அழுது அழுது தனது கண்ணீரை மொத்தமாக வெளியேற்றிவிட்டு… இனி அழுவதற்கு தெம்பில்லாமல் அமர்ந்திருந்தால் கயல்விழி. அவளைப் பார்த்த மகிக்கும், தூரனுக்கும் கவலையை விட இதிலிருந்து கயல்விழியை… எவ்வாறு மீட்டுக் கொண்டு வருவது என வழி தெரியாமல் கயல்விழியே பார்த்திருந்தனர்.
எவ்வளவு நேரமோ தெரியாது…. தூரனின் பேச்சுதான் கயல்விழியை நிகழ்வுக்கு மீட்டுக் கொண்டு வந்தது.
“அக்கா நீங்க ஒன்னும் தெரிஞ்சி பண்ணலையே… அதுவுமில்லாம அங்க அப்படி ஆகப் போகுதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்…? ஆதி அக்காக்கு இப்படி நடக்க போகுதுன்னு தெரிஞ்சி இருந்தா நீங்க தான் முதல்ல அங்க போக வேணாம்னு தடுத்து இருப்பீங்க. உங்களால நடந்துச்சுன்னு சொல்லி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திகாதீங்க க்கா… ஆதி அக்காவுக்கும் இது நல்லாவே தெரியும். உங்கள கண்டிப்பா தப்பா நெனைக்க மாட்டாங்க. உங்களால தான் அவங்க இறந்து போனதா நினைக்கவும் மாட்டாங்க க்கா.
இப்படியே நீங்க அழுதுட்டு இருந்தா மட்டும் ஆதி அக்கா வந்துடுவாங்களா ..? நீங்க கவலைப் பட்டு உங்களை நீங்களே வருத்திக்கிறதை விட்டுட்டு…. ஆதி அக்கா சாவுக்கு எப்படி நியாயம் தரலாம்னு யோசிங்க. இதைதான் கண்டிப்பா ஆதி அக்காவும் விரும்புவாங்க…..”
” நீ சொல்றது எனக்கு புரியுது தூரன்… ஆனாலும் அதைப் பத்தி நினைச்சாலே நான் ரொம்ப பலவீனமா ஆகிடுவேன். நம்ம கூடவே இருந்த ஒருத்தர் நம்மள விட்டு போனதும் வாழ்க்கை நரகம் னு சொல்லுவாங்களே ….. அதுவே நம்மலே அவங்க சாவுக்கு காரணமாக அமைந்துட்டா ….. அது நரகத்தை விட கொடுமையான வாழ்க்கையா இருக்கும்னு ஆதி விஷயத்துல தான் புரிஞ்சுகிட்டேன் தூரன். இப்ப நினைச்சாலும் மனசு ரொம்ப பதறுது. சித்தப்பாவை ஒவ்வொரு தடவையும் பார்க்கும் போது என்னோட குற்ற உணர்ச்சி அதிகம் ஆகுது. பெத்த மகளே எந்த காரணத்துக்காக கொடுத்தோம்னு கூட தெரியாம ஒவ்வொரு நாளும் அவங்க படுற அவஸ்தையை நெனச்சாலே நான் ஏன் வாழுறேன்னு தோணுது …….” என கயல் பேசிக் கொண்டே செல்ல மகியின் “அக்கா” என்ற வார்த்தை இடை வெட்டியது கயல்விழியை.
சிறிது நேரம் தன்னை நிதானப் படுத்திக் கொண்ட மகி கயலிடம், “நான் கேட்கிற கேள்விக்கு… அழாம, ஆதி அக்காவை நினைச்சு பதறாம.. படிச்ச பொண்ணா… நிதானமா யோசிச்சு பதில் சொல்லு. நீ சொல்லப்போற பதில் ல தான் இனிமே நாங்க எடுத்து வைக்கிற அடி இருக்க போகுது. அன்னைக்கு நடந்த நிகழ்வு அப்போ.. உன் மனசுல என்னென்ன பதிந்து இருந்துதோ அது அத்தனையும் ஒன்று விடாம சொல்லிடு” என மகி பிடிகையோடு ஆரம்பிக்க…. இருவரும் அவளையே பார்த்தர்கள்.
“அன்னைக்கு ஆதி அக்கா கூட இருந்த ரெண்டே பேரு ஒன்னு நீங்க இன்னொன்னு அவங்க காதலிச்ச சுகுமாறன். ஆதி அக்காவை எத்தனை மணிக்கு அலைச்சிட்டு போனாங்க? அங்க உங்களுக்கு எந்த சத்தமும் வரலையா? நீங்க அங்க போகும் போது சுகுமாரன் அங்கதான் இருந்தாங்களா ??? நிச்சயமா தெரியுமா?? ஆதி அக்கா இல்லாம நீங்க திரும்ப எப்படி வீட்டுக்கு வந்தீங்க? ஆதி அக்கா இறந்துபோனது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க ஏன் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லலை? எனக்கு இது எல்லாத்துக்குமே பதில் வரணும் க்கா . அழாம என்ன நடந்துச்சோ அதை ஞாபகப்படுத்தி சொல்லுங்க. “
“மகி இந்த மாதிரி அடுக்கடுக்கா கேள்வி கேட்டா எப்படி அக்கா நிதானமா பதில் சொல்ல முடியும். பொறுமையா ஒரு ..ஒரு கேள்வியா கேளு..”
ம்ம்…
மகி கேட்கும் கேள்விக்கு கயல்விழி சொல்லப்போகும் பதிலை இருவருக்கும் தெரியாமல்…. தனது கைப்பேசியில் பதிவு செய்யத் தொடங்கினான் தூரன்.
“நான் ஆதியை கூட்டிட்டு போகும்போது சரியா நேரத்தை பார்க்கல மகி . ஆனால் கிட்டத்தட்ட பன்னிரண்டிலிருந்து ஒரு மணிக்குள்ள இருக்கும். ஏன்னா சுகுமாரன் அண்ணா எனக்கு கால் பண்ணும் போது மணி 11.10 . அதுக்கப்புறம் தான் நான் ஆதிக்கு கால் பண்ணி பேசி … அங்க போக முடிவாச்சு. “
“சரி …க்கா அங்க உங்களுக்கு எந்தவிதமான சத்தமோ இல்ல வேற எதுவும் கேட்ட மாதிரி இருந்துச்சா? “
“”இல்ல மகி எனக்கு அந்த மாதிரி எந்த சத்தமும் வரல” என்று கயல் கூறும் பொழுது கண்கள் மேலும் கலங்க தூரனுக்கு தெரிந்துவிட்டது கயலுக்கு எதுவோ கேட்டிருக்கிறது என்று.
மகி, “சுகுமாறன் அங்க இருந்தாங்களா நீங்க பாத்தீங்களா? “
“இல்லை அண்ணா அங்க இருந்ததை நான் பாக்கல ஆனா வந்துட்டதா எனக்கு மெசேஜ் பண்ணாங்க….” கயல்
“சரிக்கா எனக்கு இதெல்லாம் விட இந்த கேள்விக்கு தான் முக்கியமா பதில் வேணும்… ஆதி அக்கா இல்லாம நீங்க எப்படி வீட்டுக்கு வந்தீங்க?”
கயல் எதுவும் பேசாம அமைதியாக இருக்க……. மகி மீண்டும் கேட்ட கேள்வியை கேட்க…..
“பெருமூச்சு விட்டபடி…. ஆதி சுகுமாறன் அண்ணாவைப் பார்க்க போய் ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அண்ணா ஊருக்கு போறதால ….பேசிட்டு இருப்பான்னு நானும் அமைதியா காத்துட்டு இருந்தேன். எவ்வளவு நேரம் நிற்கிறதுன்னு வந்த வழியிலேயே கொஞ்ச நேரம் நடந்துட்டு இருந்த மகி. அப்போதான் நம்ம ஊர்ல இருக்க ஒருத்தரு அந்த வழியாக வந்தாரு . என்னை பார்த்துட்டு நீ எதுக்கு இங்க இருக்க அதுவும் இந்த நேரத்துலன்னு கேட்டாரு. எனக்கு ரொம்பவே பயம் வந்திருச்சு மகி. அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு. நானும் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்க… அவரும் சரி சரி இங்க நிக்காத வீட்டுக்கு போ னு சொன்னாரு. சரி நான் போறேன் நீங்க போங்கன்னு எவ்வளவோ சொன்னேன்….மகி . அவர் பிடிவாதமா பொட்ட புள்ள இந்த நேரத்துல இங்க நிக்க கூடாது நானே வீட்ல விடுறேன்னு என்னை கூட்டி வந்து வீட்டுல விட்டுட்டு போனாரு. எனக்கு மனசு கேட்கல தான் மகி இருந்தாலும்… சுகுமாறன் அண்ணா கூட இருக்காங்க ன்ற நிம்மதியில தான் நானும் வீட்டுக்கு போனே. வீட்டுக்கு போனதும் கொஞ்ச நேரம் கழிச்சு ஆதிக்கு கால் பண்ணேன். ஆனா கால் பாதியிலேயே கட் ஆகி பிஸி னு வந்துச்சு. அண்ணா கூட பேசிட்டு இருக்கா போல அதனாலதான் கால் கட் பண்றான்னு நானும் விட்டுட்டேன். கொஞ்ச நேரத்துல நான் தூங்கிட்டேன் போல மகி எனக்கே தெரியல. சத்தியமா நான் வேணும்னு விட்டுட்டு வரல. ஆதிக்கு இப்படி ஆகும்னு தெரிஞ்சு இருந்தா என்ன நடந்தாலும் நான் அவ கூடவே இருந்து இருப்பேன் மகி. நான்தான் அவளை கொன்னுட்டேன்….” என கயல் தேம்பித் தேம்பி அழுக….
“போதும் நிறுத்துக்கா …. பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப அழுது என்ன பண்ண போற. நீதான அவங்கள எங்க கூட்டிட்டு போன அப்போ நீ தானே பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கனும். உன் கூட வந்தவங்க எங்க இருக்காங்கன்னு தெரியாம உனக்கு எப்படி தூக்கம் வந்துச்சி . இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்க தானே….. இருந்தும் நீ அங்க கூட்டிட்டு போனது தப்பு . அதைவிட பெரிய தப்பு அவங்களை விட்டுட்டு வந்தது. ஒருவேளை நீ எங்க இருந்திருந்தா… அக்கா இப்போ உயிரோட இருந்திருப்பாங்களோ என்னமோ. அப்படியே இல்லனாலும் அங்க என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரிய வந்திருக்கும். குறைஞ்சபட்சம் அங்கு இருக்க ஆதி அக்காக்கு உன்னோட தேவை ஏற்பட்டிருக்கும்…. உன்னை தேடி வந்து இருப்பாங்க.
உன்னாலையும் அவங்களை காப்பாத்திருக்க முடிஞ்சிருக்கும் . இப்படி எதுவுமே பண்ணாம… யாரோ வந்தாங்க பயமா இருந்துச்சு வீட்டுக்கு வந்துட்டேன்…. தெரியாம தூங்கிட்டன்னு கதை சொல்றீங்க. உங்களால இத்தனை வருஷம் எப்படி நிம்மதியா இருக்க முடிஞ்சுது. இத அப்பவே வெளியே சொல்லி இருந்தா இன்னிக்கு தேவிகா அக்காவோட மரணம் நடந்திருக்காது. எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவுமே பண்ணாத மாதிரி… நல்லா நிம்மதியா படிச்சிட்டு இப்போ ஊருக்கு வந்திருக்கீங்க. இத்தனை நாள் ஆதி அக்காவை நினைச்சு நீங்க வருத்தப்படுறீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது அவங்க சாவுக்குக் காரணமாகிட்டோம் னு குற்ற உணர்ச்சியில் தான் நீங்க வருத்தப்பட்டு இருக்கீங்கன்னு…..” என மகி தன் ஒட்டுமொத்த கோபத்தையும் அக்கா மீது திருப்பினான்.
மகி பேசப்பேச ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்த கயல்…. மேலும் குற்ற உணர்வு அழுத்த கண்கள் மேல் இழுத்து ஒருவித மூச்சு திணறலுக்கு ஆளாகி மயங்கி சரிந்தாள்.
கயலையே பார்த்திருந்த தூரன் தான்… கயலை தாங்கி, முதலுதவி அளித்து விட்டு ஓய்வெடுக்க கட்டிலில் படுக்கவைத்தான். பிறகு மகியிடம் சென்று….
” என்ன மகி இப்படி பேசிட்டே… அக்கா பண்ணது தப்பாவே இருந்தாலும் இப்போ அதை நினைச்சு ஒவ்வொரு நாளும் அழுதுட்டு இருக்காங்க. அவங்க செஞ்ச தப்ப இப்போ சொல்லிக் காட்டுறதை விட சரி பண்ண வேண்டியது நம்ம கடமை. கயல் அக்கா தெரிஞ்சி எந்த தப்பும் பண்ணல மகி . அன்னைக்கு அவங்களுக்கு இருந்த சூழ்நிலை அப்படி. நம்மளே இதை புரிஞ்சுக்காம நடந்துகிட்டா மத்தவங்க எப்படி புரிஞ்சுபாங்க மகி. அக்கா எந்திரிச்சதும் திரும்பவும் கோபத்தை காட்டாத… அவங்களுக்கு இப்ப தேவை ஆறுதல் தான். அடுத்து என்ன பண்ணலான்னு யோசி. அதை பத்தி அக்கா கிட்ட பேசு … “
“இல்ல….தூரா எனக்கு நிஜமாகவே இந்த விஷயத்தை அக்கா சொன்னதும் ரொம்ப கோவம் வந்துருச்சு. அவங்களுக்கு எதுவுமே தெரியாம இருந்து …. கூட்டிட்டு போய் இருந்தா கூட பரவாயில்லை. ஆனா எல்லாமே தெரிஞ்சும் அங்க கூட்டிட்டு போனதும் இல்லாம பாதியில விட்டுட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்பு. ஒரு உயிர் போய் இருக்குதுடா எப்படி கோவப்படாம இருக்க முடியும். அன்னைக்கே இதை அப்பா கிட்டயோ இல்ல வேற யார்கிட்டயோ சொல்லி இருந்தா அதுக்கப்புறம் வந்த மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கும் இல்ல….டா தூரா. யோசிக்காம நம்ம பண்ற சில விஷயங்கள் எங்க போய் முடியுதுன்னு பாருடா …..”
” சரி விடு மகி இனிமே பேசி ஒன்னும் ஆகாது. இனிமே என்ன பண்ணலாம் அதை பத்தி மட்டும் பேசுவோம் ” என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கயல் எழுந்துவிட அவளை நோக்கி சென்றனர்.
“சாரி ! …..க்கா எதோ கோவத்துல பேசிட்டேன். இதுல நீ வேணும்னு எதுவும் பண்ணலைன்னு புரியுது. இனிமே இப்படி நடக்காம நம்ம பாத்துக்கணும். ஆதி அக்கா மரணத்துக்கு பின்னாடி இருக்க மர்மத்தை கண்டுபிடிக்கனும் இதுதான் இப்போதைக்கு நம்ம மூணு பேரோட வேலை. ….”
தூரன், ” க்கா ஆதி அக்கா இறந்ததுக்கு பின்னாடி நீங்க சுகுமாறன் அவங்கள பார்த்தீங்களா? அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு அவர்கிட்ட கேட்டீங்களா? “
“இல்ல தூரன் ஆதி இறந்ததை பார்த்ததுல இருந்தே பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிட்டேன் . அப்பாவும் அம்மாவும் ரொம்ப பயந்து என்ன கொஞ்ச நாள் சித்தி வீட்ல இருக்க வச்சுட்டாங்க. சித்தி வீட்ல விடும்போது என்னோட போன் கூட தரல…. அதுல தான் சுகுமாறன் அண்ணா நம்பர் இருந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாள்ல காலேஜுக்கு அனுப்பிட்டாங்க. அப்போ எனக்கு புது நம்பர் புது போன் தான் வாங்கி கொடுத்தாங்க அப்பா. என்னால அவங்க நம்பரை கண்டுபிடிக்க முடியல தூரன். அப்பாவும் அம்மாவும் என்னை வந்து காலேஜில பார்த்துட்டு போவாங்களே தவிர இந்த ஊர் பக்கமே வரவிடல …. அதனால அவங்களை என்னால நேர்ல பாக்கவும் முடியல ….”என்றவளின் குரலில்தான் அத்தனை வருத்தம்.
மகி, “சரிக்கா அவங்கள பத்தி உனக்கு தெரிஞ்ச தகவலை சொல்லு இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு நாங்க கண்டுபிடிக்கிறோம். “
“நம்ம ஊருக்கு அடுத்த ஊர் தான் சுகுமாறன் அண்ணா ஊரு. அவங்களும் முத்து சித்தப்பா கடை நடத்துற வீதியில்தான் கடை வச்சிருக்காங்க. நாங்க பள்ளிக்கூடம் படிச்சது சுகுமாறன் அண்ணா ஊரில்தான். அங்கதான் அவங்களை எங்களுக்கு தெரியும். தினமும் ஆதியை பார்க்க ஸ்கூல் விடுற நேரம் வந்திடுவாங்க. ஆனா ஆரம்பத்துல அவங்க மேல எங்களுக்கு சந்தேகமா தான் இருந்துச்சு…. அதே ஊர்ல இருக்க எங்க தோழிகள் சொல்லி தான் அண்ணாவோட குணம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டோம். எங்கிட்ட ரொம்ப பாசமா பேசுவாங்க. ரொம்ப நல்லவங்க மகி. அடிக்கடி என்ன பார்க்கும்போதுலாம் ஆதியை பத்தி மட்டும் தான் பேசுவாங்க. அவள கல்யாணம் பண்ணிக்கணும் அவ கூட சந்தோஷமா வாழணும்னு நிறைய ஆசைப்பட்டாங்க . இப்போ அந்த ஊர்ல தான் இருக்காங்களான்னு சரியா தெரியல…. அவங்க கடைக்கு போய் விசாரிச்சா கண்டிப்பா தெரிய வரும் மகி. “
“ஆதி அக்கா ..இறந்தது உனக்கு எப்படி தெரியும்…”
” நான் காலையில எழுந்ததும் ஆதி தான் ஞாபகத்துல இருந்தா. உடனே அவளுக்கு கால் பண்ண. ஆனா போன் எடுக்கல. அடுத்ததா சுகுமாறன் அண்ணாக்கு கால் பண்ண… அவங்க நம்பர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்குன்னு வந்துச்சு. சரி நேரிலேயே போய் பார்க்கலாம்’னு ரெடி ஆகிட்டு , ஆதி வீட்டுக்கு போகும்போது தான் முத்து சித்தப்பாவும் வழியில பதட்டமா வந்துட்டு இருந்தாங்க. சித்தப்பா கிட்ட என்ன ஏதுன்னு கேட்கும் போதுதான் ஆதி வீட்ல இல்ல ன்னு சொன்னாங்க. உண்மையாவே அந்த நிமிஷம் நான் ரொம்ப பயந்துட்டேன் மகி. திரும்பவும் அவ நம்பருக்கு கால் பண்ணிட்டே இருந்தேன் ஆனா போன் எடுக்கல. சித்தப்பாவும் அப்பாவும் நிறைய இடத்துல தேடிப் பார்த்துட்டு…. கடைசியா ஊர் ஒதுக்குப்புறத்துக்கு போய் பார்த்துட்டு வரலாம்னு முடிவு பண்ணாங்க. அப்போ கூட எனக்கு ஆதி அங்கே இருப்பான்னு நம்பிக்கை இல்ல மகி. கண்டிப்பா வீட்டுக்கு வந்து இருப்பா. வந்துட்டு வேற எங்கேயாவது போய் இருக்கணும் இல்லன்னா சுகுமாறன் அண்ணாவை பார்க்க போய் இருக்கனும்னு நினைச்சுதான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனா கொஞ்ச நேரத்துல சித்தப்பாவோட அலறல் சத்தம் மட்டும்தான் எனக்கு கேட்டுச்சு. வேகமா அந்த இடத்துக்கு ஓடிப் போய் பார்த்த மகி அப்போதான் என்… என்.. என் ஆதி அங்க இறந்து கிடந்தாள்.”
…….
…….
…..
“சரிக்கா நீங்க இதுக்கு மேலயும் அழாம ரெஸ்ட் எடுங்க. நாங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு சொல்றோம் அந்த அண்ணா இருக்க இடம் தெரிஞ்சா நாம மூணு பேரும் போய் பேசுவோம். அவங்க சொல்ல போற பதில்ல இன்னும் ஏதாச்சும் தகவல் கிடைக்கும்.” என இருவரும் வெளியேறினர்.
சிறிது நேரத்தில் யாருக்கோ அழைத்த கயல்…. இங்கு நடந்த அனைத்தையும் கூறி விட்டு நாளை சந்திக்க வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்தாள் .
மனதிலோ, ‘ சாரி மகி உன்கிட்ட சில விஷயங்களை சொல்லாம மறைத்ததுக்கும், இப்ப நடந்ததை அங்கே சொன்னதற்கும், இனிமே நடக்கப் போறதை உனக்கு தெரியப்படுத்தாம இருந்ததற்கும்……’
***********************************
மாலை வேளை சூரியன் சந்திரன் வரவேற்று மறையத் தொடங்கும் அழகிய பொழுது….
மத்தியானங்குடி கிராமத்தில் செழிப்பான மலர் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த அச்சிறிய வீட்டில்…. அணிந்திருக்கும் சட்டையை ஒரு கையால் கழற்றிக் கொண்டே…. மறுகையால் தரையில் இருக்கும் மண்ணை அள்ளி வீசிக் கொண்டிருந்தான் அவன். வாய் மட்டும் தொடர்ந்து விடாமல் எதையோ முணுமுணுக்க….. அருகிலிருந்த தாயோ… தன் மகனின் நிலையை எண்ணி வருந்திய படி சுவற்றில் இருக்கும் தனது கணவனின் புகைப்படத்தை பார்த்து…. ‘ என்னங்க இது ! நம்ம பையனுக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல. இவன் எப்போ நல்லபடியா இருக்கான் எப்போ இந்த மாதிரி சுய நினைவில்லாம இருக்கான்னு புரிஞ்சுக்கவே முடியல. என் பையனுக்கு இந்தப் பிரச்சனையால ஒரு கல்யாணத்தை கூட பண்ணி பாக்க முடியல . நீங்க போனதுக்கு நம்ம குடும்பமே சிதைந்து போச்சுங்க. நானும் வேண்டாத தெய்வம் இல்லைங்க. எந்த சாமிக்கும் என் வேண்டுதல் போய் சேரல போல. எப்போதான் என் பையன் வாழ்க்கை நல்ல ஆகுமோ. நானும் போயிட்டா என் பையனோட நிலைமை எப்படி இருக்கும்னு நினைச்சாலே பதறுதுங்க. நீங்களாது இத சீக்கிரமா எனக்கு சரி பண்ணி குடுங்க….’ என புலம்பி கொண்டிருந்தார்.
மர்மம் தொடரும் ….
அம்மு இளையாள்.