல சம்மதமான்னு கேட்டுச் சொல்லுங்க” என்றவன் தன் தோழி அருகே சென்று நிற்க, அவளோ அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கூட்டத்தைப் பார்த்தாள்.

 

“சுந்தரபாண்டியா நீ என்ன சொல்ற? பையன் நல்ல பையனா தான் இருக்கான். நம்ம மலருக்கும் தெரிஞ்ச பையன் தான், பிரச்சனை ஏதும் இல்ல. நீங்க சம்மதம்னு சொன்னா அவங்க வீட்ல நம்ம பேசிப் பார்க்கலாமா?” என்றார்.

 

“என் மகளுக்கு இதுல சம்மதம்னா எனக்கு சம்மதம் தான் மாமா” என அவர் கூற, தன் தந்தையை அக்னி பார்வை பார்த்தாள் யாழினி.

 

“அம்மாடி கமலம் நீ என்ன சொல்ற?” என்க, “இதுக்குமேல நான் என்னத்த சொல்ல வேண்டிக் கெடக்குங்க பெரியப்பா, அவளுக்கு சம்மதம்னா போதும்” என்றார்.

 

“யாழினி இப்போ நீ தான் மா உன் முடிவ சொல்லணும்” என்க, அவளோ பாரிவேந்தனையும் ஹரிஹரனையும் மாறிமாறி பார்த்தவள், பின் மலர்விழியை பார்க்க அவளோ எந்தவித உணர்ச்சியுமின்றி நின்றிருந்தாள்.

 

“எனக்கு சம்மதம் தாத்தா. ஆனா, இதே முகூர்த்தத்துல அவரு என் கழுத்துல தாலி கட்டணும்” என்க, “அவக வீட்ல பேசிட்டு இன்னொரு நாள் வச்சுக்கலாமே மா” என்றவரை, கைநீட்டி தடுத்தவள்,

 

“என்னைக் கட்டிக்க சம்மதம் சொன்னவருக்கு அவங்க அம்மா, அப்பாவ சரிகட்ட தெரியாதா என்ன! இப்போவே இதே முகூர்த்தத்துல தாலி கட்ட சம்மதம்னா எனக்கும் சம்மதம்” என அவள் விடாப்பிடியாய் கூற, முகூர்த்தத்திற்கு இன்னும் பத்து நிமிடங்களே மிஞ்சி இருக்க, உடனடியாகத் திருமணத்திற்கு ஏற்பாடானது.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில், ஊர் சாட்சியாக யாழினியின் கழுத்தில் மஞ்சள் நாணால் மூன்று முடிச்சிட்டான் ஹரிஹரன்.

 

“நீங்க ரெண்டு பேரும் ஊர் முன்னாடி மாலைய மாத்திக்கங்க பா” என பாரிவேந்தனையும் மலர்விழியையும் கூற, அமைதியாக இருவரும் சேர்ந்து நின்றனர்.

 

அவள் கழுத்தில் அவன் மாலையிடும்போது அவளின் அனல் பார்வையில் தகித்தவன், பட்டும்படாமலும் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டான் பாரிவேந்தன்.

 

இரண்டு ஜோடிகளையும் ஆரத்தி எடுத்து ஊர் அழைப்பிற்கு ஏற்பாடு செய்ய, அதனையடுத்து அவர்கள் இல்லத்திற்குச் சென்றனர்.

 

இரு ஜோடிகளையும் ஆரத்தி எடுத்து, வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் அழைக்க, அதன்பின் பாரிவேந்தனின் இல்லத்தில் விளக்கேற்றிப் பூஜை செய்தாள் மலர்விழி. அவளை அடுத்து யாழினியையும் அங்கேயே விளக்கேற்றச் சொல்ல அவள் முதலில் மறுத்தாள்.

 

“ஹரிஹரனும் எங்களுக்கு மகன் முறை தான் யாழு, நீயும் விளக்கேத்து” என ரேவதி அவள் கைப்பற்றிப் பூஜையறைக்கு அழைத்துவர, அதன்பின் விளக்கேற்றினாள் யாழினி.

 

பால், பழம் என சடங்குகள் நடக்க, இதற்கிடையே செந்திலும் சிலம்புவும் இந்திராவைத் தேடிக் கொண்டிருந்தனர். சடங்குகள் முடிந்தபின், தனது நண்பர்களைத் தேடிய மலர்விழி, சிலம்புவைக் கண்டு, “எங்க போனீங்க சிலம்பு, ஆமா இந்து எங்க?” என்றாள்.

 

“தெரியல டி, அவள தான் தேடிட்டு இருக்கோம்” என்க, ஏதோ நினைத்தவள், “அவ அங்க தான் இருக்கணும். வா என்கூட” என மலரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல, அவர்கள் இருவரும் வெளியே செல்வதைப் பார்த்த ஹரிஹரன், யாழினியிடம், “ஒரு டென் மினிட்ஸ்ல வந்தறேன்” என்று கூறிவிட்டு அவர்கள் பின்னால் சென்றான்.

 

அங்கு சமையல்கூடத்தில், “அண்ணா பாயாசம்” என்றவாறே இலையை வழித்தெடுத்துக் கொண்டிருந்தாள் இந்திராகாந்தி.

 

ஒருவர் பாயாசம் கொண்டுவந்து பரிமாற, அதனைக் கையால் அள்ளி நாவில் வைத்து ருசி பார்த்துக் கொண்டிருக்க, அவள் எதிரே சிலம்புவும் மலரும் முறைத்துக் கொண்டு நின்றனர்.

 

அவர்களைக் கண்டவள், “பாயாசம் செம டேஸ்ட்டா இருக்கு. நீங்களும் கொஞ்சம் சாப்புடுறீங்களா, ஹலோ மிஸ்டர் இவங்களுக்கும் இலை போடுங்க” என அங்குப் பரிமாறிக் கொண்டிருந்த சண்முகத்தை அழைக்க, சாம்பார் வாளியுடன் தன்னை யார் அழைத்தது என திரும்பிப் பார்க்க, இந்திராவோ தனது வேலையில் மூழ்கி இருந்தாள்.

 

“ஏன்டி இங்க இவ்ளோ கலவரம் நடந்து இருக்கு, நீ என்னடான்னா கூலா பாயாசத்த சப்பு கொட்டி சாப்பிட்டுட்டு இருக்க” என சிலம்பு முறைக்க,

“அடப்போடி, ஒன்னுக்கு ரெண்டு பிரண்டோட கல்யாணம் இன்னிக்கு முடிஞ்சுருக்கு. பிரண்டோட கல்யாணத்துல கை நனைக்கலனா வரலாறு என்னை தப்பா பேசாது! நமக்கு வரலாறு முக்கியம் சிலம்பு” என்றவள், இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சண்முகத்திடம்,

 

“இங்க என்ன வேடிக்கை? போய், பாயாசத்த எடுத்துட்டு வாங்க” என்றாள் அதிகாரமாய். அவன் மலர்விழியை பார்க்க, “உனக்கு பாயாசம் தான. வா, நான் தர்றேன்” எனக் கைகளை மடக்க, “உன்னை நம்பிலாம் நான் வரமாட்டேன். பிராமிஸ்ஸா வாழை இலைல பாயாசம் போட்டு சாப்பிடறது நல்லா இருக்கு மலர். நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்க, இல்லனா வருத்தப்படுவீங்க” என்றவள், கைகளால் பாயாசத்தை அள்ளி வாயில் இட்டவள், கண்களை மூடித் தொண்டை குழியில் இறங்கிய பாயாசத்தின் ருசியை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

 

நண்பர்களோ தலையில் அடித்துக் கொள்ள, அவளின் சிறுபிள்ளைத் தனமான செயலில் புன்னகை உறைய அங்கிருந்து நகர்ந்தான் சண்முகம்.

 

கண்களைத் திறந்தவள், இன்னும் எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்து, “பாயாசம் செம, ப்ரீ அட்வைஸ். கேட்டா கேளுங்க, கேட்காட்டிப் போங்க” என்றவள், தனது பணியை மீண்டும் தொடர, “நல்லா கொட்டிட்டு வந்து சேரு” என இருவரும் வெளியே செல்ல, அவர்கள் எதிரே ஹரிஹரன் வந்து நின்றான்.

 

அவனைக் கண்டவள், எதுவும் பேசாமல் கடந்துசெல்ல முயல, “என்மேல கோபமா ஃபிளவர்?” என்றான் வருத்தத்துடன்.

 

“நான் ஏன் கோபப்படணும், நீங்க தான் உங்க பிரண்டுக்காக வாழ்க்கையவே தியாகம் பண்ணிட்டீங்களே. அப்படி பட்ட உங்க பிரண்ட்ஷிப் மேல கோபப்பட எனக்கு என்ன அருகதை இருக்கு?” என்றவளின் கோபம் வார்த்தைகளில் தெறித்தது.

 

“ப்ளீஸ் ஃபிளவர், நான் சொல்ல வர்றத கொஞ்சம் பொறுமையா கேளு” என அவன் கெஞ்ச, “இனி பேசறதுக்கு எதுவும் இல்ல ஹரி. என் வாழ்க்கைகாக உன் வாழ்க்கைய பணயம் வச்சுட்டா நான் உன்னைத் தூக்கி கொண்டாடுவேன்னு நினைச்சுட்டியா? என் வாழ்க்கைகாக உன் வாழ்க்கைய அழிச்சுட்டு வந்து நிக்கிறவன் கிட்ட எனக்கு என்ன பேச வேண்டிக் கெடக்கு. அதான் இப்போ நீங்களாவே முடிவு எடுக்க பழகிட்டீங்கள்ள, அப்புறம் என்ன? புது பொண்டாட்டிய கூட்டிட்டு ஹனிமூன் போய்ட்டு வாங்க” என்றவள், “நீ வா சிலம்பு” என்றவள், முன்னே நடக்கத் துவங்க, அவள் கண்களில் கண்ணீர் படர்ந்தது.

 

அவனோ வருத்தத்தோடு செல்லும் தனது தோழியைப் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அவன் அருகில் வந்த இந்திரா, பெரிதாக ஏப்பம்விட, திடீரெனக் கேட்ட சப்தத்தில் அவன் பதறிப் போய் விலக, “அட நான்தான் டா” என்றவள், “உங்க கைல இருக்கிற கர்ஷிப்ப கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும் புது மாப்பிள்ளை” என்க, அவனோ கொலைகாண்டுடன் அவளை முறைத்தான். “எஸ்கேப்” என்று, அங்கிருந்து ஓடினாள் இந்திரா.

 

பாதி தூரம் சென்ற மலர்விழி, அவனைத் திரும்பிப் பார்க்க எத்தனித்து பின் தன் மனதை ஒருநிலைப்படுத்தியவள், திரும்பாமலே செல்ல, அதனைக் கண்டவனின் இமைகள் நனைந்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
8
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்