மருத்துவமனை வளாகம்.. மரத்தடியில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் கண்மூடி அமர்ந்திருந்த பெண்ணவளுக்கு தலைவலியும் தூங்காததால் கண் எரிச்சலும் ஒரு சேர சேர்ந்து அவளை படாய்படுத்த, நானும் இருக்கிறேன்.. என்பதை போல் பசியில் வயிறும் கபகபவென்று எரிய தொடங்கியது..
வயிற்றை கவனிக்க அவளின் மூளை கட்டளை இட்டாலும் அதற்கு கால்கள் ஒத்துழைக்க மறுத்து சண்டிதனம் செய்ய, “சத்யா” என்று வந்த குரலில் கஷ்டப்பட்டு இமைகளை பிரித்தெடுத்து யாரென்று பார்த்தாள்..
அங்கு அவளின் மாமியார் ராஜம்மாள் தான் சாப்பாட்டு கூடையுடன் நின்றிருந்தார்.. அதை கண்டு இதழில் விரக்தி புன்னகை படர்ந்தாலும் “சொல்லுங்க..” என்றபடி எழுந்து நின்றாள்..
“புள்ளைய தனியா விட்டுப்புட்டு இங்கன என்னடி பண்றே?” என்று கண்டிப்பும் எரிச்சலுடனும் அவர் கேட்க, எப்போதும் போல் மௌனமாகி சேலை முந்தானையை திருகியபடி நின்றிருந்தாள் சத்யா..
“சரி சரி இந்தா.. உனக்கு சாப்பாடும் புள்ளக்கு தேவையானதும் எடுத்து வெச்சுருக்கேன்.. இப்படி நீ புள்ளையை விட்டுப்புட்டு தனியா இருக்காத..” என்று ராஜம்மாள் கூறியதும் தலையை அசைக்க, அவள் மருத்துவமனையினுள் நுழைந்ததை உறுதிப்படுத்திய பிறகே அங்கிருந்து நகர்ந்தார்..
அறையினுள் வாடிய கொடியாய் கிடந்த குழந்தையை பார்க்கவும் மனது கனத்துதான் போனது.. டைபாய்டு காய்ச்சலால் குழந்தையின் துள்ளலும் துடிப்பும்.. ஒரே இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடி கொண்டிருக்கும் சுறுசுறுப்பும் முற்றிலும் அடங்கி போயிருந்தது..
இதில் தன் மகனின் நினைவும் அலைக்கழிக்க, “சரத் தங்கம் அம்மா இன்னும் ரெண்டு நாளைல வந்துருவேன்டா..” என்று முணுமுணுத்து கொண்ட அவளின் இதழுக்கு இணையாக இமைகளும் நீர்துளிகளை கோர்த்தது..
தன் மகனின் எண்ணத்தில் ஆழ்ந்திருந்த சத்யாவை “பெரிம்மா..” என்று குழந்தையின் குரல் கலைத்து நிகழ்காலத்திற்கு அழைத்து வர, “சொல்லுடா ப்ரீத்தி என்ன வேணும்.. பசிக்குதா?.. இப்பதான் பாட்டி சாப்பாடு கொண்டு வந்து குடுத்துட்டு போனாங்க.. சாப்படலாமா?” என்றவாறு ப்ரீத்தியை எழுந்தமர வைத்து உணவை தட்டில் போட்டாள்..
இட்லியை பார்த்ததும் குழந்தை மறுத்து உணவு உண்ண வைக்க, பசியினாலும் உடல் சோர்வினாலும் சோர்ந்து போயிருந்த சத்யாவிற்கு மேலும் ப்ரீத்தியிடம் கெஞ்சவும் முடியவில்லை.. அதட்டலுடன் சத்யா உணவை ஊட்ட, சிணுங்கியவாறு ப்ரீத்தியும் ௨ண்டு முடித்தாள்..
ப்ரீத்தியின் தேவைகளை முடித்து விட்டு தான் சத்யா உணவை உண்ண தொடங்கினாள்.. அந்த நேரம் தான் சத்யாவின் கணவன் அன்பரசன் உள்ளே வர, அவனை கண்டதும் “பெரிப்பா இந்த பெரிம்மா திட்டிட்டே இருக்காங்க..” என்று வந்தும் வராததுமாக அன்புவிடம் கூறினாள் ப்ரீத்தி..
அவனின் பார்வை தன் மனையாளை நோக்க, சத்யாவோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. “பெரிம்மாவை அடிச்சரலாம் தங்கம்.. நீ சரியா சாப்பிட்டு மாத்திரையை போட்டா தான் சீக்கிரம் நீ வீட்டுக்கு வந்து சரத் தம்பி கூட விளையாட முடியும்..” என்றான் கொஞ்சலுடன்..
“ஹூம் நான் அந்த கருவாயன் கூட விளையாட மாட்டேன்..” என்ற ப்ரீத்தி, ஏதோ காமெடி கூறி விட்டதை போல் க்ளிக்கென்று வாயை மூடி சிரிக்க, சட்டென்று நிமிர்ந்த சத்யா தன் கணவனை தீப்பார்வையில் பொசுக்கினாள்..
“ப்ரீத்தி இப்படி எல்லாம் சொல்ல கூடாது..” என்று கண்டிப்புடன் சத்யாவே கூற, “என் பாட்டி அப்படிதான் சொல்லுவாங்க பெரிம்மா.. அவனும் கருப்பாதானே இருக்கான்..” என்று விடாமல் ப்ரீத்தியும் பதில் சொல்ல, இதற்கு சத்யா பதில் பேச வாயை திறக்கும் முன்னே அவளின் கையை பிடித்த அன்பு, “குழந்தை தானே?” என்றான் கெஞ்சலுடன்..
அதற்கு மேல் உணவு உண்ண விரும்பாமல் அப்படியே தட்டை வைத்த சத்யா எழுந்து வெளியில் சென்று விட்டாள்.. தன் மனைவியை தடுக்கும் வழி அறியாமல் சிறிதுநேரம் தன் தம்பி மகளிடம் பேசிய அன்பு, அதன்பிறகே தன் மனையாளை தேடி சென்றான்..
வெளியில் போட்டப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களை வெறித்து பார்த்தபடி சத்யா இருக்க, அருகில் அமர்ந்த அன்பு, “அது குழந்தை தானே சத்யா.. இதுக்கு எல்லாம் எதுக்கு கோவப்படறே?” என்று சமாதானப்படுத்தும் நோக்கில் அன்பு பேச, “அப்ப சரத்தும் குழந்தை தானேங்க அவனை மட்டும் எல்லாரும் இப்படி பேசலாமா?” என்று கேட்டாள் எதிர்கேள்வியை..
“என் பையன் எப்படி வேணா இருந்துட்டு போறான்.. கருப்பா இருந்தா என்ன சிவப்பா இருந்தா என்ன? அதப்பத்தி எனக்கு கவலையில்லை.. அதுக்குனு என் முன்னாடி என் பையனை பத்தி யாரு பேசுனா நானும் திருப்பி தான் பேசுவேன்..” என்று அவனை பாராமலே கூறினாள் சத்யா..
“யாரு என்ன..” என்று பேச வந்த அன்புவை பேசாதே என்பதை போல் கையெடுத்து கும்பிட்ட சத்யா, “நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் இங்க இருக்கேன்.. இன்னும் வளைஞ்சு போவேனு எதிர்பார்க்காதீங்க.. நேத்து உங்க தம்பி வந்துட்டு எதுக்கு குழந்தையை அதட்டறே அப்படி இப்படினு கேள்வி கேட்கறாங்க..”
“அதுக்கு உங்க அம்மாவும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறாங்க.. இதுக்கு அவங்களையே வந்து ப்ரீத்தியை பார்த்துட்டு இருக்க சொல்லுங்க.. என்னையும் என் மகனையும் மத்தவங்க பேசறதை கேட்டும் கேட்காதது போல போயிருவீங்க அதே நான் ஏதாவது சொல்லிட்டா போதும்..”
“நீங்க இருக்கற மாதிரி என்னால இருக்க முடியாது.. இப்பவே சொல்லிட்டேன்.. தயவு செஞ்சு கிளம்புங்க..” என்று எரிச்சலில் மொழிந்தவள் தலையை பிடித்து கொண்டாள்..
“தலை வலிக்குதாடா?” என்று அன்பு அவளை தொட போக, சட்டென்று விலகிய சத்யா எழுந்து சென்றாள்.. அவளுள் இருந்த மொத்த கோவத்துடன் சேர்ந்து தன் மகனை ஒரு வாரமாக காணாததும் இப்போது எரிச்சலாக மாறி இருந்தது..
எப்படியும் நாளைக்கு இவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விடலாம் அதன்பிறகு தன் மனையாளை சமாதானப்படுத்தி கொள்ளலாம் என்று தனக்கு தானே கூறிய அன்பு, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்..
மாலையில் அங்கு வந்த தன் தந்தையை கண்டதும் துள்ளி குதித்து எழுந்த ப்ரீத்தி “டாடி” என்று அவரின் கழுத்தை கட்டி கொண்டு, “மம்மியை பார்க்கனும் டாடி.. எப்ப என்னைய பார்க்க வருவாங்க..” என்று உதட்டை பிதுக்கினாள்..
தன் மகளை கன்னம் கிள்ளி கொஞ்சி, “நாளைக்கு வந்துருவாங்கடா.. உன் தாத்தா சரியாகிட்டாங்கனு மம்மி உன்கிட்ட சொல்ல சொன்னாங்க..” என்று வெங்கட் கூற, “ஐ ஜாலி ஜாலி.. இந்த பெரிம்மா எப்ப பார்த்தாலும் அதட்டிட்டே இருக்காங்க டாடி.. நான் மம்மிகிட்ட போகனும்..” என்று அழுகைக்கு தயாரான மகளை கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்த வெங்கட், சத்யாவின் புறம் திரும்பினான்..
“ஏன் சத்யா எதுக்கு குழந்தையை அதட்டறே? வர்றப்ப எல்லாம் ப்ரீத்தி இப்படி சொல்லிட்டே இருக்கா?” என்று வெங்கட் சற்று கோவத்துடன் வினவ, கடுப்பை மறைத்து “சாப்பாடு வேணாம்னு சொன்னா அப்படியே விட சொல்றீங்களா? இல்ல மருந்தும் எடுத்துக்காம அடம்பிடிச்சா அப்படியே விட்டுட்டு என் வேலையை பார்க்கவா?” என்று கேட்டாள் பட்டென்று..
அவளின் பதிலில் தயங்கிய வெங்கட், “குழந்தை தானே.. கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லலாம் தானே..” என்றிட, வந்த கோவத்தை கட்டுப்படுத்தும் வழி அறியாமல், “என்ன பேசறீங்க.. இங்க ஒரு வாரமா இருக்கேன்.. ஏன் எனக்கும் அசதி எல்லாம் இருக்காதா? எப்பவும் கொஞ்சிட்டே இருக்க முடியுமா? நான் பார்த்துக்கறது பிடிக்கலனா தாராளமா நீங்களே தங்கி பார்த்துக்கங்க.. யாரு வேணாம்னு சொன்னா..?” என்று பொங்கி விட்டாள்..
பெண்ணவளின் சிடுசிடுப்பான பதிலில் திகைத்து தான் போனான் வெங்கட்.. எது பேசுனாலும் மௌனத்துடன் நகர்ந்து செல்பவளா இவள்? என்று திகைப்பை கடன் வாங்கியபடி முழித்தான்..
இரவு வரை வெங்கட் அங்கயே இருக்க, எனக்கென்ன என்று சத்யா வெளியில் வந்து விட்டாள்.. அன்புவிற்கு அழைத்து தன் மகனிடம் பேச, “எப்பமா வருவே?” என்று அழுகையுடனே சரத் கேட்க, “நாளைக்கு வந்துருவேன் தங்கம்.. அது வரைக்கும் அப்பாவை படுத்தாம சமத்தா இருக்கனும்..” என்றவளிடம் “ம்ம்ம்” கொட்டினான் சத்யாவின் அன்பு புதல்வனும்..
“நான் கிளம்பறேன்.. பாப்பாவை பார்த்துக்கோ..” என்று வெங்கட் அவளிடம் கூற, எங்கையோ பார்த்தபடி சத்யா “நாளைக்கு காலைலயே வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டாங்க.. நீங்க வேணா இங்கயே இருங்க.. நான் வீட்டுக்கு போறேன்..” என்று அவன் சம்மதித்து விட மாட்டானா என்ற நட்பாசையில் கேட்டாள்..
உடனே அதைய மறுத்த வெங்கட், “இல்ல சத்யா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. அதுவும் இல்லாம எனக்கு ஹாஸ்பிட்டல் ஸ்மல் சேராது..” என்றிட, கோவத்தில் வாய்வரை வந்த வார்த்தையை உள்ளிழுத்து கொண்டவள் விருட்டென அகன்றாள்..
வீட்டுக்கு வந்து இதோடு இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது.. வந்ததில் இருந்து சரத் தான் சத்யாவின் முந்தானையை பிடித்து கொண்டே சுற்றுகிறான்.. எங்கு மீண்டும் தன் அன்னை தன்னை விட்டு விட்டு சென்று விடுவாரோ என்ற பயத்தில்!!
அடுப்பில் எதையோ கிண்டி கொண்டிருந்த சத்யாவுக்கு வெளியில் தன் மாமியார் பேசுவது கேட்க, சுள்ளென்று கோவமும் ஏறியது.. ” இந்த கிழவிக்கு என்னைய பிடிக்கலனா எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு என்னைய அவங்க பேத்தியை பார்க்க அனுப்பி விட்டுச்சு?” என்று எரிச்சலே வந்தது..
வாங்க முதல்ல அன்புவோட குடும்பத்தை பத்தி பார்ப்போம்.. அன்புவின் அப்பா சாந்தமூர்த்திக்கு ராஜம்மாள் இரண்டாவது மனைவி.. அவரின் முதல் மனைவி அன்புவுக்கு நான்கு வயதான போது எதிர்பாரா விதமாக மரணத்தை தழுவி விட, அன்புவின் எதிர்காலத்தை எண்ணி ராஜம்மாளை இரண்டாவதாக மணம் முடித்து வைத்தனர் சாந்தமூர்த்தியின் குடும்பத்தினர்..
மருமகளாக வந்த ராஜம்மாளுக்கு அன்புவை பிடிக்காமல் தள்ளி வைக்க, அடுத்த ஒரு வருடத்திலே ராஜம்மாளுக்கு பையன் பிறந்ததும் அவரை கையில் பிடிக்கவே முடியவில்லை.. அனைத்தும் இருந்தும் யாருமில்லாதவனாக வீட்டில் ஓர் ஓரத்தில் வாழ்ந்தவன் அன்பு..
சாந்தமூர்த்தியும் அன்புவின் பதினேழாவது வயதில் முதல் தாரத்திடம் சென்று விட, அனைத்து பொறுப்பும் ராஜம்மாளிடம் வந்தது.. தவறு செய்யும்போது தன் மகனிடம் காட்டிய கண்டிப்பையும் பாசத்தையும் முதல் தாரத்தின் மகனுக்கு ராஜம்மாள் தர மறுத்ததன் விளைவு வாழ்க்கை என்னவென்று அறியும் முன்பே தடம் மாறிருந்தான்..
வெங்கட் படித்து முடித்த கையோடு வேலையையும் வாங்கி விட, ஆனால் அன்புவோ முதல் வருடத்தையே இரண்டு வருடங்களாக படித்தவன் அதன்பின் ஊதாரியாக ஊரை சுற்ற தொடங்கி இருக்க, இதனால் தினமும் ராஜம்மாளிடம் வாங்காத திட்டே இல்லை..
அதன்பின்பு கிடைக்கும் வேலைக்கு செல்ல தொடங்கி இருந்த நேரத்தில் தான் சத்யாவுடன் காதலும் மலர்ந்தது.. அச்சமயத்தில் தான் வெங்கட்டுக்கு பெண் பார்த்து திருமணமும் நடந்தேறியது.. அன்பு இருக்கும்போதே வெங்கட்டுக்கு திருமணம் செய்து வைத்ததை ஊரார் ஒரு மாதிரியாக பேசியதை கண்டும் காணாததுமாக இருந்து விட்டார் ராஜம்மாள்..
சத்யாவின் படிப்பு முடிந்ததும் அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்க, அன்புவை காதலிப்பதை பற்றி கூறினாலும் அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றுணர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சத்யா அன்றே அன்புவின் மனைவியாக மாறி விட, இதனை எதிர்பார்க்காத சத்யாவின் குடும்பம் அவளுடனான உறவை அதோடு முறித்து கொண்டது..
ராஜம்மாளும் இவர்களை கரித்து கொட்ட, வெங்கட்டோ ஒருபடி மேல் சென்று, “உனக்கு சோறு போடறதே பெரிசு இதுல உன் பொண்டாட்டிக்கும் போட நான் என்ன கேணையனா?” என்று அன்புவிடம் கேட்டு விட, அவ்வீடு தந்தையின் பெயரில் இருப்பதால் அன்புவை வெளியில் அனுப்ப முடியவில்லை வெங்கட்டினால்..
ஒரே வீட்டில் இருவரும் தனிதனியாக தான் இருக்கின்றனர்.. மறந்தும் ராஜம்மாள் அன்பு இருக்கும் இடத்தில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்.. அவருக்கு வெங்கட் தான் உசத்தி.. தன் மகன் சொல்வது தான் வேதவாக்கு.. சத்யா உண்டான போதும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை..
வீட்டில் இருந்தால் குழந்தை பிறந்த பின்பு செலவுகளை சமாளிக்கும் வழி அறியாமல் அப்போதும் சத்யா வேலைக்கு செல்ல, இதனை கண்ட அவளின் அண்ணன் தான் தங்கைக்கு தேவையானதை பார்த்து செய்ய, மகள் படும் கஷ்டத்தை மகனின் மூலம் அறிந்த பெற்றோரின் கோவமும் சிறிது குறைந்தது..
குழந்தை பிறந்ததும் எட்டி நின்று பார்த்து விட்டு சென்றவர் தான் ராஜம்மாள்.. அதன்பின் குழந்தையின் பக்கமே வரவில்லை.. ஆறு மாதம் பெற்றோரின் வீட்டில் இருந்த சத்யா அதன்பின் அன்புவின் மனநிலையை உணர்ந்து இங்கு வந்து விட்டாள்..
குழந்தைக்கு இரண்டு வயதான போது வலிப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்த நேரத்தில் கூட இவர்கள் யாரும் என்னவென்றும் கூட விசாரிக்கவில்லை.. அன்புவும் சத்யாவும் தான் மாறி மாறி அழைத்து கொண்டிருந்தனர்..
ஆனால் அன்புவோ அதனை எதுவும் மனதில் வைத்து கொள்ளாமல் தம்பியின் மகளுக்கு ஒன்று என்றதும் தன் மனைவியை அவர்களின் துணைக்கு அனுப்பி விட்டான்.. ப்ரீத்திக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவளின் அன்னை மோகனா தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று பெற்றோரின் வீட்டிற்கு சென்றிருந்தாள்..
மகளுக்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் கிளம்ப முயன்றவளை தடுத்து ராஜம்மாள் தான் “நாங்க பார்த்துக்கறோம்..” என்றவர் மருத்துவமனை வாசம் தனக்கு சேராது என்று சத்யாவை அனுப்ப சொன்னார் அன்புவிடம்..
திருமணம் செய்ததில் இருந்து தன்னிடம் ஒரு வார்த்தை பேச யோசித்தவர் இன்று பேசியதும் தன் மனைவியை தாஜா செய்து அன்புவும் எப்படியோ அனுப்பி வைத்தான்..
அதன் விளைவை தான் இன்று சத்யா அனுபவிக்கிறாள்.. ப்ரீத்தியும் தன் தாய் வந்ததில் இருந்து சத்யாவை பற்றியே கோள் மூட்டி கொண்டிருக்க, இது போதாது என்று குழந்தையின் நலனை விசாரிக்க வருவோர் அனைவரிடமும் “என்னதான் புள்ள வளர்த்தி வெச்சுருக்காங்களோ ஒரு குழந்தையை எப்படி கவனிக்கனும்னு கூட தெரில..” என்று ராஜம்மாளும் குறை கூறினார்..
அப்போது தோன்றும் பொங்கிய எரிச்சலில் அவரிடம் நறுக்கென்று நாலு கேள்வி கேட்டு விடலாம் என்று உந்தும் மனதை பெரும்பாடு பட்டு அடக்குவாள்.. ஏனோ இன்று அது முடியாமல் போக அடுப்பை அணைத்தவள் விறுவிறுவென வெளியில் வந்தாள்..
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நானும் பார்த்துட்டே இருக்கேன் சும்மா சும்மா என் அம்மாவை இழுத்து பேசிட்டு இருக்கீங்க.. உங்க பேத்தியை நான் பார்க்காம இருந்ததுல தான் இப்ப இப்படி இருக்காளா? இல்ல தெரியாம தான் கேட்கறேன் என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று யாரையும் பொருட்படுத்தாமல் பொங்கி விட்டாள் சத்யா..
“இந்தாடி நீ ஒழுங்கா பார்த்துருந்தா என் பேத்தி ஏன் இப்படி சொல்லிட்டு இருக்க போறா?” என்று ராஜம்மாளும் கேட்க, தலைக்கேறிய கோவத்தில், “அப்ப நீங்களே பார்த்துருக்க வேண்டியது தானே? என்னைய ஏன் போக சொன்னீங்க? அது உங்க பேத்தி தானே..” என்றாள் வெடுக்கென்று..
“இது என்ன உலகத்துல நடக்காத கூத்தா இருக்கு.. உன் வூட்டுக்காரனோட தம்பி புள்ளைய தானே பார்த்தே? இதுக்கு இந்த குதிகுதிக்கறே?” என்று ராஜம்மாள் சலித்து கொள்ள, “இதையவே நானும் கேட்கலாம் தானே.. என் பையனுக்கு ஏதாவதுனா உங்க மகன் வந்து நின்னாரா.. அப்பெல்லாம் எனக்கென்னனு இருக்கறவங்க தானே நீங்க?”
“ஆனா நான் மட்டும் வூட்டுக்காரனோட தம்பி, தம்பி மனைவி, தம்பி மக, இல்ல அவரோட அம்மானு எல்லாத்துக்கும் சேவை செய்யனுமோ? அப்படி செய்ய எனக்கென்ன தலையெழுத்தா?” என்று தணலாய் தகித்து நின்றாள்..
“ஆத்தாடி என்னமோ இவ தான் என்ற பேத்தியை என்னேரமும் பார்க்கற மாதிரி பேசிப்புட்டு இருக்கா..? புள்ள உடம்பு முடியாம கிடக்குதே தன் கடமையை செய்வோமானு நினைப்பு இருந்துச்சா ஒனக்கு? எங்கிருந்து தான் இப்படி ஒருத்தியை புடிச்சனோ அந்த கூறு கெட்டவன்..?” என்றார் ராஜம்மாள்..
“ம்ம்ம்ம் கடமை.. கடமையா? அந்த கடமையை நீங்க ஒழுங்க செஞ்சுருந்தா இன்னைக்கு என் புருசன் ஏன் இப்படி இருந்துருக்க போறாரு.. பாசத்தை அள்ளி கொட்ட வேணாம் தப்பு பண்றப்ப கண்டிச்சுருந்தாவே அவருக்கு வாழ்க்கை என்னனு புரிஞ்சுருக்கும்..”
“அடுத்தவ புள்ளயை நான் ஏன் சீராட்ட வேணும்னு பாராபட்சம் பார்த்து ஒதுக்கி வெச்ச நீங்க கடமையை பத்தி பேசலாமா? இவன் தனக்கு பாரமாகிருவானு எங்களைய ஒதுக்கி வெக்க சொன்ன உங்க மகனுக்காக நாங்க ஏன் கஷ்டப்படனும்னு கேட்கறேன்.. பெத்த புள்ள ஆஸ்பத்திரில கிடக்கேனு கொஞ்சமாவது நினைப்பு இருந்துச்சா?”
“அங்க கிடக்கறது யாரோ புள்ள மாதிரி அப்ப அப்ப வந்து கொஞ்ச நேரம் இருந்துப்புட்டு போறாரு.. நீங்க செய்ய வேண்டிய கடமைல இருந்து பின் வாங்கலாம் அது தப்பில்ல.. ஆனா நீங்க எவ்ளோ கீழ்தரமா எங்களைய நடத்தினாலும் நாங்க மட்டும் செய்ய வேண்டியதை செய்யனுமோ?” என்று எதிர்கேள்வியை தொடுத்தாள்..
“அடுத்தவ பெத்து போட்டுட்டு போன புள்ளயை வளர்த்தி அதுக்கு செய்யனும்னு நானென்ன வரமா வாங்கிட்டு வந்துருக்கேன்.. என்ற புருசன் அவனை பெத்த பாவத்துக்கு சோறு போட்டு வளர்த்துனேன் அவ்வளவுதான்.. அவனோட வாழ்க்கையை அவன் தான் பார்த்துக்கனும்..” – ராஜம்மாள்
“ஹோ அப்ப அடுத்தவங்க பெத்த புள்ளயை எனத்துக்கு நான் மட்டும் பாசமா பார்த்துக்கனும்? இங்க வந்ததுல இருந்து உங்களைய பார்த்துட்டு தான் இருக்கேன்.. என் புருசனை தள்ளி வெச்சவங்க ஏன் இன்னும் வெளில அனுப்பாம இருக்கீங்க? உங்க கூட இருக்கறதுக்கு கண்காணாத இடத்துல யாருமில்லாம நிம்மதியா இருந்தரலாம்..” – சத்யா
“போ வேண்டியது தானே? போய் தொலைய வேண்டியது தானே? இங்கனயே இருங்கனு ஆரு இப்ப அழுதது? போறதுக்கு வேற போக்கிடம் இல்லனு இங்கன இருந்துப்புட்டு பேச்சாடி பேசற பேச்சு? துரத்தி விட்டா தான் ஒனக்கு புத்தி வரும்..” – ராஜம்மாள்
“ம்ம்ம்ம் போறோம் இதுக்கு மேலயும் இங்கயே இருப்போம்னு நினைச்சீங்களா?” என்று வாயிலின் புறம் கேட்ட குரலில் அனைவரும் திரும்ப, சலனமில்லா முகத்துடன் அன்பு தான் நின்றிருந்தான்..
தன் தந்தையை கண்டதும் “அப்பா” என்று ஓடி சென்று சரத் அவனின் காலை கட்டி கொள்ள, குனிந்து தன் மகனை தூக்கிய அன்பு அவர்களிடம் வந்தான்..
“என்ன சொன்னீங்க போக்கிடம் இல்லாம இங்க இருக்கோமா? அப்படினு நீங்கதான் நினைச்சுக்கனும்.. என் அம்மா தான் என்னைய விட்டுட்டு போய்ட்டாங்க.. அதுக்கு அப்பறம் உங்க கூட இருந்தேனு ஒரே காரணத்துக்கு தான் நீங்க எவ்ளோ அவமானப்படுத்துனாலும் உங்களைய சுத்தி சுத்தி வர்றேன்..”
“உங்களுக்கு நான் எப்படியோ? ஆனா எனக்கு நீங்க முக்கியம்.. நீங்க என்ன பண்ணுனாலும் அமைதியா இருந்தேன்.. என் மனைவியை நீங்க கரிச்சு கொட்டறப்ப கூட எதிர்த்து பேசாம இருந்தேன் அதுக்கு காரணமே உங்க கிட்ட சொல்லாம் கல்யாணம் பண்ணிட்டோம் அந்த கோவத்துல தான் இப்படி பண்றீங்கனு நினைச்சேன்..”
“சத்யாவை இப்படி குறை சொல்றீங்களே இதுக்கு ஏன் அவளை அங்க இருக்க சொன்னீங்க நீங்களே போய் உங்க பேத்தியை உள்ளங்கைல வெச்சு தாங்கிருக்க வேண்டியது தானே? போக மாட்டேனு சொன்னவளை நான்தான் வற்புறுத்தி அனுப்பி விட்டேன் அதுக்கு நல்ல பலனை கொடுத்துட்டீங்க..”
“இன்னும் ஒரு வாரத்துல இங்கிருந்து கிளம்பிருவோம்.. என்னைய நம்பி வந்தவளை நான் தான் பார்த்துக்கனும்.. எனக்காக இத்தனை வருசம் உங்க குத்தல் பேச்சுகளை கேட்டுட்டு அவ அமைதியா இருந்தது போதும்..”
“அவளை கரிச்சு கொட்டறதே முழுநேரா வேலையா வெச்சுருந்த உங்க பேச்சையும் இதோட நிறுத்திக்கங்க.. இல்ல நான் அமைதியா இருக்க மாட்டேன்..” என்றவனுக்கு என்றும் இல்லாத திருநாளாய் இன்று கோவம் கொழுந்து விட்டு எரிந்தது..
அத்தோடு அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தன் மனைவியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு திரும்பியவன், முகம் கொள்ளா கோவத்துடன் நின்றிருந்த ராஜம்மாளிடம், “பெத்த புள்ள ஆஸ்பத்திரில கிடக்கறப்ப வேலை வேலைனு ஓடுனாரு நீங்க பெத்த புள்ள.. பெத்த புள்ளைக்கே இந்த நிலைமைனா..” என்று இழுத்த அன்பு, கையை விரித்து “ம்ஹும் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..” என்று முடித்தான்..
வெளியில் ராஜம்மாளின் கத்தல் கேட்டாலும் அதனை விடுத்து, தன்னையே இமைக்காமல் பார்த்திருந்த தன் துணைவியை கண்டு குறுநகை புரிந்த அன்பு, “சாரி சத்யா.. எனக்காக இவங்க பேசுனதை எல்லாம் பொறுத்துட்டு இருந்தே? இனியும் நான் கண்டுக்காம இருந்தா மனுசனாவே இருக்க முடியாது.. நம்ம இங்க இருந்து போய்ரலாம்..”
“அதுதான் நமக்கு நல்லது.. நம்ம பையனுக்கு பாட்டி, சித்தப்பா, சித்தினு எல்லா உறவும் வேணும்னு தான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தேன்.. நம்மளைய மதிக்காதவங்க கிட்ட உறவை எதிர்பார்க்கறது முட்டாள்தனம்னு எனக்கும் தெரியும்..”
“அவங்க என்ன பேசுனாலும் பொறுத்து போனது உறவு வேணும்னு ஒரே காரணத்துக்காக தான்.. அதுக்காக இனியும் நம்ம சுயத்தை விட்டு குடுக்கனும்னு அவசியமில்ல.. இங்கிருக்கற நாளா தானே உன் அம்மா, அப்பா எல்லாம் உன்னைய பார்க்க வர தயங்கறாங்க..”
“நம்ம வெளில போனா உனக்காவது அவங்க துணை இருக்குமல்ல? இப்படி கரிச்சு கொட்டறதையும் கேட்காம இருப்பே.. போதும்டா நம்ம அவங்க உறவை எதிர்பார்த்து அவமானப்பட்டது..” என்று சுண்டிய முகத்துடன் கூறிய தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்த பெண்ணவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே விளங்கவில்லை..
எப்போதும் தனக்காக யோசிக்காமல் தன்னை சார்ந்தவர்களுக்காக யோசித்து செயலாற்றும் அவனின் குணத்தை பார்த்து தானே ஆடவனின் மீது காதலில் விழுந்தது.. இப்போது கூட அவருக்காக யோசிக்காமல் தனக்காக யோசித்ததை கண்டு இன்னும் அவனின் மேல் காதல் தான் பெருக்கெடுத்தது..
“வெளில போன செலவுகளை சமாளிக்க முடியுமாங்க?” என்று தன் சந்தேகத்தை சத்யா முன் வைக்க, “முடியும்னு நம்புவோம்டா.. பணத்தை விட நிம்மதி தான் முக்கியம்.. அந்த நிம்மதி வெளில தான் கிடைக்கும்னு இருக்கு.. கஷ்டப்பட்டு உழைச்சாலும் வீட்டுல நிம்மதியா இருக்கலாம் தானே? எதையும் யோசிச்சு குழப்பிக்காதடா.. நான் பார்த்துக்கறேன்..” என்றான் சமாதானமாக..
“பையனுக்கு நாலு வயசு ஆகிருச்சுனா அவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நானும் வேலைக்கு போவேன்.. அதுக்கு நீங்க எதுவும் சொல்ல கூடாது.. எது வந்தாலும் நம்ம சேர்ந்தே சமாளிப்போம்ங்க..” என்று நம்பிக்கையுடன் கூறியவளை எப்போதும் போன்று கனிவுடன் கண்ட அன்புவிற்கு அருகில் வைரத்தை வைத்து கொண்டு இவ்வளவு நாட்களாக கண்ணாடி கல்லுக்கு ஏங்கியது போல் தான் தோன்றியது..
இனி தன் மனைவி, மகனை எதற்கும் கலங்க விட கூடாது என்ற முடிவுடன், மனைவிற்கு பேச்சிற்கு செவி சாய்த்து சம்மதம் தருவது போன்று புன்னகைத்த கணவனின் கையை இறுக்க பிடித்து கொண்ட சத்யாவுக்கு நன்றாக புரிந்தது என்றும் தன் கணவன் புரியாத புதிர் தானென்று!!
முற்றும்..
அருமையான கருத்துள்ள கதை,
தனக்காக வாழுமல் மற்றவுர்க்காக வாழும் அன்பு
போல் உள்ளவர்களால் தான்
இன்றும் மனிதம் உயிருடன்
இருக்கிறது
அடடே! கருவை கையாண்ட விதம் அருமையோ அருமை. சபாஷ் போட வைத்தது உங்கள் நடை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
spr ka 😍😍😍
செம்ம செம்ம சிஸ்..பேச வேண்டிய நேரத்துல பேசித்தான் ஆகணும்..பாத்திரம் அறிந்து பிச்சையிடுனு சும்மாவா சொன்னாங்க..வெங்கட்,ராஜம்மாள் எல்லாம் என்ன டிசைனோ..ஹாஸ்பிடல் ஸ்மெல் சேராதாமா🙄🙄..அன்பு தனியா செல்வதுனு முடிவெடுத்து மனைவிக்கு ஆதரவாய் பேசியது அருமை சிஸ்..சிறந்த படைப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐