போவோமா ஊர்கோலம் -03
அத்தியாயம் -03
“அச்சோ பெட்ரோல் தீர்ந்து போச்சா இப்ப என்ன பண்ண, ” என்று பாவமாக முகத்தை வைத்தாற்போல் கூறிய சைலுவை கண்டு அவனுக்கு கோவம் தான் வந்தது.
” ஏன் டி உன்னைய எவன் என்கூட வர சொன்னான், எல்லாம் உன்னால தான் வரும் போது ஐநூறு ரூவாக்கு வண்டில பெட்ரோல் போட்டுட்டு வந்தேன் டி நானு, உன்னையையும் கூப்பிட்டு வரவே என் வண்டியில பெட்ரோல் தீர்ந்து போச்சு ” என்று அவளின் தலையில் ஒரு தட்டு தட்டினான் சேது.
அவளும் ” என்ன டா பொய்ய புளுகி என்கிட்ட இருந்த காசை பறிக்கலாம்ன்னு பாக்கறியா, அது நடக்காது நானும் உனக்கு ஒருத்த பைசா கொடுக்க மாட்டேன், அதான் நீயி உன் பாக்கெட்ல வச்சிருக்கல அதை எடுத்து பெட்ரோல் போட்டுட்டு வா கிளம்புவோம், என்னமோ ஊருல இல்லாத வண்டிய வச்சிருக்கற மாதிரி ஓவரா பில்ட்அப் பண்ற, ” என்று கூற
அவனோ, ” ஏய் சண்டாளி நேரம் பார்த்து பழி வாங்காத, ஒழுங்கா காசு கொடு அப்ப தான் உன்னைய கூட்டிட்டு போவேன் பொறவு இங்கேயே விட்டுட்டு போயிடுவேன் ” என்று அவளை மிரட்ட,
அவனின் மிரட்டலுக்கு பயந்தால் அவள் சைலு கிடையாதே அவ்வளவே…
” முடியாது போட, என்கிட்ட ஒருத்த பையா கிடையாது கார்டு வேணா இருக்கு அதுவும் என் அப்பாருவோடையது. பணம் எடுத்தா அவரு போனுக்கு மெசேஜ் போவும். பொறவு நான் எங்க இருக்குறேன் ன்னு கண்டுபிடிச்சி என்னைய இழுத்துட்டு போயி எந்த கருமம் புடிச்ச எருமைக்கு கழுத்தை நீட்ட சொல்லி என்னைய கொடுமைப்படுத்தவாரு டா, நீ இந்த ஒன் டைம் மட்டும் பெட்ரோல் போடு, அடுத்த டைம் நானே உனக்கு காசு கொடுக்கறேன் டா ப்ளீஸ் டா ” என அவனிடம் நீண்ட விளக்கம் கொடுக்க அவனோ, ” எல்லாம் என் தலையெழுத்து டி, தனியா கைலாசாக்கு போயி செட்டில் ஆகலாம் ன்னு பார்த்தா, எமன் மாதிரி வந்து என் உயிர வாங்குற சண்டாளி, நீ இங்கேயே கட டி, நான் கிளம்புறேன் ” என்று அவன் வண்டியை தள்ளிக்கொண்டே நகர, அவளும் அவனுடன் பின்னாலே நடந்து செல்ல, அவனோ அவளை பார்த்து முறைத்துக்கொண்டு நேராக சென்று நின்றது என்னவோ சற்று தொலைவில் உள்ள ஒரு டீ கடையில் தான்…
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவன், அந்த டீ கடையில் அவளை அமர வைத்துவிட்டு அங்கிருந்தவர்களிடம் பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என்று வழியை தேடி கேட்க, அங்கிருந்த டீ கடைக்காரரோ, ” ஏனுங்க தம்பி இந்த புள்ள ஆரு, நான் இதுவரைக்கும் உங்களை இங்கன பார்த்ததே இல்லையே தம்பி ” என்ற கடைக்காரணை முறைத்து பார்த்தாள் சைலு.
‘ இருக்கற டென்ஷன்ல இந்த கடைக்காரன் வேற ‘ என்று உள்ளுக்குள் முனுமுனுத்து கொண்டு, சேதுவிடம் திரும்பி ” டேய் சீக்கிரம் கிளம்பி போயி பெட்ரோல் வாங்கிட்டு வா டா, நான் இங்கனே இருந்தா என்னைய ஒரு மாதிரில பார்த்துட்டு போவாங்க, இந்த கடைக்கு வரவங்க ” என்றதும், அவளை பார்த்து ” ஏண்டி பயப்படற, வூட்டை வுட்டு ஓடிவரும் போது இல்லாத பயம் ஏன் இப்ப வருது உனக்கு ” என்று சிரித்து கொண்டே கேட்க,
” ஏதே பயமா என்னக்கா நெவெர், நான்லாம் பெண் சிங்கமாக்கும். நான் எதுக்கு டா பயப்பட போறேன், பயந்தா இப்படி உன்கூட தனியா வந்து இருப்பாளா இந்த சைலு? ” என்று இல்லாத சுடியின் காலரை இழுத்து விட, அவளை கண்டு ” த்தூ த்தூ ” வென துப்பிவிட்டு வண்டியில் இருந்த காலி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ரோல் பங்க்க்கு சென்று அதில் நிரம்பி வேகமாக வர, அங்கு சைலுவை காணவில்லை.
**************
” ஏனுங்க மாமா, நம்ம பையனுக்கு ஒரு போனு போட்டு பாருங்களா, அவன் எங்க இருக்குறான் மட்டும் கேளுங்க ” என்ற மனைவியை முறைத்து, ” ஏன் டி அவனே நம்மளை பத்தி கவலைப்படாம, நடுராத்திரி கூட பார்க்காம ஓடிப்போனவன் தானே டி, அவனை பத்தி நீ இன்னாத்துக்கு கேட்கற, வாயை மூடிக்கிட்டு சோத்த போடு, சாப்பிட்டு வயலுக்கு போவணும் நிறைய சோலி கிடக்கு எனக்கு” என்றார் சேதுவின் தந்தை.
” என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, என்ன இருந்தாலும் பெத்தவ மனசு வெந்து போயி கிடக்குறேன். எப்ப கோச்சிட்டு போனாலும் மறுநாளே வூட்டுக்கு வந்துடுவான்ங்க அவன், ஆனா பொழுது சாய இன்னும் அவனை காணோம், அதான் செத்த போன போட்டு எங்கன இருக்கியான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க, இல்லைன்னா போன் என்கிட்ட கொடுங்க நான் பேசறேன் அவன்கிட்ட ” என்று கலங்கிய விழிகளோடு கூறினார் அவனின் தாய்.
மனைவியின் வார்த்தையை கேட்டு வேண்டா வெறுப்பாக கைபேசியை அவரிடம் கொடுத்து விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் சேதுவின் தந்தையானவர்.
அவரின் மனைவியோ கணவரின் கோபத்தை கண்டு, உள்ளுக்குள் ‘ரொம்பத்தேன் பண்றாரு, என்ற பையன் கிட்ட பேச கூட இவருகிட்ட கெஞ்சனும்னு என் தலையெழுத்து ‘ என்று முனங்கி கொண்டே சேதுவின் எண்களுக்கு அழைப்பு விடுவித்தார்.
அழைப்பு ரிங் முழுவதுமாக செல்ல, யாரும் அதை எடுப்பதாக தான் இல்லை. அவனின் தாயோ திரும்ப திரும்ப அவனுக்கு அழைத்து முயற்சி செய்ய, கடைசி ரிங்கில் தான் அழைப்பை ஏற்றான் அவன்.
” டேய் மவனே எங்கடே இருக்கறவன் நீயி, வூட்டுக்கு வாடே, உனக்கு புடிக்கும் ன்னு கறி எடுத்தாந்து குழம்பு வைக்க சொல்லிருக்காரு டா உன் அப்பா.. ” என்றதும், ஓரமாக அமர்ந்து இருந்த அவனின் தந்தையோ, ” அடிப்பாவி நான் எங்க டி கறி எடுத்தாந்தேன், என்னைய கோர்த்து விடறியா நீயி ” என்று கேட்க, அவரின் மனைவியோ, ” ஏனுங்க சும்மா கடங்க அப்ப தான் மவன் வூட்டுக்கு வருவான்… ” என்று மெல்லிய குரலில் கூற அந்த பக்கம் அதை கேட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் அவரின் மவன்.
” ஆத்தா அந்த கறி நீயே எனக்கு பதிலா சாப்பிட்டு தூங்கு எனக்கு முக்கியமான சோலி ஒன்னு இருக்கு அத முடிச்சிட்டு வரேன் ” என்று அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டான் அவன்.
” ச்சே இந்த சைலு எங்க தான் போனாளே தெரில, இங்கயே நில்லு போய்ட்டு வரேன் ன்னு சொல்லிட்டு போனேன். வரதுக்குள்ள ஆள காணோம். அவளோட பெட்டி கூட இங்கனே தான் கிடக்குது, எங்க போயிருப்பா அவ ” என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டு இருந்தவனின் கண்களை இருக்கை கொண்டு மூடினாள் அவனின் சைலு.
அவனோ மிகுந்த கோவத்தில் இருக்க, இப்போ கண்களை மூடினது சைலு தான் என்று தெரிந்தும் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
அவன் அமைதியாக இருக்கவே பெண்ணவளுக்கு பொறுமை எங்கேயோ பறந்து சென்று அவனின் விழிகளில் இருந்த தன் கரங்களை எடுத்து அவனின் முன்னால் வந்து நின்றாள் அவனை முறைத்து கொண்டே.