Loading

** 1 **

“வடிவு… மாமா வரங்காட்டியும் கடைக்குப் போய் சர்க்கரை வாங்கிட்டு வந்திடு… நேத்தே தீர்ந்து போச்சு, இருந்த டென்ஷனில் இதை மறந்துட்டேன்” என்றவர் பணத்தைக் கொடுத்தார். 

பணத்தை வாங்கிய வடிவம்மை, “நான் போயிட்டு வரேன் பரமுக்கா… நீங்க நிதானமா இருங்க” என்றவர், 

“டென்ஷனாகாமல் இருங்க. பசங்க ரெண்டு பேரும் சரியான நேரத்திற்கு வந்திடுவாங்க” என சிரிப்புடன் கூற.

பரமேஸ்வரி, “எவடி இவ… நான பதட்டமா இருப்பதே இந்த சின்ன சிறுக்கிக்காகத் தான்… எப்ப வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை… வாடினா, நீங்க தான கட்டாயப்படுத்தி அனுப்புனிங்க. நான் வரமாட்டேனு கோபமா பேசறாடி” என குறை பட.

வடிவம்மை, “அந்த கழுதைக்கு அவ்வளவு ஆகிடுச்சா? வரட்டும் நாக்கிலையே சூடு வைக்கிறேன்” என கோபமாகக் கூற.

பரமேஸ்வரி, “எங்க ரெண்டு பேருக்குள்ள நீ வந்த, உன்னைக் கொன்னுடுவேன்டி” என போலியாக மிரட்டினார். 

அதற்கு வடிவம்மை, “அவளுக்கு வாய் கூடினதுக்குக் காரணமே நீங்க கொடுக்கிற செல்லம் தான்க்கா” என்றவர்,

“வேலைக்காரி மகளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கிறது எந்த முதலாளியோட வீட்டிலும் நடக்காது… இதில் அவளுக்கு பணம் கட்டி படிக்க வேற வைக்கறிங்க… அந்த கிறுக்கிக்கு நீங்க பண்றதெல்லாம் வீண் செலவுக்கா” என தன் மகளைத் திட்டினார். 

அதற்கு பரமேஸ்வரி, “உன்னை நாங்க வேலைக்காரி மாதிரி தான் நடத்தறோமா? இல்லை கஸ்தூரியத் தான் பிரித்து பார்த்திருக்கோமா?” என கோபமாகக் கேட்க.

வடிவம்மை, “ஐய்யோ அக்கா!… நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை” என பதறிப் போய் கூறியவர், 

“கஸ்தூரி உங்களிடம் பேசலைனு சொன்னதும் கோபத்தில் சொல்லிட்டேன் க்கா” என பாவமாக கூற.

பரமேஸ்வரி, “அதுக்குனு இப்படியா பேசுவ? எங்களிடம் பணம் இருக்கு அதனால் கஸ்தூரியை படிக்க வைக்கிறோம்… அதைவிட பாப்பாவும் நல்லா படிக்கிற பொண்ணுடி… உனக்காகத் தான் சின்ன குட்டி காலேஜ் போய் படிக்கலைனு சொன்னா… அப்படிப்பட்ட குழந்தையை போய் திட்டுவியா நீ?’ எனக் கேட்க.

வடிவம்மை, “அவளை சொன்னா உங்களுக்குப் பொறுக்காதே… ரொம்ப தான் க்கா” என்க.

பரமேஸ்வரி, “கிண்டல் பண்றியா? இரு மாமா வரட்டும் போட்டுக் கொடுக்கிறேன்” என்று கூற.

வடிவம்மை, “ஆத்தி!… ஆளை விடுங்க க்கா… நான் கடைக்குப் போயிட்டு வரேன்” என்றவர் பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். 

அதைக் கண்ட பரமேஸ்வரி, “அந்த பயம் இருக்கட்டும்” என்று கூறி சிரிக்க வடிவம்மையும் சிரித்தபடியே சென்றார். 

“அச்சோ!… அடுப்பில் வைத்த பாலை வேற மறந்துட்டுனே… என்ன ஆச்சோ தெரியலையே” என புலம்பியபடி சமையலறைக்குச் சென்றார். 

சரியான நேரத்தில் அடுப்பை அணைத்ததால் பால் தப்பித்தது.

“கண்ணு… கண்ணு” என அழைத்தபடியே ஆடலரசன் வந்தார். 

கணவனின் குரலில் அவரின் முகம் மலர, “இதோ வரேன் மாமா” என்றவர் தண்ணீருடன் வெளியே சென்றார்.

கண்டாங்கி சேலையில், மஞ்சள் பூசிய முகத்துடன், கையில் சொம்புடன், காலில் மெட்டி ஓசை கேட்க, அம்மனைப் போல் நடந்து வந்த மனைவியைக் காண காண ஆடலரசனின் மனதிலிருந்த அலுப்பு நீங்கி உற்சாகம் பிறந்தது.

கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கணவனின் அருகில் வந்த பரமேஸ்வரி, “என்ன மாமா ஏதோ புதுசா பார்ப்பது போல் அப்படி பார்க்கறிங்க? யாராவது பாத்தால் என்ன நினைப்பாங்க?” என லேசான வெட்கத்துடன் கேட்டார்.

மனைவியின் வெட்கத்தைக் கண்ட ஆடலரசன் சிரிப்புடன், “எவடி இவ? என் பொண்டாட்டி நான் பார்க்கிறேன்… எவன் வந்து என்னை கேள்வி கேட்கப் போறான்?” என கேலியாகக் கேட்க.

பரமேஸ்வரி, “ரொம்பத் தான்!” என நொடித்துக்கொண்டவர்,

“மீசை நரைத்த கிழவனுக்கு ஆசையைப் பார்?” என நொடித்துக்கொள்ள.

ஆடலரசன், “மீசை நரைத்தால் என்னடி? இன்னும் எட்டு பொண்டாட்டி கட்டி குடும்பம் நடத்திற அளவுக்கு எனக்கு தெம்பிருக்கு” என மனைவியை வெறுப்பேற்ற.

அவரோ, “கட்டுவீங்க… கட்டுவீங்க” என ராகம் பாடியவர்,

“பேரன், பேத்தி எடுக்கிற வயசில் பேச்சைப் பார் பேச்சை… முதலில் பசங்களுக்கு பொண்ணு பார்க்கும் வழியைப் பாருங்க” என்று கோபமாக கூறினார்.

அதற்கு ஆடலரசன், “அதெல்லாம் பார்த்துக்கலாம்… கஸ்தூரி எப்ப வராளாம்?” என கேட்க.

பரமேஸ்வரி, “எங்க? போனை எடுத்தாலே வெடுக்கு வெடுக்குனு பேசறா? வாடினா… நீங்க தான துரத்தி விட்டீங்க. நான் வரமாட்டேனு சொல்றா மாமா” என்க.

“அதெல்லாம் வந்திடுவா… நீ பயப்படாத கண்ணு” என்றவர்,

“ஏனா கஸ்தூரிக்கு நாளையோடு பரிட்சை முடியப்போகுது… நீ வாடினு சொன்னதும் வீம்புக்கு வரலை சொல்றா” என சிரிப்புடன் கூற.

பரமேஸ்வரி, “வரட்டும்… வரட்டும்… அப்படியே ரெண்டு வாயிலேயே வைக்கிறேன்” என கோபமாக கூறியவர்,

“சரி… இவனுங்க ரெண்டு பேரும் என்ன சொன்னானுங்க மாமா?” என கேட்க.

ஆடலரசன், “வரானுங்கனு கண்ணு… நாளை மறுநாள் சாய்ந்திரத்திற்குள் வீட்டில் இருப்பானுங்க பார்” என்றார். 

அதற்கு அவரின் மனைவியோ, “வந்தா நல்லது” என்றவர், 

“வேலைக்குப் போனாலும் போனானுங்க. ஊரு பக்கமே வருவதில்லை… அதிலும் வருஷத்திற்கு ரெண்டு முறை வந்துட்டுப் போவது கூட அவனுங்களுக்கு வலிக்கு” என்று கடுப்பாக கூறினார்.

அதற்கு ஆடலரசன், “அவனுங்களுக்கு அங்க என்ன பிரச்சனையோ யார் கண்டா கண்ணு?” என்றவர், 

“நான் போன் போடறேன் பேசறியா?” என கேட்க.

பரமேஸ்வரி, “நீங்களே பேசுங்க மாமா… நான் கூப்பிட்டா சாக்கு போக்குச் சொல்லி வராமல் ஏமாத்த பார்த்தாலும் பார்ப்பானுங்க” என மகன்களை அறிந்த தாயாகக் கூறினார். 

“சரி… நானே பேசறேன்” என்றவர், 

“எங்க கண்ணு காபி?” என மனைவியிடம் கேட்க.

“சர்க்கரை தீர்ந்திடுச்சு மாமா, வடிவு வாங்க போயிருக்கா… வந்ததும் தரேன்… அதற்குள் நீங்க அவனுங்களிடம் பேசிடுங்க” என்று கெஞ்சலாகக் கூறினார். 

“சரி… சரி… நல்லா ஸ்ட்ராங்க காபி வேணும் கண்ணு” என ஆடலரசன் கேட்க.

“சரிங்க மாமா… நீங்க பேசுங்க” என்க. 

சர்க்கரையுடன் வந்த வடிவம்மை, “கடையில் ஏகப்பட்ட கூட்டங்க க்கா… அதனால் தான் லேட்டாகிடுச்சு” என்று கூற.

பரமேஸ்வரி, “ஊருக்குள்ள ஒரு கடை இருந்தா இப்படித்தான் இருக்கும்… பிழைக்கத் தெரிந்தவன் எவனாவது இன்னொரு கடை போடமாட்டான்… எங்க? இவனுங்களுக்கு சீட்டாடவும் தாயமாடவும் தான் நேரம் சரியா இருக்கும்” என குறைபட.

வடிவம்மை, “உண்மை தான் க்கா… பொண்டாட்டி, அம்மாவை வேலைக்கு அனுப்பிட்டு சொகுசா ஊர் மேஞ்சுக்கிட்டு இருக்கானுங்க… எப்பதான் புத்தி வந்து திருந்தி பொழப்பைப் பார்க்க போறாங்களோ தெரியலை” என கவலையாக கூற.

ஆடலரசன், “எல்லாம் தானா வரணும். சொல்லிச் சொல்லி செஞ்சா சரியா வராது வடிவு… இவனுங்க எல்லாம் பட்டால் தான் திருந்துவானுங்க” என்றவர், 

“சும்மா ஊரை சுற்றினால் சாப்பாடு இல்லைனு பொண்டாட்டி துரத்தி விட்டாத் தான் அடங்குவானுங்க… எங்க? இந்த பிள்ளைங்க தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷங்கிற ரேஞ்சுக்கு அடியும் உதையும் வாங்கிக்கிட்டு இருக்காங்க… பத்தாததுக்கு உங்களை மாதிரி அம்மாக்கள் கேட்ட காசை கொடுத்து ஊரை சுத்துங்கடானு அனுப்பறாங்க… அப்புறம் எப்படி உருப்படுவாங்க?” என்று கூற.

பரமேஸ்வரி, “அதென்ன எங்களை மாதிரி அம்மா? உங்களை மாதிரி அப்பாக்களும் தான் பசங்களை கெடுக்கறாங்க… சும்மா பொண்டாட்டி மேலையும் பெத்தவ மேலையும் பழியை போடாதிங்க மாமா” என்றவர் கணவனை முறைத்தபடி கிட்சனுக்கு சென்றுவிட்டார். 

அவர் செல்லவும் வடிவம்மையும் சென்றுவிட்டார். 

மனைவியின் கோபத்தில் ஆடலரசனுக்கு சிரிப்பு வரவும் வாய்விட்டு சிரித்தார். 

அதில் கிட்சனிலிருந்து வந்த பரமேஸ்வரி, “என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு மாமா? முதலில் நான் கொடுத்த வேலையை முடிங்க” என்றவர் பெரிய மகனுக்கு கால் செய்து கணவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். 

போனை எடுத்த மகனிடம் ஆடலரசன், “கிளம்பிட்டியா ஆதிரன்?” என கேட்க.

அவனோ, “கொஞ்சம் ஒர்க் இருக்குங்க ப்பா, அதை முடிச்சுட்டு வந்திடவேன்” என்று கூற.

“சரி… சரி… பார்த்து வா… ஊருக்கு வரணுமேனு காரை வேகமா ஓட்டாமல் நிதானமா ஓட்டு… முடியலைனா ட்ரைன் இல்லை ப்ளைட்டில் வந்திடுங்க பிரச்சனையில்லை… புரியுதா?” என ஆடலரசன் கேட்க.

ஆதிரன், ”புரியுதுங்க ப்பா… நீங்க கவலை படாதிங்க… நான் நிதானமா கார் ஓட்டுறேன்” என சிரிப்புடன் கூறினான்.

“சரி… தம்பிகிட்ட பேசினியா? அவன் என்னடா சொல்றான்?” என கேட்க.

ஆதிரன், “அப்பா அவனும் என்னுடன் தான் வரான்… நீங்க கவலைப் படாதிங்க இந்த தீபாவளிக்கு உங்க கூடத் தான் நாங்க ரெண்டு பேரும் இருப்போம்” என சிரிப்புடன் கூறினான்.

அதற்கு ஆடலரசன், “வரேன்னு சொல்லிட்டு போன முறை மாதிரி ஏமாத்துனிங்க அடி தான் கிடைக்கும்… ஜாக்கிரதை… அந்த வாலு கிட்டையும் சொல்லிவை” என்றவர், 

“உங்களை நம்பித் தான் அம்மாகிட்ட வரீங்கனு சொல்றேன்டா” என்று அழுத்தமாக கூறவும்.

ஆதிரன், “நீங்க தைரியமா சொல்லுங்க ப்பா… நாங்க வந்திடறோம்” என்று கூறியவன், 

“அப்பா… அம்மா வழக்கமா வைப்பாங்க இல்லை அந்த வத்தக் குழம்பும் பருப்பு உசிலியும் பண்ணச் சொல்லுங்க… ஹோட்டல் சாப்பாட்டையும் என்னுடைய சமையலையும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போய் கிடக்குது” என்று ஆசையாகக் கேட்க.

அதில் உருகிய ஆடலரசன், “அதெல்லாம் பண்ணிடலாம்… நீங்க ரெண்டு பேரும் கரூர் தாண்டியதும் கால் பண்ணுங்க அம்மா சூடா சமைத்து வைத்திடுவா… சரியா?” என்க.

ஆதிரன், “சரிங்க ப்பா” என்றவன், 

“எதுக்கும் ஒரு முறை நீங்களே ஆரூரனிடம் பேசிடுங்க” என்று கூறியவன் போனை வைத்துவிட்டான்.

இவன் வைத்ததும் சின்ன மகனுக்கு ஆடலரசன் கால் செய்தார்.

“ஹலோ இங்கிட்டு ஆரு அங்கிட்டு யாரு?” என்று நம்பரைப் பார்க்காமல் தூக்கக் கலக்கத்தில் கேட்க.

கடுப்பான ஆடலரசன், “அடி செருப்பால… எந்திருடா எருமை” என்ற தந்தையின் அதட்டலில் ஆரூரன் அடித்துப்பிடித்து படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான். 

“அப்பா” என அழைக்க.

“அப்பா தான்… அப்பாவே தான்டா” என்றவர், 

“வேலைக்கு போகாமல் இன்னும் என்னடா பண்ற?” என கேட்க.

“இல்ல ப்பா… இனி தான் கிளம்பனும்” என்று கூறியவன் கொட்டாவி விட.

ஆடலரசன், “மணியை பார்… இப்பவே எட்டு ஆகுது… எப்படிடா சரியான நேரத்தில் வேலைக்குப் போய் சேருவ?” என கேட்க.

ஆரூரன், “அதெல்லாம் பத்தே நிமிஷத்தில் போயிடுவேன் ப்பா… நீங்க கவலை படாமல் நிம்மதியா இருங்க… அப்புறம் உங்க கண்ணுகிட்ட நான் ஊருக்கு அண்ணணுடன் தான் வரேன்னு சொல்லிடுங்க” என்க.

ஆடலரசன், “அம்மாவை பெயர் சொல்லியா கூப்பிடற? அடிவாங்கப் போற” என இளையவனை மிரட்டினார். 

அதற்கு அவனோ, “நான் என்ன கன்னிகா பரமேஸ்வரினா ப்பா கூப்பிட்டேன்?” என துடுக்காக கேட்டான். 

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சலில்லை… போ… போய் வேலையைப் பார்” என்றவர், 

“மறக்காமல் சாப்பிட்டுட்டு போடா” என்று கூறி மகனின் மீதான தன் பாசத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு ஆரூரன், “சரிப்பா” என்க.

“அதென்ன சரிப்பா… ஒழுங்கா மரியாதையா பேசுடா… பெத்த படிப்பு படிச்சி என்ன பிரயோஜனம்? பெரியவங்களிடம் மரியாதையா பேச தெரியாதா? ஒன்னும் கிடையாது” என ஆடலரசன் குறைபட.

ஆரூரன், “வயசானவங்களுக்குத் தான் ப்பா மரியாதை தரணும்… உங்களுக்கு என்ன வயசா ஆகிடுச்சு?” என அவரையே கேட்க.

ஆடலரசன், “இந்த வாய் ஜாலமெல்லாம் என்னிடம் வேண்டாம்… ஒழுங்க பேசு… அப்புறம் ஊருக்கு வந்து சேர்… மறக்காமல் ஒரு வாரம் லீவ் எடுத்துக்கிட்டு வாடா” என்று கூற.

“சரிப்பா… நான் இப்ப கிளம்பறேன் நைட் வந்து பேசறேன்… அப்புறம் அம்மாவை..” என ஏதோ சொல்ல வந்தவனை தடுத்த ஆடலரசன், “நீ என்ன லிஸ்ட் வச்சிருக்கியோ அது நீ வரும் போது டைனிங் டேபிளில் இருக்கும்… போதுமா?” என்க.

ஆரூரன், “சூப்பர் ப்பா” என்றவன் கால் கட் செய்துவிட்டான்.

ஆடலரசன் போன் வைக்கவும் பரமேஸ்வரி காபியுடன் வரவும் சரியாக இருந்தது.

“காபினா இதுதான் காபி… என்ன ஒரு ருசி!” என ரசித்து ருசித்து குடித்தவரை பரமேஸ்வரி காதலாக பார்த்தார்.

“சாப்பிடும் போது கண்ணு வைக்காத கண்ணு” என கேலி பேசிய ஆடலரசன் மனைவியை காதல் பொங்க பார்த்தார்.

இதுதான் இவர்கள்.

ஐம்பது வயதை தாண்டப் போகும் அன்யோனியமான தம்பதிகள்… கல்யாண வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர் .

மூத்தவன் ஆதிரன்; அடுத்தவன் ஆரூரன்.

நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கினறனர்.

ஏகபோக சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தாலும் அவர்களின் மோகம் என்னமோ ஏசி அறையில் கால் மேல் கால் போட்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் சரசமாட வேலை செய்யும் ஐடி ஃபீல்டு மீது தான்.

அதனால் தான் தந்தை பார்த்துக் கொண்டிருந்த விவசாயத்தையும் சர்க்கரை ஆலையையும் எட்டிக்கூட பார்க்காமல் அடுத்தவனுக்கு மாடாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். 

மகன்கள் இருவரின் இந்த செயலில் ஆடலரசனுக்கு சிறிது கூட வருத்தம் இல்லை… காரணம் தன் வளர்ப்பு மகள் கஸ்தூரி தனக்குப் பிறகு இவற்றையெல்லாம் அழியாமல் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கை.

ஆம்! நம்பிக்கை தான்… அதுவும் சாதாரணமான நம்பிக்கை இல்லை அதீத நம்பிக்கை.

அவரின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் கஸ்தூரியும் விவசாயத்தின் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.

அதைவிட அவளின் சுவாசமே ஆடலரசனும் கன்னிகா பரமேஸ்வரி தான்… வடிவம்மை கூட அவர்களுக்குப் பிறகு தான்.

அதில் அவளின் தாய் வடிவம்மைக்கு என்றும் வருத்தமில்லை… வருத்தம் என்பதை விட பெருமை என்று கூறலாம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. கதை எப்போது போல் சூப்பர் சகி.காதல் பாசம் செம சகி.❤️❤️

    2. சூப்பர் சிஸ்‌ . அடுத்த அப்டேட்ஸ் வாசிக்க ஆர்வமா இருக்கு😊

      1. Author

        நன்றி சிஸ் 😍😍.

        நாளை பாக்கலாம் சிஸ் 💝💝

    3. Starting super a iruku sis. Aryan and Aaruran name super a iruku. Next ud ku waiting 🤩🤩🤩