Loading

  ** 25 **

 

பரமேஸ்வரியை ஆஃப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்சென்று வெகு நேரம் ஆகியும் ஒரு அந்த இடத்தை விட்டு அசையாமல் வாசலிலேயே தவமிருந்தனர்.

 

ரெண்டு நாட்களாக யாரும் ஒழுங்காக சாப்பிடாமல் இருக்கவும் வளையாபதி வீரனிடம் சொல்லி அனைவருக்கும் குடிக்க ஜீஸ் வாங்கிவர பணிந்தார்.

 

சிறிது நேரத்தில் வந்தவன் ஆடலரசனையும் வடிவம்மையும் எப்படியோ குடிக்க வைத்துவிட்டான்.

 

ஆஃப்ரேஷன் தியேட்டரின் வாயிலில் எரிந்துகொண்டிருந்த லைட்டையே வெறித்தப் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரியின் அருகில் கூட அவனால் செல்லமுடியவில்லை… அந்த அளவுக்கு பாவமாக இருந்தது. 

 

மனைவியை தாங்கிக்கொண்டிருந்த அண்ணனிடமே கஸ்தூரியின் பொறுப்பை ஒப்படைத்தவன் மற்றவர்களை கவனித்துக்கொண்டான்.

 

“கஸ்தூரி… நீயே இப்படி இருந்தா எப்படி?” என கேட்டவன்,

 

அவளின் பார்வையை தன்னை நோக்கி திருப்பியவன், “உன்னுடைய ஐயாரையும் அம்மாவையும் நினைத்துப் பார்த்தியா? அவங்களை யார் பார்ப்பா? நீ தான பெரியவங்களுக்கு தைரியம் சொல்லணும்” என்றதும்.

 

“முடியலையே… மனசு ரொம்ப வலிக்குது” என்றவள் கண்ணீர் சிந்தவும்.

 

ஆடலரசனிடம், “கொஞ்ச நேரத்தில் வந்திடறோம் மாமா” என்றவன் மனைவியின் கையைப் பற்றி வெளியே இழுத்துச்சென்றான்.

 

திடீரென இவன் இழுக்கவும் பேலன்ஸ் இல்லாததால் தடுக்க முடியாமல்  இழுத்த இழுப்புக்கெல்லாம் நடந்தாள். 

 

நேராக காருக்குச் சென்றவன் மனைவியுடன் பறந்தான்.

 

சிறிது தூரம் சென்றதும் சின்னதாக ஒரு கோயில் வர காரை நிப்பாட்டியவன், “வா” எனக்கூறவும்.

 

அவனை முறைத்தபடியே இறங்கியவள், “இப்ப எதுக்கு இங்க? வாங்க அம்மாவைப் பார்க்க போலாம்” என்றாள். 

 

“போலாம்… இப்ப இல்லை… வா” என்றவன் அவளின் கையை பற்றி குளக்கறைக்கு அழைத்துச்சென்றான். 

 

“என்னுடைய கழுத்தில் தாலிகட்டியதால் நான் ஒன்னும் உங்க அடிமையில்லை” என கஸ்தூரி காட்டமாக கூற.

 

“ஆமாம்… இப்ப யார் இல்லைனு சொன்னாங்க?” என்று கூலாக தேனிசைச்செல்வன் கூறிவும்,

 

அழுகை மறைந்து கடுப்பான குரலில், “அப்ப எதுக்கு இங்க இழுத்துக்கிட்டு வந்திங்க?” என்று கேட்டாள். 

 

“ஹாஸ்பிட்டலில் இருந்து நீ என்ன பண்ணப் போற? யாருக்காவது ஆறுதலா இருக்கப்போறியா? அதுவும் இல்லை… நீயும் அழுது மத்தவங்களையும் பலவீனப் படுத்தற… அது உனக்கு புரியுதா?” என கேட்டவன்,

 

“மாமாவுடைய வேதனையைப் பற்றி யோசனை செய்து பார்த்தியா? சொல்லப் போனால் உன்னைவிட அவருக்கு தான் ரணம் அதிகம்… அவரை ஆறுதல் படுத்த ஏதாவது செய்தியா? இல்ல முயற்சியாவது பண்றியா? சுயநலமா உன்னை மட்டும் தான நினைத்த” என்று மண்டையில் உறைக்கும் படி கூறினான்.

 

கணவனின் கூற்றிலிருந்த உண்மை விளங்கவும் தான் தன்னுடைய முட்டாள் தனம் அவளுக்குப் புரிந்தது.

 

அதே சமயம் ஆடலரசன் மனைவியின் மேல் கொண்ட காதலின் ஆழத்தை உணர்ந்தவளுக்கு அவரின் உடைந்த உள்ளமும் அதிலிருந்த வலியும் முகத்தில் அறைந்தது.

 

கணவனின் பேச்சைக் கேட்டதும் அவரின் அருகில் இருந்து ஆறுதல் படுத்த வேண்டும் என்ற ஆவல் பிறக்கவும் பரிதவிப்புடன் தேனிசைச்செல்வனை கண்டாள்.

 

கஸ்தூரியின் மனம் உணர்ந்தாலும் தேனிசைச்செல்வன் பிடிவாதமாக அவளின் பதிலுக்காக நின்றான்.

 

“சாரி… நான் தான் தப்பு, பிளீஸ் வாங்க ஐயார்க்கிட்ட போகலாம்” என அழைத்தாள்.

 

“முடியாது… இங்க இப்படி பேசிட்டு அங்க வந்து அழுது அவரையும் கஸ்டப்படுத்துவ” என்று அழுத்தமாக கூறினான். 

 

“அழமாட்டேன்… பிளீஸ் போகலாம் வாங்க” என்று கூறி முதன் முதலாக அவளாகவே அவனின் கையைப் பற்றி அழைத்தாள்.

 

அதில் மனைவியின் மென்மையை உணர்ந்தவனின் மனம் மடைமாறவும் தலையை உலுக்கி சுயத்திற்கு வந்தவன், “நிச்சயமா? நம்பலாமா?” என இடக்காக கேட்டான்.

 

“சத்தியமா நம்பலாம்… வாங்க” எனக்கூறி வெளியே சென்றவள்,

 

“ஒரு நிமிஷம்… இவ்வளவு தூரம் வந்துட்டோம் வாங்க சாமிகும்பிட்டு போகலாம்” எனக்கூறி அவனை அழைத்தாள்.

 

இவ்வளவு தூரம் கஸ்தூரி தெளிந்ததே போதும் என நினைத்தவன், “வா” எனக்கூறி மனைவியுடன் ஜோடியாக அம்பாளை தரிசிக்க விரைந்தான்.

 

கணவன் கொடுத்த தைரியத்திலும் நம்பிக்கையிலும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றவள் சூழ்நிலையை கைகளில் எடுத்துக்கொண்டு ஆடலரசனுக்கு ஊக்கமளித்தவள் வளையாபதிக்கு ரெஸ்ட் கொடுத்தாள்.

 

கணவன் மனைவிக்கு இடையே வரும் நெருக்கமும் பிணைப்பும் யாரும் சொல்லிக்கொடுத்து வருவது இல்லை… தானா வரணும்… அதற்கு முதலில் இருவரும் இவள் என்னவள், இவன் என்னவன் என்ற எண்ணம் மனதின் அடி  ஆழத்திலிருந்துப் பிறக்க வேண்டும்.

 

இந்த எண்ணமும் உரிமையும் இருவரிடமும் இருந்ததால் தான் இயல்பாய் பொருந்திப் போனார்கள்.

 

இவர்களின் இணக்கம் வடிவம்மையையும் வளையாபதியையும் ஆசுவாசப்படுத்தியது என்றால் வீரனின் மனதில் அளவுகடந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

 

“ரெண்டு நாள் தான் நான் இங்க இல்ல. அதற்குள்ள என்னென்ன காரியம் பண்ணி வச்சிருக்க ஶ்ரீ? அதிலும் இந்த முறை நீ செஞ்சது ரொம்ப அதிகம்… ஒவ்வொரு முறையும் நீ எங்க அப்பா அம்மாவை படுத்தும்போதெல்லாம் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் நம்ம பையன்… இப்ப தோனுது அதெல்லாம் தப்புனு… ஆரம்பித்திலேயே உன்னை அடக்கிவைத்திருந்தால் இவ்வளவு கேவலமா இறங்கியிருக்கமாட்ட” என்று ஆதிரன் கோபமாகக் கத்தினான்.

 

ஏற்கனவே தான் செய்தது தவறு? சரியா? என தெளிவில்லாமல் குழப்பத்திலிருந்தவளிடம், ஊரிலிருந்த வந்த கையோடு ஆதிரன் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கவும் எரிச்சலின் உச்சிக்கே ஶ்ரீ சென்றுவிட்டாள். 

 

“அப்படி என்ன நான் பண்ணிட்டேன்? அவங்க எங்களுக்கு என்ன பண்ணாங்களோ அதைத்தான் நான் செய்தேன்” என்றவள்,

 

“உங்களுக்கு தான் உங்க அப்பா, அம்மாவை பற்றிச் சரியாத் தெரியலை… கொஞ்சம் நாம ஏமாந்தாலும் அத்தனையும் அந்த கஸ்தூரிக்கே தூக்கிக்கொடுத்தாலும் கொடுத்திடுவாங்க” என்று இளக்காரமாகக் கூறினாள். 

 

“அவங்களை பற்றி அப்படி என்னத்தைடி கண்டுட்ட? மிஞ்சி மிஞ்சிப் போனா மூணு முறை லால்குடியில் இருந்திருப்ப, அதிலேயே அம்மாவையும் அப்பாவையும் தெரிஞ்சுக்கிட்டியோ? அந்த அளவு நீ புத்திசாலியா? இல்லை மனுசங்க மனதைப் படிக்க தெரிஞ்சவளா?” என்று கோபமாக கேட்டான். 

 

ஆதிரனின் கேள்வி குழம்பியிருந்தவளின் மனதை மேலும் குழப்பவும், “இல்லை தான்… எனக்கு அவங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது ஒத்துக்கிறேன்” என்றவள்,

 

“என்னுடைய பாட்டி உங்களைப் பெற்றவங்களை பற்றி அத்தனையும் ஒன்னுவிடாமல் சொல்லியிருக்காங்க ஆதி” என்று குழந்தைத் தனமாகக் கூறினாள்.

 

“நீ என்ன பைதியமா? ஒருத்தங்க சொன்னாங்கனு எப்படி நீ இப்படி நினைக்கலாம்? படித்திருக்கியே தவிர அறிவுங்கிறது கொஞ்சமாச்சும் இருக்கா?” என்று கத்தினான்.

 

“ஆமாம்… பைத்தியம் தான்… அப்படியே வச்சுக்கோங்க” என்று புரிந்துகொள்ளாமல் கூறினாள். 

 

“உனக்கெல்லாம் சொன்னா புரியாது பட்டால் தான் தெரியும்… அப்போ நீ என்னாதான் அழுது புலம்பினாலும் எதுவும் சரியாகாது” என்றவன் தந்தைக்கும் தங்கைக்கும் மாறி மாறி அழைத்தான்.

 

பலமுறை கால் செய்தும் யாரும் எடுக்காமல் போக பதட்டமடைந்தவன் ஆரூரனுக்கு அழைத்தான்.

 

அவனும் எடுக்காமல் போக கோபத்தில் லக்ஷனாவுக்கு அழைத்து தம்பியும் மனைவியும் செய்துவைத்த காரியத்தை ஒன்றுவிடாமல் கூறினான். 

 

“மாமா, என்ன சொல்றிங்க? ஆரூரனா இப்படி செய்தான்! என்னால் நம்பவே முடியலை” என அதிர்ச்சியில் திக்கித் திணறிக் கேட்டாள். 

 

“ஆமாம் ம்மா… எனக்கே ஊரிலிருந்த என்னுடைய நண்பன் சொல்லித்தான் தெரிந்தது” என்றவன்,

 

“அந்த நாய் அங்கேயா இருக்கான்?” என கேட்டான்.

 

“இல்ல மாமா… அவன் இன்னும் வரலை… அடுத்த வாரம் தான் வருவான்” என்றவள்,

 

“அடுத்த ப்ளைட்டில் நான் கிளம்பி வரேன் மாமா… நீங்க அவனிடம் இதைப் பற்றி பேசாதிங்க… நானே வந்து பேசிக்கிறேன்” என்றவள்,

 

“இப்ப பெரியமாமாவும் அத்தையும் எப்படி இருக்காங்க மாமா?” என தவிப்புடன் லக்ஷனா கேட்டாள். 

 

“எங்க இருக்காங்கனு தெரியலை லக்ஷனா… போன் பண்ணாலும் எடுக்கமாட்டேங்கிறாங்க… திரிவேணிக்கு பண்ணா கட் பண்றா ம்மா… எனக்குத் தான் என்ன செய்றதுனே புரியலை” என்று தவிப்பாக கூறினான். 

 

“நீங்க பயப்படும் படி எதுவும் ஆகியிருக்காது மாமா… இந்த ஆறு மாதமா கஸ்தூரி எங்க போனான்னு விசாரிங்க… அது தெரிந்தால் போதும் எல்லாரையும் கண்டுபிடித்திடலாம்” என்றவள் மளமளவென்று இந்தியா கிளம்புவதற்கான வேலையை ஆரம்பித்தாள்.

 

காதல் கணவனின் குணத்தை அறிந்தவளின் மனது சுக்கல் சுக்கலாக உடைந்து போய்விட்டது.

 

மனதில் ஏற்பட்ட காயத்தின் ரணம் தாளாமல் வாய்விட்டுக் கதறினாள்.

 

ஆதிரனின் பதட்டத்தைப் பார்த்த ஶ்ரீக்கு மேலும் மேலும் பயம் அதிகரிக்க ஆரம்பித்து… அதையும் விட பாட்டி சொன்னது போல் இல்லாமல் நல்லவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற பயம் பிறந்தது.

 

தனக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் முயன்று தோற்றவனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் பிறக்கவும் கலங்கிப் போய் அமர்ந்துவிட்டான்.

 

இத்தனை பேரையும் கலங்கடித்தவன் தனக்காக ஏற்பாடு செய்திருந்த வில்லாவில் கவலையின்றி நிம்மதியாக இருந்தான். 

 

“எப்படியே சொத்தைப் பிரிச்சாச்சு… இனி யுஎஸ்லயே செட்டில் ஆகிட வேண்டியது தான்… ஆனாலும் இந்தத் தோட்டத்தை மட்டும் ஒன்னும் பண்ண முடியலை… பக்காவா பிளான் பண்ணி ஆசை மகள் பேரில் எழுதிட்டாங்களே… இதெல்லாம் எத்தனை நாளைக்குனு பார்க்கலாம்? எப்பையா இருந்தாலும் காரியத்தை முடிச்சுடணும்” என்றவன் மனைவிக்கு கால் செய்தான்.

 

“என்ன இது போகமாட்டிக்கிறது? ஒரு வேளை உண்மை தெரிந்திருக்குமோ?” என்றவன்,

 

“வாய்ப்பே இல்லை… தெரிந்திருந்தால் கொண்ணே போட்டுடுவா” என்று புலம்பினான். 

 

‘ஜார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்… ஒரு பெக் போட்டுட்டு வந்து பண்ணி பார்க்கலாம்’ என நினைத்தவன் பாருக்குச் சென்றான்.

 

வெகு நேரம் அனைவரையும் பதட்டத்தில் ஆழ்த்திய பின் ஆஃப்ரேஷன் முடிந்து கஸ்தூரி நார்மல் வார்டுக்கு கொண்டுவரப்பட்டார்.

 

ஆஃப்ரேஷன் நல்லபடியாக முடிந்த நிம்மதியில்  இருந்தவர்களை அழைத்த மருத்துவர் நாற்பத்தி எட்டு பக்க அறிக்கை அறிவிப்பது போல் பரமேஸ்வரியின் நிலையை கூறி இவர்களை எச்சரித்தார்.

 

“என்னடா இப்படி சொல்றார்? இப்ப என்ன பண்றது?” என ஆடலரசன் கவலையாக நண்பனிடம் கேட்டார்.

 

“கொஞ்ச நாளைக்கு தங்கச்சிக்கிட்ட ஊரைப் பற்றியோ பசங்களைப் பற்றியோ யாரும் பேசாதிங்க… சொல்லப்போனால் இவனுங்க நியாபகமே வராமல் பார்த்துக்கணும்” என்று வளையாபதி கூறினார்.

 

“அண்ணனுங்க நியாபகமே பரமு அம்மாவுக்கு வராத அளவுக்கு நாம என்ன செய்ய முடியும்? வீட்டுக்குப் போனாத் தான் இது நடக்கும்… ஆனால் டாக்டர் சொல்றதைப் பார்த்தா அதுக்கும் இப்போது வாய்ப்பு இல்லை” என கஸ்தூரி ஆயாசமாக கூறினாள்.

 

வடிவம்மை, “கஸ்தூரி சொல்ற மாதிரி அக்காவுக்கு பசங்களை விட வயல்னா ரொம்ப இஷ்டம் ண்ணா” என்றவர்,

 

“இந்த நிலையில் அங்க போவதும் அக்காவுக்கு நல்லதில்லை அதே சமயம் இந்த நகரத்து வாழ்க்கையும் சரியாவராது, மேலும் மெலிந்து தான் போவாங்க” என்று கூறினார்.

 

அதற்கு வீரன், “பேசாமல் அவங்களை கூட்டிக்கிட்டு இலஞ்சி போயிடலாம்… அங்க போனா இயற்கையோடு இயற்கையான இருந்த மாதிரி இருக்கும்” என்றான்.

 

கஸ்தூரி, “இது நல்ல ஐடியா தான்… அங்கே போய் எங்கு தங்க? எவ்வளவு செலவாகும்?” என கேட்டாள். 

 

வளையாபதி, “அங்க நம்ம பண்ணைவீடு இருக்கு கஸ்தூரி… பார்த்துக்கலாம்… நீ கவலைப்படாமல் அம்மாவை பார்த்துக்கோ… டாக்டரிடம் கேட்டுட்டு நாம அங்க போவதற்கான வேலையைப் பார்த்துக்கிறேன்” என்றவர் வீரனிடம்  அதைப் பற்றி பேசினார்.

 

கஸ்தூரியின் அருகில் வந்த தேனிசைச்செல்வன், “தயங்காமல் முகத்தை கழுவிக்கிட்டு போய் அம்மாக்கிட்ட இருடா” எனக்கூறி மனைவியை அனுப்பிவைத்தான்.

 

கஸ்தூரி சென்றதும் வளையாபதி நண்பனிடம், “யாரிடமாவது சொல்லணுமாடா?” எனக் கேட்கவும்.

 

“யசோகன் கிட்ட சொல்லணும்டா… என்னமோ ஏதோனு பயந்துக்கிட்டு இருப்பான்” என்றவர் வளையாபதியிடம் போனை வாங்கித் தோழனுக்குக் கால் செய்தார்.

 

முதல் ரிங்கிலேயே போனை எடுத்த யசோகன், “ஹலோ… யாருங்க?” எனக் கேட்டார். 

 

“நான் தான்டா அரசன் பேசறேன்” என்றதும்.

 

“போன் என்னடா ஆச்சு? தங்கச்சி எப்படிடா இருக்கு? நீங்க எல்லாரும் எங்கடா இருக்கிங்க?” என தவிப்பாகக் கேட்டார்.

 

“போன் கீழே விழுந்து ஒடசிடுச்சுடா… பாப்பாவுது ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு… பரமு இப்ப நல்லா இருக்கா, ஆஃப்ரேஷன் முடிந்து இப்பதான் நார்மல் வார்டுக்கு கொண்டு வந்திருக்காங்க… கண்ணு முழிக்க நாலு மணி நேரம் ஆகுமாம்” என்று ஆடலரசன் கூறினார்.

 

“விசனப்படாதடா எல்லாம் நல்லதா நடக்கும்… நாங்க கிளம்பிட்டோம் விடியலில் வந்திடுவோம்டா” என்று யசோகன் கூறினார்.

 

அதில் மேலும் தைரியம் பெற்றவர், “சரிடா” என்று கூறினார்.

 

இவர்கள் பேசி முடித்ததும் தேனிசைச்செல்வன், “மாமா வந்து கொஞ்சமாவது சாப்பிடுங்க… இப்படி உங்களைப் பார்த்தா அத்தை ரொம்ப வருத்தப்படுவாங்க” என்றவன்,

 

வீரனிடம், “டேய் மாமாவையும் அத்தையும் கூட்டிக்கிட்டு போயிட்டு வா… நான் இங்க பார்த்துக்கிறேன்” எனக்கூறி பெரியவர்கள் மூவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தான். 

 

அவர்கள் சென்றதும் சூப்பர்வைசருக்கு கால் செய்து விஷயத்தைக் கூறி சமையலுக்கு ஏற்பாடு செய்தான்.

 

போனிலையே வேலையை முடித்துவிட்டு மனைவிக்கு குடிப்பதற்காக டீ வாங்கி வந்து குடிக்க வைத்தான்.

 

எல்லாம் முடிந்து ஓய்வாக அமர்ந்தவனுக்கு “தான் தானா இது!” என்ற எண்ணம் பிறந்து அவனையே ஆச்சரியப்படுத்தியது.

 

ஏதோ ஒரு நாளில் மொத்தமாய் மாறிப்போனது போல் ஒரு மாயை… அது கூட மனதுக்கு இனிமையாகத் தான் இருந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. Nalla vela paramu ma ku onum agala apdi enna prb achi nu therilaye aaruvum sree yum sendhu sothu pirichi vangitangala achoooo aaru lakshu vandha iruku unakku selva super ah convince panra kasthuri ah nice ud sis superb