Loading

இது முழுக்க முழுக்க கற்பனை கதை மட்டுமே..

எந்த ஒரு மூடநம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் இல்லை.. 

 

மயான பூமி..

வேதபாளையம்…

 

ஊரே நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த அந்த நடுநிசி நேரம்… ஊருக்கு வடக்கில் உள்ள குளத்து வேலி காட்டின் மத்தியில் இருந்த புளியமரம் மெல்ல அதிர்ந்தது… ஓஓஓஓஓ வென்ற அலறல் சத்தத்துடன் சேர்ந்த ஒப்பாரி ஒன்று திண்ணமாய் ஒலித்தது மரத்தின் கீழ் இருந்து.. பெண் அலறும் சத்தத்துடன் சேர்ந்து குழந்தை வீலென்று கத்தும் சத்தமும் இணைந்து இரைந்தது.

 

அதற்கு நேர் கிழக்கில், காட்டின் மூலை பக்கத்தில் இருந்து ஜாதி மல்லியின் மணம் காற்றில் மெல்ல வந்தது… மண் அதிரும்படி சிரிப்பொலி ஒன்று கிளம்பி மெதுவாய் அது அழுகுரலாய் மாறி அரட்டியது…

 

இரண்டு  திசையிலும் இருந்து வந்த சத்தம் ஊருக்குள் இருந்த தெருநாய்களின் காதுகளில் விழ, அந்த திசைகளை பார்த்து இடைவிடாது கத்தியது… தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாடுகள் கூட மிரண்டது…

 

வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த இருந்த கிராமத்து மக்கள் கிசுகிசுத்து கொண்டனர்… “இந்த அமாவாசை பக்கம் வந்தாலே இதே துன்பமா போச்சு… அந்த காட்டுல அப்படி என்னதா இருக்கோ?” என…

 

அடுத்த நாள் மதியம்… 

 

குளத்து காட்டின் கிழக்கே வீராப்பாய் நின்றிருந்தான் பண்ணையார் 

வேல்பாண்டி…  “டேய் முனியா” என சத்தமாய் அழைக்க.. “சொல்லுங்க ஐயா” என பவ்யமாய் வந்தான் முனியன்… பண்ணையாரின் வேளையாள்… 

 

“இன்னைக்கு நம்ம செங்கல் சூலைக்கு பத்து லோடு மண்ணு அனுப்பனும்… கொஞ்ச நேரத்துல ஆளுக வந்துடுவாங்க… பக்கத்துல இருந்து பாத்துக்க.. இங்க மட்டும் தோண்ட வேண்டாம்.. கொஞ்ச தூரம் தள்ளி தோண்ட சொல்லுடா… நா சொல்றது எதுக்குனு புரியுதல்ல…” என கட்டளை இட்டபடி கிளம்பி சென்றான் வேல்பாண்டி…

 

முனியனும் சிறிது நேரம் காத்திருக்க, ஆட்கள் வராததால் அதற்குள் சாராயக்கடை சென்றுவிட்டு வரலாம் என கிளம்பினான்…

 

அவன் சென்ற சிறிது நேரத்தில் மண் எடுக்க ஜேசிபி மற்றும் டிராக்டருடன் ஆட்கள் வந்து சேர, மண் எடுக்கும் பணி தொடங்கியது… நேரம் மாலை தாண்டி இருள் ஆரம்பித்தது… 

தோண்டும் போது எதோ செம்பு போன்ற ஒருபொருள் தெரிய

அதை சுற்றி சில தாயத்துகளும், செப்பு தகடுகளும் கட்டியிருக்க இதை கவனிக்காத ஜேசிபி டிரைவர் தோண்ட, சரியாக அந்த சொம்பில் பட்டு அது  உடைந்தது.. 

 

திடீரென சுழல்காற்று அசுரத்தனமாய் வீச, மஞ்சள் நிற மேகங்கள் எல்லாம் கருமையாய் உருமாறி இருளை உமிழ்ந்தது…  மண்புழுதி பறக்க அந்த செம்பில் இருந்து கரிய உருவம் ஒன்று சட்டென வெளிவந்தது… வீசிய காற்றில் அங்கு நின்றுருந்த ஆட்கள் தூரப்போய் விழ, காற்றில் கலந்து பறந்தது அந்த உருவம்..!

 

அது சென்றதும் அனைத்தும் நிசப்தமானது சிறிது நேரத்தில்… என்ன நடந்தது என்று புரியாது ஆட்கள் ஒருவரை ஒருவர் திகைத்தபடி பார்த்து கொண்டிருந்தனர்….

 

நேராக அந்த உருவம் ஒரு வீட்டின் முன் சென்று நின்றது… பார்க்கவே அலங்கோலமாய், கண்கள் கோரச்சிவப்பில்..  

வேகமாக உள்ளே செல்ல முனைய, நிலவுப்படி அருகே சென்றதும் தூக்கி வீசப்பட்டது தூரமாய்… மீண்டும் ஒருமுறை செல்ல மறுபடியும் தூக்கி வீசியது.. அதன் கண்கள் உற்றுநோக்க வீட்டை சுற்றி மந்திர வளையம் இருப்பது தெரிந்தது….

 

வேகமாக பறந்து அந்த பக்கம் சென்றது… தூரத்தில் பட்டியில் ஆடு ஒன்று இதன் கண்ணுக்கு தெரிய, அடுத்த நொடி ஆட்டிற்குள் நுழைந்திருந்தது அந்த உருவம்… சாந்தமாய் நின்றிருந்த ஆட்டின் வெள்ளை கண்கள் இரத்த நிறமாய் மாற, அந்த வீட்டை நோக்கி ஓடியது…

வீட்டின் முன்னாள் சென்று கத்த… உள்ளோ பூஜையில் இருந்த கோடனின் காதுகளில் அந்த சத்தம் கேட்டது… தனது சிஷ்யனை சென்று பார்க்க சொல்ல அவனும் வெளியே வந்து பார்த்தான்…

 

அவனின் பார்வையில் தங்கமென மின்னியது அந்த ஆடு… ஆசையுடன் பார்க்க அவன் நிலவாசலை தாண்டி ஆட்டின் அருகே வர, மின்னிய ஆடு மெதுவாய் கருப்பாய் உருமாறியது… அவனும் ஆபத்து என அறிந்து திரும்பி ஓட முயல! அவன் முன்னே கருப்பு கூந்தல் காற்றில் விரிய, நாக்கு நீண்டு தொங்கியபடி, கண்கள் அகல விரிந்து முகமெல்லாம் சிதைந்து கிடக்க அவன் முன்னே நின்றிருந்தது அந்த உருவம்…. திரும்பி பார்க்க அந்த ஆடு கத்தியபடி ஓடியது…

 

இவனது உடம்பு நடுங்க ஆரம்பிக்க, அந்த உருவத்தின் நாக்கு மெல்ல நீண்டு இவன் முகத்தை சுற்றி வட்டமடித்தது…. இவனை உற்றுப்பார்த்து கண்ணை அசைக்க இவனது உடல் அந்தரத்தில் பறந்தது.. கைகளும் கால்களும் ஒன்றை ஒன்று பின்னியபடி சட சட வென ஒடிந்தது.. வலியின் உச்சியில் அவன் கத்த, அந்த சத்தம் உள்ளிருந்த கோடனுக்கு கேட்டு வேகமாக வெளியே வந்தான்.. 

 

கோடனின்  வருகையை எதிர்பார்த்திருந்த அந்த உருவம் அவன் கண்முன்னே இவனை தூக்கி வீச, எதிரில் இருந்த மரத்தின் மீது மோதி மண்டை தனியே சென்று விழ, உடல் உறுப்புகள் இரத்தம் சதையுடன் சேர்ந்து மண்ணில் விழுந்தது..

 

அந்த உருவத்தை பார்த்து கத்திய கோடன் தன் பையில் வைத்திருந்த சாம்பலை எடுத்து அதன்மீது வீச முயல, இவனை கொடூரமாய் முறைத்தபடி அங்கிருந்து காற்றில் கலந்து மறைந்தது… கோடனும் அந்த உருவம் எது என்று தெரியாது குழம்பியபடி நின்றிருந்தான் கோபமாக…

 

மதியம் சாராயக்கடை சென்றவன், போதையை ஏற்றிவிட்டு திரும்பி குளத்து வேலி காட்டிற்குள் வர அங்கு அனைத்து வேலையும் முடிந்திருந்தது.. இதை பண்ணையாரிடம் சென்று கூறிவிட்டு, அவனுக்கு இரவு தேவையான பெண்ணை ஏற்பாடு செய்துவிட்டு மறுபடியும் சாராயகடைக்கு சென்றான்.

 

ஜோராக வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது அந்த 

சாராய கடையில்… ஒரு கோட்டரை வாங்கிய முனியன் மடமடவென குடித்து முடித்துவிட்டு காலி பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு கடலையை கொறித்தபடி நின்றிருந்தான்.. உள்ளே சென்ற சாராயம் முறுக்கை காட்ட, உடல் தேவைக்கு பெண்வாசம் கேட்டது இவனுக்கும்..

 

மூளை யோசிக்க ஆரம்பித்தது… சட்டென சரோஜா ஞாபகம் வர, அவள் வீட்டை நோக்கி நடையை தொடர்ந்தான்…. அவள் வீட்டிற்கு சற்று தொலைவில் நின்று  வேவு பார்க்க, கணவன் போதையில் குப்புறப்படுத்து உறங்குவது நன்று தெரிந்தது…

 

வீட்டிற்கு பின்புறம் சென்றவன் சரோஜாவை கண் ஜாடையில் அழைக்க, அவளும் பம்மிக்கொண்டே வந்தாள். 

 

“என்னய்யா இந்த நேரத்துல வந்துருக்க?”

 

“ஏ உனக்கு தெரியாதா எதுக்கு வந்துருக்கன்னு?”

 

“அதெல்லாம் தெரியுது… இன்னும் பொடுசுக தூங்கல..” 

 

“சீக்கிரம் தூங்க வெச்சுட்டு வா, இன்னைக்கு பண்ணையார் காட்டு பங்களாக்கு வந்துட்டாரு நமக்கு வேற இடமில்லை… அதனால வடக்கால இருக்க குளத்து வேலிகாட்டுக்கு போயிடலாம்….” என முனியன் சொல்ல,  

 

“யோவ்! அங்கயா..? அங்க பகல்ல போனாலே பயமா இருக்கும்…. நைட் எதேதோ சத்தம் வருதுனு ஊர் காரங்க பேசிக்கறாங்க..

இந்த அமாவாசை இருட்டுல அங்க வரதா!” சரோஜா சற்று பயப்பட..

 

“பண்ணையார் கூப்டும் போது மட்டும் இருட்டு எதும் தெரியலையோ?”  முனியம் நொனநாட்டியம் பேச..

 

“எல்லாம் என் நேரம்…. இந்த குடிகாரன் ஒழுக்கமா இருந்தா நான் ஏன் கண்ட இடத்துக்கு போற..” என  தன் கணவனை மனதினுள் வசைபாடியபடி வருவதாக சம்மதம் சொன்னாள்..

 

முனியனும் போதையில் எதையும் சட்டை செய்யாது அங்கு சென்றிருந்தான்.. பேட்டரி லைட் உதவியுடன்…. குழந்தைகள் உறங்க நேரமானதால் சற்று தாமதமாக தான் வந்தாள் சரோஜா…..

 

இந்த குளத்து காட்டிற்குள் இரவு வருவது இதுவே முதல் முறை அவளுக்கு…. இரவில் திடீரென யாரோ ஒப்பாரி வைக்கும் சத்தமும், குழந்தை அழும் சத்தமும், காற்றில் ஜாதிமல்லி பூவின் வாசம் வருவதாகவும் ஊருக்குள் பேச்சு உண்டு.. அதனால் இரவில் யாரும் வருவது இல்லை இங்கு.. தன் விதியை நொந்தபடி வந்து கொண்டிருந்தாள் சரோஜா…. பாவம் ஏழைப்பெண்.. அமைந்த கணவனோ முழுநேர குடிகாரனாய் இருக்க, கடனுக்கு மேல் கடனாகி கடைசியில பண்ணையாரின் பண வலையில் சிக்கி அவனுக்கு விருந்தாகி, அவனது வலக்கையான முனியனுக்கும் அடிபணிந்து போய் கொண்டிருக்கிறாள்..

 

அவளும் பயத்துடனே வந்துசேர, புளியமரத்தின் கீழ் நின்றிருந்தான் முனியன்… பேட்டரி லைட்டை உயிர்பித்து கீழே வைத்துவிட்டு அவன் அணைக்க வர, அவனுக்கு பின்புறம் சட்டென

சிவந்த கோர விழி ஒன்று தெரிய! வெளவெளத்து போனாள் சரோஜா….

அடுத்த நொடி மறைந்து போக கண்களை கசக்கிவிட்டு அவள் உற்று நோக்க, அங்கு எதுவும் இல்லை…  பிரம்மையோ என ஒருநொடி சிந்திக்க, முனியன் எதையும் சட்டை செய்யாது காரியத்தில் கண்ணாய் இருந்தான்.. 

 

இவள் எதேர்சியாய் மேல பார்க்க, புளிய மரத்தின் வாதில் தலைகீழாய் தொங்கி கொண்டிருந்தது அந்த கருப்பு உருவம்… 

நாக்கு ஒருஅடி முன்னே தொங்க, 

தலைமுடி விரிந்து, முகம் சிதைந்து, ஆங்காங்கே கிழிந்து 

தொங்கிய சதையுடன்.. கண்கள மட்டும் சிவந்து அகோரமாய் பெரிதாய் நீண்டு இருந்தது…

 

சரோஜாவிற்கு உடல் உதறல் எடுக்க, வாயிலிருந்து பேச்சு வராது கிடுகிடுவென நடுக்கம் கண்டு வீல் லென சத்தமிட்டாள்.. முனியன் என்னவென்று கேட்க… இவளுக்கு மூச்சை தவிர எதுவும் வரவில்லை…  இவள் பார்வை போன திசையை பார்க்க இவன் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை..

 

“என்ன அங்க..? எதும் இல்லையை அப்ரம் எதுக்கு கத்துற..” என்று கொஞ்சம் எரிச்சலுடன் திரும்ப,

 

எதிரில் தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள் சரோஜா.. இவன் அவளின் முகத்தை நிமிர்த்த முயல அசைக்க கூட முடியவில்லை….

வேகமாக முயற்சி செய்ய, சட்டென அவள் நிமிர்ந்து பார்க்க!

அவள் முகத்தை கண்டு அரண்டு தூர விழுந்தான்..

தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்