Loading

 
 
கயல்விழி தன்னிடம் கூறிய அனைத்தையும் கட்டபொம்மனிடம் கூறியிருந்தான் தூரன். அதைக்கேட்ட கட்டபொம்மனும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். தான் சொன்ன விஷயங்களுக்கு எந்த பதிலையும் தராமல் இருக்கும் கட்டபொம்மனை…. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் தூரன். வெகு நேரம் காத்திருந்த தூரனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அழைத்தான்….. “சார்…….”
 
“சார்ர்ர்….”
 
தூரனின் அழைப்பில் இயல்புக்கு திரும்பிய கட்டபொம்மன்…. “சொல்லுங்க தூரன்.”
 
“சார் நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்லி இருக்கேன். ஆனா நீங்க…. எதுவுமே சொல்லாம இப்படி அமைதியா இருக்கீங்க….”
 
“ஒன்றுமில்லை தூரன்… எனக்கென்னமோ இது ஈசியா முடியுற பிரச்சனையா தெரியலை. இது ஒரு தொடர் சங்கிலி மாதிரி….. மையப்புள்ளி எங்க இருக்குன்னு தெரியாமலே போய்கிட்டு இருக்கு. இப்ப வரைக்கும் தேவிகா கேஸ்ல பெருசா எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் தேவிகா கேச எடுத்ததுல இருந்து… ஒவ்வொரு கொலை பத்தின தகவலும் ஒவ்வொன்னா வெளிய வர மாதிரி இருக்கு. இது நல்லதுக்கா… இல்ல கெட்டதுக்கான்னு தெரியல. ஆனா இது தேவிகா ஓட முடிகிற விஷயமா தெரியல. தேவிகா , ஆதின்னு இன்னும் தொடரும்னு தோணுது…”
 
“ஆமா சார் ! எனக்கும் அப்படி தான் தோணுது. இது என்னமோ திட்டமிட்டு நடக்குற கொலையாவே தெரியுது. ஆனா தப்பு பண்றவங்க பேய் பிசாசுன்னு பழிய அதுங்க மேலே போட்டுட்டு நிம்மதியா சுத்துறாங்க. இதை இத்தோடு நிறுத்தியாகனும் சார். அதுக்காக தான் அக்கா என்கிட்ட சொன்ன விஷயங்களை உங்க கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா இதுல அக்காவுக்கு எந்த பாதிப்பும் வராம பார்த்துக்கோங்க சார். ஏற்கனவே அக்கா ரொம்ப மன உளைச்சலில் இருக்காங்க. தன்னாலதான் ஆதிக்கு இந்த மாதிரி ஆச்சுன்னு தினமும் அழுதுட்டு இருக்காங்க. அவங்க படுற கஷ்டத்தை பார்க்கவே முடியல. இதுல அவங்க தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல…. தயவு செஞ்சு இந்த கேஸ் அ எப்படியாது முடிச்சு கொடுங்க. அதேநேரம் அக்காக்கு எந்த பாதிப்பும் வர விடாம பார்த்துக்கோங்க சார்.”
 
“எனக்கு புரியுது தூரன். இதுல உன்னோட அக்காவை எந்த விதத்திலும் நான் ஈடுபடுத்த மாட்டேன். அதே நேரம் கயல்விழி கிட்ட நான் பேசனும். அவங்ககிட்ட தம்பியா உங்களுக்கு கிடைச்ச பதிலை விட போலீஸ்காரனா எனக்கு இன்னும் அதிக பதில் கிடைக்கும்னு நம்புறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் இதுல உங்கள சம்பந்தப் படுத்தாம பார்த்துக்கிறேன். நாளைக்கோ இல்ல, உங்களால எப்போ முடியுமோ…. அப்போ கயலை வெளிய கூட்டிட்டு வாங்க நான் அவங்க கிட்ட பேசணும்.” 
 
“அக்காவை வெளிய கூட்டிட்டு வர்றது ரொம்ப கஷ்டம் சார். சுகுமாரன் அண்ணாவை பார்க்கிறதுக்கே , அப்பாகிட்ட அக்காவுக்கு ஆன்லைன் எக்ஸாம் இருக்குன்னு பொய் சொல்லி தான் கூட்டிட்டு வந்தோம். அதுக்கே அப்பா முடியாதுன்னு சொல்லிட்டாரு. நானும் மகியும் தான் ரொம்ப நேரமா பேசி அவரை சம்மதிக்க வச்சோம். நாளைக்கும் சுகுமாரன் அண்ணாவைப் பார்க்க அதே பொய்யை தான் சொல்லணும். அதனால தனியா உங்ககிட்ட பேச வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல சார்…..”  என்று தூரன் சங்கடமாக கூற .. சிறிது நேரம் யோசித்த கட்டபொம்மன்…… “சரி தூரன் ஒன்னும் பிரச்சனை இல்ல, நாளைக்கு நீங்க சுகுமாரனை பார்க்க போகும்போது எனக்கு கால் பண்ணுங்க நானும் வரேன். அப்புறம் எனக்கு கயல்விழி நம்பர் வேணும். ஆதிய பத்தின தகவல தெரிஞ்சுக்க கண்டிப்பா எனக்கு உதவியா இருக்கும்.”
 
“சரிங்க சார் நான் அக்காவோட நம்பர் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இதைப்பற்றி அக்காகிட்ட சொல்லியும் வைக்கிறேன்.”
 
“இல்லை வேண்டாம்! தூரன். என் கிட்ட நம்பர் இருக்கிதை உங்க அக்கா கிட்ட சொல்லாதீங்க.. நீங்க முன்னாடியே சொன்னீங்கன்னா பயத்துல என்னை அவாய்ட் பண்ண வாய்ப்பு இருக்கு. சோ, நீங்க  நம்பர் அனுப்பி விடுங்க நான் பேசிக்கிறேன். இந்த கேஸ்ல இருந்து உங்களுக்கு எந்த பாதிப்பும் வராம பாதுகாக்க வேண்டியது என் கடமை.”
 
கட்டபொம்மனின் பேச்சை மறுக்க முடியாமல் தூரனும் சரி என ஒப்புக்கொண்டு அங்கிருந்து செல்ல….. இத்தனை நேரமும் இவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அந்த உருவமும் கடும் கோபத்தில் அங்கிருந்து சென்றது.
 
*******************************
 
“அண்ணே! உங்களை எப்போ வர சொன்னேன் ? இப்ப வந்து இருக்கீங்க. நேத்து போகும்போது சரக்கு கடையில… இருக்கணும்னு சொல்லிட்டு போனனா இல்லையா?  
நான் சொன்னதைக் கேட்டு தலையை மட்டும் வேகமா ஆட்டுனிங்க. இப்போ எங்க போச்சு…. அந்தத் தலையாட்டல். என்னால பொழுது போகும் போது இங்கே இருக்க முடியாதுன்னு தானேண்ணே உங்ககிட்ட சொல்லிட்டு போறேன். நீங்களும் என் நிலைமையை புரிஞ்சி பழிவாங்குறீங்களே….. நான் இவ்வளவு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லாம நின்னா என்னண்ணே அர்த்தம்”  என்று முகத்தில் கோபத்தோடு பேசிக்கொண்டிருக்கும் சுகுமாரனையே ஆவென பார்த்திருந்தனர் மகியும் ,தூரனும்.
 
அதேநேரம் கயல்விழியும் சுகுமாரனை….. பெரும் ஏக்கத்தோடு பார்த்து அழைத்தாள்….. அண்ணா!.
முதலில் அந்த வார்த்தையை உள்வாங்காத சுகுமாரன் கயல்விழியின் இரண்டாவது அழைப்பில் திரும்பி கயல்விழியை பார்க்க…… சுகுமாரனின் முகத்தில் முதலில் அதிர்ச்சி பின் சோகம், விரக்தி, ஏமாற்றம்  என மாறி மாறி வந்து கடைசியில் கண்ணீரில் நின்றது. 
 
வழக்கம் போல சுகுமாரனின் கண்கள் அவன் கடையில் இருந்து நான்கு கடை தள்ளி இருக்கும் ஆதியின் கடையை நோட்டமிட்டது. அக்கடையோ எப்பொழுதும் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. சுகுமாரனின் பார்வை அறிந்து கயலும் அங்கேயே பார்க்க…. ஆதி இன்னும் அங்கே இருப்பது போன்ற பிரம்மை கயல்விழிக்கு.
 
“கயல்…… எப்படி இருக்க. நீ படிக்க போயிட்டதா கேள்விபட்டேன்….. படிப்பு எல்லாம் முடிஞ்சுதா?? என்ன இந்த ஊர் பக்கமே வராம போயிட்ட….. என்று சுகுமாரன் கேட்டுக் கொண்டே செல்ல… நேத்து நாங்க வந்தது ஞாபகம் இல்லையா அண்ணா…..என்ற மகியின் கேள்விதான் அவனின் பேச்சை நிறுத்தியது.
 
“எதுவும் பேசாமல் தலையை கவிழ்ந்து இருந்த சுகுமாரனின் அருகில் சென்ற கயல்விழி, அண்ணா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். வேற எங்கேயாவது போகலாமா. இவங்க ரெண்டு பேரும் என்னோட தம்பிங்க தான். நேத்தே உங்கள பார்க்க வீட்டுக்கு வந்திருந்தோம். ஆனா பேசக்கூடிய நிலைமையில  நீங்க இல்ல.அதனால தான் இன்னைக்கு கடைக்கு வந்திருக்கோம் ண்ணா.
 
***********************************
 
“சொல்லு கயல்….. என்கிட்ட நீ என்ன கேட்க போறேன்னு நல்லாவே தெரியும். இருந்தாலும் உன் வாயால் கேள்வி வரணும்னு நினைக்கிறேன்……. சொல்லு என்ன தெரியணும்.”
 
“அண்ணா அன்னைக்கு நீங்க ஆதிய பார்த்தீங்களா? என்னதான் நடந்துச்சு என் ஆதிக்கு…..? உங்களைப் பார்க்க தான் அனுப்பி வச்சேன். ஆனா அவள நான் பார்க்கவே முடியாத இடத்துக்கு அனுப்ப தான்… அன்னைக்கு அவ்ளோ அவசர அவசரமா கூட்டிட்டு வந்தேன்னு சத்தியமா தெரியாது. சொல்லுங்க அண்ணா என்ன நடந்துச்சு.”
 
“அன்னைக்கு நான் ஆதியை பார்த்தேன் கயல். அவ வந்ததிலிருந்தே சீக்கிரமா போகணும் போகணும்னு துடிச்சா. ஆனா உண்மையாவே என்ன விட்டுப் போவான்னு நினைக்கல….”  என கண்கள் கலங்கி சுகுமாரன் பேச திடீரென வேறு ஒருவன் வந்ததும் புரியாது அவனை பார்க்க. வந்த கட்டபொம்மனை மகியும், தூரனும் வரவேற்று அறிமுகப்படுத்தினர் சுகுமாரனுக்கு . தூரன் ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது கட்டபொம்மனுக்கு தாங்கள் செல்லும் இடத்தை சொல்லியிருந்தான்.
 
“சொல்லுங்க சுகுமாரன் அன்னைக்கு என்ன நடந்துச்சு…”  என்று கட்டபொம்மன் கேள்வி எழுப்ப…, “என்ன கயல் இந்த அண்ணன் மேல சந்தேகமா? நீங்க வந்ததும் இல்லாம திடீர்னு ஒரு போலீஸ்காரர் வந்து என்னை விசாரிக்கிறாரு. என்னோட ஆதிக்கு தெரியும் நான் அவளை எவ்வளவு காதலிச்சேன்னு. அவளைக் கொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை கயல்…” என்று சுகுமாரன் கூற, அவனது கேள்விக்கு கயல் பதிலளிக்கும் முன்னரே, கட்டபொம்மன்…. இங்க பாருங்க சுகுமாரன் நான் போலீஸ்காரன் தான். பூவிலாங்குடி கிராமத்துல நடக்குற கொலைகள் பற்றி விசாரிக்க வந்த போலீஸ்காரன். ஆனா இப்போ ஒரு போலீஸ்காரனா மட்டும் வரல…. மகி தூரன் இரண்டு பேரோட நலம் விரும்பியாவும், இங்க நிற்கிறாங்களே மேடம்.. கயல்விழி மேடம்… அவங்க மன உளைச்சல போக்கவும் தான் வந்திருக்கேன்”  என கயல்விழியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கூறினான். 
 
கட்டபொம்மன் தன்னை பார்ப்பதை அறிந்தும் கயல்விழி அவன் பக்கமே திரும்பவில்லை. இருந்தும் கட்டபொம்மனின் பேச்சுக்களை மட்டுமே அவள் காதுகள் கேட்டுக்கொண்டிருந்தது.
 
“எதுவோ சார் ..நடந்த உண்மையை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அன்னைக்கு நான் அவசரமாக ஊருக்கு போறதால ஆதியை பார்க்க போனேன். ஆதி கூட பேசிட்டே இருக்கும்பொழுது என்னமோ வித்தியாசமா ஒரு சத்தம் வந்துச்சு. உடனே ஆதி ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுட்டா. எனக்கும் அந்த சத்தம் பயமா இருந்தாலும் ஆதிக்கு தைரியம் சொல்லிட்டு இருந்தேன் சார். திடீர்னு கேட்ட சத்தம் நின்னுடுச்சு. உடனே ஆதி என்னை அங்கிருந்து கிளம்ப சொல்லிட்டா. நான் உன்ன விட்டுட்டு போறேன்னு எவ்வளவோ சொன்னேன் சார். அவதான் கேக்கவே இல்ல.. நானும் சரின்னு அவ பேச்சுக்கு சம்மதிச்சு கிளம்பிட்டேன். ஆனா நான் கிளம்பினது எவ்வளவு பெரிய தப்புன்னு மறுநாள்தான் புரிஞ்சுகிட்டேன்….” என அன்று நடந்த நிகழ்வை அசை போட்ட சுகுமாரனின் நெஞ்சில் ஆயிரம் அம்புகளை ஒரே நேரத்தில் எய்தியது போன்ற வலி உண்டானது.
 
“அதெல்லாம் சரி சுகுமாரன் உங்களுக்கு ஆதி இறந்தது எப்படி தெரியும்..?”
 
“அவள அன்னைக்கு பார்த்தும் என்னால சரியா பேச முடியல சார். அதான் அவ கிட்ட நாளைக்கு நம்ம எப்பவும் சந்திக்கிற இடத்துக்கு வானு சொல்லிட்டு வந்தேன். அது அவங்க ஊருக்கு பக்கத்துல இருக்க இடம்தான். மறுநாள் அவ வருவான்னு நானும் அங்க போனேன்… ரொம்ப நேரமா காத்திருந்தேன் ஆதி வரவே இல்லை. எனக்கும் ஊருக்கு போக மணி ஆச்சு..சார். உடனே ஆதிக்கு கால் பண்ணேன்…எடுக்கல. அடுத்ததா கயல்விழிக்கு போன் பண்ணேன்…. போனை எடுத்த அவங்க அம்மா தான் ஆதி இறந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க. .. அதைக்கேட்ட நிமிஷம் பொய்யா இருக்க கூடாதான்னு ஓடி வந்தேன் சார். ஆனா என்னோட நினைப்புதான் பொய்யின்னு ஆதி யோட இறந்த உடல் நிரூபிச்சிடுச்சி சார். நான் காதலிச்ச பொண்ணு இல்லன்னு  நம்பவும் முடியாம, என்னோட உணர்வுகளை அழுகையா காட்டவும் முடியாம,  என் ஆதியோட சடலத்தை கூட தொட்டு பார்க்க முடியாத பாவியா யாரோ மாதிரி.. என் ஆதியோட கடைசி நிமிஷத்தை பார்த்துட்டு இருந்தேன் சார். என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது. இன்னும் கேட்டால் ஆதியோட சாவுக்கு நான் தான் காரணம். நான் மட்டும் அன்னைக்கு அவளை வரச் சொல்லாம இருந்திருந்தா இந்நேரம் எனக்கும் ஆதிக்கும் கல்யாணமே நடந்திருக்கும். நானும் எல்லாரு மாதிரியும் ஆசைப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்திருப்பேன். எனக்கு கடவுள் எதுக்கு இந்த தண்டனை கொடுத்தான்னு சத்தியமா தெரியல சார். ஒவ்வொரு தடவையும் இந்த கடைவீதிக்கு வரும்பொழுது ஆதியோட கடை மட்டும்தான் என் கண்ணுல படும். ஆதி இறந்ததுக்கு அப்புறம் அவங்க அப்பா கடையை நடத்துறது இல்ல சார். கடை ஓனரும் இந்த கடையை வேற ஒருத்தருக்கு வாடகைக்கு விட போறத சொல்லிட்டு இருந்தார். ஆனா  இந்த கடையை யாரும் வாங்க விடாம நானே வாடகைக்கு எடுத்து மாசாமாசம் வாடகையும் கொடுத்துட்டு இருக்கேன் சார். மத்தவங்களுக்கு அது வெறும் கடை…. ஆனா எனக்கு அது என்னோட ஆதி இன்னும் வாழ்ந்துட்டு இருக்க வீடு சார்…” என தன் எண்ணங்களை நால்வர் முன்னும் கொட்டிக் கொண்டிருந்த சுகுமாரனுக்கு அதற்கு மேல் பேச முடியாமல்… கண்ணில் நின்ற கண்ணீர் கன்னங்களில் வழிந்து தடுக்க பேச்சை நிறுத்தினான். 
 
“தூரன், போதும் அண்ணா அழாதீங்க… இப்போ அழுது ஒன்னும் ஆக போவதில்லை. உங்க மனச தைரியப்படுத்திக்கோங்க. கயல் அக்காவோ இல்ல நீங்களோ வேணும்னு அன்னைக்கு ஆதி அக்காவை கூட்டிட்டு போகல. அது உங்களையும் மீறி நடந்த விஷயம். இனிமே என்ன பண்ணலாம்னு யோசிங்க”  என்ற தூரன் பேச்சுக்கு மகியும்,  “ஆமாண்ணா இத்தோடு அழுவதை நிறுத்திருங்க….. அப்புறம் அண்ணா…… உங்களுக்கு எதோ சத்தம் கேட்டுச்சு ன்னு சொன்னீங்க. அது பேய் பிசாசு அந்த மாதிரியா?  இல்ல ஏதாவது மனுஷனோட சத்தமா?” 
 
சிறிதுநேரம் அழுகையில் கரைந்த சுகுமாரன் யோசித்துவிட்டு… “சரியா சொல்ல தெரியல தம்பி. ஆனா அது மனுஷனுடைய சத்தம் மாதிரி இல்ல. “
 
“சரி சுகுமாரன் நேத்து இவங்க மூணு பேரும் உங்களை பார்க்க வரும் போது நீங்க ஏதோ மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி எங்கேயோ பார்த்துட்டு இருந்ததா சொன்னாங்க. இன்னிக்கி நல்லா பேசுறீங்க எப்படி?”
 
“என்னோட ஆதி இறந்த மறுநாள் கடைசியாக அவளை பார்த்த இடத்துக்கு நான் போனேன் சார். அங்க என்னோட ஆதியை தேடி பார்த்தேன் அவ என் கண்ணுல சிக்கவே இல்லை. எவ்வளவு நேரம் அங்க இருந்தேன்னு சத்தியமா தெரியல. கால் வலியை உணரும் பொழுது தான் கால் போன போக்குல நடந்துக்கிட்டிருந்தேன். அப்போ எதுவோ ஒன்னு பின்னாடி இருந்து என்னை பலமாக தாக்குச்சி. கொஞ்சநேரம் ஒண்ணுமே புரியல. என்னன்னு யோசிக்கிறது குள்ள என்னை பலமா தாக்க  ஆரம்பிச்சிருச்சு. ஆனா அதை பார்க்க கண்டிப்பா மனுஷன் மாதிரி தெரியல. ஏதோ வித்தியாசமான உருவம் மாதிரி இருந்துச்சு. அது கூட என்னால சரிக்கு சமமா சண்டை போட முடியல. ரொம்ப நேரமா போராடி… மயங்கி சரிந்துட்டேன் போல. மறுநாள் மதியம் போல… ஆதி யோட அப்பா தான் வந்து என்னை எழுப்பினாரு. அப்போதுதான் நினைவு வந்து நேத்து ராத்திரி நடந்ததெல்லாம் யோசிச்சு பார்த்தேன்… அப்போ எனக்கு ஆரம்பிச்ச பயம் தான் சார். ராத்திரி நேரம் வந்தாலே அந்த உருவமும் அன்னைக்கு நான் பட்ட கஷ்டம் தான் ஞாபகத்துக்கு வரும்… ரொம்ப கொடூரமான நினைவு சார்‌ அது. இப்போ நினைச்சாலும் என்னமோ பண்ணும்.”
 
சுகுமாரன் நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்லையே..
 
“சார் நீங்க மட்டும் இல்ல இத நான் வெளியே சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ஆனா இது என் ஆதி மேல சத்தியமா உண்மை. இல்லனா அன்னைக்கு என்னை எழுப்பி விட்ட ஆதியோட அப்பா கிட்ட வேணா கேட்டு பாருங்க. அவர் சொல்றதையாது நீங்க நம்புவீங்களான்னு பார்க்கலாம்.”
 
மகியோ, “சித்தப்பா எதுக்கு அங்க போகணும்..?” என்க,
 
“மகி நம்ம கிளம்பலாம். எனக்கு என்னமோ அண்ணா சொல்ற வார்த்தை அத்தனை உண்மைன்னு  தோணுது. ஏன்னா நான் ஆதி இருக்கும்போது அவங்க கண்ணுல எந்த அளவுக்கு காதலை பார்த்தேனோ…. அதை விட அதிகமா இப்போ அவங்க கண்ணுல பார்க்கிறேன். இதுக்கு மேலயும் அண்ணாவை என்னால கஷ்டப்படுத்த முடியாது. போதும்….. இந்த கண்ணீர் உண்மை. ஆதிக்கு அண்ணா மேல அதிக அன்பு இருந்துச்சு. அண்ணாவும் ஆதிய ரொம்ப காதலிச்சாங்க… கண்டிப்பா ஆதி சாவுக்கு அண்ணா காரணமா இருக்க மாட்டாங்க. இதுக்கு மேல ஆதி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் கேட்க எனக்கு தெம்பு இல்லை. போகலாம் மகி என்ற கயல்விழிக்கு சிரிப்பை பரிசாக கொடுத்த கட்டபொம்மன் பேசத் தொடங்கினான்….
 
“இங்க விசாரணை பண்ணிட்டு இருக்கிறது நான். பாதியிலே விட்டுட்டு கிளம்ப சொல்ற உரிமையை உங்க அக்காக்கு யார் கொடுத்தா மகி? உரிமையைப் பற்றி பேசுறவங்களுக்கு இது தெரியாது போல” என்று கட்டபொம்மன் பேச உணர்வற்ற பார்வையை கட்டபொம்மன் மீது செலுத்தி விட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தாள் கயல்விழி. கயல்விழி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மகியும்,  தூரனும் அவள் பின்னாலே செல்ல… கட்டபொம்மன் சுகுமாரனிடம் திரும்பி, “சரி சுகுமாரன் நீங்க சொல்றத நான் நம்புறேன். அன்னைக்கு நடந்தத நீங்க முழுசா சொல்லலைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும். ஆதிய இவ்வளவு காதலித்துவிட்டு இன்னும் எதற்காக மறைக்கிறீங்க ன்னு  புரியல …. மேற்கொண்டு எனக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் உங்ககிட்ட கேட்குறேன் உங்களுக்கும் ஏதாச்சும் தகவல் தெரிஞ்சா என்கிட்ட மறைக்காம சொல்லுங்க.” என்று கூறிவிட்டு அவர்களுக்கு பின்னாலே கட்டபொம்மனும் சென்றார்.
 
இவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த  சுகுமாரனுக்கு…. ‘பார்த்தியா ஆதி உன்ன நான் கொன்னு இருப்பேன்னு சந்தேகப்பட்டு கேள்வி கேட்கிறாங்க. நான்தான் உன்னை கொன்னேனாடி! சொல்லு ஆதி….. இவங்க கிட்ட வந்து சொல்லு. .. என்னோட சுகுமாரன் இப்படி எல்லாம் பண்ண மாட்டான்னு சொல்லு. உன் மேல ரொம்ப ஆசை வச்சிருந்தானு சொல்லு. உன்னை நினைச்சு ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்கான்னு சொல்லு. உனக்கு நான் பேசுறதெல்லாம் கேக்குதா ஆதி… உனக்கு கேட்கும்… நான் பேசுறது, கஷ்டப்படுறது எல்லாமே உனக்கு தெரியும். இருந்தும் என் முன்னாடி உன்னால வர முடியாதுல்ல டி ஆதி….   என தன் மனதினில் புலம்பிக் கொண்டிருந்த சுகுமாரனுக்கு சென்ற மூவரும் மங்கலாய் தெரிந்தனர் அவனின் கண்ணீரில்.
 
 
அடுத்த பதிவிலிருந்து உருவத்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக…. …
வெளிவரும்…
 
மர்மம் தொடரும் ….
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்