Loading

உண்மையும் கொஞ்சம் புனைவும்..

பெண்களை வாழவிடாத வரதட்சனை!

திருப்பூர், காவேரி காலனியில் தியாகராஜனின் வீடு பரபரப்பாக இருந்தது. இன்று அவரது மகள் நிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். தியாகராஜன் வனஜா தம்பதிக்கு நிலா ஒரே மகள். பெயரைப் போன்று நிலா மென்மையான மனம் படைத்தவள், யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள். 

சுந்தரம்-சித்ரா தம்பதிக்கு குணா, மீனா ஆகிய இரு பிள்ளைகள். மீனா கோயம்புத்தூரில் ஆட்டோமொபைல் இஞ்ஜினியரைத் திருமணம் செய்து அங்கே செட்டில் ஆகிவிட்டாள். இப்பொழுது குணாவின் பெண் பார்க்கும் படலத்திற்காக திருப்பூர் வந்திருக்கிறாள். குணா ….. பங்கில் கிளார்க்காக பணிபுரிகின்றான். 

சித்ரா, ‘எங்களுக்கு பொண்ண ரொம்பப் புடிச்சிருக்கு. மேற்கொண்டு மத்த விஷயத்தைப் பேசிரலாம்.’ என்றார்.

தியாகராஜன், ‘எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி நாங்க எங்க பொண்ணுக்கு எல்லாம் செஞ்சிடுறோம். கல்யாணத்துக்கு 35 பவுன் நகையும் 2 லட்சம் மதிப்புள்ள பாத்திர பண்டங்களும் கொடுத்துடறோம்.’ என்றார். 

‘அவ்வளவு தானா?’ என மனதிற்குள் முனங்கிய சித்ரா, குணாவின் நிலா மீதான பார்வையைக் கண்டு பையனுக்குப் பொண்ணவேற புடிச்சிருச்சு போல. இப்போதைக்கு ஒகே சொல்லுவோம். ஒத்தப் பொண்ணுதான, எங்க போய்டப்போறாங்க என மனதில் நினைத்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தார்.

இப்படியாக குணா – நிலா திருமணம் கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிய, அக்கூட்டுக் குடும்பத்தில், நிலாவும் ஒரு அங்கமானாள்.

என்னதான் குணா நல்ல கணவனாக இருந்தாலும், வீட்டில் முக்கிய முடிவெடுப்பதில் அம்மா பிள்ளையாகத்தான் இருந்தான். சித்ராவிற்கோ பேங்க் வேலை பார்க்கும் மகனுக்கு அவசரப்பட்டு நிலாவை முடித்துவிட்டோமோ என்று அவ்வப்போது தோன்ற ஆரம்பித்தது. இதனால் அடிக்கடி சித்ராவிற்கும் நிலாவிற்கும் மாமியார் – மருமகள் சண்டை வர, நிலாவின் பொறுமையான குணத்தால் குடும்பம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. 

 

என்னதான் நிலா அமைதியான பெண்ணாக இருந்தாலும், சித்ரா பேசும் ‘என் பையனுக்கு எப்பேர்பட்ட பொண்ணுங்க எல்லாம் வரனா வந்துச்சு. ஆனா நாந்தான் போயும் போயும் மிடில் கிளாஸ் பொண்ணான உன்னைப்போயி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்!’. என்ற வார்த்தைகளைத் தாங்க முடியாமல் போயிற்று. 

இப்படியான ஒரு நாளில்தான் சித்ரா நிலாவிடம், ‘அதான் உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாருல்ல.. இனி அவரு சேவிங்ஸ் வச்சி என்ன பண்ணப் போறாரு. ஒரு 100 பவுன் நகை போட்டாதான் என்ன? நான் என்ன எனக்கா கேக்குறேன். அவரு பொண்ணு உனக்குத்தான. நாளைப்பின்ன சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒரே நகைய மாறிமாறிப் போட்டுட்டு வந்தா, பேங்க் வேலை பாக்குற உன் பையனுக்கு வேற பொண்ணே கிடைக்கலயான்னு கேப்பாங்கல்ல’ என்று வன்மத்தை வெளிப்படுத்தினார்.  

இவ்வளவு நாள் சும்மா பேசிகொண்டிருந்த மாமியார் இன்று, போய் நகைய வாங்கிட்டு வா என்று கூறியது, பொறுமையை இழக்கச் செய்த நிலையில் நிலா ‘எங்கப்பாக்கு எனக்கு எப்ப என்ன செய்யனும்னு தெரியும். எனக்கு தேவைப்படும் போது கண்டிப்பா செய்வாரு. உங்க சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லனும்ன்னு எல்லாம் என் அப்பாகிட்ட கேட்க முடியாது’ என்று கூற, சரியாக அந்த நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்குள் வந்தான் குணா. 

தாய் மற்றும் மனைவியின் கூற்றைக் கேட்டவன், ‘நிலா இது என்ன பழக்கம், பெரியவங்கள எதிர்த்துப் பேசுறது’ எனக் கூற, ‘ஓ.. அப்ப அவங்க என்கிட்ட உன் அப்பாகிட்ட நகை வாங்கிட்டு வான்னு சொன்னது தப்பில்லையா?’ என்றாள் ஆற்றாமையுடன்.  

குணாவோ, ‘அம்மா சொல்றதுல என்ன தப்பிருக்கு? அதான் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல. உங்கப்பா சொத்த சேர்த்துவச்சி என்ன பண்ணப் போறாரு?’ என்று தனது தாய்க்கு ஒத்தூத, சித்ரா. ‘என் பையன கல்யாணம் பண்ண பல பொண்ணுங்க இன்னும் லைன்ல நிக்கிறாங்க. நீ போய்த் தொல’ என்று சாடினார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானா நிலா, தற்கொலைக்கு முயற்சிக்க, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார்கள். இனியும் மகள் இங்கிருந்தால் அவள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தங்களது வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர், தியாகராஜனும் வனஜாவும்.

இப்படியே சில மாதங்கள் கடக்க, குணா முழுதாக தாயின் சொல்கேட்டு நிலாவை மறந்து, புது மாப்பிள்ளையாக மீண்டும் தயாரானான். 

நிலாவிற்கு போன் செய்தவன், ‘நமக்குள்ள செட் ஆகாது நிலா. என் அம்மா உன்னவிட வசதியான பொண்ணா எனக்குப் பார்த்திருக்காங்க. நாம Mutual Divorce பண்ணிக்கலாம்.’ என்றான்.

அவனது மணமுறிவு பேச்சால் ஆத்திரமடைந்த நிலா, பக்கத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குணாவின் குடும்பத்தினர் அதிக வரதட்சனை கேட்டதாகவும், கொடுக்காததால் குணா விவாகரத்துவரை சென்றதாகவும் புகார் கொடுக்க, குணாவின் குடும்பத்தினரை காவலர்கள் விசாரணைக்கு அழைத்தனர். 

குணா மட்டும் காவல் நிலையத்திற்கு வந்தான். ‘எனக்கு நிலாவுடன் வாழ விருப்பம் இல்லை!’ எனக் கூறிவிட்டு, காவல் நிலையத்தையும் நிலாவின் மனதையும்விட்டு வெளியேறினான். 

தற்போது நிலா குணா குடும்பத்தினர், தன்னைத் தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசி, வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்து, தனது வாழ்க்கைக்கான நீதி கேட்டு போராடுகிறாள். 

வரதட்சனை என்னும் பிசாசு, இன்னும் எத்தனை குடும்பங்களை அழிக்கக் காத்திருக்கிறதோ? 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்