Loading

காதலின் வலிக்கு

               மருந்து எதுவோ?

      காயம் பட்ட இதயத்தின்

            கண்ணீர் சுவடுகளா?

      காலம் தான் பதில் சொல்லுமா?

 

    தொலைதூரத்தில் புள்ளியாக தெரிந்துக் கொண்டே சிறிது நேரத்தில் மறைந்து போய் இப்பொழுது அந்த இடமே வெற்றிடமாய் காட்சியளித்தது. வெற்றிடம் வெளியே மட்டுமல்ல அவன் இல்லாது போக அவளின் இதயமும் வெற்றிடம் தான் . மற்றவர்களின் முன் அழ முடியாமல் தன்னுடைய கண்ணீரை இமைகள் கொண்டு தடைப் போட்டு வைத்து இருந்தாள். 

          எம்மா நுவலி நீ வாடா நம்ம வீட்டுக்கு போகலாம். உனக்கு எப்ப உங்க அப்பா அம்மாவை பார்க்க வேண்டும்னு தோணுதோ அப்போ உடனே வந்து பாருடா! இப்ப வீட்டுக்கு போகலாம் கிளம்பி ரெடியா இருடா . இந்த மனோன்மணி கிட்ட எதுவா இருந்தாலும் நீ பேசலாம். எனக்கு நீ வேற உதிரன் வேற இல்ல இருவரும் ஒன்றுதான் டா . மனோன்மணி பாட்டியை ஒரு சிறு புன்னகையுடன் தலையாட்டிவிட்டு அணைத்துக்கொண்டாள் நுவலி. 

       வசுமதிக்கு தன் மகளை எண்ணி சிறிது கலக்கமா இருந்தது. திருமணம் ஆகி ஒருவாரம் கூட முழுதாக முடியவில்லை அதற்குள்ள மாப்பிள்ளை வேலைக்கு போய் விட்டாரே! திருமணம் ஆன பெண்களுக்கு தன் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் தாலி கட்டிய கணவனைப் போல் வராது. திருமணம் ஆன பெண்களுக்கு தாய் வீடு சொர்க்கம் தான்! அந்த சொர்க்கத்தில் தன்னுடைய கணவன் இல்லாது போனால் அது அவர்களுக்கு நரகமே. தன் மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் கலங்கி போய் நின்றுக்கொண்டு இருந்தார். 

          வனஜா , கண்ணன் மற்றும் பாட்டி இவர்களுக்கு உதிரனின் பிரிவு பழகிப்போன ஒன்று. அதனால் இப்பொழுது அவன் அவர்களை விட்டு பிரிந்து சென்றது பெரியதாக அவர்களின் மனதை பாதிக்கவில்லை. அவர்களின் மனதில் இருந்தது எல்லாம் ஒன்று தான் “உதிரன்” பத்திரமாக திரும்பி வீட்டுக்கு வரவேண்டும் என்பதே!

அனைவரும் வீட்டின் உள்ளே சென்று உட்கார்ந்துக் கொண்டனர். 

      நுவலி, தன்னுடைய அறைக்கு சென்றவள் பையை எடுத்து அதில் தன்னுடைய துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். எல்லாத் துணிகளையும் எடுத்து வைத்தவளுக்கு ஒரு சேலை மட்டும் எடுத்து வைக்கவில்லை என்று தோன்ற அந்த சேலை என்னவென்று யோசிக்க ” அந்த சேலை தன்னுடைய திருமண முகூர்த்த சேலை என்பது ஞாபகம் வந்தது அவளுக்கு”. அந்த சேலை எங்கே வைத்தேன்? இந்த துணி அலமாரியில் சேலைகளுடன் தானே வைத்தேன் என நினைத்துக்கொண்டே தேட ஆரம்பித்தவள் ,அவளின் அறை முழுவதும் தேடிவிட்டாள் ஆனால் சேலை மட்டும் கிடைக்க வே இல்லை. நான் தானே சேலையை மடித்து வைத்தேன் அனோட வேட்டை சட்டை கூட. நான் வைத்த இடத்தில் அவனோட வேட்டி சட்டை இருக்கு ஆனா என்னுடைய சேலை மட்டும் காணவில்லை. அச்சச்சோ என்னுடைய மண்டை காயுதே! வேற சேலை காணாமல் போய் இருந்தால் கூட பரவாயில்லை இது என்னுடைய திருமண சேலை ஆச்சே! அந்த சேலையை யாரும் களவாடி கொண்டு போய் இருக்க மாட்டாங்க அது ஒன்னும் விலை உயர்ந்த சேலை கிடையாது. வெளியே கொண்டு போய் விற்றாலும் யாரும் வாங்க மாட்டாங்க ஆனா காணாமல் போய் விட்டது. நம்ம வீட்டில் வந்து யாராலும் திருட முடியாது எந்நேரமும் யாராவது நம்ம வீட்டில் இருப்பாங்களே! அந்த சேலை காணவில்லைனு சொன்னால் எல்லோரும் ஏதோ அபசகுணம் மாதிரி எதாவது சொல்லுவாங்க. அந்த சேலை என்னோட கணவனை என்னிடம் இணைத்த சேலை ஆயிற்றே! அந்த சேலை என்னுடைய பொக்கிசம் அந்த சேலையை யாரு எடுத்துப் போய் இருப்பா ? அவள் யோசிக்க …. யோசிக்க கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது. கல்யாண சேலை காணமல் போனால் கணவனுக்கு எதாவது தவறாக நடந்து விடுமா? அவளின் எண்ணங்கள் ஏதோதோ நினைக்க. அவளின் எண்ணங்களை நிறுத்தும் விதமாக உதிரன் போன் செய்து இருந்தான்.அவனிடம் தன்னுடைய வருத்தத்தை காட்ட வேண்டாம் என நினைத்தவள் அவனிடம் சாதரணமாக பேசினாள். அவளின் குரலில் இருந்த மாற்றத்தை கண்டுப் பிடித்தவன் “ஏன் இவளுடைய குரல் ஒரு மாதிரியாக இருக்கு? நாம வரும்போது அவளை சமாதானம் செய்துவிட்டு தானே வந்தோம் . அவ என்னை நினைத்து இப்ப அழவில்லை , அவ எனக்காக அழுதாள் என்றால் என்கிட்ட நேரடியாகவே அழுது விடுவாள் இப்படி என்கிட்ட அவளுடைய வருத்தத்தை மறைக்க வேண்டும்னு நினைக்க மாட்டாள் ” என யோசித்துக்கொண்டு இருக்க,

       நுவலி, உதி…. உதிரா அவனின் குரல் தீடீரென கேட்காமல் போக சட்டென்று சிறு பயம் தொற்றிக்கொண்டது அவளுக்கு. 

           “ஆங்” நான் லைன்ல தான்டி இருக்கேன். உனக்கு என்னாச்சு? புதுசா இருக்கு எனக்கு நீ என்கிட்ட ஒரு விசயத்தை மறைக்க வேண்டும்னு நினைப்பது. நீ ஏதாவது ஒரு விசயத்தை என்கிட்ட மறைத்தாலே அதுவே உன்னை காட்டி கொடுத்துவிடும். நமக்குள்ள எந்த ஒளிவு மறைவு ம்ம் இல்லனு உனக்கு தெரியும் தானே! என்கிட்ட உன்னுடைய வருத்தத்தை இப்பவே மறைக்க வேண்டும்னு நினைத்து விட்டாய் தானே! நான் உன் கூட இருக்கும்போது மட்டும்தான் என்கிட்ட உன்னுடைய வருத்தத்தை சொல்லுவியோ? நான் உன்னைவிட்டு தொலைவாக வந்ததும் என்கிட்ட உன்னுடைய பிரச்சனைகள் எதுவும் சொல்ல மாட்டாய் தானே! ஒருவேளை நான் உனக்கு ஒரு நல்ல கணவனா இருக்கவில்லையா மா? அவனின் குரலில் சற்று வருத்தம் எட்டிப்பார்க்க.

       நுவலி, நீயா எதாவது நினைத்து உன்னை கஷ்டப்படுத்தாதே மாமா. இது நீ வருத்தப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் கிடையாது. என்னுடைய பிரச்சனையை உன்கிட்ட சொல்லாமல் வேற யார்கிட்ட சொல்ல போறேன் சொல்லு? உன்னை விட என்னை நல்லா புரிந்துக்கொண்ட மனிதன் வேற யாரு மாமா.அது என்ன விசயம் என்றால் என்னுடைய சேலை ஒன்று காணவில்லை. 

          சேலை காணவில்லை என்றும் அவனுக்கு புரிந்து விட்டது. கொஞ்சம் அவளுடன் விளையாடி பார்ப்போம் என்று நினைத்தவன், ” சேலை தானே காணமல் போய்விட்டது அதுக்காகவா இவ்வளவு தூரம் வருத்தம் படுற?” உனக்கு நான் வேற சேலை வாங்கி தரேன் டி. 

         மாமா புரியாம பேசாதே! அது நம்ம கல்யாண சேலை .அந்த சேலை காணவில்லைனு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. அந்த சேலையை யார் எடுத்துக்கொண்டு போய் இருப்பாங்க? 

          உதி,கல்யாண சேலை காணாமல் போனா போகட்டும் விடு டி. அதுக்காகவா இம்புட்டு தூரம் வருத்த படுற ? அந்த சேலை ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா? மாமா உனக்கு ஐம்பதாயிரத்திலே சேலை எடுத்து தரேன் மா.

            பைத்தியம் மாதிரி பேசாத மாமா. நீ ஐந்து கோடிக்கே சேலை எடுத்து கொடுத்தாலும் நம்ம கல்யாண சேலைக்கு ஈடு ஆகாது. அந்த சேலை தானே! நம்ம இருவரையும் ஒன்றாக வாழ்க்கை பந்தத்தில் இணைத்தது . இந்த உலகத்திலே விலை உயர்ந்த சேலை வாங்கி கொடுத்தாலும் நம்ம கல்யாண சேலைக்கு ஈடு ஆகாது மாமா. அந்த சேலை காணாமல் போனதால உனக்கு எதாவது தப்பா நடக்குமோ னு பயமா இருக்கு மாமா. இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி வருது.

             இந்த சேலைக்காக நீ இம்புட்டு தூரம் வருத்தப்படுவனு தெரிந்து இருந்தால் நான் அந்த சேலையை எடுத்து வந்து இருக்கவே மாட்டேன் டி. நம்ம ரெண்டு பேரையும் உணர்வுகளால் இணைத்த இந்த சேலை என் கூட இருப்பது நீயே என கூட இருப்பது போல தோன்றியது. அதனால் தான் அந்த சேலையை எடுத்துக்கொண்டு வந்தேன். 

           அவளின் மனதின் உள்ளே ஒரு வித நிம்மதி பரவ அவனின் காதலை எண்ணி உள்ளுக்குள் பெருமிதம் கொண்டாள். ஆனாலும் இவ்வளவு நேரம் வேண்டும் என்றே நம்மிடம் விளையாடி இருக்கான் என நினைக்கும் போது சற்று அவளுக்கு கோவம் எட்டிப்பார்த்தது. “அடேய் தீவெட்டி தலையா நீ என்னையே கடுப்பேத்தி பாக்குற ? நீ மட்டும் என்னுடைய கையில் சிக்குன அப்ப இருக்குடா”.

          என்னடி பொசுக்குனு இந்த மாமாவை தீவெட்டி தலையானு திட்ற? என்னைவிட உனக்கு சேலை தான் ரொம்ப முக்கியமா போச்சா? போடி நான் வருத்தத்துடன் போனை வைக்குறேன்.

           ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி நடிக்காத டா. உன்னைவிட எனக்கு இந்த உலகத்தில் எதுவும் முக்கியம் இல்லை தான் ஆனா நம்ம இருவரையும் கல்யாண பந்தத்தில் இணைத்த சேலை இல்லை என்றதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அந்த வருத்தம் கூட உனக்காக என்று வரும்போது பெரியதாகிறது. நீ இப்ப என்ன பண்ற டா மாமா?

          பிளாட்பாரத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருக்கேன். உன்னுடைய அண்ணன் இரயிலில் உட்கார்ந்துக் கொண்டு என்னுடைய தங்கச்சிகிட்ட கடலை போட்டுக்கொண்டு இருக்கான்.

சரிடி இரயில் எடுக்க போறாங்க நான் போய் சீட்ல உட்கார்ந்துக் கொண்டு போன் பண்றேன் “லவ் யு டி வாயாடி”.

         சரிடா மாமா. “லவ் யு டு “. இருவரும் போனை கட் செய்துவிட்டு தனக்கு தானே புன்னகை செய்துக் கொண்டனர். நுவலிக்கு இப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது . கொஞ்சம் தெளிந்த முகத்தோடு தன்னுடைய துணிகளை எடுத்து பையினுல் வைத்தாள். மறக்காமல் அவனின் வேட்டி சட்டையும் எடுத்து வைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே பையை தூக்கிக்கொண்டு வந்தாள். 

           போனிலே குடும்பம் நடத்தும் தன்னுடைய நண்பனை காண சிரிப்பு தான் வந்தது உதிரனுக்கு. உதிரனை கண்டதும் “நான் அப்புறம் போன் பேசுறேன் உதி வந்துவிட்டான்” என்று கூறி போனை கட் செய்தான் ராம். 

     உதி, என்னடா மச்சான் போனிலே குடும்பம் நடுத்துற போல என்று அவனின் முதுகில் ஒரு செல்ல அடி குடுக்க.

         ராம், உனக்கு என்னடா? நீ லைசென்ஸ் வாங்கிவிட்ட .நான் எல்லாம் அப்படியா? நான் லைசென்ஸ் வாங்குற வரைக்கும் போன்ல தான் குடும்பம் நடத்த வேண்டும் போல என்னப் பண்றது என சலிப்பாய் கூற.

        உதி, “அடேய் , உனக்கு கல்யாணத்திற்கு முன்பே காதலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கு டா அதை சந்தோசமா அனுபவிடா. கல்யாணத்திற்கு முன்பே காதலிக்கும் வாய்ப்பு கிடைப்பது எல்லாம் வரம் டா அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது கல்யாணம் ஆன பிறகுதான் புரியும். அதனால் நீ என்ன பண்ற உன்னுடைய காதல் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உன்னுடைய மனதிற்குள்ளே சேகரித்து வைத்துக்கொள். 

          ராம், எப்பா போதும் டா சாமி. நானே கொஞ்சம் தெளிவா இருக்கேன் என்னை நீ இன்னும் குழப்பாதே! அதுக்குதான் கல்யாணம் ஆன பசங்க கூட எல்லாம் சேர கூடாது கருத்துச் சொல்லியே ஆளை காலி பண்ணி விடுவாங்க.

        டேய் , போதும் டா ஓவரா பண்ணாதே!

இரயில் கிளம்ப போகிறது என்று அறிவிக்க ” இரண்டு நண்பர்களும் பாச மழை பொழிந்து கொண்டனர்”.

        ராம், மச்சான் நீ பத்திரமா இருடா. இதுவரைக்கும் நாங்க மட்டும் தான் உன்னை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம் இனிமே என்னுடைய தங்கச்சியும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பா. நீ நாட்டை மட்டுமல்ல உன்னையும் சேர்த்து பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை இருக்கு டா. உனக்காக நாங்க எல்லோரும் காத்து இருப்போம் எங்க தளபதியா நீ எப்போதும் இருக்கனும் டா.

        உதி, என்னடா! இவ்வளவு நேரம் என்னை கருத்து சொல்லாதனு சொல்லிட்டு நீ கருத்து மழையா பொழிகின்ற? படம் நிறைய பார்கின்றாயோ?

         எப்ப பாரு உனக்கு விளையாட்டு தான்டா!.

       உதி, உன்னுடைய தங்கச்சியை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் டா. அவ எப்போதும் தனிமையை உணரக் கூடாது .அடிக்கடி நீயும் சுமதியும் வந்து அவளை வெளியே கூட்டி போங்க .

           நீ இதை எல்லாம் சொல்லிதான் நாங்க செய்ய வேண்டுமா? நாங்க இருக்கோம் டா . எப்படி என்னுடைய தங்கச்சியை பத்திரமா பார்த்துக் கொள்கின்றேன் என்று பார். இருவரும் ஆர தழுவிக் கொண்டு விடை பெற்றனர்.

ராம், பிளாட்பாரத்தில் இருந்து கையை அசைக்க, உதி ரயிலின் உள்ளே இருந்து கையை அசைத்தான். அந்த இரயிலோ ஆடி அசைந்தபடி ராம் கண்ணை விடு சென்று மறைந்தது.

         ராம் வீட்டிற்கு வர அங்கு பாச போராட்டமே நடந்துக் கொண்டு இருந்தது. சுமதியோ இதை எல்லாம் எப்படி கையாளுவது என்று தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

        வசு, தன்னுடைய சம்பந்தி வீட்டினர்களைப் பார்த்து “என்னுடைய பொண்ணை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் சம்மந்தி”. அவ வளர்ந்து இருக்காளே தவிர அவளுக்கு இன்னும் மனசு அளவில் இன்னும் முதிர்ச்சி வரவில்லை.

நுவலி, தன்னுடைய மனதிற்குள் இந்த அம்மா நம்மளை பைத்தியம்னு சொல்றாங்களா! 

           வனஜா, நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க! அவ உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பொண்ணு . எங்க வீட்டு மகாலட்சுமி , என்னுடைய பையன் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டு இருந்தான் நுவலியோட போட்டோ பார்க்கும் வரையில், இவளை எப்ப பார்த்தானோ அப்பவே தானும் ஒரு குடும்பஸ்தனாக வாழ வேண்டும் என்ற நினைப்பு அவனுக்குள்ள வந்துவிட்டது. எங்க குடும்பத்தை அழகாக்க வந்த என்னுடைய பொண்ணு நுவலி. அவளைப் பத்தி நீங்க எப்போதும் கவலைப் படாதீங்க சம்மந்தி. வசுமதின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்க்க ,

        நுவலி, எப்ப பாரு என்ற விசயத்தில் தைரியமாக இருக்கும் அம்மாவே கண்ணீர் விடுறாங்க அப்போ என்ற அப்பா என்னப் பண்ண போறாரே என்று நினைத்தவள் தன்னுடைய தந்தையைப் பார்க்க அவரோ தன் மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு உச்சிமுகர்ந்து அவளின் தலையில் ஒரு முத்தம் வைத்தார். 

          ரத்னம், நீ எப்போதும் சந்தோசமா இருக்கனும் அதுதான் உன்ற அய்யனுக்கு வேண்டும் மா.நீ என்னை விட்டுப் போறது என்ற உசுறே போற மாதிரி இருக்கு ஆனா என்னப் பண்ணுவது? பெண்ணைப் பெற்ற எல்லா பெற்றோர்களுக்கும் இது நடந்தே தீரும். நீ எப்ப எங்களை பார்க்க வேண்டும்னு தோணுதோ அப்ப ஒரு போன் பண்ணு உன்ற அம்மாவும் நானும் வந்துவிடுறோம். தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் கண்ணத்தில் முத்தம் வைத்தவள் சுமதியைப் பார்த்து ஒரு புன்னகைச் செய்து விட்டு காரில் உட்கார்ந்துக் கொண்டாள். காரில் அனைவரும் உட்கார்ந்தவுடன் ராம் காரை ஓட்டிக்கொண்டு சென்றான். மாமியார் வீட்டிற்கு செல்லும் தன் மகளை பிரிந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் ரத்னத்தை வருத்தம் அடைய செய்ய , வசுமதி அவரை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். “ஆறுதல் வேண்டும் என்று கேட்டாமலே ஆறுதல் அளிக்கும் உறவு தான் மனைவி” தன்னுடைய மனைவியை பெருமிதத்துடன் பார்த்தார் ரத்னம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்