தன்னவனின் அணைப்பில் பூனைகுட்டி போல் அவன்மேல் ஒட்டி இருந்தாள் மலர்விழி. தன்னவளை நெஞ்சில் தாங்கியவனுக்கு கனவுபோல் இருந்தது. “என்ன மாமு யோசனை?” என்றவாறே அவனது மீசையை முறுக்கிவிட,
“கனவு மாதிரி இருக்கு புள்ள…” என்றான் இன்னும் நம்ப முடியாமல். அவனது இடுப்பில் இவள் கிள்ளி வைக்க, அவனோ அசையாமல் அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் பாரிவேந்தன்.
“வலிக்கலயா மாமு” என கிள்ளிவிட்ட இடத்தை தானே தேய்த்தும்விட, அவளது கரத்தை பற்றியவன், “ரொம்ப!” என்றவாறே கண்ணடித்தான்.
“அப்போ வலிக்கலயா!” என்றவள், தன் பலத்தை திரட்டி அவனை நன்றாக கிள்ளி வைக்க, லேசாக அந்த இடத்தை தடவி விட்டவன், “ஊசி போட்ட மாதிரி இருந்துச்சு புள்ள” என்றான் கேலியாக.
அவளோ முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள, “என்ன கோபம் புள்ள” என அவள் தாடையை பற்றி முகத்தை ஆராய்ந்தான் பாரிவேந்தன். “நான் அப்படி பேசிருக்க கூடாதுல்ல!” என்க, அவள் எதைக் கூற வருகிறாள் எனப் புரியாமல் சற்றுநேரம் யோசித்தவன், “அன்னிக்கு நைட் நீ பேசுனத சொல்றியா புள்ள?” என்றான்.
அவளோ ஆமாம் எனத் தலையாட்டியவாறே அவனது நெஞ்சத்தில் குடிபுக, “அத மறந்துரு மா, நினைக்க ஆயிரம் விசயங்கள் இருக்கும்போது மறக்க வேண்டியத திரும்ப நினைக்கக் கூடாது” என்றவாறே அவளது தலையை வருடி விட்டான் பாரிவேந்தன்.
“இல்ல மாமு, என்ன கோபம் இருந்திருந்தாலும் நான் அப்படி பேசிருக்கக் கூடாது, அது உங்கள எந்தளவுக்கு காயப்படுத்திருக்கும். சாரி மாமு” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன், “அதுனால எந்த வருத்தமும் எனக்கில்ல புள்ள, நீ கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம தூங்கு. காலைல டியூட்டிக்குப் போகணும்ல” என அவளது தலையை கோதி விட்டவாறே அவளை தூங்க வைத்தான் பாரிவேந்தன்.
சிறிது நேரத்திலேயே தன்னவனின் அணைப்பில் அவள் ஆழ்ந்து துயில் கொள்ள, சாளரத்தின் வழியே வீசிய நிலவொளியின் உதவியுடன் தன்னவளின் முகம் பார்த்தவன், “நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம் புள்ள” என்றவாறே அவளது வெற்றியில் இதழ் பதித்து, அவளை அணைத்தவாறே தானும் நித்திராதேவியின் ஆளுமைக்குள் புகுந்தான்.
ஹரிஹரனும் யாழினியும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, படுக்கையறைக்குச் சென்றனர். இன்னும் கட்டில், மெத்தை எதுவும் வாங்காமல் இருந்ததால் கயிற்றுக் கட்டில் தான் அந்த அறையில் இருந்தது.
ஹரிஹரன் யோசனையுடன் நிற்க, “என்ன யோசனைங்க?” என்றாள் யாழினி. “இல்ல, கட்டில் ரொம்ப குட்டியா இருக்கே, இதுல எப்படி நம்ம ரெண்டு பேரும் படுக்கிறது?” என வினவ, “அதுல நீங்க படுத்துக்கோங்க. நான் கீழ படுத்துக்கிறேன்” என்றவள் பாயை எடுத்து தரையில் விரித்தாள்.
ஹரிஹரனோ, “இல்ல நான் கீழ படுத்துக்கிறேன், நீ கட்டில்ல படுத்துக்கோ” என்க, அவனை முறைத்தவாறே கட்டிலில் போர்வையை விரித்துவிட்டு, “ஒழுங்கா இங்க படுங்க” என கட்டளையிட்டவள், கீழே பாயில் படுத்துக்கொண்டாள்.
அவள் புறம் திரும்பிப் படுத்தவன், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கண்களை மூடி இருந்தவள் அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக படுத்திருக்க, அவனோ, “பட்டர்பிளை!” என மெதுவாக அழைத்தான்.
லேசாக கண்களைத் திறந்து, ‘என்ன!’ என்ற பார்வை பார்க்க, “உனக்கு இந்த வீடு பிடிச்சுருக்கா?” என்க, “இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியம், தூங்குங்க. காலைல வெள்ளனே எந்திரிக்கணும்” என்றவள், அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் அவள்.
அவனோ, “இப்போ என்ன அப்படி தப்பா கேட்டோம், வீடு பிடிச்சுருக்கானு கேட்டோம். பிடிச்சிருந்தா பிடிச்சுருக்குனு சொல்லணும், இல்லனா இல்லனு சொல்லணும்” என முனக, அவளோ, ‘ஏதோ போனா போகுதுனு பேசுனா ஓவரா தான் போறான்‘ என அவனை வறுத்துக் கொண்டிருந்தாள்.
காலையில் எப்பொழுதும் போல் மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தாள் மலர்விழி. இன்று நால்வருமே அங்கு வந்திருக்க, அந்த ஊர்க்காரர்களும் பரிசோதனை செய்துகொள்ள வந்திருந்தனர். வந்தவர்களை எல்லாம் கவனித்துவிட்டு, அக்கடா என நாற்காலியில் பொத்தென அமர்ந்தாள் இந்திரா.
“அவ்ளோ டயர்ட்டா இந்து?” என்றவாறே அவள் அருகில் நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தாள் மலர்விழி. “ரொம்ப வெக்கையா இருக்கு டி… நேத்து, வானம் இருண்டு கெடந்துச்சு, இன்னிக்கு இப்படி வெயில் வெளுத்து வாங்குது” என்றவாறே, “உஷ்…” என்று கைகளால் விசிறிக் கொண்டிருந்தாள் இந்திரா.
சிலம்புவும் செந்திலும் அங்கு வந்து அமர, “இந்த ஹரி பய இல்லாம போர் அடிக்குதுல்ல” என்றாள் இந்திரா. மலர்விழி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, “புது பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பான் டி” என்றாள் சிலம்பு.
அதேநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தவனின் கார் வந்து அங்கு நிற்க, “நூறாயுசு!” என்றாள் சிலம்பு. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் ஹரிஹரன் வர, “வா டா புது மாப்பிள்ளை!” என வரவேற்றாள் இந்திராகாந்தி.
மலரோ அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட, அவளின் குறுக்கே நின்றான் வந்தவன். “ப்ச்” என நொச்சுக் கொட்டியவள் ஒதுங்கி செல்ல முற்பட, “ஃபிளவர் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ஒரு தீர்மானமாய்.
“நான் யார்கிட்டயும் பேசத் தயாரா இல்ல இந்து” என அவனிடம் பதிலளிக்காமல் இந்திராவிடம் பதில் அளித்தாள். “ஆரம்பிச்சுட்டாங்க டா, இவங்களோட இதே ரோதனையா போச்சு” என்றவள், எழுந்து இருவரின் கரத்தையும் பற்றி அங்கேயே அமர வைத்தாள் இந்திரா.
“இங்க பாரு மலர், அவன் தான் ஏதோ உன்கிட்ட பேசணும்னு சொல்றான்ல. அவனுக்கும் பேச ஒரு வாய்ப்பு கொடேன், அவன் பண்ணது தப்பாவே இருந்தாலும் அவன் பக்க நியாயத்தை கேட்கிறதுல என்ன தப்பு?” என்றாள் நடுநிலையாய்.
“என்னத்த டி கேட்க சொல்ற, அன்னிக்கு இருந்த கோவத்துக்கு அப்படியே பளார் பளார்னு நாலு அறை கன்னத்துல வச்சுருப்பேன். ஆனா, சார் தான் ஏதோ தியாகி ரேன்ஜ்ல நின்னாரே!” என்றாள் கோபமாய் மலர்விழி.
“இப்பக் கூட அடிக்கலாம், என் கன்னம் தயாரா தான் இருக்கு” என ஹரிஹரன் கூற, மற்றவர்களுக்கோ இவர்களின் கோபம் சிறுபிள்ளைத்தனமாய் தோன்றியது. “உன் ஊத்த வாய கொஞ்சம் குளோஸ் பண்ணு டா… அவள கொஞ்சம் பேசவிடு” என்ற இந்திரா,
“அதான் அவனே சொல்றான்ல டி, இப்போகூட அடிக்கணும்னு தோணுச்சுனா அடிச்சுக்கோ. ஆனா, இப்படி ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா மூஞ்ச தூக்கிட்டு அலையாதீங்க டி. முடியல!” என்றாள் இந்திரா.
அவளுக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து செந்தில் நீட்ட, ‘எதுக்கு!’ என்ற ரீதியில் அவனைப் பார்த்தாள் இந்திராகாந்தி. “இல்ல, பேசி பேசி டயர்ட் ஆகிருப்பில்ல. அதான் தண்ணி” என்க, அவனை முறைத்தவன், “இதெல்லாம் நீ பேச வேண்டியது, நான் பேசிட்டு இருக்கேன்” என்றவள்,
“மலர், எதுவா இருந்தாலும் இன்னிக்கே பேசி சரி பண்ணியாகணும். அவன் பண்ணது தப்பு தான், அதான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு வந்து நிக்கிறான்ல, மன்னிச்சுறேன்” என்றாள் இறைஞ்சும் குரலில்.
அவள் இன்னும் அமைதியாக அமர்ந்திருக்க, அவள் அருகில் சென்று அவள்முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “பிளீஸ் ஃபிளவர், என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத டி. நாலு அடிகூட அடிச்சுக்கோ, பேசாம இருந்து என்னை கொல்லாத ஃபிளவர்” என்றான்.
அவளோ பட்டென, அவன் கன்னங்கள் இரண்டிலும் மாற்றிமாற்றி அறைவிட, கன்னத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஹரிஹரன்.
“அடிப்பாவி, சும்மா பேச்சுக்கு சொன்னா உண்மையாலுமே அடிக்கிற” என அவன் உதட்டைப் பிதுக்கி அழுவது போல் நடிக்க, “பிராடு, பிராடு” என அவனை மொத்த ஆரம்பித்தாள் மலர்விழி.
அவளுக்கு கைவலிக்கும் வரை அடித்தவள், “ஏன் டா இப்படி பண்ண? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குது தெரியுமா?” என்றவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, அதனைத் துடைத்து விட்டவன், “தோப்புக்கரணம் கூட போடறேன், பிளீஸ் ஃபிளவர்… என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத” என்றவன், அவளின் பதிலை எதிர்பாராமல் தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க, அதனைத் தடுத்தவள், “ஏன் டா என்னை இவ்ளோ கடன்காரி ஆக்கற?” என்றவளுக்கு அழுகை நிற்காமல் இருக்க, “அட லூசுக்குட்டி” என அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டவன், அவளை அமர வைத்து அவள் எதிரே தனது நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
அவளது விரல்களில் சொடக்கு எடுத்தவாறே, “கூட்டத்துல நான் பேசுனது எல்லாம் என் மனபூர்வமா பேசுனது தான் ஃபிளவர், என் தோழியோட வாழ்க்கை இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கேள்விக் குறியாக்கிட்டு வாழத் தொடங்கக் கூடாது. அதேநேரம், என் காதலும்…” என அவன் இழுக்க, அவள் பார்வை கூர்மையானது.
“உன் காதலும்…” என அவனைப் போலவே இழுத்தாள் மலர்விழி. “சொன்னா அடிக்கக் கூடாது” என முன்கூட்டியே அவன் சத்தியம் கேட்க, “அது நீ சொல்லப் போற விசயத்தப் பொறுத்து” என அவள் சத்தியத்திலிருந்து ஜகா வாங்கினாள்.
“நான்…” என மீண்டும் அவன் இழுக்க, “டேய் ரொம்ப இழுக்காத டா… எங்க காதுல இரத்தம் வந்துரும் போல!” என்றாள் இந்திராகாந்தி. மலரோ அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,
“நான் பட்டர்பிளைய விரும்புனேன் ஃபிளவர்” என பட்டெனக் கூறி விட்டு, அவள் முகம் பார்க்கும் தைரியமின்றி தலையை கவிழ்த்துக் கொண்டான் ஹரிஹரன்.
மலர்விழியின் முகம் அதிர்ச்சியில் பேயறைந்ததைப் போல் இருந்தது. “உன்கிட்ட இத சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா, நீ ஒருநாள் அவளப் பத்திக் கேட்டதுக்கே காச்சி எடுத்துட்ட, அதான் மேற்கொண்டு எதுவும் சொல்லல. சாரி ஃபிளவர்” என்றான் ஹரிஹரன்.
“இந்த விசயம் அவளுக்குத் தெரியுமா?” என்றாள் மலர்விழி. “நேரடியா சொல்லல, ஆனா அவளுக்கு ஓரளவுக்கு தெரியும்” என்றவனின் குரல் உள்ளிறங்கி இருக்க, “போய் இத மொத அவக்கிட்ட சொல்லு” என்க, “என்ன!” என்ற அதிர்ச்சியில் நிமிர்ந்தான் ஹரிஹரன்.
“உன் காதுல கரெக்ட்டா தான் டா கரிச்சட்டி விழுந்துச்சு. போய், உன் காதல அவக்கிட்ட சொல்லு” என்க, “அப்போ என்னை மன்னிச்சிட்டியா ஃபிளவர்!” எனக் கேட்பவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் மலர்விழி.
“உன்மேல எனக்கு கோபம் இல்ல டா. வருத்தம் தான், எனக்காகனு உன் வாழ்க்கைய பாழாக்கிட்டியோனு! வேற ஒருத்தியோட வாழ்க்கைக்காக ஒருத்தன் தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா அது அந்த பொண்ணுக்கு எவ்ளோ வலிக்கும் தெரியுமா!…”
சற்று இடைவெளி விட்டவள், “அதே தனக்காக, தன்னை விரும்பி ஒருத்தன் தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்படிங்கிறது எவ்ளோ சந்தோசம் கொடுக்கும் தெரியுமா! இதுல நீ யாழினிக்கு பண்ணது முதல் ரகம். நாளைக்கு ஏதோ ஒரு சூழ்நிலைல அவன் பிரண்டுக்காக தான உன்னைக் கட்டிக்கிட்டான்னு அவள யாராவது கேட்டா அவ நிலைமைய யோசிச்சுப் பாரு. உங்க வாழ்க்கையும் நல்லா போகுமா சொல்லு! ஏதோ ஒன்னு நம்ம மனசுல நெருஞ்சி முள்ளா குத்திக்கிட்டே இருக்கும். அப்படி இருக்கக் கூடாதுன்னா நீ மொதல்ல உன் காதல அவக்கிட்ட போய் சொல்லு” என்றாள் மலர்விழி.
“என்மேல கோபம் இல்லையே!” என அவன் மீண்டும் வினவ, அவன் தலையில் தட்டியவள், “இனிமேல் தான் டா ராசா உனக்கு இருக்கு! போ, போய் உன் பொண்டாட்டிய பாரு” என நக்கலுடன் கூற, “தேங்க்ஸ் ஃபிளவர்” என்றவன், வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“என்ன டி ஆட்டம்பாம் வெடிக்கும்னு பார்த்தா கடைசில புஸ்வானமாகிருச்சு” என்றாள் இந்திராகாந்தி. “ஆரம்பிச்சு வச்சது நீ தான” என அவள் தலையில் நறுக்கென கொட்டினாள் மலர்விழி.
“வலிக்குது டி” என்றவாறே தலையை தேய்த்துக் கொண்டே, “உண்மைலயே ஹரி மேல உள்ள கோபம் போகிருச்சா மலர்?” என்றாள் இந்திரா.
“உண்மைய சொல்லணும்னா அவன்கிட்ட பேசாம என்னால தான் இருக்க முடியல டி… ஆனா, அவன் பண்ணது தப்புனு அறிவு ஒரு பக்கமும், அவன்கிட்ட பேசுனு மனம் பக்கமும் என்னைப் போட்டு படுத்தி எடுத்துருச்சு. இன்னிக்கு இல்லன்னாலும் நானே அவன்கிட்ட பேசிருப்பேன். ஒரு உண்மைய சொல்லட்டா!” என்க, மூவரும் அவளை ஆவலாக பார்த்தனர்.
“நீங்க இல்லன்னா என்னிக்கோ நான் போய் சேர்ந்துருப்பேன். என் உயிர் இன்னிக்கு இருக்குன்னா அதுக்கு நீங்க தான் காரணம் டி” என்றவளை அணைத்துக் கொண்டாள் இந்திரா.
செந்திலோ அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதன் மூடியை திறந்தவன், அவர்கள் அருகில் கொண்டு செல்ல, ‘என்ன டா பண்ற?’ என்று அவனைப் பார்த்தனர்.
“இல்ல, இங்க ஒரு கண்ணீர் ஆறே ஓடுதுல்ல. ஒருவேள வெள்ளம் வந்துருச்சுனா” என்க, அவனை இருவரும் அடிக்கத் துரத்தினர். “செத்தான் டா செந்தில்” என சிரிக்க, “இந்த பேய்ங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்து டி சிலம்பு” என்றவாறே அவன் அவள் பின்னே ஒழிந்து கொள்ள, அவளோ அவன் சட்டை காலரை பிடித்து அவனை அவர்களிடத்தில் ஒப்படைத்தாள்.
“நீ எல்லாம் ஒரு காதலியா!” என அவன் மூக்கை உறுஞ்ச, “என்னால முடியாதத என் தோழிகள் பண்றாங்க. அத எப்படி டா செந்தில் மிஸ் பண்ணுவேன்” என ஆட்காட்டி விரலால் அவனது கன்னத்தை சீண்ட, அதற்குள் இந்திராவும் மலர்விழியும் அவனை நையப் புடைத்திருந்தனர்.
வீட்டில் இன்னும் பொருட்கள் பாதி அடுக்காமல் இருக்க, அதனை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் யாழினி. வெளியே கார் சத்தம் கேட்கவும், “அதுக்குள்ள வந்தாச்சா!” என நினைத்தவாறே வெளியே எட்டிப் பார்த்தாள்.
அவளின் கணவன் விசிலடித்தவாறே இறங்க, “ஆருயிர் தோழிய பார்த்த குஷியோ ஐயாவுக்கு” என தாவாக்கட்டையை சிலுப்பியவள், சமையலறையில் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“பட்டர்பிளை!” என்றவாறே உள்ளே நுழைந்தவன், அவள் சமையலறையில் இருப்பதைக் கண்டு அங்கு சென்றான். “உங்க ஆருயிர் தோழியோட சமாதானம் ஆகியாச்சோ!” என நக்கலாய் வினவ,
“ஹேய், உனக்கு எப்படி தெரியும் பட்டர்பிளை!” என அவன் ஆச்சரியமாக வினவ, “ஆன், இத தெரிஞ்சுக்க ஆளா வைக்க முடியும்! அதான் உங்க மொகரக்கட்டைய பார்த்தாலே தெரியுதே. தௌசண்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி எரியுது” என்றவளின் குரலில் இருந்தது கோபமா அல்லது வெறுப்பா என இனம் கண்டறிய முடியவில்லை.
ஆனால் அவனோ அதனைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவன் பேசாமல் இருப்பதைக் கண்டு திரும்ப, அவனோ அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க, கையில் இருந்த மல்லிகைப் பூவை நீட்டி, “என்னை மன்னிச்சுரு பட்டர்பிளை” என்றான். “எதுக்கு மன்னிப்பு!” என அவள் வினவ, “இல்ல, அன்னிக்கு கூட்டத்துல ஃபிளவருக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்ல!” என்றவாறே அவளைப் பார்க்க, அவள் முகம் இறுகியது.
“அது உண்மை தான் இல்லனு சொல்லல. ஆனா, உன்னையும் எனக்கு பிடிச்சுருந்ததால தான் அன்னிக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். ஒருவேளை அந்த வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி இருந்தா சாரி!” என்றான் ஹரிஹரன்.
அவள் முகம் சற்று இலகுவானதோ! இன்னும் அங்கு அமைதி நீடிக்க, “உடனே என்னை நீ ஏத்துக்கணும்னு சொல்லல. அட்லீஸ்ட் என்னை உன் பிரண்டாகாவாது ஏத்துக்கலாம்ல” எனக் கெஞ்சியவனைக் கண்டு பாவமாக தோன்றியது அவளுக்கு.
உண்மையில் அவன்மேல் அவளுக்கு தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லையே. திருமணத்திற்கு முன் அவளை அவன் வம்பிழுத்திருந்தாலும், அதனை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போதும் அவன் தன் தோழிக்காக தான் தன்னை திருமணம் செய்துள்ளான் என்ற கோபம் மட்டுமே.
ஆனால் அவனே, தன்னை விரும்புவதாகக் கூறிய பின்னும், அதே கோபத்தை நீட்டிப்பது சரியல்ல என்று நினைத்தவள், “ஓ.கே, ஆனா ஒரு கண்டிஷன்!” என்றாள் யாழினி.
“என்ன பட்டர்பிளை! எதுவா இருந்தாலும் நான் பண்றேன்” என்க, “அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துட்டு அப்புறம் முடியாதுனு சொல்லக்கூடாது” என்க, ஹரிஹரனுக்கு அபாய ஒலி ஒலித்தது.
“கண்டிப்பா பின்வாங்க மாட்டேன், ஆனா…” என அவன் இழுக்க, “ஆனா…” என அவள் ஒற்றைப் புருவம் உயர்த்தினாள். “ஃபிளவர் கிட்ட மட்டும் என்னால பேசாம இருக்க முடியாது பட்டர்பிளை, ப்ளீஸ். எனக்கு அம்மாவும் அவளும் ஒன்னு தான்” என்றவன் சற்று பயத்துடன் தான் அவளைப் பார்த்தான்.
“பேசக்கூடாதுனு சொல்ல மாட்டேன். ஆனா, என் முன்னாடி அவக்கிட்ட ஓவரா பேசுனா அப்புறம் அவ்ளோ தான்!” என விரல் நீட்டி எச்சரிக்க, “உண்மையாவா பட்டர்பிளை!” என்றான் சந்தோசமாக வினவினான்.
“எனக்கு அவள இப்ப மட்டும் இல்ல, எப்பவும் பிடிக்காது தான். அத யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன், அதேநேரம் என் கணவர் இன்னொரு பொண்ணோட அது அவரு தோழியாவே இருந்தாலும் குளோஸ்ஸா இருந்தா அதப் பார்த்துட்டு கோபப்படாம இருக்க முடியாது என்னால!” என்றாள் யாழினி.
அவள் இவ்வளவு இறங்கி வந்ததே போதும் என்றெண்ணியவன், “டீல்” என்றான் பூவை அவளிடம் நீட்டியவாறே. ஆனால், இந்த டீலே அவனை எதிர்காலத்தில் படாதபாடுப்படுத்தி எடுக்கப் போவதை அறியாமல் போனான்.
“டீல்” என்றவள், அவன் நீட்டிய பூவை வாங்கிக் கொள்ள, தன்னவளின் கரத்தில் தன் இதழை ஒற்றி எடுத்தான் ஹரிஹரன். தன்னவனின் முதல் முத்தம், அவளை அதிர்ச்சியாக்க, “தேங்க்ஸ் பட்டர்பிளை” என்றவாறே அவள் கன்னத்தை விரல்களால் வருடியவன், பறக்கும் முத்தமொன்றை அளித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடாத குறையாய் ஓடினான். அவள் தான் இன்னும் தெளியாமலே அங்கு நின்றிருந்தாள்.
33
கந்த சஷ்டி கவசம் பூஜையறையிருந்து மெல்லிசையாய் காற்றில் பரவ, தங்கள் அறையில் அதனை முணுமுணுத்தவாறே புடவை மடிப்பை சரிசெய்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.
அவளின் பின்னால் இருந்து இரு வலிய கரங்கள் அவளை அணைக்க, “மாமு!” என சிணுங்கினாள் மலர்விழி. அவனோ அவள் கழுத்தினோரம் புதைந்து, அவளின் வாசம் பிடிக்க, “நேரமாச்சுல்ல, போய் ரெடியாகுங்க” என்றவாறே அவனது மீசை தந்த குறுகுறுப்பில் நெளிய, அவனோ விலகுவதாக தெரியவில்லை.
“ப்ச், காலைலயே என்ன மாமு இது, போங்க போய் ரெடியாகுங்க. அங்க கரிச்சட்டி வேற வெய்ட் பண்ணிட்டு இருப்பான்” என அவனை தன்னிடமிருந்து விலக்கினாள். அவனோ மனமே இல்லாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள, “பாத்ரூம்ல தண்ணி வெளாவி வச்சுருக்கேன். சமத்துப் பிள்ளையா போய் குளிச்சிட்டு வருவீங்களாம்” என துண்டை எடுத்து அவன் கரத்தில் திணிக்க, அவனோ அவளை தன்பக்கம் இழுத்து ஒரு கையால் அவள் இடையை பற்றியவாறே, “தனியாவா!” என அவள் காதோரம் கிசுகிசுக்க, “அடிங்க… அத்தை உங்க மகனுக்கு…” எனும்போதே அவள் வாயை தன் கையால் பொத்தியவன், “குளிச்சிட்டு வரேன். உடனே உன் அத்தை கிட்ட பத்த வச்சறாத!” என்றவாறே அவள்மேல் பொய் கோபத்துடன் அங்கிருந்து நகர, இதழ்களில் புன்னகை உறைய, முடியை உலர்த்தினாள்.
அவன் வருவதற்குள் அவள் தயாராகியவள் புடவைக்கு ஏற்ற காதணி ஒன்றை அணிந்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்தவன் பின்னாலிருந்து அவள் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியை போட்டுவிட, “என்ன மாமு இது!” என்றவாறே, குனிந்து அந்த சங்கிலியை பார்த்தாள்.
எம். பி என இரு எழுத்துக்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தது அந்த டாலரில். “வாவ், செமயா இருக்கு மாமு” என்றவள், திரும்பி அவன் கன்னத்தில் இதழை ஒற்றியெடுக்க, “அவ்ளோ தானா!” என குறும்பாக வினவியது அவன் கண்கள்.
“அவ்வளவு தான்!” என அவள் கண்கள் கேலியாய் மலர, “போடி!” என செல்லமாய் கோவித்துக் கொண்டாலும், தன்னவளுக்காக வாங்கி வைத்திருந்த தாழம்பூவை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“தாழம் பூ!” என அவள் கண்கள் விரிய, “இத எப்போ வாங்குனீங்க மாமு” என்றவாறே அதன் இதழை எடுத்து சிறு பூ போல் சுற்றி மடக்கியவள், அதனை தலையில் சூடிக்கொள்ள, “நேத்து நைட்டு வரும்போதே வாங்கிட்டு வந்தேன் புள்ள” என்றவாறே அவள் சூடி இருந்த தாழம் பூவின் மணத்தை உள்வாங்கினான்.
“உனக்கு ஏன் புள்ள இந்த பூ மேல இம்புட்டு ஆசை?” என்க, “தெரியல மாமு, ஆனா இதோட வாசம் ரொம்ப பிடிக்கும். அதுனாலயே சின்ன வயசுல இருந்து இந்த பூ மேல ஒரு காதல். அப்புறம் ஒரு தடவை இந்த பூ பத்தி ஒன்னு படிச்சேன். அதுக்கு அப்புறம் அந்த காதல் இன்னும் வளரத் தான் செஞ்சுது” என்றாள் தன்னை கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்டே.
“அப்படியென்ன அந்த பூவ பத்தி படிச்ச?” என்றான் தெரிந்து கொள்ளும் ஆவலோடு. “அதுவா…!” என இழுத்தவள், “இந்த பூவுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு. இந்த பூவ தலைல வச்சுக்கிட்டோம்ன்னா பெண்களோட இருதயத்தை வலிமையூட்டுமாம். அதோட…” என அவள் அவனை குறும்பாக பார்த்து இழுக்க, “அதோட…” என்றான் மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலோடு.
“இங்க இருக்கிற இதயத்தையும் நெகிழ செய்ற சக்தி இந்த தாழம் பூவுக்கு இருக்கு” என அவனின் இதயத்தின்மேல் விரல் வைத்தவள், அவனை பார்த்து கண்ணடிக்க, “அது என்னவோ உண்மை தான்” என்றவாறே அவளை இழுத்து அணைத்தவன், அவள் சூடியிருந்த பூவின் வாசத்தை நுகர்ந்து கிறங்கிப் போனான். அவனின் செயலால், அவளது தாழம் பூ நிற முகம் காதலில் கரைந்து, மலரத் துவங்கியது.
“எனக்காக ஒன்னு செய்வியா புள்ள?” என்றான் பாரிவேந்தன் இறைஞ்சும் குரலில். அவன் என்ன கேட்க வருகின்றான் என்பது அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிய, “நீங்க எதக் கேட்கப் போறீங்கன்னு தெரியும் மாமு” என்றாள் மலர்விழி.
சுந்தரபாண்டியனிடம் பேசச் சொல்லி கேட்கலாம் என்றுதான் அவன் எண்ணியிருக்க, அதனை அவளும் அறிந்திருந்தாள். “அதுவந்து, மாமா ரொம்ப பீல் பண்றாரு புள்ள” என்றான் பாரிவேந்தன். “என்னால உடனே பேச முடியாது மாமு. ஆனா, கண்டிப்பா உங்க கோரிக்கைய நிறைவேற்ற முயற்சி பண்றேன்” என்க, ஓரளவு அவள் மனமிறங்கி வந்ததே போதுமானதாக இருந்தது அவனுக்கு. கண்டிப்பாக காலம் அவளை அவருடன் பேச வைக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அவனின் எண்ணம் நிறைவேறட்டும் என நாமும் வாழ்த்துவோம்.
ஹரிஹரனும் யாழினியும் குடியேறும் இல்லத்தில், அன்று பால் காய்ச்சுதல் என்பதால் கோவையிலிருந்து பத்மாவும் ராஜனும் முந்தின நாளே வந்திருந்தனர்.
கமலமும், யாழினியும் பூஜைக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “யாழு, சாமிக்கு போடற பூவ எங்க வச்ச?” என்றவாறே பட்டு வேஷ்டி சட்டையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வந்தான் ஹரிஹரன்.
“அத கட்டிக்கிட்டு நடக்கத் தெரியலனா போய் வேற டிரஸ்ஸ மாத்திக்க வேண்டியது தானங்க!” என்றவாறே, பூ வைத்திருந்த இடத்தைக் காட்ட, “எல்லாம் உன் மாமியார் பண்ண வேலை” என அவன் சலித்துக் கொண்டான்.
“அங்க என்னடா என்னை பத்தி என் மருமக கிட்ட பத்த வச்சுக்கிட்டு இருக்க?” என்றவாறே வந்தார் பத்மா. “அத்தை அவரால இதக் கட்டிக்கிட்டு நடக்கவே முடியல, போய் மாத்த சொன்னா மாத்த மாட்டேங்கிறாரு” என்றாள் யாழினி.
“ஏன் டா, போய் மாத்திக்க வேண்டியது தான!” என்ற தன் தாயை முறைத்தவன், அமைதியாக அங்கிருந்து நகர, “நீ போய் அவனுக்கு துணிய எடுத்துக் கொடு மா. இங்க வேலைய நான் பார்த்துக்கிறேன்” என தன் மருமகளை அனுப்பிவிட்டு, அவள் செய்த வேலையை தான் தொடர்ந்தார்.
அவர்கள் அறைக்குள் அவன் முணுமுணுத்துக் கொண்டே செல்ல, “உங்களோட டிரஸ் இங்க இருக்கு” என்றவாறே அவனது உடைகளை எடுத்துக் கொடுத்தவள், “அத்தை தான் எதுவும் சொல்லலயே, அப்புறம் ஏன் மாத்தாம இப்படி இத கஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு சுத்துறீங்க?” என்றாள் யாழினி.
“உன் சொத்தை தான் வேஷ்டி கட்டணும்னு சொல்லிட்டு உன்கிட்ட வந்து அப்படியே பிளேட்ட திரும்பிப் போட்ருச்சு!” என்றான் ஹரிஹரன். “சரி, மாத்திட்டு வாங்க. நான் வந்தவங்கள கவனிக்கப் போறேன்” என வெளியே செல்ல முயன்றவளை, “பட்டர்பிளை ஒரு நிமிஷம்” என்றான்.
“என்ன!” என அவள் திரும்ப, “நேத்து வரைக்கும் எலியும் பூனையுமா இருந்த மாமியார் மருமகள் எப்படி ஓவர் நைட்ல ராசி ஆனீங்க?” என்றான் சந்தேகமாய். “அது…” என்றவளின் நினைவுகள் நேற்று இரவு நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது.
மாலை வந்தவர்களை, “வாங்க அத்தை, வாங்க மாமா” என சம்பிரதாயத்திற்கு அழைத்தாள் யாழினி. ராஜன் பதிலுக்கு தலையாட்ட, பத்மா “ம்” என புன்னகைத்தார்.
அதன்பின் இருவருக்குமிடையேயான எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருக்க, இரவு அனைவரும் சாப்பிட்ட பின் பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
“கொடு நானும் கொஞ்சம் கழுவுறேன்” என பத்மாவும் அவளுடன் பாத்திரங்களை கழுவி வைக்க, “அத்தை உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றாள் யாழினி.
“ம்…” என்றே அதற்கும் பதில்வர, “நான் உங்க வீட்டுக்கு மருமகளா வந்தது உங்களுக்கு பிடிக்கல தான!” என்க, அவளின் கேள்வி அவருக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது. அவர் மறுக்க வாயெடுக்க அதற்குள், “ஏன் கேட்கிறன்னா, உங்களுக்கு மலர ரொம்ப பிடிக்கும்னு கேள்விபட்டேன். அவ மருமகளா வர வேண்டிய இடத்துக்கு நான் வந்துட்டேன்னு கோபமா” என்றாள் யாழினி.
அவளே நேரடியாக அந்த கேள்வியை கேட்டதும் தான் அவளை எந்தளவு அந்த விசயம் காயப்படுத்தி உள்ளது என்பது அவருக்கு புரிய, “மலர் எங்க வீட்டு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன் தான் யாழினி. ஆனா, நான் மட்டும் ஆசைப்பட்டா பத்தாதே, அவனுக்கு உன்னை தான் பிடிச்சுருக்கும்போது நான் மட்டும் ஆசைப்பட்டு என்னாகப் போகுது. அதுவும் இல்லாம சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்குமே என் ஆசை தவறா தான் படுது, அதுனால நானே என்னை தேற்றிக்கிட்டேன். உன்னை என்னால ஏத்துக்க முடியல தான். ஆனா, காலம் அத மாத்தும்னு நம்புறேன்” என்றார் பத்மா.
அதன்பின் யாழினியும் எதுவும் பேசவில்லை. அவளுக்கும் வருத்தம் இருக்கத் தான் செய்தது. ஆனால், வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லையென்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், அவரிடம் தானாகவே ஏதாவது ஒன்றை பேசத் தொடங்கினாள்.
***
இதனைக் கூறி முடிக்கும் போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஹரிஹரன், “தேங்க்ஸ் பட்டர்பிளை” என்க, “எதுக்கு?” என்றாள் யாழினி.
“இல்ல, அம்மா அப்படி சொல்லும்போது அதுக்கு கோபப்படாம புரிஞ்சுக்கிட்டதுக்கு” என்றான். “என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது, கோபக்காரி மாதிரி தெரியுதா?” என மூக்கு விடைக்க வினவியவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கி வைத்தவன், “அப்போ இது என்ன மகாராணி?” என்றான் ஹரிஹரன்.
அவனை முறைத்துவிட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேற, தனது அன்னைக்கும் தனது மனைவிக்கும் இடையேயான உறவு இனி கண்டிப்பாக நல்உறவாக அமையும் என்ற நம்பிக்கையோடு உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
ஊரில் நெருங்கிய சில உறவுகளை மட்டுமே அழைத்திருந்தனர். குணவதியையும் அழைத்திருந்தான் ஹரிஹரன். ஆனால், அவர் வர மறுத்துவிட, மலர்விழியும் “அம்மாவ இதுக்கு மேல கம்பெல் பண்ண வேண்டாம் டா கரிச்சட்டி” என்க, அதன்பின் அவனும் அவரை வற்புறத்தவில்லை.
ஆனால் மலர்விழியும் பாரிவேந்தனும் கட்டாயம் வரவேண்டும் என கட்டளையிட்டு இருந்தான் ஹரிஹரன். இந்திராவும் சிலம்புவும் காலையிலேயே வந்திருந்தனர். செந்தில், ஹரிக்கு உதவியாக நேற்றிரவே அங்கு தங்கி இருந்தான்.
வாசலில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான் ஹரிஹரன். பாரியும் மலரும் ஜோடியாக அங்கு வர, “வாங்க பிரதர், வா ஃபிளவர்” என வரவேற்றான்.
மலரிடம் ஏதோ பேச எத்தனிக்க அதற்குள், யாழினியின் குரல் அவனை அழைத்தது. “உள்ள வாங்க ஃபிளவர், நான் போய்ட்டு வந்தறேன்” என்றவாறே தன் மனைவியிடம் செல்ல, அவளோ ஏதோ வேலையை கூற, அதனை செய்து முடித்துவிட்டு தன் தோழியின் அருகே செல்ல முயன்றவளை தடுத்தாள் யாழினி.
“நல்ல நேரம் ஆரம்பிச்சுருச்சுங்க, பால் காய்ச்சலாம் வாங்க” என்க, “அத நீங்களே பண்ணுங்க பட்டர்பிளை, நான் எதுக்கு” என்றவனை இழுத்துக்கொண்டு சென்றாள் யாழினி.
இதனையெல்லாம் பாரிவேந்தன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, அவன் தோளை இடித்து, “மாமு!” என்றவாறே அவன் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தாள் மலர்விழி.
“உனக்கு கஷ்டமா இருக்கா ஃபிளவர்?” என்றான் பாரிவேந்தன் தன்னவளின் முகத்தில் எதையோ தேடியவாறே. “கஷ்டமா, எனக்கென்னங்க கஷ்டம்?” என அவள் அவன் கேட்பது புரிந்தும் புரியாதது போல் வினவினாள்.
“நான் எத கேட்கிறேன்னு புரியல!” என்றான் கண்கள் இடுங்க. “ப்ச், அத விடுங்க மாமு. ஆமா, அத்தை எங்க போனாங்க?” என்றவாறே எழப் போனவளின் கரத்தைப் பற்றி மீண்டும் அமர வைத்தான் பாரிவேந்தன்.
“உன்கிட்ட ஹரி பேச வரும்போதெல்லாம் அத தடுக்கற மாதிரி யாழு ஏதாவது ஒன்னு சொல்லி ஹரிய கூப்பிடறது உனக்கு தெரியாது, அப்படி தான!” என்றான் பாரிவேந்தன்.
“உங்களை மாதிரியே எல்லாரும் நினைக்க மாட்டாங்க மாமு. எங்களுக்குள்ள உறவ முழுசா புரிஞ்சுக்கிட்டவர் நீங்க, ஆனா அவனுக்கு மனைவியா வந்தவளும் புரிஞ்சுக்குவானு நாம எதிர்பார்க்கக் கூடாதுல்ல” என்றவளின் கண்களில் நீர் கோர்க்க, அவள் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான் பாரிவேந்தன்.
ஹரிஹரன், மலர்விழியின் நட்பை இப்போது அல்ல அவர்கள் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே அறிந்தவன் பாரிவேந்தன். மலருக்கு அவன் எந்தளவு முக்கியத்துவம் அளிப்பான் என்றும் அறிந்திருப்பவன். அதனாலேயே அவனாக உணர்ந்துக் கொண்டு இதனை அவளிடம் வினவி இருந்தான்.
இந்திரா அவர்களுடன் இணைந்திருக்க, அதன்பின் பேச்சு மாறியது. நல்ல நேரத்தில் பால் காய்ச்சி, சாமி கும்பிட்டனர். அதன்பின் உணவு பரிமாற, இந்திரா முதல் பந்திலேயே அமர்ந்துக் கொண்டாள்.
உணவு பரிமாறிக் கொண்டிருந்த சண்முகம், அவள் அருகில் வரும்போது அவள் கண்களோ அவன் கையில் இருந்த உணவின் மேல் தான் பதிந்திருந்தது. ஆனால், அவனோ அதனை பரிமாறும் எண்ணத்தில் இல்லை.
“அட எவன்டா அது, சோத்த கண்ணுல மட்டுமே காமிச்சுக்கிட்டு நிக்கிறது!” என திட்டியவாறே நிமிர்ந்துப் பார்க்க, அங்கு சண்முகம் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ, அதனைக் கண்டு கொள்ளாமல், “சோத்த வைங்க பாஸ்” என்றாள் தன் இலையை காட்டி. “நம்ம எப்போ இப்படி எல்லாருக்கும் கல்யாண சாப்பாடு போடறது ஹண்ட்ரட் கேஜி தாஜ்மஹால்” என்க, அவளோ தான் கேட்டது சரியா எனப் புரியாமல், தனது காதில் தான் ஏதோ கேளாறு என்றெண்ணி, காதை குடைந்தாள்.
“ஓவரா காதை கொடையாத குட்டி யான, கரெக்ட்டா தான் உன் காதுல விழுந்துருக்கு” என ஹரிஹரன் கூற, “பதில சொல்லு மா!” என மறுபுறத்தில் இருந்து மலர்விழி கூற, ஆக மொத்தம் அவளைச் சுற்றி தான் அனைவரும் நின்றிருந்தனர்.
சண்முகமும் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவன் இந்திராவின் அருகில் செல்லும்போதே சிலம்பு அலர்ட் ஆகி, தன் நட்பு பட்டாளத்தை அங்கு கூட்டி இருந்தாள்.
இந்திராவிற்கோ வெட்கம் பிடுங்கி தின்க, கண்களை இறுக மூடி அமர்ந்தாள். அவள் தோளில் சாய்ந்து, “என் அண்ணியா வர உனக்கு சம்மதமா டி?” என்றாள் மலர்விழி.
“எனக்கு தான் அண்ணி” என்றவாறே யாழினி அவர்கள் அருகில் வந்தவாறே கூற, சண்முகமோ மலரா யாழினியா என திருதிருவென முழித்தான்.
பாரிவேந்தனும், “சொல்லு மா தங்கச்சி” என்க, இந்திராவோ, “இப்படி எல்லாரும் சேர்ந்து என் கால வாரி விடுறீங்களே!” என்றாள் அழும் குரலில்.
“பதில சொல்லு பிரியாணி” என செந்திலும் சிலம்புவும் கத்த, “பாரு, உன் பதிலுக்காக எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க” என்றாள் மலர்விழி.
அவளோ முகத்தை மூடிக்கொள்ள, “மேடமுக்கு வெட்கமோ!” என கலாய்த்தனர் நண்பர்கள். அப்பொழுது தன் தோழியின் அருகே நின்றிருந்தவனை தன் பக்கம் இழுத்தாள் யாழினி.
“ஃபிளவர்” என ஹரிஹரன் இதழ்கள் முணுமுணுக்க, “அனுபவி டா கரிச்சட்டி” என்றது மலரின் இதழ்கள். தன்னவனின் கரம் பற்றியவள், புன்னகைத்தவாறே, ஹரிஹரனை பார்க்க அவனோ மனைவியா தோழியா என இருவரையும் பார்த்து பேந்த பேந்த முழிக்க, அங்கு சிரிப்பொலி பரவியது.
இதே சந்தோசத்துடன் அந்த ஐந்த நட்சத்திர நண்பர் கூட்டம் தங்களின் துணையுடன் என்றென்றும் வாழ அவர்களை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
_சுபம்_
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
😍😍😍😍❤❤❤
I like malar and pari character. I am also your follower in prathipalip
Thank u so much sis 😍❤
Lovely story very happy thank you 💗
Thank u so much sis
அருமையான கதைக்களம் உறவுககளின் உணர்வுகள் சூப்பர்👌👌👌மலர்ரோட உணர்வுகள் காதல், பாசம்,நட்பு, பிடிவாதம் எல்லாம் வேற லெவல் 👏👏👏👏
Thank u so much sis 😍❤
Nice story
Thank u ka 😍❤
Wow super கதை ஒரு கிராமத்துக்குள்ள போய் நானே வாழ்ந்த மாதிரி ஒரு மிக எதார்த்தமான ஒரு முடிவு பாரிவுடைய
ஏ புள்ளயும்,மலரோட மாமுவும் சூப்பர் ஹரியோட பட்டர்ஃப்ளையும் சன்முகத்தோட ஹன்டர்ட் கேஜி தாஜ்மஹாலும் வேர லெவல் எப்படித் தான் இப்படியெல்லாம் பட்டப் பெயர் யோசிச்சிங்களோ அருமையான கதை
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சூப்பர் 🥰😍🤩