Loading

இரவு 12.30.

மனித நடமாட்டம் இல்லாத ஆற்றோர குறுக்கு வழி சாலை. மேடு பள்ளமான சாலை ஆதலால் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அந்த பைக். அதில் அவன், அதியன். 28 வயது இளைஞன். அவனிடம் சிறிது பதற்றம் காணப்பட்டது.

இருட்டிய சாலையில் இவன் பைக் ஹெட்லைட் மட்டுமே வெளிச்சம்.

 

ஆற்றோரம் ஆதலால் மணல் கொள்ளைக்கு சரியான இடம். அங்கு மணல் அள்ளும் புல்டோசரை இயக்கிக் கொண்டிருந்தனர் சிலர். 

அந்த இராட்சத இயந்திரத்தை கடக்கையில் ஆற்று மணலில் நிலை கொள்ளாமல் தடுமாறியது பைக்.

                                                                      *********

 

அடுக்கு மாடி குடியிருப்பு.

கண்களை தூக்கம் தழுவிய போதும் விழித்து கிடந்தாள் பேதை அவள். 

தாயைக் காண சென்ற கணவன் திரும்பி வர தாமதமாதலால் ஏற்பட்ட பதற்றம். அலைப்பேசி அழைப்புகள் அனைத்தும் ஏற்கப்படாமல் இருந்தன. 

 

சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு செல்ல கோவத்துடன் அவனை பார்த்தாள். 

சுவற்றில் மாட்ட பட்டிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தில் அழகாக, குழி விழும் கன்னத்துடன் சிரித்துக் கொண்டிருந்தான் அவன். ருத்வியின் அதி

 

ஐந்து வயதில் இவள் குண்டு கன்னங்களை கிள்ளி கொஞ்சி முத்தமிட்டு போனவன். அடர் பச்சை நிற கண்களுடன் பார்பி பொம்மை போல் இருந்தவளை பாப்பா…பாப்பா என்று கையில் தூக்கி வைத்தே திரிந்தவன். பெற்றவர்கள் வேலை வேலை என்றிருக்க பக்கத்து வீட்டில் பாட்டியிடம் தனியாக இருந்தவளை கரம்பிடித்து கண்ணாமூச்சி விளையாட அழைத்து சென்றவன். அவளின் தனிமையை போக்கி இனிமையாக்கியவன். சிறிய கல் இவள் காலில் குத்தினாலும் துடிப்பவன். பருவமெய்த காலத்தில் பேதை அவளை இன்னதென்று தெரியாத உணர்வால் நாணம் கொள்ள செய்தவன். கல்லூரி காலத்தில் கைக்கோர்த்து காதல் கதை பேசச்செய்தவன். மொத்தத்தில் பாவை அவளின் உலகமாய் ஆனவன். அவனைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவள் மனதில் உதிக்காது. அவளின் பெற்றோருக்கோ இவளைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லை. பணமே முக்கியம்.

 

கல்யாணம் என்று வந்தபோது ,வேற்று சாதி , நடுத்தர குடும்பம் என்ற ருத்வியின் பெற்றோர்களின் எதிர்ப்பைத் தாண்டி நண்பர்களால் Register Office ல் முடிக்கப்பட்டது. 

 

திருமணக் கோலத்தில் வந்தவர்களை ருத்வியின் வீட்டினர் சேர்ந்துக்கொள்ளவில்லை.  அதியனுக்கு தாய் மட்டுமே, ஆதினியாள். மகனின் விருப்பமே முக்கியம் என்று துணை நின்றவர். மகள் இல்லாத குறையை தீர்க்க கஜல் ருத்வி யை 5 வயதிலிருந்து கண்ணின் மணியாய் பார்த்துக்கொண்டவர் ஆயிற்றே , எப்படி ஏற்காமல் இருப்பார். 

 

இருவருமே குழந்தை நல மருத்துவர்கள். பணி நிமித்தமாக மருத்துவமனைக்கு அருகாமையிலுள்ள அபார்ட்மென்ட் ‘ல் தனிக் குடித்தனம் இருக்கின்றனர் திருமணமாகி 8 மாதங்களான இளம் தம்பதியினர். 

 

                                                                    **********

 

ஆற்றோர சாலை.

 

தடால் என்ற சப்தம். வண்டி அப்பளமாய் நொருங்கியது. சத்தம் கேட்டு ஓடி வந்த அனைவருக்கும் இதயமே நின்றுவிட்டது  அவர்கள் கண்ட காட்சியில். 

 

பைக் ஓட்டி வந்தவன் நிலை தடுமாறிட, தூரத்தில்  காவல்துறையின் சைரன் சத்தம் கேட்டு புல்டோசரை (bulldozer) இயக்கிக் கொண்டிருந்தவன் பதட்டம் அடைந்து இயந்திரத்தை திருப்பிவிட,  அதன் அடியில் பைக் காரன் நசுங்கி இரத்தமும் சதையுமாய் ஆகிக் கிடந்தான். அந்த இராட்சத இயந்திரம் அவன் உடம்பில் ஒரு பாகத்தையும் முழுதாய் விட்டுவைக்கவில்லை. அழகன் அவன் முகமோ அடையாளம் தெரியாமல் சிதைந்து கிடந்தது. 

 

இதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி நின்றிருந்தனர். 

 

சிறிது நேரத்தில் ரோந்து வந்த காவலர்கள் இவர்களை பார்த்திட, தெறித்து ஓடினர். அவர்களில் bulldozer ஐ இயக்கியவன் மட்டும் மாட்டிக்கொண்டான்.

ஆம்புலன்ஸை வரவைத்து செத்து கிடந்தவனை தரையிலிருந்து வழித்தெடுத்து தான் கொண்டு போயினர். 

                                                                      **********

 

ருத்வியின் வீடு.

 

புகைப்படத்தில் இருந்தவனை இன்னும் காணவில்லை என்று மனதில்  திட்டிக்கொண்டிருந்தால் ருத்வி, “இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, லேட் ஆகும் னா call பண்ணி சொல்றதுக்கு என்ன. கார்பெட் மண்டையா!!!”.

மருத்துவ துறையில் இருப்பதால் அவசர அழைப்புகள் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி ஏதும் போயிருப்பான் என்று நினைத்து கொண்டால். 

 

அப்போது புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்து பேசியவள் அந்தப் பக்கம் கூறப்பட்ட செய்தியில் மூர்ச்சையாகி விழுந்தால். 

 

                                                                        *********

 

“பாப்பா!!!!….பாப்பா!!!….எந்திரி மா!!! அய்யோ!! ” என்று கண்களில் நீர் தேங்க,  ருத்வியை மடியில் கிடத்தி தண்ணீர் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தான் அண்ணன் அவன், செந்தில் குமரன். 

 

அதியனின் உயிரான தோழன், அதனால் ருத்வி’கு அண்ணன் ஆகினான். மூவரும் ஒரே தெருவில் வசித்து, ஒரே பள்ளியில் படித்தனர். ருத்வி இவர்களைவிட  3 வயது இளையவள். மூவரையும் பிரித்து அவரவர் வீட்டிற்கு அழைத்து செல்வதற்குள் பெற்றவர்களுக்கு தலையே சுற்றிவிடும். கல்லூரி தான் இவர்களை கொஞ்ச காலம் பிரித்தது. அதிலும் அதியனும் ருத்வியும் ஒரே மருத்துவ படிப்பில் சேர்ந்துவிட்டு காதலை வளர்க்க, பாவம் செந்தில் தான் engineering college ‘ல் சேர்ந்து தனி மரமானான். அதற்கெல்லாம் சேர்த்து வைத்துத்தான் இவர்களுடைய பக்கத்து ஃபளாட்டில் இப்போது குடிவந்து இளம் ஜோடியை இம்சை செய்கிறான். 

 

விபத்தை விசாரித்த இன்ஸ்பெக்டர்,  சடலத்தின் உடைமைகளை பரிசோதிக்க, நைந்து போன visiting card இல் அதியன் மற்றும் கஜல் ருத்வி‘யின் அலைப்பேசி எண்கள் இருந்தது. 

 

ருத்வியின் எண்ணிற்கு அழைத்து விவரத்தை கூறியவர்க்கு மறுமுனையில் பதில் இல்லாமல் போக , அழைப்பை துண்டித்தான். பிறகு தான் ஞாபகம் வந்தது அதியன் , தன் கல்லூரி நண்பன் செந்திலின் உயிர் தோழன் என்று. இன்றுவரை நல்ல நட்புறவு உண்டு இருவருக்கும். 

 

உடனே Insp.கதிர், செந்தில்’கு அழைக்க விவரத்தை கேட்டவனுக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. இது உண்மையாக இருக்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டு தான் வரும்வரை கதிரை நன்கு பரிசோதிக்க சொன்னான். 

 

விவரம் தெரிந்த நாளில் இருந்து தன் சுக துக்கங்களில் பங்கு கொண்டவன், தன் வெற்றிகளில் தோழனாய் தோள்  கொடுத்தவன், துவண்டிருக்கும்போது அன்னையாய் அரவணைத்தவன், உரு தெரியாமல் சிதைந்து விட்டானா????

 

அப்படி இருக்க வாய்ப்பில்லை. அனைவரையும் அன்பால் கட்டிப்போட்டவனை,  பலரின் உயிர் காப்பவனை எமன் அதற்குள் கூட்டிச்சென்று விடுவானா….அது தான் இருக்கும் வரை நடக்காது என்று எண்ணிக்கொண்டு கிளம்பினான். 

 

ருத்வியின் நிலை என்ன என்ற பயத்தில் வேகமாய் அவள் வீட்டிற்கு வந்தான். இங்கோ இவள் மூர்ச்சையாகி கிடக்கிறாள். 

 

முகத்தில் தண்ணீர் பட்டவுடன் விழிகள் திறந்தவள் என்ன ஆயிற்று என்று யோசிக்கையில் போலீஸ் கூறிய செய்தி அவளை பிரம்மை பிடித்தவள் போல் ஆக்கியது. 

 

எதிரே இருந்த செந்திலிடம், 

” அண்ணா!! யாரோ ஃபோன்’ல….என் அதி’க்கு…. என்னமோ ஆகிருச்சு’னு சொன்னாங்கலே!! அவன் நல்லா தான இருக்கான்…….எனக்கு இப்பவே அவன பாக்கனும்…..”

“எனக்கு தெரியும் …என்ன அழ வைக்க தான இப்டி எல்லாம் பண்றான்….எங்க ஒளிஞ்சிட்டு இருக்கான் அவன்….அதி எங்க இருக்க…வெளிய வா டா…”  என்று அவளாக கூறிக் கொண்டே கணவனை வீடு முழுக்க தேடிக்கொண்டிருந்தாள். 

 

அவளை ரணத்துடன் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில். 

 

என்னவென்று சமாதானம் சொல்லி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வான். அவனே உடைந்து தானே இருக்கிறான். 

“பாப்பா!!!!!!” என்று அடிக் குரலில் கத்தியவனை திடுக்கிட்டு பார்த்தாள். “வா!! ஹாஸ்பிட்டல் போவோம்” என்று அவளை இழுத்துச் சென்றான். ஒன்றும் பேசாமல் காரில் சென்றனர். அவளோ பித்து பிடித்தவள் போல் உட்கார்ந்து வந்தாள்.

 

மருத்துவமனையில் கதிரை சந்தித்து விசாரிக்க, அவனோ பொறுக்கி எடுத்த  உடைமைகளை காண்பித்தான். சுக்கு நூறாய் நொறுங்கிய அதியனின் அலைபேசி மற்றும் ஹெல்மெட், இரத்த திட்டுக்களுடன் இருந்த wallet இவற்றை பார்த்தவனுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட உடைந்து விட்டான் செந்தில். 

 

ருத்வியை பார்த்தவனுக்கோ நெஞ்சு திக்கென்றது. கல்லைப்போல் அசையாமல் நின்றிருந்தாள். ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை. கதிர் பிரேதத்தை பார்க்க வரச்சொல்ல பொம்மை போல் செந்தில் இழுத்த இழுப்பிற்கு போய்க் கொண்டிருந்தாள். 

 

உள்ளே வெள்ளைத் துணியில் பொட்டலம் கட்டி வைத்திருந்தனர் பிரேதத்தை. போஸ்ட்மார்ட்டம் செய்ய ஒன்றும் மிஞ்சாதலால் ரத்த மாதிரிகளை மட்டும் பரிசோதித்து இருந்தனர். 

 

இருவரும் சடலத்தை பார்த்தனர். கண் எது மூக்கு எது என்று அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்தது.  அதைப்பார்த்த ருத்வி’க்கு யாரோ அவள் இதயத்தை கூறு கூறாய் கிழிப்பது போல் இருந்தது, தற்போது அவள் மனதின் ரணத்தை தான் வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?!

வலியின் பாரம் தாங்காமல் மயங்கி விழுந்தாள். செந்திலோ முகத்தை மூடி தரையில் மண்டியிட்டு வெடித்து அழுதான். 

 

ருத்வி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டாள். செந்தில் வீட்டாருக்கு தகவல் சொல்ல பதறியடித்துக் கொண்டு வந்தனர்.

                     

சிறிது நேரத்துக்கு முன் தன் மடியில் படுத்து, தான் ஊட்டிவிட சாப்பிட்டு கிளம்பிய மகனை இப்படி உயிரற்ற சதை பிண்டமாக பார்த்தால்!!!!!!!

பெற்ற தாய் தன் மகனை இந்த நிலையிலா பார்க்க வேண்டும். ஆதினி கதறியதை பார்த்த அனைவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. 

அதியனின் தந்தை அவனின் 2 வயதிலேயே இறந்துவிட, தனி ஆளாக மகனை வளர்த்தவர். இப்படி இராட்சத இயந்திரத்துக்கு காவு குடுக்கவா அழகன் அவனை கஷ்டப்பட்டு வளர்த்தார்.

 

                                                               ********

 

அரை மயக்கத்தில் இருந்தவளுக்கு நினைவலையாய் வந்து போனான் அதி.

” ஹே….குட்டி பொண்ணு!!  எங்க கூட விளையாட வரியா??? 

மாட்டேன் என்று மண்டை ஆட்டிய அந்த பார்பி பொம்மையை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு அவன் வீட்டிற்கு ஓடினான் 8 வயது அதி. தூக்கியவனின் கையை கடித்தவளை பார்த்து கன்னம் குழிய சிரித்தவன் , அவள் கன்னத்தில் முத்தமிட்டான். டக்கென்று துடைத்துக் கொண்டவளை “க்யூட் பாப்பா” என்று கொஞ்சவேறு செய்தான். அவனை தொட முயல, காற்றாய் கரைந்தான் அதி.

 

அடுத்து,

காலேஜில் fresher’s party நடந்தபோது ருத்வி சேலையில் ரதி’போல் மின்ன சீனியரான அதி’யோ வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கணக்காய் இருந்தான். அவன் தன்னை கண்டு romantic scene  ஓட்டுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு கடமையே கண்ணாய் வேலை செய்து கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க காண்டாகியது. யாரும் கவனியாத நேரம் அவனை ஒதுக்குப்புறமாய் இழுத்துச் சென்றவள்,

“டேய் டால்டா!!!! என்னடா பார்க்கவே மாற்ற!! இந்த saree, makeup ‘லாம் யாருக்காக….சரியான தத்தி டா நீ..உன்ன வச்சுகிட்டு நான் என்ன தான் பண்ண போறேனோ!!!!! என்று கூறிக் கொண்டே அவன் முடியை பிடித்து ஆட்டினாள்.

“வேற என்ன டி பண்ணனும், அங்க எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா!!!” என்று கூறியவனை பார்த்து கொலை வெறி ஆனவள் கோபித்துத்கொண்டு கிளம்ப, பின்னிருந்து அவள் இடை வளைத்தவன், 

“அடி என் நெஞ்சில…ஏன்டியம்மா வத்தி வக்கிர….அஅஅஅ..” என்று பாட, 

“உன் ஆசைய…எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிர…ஆஆஆஆ” என்றும் அடுத்த வரியை பாடினாள்.

“செம்ம அழகா இருக்க டி பச்சக்கண்ணி!!!! அப்டியே கடிச்சி சாப்ட்ற போறேன்!!! என்றவன் பச்சக் என்று அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு செல்ல, இவளுக்கோ ஐஸ் பெட்டியை தலையில் கொட்டியது போல் குளுகுளு என்றிருக்க குங்குமமாய் சிவந்து நின்றாள். சிரித்துக் கொண்டே அவள் தொட முடியா தூரம் சென்றவிட்டான். 

 

பிறகு,

Book படித்துக் கொண்டிருந்தவனின் மடியில் அமர்ந்து அவன் புருவம், கண், மீசை, கன்னக்குழி என்று ஒவ்வொன்றாய் தொட்டு தடவி அளவெடுத்தவள், 

“உனக்கு என்மேல கோவமே வராதா அதி.”

 

“ஏன் டி ??” 

 

“இல்ல, நான் எவ்ளோ சேட்டை பண்றேன், நீ வேலை பார்க்குற நேரத்துல எவ்ளோ disturb பண்றேன். இந்த செந்தில் கூட என்ன எப்பயாவது அடிப்பான் திட்டுவான், ஆனா நீ ஒரு நாள் கூட என்மேல கோவப்பட்டது இல்ல சண்டை போட்டது இல்ல, ஏன்! லைட்டா முகம் சுளிக்க கூட இல்ல!!!!!

 

“நீ பண்றதெல்லாம் disturbance’ஆ பாப்பா!! அப்டினா அது எனக்கு ரொம்ப புடிச்ச disturbance தான்…..எவ்ளோ வேணாலும் disturb பண்ணிக்கோ….இந்த குட்டி பொண்ணு முகத்த பாத்தா தூக்கி கொஞ்சனும்’னு தான் தோனுது டி!! ” 

 

“ஹான்…தோனும்….தோனும்…என் இடுப்ப கொஞ்சம் விடுறீங்கலா sir….” 

அந்நேரம் பக்கத்து வீட்டில் கணவன் மனைவி சண்டை நடக்க, குடுகுடுவென்று ஓடிப்போய் பார்த்தவள், 

“ஐயோ!!! பாவம் அதி அந்த பொண்ண எப்டி திட்றார் பாரேன்!!!” என்று வருத்தப்பட்டாள். 

 

” ஹ்ம்ம்….இப்ப நீயே feel பண்ற பாத்தியா…..நமக்கு இருக்கது ஒரு வாழ்க்கை பாப்பா, அதையும் ஏன் இப்டி தேவை இல்லாம சண்டை போட்டு waste பண்ணனும்….லைஃப்’அ நமக்கு புடிச்ச மாதிரி மாத்திகிறது நம்ம கை’ல தான் இருக்கு….அந்த couple’கு life’ஓட அருமை தெரியல…அதான் ஒன்னும் இல்லாத விஷயத்த சண்ட போட்டு life’அ complicated ஆக்கிக்குறாங்க….ஆனா நான் அப்டி இல்ல….நான் வாழ்ற ஒவ்வொரு செகென்டையும் ரசிக்கனும்….அதுவும் உன்கூட இருக்கும்போது….என் வாழ்க்கை சொர்க்கம் டி பாப்பா!!!!” 

 

இப்படி அன்பே உருவாய் இருந்தவனை காதலாக பார்த்தவள் அவன் அதரத்தில் இதழ் பதிக்க நெருங்க…..

வசீகரமான அவன் முகமோ அடுத்த நொடி சிதைந்து கொடூரமாய் மாறியது. அதைப்பார்த்து வீல்ல்ல்!!!! என்று அலறிக்கொண்டு எழுந்தாள் ருத்வி.  

 

வெளியே இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு உள்ளே வர, பித்து பிடித்தவள் போல உயிரே போகும்படி கத்திக்கொண்டிருந்தாள். 

“இல்ல!!!…இல்ல!!!…இல்ல!!!…அது என் அதி இல்ல!!!!!!!!!!!!!!! “

“செந்தில்…அதி…அது என் அதி இல்ல..வேற யாரோ….அதி’க்கு ஒன்னும் ஆகி இருக்காது, அவன் இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பான்…..வா..வீட்டுக்கு போகலாம் ….”

அவள் பாட்டுக்க பேசிக்கொண்டே போக….

“பாப்பா….அழுதிடு மா….இப்டி இருக்காத மா….அதி போய்டான் நம்மல விட்டு….இனி திரும்ப வரவே மாட்டான்….போய்டான் டி விட்டுட்டு…” என்று அவனும் அழுது புலம்ப…அவன் சட்டையை பிடித்த ருத்வி…

“ஏய்!!!! நான் தான் சொல்றேன்’ல…அது என் அதி இல்ல’னு…அவன் போய்டான் ‘னு சொல்வியா நீ…என் அதி டா அவன்..என்ன விட்டு எங்கயும் போக மாட்டான்..!!!” என்று அவனை போட்டு அடிக்க…பொறுத்து பார்த்தவன் ஓங்கி ஒரு அறை விட்டான்.

“பாரு டி இத….அவன் போட்டுட்டு போன ட்ரெஸ், அவன் ஃபோன், ஹெல்மெட், பர்ஸ், ப்லட் க்ரூப்….எல்லாம் அவனோடது…அதி செத்துட்டான்…அவன் பாடிய நீ தான் வாங்கனும் !!!!!

உடைந்து போய் பெட்டில் அமர்ந்தாள். ஆனாலும் ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை. 

விவரம் தெரிந்த நாளிலிருந்து தன் உலகமாய் இருந்தவன் ஒரு நொடியில் மறைந்துவிட்டானா!!! இருக்கவே இருக்காது!!! அவன் இல்லாமல் தன் உலகம் எப்படி சுழலும்……தன்னுடன் இருப்பது சொர்க்கம் என்றானே..அவனில்லாத சொர்க்கமும் எனக்கு நரகம் தானே…தன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருப்பவன்…..தான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றாய் ஆனவன்….இப்போது இல்லையா…..அவ்வாறு நினைக்க கூட முடியவில்லை….இதயம்…மூளை என்று ஒவ்வொரு பாகமும் சுக்கு நூறாய் சிதறுவது போல் இருந்தது. அழுத்தம் தாளாமல் மறுகணம் மயங்கி விழுந்தாள். 

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ருத்வி’யின் நிலைமை என்னாகுமோ என்ற கவலையே மேலோங்கியது. 

 

ஆதினி’க்கு தன் வாழ்க்கையை திரும்ப பார்ப்பது போல் இருந்தது. தானும் இவ்வாறு தானே கணவனை இழந்து தவித்தோம். தற்போது ருத்வியின் நிலையை நினைக்க நினைக்க ஈரக்குலை நடுங்கியது. கடவுளுக்கு தான் எத்தனை கல் நெஞ்சம், இப்படி பாதியில் பறிப்பதற்கு எதற்காக இரு உள்ளங்களை இணைக்க வேண்டும். எதற்காக அன்பு, காதல் , பாசம்,நேசம் என்று கொட்டி உயிரையே வைக்க வேண்டும். பாதியில் பிடுங்கக்கொள்வதாய் இருந்தால் அந்த அழகிய பொக்கிஷத்தை கொடுக்காமலே இருந்திருக்கலாமே. இவ்வாறாக தன் மனக் குமுறல்களை கண்ணீர் வழியே கொட்டிக் கொண்டிருந்தார் ஆதினி. கண்ணீர் விடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். 

  

செந்திலோ…தன் நண்பனின் உயிரைக் குடித்த எமன் மட்டும் கையில் கிடைத்தால் எமலோகத்தையே அழித்துவிட்டு தன் உயிரானவனை மீட்டு வர எண்ணினான். அவ்வளவு தணல் கனன்று கொண்டிருந்தது அவன் நெஞ்சில். உடனே கதிரை அழைத்து bulldozer காரனை பார்க்க வேண்டும் என்று சொல்லி புறப்பட்டான். 

ஆக்ஸிடன்ட் மற்றும் மணல் கொள்ளை கேஸ் ஆதலால் பிரேத்தை சீக்கிரம் தர மறுத்தனர்.

 

கஜல் ருத்வி’யின் பெற்றோரோ தன் மகளின் வாழ்வு கேள்விக்குறியானதை நினைத்து இரத்த கண்ணீர் வடித்தனர். என்ன இருந்தாலும் பெற்ற மகள் ஆயிற்றே, பாசம் இல்லாமல் இருக்குமா, அதை வெளிக்காட்டத்தான் இருவரும் தவறி விட்டனர். இப்படி ஓடி ஓடி உழைத்தது யாருக்காக, தன் செல்ல மகள் கேட்டதை அவள் காலடியில் போட்டு சந்தோஷப் படுத்த, ஆனால் பிள்ளைக்கு தேவை பணம் இல்லை…பாசம் என்பதை உணர மறந்தனர். 

தன்னவனை கரம் பிடிக்க ஆசை கொண்டு பெற்றோர்களிடம் தெரிவித்தாள், அவர்களுக்கோ….தன் மகளை தன் ஸ்டேட்டஸ்’கு ஏற்ற  தொழிலதிபருக்கு கட்டி வைத்து ராணி வாழ்க்கை வாழனும் என்ற ஆசை, ஆனால் மகள் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து அதியை பற்றி எடுத்துரைத்தால் நிச்சயமாக சம்மதித்திருப்பர். ஆவர்களுக்கோ மகள் கேட்காமல் திருமணம் செய்து கொண்டாள் என்ற ஆதங்கம், இவளுக்கோ தன் அதியை ஏற்க மறுத்தவர்களிடம் மன்றாடுவதா என்ற ஈகோ. ஆனால் திருமணமாகி சென்றவுடன் தான் மகளின் அருமை புரிந்தது, அவளிடம் பாசம் காட்டவில்லை என்றாலும் தூரத்தில் இருந்து ரசிப்பர்…..அதற்கும் இப்போது வழி இல்லை என்றவுடன் அவள் கணவனுடன் வேலைக்கு புறப்படும் நேரம், தூரத்தில் இருந்து பார்த்தே மன நிம்மதி அடைவர். அவளை அப்படி தாங்கினான் அதி. தன் அருமை மாப்பிள்ளைக்கு இந்த நிலையா!!!!

 

                                                              ***********

 

மயக்கத்தில் படுத்திருந்த கஜல் ருத்வி தன் கன்னத்தில் இதமான ஸ்பரிசத்தை  உணர்ந்தாள். விழி திறந்து பார்த்தவளின் எதிரில் அதே நிர்மலமான புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தான் அதி. கண் கலங்க அவனை பார்த்தவள், தான் அணு அணுவாய் ரசித்த அவனின் வதனத்தை தொட்டுரசினாள், 

“ஏன் விட்டுட்டு போன!!! “

அவனோ அவளின் மென்கரத்தில் இதழ் பதித்தான்.

இது என்ன விந்தை, பிம்பத்தின் ஸ்பரிசத்தை உணர முடியுமா….

“உன்ன விட்டுட்டு எப்டி போவேன் பாப்பா!!!  அதுவும் என் உயிர் உன்கிட்ட இருக்கும்போது!!!! ” 

“அப்ப நானும் செத்துடேனா????”

“அதுக்குள்ள என்ன டி அவசரம்….உன் முடி எல்லாம் க்ரே (grey) ஆகி…தோல் சுருங்கி…நீ கொள்ளுப் பாட்டி ஆனதுக்கு அப்பறம்…ரெண்டு பேரும் சேர்ந்தே போய்க்கலாம்….சரியா பாப்பா ” என்று கொஞ்சலுடன் கூறியவனை விழி விரிய பார்த்தவள், அப்போது தான் அவனை நன்றாக உற்று பார்த்தாள். 

தலை, கை முட்டி, கால் என அங்கங்கே கட்டு போட்டிருந்தான். டக்கென்று பெட்டிலிருந்து எழுந்தவள் அவன் முகத்தை இரு கரங்களில் பற்றிக்கொண்டாள். அந்நேரம் உள்ளே வந்த செந்தில் ,” நீ சொன்னது உண்மை தான் பாப்பா!! அது உன் அதி இல்ல….உன் அதி உன்ன விட்டு எங்கயும் போகல…” என்று கூறிக்கொண்டே வாங்கி வந்த சாப்பாட்டை வைத்துவிட்டு போனான். 

 

இதைக் கேட்டவளுக்கோ தற்போது தான் நின்ற உலகம் சுழல ஆரம்பித்தது. அவ்வளவு நேரம் ஒரு பொட்டு கண்ணீர் சிந்தாதவள், மடை திறந்த வெள்ளமாய்  அவனை தாவி அணைத்துக்கொண்டு கதற ஆரம்பித்தாள். விட்டால் துளைத்துக் கொண்டு அவனுக்குள்ளேயே போய்விடுவாள் போல, அவ்வளவு இறுக்கம். 

அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் ஆதுரமாய் அவள் தலையை தடவிக் கொடுத்து முத்தமிட்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ, ருத்வி’யின் கையில் ஏற்றிய venflon’ல் இரத்தக்கசிவை உணர்ந்தவன் பதறி, 

“பாப்பா!!! ரத்தம் வருது பாரு!!” 

அவள் கையை விடுவிக்க முயன்றான், அவள் விட்டால் தானே, அழுகை தான் கூடியதே தவிர ஒரு இன்ச் அசையவில்லை. 

“மா!! கை காட்டு மா!!!”

“கை விட்டா….காணாம போய்ற மாட்ட”ல!!!!”

அதியனின் விழிகள் குளமானது. 

“செல்லோ!!!! இங்க பாரு டி….இனி  உன்ன விட்டு ஒரு நொடி கூட பிரிய மாட்டேன்….சரியா!!! இப்ப கை காட்டு..” 

தன் மடியில் அவளை அமர்த்திக்கொண்டே venflon’ஐ சரி செய்தான். 

“இதென்ன தலை’ல கட்டு….எப்டி அடி பட்டுச்சு அதி..” 

தனக்கே அடி பட்டது போல் விழியில் வலி தேக்கி கூறியவளை வாஞ்சையாய் பார்த்தவன் நடந்ததைக் கூறத் தொடங்கினான். 

 

                                                                      ********

              

நடந்தது என்ன?

இறந்தவன் யார்?

 

            முதல் நாள் இரவு ஆதினி’யை பார்த்து விட்டு திரும்ப சென்ற அதியனுக்கு மருத்துவமனையிலிருந்து  அவசர அழைப்பு வர, விரைந்து சென்றவன் அங்கிருந்து கிளம்பவே மணி 12 ஆகியது. ருத்வி தூங்கியிருப்பாள் என்று அவளுக்கு அழைக்காமல் விட்டுவிட்டான். ஆற்றோரத்தில் இருக்கும் குறுக்கு வழி சாலையில் சீக்கிரம் வீட்டிற்கு போய்விட எண்ணி பைக்கை வேகமெடுத்தான்.  எங்கிருந்தோ அசுர வேகத்தில் வந்த பைக் சடீர் என்று மோதித் தள்ளிவிட இருவருமே பறந்து சென்று ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தனர்.

அதில் அதியனுக்கு தலையில் அடிபட்டு மயக்கம் வந்துவிட, மோதியவனின் பைக்கோ மரத்தில் இடித்து முன் பக்கம் அடி வாங்கி இருந்தது, அவனுக்கும் சிறு சிறு அடிகளே. 

காலேஜ் படிக்கும் வயதுடைய இளைஞன், அவன் கும்பலுடன் ஆற்றோர புதருக்குள் மது அருந்திக் கொண்டிருக்க….அவர்களிடையே ஆன கைகலப்பில் ஒருவனை சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொன்றுவிட்டான். மற்றவர்களோ போதையின் வீரியத்தில் மட்டையாகிக் கிடந்தனர். இரத்தம் படிந்த ஆடையோடு என்ன செய்வதென்று தெரியாமல், பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அசுர வேகத்தில் போய் எதிரே வந்த அதியனின் மேல் மோதிவிட்டான். 

பைக்கோ மர்கயா….உடையிலோ இரத்தம்…அங்கிருந்து உடனே தப்பிக்க எண்ணியவன் பதற்றமாக அதி’யை பார்த்தான்… எக்ஸ்சேஞ் ஆஃபர் போல் அவன் ஆடைகளை இவன் போட்டுக் கொண்டு….இரத்தம் படிந்த உடையை அதி’க்கு மாற்றிவிட்டு…..அவனை இழுத்துச்சென்று புதர் மறைவில் போட்டான். உடையை மாற்றியவன் அவனின் உடைமைகளை மாற்ற மறந்துவிட்டான். அதி’யின் பேண்ட் சட்டையோடு அவன் ஃபோன், வாலெட் என்று எல்லாம் இருந்தது. அதி’யின் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அடி வேறு பட்டதில் பைக் ஓட்ட சற்று சிரமமாக இருந்தது, மெதுவாகவே ஓட்டிச்சென்றான்.  

அவனின் கெட்ட நேரம் புல்டோஸரின் அடியில் விழுந்து நசுங்கி விட்டான். 

என்றும் இல்லாமல் அன்று ரோந்து வந்த போலீஸார், செத்தவனை கொண்டு போக….வீட்டாரிடம் அவனின் உடைமைகளை காட்டி…அது அதி’யே என்று உறுதியாக நம்பிவிட்டனர். போதாததற்கு இருவரின் ப்லட் க்ரூப் வேறு O+ ஆகவே இருந்தது, சந்தேகத்திற்கே இடமில்லாமல் போனது. 

விடியற்காலையில் புதருக்குள் இருந்த ஒவ்வொருத்தனாக போதை தெளிந்து….குத்து பட்டு கிடந்தவனை கண்டு மிறண்டு ஓட….சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் அனைவரையும் போலீஸ் வேனில் அள்ளிப் போட்டனர். சிறிது தூரத்தில் அடிபட்டு மயங்கிக் கிடந்த அதியையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

Bulldozer காரனை பார்க்க ஆவேசமாய் போய்க்கொண்டிருந்த செந்தில்’க்கு போலீஸாருடன் எதிரே வந்த அதி’யை பார்த்து மண்டை வெடித்தே விட்டது. தனக்கு தான் ஒரு வேலை மூளை குழம்பிவிட்டதோ என்று நினைத்தான்.

 

“மாமா!!!! இங்க என்ன டா பண்ற!!! பாப்பா எங்க டா….யாருக்கு என்ன ஆச்சு……டேய்….ஏன் டா இப்டி பார்க்குற…மாமா…பேசு டா….”

 

“உண்மை’லயே நீ தானா மச்சான்!!!”

 

“நான் தான்டா!!!! என்ன ஆச்சு!!!”

 

அவனை தாவி அணைத்தவன், நடந்ததைக் கூற, தலையில் கை வைத்து அமர்ந்தே விட்டான் அதி. செந்திலோ சென்டிமென்ட் சீன் ஓட்டிக்கொண்டிருக்க…. காண்டாகியவன்  

“பாப்பா எங்க டா!!! ” என்று அடிக்குறலில் சீற, அவனை வார்டிர்க்கு அழைத்துச் சென்றான். ருத்வி மயங்கி விழுந்தாள் என்ற செய்தியே அவன் இதயத்தை பிசைந்தது. 

 

அங்கேயும் அன்னையின் கண்ணீர் மழையிலும் மாமனார் மாமியாரின் பாச மழையிலும் தொப்பலாய் நனைந்தவன் இறுதியாய் தன்னவளை காண உள்ளே சென்றான். 

 

கஜல் ருத்வி, ஒரு இரவு தன்னை காணாது வாடி வதங்கிய மலராய் கிடக்கறாள். ஒருவேலை உண்மையாகவே தான் இறந்திருந்தால் ???? 

 

நெஞ்சம் பதறுதடி ருத்வி..

நின் நேசம் கண்டு!!!….

சாதல் அஞ்சினேனடி..

நின் காதலால்!!!!…

நின் கைகள் கோர்க்க…

மீளமுடியா அந்தகனிடமும் 

மீண்டு வருவேனடி கோடி முறை!!!!

நின் அம்பகம்’தனில் 

ஒரு முறை சிக்கிய நான்

விரும்பியே அதில் மீளா 

சிறை கொள்கிறேனடி!!!!!!

என் வாழ்வில் அர்த்தம் 

யாதெனக் கேட்டால்…

ஒற்றை வார்த்தையில் உரைத்திடுவேன்..

ருத்வி என்று!!!!!! 

 

                                                                           ***********

 

          இவையனைத்தையும் கேட்டு முடித்த ருத்வி காற்று கூட புக முடியாதபடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். 

கேஸ்’ஐ சுமூகமாக முடித்து அனைவரும் வீடு திரும்பினர். அடி பட்டுக்கிடந்த அதி’யை குழந்தையை கவனிப்பது போல் பக்குவமாக பார்த்துக்கொண்டாள். ருத்வியின் பெற்றோருக்கோ தங்கள் சேட்டைக்கார அடங்காப்பிடாரி பெண்ணா இவள் என்று ஒரே ஆச்சரியம். ஆதினியாளோ தன் குடும்பத்தை இதே நிம்மதியுடன் வைத்திருக்குமாறு கடவுளுக்கு நன்றி உரைத்தார். செந்திலோ தான் எப்போதும் பார்க்கும் வேலையான சிவபூஜை கரடி character’ஐ செம்மையாகவே செய்தான். அதனால் இவனுக்கு கால்கட்டு போட்டு உட்கார வைக்க முடிவெடுத்தாள் ருத்வி. பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்தது. அடுத்த மாதம் திருமணம்.

ருத்வி எப்போதோ பழைய நிலைக்கு திரும்பிவிட்டாள். அவளை சமன்படுத்த அதியின் கீற்றுப் புன்னகை போதாதா!!!!!!!

                                                                           ***********

மூன்று மாதங்கள் கழித்து:

பீச் ரெசார்ட், கோவா. 

 

மாலை மங்கும் நேரம்..

யாருமற்ற கடற்கரை ஓரம்…

முடிவில்லா பாதையில் நீயும்..

உன் கால்தடமே பாதையென்று நானும்…

பிண்ணிப் பிணைந்த கரங்களுடன்..

பாதம் தீண்டும் அலைகளுடன்…

நயனங்கள் நான்கும்…

மொழியற்ற பாஷையில் 

கதைத்துக்கொள்ள….

எல்லையற்ற வாழ்க்கையில் 

பயணம் கொள்வோம் நாமும்!!!!!!!

    

         கவிதை கூறிய ருத்வி நாணத்தால் சிவந்தாள் கள்வன் அவனின் மயக்கும் பார்வையில். 

         அவள் கூறிய கவிதையின் விதமே கடலோரமாய் இருவரும் பயணித்துக் கொண்டிருக்க….

“மாச்சான்…..!!!!  இரு டா….!!!! நாங்களும் வர்றோம்….!!” 

எனக் கூவிக் கொண்டே தன் மனைவி சரயு’வுடன் ஒடி வந்தான் செந்தில்.

“டேய்!! கரடிடிடி !!! ஹனிமூன் அப்பயும் ஏன்டா டார்ச்சர் பண்ற!!!!” 

“ஏன்’னா நீ என் நண்பேன்டா!!!!! 

என அவன் தோளில் கை போட்டான் செந்தில். அங்கு இதமான சிரிப்பலை பரவியது. 

அழகான வாழ்க்கையை அனுபவித்து சந்தோஷமாய் வாழட்டும். இவர்களின் பயணமும் இனிமையாய் தொடரட்டும். 

 

                                            சுபம்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. மிக அருமை. 👌👌👌ஏதோ திகில் கதை வாசித்தது போல இருந்தது. அதி 👍👍 முடிவு 👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் 💐💐💐

  2. ருத்வி அதியோட ஒவ்வொரு சீனும் அவ்ளோ க்யூட்..ருத்வி மயங்கியது,செந்தில் அழுத சோகமான சீன் வாசிக்கும்போது எனக்கும் அழுகை வந்துருச்சு..கவிதைகள் வேற லெவல்..அற்புதம்..எனக்கு ரொம்ப பிடிச்சது..

    சாதல் அஞ்சினேனடி
    நின் காதலால்…
    நின் கைகள் கோர்க்க
    மீளமுடியா அந்தகனிடமும்
    மீண்டு வருவேனடி கோடி முறை..
    செம்ம வரிகள்..அழகோ அழகு

    ஆதினியோட பாசம்,செந்திலோட நட்பு எல்லாம் அருமை.. வாழ்த்துக்கள் சிஸ்