Loading

மருத்துவ முகாமில் நித்ய யுவனிக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

 

இரவானதும் மீண்டும் இருவரும் அவர்கள் தங்கியுருந்த குடியிருப்புக்கு சென்றனர்.

 

சித்தார்த், “நிது… மார்னிங் ஏர்லியா கேம்ப் போகனும்… இன்னெக்கி மாதிரி தூங்கிராதே… பாய்..” என்று விட்டு தனது ஃப்ளாட்டிற்குள் நுழைந்தான்.

 

தனது ஃப்ளாட்டிற்குள் நுழைந்த நித்ய யுவனி அன்றைய களைப்பு தீர குளித்தாள்.

 

பின் தனது பையைத் திறந்தவள் அதில் தன் உடைமைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பெட்டியொன்றைக் கையில் எடுத்தாள்‌.

 

கட்டிலில் சென்று அமர்ந்தவள் அதனைத் திறக்க,

 

நித்யா சஜீவ்வின் மீது காதல் உள்ளதை அறிந்து கொண்ட நாளிலிருந்து இன்று வரை ஜனனிக்கு கூட தெரியாத பலவற்றை பகிர்ந்து கொள்ளும் டயரியும்,

 

சஜீவ்விடமிருந்து ஆசையாக வாங்கி எடுத்த அவன் டீ ஷர்ட்டும் இருந்தன.

 

டீ ஷர்ட்டை கைகளில் எடுத்தவள் அதனைப் பெற்றுக் கொண்ட தினத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள்.

 

அன்று சஜீவ் தந்த இதழ் முத்தத்தின் ஈரம் கூட இன்னும் தன் உதட்டில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் அவளுக்கு தோன்றியது.

 

ஆனால் அதனைத் தந்தவனோ தன்னை விட்டுப் பிரிந்து வெகு தொலைவில் உள்ளான் மனதளவில் கூட என நினைக்க நித்யாவின் மனதில் பாரம் கூடியது.

 

டீ ஷர்ட்டை தன் மார்போடு அணைத்தவள்,

 

“ஏன் சஜு அன்னெக்கி அப்படி பேசினாய்… ஏன் என்ன விட்டு போனாய்… என்ன பிரச்சினை வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிப்போம்னு சொல்லிட்டு பாதிலே என்ன தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டாய்… என் மனசு உன்ன வேணும் வேணும்னு கேக்குது… ஆனால் மூளை இன்னும் காயங்கள தாங்க முடியுமான்னு கேக்குது… நான் என்ன பண்ணுவேன் சஜு… என்னால உன்ன வெறுக்க கூட முடியல…” எனக் கூறி கண்ணீர் வடித்தாள் நித்ய யுவனி.

 

பின் வழமை போல் தன் மனதில் உள்ளவற்றை டயரியில் குறிப்பிட்டு விட்டு சஜீவ்வின் டீ ஷர்ட்டை அணைத்துக் கொண்டே தூங்கினாள்.

 

அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல் செல்ல சித்தார்த், நித்ய யுவனி இருவரும் யூ.எஸ் வந்து இரண்டு வாரங்களைக் கடந்திருந்தன. 

 

அன்று காலையிலேயே சித்தார்த்தும் நித்ய யுவனியும் மருத்துவ முகாம் நடக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.

 

மற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தவளின் மனதை ஏதோ அரித்தது‌.

 

தனக்கு துணையிருந்த மற்ற மருத்துவரிடம் பார்த்துக்கொள்ளக் கூறி விட்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.

 

அவள் வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் அவளின் பின்னால் சென்று,

 

“என்னாச்சு நிது… ஏன் வெளிய வந்துட்ட…” என்க,

 

நித்யா, “மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு சித்… இங்க பக்கத்துல ஒரு அம்மன் கோயில் இருக்குன்னு நெட்ல பாத்தேன்… அங்க போய் கொஞ்சம் நேரம் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டா மனசு நிம்மதியா இருக்கும்…” என்க,

 

“நான் வேணா கூட வரட்டா நிது…” என சித்தார்த் கேட்கவும்,

 

“இல்ல வேணாம் சித்… நீ இங்க இருந்து பேஷன்ட்ஸ பாத்துக்கோ… ரொம்பப் பக்கத்துல தான் கோயில்… நான் போய் சீக்கிரம் வந்துருவேன்…” என்ற நித்யா டாக்சி பிடித்து அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றாள்.

 

கோயிலுக்குச் சென்ற நித்ய யுவனி கண்களை மூடி மனமுருக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

 

திடீரென கழுத்தில் ஏதோ உரசவும் என்னவென கண்களைத் திறந்து குனிந்து பார்க்க,

 

கழுத்தில் புதிதாக தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் தாலியைக் கண்டு அதிர்ந்தாள்.

 

அதனைக் கட்டியது யாரென கோவமாக பார்க்க அவளுக்கு முன்னே சஜீவ் நின்று கொண்டிருந்தான்.

 

கழுத்தில் தொங்கிய தாலியையும் சஜீவ்வையும் மாறி மாறிப் பார்த்தவள் பட்டென அவன் கன்னத்தில் அறைந்தாள்.

 

நேற்று இரவு இந்தியாவில் (இந்தியா மற்றும் யூ.எஸ் இடையில் ஒன்பதரை மணி நேர வித்தியாசம் காணப்படும். இந்தியாவில் இரவு என்றால் யூ.எஸ் இல் காலை நேரம். ஆகவே நேர வித்தியாசத்தைக் கருத்திற் கொள்ளவும்) நித்ய யுவனியின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்த சஜீவ் அலைபேசி ஒலி எழுப்பவும் எடுத்து யாரெனப் பார்த்தான்.

 

சஜீவ் யூ.எஸ் இல் வேலை பார்க்கும் போது அங்கு அவனுக்கு பழக்கமான நண்பன் தீபக் என்பவன் தான் அழைத்திருந்தான்.

 

ஆனால் யாருடனும் பேசும் மனநிலையில் சஜீவ் இருக்காததால் அழைப்பைத் துண்டித்தான்.

 

மீண்டும் மீண்டும் அழைப்பு வரவும் கடுப்புடன் அழைப்பை ஏற்றவன்,

 

“அதான் கட் பண்ணுறேன்ல… பேச முடியாதுன்னு புரிஞ்சிக்க மாட்டியாடா… திரும்ப திரும்ப எடுத்து கடுப்ப கிளப்பிக்கிட்டு…” எனக் கத்தியவன் அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க,

 

தீபக், “டேய் டேய்… கட் பண்ணிறாதேடா… ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…” என அவசரமாகக் கூற,

 

கஷ்டப்பட்டு தன் பொறுமையை தக்க வைத்தவன்,

 

“சீக்கிரமா சொல்லித் தொலை…” என்க,

 

“என்னடா ரொம்ப ஓவராத் தான் பேசுற… அந்த நித்யா பத்தி ஒரு விஷயம் சொல்லலாம்னு பாத்தா உனக்கு பிடிக்கல போல… சரி பரவாயில்ல… நான் கட் பண்ணுறேன்…” என தீபக் கூறினான்.

 

நித்யா என்ற பெயரைக் கேட்டதும் சஜீவ், “டே… டேய்… சாரிடா மச்சான்… யாரு மேலயோ இருந்த கடுப்ப உன் கிட்ட காட்டிட்டேன்… யு..‌யுவிக்கு என்னடா… அவள பத்தி என்ன சொல்ல வந்தாய்…” என்க,

 

தீபக், “இன்னெக்கி மார்னிங் என் ஃப்ரென்ட் ஒருத்தனுக்கு சின்ன ஆக்சிடன்ட் ஒன்னு… அவன கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் போயிருந்தேன்டா… அங்க ஏதோ மெடிக்கல் கேம்ப் நடக்குது போல… அங்க நித்யாவ பார்த்தேன்டா மச்சான்… நீ அவ ஃபோட்டோ காட்டி அவள பத்தி சொல்லி இருக்கிறதனால சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டேன்… அதான் மச்சான் உன் கிட்ட சொல்லலாம்னு கால் பண்ணேன்…” என்றான்.

 

சஜீவ் குரல் கரகரக்க, “தேங்க்ஸ்டா தீபக்… நீ எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்காய்னு சொல்லி புரிய வைக்க முடியாது… என்ன விட்டுப் போய்ட்டன்னு நெனச்ச என் உசுர நீ எனக்கு காட்டி கொடுத்திருக்க… நான் உன் கூட அப்புறம் பேசுறேன்டா…” என அழைப்பைத் துண்டித்தவன் உடனே ஆன்லைனில் இப்போதே யூ.எஸ் செல்லும் ஃப்ளைட்டைப் பார்த்து புக் செய்தவன் பிரபுவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு இரவோடு இரவாக யூ.எஸ் கிளம்பினான்.

 

பதினைந்து மணி நேரத்திஷ் யூ.எஸ் ஐ அடைந்தான் சஜீவ்.

 

அங்கு அப்போது இரவு நேரம் என்பதால் தீபக்கிற்கு அழைத்து தகவல் கூறியவன் அவனின் ஃப்ளாட்டிலே தங்கிக் கொண்டான்.

 

மறுநாள் காலையிலேயே தீபக்கிடம் மருத்துவ முகாம் நடக்கும் ஹாஸ்பிடலின் பெயரைக் கேட்டுக் கொண்டு அங்கு சென்றவன் நித்யாவை தேடி ஒரு வழியாகக் கண்டு பிடித்தான்.

 

அவளை நேரில் கண்டதும் தான்‌ சஜீவ்விற்கு ஏதோ போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.

 

சஜீவ் மனதில், “இந்தத் தடவ என்ன நடந்தாலும் உன்ன இழக்க மாட்டேன் யுவி… இங்கிருந்து திரும்ப இந்தியா கிளம்பும் போது உன்ன என்னோட யுவியா கூட்டிட்டு போயே தீருவேன்..” என நினைத்துக் கொண்டான்.

 

நித்ய யுவனி வெளியே வர அவளைப் பின் தொடர்ந்து கோயில் வரை வந்தான்.

 

நித்யா கண் மூடி பிரார்த்தித்துக் கொண்டிருக்க அவளுக்கு சற்றுப் பின்னே நின்று சஜீவ் அம்மனிடம்,

 

“என் முட்டாள்தனத்தால ஒரு தடவ யுவிய ரொம்ப காலம் பிரிஞ்சு இருந்துட்டேன் கடவுளே… ஆனா இந்தத் தடவ நிச்சயமா என்னால யுவிய இழக்க முடியாது கடவுளே… நீ தான் எனக்கு துணையா இருக்கனும்…” என வேண்டிக் கொண்டவன் கண்களில் பட்டது அம்மன் கழுத்தில் தொங்கிய தாலி.

 

அம்மனை நெருங்கிய சஜீவ், “என்ன மன்னிச்சிருங்க கடவுளே… இத விட்டா யுவிய என் கூடவே வெச்சிக்க எனக்கு வேற வழி தெரியல…” என்றவன் அந்தத் தாலியை எடுத்துக் கொண்டு நித்யாவிடம் சென்றான்.

 

அவள் இன்னுமே கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்க அது அவனுக்கு சாதமாகியது.

 

மனதில் கடவுளை வேண்டிக் கொண்டவன் நித்ய யுவனியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.

 

நித்ய யுவனி அறைந்தும் சஜீவ் எதுவும் கூறாது நித்யாவையே பார்த்துக் கொண்டிருக்க,

 

கண்களில் கண்ணீர் கொட்ட அங்கிருந்து வெளியே ஓடினாள் நித்யா.

 

நித்ய யுவனியைத் தொடர்ந்து ஓடி வந்த சஜீவ் அவள் டாக்சி பிடித்து செல்வதைக் கண்டு தானும் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

ஃப்ளாட்டை அடைந்தவள் உள்ளே ஓடிச் சென்று கட்டிலில் விழுந்து கதறி அழுதாள்.

 

அவளைத் தொடர்ந்து வந்த சஜீவ் கதவை அடைத்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து, 

 

“யுவி… ப்ளீஸ் அழாதே யுவி… ப்ளீஸ் யுவி… ஐம் சாரி… எனக்கு வேற வழி தெரியல… இதுக்கு மேலயும் உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது யுவி…” எனக் கெஞ்சினான்.

 

ஆனால் நித்ய யுவனியின் அழுகை நின்ற பாடில்லை.

 

இன்னும் இன்னும் கதறி அழ சஜீவ்வால் நித்யாவை அவ்வாறு பார்க்க முடியவில்லை.

 

அவனும் கண் கலங்கியவன், “யுவி..” என நித்யாவின் தோள் தொட,

 

அவன் கையைத் தட்டி விட்ட நித்ய யுவனி, “ச்சீ..‌என்ன தொடாதே…” என்றவள் எழுந்தமர்ந்து அழுது கொண்டே அவன் சட்டையைப் பிடித்து,

 

“ஏன் இப்படி பண்ண… ஏன்டா இப்படி பண்ண… நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலயா… ஏன் திரும்ப திரும்ப என்ன கஷ்டப்படுத்துற…” எனக் கதறியவள்,

 

“ஐயோ….” எனத் தன் தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

 

அவள் கரங்களைப் பற்றித் தடுத்த சஜீவ்,

 

“ப்ளீஸ் யுவி… இப்படி எல்லாம் பண்ணாதே… என்னால உன்ன இப்படி பாக்க முடியல…” என கண் கலங்கக் கூறினான்.

 

அவன் கையை உதறிய நித்ய யுவனி, “விட்டுட்டு போனவன் அப்படியே போக வேண்டியது தானே… ஏன்டா திரும்ப வந்த… எதுக்காக இப்படி ஒரு காரியம் பண்ண… ஏன்…. உன்னால ஏற்கனவே என் அம்மா அப்பாவ நிறைய கஷ்டப்படுத்திட்டேன்…. இப்போ நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்…” எனக் கதறி அழுதவள் சஜீவ் மீதே மயங்கிச் சரிந்தாள்.

 

நித்ய யுவனி தன் மீது மயங்கிச் சரியவும் அவளைத் தாங்கிப் பிடித்த சஜீவ், “யுவி… யுவி… என்னாச்சு யுவி… கண்ண தெறந்து பாரு யுவி…” என அவள் கன்னத்தைத் தட்டியவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தும் அவள் கண் விழிக்கவில்லை.

 

என்ன செய்யவென்று புரியாது பதறிய சஜீவ் அவசரமாக நித்யாவைக் கட்டிலில் கிடத்தி விட்டு டாக்டருக்கு அழைக்கப் பார்க்க,

 

அதற்குள் நித்ய யுவனியின் மொபைல் ஒலித்தது.

 

யாரெனப் பார்க்க சித்தார்த் தான் அழைத்திருந்தான்.

 

நித்ய யுவனி கோயில் சென்று வெகு நேரமாகியும் இன்னும் வராததால் அவள் எங்கே என்று பார்க்க அழைத்திருந்தான்.

 

சஜீவ் அவசரமாக அழைப்பை ஏற்று,

 

“சித்…. சித்தார்த்… சீக்கிரமா கிளம்பி யுவி தங்கி இருக்குற ஃப்ளாட்டுக்கு வாங்க… ப்ளீஸ்… யுவி மயக்கத்துல இருக்கா… எந்திரிக்க மாட்டேங்குறா…” எனப் பதட்டத்துடன் கூற,

 

நித்ய யுவனியின் மொபைலில் திடீரென சஜீவ் பேசவும் அவன் இங்கு எப்படி வந்தான் என எதுவும் புரியாது முழித்த சித்தார்த் நித்ய யுவனிக்கு என்னவோ ஏதோவெனப் பயந்து,

 

“சரி நான் இப்பவே கிளம்பி வரேன்… நீங்க டென்ஷனாக வேணாம்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனடியாகக் கிளம்பினான்‌.

 

சித்தார்த்துடன் பேசி விட்டு வைத்த சஜீவ் நித்யாவின் அருகில் அமர்ந்து அவள் கரத்தை தன் கன்னத்தில் வைத்து அழுத்திப் பிடித்தவன் கண்களில் கண்ணீர் வடிய நித்ய யுவனியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்.

 

சஜீவ், “தயவு செஞ்சி என்ன மன்னிச்சிரு யுவி…‌என்னால தான் யுவி உனக்கு இந்த நிலமை… நான் ஒரு முட்டாள்… எதையுமே யோசிச்சு செய்ய மாட்டேன்… ஆனா இந்தத் தடவ உன்ன திரும்ப இழக்க விரும்பாம தான் இப்படி பண்ணிணேன் யுவி… ஒரு தடவ உன்ன விட்டுப் பிரிஞ்சி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… இதுக்கு மேல என்னால முடியல யுவி… நான் மட்டும் இத பண்ணாம இருந்தா நிச்சயமா அந்த மூணு பேரும் நம்மள சேர விட மாட்டாங்க யுவி… திரும்ப முன்ன மாதிரி ஏதும் நான் நடக்க விட மாட்டேன் யுவி… இந்தத் தடவ யாராலையும் உன்ன என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது.. என்ன பிரச்சினை வந்தாலும் நீ என் பக்கத்துல இருந்தா நான் அதை சமாளிப்பேன்… இது நான் உனக்கு குடுக்குற வாக்கு யுவி…” என்றான்‌.

 

இந்தத் தடவையாவது சஜீவ் தன் சத்தியத்தை காப்பாற்றுவானா?

 

இன்னும் விதி இவர்கள் இருவருக்கும் என்ன வைத்துக் காத்திருக்கிறதோ…

 

நித்ய யுவனி மயக்கத்தில் இருக்கும் போது தான் சஜீவ் இவ்வளவையும் கூறினான்.

 

அவள் எழுந்தால் தான் சஜீவ் பேசுவதையே காது கொடுத்துக் கேட்க மாட்டாளே.

 

சற்று நேரத்தில் சித்தார்த் வர, நித்ய யுவனியை பரிசோதிக்கச் சென்றவன் அவள் கழுத்திலுள்ள தாலியைக் கண்டு அதிர்ந்தான்.

 

பின் தோழியின் நிலை நினைவு வர அவசரமாக அவளைப் பரிசோதிக்க, 

 

சஜீவ்வோ பதட்டத்தில் இருந்தான்.

 

சித்தார்த், “பயப்பட எதுவுமில்ல… ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்து இருக்காள்… அதான் பீபி லோ ஆகி மயங்கி இருக்கா… நான் இன்ஜக்சன் போட்டு இருக்கேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல எந்திரிப்பாள்…” என்கவும் தான் சஜீவ்வுக்கு நிம்மதியாக இருந்தது.

 

சஜீவ், “ரொம்ப தேங்க்ஸ் சித்தார்த்…” என்க,

 

“தேங்க்ஸ் எல்லாம் வேணாம்… அவ என் ஃப்ரென்ட்… அவள பாக்குறது என கடமை..” என்ற சித்தார்த் சிறிய அமைதிக்குப் பின்,

 

“சடன்னா என்னாச்சு நிதுக்கு… இந்தத் தாலி எப்படி அவ கழுத்துல… என் கிட்ட கோயிலுக்கு போய்ட்டு வரேன்னு தானே சொல்லிட்டு போனா… என்ட் நீங்க எப்படி இங்க…” எனக் கேட்டான்.

 

சித்தார்த்தின் கேள்விக்கு சற்று நேரம் அமைதி காத்த சஜீவ் இது வரை நடந்தவற்றை அவனிடம் கூறினான்.

 

சித்தார்த், “விடுங்க ப்ரோ… இதான் நடக்கனும்னு இருந்திருக்கு… நிது உங்கள உடனே மன்னிக்கிறது கஷ்டம் தான்… ஏன்னா அவள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… ஆனா அவளுக்கு உங்க மேல இன்னுமே அளவுக்கதிகமான காதல் இருக்கு… நிச்சயமா கூடிய சீக்கிரம் ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திடுவீங்க…” என சஜீவ்விற்கு ஆறுதல் அளித்தான்.

 

சித்தார்த்தின் வார்த்தையில் மகிழ்ச்சி அடைந்த சஜீவ்,

 

“தேங்க்ஸ் ப்ரோ… என்ட் ஆல்சோ சாரி… நீங்க எப்பவும் நிது கூடவே இருந்ததால கடுப்பாகி கொஞ்சம் உங்கள திட்டி இருக்கேன்… பட் உங்கள மாதிரி ஒரு ஃப்ரென்ட் கிடைக்க என் யுவி ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்….” என்கவும் சித்தார்த் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்