அத்தியாயம் 3
அபராஜித் விளையாட்டாக துஷ்யந்த்தை வம்பிழுக்க, அதற்கு மறுமொழியாக துஷ்யந்த்தும் அவன் மீது பேனாவை எரிய, அதிலிருந்து தப்பிக்க எண்ணி அபராஜித் நகர, அந்த பேனாவோ அதன் இலக்கிலிருந்து விலகாமல், கதவைத் திறந்து வந்த திவ்யான்ஷியின் மீது பட்டு கீழே விழுந்தது.
அதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. இலகியிருந்த துஷ்யந்த்தின் முகம் திவ்யான்ஷியைக் கண்டதும் இலக்கத்தை தொலைத்தது. காலையிலிருந்து கட்டுப்படுத்தி வைத்த கோபம் நொடிப்பொழுது வெளியேற, முயன்று அதை மீண்டும் கட்டுப்படுத்தி நிமிர்ந்தாள் திவ்யான்ஷி.
அங்கிருந்தவர்களில் தன் பாவனையை மாற்றாமல், அதிர்ச்சியை அப்படியே வெளிப்படுத்தி நின்றவன் அபராஜித் மட்டுமே!
ஒரு பெருமூச்சுடன், “சார், மீட்டிங் வித் ஆல் சீஃப்ஸ் இஸ் இன் டென் மினிட்ஸ்.” என்று தான் வந்த வேலையை செய்ய, துஷ்யந்த்தும் அவளைப் பார்த்து, “காட் இட் மிஸ். திவ்யான்ஷி. நீங்க மீட்டிங் ரூமை ரெடி பண்ண சொல்லுங்க. ஐ வில் பீ கம்மிங் இன் அனதர் ஃபைவ் மினிட்ஸ்.” என்றான்.
அதன்பிறகு இருவரும் அவரவரின் வேலையில் மூழ்க, அபராஜித் தான் விழித்துக் கொண்டு நின்றான்.
“அபி, உனக்கு வேலை இல்லையா?” என்று மடிக்கணினியிலிருந்து தன் பார்வையை அகற்றாமலேயே வினவ, ‘இதோ அந்நியனாக ஆரம்பிச்சுட்டான். இனி, இங்க இருக்குறது சேஃப் இல்ல.’ என்று நினைத்தவன், “இதோ போறேன் டா.” என்று கூறியபடி அவசரமாக வெளியேறினான்.
அவன் வெளியேறுவதற்காகவே காத்திருந்ததை போல, அவனின் அலைபேசி ஒலிக்க, எடுத்து பார்த்தவனின் முகம் மலர்ந்தாலும், அவனின் வாயோ, “அண்ணன் கிட்டயிருந்து தப்பிச்சு வெளிய வந்தா, தங்கச்சி கிட்ட மாட்டிக்கிட்டேன்!” என்று முணுமுணுத்தது.
தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருக்க, “ப்ச், எடுக்குற வரைக்கும் கால் பண்ணிட்டே இருப்பா. எடுத்ததும் என்ன சொல்றோம்னே கேட்காம திட்ட ஆரம்பிச்சுடுவா, ராட்சஸி!” என்று முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை ஏற்றான் அபராஜித்.
“யாரை டா ராட்சஸின்னு சொல்ற, எரும?” என்று அபராஜித்தின் புலம்பலை மெய்யாக்கிபடி பேச ஆரம்பித்தாள் அவள்.
‘பாம்பு காது, இதெல்லாம் சரியா கேட்கும்!’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவளை சமாளிக்கும் பொருட்டு, “ராட்சஸியா? யாரு அது ராட்சஸி அஸ்மி மா?” என்று கூற, “கேவலமா சமாளிக்காத!” என்று எதிர்முனையிலிருந்து மறுமொழி வந்தது.
“க்கும், இப்படி திட்டத்தான் கூப்பிட்டியா?” என்று முயன்று கோபத்தை வரவழைத்த குரலில் அபராஜித் வினவ, “இல்ல இல்ல, எல்லாம் உன்னால தான்! சொல்ல வந்ததை மறந்து தேவையில்லாம பேசிட்டு இருக்கேன். இங்க எல்லா வேலையும் முடிஞ்சது. இன்னும் ஒரு வாரத்துல இந்தியா வந்துடுவேன். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.” என்றாள் அபியின் அஸ்மி.
“ஹே என்ன திடீர்னு சொல்ற? டிக்கெட் எல்லாம் போட்டுட்டியா? முன்னாடியே சொல்லியிருந்தா நானே டிக்கெட் போட்டுருப்பேன்ல.” என்று அபராஜித் பரபரக்க, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! நான் லண்டன் வந்து வருஷக்கணக்காகுது, ஒரு தடவை இங்க வந்து என்னை பார்த்தியா டா பக்கி! அட்லீஸ்ட், லண்டன் போறப்போ ஏர்போர்ட்டுக்காவது சென்ட்ஆஃப் பண்ண வந்தியா? கேட்டா, பார்க்காமலேயே காதல்னு உருட்ட வேண்டியது.” என்றாள்.
‘ஐயோ, இதை எத்தனை தடவை சொல்லிக் காமிப்பாளோ!’ என்று நொந்தபடி, “அஸ்மி மா, நான் பாவம். டிக்கெட் போடுறேன்னு சொன்னது தப்பா?” என்று வினவ, “கொஞ்சம் ஓரமா போய் கொஞ்சலாம்.” என்று அவனிற்கு பின்னிலிருந்து கேட்டது ஒரு குரல்.
திடீரென்று கேட்ட குரலில் அதிர்ந்தவன் திரும்பிப் பார்க்க, அங்கு நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தது திவ்யான்ஷி தான். அவனின் அதிர்ச்சியைக் கண்டு மேலும் சிரிக்க முயன்ற உதடுகளை இழுத்துப் பிடித்து அடக்கினாள் அவள்.
அவனை அதிர்ச்சியிலிருந்து வெளிக்கொண்டு வர, “உங்க பிரெண்டு வர நேரம், இப்படி அவரோட ரூம் வாசல்ல நீங்க அடிப்பிரதட்சணம் பண்ணிட்டு இருக்கீங்க.” என்று சுட்டிக்காட்ட, அப்போது தான் அவன் இருக்கும் இடத்தை உணர்ந்தான்.
“அச்சோ!” என்று கத்தியவன், பின் சத்தத்தைக் குறைத்து, “தேங்க்ஸ் மா. அவன் இதை பார்த்திருந்தா இந்நேரம் லெக்சர் எடுக்க ஆரம்பிச்சுருப்பான்.” என்று திவ்யான்ஷியிடம் கூறியவன்,
‘அவன் தங்கச்சிகிட்ட கடலை போட்டுட்டு இருக்கேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“நோ மென்ஷன் அண்ணா.” என்றவள் அங்கிருந்து நகர, அப்போது அலைபேசியில் அஸ்மியின் குரல் கேட்டது. “டேய், யாருடா அந்த பொண்ணு?” என்று அஸ்மி வினவ, “இருடி உங்க அண்ணன் வந்துடப்போறான்.” என்று வேகமாக அங்கிருந்து வெளியே வந்தவன், வாகன தறிப்பிடத்திற்கு வந்த பின்னர் தான் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“இன்னும் எத்தனை நாள் தான் அண்ணா கிட்ட மறைக்க போற அபி?” என்று வினவ, “எக்ஸ்கியூஸ் மீ மேடம், ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன், மறைக்க போற இல்ல மறைக்க போறோம். எப்படி எப்படி? நீங்க சேஃபா லண்டன்ல போய் உட்கார்ந்துக்குவீங்களாம். நான் இங்க உங்க அண்ணன்கிட்ட மாட்டிட்டு முழிக்கணுமா? என்ன ஒரு நல்ல எண்ணம்! நீங்க தான் அடுத்த வாரம் வருவீங்களே, அப்போ சொல்லிக்கலாம்.” என்றான் அபராஜித்.
“சரி சரி, அந்த பொண்ணு யாருன்னு கேட்டேனே?” என்று பேச்சை மாற்றினாள் அஸ்மி. “அது உங்க அண்ணனோட புது பி.ஏ.” என்று அபராஜித் கூற, “அந்த வாய்ஸ் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.” என்றாள் அஸ்மி.
“எது, போன்ல கேட்ட அந்த கொரகொர வாய்ஸ் உனக்கு ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கா?” என்று அபராஜித் கூறும்போதே, அவனின் அலைபேசிக்கு இன்னொரு அழைப்பு வர, “ஹே மிகா மா, இன்னொரு கால் வருது, நான் நைட் பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்தபடி தன் வேலையை பார்க்கச் சென்றான்.
*****
கலந்துரையாடல் அறையில் நடந்து கொண்டிருந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டாலும் துஷ்யந்த்தின் கண்கள் நொடிக்கு ஒருமுறை திவ்யான்ஷியை படம்பிடித்துக் கொண்டன.
அவளோ எங்கும் கவனத்தை சிதறவிடாமல் தன் குறிப்பெடுக்கும் பணியை தீவிரமாக செய்து கொண்டிருந்தாள். அந்நிறுவனத்தின் தலைவன் தான் கவனத்தை சிதறவிட்டுக் கொண்டிருந்தான்!
சில நொடிகளிலேயே தன் கவனச்சிதறலை கட்டுக்குள் கொண்டு வந்தவன், ‘துஷ்யந்த், என்னடா பண்ணிட்டு இருக்க?’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, அதற்கான பழியையும் திவ்யான்ஷியின் மீது தூக்கிப் போட, அவனின் மனமே, ‘இது உனக்கே ஓவரா இல்லயா?’ என்று வினவ, அதையெல்லாம் கிடப்பில் போட்டவனாக, கலந்துரையாடலில் மீண்டும் கவனத்தை செலுத்தினான்.
ஒருவழியாக அந்த கலந்துரையாடல் முடிவிற்கு வர, துஷ்யந்த்திற்கு தலைவலி வந்தது தான் மிச்சம்!
அவன் இங்கு இல்லாத ஆறு மாத காலங்களில் நடந்தவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்காக தான் இந்த கலந்துரையாடலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது அவனின் வழக்கமே.
அவன் நாடுநாடாக கிரிக்கெட் விளையாட சுற்றிவிட்டு, மீண்டும் அலுவலகம் திரும்பும்போது, இது போல கலந்துரையாடல் மூலம் தான் பல தகவல்களை தெரிந்து கொள்வான்.
என்னதான், தொழிலை பார்த்துக்கொள்ள செந்தில்நாதனும் அபராஜித்தும் இருந்தாலும், அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக தானும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பான் துஷ்யந்த். அது அவனின் அன்னையின் கோரிக்கை கூட.
ஆனால், இப்போதோ அவனால் அந்த கலந்துரையாடலில் முழுமனதாக கலந்துகொள்ள முடியவில்லை. ஆறு மாத இடைவிடாத விளையாட்டால் உண்டான அலுப்போ, இல்லை மனதில் உண்டான வெறுமையோ, இல்லை இதுவரையிலும் மனதை அலைபாய விடாமல் கட்டுக்கோப்பாக இருந்தவனை ஒரே நாளில் சிந்தை கலங்க செய்த பெண்ணவளோ, இவற்றில் அவனின் தவிப்பிற்கான காரணம் என்னவென்று தான் புரியவில்லை.
அனைவரும் அந்த அறையிலிருந்து வெளிவந்த பின்னரும் துஷ்யந்த் உள்ளேயே இருக்க, திவ்யான்ஷி உள்ளே நுழைய முற்பட்டாள்.
அங்கு அவன் மேஜையில் முழங்கையை ஊன்றி, கரங்களில் தலையை வைத்து அமர்ந்திருந்தான்.
‘ஹ்ம்ம், ஆறு மாசத்துல நடந்ததை ஒரே நாள்ல தெரிஞ்சுக்கணும்னா எப்படி? கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்கணும்!’ என்று மனதிற்குள் நினைத்தவள், அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி, அங்கிருந்து வெளியேறினாள்.
*****
திவ்யான்ஷி வந்ததோ, அவனை பார்த்துவிட்டு சென்றதோ அறியாத துஷ்யந்த், தன் நினைவுகளில் மூழ்கியிருந்தான். அவனின் நினைவுகளை மொத்தமாக ஆக்கிரமித்திருந்தது அவனின் அன்னை தான்.
அறியாத வயதில் விட்டுச்சென்ற தந்தையின் இழப்பைக் காட்டிலும், டீனேஜ் தாண்டியும் துணையாக நின்ற அன்னையின் இழப்பு அவனை இறுகச் செய்திருந்தது.
புகழேந்தி – கனிமொழி தம்பதியரின் மகன் தான் துஷ்யந்த். அவனின் தங்கையான அஸ்மிகா பிறந்த சில நாட்களிலேயே, எதிரிகள் ஏற்படுத்திய விபத்தினால் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார் புகழேந்தி.
அவரின் மறைவிற்கு பின்னர், பொறுப்பேற்ற கனிமொழியை புகழேந்தியின் குடும்பத்தினரே ஏமாற்ற, அவரால் தொழிலை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற சொத்துக்களை எல்லாம் புகழேந்தியின் அண்ணன், தங்கை என்று அனைவரும் பங்குபோட்டுக் கொண்டனர்.
அந்த நிகழ்விற்கு பிறகே, மனிதர்களின் குணத்தை கணிக்க ஆரம்பித்தார் கனிமொழி. அதை தன் மகனிற்கும் கற்றுத்தந்தார். மகன் தொழிலை ஏற்கும்போது அவனுடன் தான் இருக்க மாட்டோம் என்று அப்போதே அவருக்கு தோன்றியிருக்கும் போலும்!
அன்னையின் மறைவிற்கு பின்னர், தன் கனவான கிரிக்கெட்டின் வழி செல்வதா, இல்லை பல வருடங்களாக அன்னை காப்பாற்றி வந்த தொழிலை கையில் எடுப்பதா என்று துவண்டிருந்தபோது, அவனிற்கு துணையாக வந்தவர் தான் அவனின் தாய்மாமா செந்தில்நாதன்.
அதன்பிறகான அவன் வாழ்வில், பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன. அந்த நிகழ்வுகளின் பிடியில் அப்போது செல்ல விரும்பாதவன், அவன் வழக்கமாக கேட்கும் ஒலிப்பதிவை கேட்க ஆரம்பித்தான்.
ஏனோ, அதைக் கேட்கும்போது அவனின் மனதிலுள்ள பாரம் குறைவது போலிருந்தது. அதற்கான காரணத்தை இதுவரை அவன் எண்ணிப் பார்த்ததே இல்லை. எண்ணிப் பார்க்கும் சமயம் வரவில்லையோ!
*****
கால் மணி நேரம் கழித்து வந்து பார்த்தவள் கண்டது, அலைபேசியில் எதையோ கேட்டுக் கொண்டிருந்த துஷ்யந்த்தை தான்.
அப்போது அவளிற்கு நினைவிற்கு வந்ததெல்லாம், ஷர்மி அவளிடம் கூறியது தான்.
“அவருக்கு என்ன, எப்போ பார்த்தாலும் தனியா அவரோட மொபைலோட உட்கார்ந்து, அவரோட இந்நாள் காதலியோட வாய்ஸ் ரெக்கார்டிங்கை கேட்டுட்டு இருப்பாராம்.”
‘இந்நாள் காதலி’ என்ற பதத்தை நினைத்தவளிற்கு, என்ன முயன்றாலும் மனதில் உண்டாகும் வலியை சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு பெருமூச்சுடன், “சார்…” என்று அழைத்து அவனின் மோனநிலையைக் கலைத்தாள். திவ்யான்ஷியின் குரலில் நிமிர்ந்து பார்த்தவனின் முகம் தெளிவாக இருக்க, அந்த தெளிவிற்கான காரணம் அந்த ஒலிப்பதிவு என்று எண்ணியவளிற்கு அந்த எண்ணம் கசப்பை கொடுக்க, அதை விடுத்து தான் வந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
“சார், சைட்ல இன்ஜினியருக்கும் லேபர்ஸுக்கும் ஏதோ பிரச்சனைன்னு போன் வந்துருக்கு. செந்தில்நாதன் சார், கஸ்டமர் மீட்டிங்ல பிஸியா இருக்காரு. அபராஜித் சார் போனும் பிஸியா இருக்கு.” என்று கூற, “ஹ்ம்ம், ஓகே நானே வரேன்.” என்று கிளம்பினான் துஷ்யந்த்.
அவன் பின்னே தன் வேதனையை மறைத்துக் கொண்டு, தான் இங்கு வந்த காரணத்தையும் மறந்து விட்டு சென்றாள் திவ்யான்ஷி.
*****
“ஹலோ, என்ன இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன் ஊருக்கு வந்துட்டாரு போல?” என்று கேட்டவளின் குரலில் இகழ்ச்சி தான் நிறைந்திருந்தது.
மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஹ்ம்ம், உன் பிரெண்டு என்ன பண்ணிட்டு இருக்கா? அவளுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டாளா?” என்று வினவினாள்.
“….”
“அவ்ளோ தான் உனக்கு தெரிஞ்சுது. எனக்கு வந்த நியூஸ் படி, எதுக்கு போனான்னு மறந்துட்டு உண்மையான பி.ஏ மாதிரி அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கா. யூஸ்லெஸ்! இவளை வச்சு அவனைப் பழிவாங்கனும்னு நினைச்சா, இவ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா போல.”
“….”
“ப்ச், சரி நீ அவளை தூண்டுற மாதிரியே பேசு. பேக்கப்புக்கு வேற வழியும் யோசிப்போம். அட் எனி காஸ்ட், அவனை அவமானப்படுத்தியே ஆகணும்! எவ்ளோ தைரியம் இருந்தா, என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்வான்?” என்றவள் பல கெட்ட வார்த்தைகளால் அவனிற்கு அர்ச்சனை செய்ய, மறுமுனையிலிருந்து என்ன சொல்லப்பட்டதோ, “சரி, நீயும் கேர்ஃபுல்லா இரு.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
ஏதோ யோசித்தவளின் சிந்தனையைக் கலைத்தது, “மிஷ்டி டியர்…” என்ற குரல். அத்தனை நேரம் தீவிர பாவனையுடன் காணப்பட்ட அவளின் முகம் நொடிப்பொழுதில் இயல்பாக மாறியிருந்தது.
“ஹாய் சித்து…” என்று மையலாக சிரித்தபடி அவனை லேசாக அணைத்து நின்றாள்.
பெண்ணவளின் வஞ்சமுகம் அறியாதவன், தன் காதலிற்கு சற்றும் குறையாத காதலை அவள் பொழிவதாக எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கினான்.
அவளின் மெய் முகம் காணும்போது, அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்குமோ?
காதலி வருவாள்…
ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 இதோ “துஷ்யந்தனின் காதலி” அடுத்த எபியோட வந்துட்டேன்… படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க…😁😁😁