Loading

 

 

கேள்விகள்!

அவை விடையை பெறுவதற்காக மட்டும் கேட்கப்படுபவை அல்ல‌…

உள்ளுக்குள் பல கேள்விகளை உருவாக்குவதற்காகவும்  கேட்கப்படுவது தான் இந்த வினாக்கள்‌.

அப்படி தான் தியா திருப்பி கேட்ட அந்த கேள்வி,  திகழுக்குள் பல கேள்வி மின்னல்களை கிளை பிரிக்க செய்து இருந்தது.

“எனக்கு கார் ஓட்ட பிடிக்கலைனா, கொடுத்த பத்து லட்சத்தை திருப்பி கொடுத்துட்டு போகாம எதுக்கு நின்னுட்டு இருக்க?” என்றவளின் கேள்வி அவனை நிதானிக்க வைத்தது.

‘இப்போது இங்கு இருந்து சென்றுவிட்டால் பத்து லட்சம் கடனை எதை கொண்டு அடைப்பது?’

‘அடுத்த இருபது வருடங்களும் நாற்பது லட்ச கடனை அழிக்க வீணாய்ப் போய்விடுமா?’

‘நான் கொடுத்த பணத்தை ஒரு வேளை அன்னை வட்டிகாரனிடம் கொடுத்து இருந்தால் எப்படி மீண்டும் பணத்தை புரட்டி இவளிடம் கொடுப்பேன்?’

இன்னும் இன்னும் விடை அறியா பல கேள்விகள் உள்ளுக்குள் பிறந்து, பற்றி எறிந்த கோபத்தீயில் நீரை ஊற்றி அணைக்க வைத்தது.

தடுமாற்றத்துடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இயலாமையின் இலக்கணத்தில் எழுதப்பட்டு இருந்தது அவன் முகம்.

அதைக் கண்டு உதடு வளைத்தவள்,
“காசு வேணும்லே அப்போ வாயை மூடிக்கிட்டு வந்து கார் ஓட்டுற வேலையை மட்டும் பாரு” என்றாள் குரலில் அசட்டையை காட்டி.

அந்த வார்த்தைகளில் இருந்த ஏளனம் அவன் இதயத்தை ஆழமாக காயப்படுத்தும் ஆயுதமாய்.

மௌனமாய்‌ அவளை வெறித்தவன் அங்கே கலங்கிய முகத்துடன் நின்று இருந்த ரகுராமைப் பார்த்தான். அவர் அருகில் இருந்த பணக்கட்டுகளையும் பார்த்தான்‌.

இந்த பணம்!!! இந்த பணம் ஒன்றால் தானே தனக்கு இத்தனை துயரம் என்று எண்ணியவனின் முகம் விரக்தியை சூடி கொண்டது.

ஒரு வெற்று காகிதத்தாளுக்காவா இப்படிப்பட்ட ஒருவளுக்கு காரோட்ட வேண்டும்!

பாரதப் போரில் கர்ணனின் தேரை ஓட்ட மாட்டேன்‌ என்று கோபத்தோடு சென்ற அந்த சாரதியின் உரிமை கூட இந்த பாரதத்தில் போராடும் தனக்கு கிடைக்கவில்லையே!

அவனது உள்ளம் ஆற்றாமையில் கொதிக்க, ஏற்கெனவே கோபத்தில் எரிந்து கொண்டு இருந்தவனின் மீது அவள் மேலும் பெட்ரோலை ஊற்றினாள்.

“சார் காரை என் வீட்டுக்கு ஓட்டப் போறீங்களா… இல்லை கொடுத்த பத்து லட்சத்தை திரும்ப எடுத்து வைச்சுட்டு ஊருப் பார்த்து சேரப் போறீங்களா?” என்றவளின் குரலில் இருந்த கேலி அவனை கீறியது உண்மை.

அவள் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன் எதுவும் பேசாமல் காரில் சென்று அமர்ந்தான்.

இதழை சுழித்துப் பார்த்தவளின் கண்கள் அவனைத் தொட்டு தன்னையே அருவெறுப்பாக பார்த்து நின்ற ரகுராமின் மீது படிந்தது.

“உங்க ரெண்டு பேரோட கையிலேயும்  ஆண்டவன் பணம்ன்ற கயிறை கட்டி வைச்சு இருக்கான்‌‌… நீங்க தான் அந்த பணக் கயிறோட இழுதிசையிலே ஆடுற பொம்மலாட்ட பொம்மைங்க… நான்  இல்லை” என்று நிறுத்தி நிதானமாக சொன்னவள் அவர்கள் தன்னைப் பற்றி உள்ளத்தில் நினைத்து இருந்த அதே கேள்வி ஈட்டியை‌‌ எடுத்து அவர்கள்‌ நெஞ்சிலேயே ஆழமாய்‌ குத்தினாள்.

“பணத்துக்காக எந்த கீழ்த்தரமான வேலைக்கும் இறங்கிடுவீங்களா? உங்களுக்கு செய்ய வேற பொழைப்பே இல்லையா?” என்ற தியாவின் கேள்வி காரில் அமர்ந்து இருந்த திகழ் முகிலின் கைகளை‌‌ இறுக்கி ஸ்டியரிங் வீல் பிடிக்க வைத்தது.

நின்று கொண்டு இருந்த ரகுராம் தாத்தாவை தள்ளாடியபடி உட்கார‌ வைத்தது‌.

அவர்கள் இருவரின் வேதனையான முகத்தைப் பார்த்தவளின் குரலில் இருந்த கடுமை சற்றே குறைந்து அதன் பின்பு நிதானமாக ஒலித்தது.

“ஒவ்வொருத்தவங்க எடுக்கிற‌ முடிவுக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு இப்போ புரியும்னு நினைக்கிறேன்…  நாம பாட்டுக்கு சும்மா கௌரவம் மானம்‌ மரியாதைனு வாய்க்கு வந்ததை பேசிட்டு போயிடலாம் ஆனால் அந்த இடத்துலே நின்னுட்டு இருக்கிறவங்களுக்கு தான் அதோட வேதனை புரியும்” என்றவளின் வார்த்தைகளில் இருந்தது அத்தனையும் நிதர்சனமான‌ உண்மை.

ஆனால் அந்த சொற்கள் எதிரில் இருந்த இரு ஆடவர்களின் செவியை துளைத்து இதயத்தை அடையவில்லை.

‘அவர்கள் உள்ளம் முழுக்க ஒரு பெண் இப்படி பொதுவெளியில் நம்மை அசிங்கப்படுத்திவிட்டாளே’ என்ற குரோதத்தில் மட்டுமே குமுறி கொண்டு இருந்தது. 

மரமாவது காற்றின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்து அசையும்‌. ஆனால் இவர்கள் ஆணவத்தின் கைகளால் செய்யப்பட்ட பொம்மைகள், அத்தனை  எளிதில் இவர்கள் அசைய மாட்டார்கள் எனப் புரிய தியா மூக்கில் தீனமான ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது‌.

அவர்களின் அலட்சிய பாவனையை கண்டு கண்களை சுருக்கியவள், “யூஸ் லெஸ்..‌.” என்று தனக்குள் தானே முணங்கி கொண்டு கைகளில் இருந்த கூலர்ஸை எடுத்து கண்ணில் மாட்டினாள்‌.

திரும்பி ரகுராமைப் பார்த்தவள், “வரட்டா தாத்தா” என்று நக்கலாக சொல்ல அவர் கழுத்தை வெட்டி கொண்டு திரும்பிக் கொண்டார்.

அதைக் கண்டு திருப்தியாக புன்னகைத்தவள், நேராக நடந்து வந்து பின்கதவு சீட்டை திறந்து அமர்ந்தாள்.

அவள் அமர்ந்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் கார் புறப்படாமல் இருக்கவே, “ஓய் ஏன் கார் போவாம நிற்குது?” என்றாள் சப்தமாக.

“போற இடம் தெரிஞ்சா தானே போக முடியும்” என்றான் அவன் மறுகரைக்கு முகத்தைத் திருப்பி கொண்டு‌.

“ஏன் சாரா திரும்பி என் கிட்டே கேட்க மாட்டிங்களோ… நான் தான் சொல்லணுமோ” என்றாள் தன் கைப்பையில் இருந்து ஒரு ஆங்கிலப் புத்தகத்தை உருவியவாறு.

“நான் ஏன் உங்க கிட்டே பேசணும்…  நான் கார் ஓட்ட மட்டும் தான் வந்து இருக்கேன்‌… எங்கே போகணும்னு சொன்னா கூட்டிட்டு போறது மட்டும் தான் என் வேலை‌” என்று தன் இருப்பு எதற்காக என்று அழுத்தமாக அடிக்கோடு இட்டு காண்பித்தான்.

எத்தனை செய்தித்தாள்களில் படித்து இருப்பான்…. மேனேஜர் மற்றும் கார் டிரைவருடன் நடிகைகள் சல்லாபம் கொண்டார்கள் என்று கொட்டை கொட்டை எழுத்துக்களில்‌.

அதனாலேயே அவன் முதலிலேயே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட,
அதைக் கேட்ட தியாவின் இதழ்களில் ஒரு அசாத்திய அலட்சியம்.

“ரொம்ப பயப்படாதே… என் டேஸ்ட் உன் அளவுக்கு தரைலோக்கலா இறங்காது.‌ அது வேற இல்லாமல் நீ அதுக்கு கொஞ்சமும் செட் ஆக மாட்டே” என்று தியா அவனைப் பார்த்து கிண்டலாக சொல்லவும் திகழின் இதழ்கள் துடித்தது‌.

‘பாவி!!! பாவி… பொம்பளைப் பிள்ளை மாதிரியா பேசுறா…” என்று உள்ளுக்குள்‌ உறுமி கொண்டு இருந்தவனை சொடுக்கிட்டு அழைத்தாள்.

“நீயா திரும்பி எங்கே போகணும்னு கேட்கிற வரைக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று‌ தியா அழுத்தமாக சொல்லியபடியே புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்பி அதன் வரிகளில் ஆழ்ந்தாள்.

திகழ் கொஞ்சமும் அசையவில்லை.

தான் ஏன் கேட்க வேண்டும் அவளே சொல்லட்டும் என‌‌ சட்டமாக அமர்ந்து இருந்தான்.

அவளும் அவனுக்கு குறையாத திமிரோடு இம்மியளவு நகராமல் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்துப் போய் விட்டாள்.

கடிகார முட்கள் வேக வேகமாக நகர்ந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது.

காரும் நகர்ந்த பாடில்லை. உள்ளே இருந்த இருவரின் இதழ்களும் அசைந்தபாடில்லை‌

திகழ் தான், தன் பொறுமையை தொலைத்து அவளை திரும்பிப் பார்த்தான். அப்போதும் அவள் கண்கள் அந்த ஆங்கில புத்தகத்தில் இருந்து பிரிந்த பாடில்லை.

திமிர்!!! திமிர்… திமிரின் ரத்தத்தில் பிறந்து  வளர்ந்த நஞ்சுகொடி இவள் என்று உதடுகளுக்குள் முணுமுணுத்தவன் தான் கொண்ட திமிரை விட்டு விட்டு அவளைத் திரும்பி பார்த்தான்‌.

“எங்கே போகணும்னு சொன்னா கிளம்ப வசதியா இருக்கும்” என்றவன் தானாக இறங்கி வந்து நிற்கவும் அவள் முகத்தில் வெற்றி சிரிப்பு.

புத்தகத்தில் இருந்து தன் கண்களைப் பிரித்து அவனைப் பார்த்தாள்.

“இங்கே ஏதாவது நல்ல பிட்டு படமா போடுற இடத்தைப் பார்த்து காரை‌ நிறுத்து” என்றவளின் வார்த்தைகளை கேட்டவனிடம் மின்சார அதிர்வு.

“என்ன என்ன?” என்றான் அதிர்ந்த முகபாவைனையோடு.

“பிட்டு யா… பிட்டு பிட்டு… அதுக்கு கூட உனக்கு அர்த்தம் தெரியாதா?” என்றாள் சொற்களில் அழுத்தம் கூட்டி.

அவன் நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த மாதிரி படங்களை ஒரு முறை கூட பார்த்தது இல்லை‌.

அத்தனை கட்டுப்படாக வளர்த்து எடுக்கப்பட்டவன் இன்று அந்த பெயரை கேட்ட உடனே அட்டைப் பூச்சி தன் உடம்பில் ஊறியது போல அருவெறுப்போடு நெளிந்தான்.

“வண்டியை எடு‌‌… எனக்கு டைம் ஆகிடுச்சு” என்றவளைக் கண்டு பல்லை கடித்தபடி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்து, சென்னையில் பிட்டுக்கு பேர் போன அந்த தியேட்டரின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

அந்த திரையரங்கின் சுவர்களில் ஒட்டபட்டு இருந்த போஸ்டர்களைப் பார்த்ததும் தன்னால் திகழின் முகம் சுருங்கியது.

அவன் முகம் போன போக்கைப் பார்த்து கொண்டே, “உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கட்டுமா?” என தியா கேலி சிரிப்போடு கேட்க, திரும்பி பெரிய கும்பிடு ஒன்று அவளுக்கு போட்டுவிட்டு காரில் சென்று அமர்ந்துவிட்டான்.

அவனுக்கு அங்கு இருப்பதை நினைத்தே குமட்டி கொண்டு வந்தது. அந்த திரையரங்கில் பல ஆண்கள் கூட்டம் வட்டமிட்டு கொண்டு இருப்பதைப் பார்த்து முகத்தை சுருக்கினான்.

‘சே வயித்துப் பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்பு’ என்று உள்ளுக்குள் நினைத்தவாறே நிமிர்ந்துப் பார்த்தான்.‌

எந்த கூச்சமும் இல்லாமல் நிமிர்ந்து நடைப் போட்டு சென்ற தியாவை பலரது செல்ஃபோன்கள் ரகசியமாக படம்பிடித்து கொண்டதை அவள் லட்சியம் செய்தது போலவே தெரியவில்லை.

எல்லாவற்றிலும் அலட்சியமாய் நடந்து கொள்ளும் அவளைப் பார்த்து பல்லை கடித்தபடியே நெருப்பின் மீது அமர்வது போல அந்த காரில் அமர்ந்து இருந்தான் திகழ் முகிலன்.

இனி இதைப் போல பல முறை அவனை நெருப்பில் நிற்க வைப்பாள் அந்த தீ…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்