Loading

 

 

ஹரிஹரன்…

 

தேனி மாவட்டத்தில் பிறந்தவன். பள்ளிப் படிப்பை முடிக்கும் போது, அவனுடைய தந்தை ஏகாம்பரத்திற்கு மாற்றல் கிடைத்து, மதுரை சென்றனர். அங்கு தன் படிப்பை சிறப்பாகவே முடித்து இருந்தான்.

 

தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், படித்து முடித்ததிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறான்.

 

இத்தனை வருட அனுபவத்திற்கு, அவனது சம்பளமும் நல்ல முன்னேற்றமடைந்து இருந்தது. கூடிய விரைவில், சென்னையில் இருக்கும் அவர்களது நிறுவன கிளைக்கு, பதவி உயர்வோடு மாற்றம் கிடைக்கலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 

உடன் பிறந்த ஒரே ஒரு தங்கை சாரதாவுக்கு, திருமணம் முடிந்து அருகே ஒரு ஊரில் இருக்கிறாள்.

 

வருணிகா…

 

தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் விரும்பிய படிப்பை முடிப்பதற்காக, மதுரையில் தங்கி படித்தாள்

 

மதுரையில் ஹரிஹரன் படித்த கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்று, ஒரு வருடம் ஆகிறது. வேலைக்கு செல்ல விருப்பம் தான். ஆனால், குடும்பத்தில் இருப்பவர்கள் திருமணத்தை ஆவலோடு எதிர் பார்த்ததால், அதை மறுக்கவில்லை.

 

பிற்காலத்தில் விருப்பப்பட்டால், தேவை ஏற்பட்டால், வேலைக்குச் செல்வது என்ற முடிவோடு தான் இருந்தாள்.

 

இருவரும், தங்களது திருமண வாழ்வில் பல கனவுகளோடு அடி எடுத்து வைத்திருந்தனர்.

 

மாலை வரை, சுற்றமும் உறவுகளும் அந்த வீட்டை முற்றுகை இட்டு இருக்க, உணவுக்குப்பின், அன்றைய இரவுக்கான பிரத்தியேக அலங்காரத்தில் வருணிகாவை சிவக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஹரிஹரனின் தங்கை சாரதா, வருணிகாவை நன்றாகவே அலங்கரித்தாள். சாரதாவின் வயிறு, நான்கு மாத குழந்தையோடு லேசாக உப்பி இருந்தது.

 

உடல் சோர்வு அதிகமாக இருந்தாலும், அண்ணனுக்காக எதையும் செய்யும் தங்கையாக இருந்தாள்.

 

அலங்காரங்கள் முடிந்து, வருணிகாவை பாலோடு அண்ணனிடம் விட்டு விட்டுச் சென்றாள்.

 

சாராதாவின் கணவன் நகுல் அவளை தேடி வந்து நிற்க, “தூங்கலையா நீங்க?” என்று ஆச்சரியமாக பார்த்தாள்.

 

“நீ தூங்காம அலைஞ்சுட்டு என்னை கேளு.. மாமா.. கால் வலிக்குதுனு வருவல.. அப்போ பார்த்துக்குறேன்” என்று மிரட்டி விட்டு நகுல் திரும்பி நடக்க, “மாமா” என்று பின்னால் வேகமாக ஓடினாள்.

 

நகுல் முகத்தில் சிரிப்பு வழிந்தது. சாதாரணமாக தூங்கச் சொன்னால், சாரதா வர மாட்டாள்.

 

“அம்மா கூட தூங்கவா? என் அத்தை மக எல்லாம் வந்துருக்கா.. அவ கூட இருக்கனே” என்று காரணங்களை அடுக்குவாள்.

 

அவனும் அவளது ஆசையை புறக்கணிக்க முடியாமல், விட வேண்டி இருக்கும். இப்போது அவன் முறைத்து விட்டு செல்வதால், மற்ற அத்தனை பேரையும் மறந்து, அவன் பின்னால் ஓடி வந்தாள்.

 

அவர்களது அறைக்குள் நுழைந்ததும், அவன் கண்டு கொள்ளாமல் சட்டையை கழட்டி விட்டு படுத்து விட, அருகே அமர்ந்தாள்.

 

“கோவமா?”

 

“பின்ன? உன்னை கொஞ்சனுமா?”

 

“கல்யாண வீடுனா ஆயிரம் வேலை இருக்கும் மாமா. நான் பார்க்காம வேற யார் பார்ப்பா?”

 

“வேலை பாரு வேணாம்னு ஒன்னும் சொல்லல. இந்த கதையிலயும் படத்துலயும் வர்ர ஹீரோ இல்ல நான். உன் பின்னாடியே வந்து தாங்க எல்லாம் எனக்கு நேரமிருக்காது. நானும் வீட்டு மாப்பிள்ளையா கல்யாண வேலையை பார்க்கனும்”

 

“நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க… அப்புறம் என்ன கோபம்?”

 

“முழுசா பேச விடு. வேலை எல்லாம் முடிஞ்சப்புறமும், ஒழுங்கா தூங்காம சுத்துற பாரு.. அதான் பிடிக்கல. சம்பந்தமே இல்லாத ஆளுங்கள பத்தி புரணி பேசிட்டு, விடிய முழிச்சு இருக்கதுல என்ன சந்தோசமோ தெரியல”

 

“புரணி பேசுறோமா?”

 

“நடிக்காத.. நேத்து மிட் நைட் தூங்கிட்டியானு பார்க்க வர்ரேன். மருதாணிய வச்சுக்கிட்டு, ஊர் புரணி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. இதுல ஃபேஸ் ரியாக்ஷன் வேற.. ஆஸ்கார் அவார்ட் வாங்க போற மாதிரி கொடுக்குறது”

 

“ஒட்டு கேட்டீங்களா?” என்று கேட்டவளுக்கு சிரிப்பு வந்தது.

 

அவள் காதை பிடித்து இழுத்தவன், “அப்படியே ரகசியம் பேசிட்டீங்க பாரு.. ஊருக்கே கேட்குற மாதிரி பேசிட்டு இருந்தீங்க. அவங்க தான் அப்படி பேசி நேரத்த ஓட்டுறாங்கனா… நீயும் உட்கார்ந்து வாய் பார்த்துட்டு இருக்க. நேரத்துக்கு தூங்க வேணாம்?” என்று கோபமாகவே பேசினான்.

 

அவன் கையைப்படித்துக் கொண்டவள், “சரி சரி. கல்யாண வீடுனா அப்படி இப்படித்தான் இருக்கும். இப்போ தான் நேரம் கிடைச்சுடுச்சே.. தூங்கலாம் வாங்க” என்று அவன் தோளில் படுத்துக் கொண்டாள்.

 

“கால் வலிக்குதா?”

 

“சொன்னா திட்டுவீங்களே”

 

“லூசு.. சொல்லு”

 

“கை.. இந்த தோள்.. அப்புறம் லேசா தலை வலிக்குது. காலும் வலிக்குது. சாப்பிட்டது அஜீரணம் ஆகுதேனு கொஞ்சமா தான் சாப்பிட்டு இருக்கேன். அது வேற நைட்‌ பசிக்கும்”

 

அவன் கேட்டதும் வலிகளை வரிசையாக அடுக்கி வைத்தாள்.

 

“ஏற்கனவே ஹார்லிக்ஸ் போட்டு, ஃப்ளாஸ்க்ல அத்த கிட்ட கேட்டு வாங்கி வச்சுட்டேன். பசிச்சா அப்புறமா குடி. இப்போ படு” என்று படுக்க வைத்தவன், மிதமாக கை கால்களை பிடித்து விட, சுகமாக படுத்து இருந்தாள்.

 

“தூங்குடி.. என்னை சைட் அடிச்சுட்டு இருக்க?” என்று எப்போவாது சந்தோச மனநிலையில் வரும் டி இப்போதும் வந்தது.

 

“இப்போ தான், கதையில படத்துல வர்ர ஹீரோ மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன்னு வீராப்பா சொல்லிட்டு.. அடுத்த நிமிஷமே கால அமுக்குறியே மாம்ஸ். அதான்டா ரசிக்குறேன்”

 

டா சொன்ன வாயில் வலிக்காமல் அடித்து விட்டு, சிரிப்போடு அவளது உடல் வலிகளை குறைத்து, உறக்கத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

புதுமணத்தம்பதிகள் நிலை மிக அழகாகவே அமைந்து இருந்தது.

 

நேராக உள்ளே சென்று கதவை பூட்டி விட்டு, ஹரிஹரனை பார்த்தாள். திருமணம் பேசி முடித்ததிலிருந்து இருவரும் பேசி இருக்கிறார்கள் தான். ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும், இருவருக்கு தயக்கமும் வெட்கமும் இருந்தது.

 

அவள் வெட்கத்தை உதறி பேச முடியாமல் தயங்க, அவனே தொண்டையை கணைத்து ஆரம்பித்தான்.

 

“வருணிகா”

 

“ம்ம்”

 

“எனக்கு ஒரு டவுட் வருணி”

 

“என்னது?”

 

“பால ஏன் செம்புல கொடுத்து விடுறாங்க?”

 

“தெரியலயே. ஏன்?”

 

“ஒரு ஃப்ளாஸ்க்ல கொடுத்து விட்டுருக்கலாம். அப்புறமா பசிக்கும் போது தேவைப் படும்”

 

அவன் சொன்னதை முதலில் அவள் விளங்கிக் கொள்ளவில்லை. அவனது குறும்பான சிரிப்பிற்கு பிறகு தான் அர்த்தம் புரிய, வெட்கத்தையும் சிரிப்பையும் மறைக்க, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

அருகில் வந்தவன், “எப்படியோ.. பெரியவங்க பால குடிச்சே ஆகனும்னு சொல்லிட்டாங்க. ரூல்ஸ் மீறுனா சாமி கண்ண குத்தும்.” என்றவன், அவள் கையில் இருந்ததை வாங்கி, தான் பாதி குடித்து அவளையும் குடிக்க வைத்தான்.

 

அறைகுறையாக சாப்பிட்டு இருந்தவளுக்கு, இப்போது தெம்பாக இருந்தது.

 

“கண்டு பிடிச்சுட்டேன்”

 

அவள் ஆர்வமாக கூற, “எத?” என்று கீழே தேடினான்.

 

“போதும் போதும். அங்க தேடாதீங்க. உங்க கேள்விக்கு பதில் கண்டு படிச்சுட்டேன்”

 

“எங்க சொல்லு”

 

“கல்யாண பொண்ணு மாப்பிள்ளைனு, ஆயிரம் அலைச்சல கொடுத்து, நிம்மதியா சாப்பிடக்கூட விட மாட்டாங்க. அதுனால, தூங்கும் போது நிம்மதியா பால குடிச்சுட்டு தூங்கனும்னு தான் கொடுத்து விட்ருப்பாங்க போல”

 

“எப்படி இப்படி?”

 

“நான் ஒழுங்கா சாப்பிடலயே. இந்த பால குடிச்சப்புறம் தான் பசி அடங்கி இருக்கு. அத வச்சு சொன்னேன். இப்போ தூங்குனா நல்லா தூங்கலாம் இல்லையா?”

 

“முன்னாடி சொன்னது சரி. பின்னாடி சொன்னது செட் ஆகாது.”

 

“எது?”

 

“தூங்குறது”

 

அவள் மீண்டும் வெட்கத்தை மறைக்க வேறு பக்கம் பார்க்க, அவள் முகத்தை திருப்பினான்.

 

“உனக்கு என்னை பிடிக்குமா?”

 

தலையாட்டி வைத்தாள்.

 

“நோ‌.. பதில் சொல்லு”

 

“பிடிக்கும்”

 

“எவ்வளவு? இவ்வளவா?” என்று அவன் கையால் அளவு காட்டினான்.

 

“ம்ஹூம்.. இவ்வளவு” என்று இரண்டு கையையும் பக்கவாட்டில் குழந்தை போல் விரிக்க, அந்த கைக்குள் புகுந்து கொண்டவன், அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

 

இருவரும் சிரிப்பும் சந்தோசமுமாக இல்லற வாழ்வை வரவேற்று, தங்களது உலகில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

_____

 

அடுத்த நாள் காலை…

 

எல்லோருக்குமே சற்று சோம்பலாகவே விடிந்தது. நேற்று திருமண வேலை அலைச்சல் அதிகமாக இருந்தது.

 

வருணிகாவும் அவசரமாக எழவில்லை. தாமதமாக தூங்கியதால், தூக்கம் கலையும் வரை படுத்திருந்தாள்.

 

இரவே சாரதா சொல்லி விட்டாள்.

 

“காலையில அவசரமா எந்திரிச்சு வரனும்னு இல்ல அண்ணி. அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்ல. நம்மல புரிஞ்சுப்பாங்க. புது இடம் தான.. நல்லா தூங்குங்க. ஆனா ஒரு ஏழு மணிக்குள்ள எழுந்து வந்துடுங்க. எட்டு மணிக்கு மேல கோவிலுக்கு போயிட்டு, அப்படியே உங்க வீட்டுக்கு மறுவீடு போகனும்.”

 

சாரதா சொன்னதை கேட்டிருந்ததால், நிம்மதியாக தூங்கி எழுந்து குளித்து வெளியே வரும் போது, மணி ஆறரை.

 

விருந்தினர்கள் எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க, ஹரிஹரனின் அன்னை அனுராதா சமையலறை பக்கம் சென்றார்.

 

அவரை பின் தொடர்ந்து வருணிகாவும் சென்றாள்.

 

“குட் மார்னிங் அத்த”

 

“முழிச்சுட்டியா மா.. வா வா”

 

“கிட்சன் ரொம்ப கலைஞ்சுடுச்சு போல”

 

“ஆமா.. நைட் சாப்பிட்டுட்டு அப்படியே போட்டுட்டு தூங்கிட்டோம்ல. காலையில பார்த்துக்கலாம்னு விட்டாச்சு”

 

“நான் ஹெல்ப் பண்ணவா?”

 

“இத நான் பார்த்துக்குறேன். நீ பால எடுத்து பத்து பேருக்கு டீ போடு. சக்கரை கடைசியா கலந்துக்கலாம்”

 

“ஓகே”

 

உடனே பாலை எடுத்து வேலையை ஆரம்பித்து விட்டாள்.

 

அனுராதா பாத்திரங்களை கழுவிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். அவளும் அவருக்கு சிறு உதவிகளை செய்து கொண்டே பேசினாள்.

 

இருவரும் அந்த நாள் ஆரம்பத்தை சந்தோசமாக ஆரம்பித்து இருந்தனர்.

 

தேனீர் தயாராகி இருக்க, “நீங்க குடிங்க அத்த. நான் வேணா கழுவுறேன்” என்றாள்.

 

“வேணாம் வேணாம். என் அக்காவும் அவ மருமகளும் வந்துடுவாங்க. பார்த்துக்குவாங்க. நீ வா. எல்லாரும் எப்படி டீ குடிப்பாங்கனு சொல்லுறேன். தெரிஞ்சுக்க”

 

முதல் பாடத்தை நன்றாக ஆரம்பித்து விட்டார். வருணிகாவும் கவனமாக கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

 

“இத எடுத்துட்டுப்போய் அவனுக்கு கொடு. நீயும் அங்கயே உட்கார்ந்து குடிச்சுட்டு, தலைய சீவிட்டு கோவிலுக்கு கூப்பிடும் போது மட்டும் வா. எல்லாரும் வந்தா பேசுறேன்னு பிடிச்சுக்குவாங்க. போ”

 

அவளை அனுப்பி வைத்தவர், தேனீரை குடித்துப்பார்த்தார். நன்றாகவே இருந்தது. மனதில் மெச்சிக் கொண்டார் மருமகளை.

 

தேனீரோடு சென்று கணவனை எழுப்பினாள்.

 

மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தான். ஈர முடியை உலர்த்திக் கொண்டிருந்தவளை, ரசித்து சிரித்தான்.

 

“குட் மார்னிங். எந்திரிங்க. டீ ஆறுறதுக்குள்ள பல்ல விளக்கிட்டு குடிங்க”

 

“குட் மார்னிங்” என்று எழுந்து அமர்ந்தான்.

 

வருணிகா, கோவிலுக்கு தாமதமாகக்கூடாது என்று வேக வேகமாக தலையை உலர்த்தி, பின்னலிட ஆரம்பித்து இருந்தாள்.‌ பல் துலக்கி விட்டு வந்து தேனீரை எடுத்துக் கொண்டு அவளருகே வந்து நின்றான் ஹரிஹரன்.

 

“நைட் பால். இப்போ டீ. இதுவும் நல்லா தான் இருக்கு”

 

அவன் குரலில் திரும்பிப் பார்த்தாள். தேனீரை குடித்தாலும் பார்வை முழுவதும் அவள் மேல் இருக்க, எதை பாராட்டினான் என்று அவனுக்குத் தான் தெரியும்.

 

“எது டீயா?”

 

வம்புக்கு கேட்க, “ம்ம்.. யார் போட்டது?” என்று கேட்டான்.

 

“தெரியாது”

 

“நீ போடலையா? ஆமா உனக்கு சமைக்கத் தெரியுமா?”

 

இரண்டு கையையும் விரித்தவள், தோளை குலுக்கினாள்.

 

“நூடுல்ஸ் பண்ணுற அளவு தெரியும். அது சமையலானு கேட்டு அசிங்கப் படுத்திடாதீங்க”

 

“போச்சா”

 

“ஏன்?”

 

“இனிமேலாவது நூடுல்ஸ தூக்கி போட்டுட்டு, வயிறு ஃபுல்லா மீல்ஸ் சாப்பிடலாம்னு நினைச்சேன். நூடுல்ஸ்லயே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போலயே”

 

“உங்களுக்கும் சமைக்கத்தெரியாதா? அய்யய்யோ.. அப்புறம் திருச்சி போய் என்ன பண்ணுறது?”

 

“ஆளுக்கொரு நூடுல்ஸ் பாக்கெட் தான் போல”

 

“சரி போக போக கத்துக்குறேன். வருத்தப்படாதீங்க. சமையல் தான பார்த்துக்கலாம்”

 

“என்னை வச்சு பழகப்போற? உயிர மட்டும் காப்பாத்தி விட்டா போதும்”

 

“ட்ரை பண்ணுறேன். இப்போ போய் குளிச்சுட்டு வாங்க கோவிலுக்கு லேட் ஆகிடும்”

 

அவனை துரத்தி விட்டு விட்டு, அறையை சுத்தப்படுத்தி முடித்தாள். கூப்பிடாமல் வராதே என்று அனுராதா கூறி விட்டார்.

 

அதனால் வெளியே போக முடியாது. தன் கைபேசியை அப்போது தான் தேடினாள். நேற்று ஒரு சிறுவனுக்கு விளையாடக் கொடுத்ததோடு சரி. அதன் பிறகு மறந்தே போய் விட்டாள்.

 

இப்போது எங்கே என்று தேட, அவர்கள் அறையில் தான் இருந்தது. அதை எடுத்தவள் மொத்தமாக அணைந்து கிடப்பதை பார்த்து விட்டு, சார்ஜரில் போட்டு விட்டு மற்ற வேலையைப் பார்த்தாள்.

 

சில நிமிடங்கள் கழித்து கைபேசிக்கு உயிர் வர, எடுத்துப் பார்த்தாள்.

 

பல தவறிய அழைப்புகள் இருந்தது. மாலை அவளது நண்பர்கள் அழைத்து இருந்தனர். காலையில் அவளுடைய சித்தி தெய்வாவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

 

ஆனால், நள்ளிரவு வரை சந்திராவிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருந்தது.

 

“அந்த நேரத்துல எதுக்கு கூப்பிட்டா? எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” என்று வேகமாக அவளை அழைக்கப்போக, கைபேசி ஒளிர்ந்தது.

 

சித்தியின் பெயரை பார்த்ததும் உடனே எடுத்துக் காதில் வைத்தாள்.

 

“சித்தி”

 

“வருணி… எந்திரிச்சுட்டியா?”

 

“ம்ம்.. அப்பவே எழுந்துட்டேன். இப்போ கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்”

 

“மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு?”

 

“குளிச்சுட்டு இருக்காரு”

 

“அங்க ஒன்னும்… எதுவும் இல்லையே”

 

“இங்க எதுவும் இல்ல. நல்லாவே போயிட்டு இருக்கு. கோவிலுக்குப் போயிட்டு அங்க தான் வருவோம். வந்ததும் பேசுறேன்”

 

“சரி மா. உன் அப்பாவும் சித்தப்பாவும் என்னத்தையோ பறி கொடுத்த மாதிரி சுத்திட்டு இருக்காங்க. அவங்கள நீயே கூப்பிட்டு பேசிடு. இல்லனா நீ இங்க வந்ததும் அழுதாலும் அழுதுடுவாங்க”

 

உடனே சிரித்தவள், “பேசுறேன் சித்தி” என்றாள்.

 

அவர் அழைப்பை துண்டித்ததும், முதலில் தந்தைக்கு அழைத்தாள். மகளின் குரலை கேட்டு தழுதழுத்த குரலை மறைத்துக் கொண்டு, சந்தோசமாக பேசினார் வைரவன்.

 

மனைவிக்கு பின் மகளுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தவர் அல்லவா! மகள் இப்போது அருகே இல்லாதது, வைரவனை வாட்டவே செய்தது.

 

பிறகு மாணிக்கத்தை அழைத்துப்பேசி முடிக்க, பூபதி அழைத்தான். அவன் ஹரிஹரனிடம் பேச வேண்டும் என்று கூற, ஹரிஹரன் குளித்து விட்டு வந்ததும், அவன் கையில் கொடுத்தாள்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அனுராதா வருணிகாவை அழைக்க, வெளியே சென்று விட்டாள்.

 

ஹரிஹரன் பேசி முடிக்க கைபேசி மீண்டும் ஒளிர்ந்தது. சந்திரா என்ற பெயரை பார்த்தவன், மனைவியை அழைக்க வெளியே எட்டிப் பார்த்தான்.

 

உறவினர்கள் எல்லோரும் இருந்தனர். வருணிகாவிடமே எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு தேவையில்லாத சங்கடம் வந்தது. உள்ளே வந்து விட அழைப்பு நின்று விட்டது.

 

சார்ஜரில் மாட்டி விட்டு திரும்ப, மீண்டும் ஒலித்தது.

 

‘எடுத்து சொல்லிட்டு வச்சுடலாம்’ என்று நினைத்தவன், எடுத்து காதில் வைக்க, “சாரி சாரி.. வருணி. நேத்து நைட் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனு தான் சும்மா இருந்தேன். என் அத்த தான் கேட்கல.” என்று படபடவென பேசினாள்.

 

“வருணிகா வெளிய இருக்காங்க. அப்புறம் பேசுங்க” என்று ஹரிஹரன் அவசரமாக பேச, ஒரு நொடி அமைதியானாள்.

 

“ஓ.. சாரி.. வச்சுடுறேன்”

 

அவள் வைக்கும் முன் கைபேசி பறிக்கப்பட்டு, வேறு யாரோ பேசினர்.

 

“ஏய்.. என்னடி புது வாழ்க்கையில ரொம்ப சந்தோசமா இருக்கியா? நிலைக்காதுடி.. இவ வாழ்க்கைய பறிச்ச உன் வாழ்க்கை நல்லாவே இருக்காது”

 

“அய்யோ அத்த கொடுங்க”

 

“இப்ப சொல்லுறேன்டி.. இவள ஏமாத்திட்டு தாலி வாங்கிட்டு போயிருக்கல.. அந்த தாலி நிலைக்காது”

 

பட்டென அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

ஹரிஹரன், அதிர்ச்சி பாதி குழப்பம் மீதியாக நின்று விட்டான். என்ன பேசினார்? என்றே புரியவில்லை. கோபமாக யாரோ வருணிகாவை திட்டுகிறார்கள்.

 

ஆனால் எதற்காக? ஏதோ ஏமாற்றம், தாலி என்கிறார்களே ?

 

பேசிய வார்த்தைகளை மீண்டும் நினைவு கூர்ந்தான். இவர்களது திருமணத்தை பற்றி தான் ஏதோ கூறினார். இந்த திருமணத்தை பற்றி இவர்கள் யார் பேச? தாலி நிலைக்காது என்று சாபம் விடுகிறாரே..! நேற்று தானே திருமணம் நடந்தது!

 

இருந்த சந்தோசம் எல்லாம் வடிந்து, சற்று எரிச்சல் வந்தது.

 

‘யார் இது? முதல்ல இது போல ஃப்ரண்ட்ஸ கட் பண்ண சொல்லனும்’ என்று நினைத்துக் கொண்டான்.

 

எல்லோரும் வெளியே இருக்கும் போது, தான் மட்டும் அறைக்குள் இருக்க வேண்டாமென வெளியே வந்தான்.

 

காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினர். அங்கே வழிபாடு முடிந்து சொந்தங்கள் விடை பெற, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் வருணிகாவின் வீட்டிற்குச் சென்றனர்.

 

எல்லோரையும் வரவேற்று சிறப்பாக கவனித்தனர். விருந்து முடிந்து மணமக்களை அங்கேயே விட்டு விட்டு, மற்றவர்கள் மட்டும் கிளம்பினர்.

 

தன் அறைக்கு வந்த சந்தோசம், வருணிகாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. இத்தனை வருடமாக வாழ்ந்த வீடல்லவா!

 

“இங்க வந்ததும் கொஞ்சம் ஓவர் ப்ரைட்டா இருக்கியே” என்று ஹரிஹரன் சொல்லியே விட்டான்.

 

“அது அப்படித்தான். பிறந்த வீடு யாருக்குத்தான்‌ பிடிக்காது?”

 

“அப்போ எங்க வீடு பிடிக்கலையா?”

 

“இது பிடிச்சதால அது பிடிக்காம போயிடுமா?”

 

பதிலுக்கு பேசிய மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டு, அவர்களின் அந்தரங்க வாழ்வில் நுழைந்து கொண்டான்.

 

அன்றை நாள் நல்லவிதமாகவே கழிந்தது. காலையில் வந்த போனை மறந்தே விட்டான். வருணிகாவும் சித்தி அண்ணியிடம் பேசும் சுவாரஸ்யத்தில், கைபேசியை கண்டுகொள்ளவே இல்லை.

 

இரவு உணவு முடிந்து ஹரிஹரன் அறைக்குச் சென்றதும், மேனகா வருணிகாவை பிடித்துக் கொண்டாள்.

 

“அங்க எல்லாரும் எப்படி? உன் கிட்ட நல்லா தான பேசுனாங்க?”

 

“ஏன் அண்ணி இவ்வளவு பெரிய டவுட்?”

 

“சொல்லு.. தெரிஞ்சுக்கனும்”

 

“நல்லா தான் அண்ணி பேசுனாங்க” என்று ஆரம்பித்து காலையில் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள்.

 

“குட். இப்படியே இருந்தா சரி. ஒரு வாரத்துல திருச்சி போயிடுவ. அது வரை உன் அத்த, நாத்தனார் கூட நல்லா பழகிக்க”

 

“ஓகே அண்ணி”

 

“இப்போ போ.. போய் தூங்கு”

 

வருணிகா சென்று விட, மேனகா தனது மாமியாரிடம் வந்தாள். தெய்வா சற்று பதட்டத்துடன் எதிர் கொண்டார்.

 

“என்ன சொன்னா?”

 

“எல்லாம் நல்லா தான் இருக்கு அத்த. இப்படியே இருந்தா சந்தோசம் தான்”

 

தெவ்யாவிற்கு நிம்மதியும் சோகமும் ஒன்றாக எழுந்தது.

 

“அவ அம்மா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்”

 

“நேத்துல இருந்து இதே பாட்டுத் தானா? அவளே நிம்மதியா இருக்கா. அவ முன்னாடி பேசி வைக்காதீங்க. வாங்க”

 

மேனகா மாமியாரை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்