Loading

தேவிகா இறந்து இன்றோடு…. பதினாறு நாட்கள் நிறைவடைந்து விட்டது. தேவிகாவின் காரியத்திற்கு பரசுராமன் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. குமரேசனோடு கயல்விழி, மகி, தூரன் மூவரும் வந்திருந்தனர். 
தேவிகாவின் காரியமும் ஆரம்பமாக….. பரசுராம் மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று தன்னுடைய மகள்  புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற குமரேசன் பரசுராமருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக தோள் மீது கைபோட்டு துணை கொடுக்க…..
 
” முடியல குமரேசா….. நான் என்ன பாவம் பண்ணுனேன் எனக்கு எதுக்கு இந்த நிலைமை. ஒத்த பிள்ளைய பெத்து இத்தனை நாள் நல்லபடியா வளர்த்து இப்போ இழந்துட்டு நிக்கிறனே.. என்னோட மகள் இழப்பே ஈடு செய்ய முடியாதது குமரேசா… அதுக்குள்ள என் பொண்டாட்டியும் போய் சேர்ந்துட்டா. நான் மட்டும் கடைசி காலத்துல அனாதையா சாகணும்னு விதி போல. பொண்டாட்டியும் மகளும் இல்லாத இந்த நாட்கள்ல  நான் செத்துட்ட குமரேசா. என் மகளையும் மனைவியையும் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு…. என்று தன் மனவேதனையை பேச்சால் கழித்துக் கொண்டிருந்தார் பரசுராம்.
 
அவரையே பார்த்துக் கொண்டிருந்த தூரனை  நோக்கி வந்த மகி , தூரன் இடம் ரகசியமாக ” சுகுமாரன் இப்போ எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிருச்சு…‌ காலையில கடைப்பக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு இப்போதான் வீட்டுக்கு கிளம்பி போனாங்களாம். அவங்க வீட்டுக்கே போனா சுகுமாரனை பார்த்து பேசலாம். அக்கா மட்டும் இங்கே இருக்கட்டும் நாம ரெண்டு பேரும் போய் பேசிட்டு வருவோம் தூரா… ” என்ற மகிக்கு “இல்ல மகி இப்போ நம்ம போய் பேசுறது சரியா வராது .யார் என்னன்னு  சந்தேகம் வரும் . அது மட்டும் இல்லாம நம்ம கிட்ட உண்மைய சொல்லு வாங்கன்னு எதிர்பார்க்கவும் முடியாது. சுகுமாரனுக்கு ஏற்கனவே அக்காவை தெரியும். அக்காவை கூட்டிட்டு போனா அவங்க கிட்ட பேச ஈசியா இருக்கும். அதேநேரம் அக்காவுக்கும் சுகுமாரன் பார்த்து பேசணும்னு.. நெனச்சுட்டு இருக்காங்க. இப்போ கூட்டிட்டு போனா அக்கா மனசுல இருக்க கேள்வியை சுகுமாரன் கிட்ட  கேட்பாங்க  ….கொஞ்சமாச்சும் அவங்க மனசு நிம்மதி அடையும். அதனால கண்டிப்பா அக்காவை கூட்டிட்டு போகலாம். ஆனா அப்பாதான் எங்க போறீங்கன்னு முதல்ல கேள்வி கேட்பார். அப்பாவை மட்டும் எப்படியாது சமாளிச்சுட்டா போதும் நம்ம மூணு பேரும் போயிட்டு சுகுமாரன் அண்ணாவை பார்த்து பேசிட்டு வந்திடலாம்…. ” என்று தூரன் கூற அதுவே மகிக்கும் சரி எனப்பட்டது.
 
பின் குமரேசன் இடம் சென்ற மகி, அப்பா அக்காவுக்கு அடுத்த வாரம் ஆன்லைன் எக்ஸாம் நடக்கப் போகுது…. அதுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கனும்னு அக்கா சொல்லுச்சு ப்பா. காரியம் முடிஞ்சதும் நாங்க மூணு பேரும் போயிட்டு அக்காக்கு தேவையானதை வாங்கிட்டு வந்துடுறோம்  ப்பா…. ” 
 
“அதுக்கு எதுக்கு அக்கா வரணும் நீங்க ரெண்டு பேருமே என்ன ஏதுன்னு கேட்டு வாங்கி கொடுங்க” என்று பதிலளித்த குமரேசனுக்கு…. ” 
 
“இல்லப்பா இப்போ தான் முதல் தடவை அக்கா ஆன்லைன் எக்ஸாம் எழுத போறாங்க அது என்ன எப்படி இருக்கும்னு எங்களுக்கும் தெரியாது. அக்காவே வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவையானதை வாங்கிட்டு வந்துடுவாங்க. ஏதாவது விட்டுப் போனா திரும்பவும் அலைய வேண்டியதா இருக்கும் ப்பா என்று தூரன் சமாதானப்படுத்த….. ” சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க வீட்டுக்கு பொழுது சாயிறதுக்குள்ள   வந்தாகணும்னு என உத்தரவிட்டார் குமரேசன்.
 
***********************************
 
“என்னை எங்க கூட்டிட்டு போற மகி நானும் அப்போதிலிருந்து கேட்டுட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்ற….”
 
அக்கா எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்களை பார்க்க தான் போறோம் பேசாம வா போனதும் நீயே தெரிஞ்சுக்குவ …..”மகி நம்ம சுகுமாரன் அண்ணாவை பார்க்கப் போறோமா… ” 
 
தூரன் , “ஆமாக்கா சுகுமாரன் அண்ணா அவங்க வீட்டில இருக்காங்க ன்னு  எங்களுக்கு தகவல் வந்துச்சு . அதான் அப்பாகிட்ட உங்களுக்கு ஆன்லைன் எக்ஸாம் இருக்கு ன்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருக்கோம்.  நீங்க சுகுமாரன் அண்ணாவைப் பார்த்து அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு விசாரிங்க கண்டிப்பா இதுல ஏதோச்சும் ஒரு தகவல் கிடைக்கும் .” என பேசிக் கொண்டே மூவரும் சுகுமாரனின் தோட்ட வீட்டிற்கு வந்தனர்.
 
அதேநேரம் ..முந்தினம் பார்த்தது போலவே எங்கோ பார்வையை விரித்துக்கொண்டு….. வாயில் சத்தமே வராமல் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான் சுகுமாரன்.  சுகுமாரனின் தாயோ, சுகுமாறா… உனக்கு தினமும் பொழுது போனா இப்படி நின்னு பாக்குறதும் பேசுறதுமே வேலையா போச்சு. நான் உனக்கு பார்க்காத வைத்தியம் இல்லை. இருந்தும் எந்த பலனும் இல்லை. உங்க பையன் முழுசா மனநிலை பாதிக்கப்படலன்னு  எத்தனையோ டாக்டர் சொன்னாலும் நீ இந்த மாதிரி நடந்துக்கும் போது ஒரு அம்மாவா மனசு ரொம்ப கஷ்டப்படுது சுகுமாறா.‌ உனக்கு என்னதான் பிரச்சினை காலையில எல்லாம் நல்லா வேலைக்கு போற சாப்பிடுற எல்லாமே சரிதான்… பொழுது போற நேரத்துல மட்டும் உனக்கு என்ன தான் ஆகுது. அம்மாக்குண்ணு இருக்கிறது நீ ஒருத்தன் மட்டும் தாண்டா நீயும் இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்…. என்று தன் மகனின் நிலையை நினைத்து அழுது கொண்டிருக்கும் காமாட்சியே மூவர் கண்ணிலும் பட்டார்.
 
கயலுக்கு அங்கே நடப்பது எதுவும் புரியவில்லை. சுகுமாரனை கண்டதும் ஆதி முகம் மட்டுமே மனக்கண்ணில் தோன்ற ஒருவித வலியோடு மகிமை பிடித்தவாறு பார்த்திருந்தால். சிறிது நேரத்தில் காமாட்சியை அடைந்த மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கினர்.
 
” அம்மா நான் கயல்விழி பக்கத்து ஊர் பூவிலாங்குடி ல இருந்து வரோம். சுகுமாரன் அண்ணாவை  படிக்கும் பொழுது தெரியும். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் ஊருக்கு வந்து இருக்கேன் . அதான் அண்ணாவைப் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன். ஆனா அண்ணாவை பார்த்தா ஏதோ பிரச்சனையில் இருக்க மாதிரி இருக்கு ! என்னம்மா ஆச்சு ” என்ற கயல்விழியின் கேள்விக்கு பதிலளிக்க துவங்கினர் காமாட்சி…..
 
“என்னத்த சொல்ல என் மகனுக்கு எந்த காத்து கறுப்பு அடிச்சதுன்னு  தெரியல… ஒரு நாலு வருஷமாவே இப்படித்தான் பொழுது போற நேரத்துல எங்கேயோ வெறிச்சு வெறிச்சு பார்க்கிறதும் எதையோ பேசுவது மா இருக்கான். நானும் பல வைத்தியம் பார்த்துட்டு ஒரு பலனும் இல்லை. ஆனா கால நேரத்துல
எல்லாம் நல்லா தான் இருப்பாம்மா என் பையன்.  சாப்பிடுவான் வேலைக்கு போயிட்டு வருவான் பொழுது போகும் போது மட்டும் தான் இந்த பிரச்சனை. என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் தெரியல. நீங்களாது பேசிப் பாருங்க உங்களுக்காது என் மகன் பதில் சொல்றானான்னு   பார்ப்போம்….” என காமாட்சி நகர்ந்து கொள்ள
 
 
“அண்ணா! ……”
 
” அண்ணா! இங்க திரும்பி பாருங்க நான் யாருன்னு உங்களுக்கு தெரியுதா.”  கயல் எவ்வளவு கேட்டும் சுகுமாறன் இடம் எந்த பதிலும் இல்லாது போக…. மூவரும் நாளை காலை வந்து சந்திப்பதாக காமாட்சியிடம் கூறிவிட்டு பூவிலாங்குடி  நோக்கி புறப்பட்டனர்.
 
புறப்பட்டுப் போகும் மூவர் முகத்தில் இருவர் முகம்…. குழப்பத்தில் இருக்க ஒருவர் முகம் மட்டும் ஏகத்துக்கும் கேலி சிரிப்பை சிந்தி கொண்டே சென்றது.
 
********************************
 
சுகுமாரனை பார்த்துவிட்டு தங்களுடைய ஊருக்கு சென்று கொண்டிருந்த மூவரையும் வழிமுறைதான் கட்டபொம்மன். 
 
” தூரன் என்ன இந்தப்பக்கம் ? எங்க போயிட்டு வர்றீங்க? “
 
 
“நாங்களே உங்களை வந்து பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தோம் சார். நல்லவேளையா நீங்களே வந்துட்டீங்க. உங்களுக்கு தேவிகா அக்காவோட கேஸ் விஷயமா ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா சார். அன்னைக்கு பார்த்ததோட சரி அதுக்கப்புறம் உங்கள பாக்கவே முடியல. ….” என்று தூரன் கட்டபொம்மனிடம் வினவ கட்டபொம்மனோ, 
 
“நான் உங்ககிட்ட கேள்வி கேட்டா நீங்க திரும்பி என்னையே கேக்குறீங்க. அதுவும் ஒரு போலீஸ்காரர் கிட்ட நீங்க ஏதாச்சும் கண்டுபிடிச்சிங்கலான்னு  வேற கேக்குறீங்க. போலீஸ்காரங்க கிட்ட கேள்வி கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது….” என விளையாட்டாக கட்டபொம்மன் பேச அதில் கோபம்கொண்ட கயல்விழியோ, “சார்! போலீஸ்காரர்களை கேள்வி கேட்கக் கூடாது தான். அதே நேரம் தான் கொடுத்த கம்ப்ளைன்ட் எந்த நிலைமையில இருக்குன்னு கேள்வி கேட்கிற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. போலீஸ்காரங்க வேலை பார்க்குறதே பொதுமக்களுக்காக தானே. அப்படி இருக்க நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியதும் உங்க கடமை தான் சார். ” கயல்விழி சினத்தோடு பதிலளிக்க மகி தன் அக்காவை சமாதானப்படுத்தினான்.
 
” யாரு மகி இது… நான் சாதாரணமா தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம் வரணும். போலீஸ்காரங்க பொதுமக்களோட சேவைக்காக தான் வேலை பார்க்கிறாங்க இல்லன்னு சொல்லல…. அதேநேரம் ஒரு கேச முழுசா  முடிகிற வரைக்கும் அது சம்பந்தப்பட்ட தகவல்களை அனாவசியமா வெளியே சொல்லக் கூடாது என்கிறதும் எங்க கடமைதான்.  “
 
” சாரி சார் இது என்னோட அக்கா கயல்விழி. காலேஜ் எல்லாம் இப்போ லீவு ல சார் அதான்  இங்க வந்து இருக்காங்க. ” என்ற மகிக்கு எந்தவித முகபாவனையும் காட்டாமல் தூரனிடம் திரும்பி, “என்ன தூரன் என்ன பாக்க வரணும்னு நினைச்சதா சொன்னிங்க என்ன விஷயம்?”
 
“அது வந்து சார் இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம் உங்ககிட்ட சொல்லணும். நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க நான் உங்க கிட்ட வந்து பேசணும் சார். ஏன்னா நான் சொல்லப்போற விஷயத்தை ஒரு போலீஸ்காரர் மட்டும் பார்க்காம… எங்க குடும்ப நண்பராக இருந்து நீங்கதான் முடித்துக் கொடுக்கனும். ” 
 
“என்ன தூரன் வார்த்தை எல்லாம் ரொம்ப பலமா வருது…. அப்படி என்ன விஷயம் சொல்லப் போறீங்க. எதுவா இருந்தாலும் நீங்க இப்பவே பேசலாம் நான் ப்ரீயா தான் இருக்கேன்.”
 
சிறிது நேரம் யோசித்த தூரன் மகி இடம் திரும்பி “நீ அக்காவை கூட்டிகிட்டு போக மகி . நான் சார் கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு வந்துடுறேன். …” என  கூற, சரி என்று தன் அக்காவை அழைத்துச் சென்றான். 
 
போகும் கயல்விழி கட்டபொம்மனை முறைத்துக் கொண்டே செல்ல….. மாறாக கட்டபொம்மன் ரசனையான சிரிப்பை கயல்விழிக்கு பரிசாக தந்து விட்டு அதற்கும் கயல்விழியின் முறைப்பை பதில் பரிசாக பெற்றுக்கொண்டான். 
 
“எனக்கு என்னமோ இப்போலாம் எதுவோ தப்பா நடக்கிற மாதிரி இருக்கு. இத்தனை நாள் நம்ம பண்ணதுக்கும்…. இப்ப நம்ம பண்றதுக்கும் ஏதோ ஒரு தப்பை நுழைச்சு இருக்கும்னு தோணுது. அது எப்படி பல வருஷமா நாம பண்ணிட்டு இருக்க இந்த விஷயம் இப்போ சந்தேகத்தை கிளப்புது. எங்கிருந்து வந்தான் அந்த பையன். தேவை இல்லாம நம்ம விஷயத்தில் மூக்கை நுழைச்சு இப்போ நிம்மதி இல்லாம ஆகிட்டான். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது….. இந்த தடவ நான் நினைச்சது முழுசா நடந்தே ஆகணும். ஒவ்வொரு தடவையும் நம்ம இந்த விஷயத்தை பண்ணும் பொழுது…. இன்னைக்கு சரியா வரும் நாளைக்கு சரியா வரும்னு…. நம்பி நம்பியே காலத்தை கடத்திட்டோம். இனியும் இப்படியே இருக்க முடியாது. எங்கிருந்தோ வந்த அந்தப் பையனுக்கு சந்தேகம் வந்த மாதிரி இங்கே இருக்க எத்தனை பேருக்கும் சந்தேகம் வந்தா என்ன ஆகிறது. விஷயம் நம்ம கைய மீறி போறதுக்குள்ள முடிச்சாகணும். இப்ப வேற அந்த பையன் கூட சேர்ந்துக்கிட்டு…. அந்த குமரவேல் பையனும் ஓவரா ஆடுறான். உண்மையை கண்டுபிடிக்க போறேன்னு சொல்லி சொல்லி…. ஊர்ல இருக்கிற அத்தனை பேரையும் அவங்க பக்கம் திருப்பிடுவாங்க போல. நீயும் எதுவும் பண்ணாம அமைதியாவே இருக்க. இப்படியே போச்சுனா கண்டிப்பா நம்ம மாட்டிப்போம். அப்புறம் இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாமே வீணாப் போயிடும்…. ” 
 
அதைக் கேட்டுக் கொண்டிருந்த உருவமோ….. மிகுந்த கோபத்தில் கத்தியது………
 
கயல்விழிழிழிழிழி…………………….
 
 
மர்மம் தொடரும் ….
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்