Loading

அன்றைய இரவு தூங்கா இரவாகிப் போனது அர்ஜூனுக்கு.

 

அர்ச்சனாவை வேறொருவனுடன் இணைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவனால். முற்றிய காதலின் நிலையில் அவள் மீது தான் பித்தாகியிருப்பது புரிந்தது அவனுக்கு.

 

ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வேறொருவனுக்கு நிச்சயமாகப் போகிறவளைத் தடுத்து நிறுத்தவா முடியும்?

 

ஆட்டோகிராப் சேரன் போன்று தனது மனத்தில் உண்டான இரண்டாவது காதலும் தோல்வியுடன் முடிந்ததாய் தாடியுடன் அலைய வேண்டியது தான் என நினைத்து விரக்தியுடன் சிரித்துக் கொண்டான் அர்ஜூன்.

 

இரவெல்லாம் இவ்வாறு பல்வேறு சிந்தனையில் உழன்றவனாய் காலை மூன்று மணியளவில் தான் உறங்கினான் அர்ஜூன்.

 

காலை ஆறு மணியளவில் அவன் வீட்டின் அழைப்பு மணி பலமுறை ஒலிக்கவும், கடினப்பட்டு கண்களைத் திறந்தவன், ‘இந்த நேரத்துல யாரு?’ என்று எண்ணியவனாய் கதவைத் திறந்தான்.

 

வாசலில் நின்றிருந்த அவனது தாய் தந்தையரைப் பார்த்தவனுக்கு தூக்கம் முற்றாய் கலைந்து போக, “அம்மா.‌.. அப்பா.. என்ன சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறீங்க?” எனக் கேட்டான்.

 

“வழி விடுடா! வாசல்லயே நிக்க வச்சி கேள்வி கேட்டுக்கிட்டு” என்று அவனை தள்ளியவாறு உள்ளே சென்றார் அவன் தாய் சித்ரா.

 

“உங்கம்மாவோட சொந்தகார மாமா இங்கே இருக்காங்களே அவங்க பொண்ணுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தமாம். திடீர்னு தான் போகலாம்னு முடிவு செஞ்சி கிளம்பினோம். நீயும் ஹோட்டலுக்கு லீவ் சொல்லிட்டு கிளம்பு அர்ஜூன். உன்னையும் கூட்டிட்டு வர்றதா சொல்லிருக்காளாம் உங்கம்மா” என்றவராய் சோஃபாவில் அமர்ந்தார் அவன் தந்தை செந்தமிழன்.

 

“ம்ப்ச் மாஅஅஅ நான் எங்கேயும் வர்றதா இல்லை” என்றவனாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் அர்ஜூன்.

 

அவன் காலை கடன்களை முடித்து முகம் கழுவி விட்டு வெளியே வரவும், “இன்னிக்கு நீ எங்க கூட வர்ற! அப்படி வரலைனா உன் கூட நான் என்னிக்கும் பேசவே மாட்டேன் அர்ஜூனா” என்று கோபத்துடன் உரைத்து விட்டார் சித்ரா.

 

‘மனுஷனுக்கு இருக்கிற டென்ஷன்ல இவங்க வேற’ என்று கடுப்பாய் வந்தது அர்ஜூனுக்கு.

 

அவன் நினைவு முழுவதும் அர்ச்சனாவிடம் தான் இருந்தது.

 

‘அர்ச்சனாவுக்கு போன் செஞ்சி பேசலாமா? நிஜமாவே அவளை இன்னிக்குப் பொண்ணு பார்க்க தான் வர்றாங்களா? இல்லை பொய் சொல்லிருப்பாளா?’ என்று சிந்தித்தவாறு அர்ஜூன் அமர்ந்திருக்க,

 

“என்னடா உட்கார்ந்து கனா கண்டுட்டு இருக்க? கிளம்புற வழியைப் பாரு” என்று அதட்டினார் சித்ரா.

 

ஹோட்டலுக்கு அழைத்து அன்றைய நாளின் பணிகளை ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டு விடுப்புத் தெரிவித்து விட்டு கிளம்பினான் அர்ஜூன்.

 

மகிழுந்து ஏற்பாடு செய்வதற்குச் செல்ல வேண்டிய இடத்தின் பெயரை அர்ஜூன் கேட்க, தான் ஓட்டுனரிடம் பேசிக் கொள்வதாய் உரைத்து அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார் செந்தமிழன்.

 

காலை ஒன்பது மணியளவில் மூவருமாய் ஏற்பாடு செய்யப்பட்ட மகிழுந்தில் கிளம்பிச் சென்றனர்.

 

மகிழுந்து செல்லும் இடத்தைக் கூட கவனிக்காது தீவிரமாக அர்ச்சனாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

 

‘ஹே கேடி நிஜமா உனக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தமா?’ என்று கேட்டு அவன் அனுப்பியிருந்த நேரம் மகிழுந்து அர்ச்சனாவின் வீட்டில் நின்றிருந்தது.

 

இவன் வீட்டையும் பெற்றோரையும் குழப்பத்துடன் பார்க்க, “என்னடா பார்க்கிற? இறங்கி வா” என்று அவனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார் சித்ரா.

 

“வாங்க.. வாங்க.. வாங்க அர்ஜூன்” என்று கோவிந்தராஜனும் மல்லிகாவும் வரவேற்க, ‘என் கூடத் தான் அவளுக்கு நிச்சயதார்த்தமா? அதுக்கு எங்கம்மா அப்பாவும் கூட்டா? ஒரு நைட் முழுக்க தூங்க முடியாம கதி கலங்க வச்சிட்டாளே! வரட்டும் அவ’ என்று மனத்திற்குள் அவளை வறுத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

 

இவர்கள் மூவரையும் வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்து கோவிந்தராஜன் பேசத் தொடங்குவதற்கு முன் முந்திக் கொண்ட சித்ரா, “எங்க பையன் இப்படியே இருந்திடுவானோனு கவலைப்பட்டுக்கிட்டு கிடந்தோம். அர்ச்சனா அப்பா எங்ககிட்ட நேர்ல வந்து விசாரிச்சு பேசினப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. ஒரு மாசமா அர்ச்சனாவும் எங்ககிட்ட பேசிட்டு இருந்தனால உங்களை எல்லாம் ஏதோ பழகின உறவா தான் பார்க்கத் தோணுது. எங்களுக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம்” என்றார்.

 

சித்ரா பேசப் பேச தனக்குப் பின்னே இத்தனை வேலைகள் நடந்திருக்கிறதா என்று திகைத்துப் போன அர்ஜூன் அன்னையின் சம்மதம் என்ற வார்த்தையில்,

 

‘என்னது சம்மதமா? என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டியாமா’ என்பது போல் தாயை முறைத்தான்.

 

அதை கண்டு கொள்ளாதவராய்,

 

“ரெண்டாம் தாரமா பொண்ணைக் கட்டிக் கொடுக்கிறோமேனு உங்களுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கலாம். எனக்கொரு பொண்ணு இருந்தா நானும் அப்படித் தான் யோசிப்பேன். அதனால இதை சொல்றேன். மூனு மாசம் தான் அந்தப் பொண்ணு எங்க வீட்டுல இருந்துச்சு. அந்தப் பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுச்சாம். கல்யாணத்துக்குப் பிறகு மனசு மாறிடும்னு நினைச்சிதாம் ஆனா அர்ஜூன் கூட வாழ மனசு ஒப்பலையாம். அர்ஜூனுக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்கனு டைவர்ஸ் வாங்கினப் பிறகு ஒரு நாள் என்னைச் சந்திச்சு என்கிட்ட அந்தப் பொண்ணே சொன்னிச்சு. இது வரைக்கும் இதைப் பத்தி என் பையனே என்கிட்ட சொன்னது இல்ல” என்று சித்ரா சொன்னதும்,

 

‘என்னது மயிலு சொன்னாளா?’ திடுக்கெனத் திரும்பி அவரைப் பார்த்தான் அர்ஜூன்.

 

“உங்க பையன்கிட்ட நாங்களும் கேட்டோம். ஒரு பொண்ணோட பர்சனலை வெளியே சொல்றது சரி கிடையாது. அதனால சொல்ல முடியாதுனு சொல்லிட்டாரு. உண்மையிலேயே இதனால தான் உங்க பையன் மேலே எனக்கு பெரிய மதிப்பே வந்துச்சு. விட்டுட்டு போன பொண்ணையே விட்டுக் கொடுக்காம பேசுறவரு, கண்டிப்பாக் கட்டிக்கிட்ட பொண்டாட்டியை நல்லா மரியாதையா வச்சி பார்த்துப்பாருனு எனக்கு அப்ப தான் நம்பிக்கை வந்துச்சு” என்றார் மல்லிகா.

 

அந்நேரம் தட்டில் தேநீர்க் கோப்பையுடன் புடவை அணிகலன் அலங்காரத்துடன் குனிந்த தலையை நிமிர்த்தாது அடக்க ஒடுக்கமாய் வந்து நின்றாள் அர்ச்சனா.

 

அர்ஜூன் அவளையே முறைத்துப் பார்த்திருக்க, ‘அச்சு அவரை இப்ப நிமிர்ந்தே பார்த்துடாதடி! பார்வையிலேயே பொசிக்கிடுவாரு’ என்று மனத்திற்குள் கூறியவளாய் யாரின் முகத்தையும் பார்க்காது தேநீரைக் கொடுத்துக் கொண்டு வந்தவள் அர்ஜூனிடம் வந்ததும் மேலும் தலையைத் தாழ்த்திக் கொள்ள, அவன் தேநீர்க் கோப்பையை எடுக்காது அவளையே பார்த்திருந்தான்.

 

‘அய்யோ எடுக்க மாட்டேங்குறாரே! போச்சு அச்சு! இன்னிக்கு நீ தொலைஞ்ச’ என்று மனத்திற்குள் அவள் புலம்பிய நேரம்,

 

“என்னடா கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு பொண்ணையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க! கிளாஸை கையில எடுடா” என்றார் சித்ரா.

 

தாயை ஒரு பார்வை பார்த்தவன் கையில் தம்ளரை எடுத்த நொடி, ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று அறைக்குள் ஓடி விட்டாள் அர்ச்சனா.

 

அறைக்குள் வந்து அமர்ந்த அர்ச்சனாவின் உள்ளம் திக் திக் என்று துடித்திருந்தது.

 

இந்தத் திருமணப் பேச்சை அர்ஜூன் நிறுத்திடுவானோ என்ற அச்சத்துடனேயே தான் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

 

ஆனால் இரு வீட்டினரும் திருமண தேதியைக் குறித்துப் பேசும் போதும் கூட எதுவும் குறுக்கிட்டுப் பேசவில்லை அவன். அவனுடைய தாய் அவனிடம் எதற்கும் அனுமதி கேட்கவும் இல்லை.

 

அடுத்த மூன்று மாதங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசிய செந்தமிழன், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மூன்று முகூர்த்தத் தேதிகளையும் கொடுத்து, அர்ச்சனாவுக்கு தோதான தேதியைக் கேட்டு சொல்லுமாறு கூறினார்.

 

அவளிடம் கேட்டு தேதியையும் பேசி முடிவு செய்து விட்டு ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டு மகிழ்வுடன் அவர்கள் கிளம்பிய பிறகும் கூட அவளால் நம்பவே முடியவில்லை.

 

அர்ஜூன் எப்படி சம்மதித்தான்? எதனால் அமைதியாக இருந்தான்? ஒரு வேளை அவனது தாய் தந்தையின் முன் மறுத்து பேச முடியாது அமைதியாக இருந்தானா என்று எண்ணற்ற கேள்விகள் அவளைச் சூழ்ந்து கொள்ளவும், அர்ஜூனிடம் உடனே பேசத் துடித்தது மனம்.

 

உடனே அவனது கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள். மணி அடித்து ஓய்ந்து போக மீண்டும் முயற்சித்தாள். அவளது அழைப்புகள் அனைத்தும் தவறிய அழைப்புகளாகவே போகவும், அவன் வேண்டுமென்றே தனது அழைப்பை ஏற்காது தவிர்க்கிறானோ என்று தோன்றியது அவளுக்கு.

 

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

 

தன் மீது பெருத்த கோபத்துடன் இருக்கிறான் என்று முடிவே செய்து விட்டவளுக்கு மனம் சுணங்கிப் போனது. அன்றே அவனைச் சந்தித்து சமாதானம் செய்ய நினைத்தவள் மாலை அவன் வீட்டிற்குச் சென்று நின்றாள்.

 

அவனது தாயும் தந்தையும் மாலைப் பேருந்திலேயே சென்னைக்குச் செல்வதற்காகக் கிளம்பி நின்றிருந்த நேரம் அவள் அங்குச் சென்று நிற்க, “என்னம்மா எங்களை வழியனுப்ப வந்தியா?” என்றவராய் அவளை வீட்டிற்குள் அழைத்துப் பேசினார் சித்ரா.

 

செந்தமிழனும் அவளிடம் நல்லவிதமாகப் பேச, அர்ஜூன் அவளை முறைத்துப் பார்த்தான்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் பேருந்து நிலையம் செல்வதற்கு மகிழுந்தை ஏற்பாடு செய்தவன் வாசலில் நின்று அவர்களை வழியனுப்பி வைக்க, இவளும் அவனுடன் நின்றாள்.

 

பெற்றோரை வழியனுப்பி விட்டு வாசலில் இருந்து வீட்டினுள்ளே அவன் செல்ல, “அஜூப்பா ஏன் என் போன் கால் எதையும் நீங்க எடுக்கலை? என் மேல கோபமா இருக்கீங்களா? இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லையா?” என்று  அவனின் பின்னேயே நடந்தவளாய் கேட்டிருந்தாள் அர்ச்சனா‌.

 

அவளின் கேள்விகளுக்கு ஏதும் பதிலிறுக்காது வீட்டினுள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தவனாய் அவளையே பார்த்திருந்தான்.

 

“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” எனக் கேட்டவாறு அவன் முன்னே சென்று நின்றாள் அர்ச்சனா.

 

பெருமூச்சுடன் அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் பேசத் தொடங்கினான்.

 

“நான் மயிலை ரொம்ப பிடிச்சி தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணுனாலும், கட்டிக்கப் போற பொண்ணுங்கிறனாலேயே அவ மேல காதல் வந்துடுச்சு. நிறைய கனவோடயும் ஆசையோடயும் தான் அவளைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்” என்றவன் சொல்லிக் கொண்டே போகவும்,

 

‘எதுக்காக இவரு இப்ப இதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்காரு. மயிலை மறக்க முடியாதனால என்னை கல்யாணம் செஞ்சிக்க முடியாதுனு சொல்லப் போறாரா?’ கவலைத் தோய்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தவளாய் இவள் இவ்வாறு சிந்தித்து இருக்க மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.

 

“ஆனா கல்யாணம் நடந்த அந்த நைட்டே என்னோட ஆசை கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டா அவ!” அவன் குரலிலும் முகத்திலும் அத்தனை கோபம்.

 

“அவளால என்னோட அணைப்பைக் கூட ஏத்துக்க முடியலை. மயங்கி விழுந்துட்டா! மயக்கம் தெளிஞ்சி எழுந்தவ கண்ணீரோட அவளோட காதல் கதையைச் சொன்னா! அவ மனசு முழுக்க அவளோட இளா மச்சான் தான் இருக்கிறதா சொன்னா! என்னோட சேர்ந்து வாழ முடியும்னு நம்பி தான் கல்யாணம் செஞ்சதாவும் ஆனா என்னோட லேசான தொடுகை கூட அவளால ஏத்துக்க முடியலைனு சொன்னா!” ஏமாற்றத்தின் வலி அப்பட்டமாய் தெரிந்தது அவன் குரலில்.

 

அவனின் வலி அவளையும் தாக்க, ‘அச்சோ ரொம்ப ஹர்ட் ஆகியிருப்பாருல’ அவனுக்காக கவலைப்பட்டது அவள் உள்ளம்.

 

மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்