அத்தியாயம் -20
மாதவனை தேடி கொண்டிருந்தாள் அஷ்வினி. ஆனால் எங்கேயும் அவனை காணவில்லை, ” ஒரு வேள லீவ் போட்டுட்டாரோ? ஏன் லீவ் போட்டாரு. உடம்பு சரி இல்லையா? நேத்து கூட என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தாரு. என்னவா இருக்கும்? போன் பண்ணி பாக்கலாமா? என்னனு கேக்கறது? திடீர்னு போன் பண்ணா அவர் நம்மள பத்தி ஏதாவுது தப்பா நெனச்சிட்டா. நம்ம மேல எவளோ அக்கறையா இருக்கறாரு.. அவரு லீவ் போட்ட அப்போ போன் கூட பண்ணலனு யோசிக்க மாட்டாரா ” கேள்வியும் அவளே பதிலும் அவளே என அவள் குழம்பி கொண்டிருக்க.
“என்ன பஞ்சுமிட்டாய், சிந்தனை ரொம்ப பலமா இருக்கு ” மாதவ்வின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், ஒரு நிமிடம் அவன் உண்மையாகவே தன் கண் முன் தான் இருக்கிறானா என்ன விழி விரித்து உறுதி செய்து கொண்டாள்.
” இப்படி எல்லாம் சைட் அடிக்காத, அப்றம் எனக்கு பிம்பில்ஸ் வந்துருச்சுனா எங்க அம்மாட்ட உன்ன போட்டு கொடுத்துருவேன்”
அவன் பேச்சில், உடனே அவள் பார்வையை தாழ்த்தி கொள்ள அதில் மென்னகை புரிந்தவன்,
“ம்ம் சொல்லு எதுக்கு என்ன தேடிட்டு இருந்த? ” அதில் அதிர்ந்தவள்,
” ஹேய்.. எப்படி உங்களுக்கு எல்லாமே தெரியுது. நா மனசுல நெனச்சாலே கண்டு புடிச்சறீங்க? எப்படி? ” என்றாள் குழப்பமாக.
” அதுவா கிட்ட வா சொல்லுறேன் ” என்றவன் அவள் காதருகே குனிந்து,
” உன் ஹாண்ட் பேக்ல முட்ட மந்திரிச்சி வெச்சிருக்கேன். நீ எங்க போற என்ன பண்ணுற, என்ன நினைக்கறனு எல்லாமே அந்த முட்டைக்குள் இருக்க பட்சி எனக்கு சொல்லிரும் ” கண்ணை உருட்டி அவன் சொல்ல , வாயில் கை வைத்து அவனை பார்த்தாள்.
” நா சொன்னா அந்த பட்சி உன் ரத்தத கூட உறிஞ்சி குடிச்சிரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாமா? ” சிரிப்பு கலந்த ஹஸ்கி வாய்ஸில் அவன் பேச, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டிருந்தாள் அஷ்வினி.
அதில் சத்தமாகவே சிரித்தவன், ” உன்ன பத்தி எனக்கு தான் பஞ்சுமிட்டாய் முழுசா தெரியும் ” என்றான் அர்த்தமான பார்வையோடு. அந்த பார்வையின் பொருள் விளங்கவில்லை என்றாலும் அதை பெரிதாக பொருட்டு படுத்தி கொள்ளாதவள் அவள் விஷயத்திற்கு வந்தாள்.
” கண்மணி ஏன் இன்னும் வரல? ஒரு வாரம் ஆச்சு இன்னுமா அங்க வேல முடில? “
” அவ அங்க ஜோடி சேராம இங்க வர மாட்டா “
“என்னது!!?”
” ஆமா அவ நம்ம பாஸ விரும்பறா..! கொஞ்சம் பிரச்னை அதுலாம் சரி பண்ணிட்டு வந்தா ஜோடியா தான் வருவேனு சபதம் போட்டு இருக்கா. உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் தானே? “
“ம்ம்ம் அன்னிக்கு கண்மணி சொன்னா ” என்றாள் யோசனையாய்.
” ஏன் பஞ்சுமிட்டாய் லவ் பண்ணா தப்பா என்ன? ” அவளின் பதிலிற்காக அடித்து கொண்டது அவன் மனம்.
“தப்பு தான்..! அப்படினு நெனச்சிட்டு இருந்தேன், ஆனா இப்போ “
“இப்போ!?”
” புடிச்சா பண்ண வேண்டியது தான், அதுல என்ன தப்பு இருக்கு கடவுள் எந்த ரூபத்துல்ல நல்லது பண்ணுவாருனு நமக்கு எப்படி தெரியும் ”
துள்ளி குதிக்காத குறை தான் மாதவனிற்கு..! மனமது குத்தாட்டம் போட அதை வெளி காட்டி கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டு போனான்.
” அச்சோ.. தேங்க் யூ சோ மச் பஞ்சுமிட்டாய்..!” என்றவன் சிரித்து கொண்டே அவள் கையை பிடித்து கொள்ள, காரணமே இல்லாத அவனின் புன்னகை அவளிற்கும் ஒட்டி கொள்ள,
” எதுக்கு ” என்றாள் அதே சிரிப்போடு.
இதற்கு மேல் அவள் அருகில் இருந்தால் எதயாவது ஒளறி விடுவோம் என பயந்தவன் தலையை இடவளமாக அசைத்து விட்டு அங்கிருந்தான் சென்றான்.
“அய்யோஓஓ அம்மா பேய்யி என்ன யாராவுது காப்பாத்துங்க ” கார்த்தி கத்திய கத்தில் தூங்கி கொண்டிருந்த வருண் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான்.
அங்கு சோஃபா மீது ஏறி தலைவிரி கோலமாக இன்று கொண்டிருந்த கண்மணி, கொலை வெறியோடு கார்த்தியை முறைத்து கொண்டிருந்தாள்.
வருணை பார்த்ததும் அவனிடம் ஓடி வந்தவன், “மாப்ள என்ன பேய் வேஷம் போட்டு மிரட்ட பாக்குது டா இந்த குட்டி சாத்தான் ” என கண்மணி மீது அவன் குற்றம் சாட்ட, ஏற்கனவே அவன் அவளை பார்த்து கத்தியதில் கோவமாக இருந்தவள் அவனின் குட்டி சாத்தான் என்ற அழைப்பில் கையில் வைத்திருந்த சீப்பை அவனை நோக்கி தூக்கி எறிந்தாள். அதை வாகாக கேட்ச் புடித்தவன், ” பார்றா பார்றா வெப்பன்ஸ் எல்லாம் யூஸ் பண்ணுறா குட்டிசாத்தான் “
” டேய்..! யாருடா குட்டி சாத்தான்? நீ தான் பெரிய சாத்தான், குட்டி போட்ட சைகோ சாத்தான்..!” சோஃபாவில் இருந்து கீழே குதித்து அவனை அடிக்க பாய, அவளிடம் இருந்து தப்பித்து அவன் ஓட அவள் அவனை துரத்த, என்ன வீடே ரணகளம் ஆகிவிட்டது.
காலை எப்பொழுதும் போல் அதிகாலை எழுந்த கார்த்தி ஜாகிங் செல்ல எத்தனிக்க, அங்கு சோஃபா மீது ஏறி இன்று தலையை துவட்டி கொண்டிருந்தாள் அவள். கண்மணிக்கு இடை வரை தொங்கும் நீளமான முடி, முடியை முகத்திற்கு முன்னால் போட்டு கொண்டு, ‘ வா நூ காவலையா…நூ காவலையா..ராஆ..ராஆஆ..ஆஆ…’ என அவள் பாட்டை முனுமுனுத்து கொண்டே தலையையும் கையையும் அதற்கு ஏற்றவாரு ஆட்ட, ஏற்கனவே லைட் போடாமல் இருந்த இருட்டில் அவளை பார்த்து பயந்து தான் போனான் கார்த்திக்.
இதை கேட்ட வருண் விழுந்து விழுந்து சிரிக்க,
“ஆதீ..!!” என்றவள் சினுங்க,
“மாப்பு ” என்றவன் வருணை தோளோடு அணைத்து கொள்ள, தலையில் அடித்து கொண்டான் வருண்.
“வீடா இது!? மிக்ஸி தான் ஒழுங்கா வேல செய்யலனு பாத்தா உன் வீட்டு ஃபேன் கூட ஒழுங்கா வேல செய்ய மாட்டேங்குது..! யாராவுது ஃபேன்ன அவளோ ஹயிட்டா மாட்டுவாங்களா? கொஞ்சம் கூட காத்தே வரல..! அப்றம் எப்படி நான் என் முடிய காய வெக்கறது!? அதான் சோஃபா மேல ஏறி நின்னு தல துவட்டுனேன்..!”
” நீ குட்ட வாத்துனு சொல்லு, சும்மா என் ஃபேன்ன குத்தம் சொல்லாத”
“யாரு நா குட்ட வாத்தா!? நீ தான் வெட்டாத தென்னமரம் உன்ன மாறியே எல்லாரும் இருக்க முடியுமா?”
அதற்கு அவன் பதிலடி கொடுப்பதற்குள் அவன் வாயை பொத்தினான் வருண்.
” நீ எப்போ இருந்து டா அவ கூட சரி சமம்மா சண்ட போட ஆரம்ச்ச!? “
“அதுலாம் கேம்ப்ல இருக்கும் போதுல இருந்தே என் கூட எப்பவும் சண்ட தான். அவன நம்பாதீங்க ஆதி, உங்க மேல இருந்த கடுப்புல என்ன எவளோ டார்ச்சர் பண்ணி இருப்பான் தெரியுமா “
“ஹேய்.. அத எல்லாம் ஏன் பேசற மாப்ள அத பத்தி எல்லாம் பேச வேண்டாம்னு சொல்லுடா “
” அதுலா முடியாது நா சொல்லுவேன், ஆதி ஆதி அன்னைக்கு ஒரு நாள் ஆட்டு குட்டிய புடிச்சிட்டு வந்து.. ” என அவள் ஆரம்பிக்க.
” ரெண்டு பேரும் போடுற சண்டையில்ல பசியே வந்துருச்சு..!”
” அச்சசோ பசி வந்துருச்சா பத்தே நிமிஷம்..! இதோ இப்போ ரெடி பண்ணிறேன்” என்றவள் சிட்டாக பறந்து விட, இந்த முறையும் அவளின் அன்பின் முன்பு தோற்று தான் போனான். கண்டிப்பா இவள் இப்படி தான் செய்வாள் என அவன் யூகித்து இருந்தாலும் அதை கண்ணார காண்கையில் கலங்கி தான் போனான் அவன்.
கோதுமை உப்மாவும் தேங்கா சட்னியும் தான் செய்திருந்தாள். வருணிற்கு ஈசி டைஜிசன் ஃபுட் தான் கொடுக்க வேண்டும். அவனிற்கு என்ன செய்கிறாளோ அதான் மூவருக்குமே.
” சாப்பட உடனே ஹாப்பிட்டல் போலாம் ” கண்மணி சொல்ல அவளை கேள்வியாய் பார்த்தான் வருண்.
” எப்பவும் மதியமா தானே கெளம்புவோம் “
“இல்ல இன்னிக்கு சீக்கரம் ஹாஸ்பிட்டல் போய்ட்டு அப்படியே கோவிலுக்கு போய்ட்டு வரலாம் ” ஆப்ரேஷனிற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் மீதம் இருக்க தட்டை பார்த்து கொண்டே பேசினாள் கண்மணி.
“பஞ்சுமிட்டாய் என்கூட ஒரு முக்கியமான இடத்துக்கு வரீயா?” மாதவன் கேட்க மறுயோசனை இன்றி தலையாட்டினாள் அஷ்வினி.
அவள் சம்மதித்ததே அவனிற்கு பெரும் நிறைவு ஒன்றை கொடுக்க, அவளை அங்கு கூட்டி சென்றான்.
” வெல்கம் டூ மாதவன்ஸ் கேட்டரிங் சென்டர்!” இரு கைகளையும் விரித்து அவன் பேச புன்னகையோடு அவனை நோக்கினாள் அஸ்வினி.
” என்ன டா இவளோ சின்ன இடத்த காமிக்கறானேனு யோசிக்காத சின்ன சின்ன இடத்தில இருந்து தான் பெரிய பெரிய விஷயங்கள் வரும். ஒரு வழியா என்னயும் நம்பி கடன் கொடுக்க ஒருத்தவங்க முன் வந்துட்டாங்க அவங்களே மொத ஆர்டரும் கொடுக்கறேனு சொல்லிட்டாங்க..! அவங்க அக்கா பொண்ணுக்கு சீர் ஃபங்ஷன். ஐநூறு பேருக்கு சாப்பாடு ரெடி பண்ணனும், இந்த ஆர்டர கரெக்ட்டா முடிச்சி கொடுத்துதேனே அவங்களே நேரிய பேருக்கு என்ன ரெக்கமெண்ட் பண்ணுறேன்னு சொல்லிருகாங்க”
“சூப்பர் சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கு..! உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்போ ஆர்டர் பண்ணி தரனும்?”
“அவங்க ஃபங்ஷன் மூணு மாசம் கழிச்சு தான் வெச்சிருக்காங்க. அது வரைக்கும் டைம் இருக்கு. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்ச உடனே அடுத்த மாசம் நம்ம கம்பெனில இருந்து ரிலீவ் ஆகிட்டு முழுக்க முழுக்க இந்த வேலைய பாக்க ஆரம்பிச்சிருவேன் “
அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து போனது அஷ்வினிக்கு , ” அப்போ அதுக்கு அப்றம் இனிமே ஆஃபிஸ் வர மாட்டேங்களா? ” கவலையாக அவள் கேட்க,
” ரிசைன் பண்ணிட்டேனா நா ஏன் வரனும்? அவன் அவன் பொழப்ப பாக்க வேண்டாமா, சரி வா கிளம்பலாம் போற வழியில்ல என் ஃப்ரண்ட பாத்துட்டு போய்யிரலாம் பக்கத்துல்ல இருக்க ஹாஸ்பிட்டல்ல தான் கம்ப்பவுண்ட்டரா வேல பாக்கறான்.”
ஹாஸ்ப்பிட்டல் ரிசப்ஷனில் அவளை அமர வைத்து விட்டு, அவன் நண்பனை பார்க்க சென்று விட்டான் மாதவன்.
அமர்ந்திருந்திருந்த அஷ்வினியின் எண்ணம் முழுக்க நிறைந்திருந்தது அவன் ஒருவனே..!
“அப்போ இனிமே பார்க்க முடியாதா ” உள்ளுக்குள் சிறு வருத்தம் இழையோட அதன் காரணம் தெரியாமல் தவித்தாள் அஷ்வினி.
” இது என்ன லூசு தனமா இருக்கு. எல்லாரும் அவங்க அவங்க வாழ்கைய தான் பாத்துட்டு போவாங்க சும்மா உன் கூடயே எந்நேரமும் சுத்திட்டு இருப்பாங்களா? ஏதோ ஆஃபிஸ்ல பாத்தியா பேசினியா பழகுனியாங்கறதோட நிறுத்திக்கனும் அதுக்கு மேல எதிர்ப்பார்க்கறது உன்னோட தப்பு..!”
“எல்லாரும்லாம் இல்ல மாதவ் மட்டும் தான் “
” அப்படி உன்கூடவே இருக்கறதுக்கு அவன் யாரு? ” மூளைக்கும் மனதிற்கும் நடந்த வாக்குவாததில் களைத்து போனாள் அஷ்வினி.
” நான் அவருக்கு யாரு? ” என்ற கேள்வி அவளை வண்டாய் குடைய, அன்று அவன் சிரித்து கொண்டே,
” ஃபிரண்ட்ஸ் ” என கை குலுக்கியது நினைவிற்கு வர மனம் சற்று ஏம்மாற்றத்தை உணர்ந்தது.
” என்கிட்ட ரொம்ப அக்கறையா நடந்துக்கிட்டாரே? “
” ஜோவியலா பேசுனாலே உன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குனு அர்த்தமா? “
மீண்டும் மீண்டும் மூளை உண்மையை எடுத்துரைக்க அதை உணர பிடிக்காமல் கண்களை இறுக மூடி கொண்டாள்.
போன் அடிக்க கண் திறந்து பார்த்தாள், மாதவ் தான் கூப்பிட்டு கொண்டிருந்தான்.
” ஹாஸ்ப்பிட்டல் பேக் சைட் வா அங்க தான் இருக்கேன். வேல முடிஞ்சிது கிளம்பலாம் “
அவன் நினைவில்லேயே இருந்தவள், சரியாக வழியை கேட்காமல் அவள் பாட்டிற்கு ஒரு பக்கம் நடந்தாள்.
” ஹெலோ எங்க இருக்கீங்க? நா வந்துட்டேன் “
“எங்க உன்ன கானோம்? நீ எந்த பக்கம் வந்த “
” நா அப்படியே தான் வந்தேன். இங்க என் பக்கத்துல்ல கூட எமர்ஜென்சி என்ட்ரினு போர்ட் போட்டு இருக்கே “
“ஓ நீ அந்த பக்கம் போய்ட்டியா சரி அங்கயே இரு நான் வரேன்”
மாதவன் அங்கு வருதற்கும் ஒரு ஆம்புலன்ஸ் ஹாஸ்பிட்டலுள் நுழையவும் சரியாக இருந்தது.
ரத்த வெள்ளத்தில் இருந்த ஒருவனை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி வேகமாக உள்ளே அழைத்து செல்ல, பின்னாடி வண்டியில் வந்தவர்கள் அழுது கொண்டே உள்ளே சென்றனர்.
” ஆக்சிடென்ட் கேசு..! போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிடீங்களா ” நர்ஸ் கேள்வி கேட்டுகொண்டிருக்க, அங்கிருந்த ஒரு அம்மா தலையில் அடித்து கொண்டு மண்டியிட்டு அழுது கரைந்தார்.
” ஐயா.. ஐயா.. எப்படியாவுது எம்புள்ளய காப்பாதிருங்க ஐயா.. அவன்தேன் என் உசுரு.. “
” அம்மா அம்மா எந்திரிங்கம்மா இங்க எல்லாம் இப்படி கத்த கூடாது எதுவா இருந்தாலும் டாக்டர் செக் பண்ணிட்டு தான் சொல்லுவாங்க “
அஷ்வினிக்கு அந்த நிமிடம் அஷ்வின் தான் கண் முன் வந்து போனான். இப்படி தானே அவனின் தாயும் துடித்திருப்பார் நினைக்கும் போதே கண்களில் இருந்து குபு குபுவென கண்ணீர் கொட்ட அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்.
அவள் எதற்காக இப்படி அழுகிறாள் என உணர்ந்தவன் அவளிடம் ஓடி வந்தான்.
” ஹேய்.. அழுவாத எல்லாரும் பாக்கறாங்க எந்திரி “
ம்ஹ்ம்ம் அவள் அசைந்தபாடில்லை..!
“நா.. நா தான் கொன்னுட்டேன். எல்லாத்துக்கும் காரணம் நான் தான், இப்படி தானே அவன் குடும்பத்துல்ல இருக்க எல்லாரும் ஃபீல் பண்ணிருப்பாங்க அவங்க எல்லாரோட சந்தோசத்தையும் நா ஒருத்திய அழிச்சிட்டேன். எனக்கு வாழவே தகுதியில்ல”
“அப்படி எல்லாம் இல்லம்மா. நா சொல்லுறது ஒரு நிமிஷம் காது கொடுத்து கேளு. நம்மளையும் தாண்டி விதினு ஒரு விஷயம் இருக்கு அத யாராலயும் மாத்த முடியாது..! இப்படி தான் நடக்கனும்னு இருக்கு அவளோ தான், நடந்து முடிஞ்சத நம்மனால மாத்த முடியாது. இதுல நீ குற்ற உணர்ச்சியா இருக்க வேண்டிய அவசியமே இல்ல தயவ செஞ்சு புரிஞ்சிக்கோ “
” இல்ல நா தான் தப்பு ” என்றாள் தேம்பலாய்.
கிளி பிள்ளைக்கு சொல்வது போல் அவனும் எதனையோ முறை எதனையோ விதமாக எடுத்து கூறி விட்டான். ஆனால் புரிந்து கொள்ள மாட்டேன் என வீம்பு செய்பவளை என்ன தான் செய்ய முடியும்!?
அவள் அருகில் மண்டி போட்டு அமர்ந்தவன்.
” அழு இன்னும் நல்லா அழு..” என சொல்ல, விழுக்கென்ற அவனை நிமிர்ந்து பார்த்தாள் அஸ்வினி.
“ஏன் நிறுத்திட்ட? நா வேணும்னா அந்த பையனோட அம்மா அப்பா எல்லாம் கூட்டிட்டு வரேன். அவங்க கால புடிச்சி கெஞ்சி அழு..! நீ தானே சொன்ன எல்லா தப்பும் உன்மேலனு அந்த தப்புக்கான தண்டனைய அனுபவிக்க வேணாமா? வா போலீஸ்ல போய் சரண்டர் ஆகலாம் ” என்றவன் அவள் கையை பிடித்து இழுக்க, மிரட்ச்சியாக அவனை பார்த்து விழித்தாள் அஷ்வினி.
” என்ன முழிக்கற? ஒஹ் இதுலாம் பண்ணுறது ரொம்ப கஷ்டம்ல? உன்னயும் காயப்படுத்திட்டு உன்ன சுத்தி இருக்கறவங்களயும் கஷ்டப்படுத்துறது தானே உனக்கு ஈ.சி அதானே எப்போவும் பண்ணிட்டு இருக்க? அதயவே இப்போவும் பண்ணு. உன்ன லவ் பண்ணி தொலச்ச பாவத்துக்கு அத நானு சேத்தி அனுபவிக்கறேன்.” என்றான் விரக்தியாக.
எப்படி எப்படியோ ஆசையாக அழகாக வார்த்தை கோர்த்து சொல்ல வேண்டும் என நினைத்திருந்தது. இப்படி சொல்வோம் என அவனும் எதிர்ப்பாக்கவில்லை அவளும் எதிர்ப்பாக்கவில்லை..!
கோவில் பிரகாரத்தை சுத்தி வந்த வருண் , ” நீ போடா அவ கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன் ” என்றவன் கார்த்தியை அனுப்பிவிட்டு கண்மணியை பார்த்தான்.
தெப்பக்குளம் படித்துறையில் அமர்ந்திருந்தனர் இருவரும். நிமிடங்கள் செல்ல மௌனம் மட்டுமே இருவருக்குள்ளும் நீடித்திருந்தது.
‘எங்கே இவன் ஏடாகூடமாக எதயாவது சொல்லி விடுவானோ ‘ என்ற பயம் கண்மணிக்குள் இருக்க கையை பிசைந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
” நமக்கு ஏன் குழந்தைகள பாத்தா புடிக்குதுனு சொல்லு பாப்போம்!? “
அவனின் இந்த திடீர் வித்யாச கேள்வியில் விழித்தாள் கண்மணி.
” ஏன் எல்லாத்துக்குமே குழந்தைகனா ரொம்ப புடிக்கும் தெரியுமா? ஏன்னா நம்ம கிட்ட இருக்க சின்ன சின்ன விஷயத்த கூட அவங்க ரொம்ப வியந்து பாப்பாங்க. சும்மா கண்ணு ரெண்டயும் விரிச்சி கேலி காட்டுனாலே சிரிச்சிடுவாங்க, குழந்தைங்க நாம எப்படியோ நம்மள அப்படியே ஏத்துக்குவாங்க.அவங்களுக்கு தேவை எல்லாம் அவங்க கூட நாம இருந்தா மட்டும் போதும்.
ஆனா இதயவே சக மனுஷங்க கிட்ட எதிர்ப்பார்த்தா நம்மள லூசு பயனு சொல்லுவாங்க. ஏனா இந்த சொசைட்டி நமக்கு நேரிய ரூல்ஸ் வெச்சி இருக்கு, ஒரு ஆம்பளனா இப்படி தான் இருக்கனும் இப்படி தான் பண்ணனும்னு ஏன் நான் கூட அப்படி தான் நெனச்சிட்டு இருந்தேன். எனக்கு இந்த நோய் இருக்குனு தெரியற வரைக்கும். ” என்றவன் சிறு இடைவெளி விட்டு,
“அத கூட விடு, ஒரு ரூம்ல ஒரு பொண்ணும் பையணும் இருக்காங்க தீடிர்னு பாம்பு வருது. அப்போ அந்த பொண்ணு பயந்து கத்தி ஓடுனா நார்மல், இதே அந்த பையன் செஞ்சா பையந்தாங்கோலினு பட்டம் கட்டுவாங்க, எதுக்கும் இலாக்கி இல்லாதவணு சொல்லுவாங்க. இல்ல எனக்கு புரில எல்லாருக்கும் உயிர் ஒன்னு தானே?
இவளோ நாள் இருந்த மாறி இனி என்னால இருக்க முடியாது, அப்போ அப்போ மித்தவங்களோட உதவி தேவப்படும் அப்படிங்கற நெலமை எனக்கு வரும் போது என்னால அத ஏத்துக்கவே முடில. ஏன்னா நீ தைரியசாலி, பலசாலி, புத்திசாலியா இருந்தா தான் இந்த உலகம் உன்ன மதிக்கும் இல்லனா தூக்கி போட்டுரும். அதுனால தான் என்னய சுத்தி ஒரு வட்டம் போட்டுக்கிட்டேன் யார் கிட்டயும் இந்த விஷயத்த சொல்லல.. ஏன்னா எனக்கு பயம்..! அவங்களோட பரிதாப பார்வையை தாங்கிகற தைரியம் எனக்கு இல்லை. நா நெனச்சது சரி தாங்கறதுக்கு முதல் சாட்சி தாரிகா என்ன விட்டு போனது. சத்தியமா அவள நா குறையே சொல்ல மாட்டேன். என் நிலமையில் அவ இருந்திருந்தா நா என்ன முடிவு எடுத்திருப்பேனு எனக்கே தெரில. பயம் பயம் பயம் இவ்வளவு நாளா வாழ்ந்த வாழ்கை நமக்கு இல்லைங்கற பயம். அந்த பயத்துல்ல தான் நா டிரீட்மென்ட் கூட எடுத்துக்கல சாவ ரெடியாயிட்டேன்.
ஆனா என்னோட எல்லா பயத்தையும் ஒடச்சி எனக்குள்ள வந்துது நீ..! நா சாகறதுக்கு வெச்சிருந்த தைரியத்த வாழறதுக்கு மாத்துனது நீ..! ஆனா ஏன்? உனக்கு அப்படி என்ன நான் பண்ணிட்டேன்? “
இத்தனை நாட்களாய் மனதில் உருத்தி கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டான்.
மெல்ல புன்னகைத்தவள்,
“நா ஸ்கூல் ஹாஸ்ட்டல்ல தங்கி படிச்சிட்டு இருக்கும் போது, மாசம் ஒரு தடவ பேரன்ட்ஸ் வந்து பாக்க அல்லோவ் பண்ணுவாங்க. எல்லாருக்கும் வருவாங்க எனக்கு தவர, ஆனா அங்க போய் நின்னு பாப்பேன் எல்லாரும் என பேசிக்கறாங்கனு. அப்போ மித்ரானு ஒரு பொண்ணு ஒழுங்காவே படிக்க மாட்டா எல்லாத்துக்கிட்டயும் திட்டு வாங்குவா அவங்க அம்மா வந்த உடனே எல்லாத்தையும் சொல்லி அவங்கள கட்டி புடிச்சிட்டு அழுவா. அப்போ அவங்க அம்மா அவள ரொம்ப அழகா சமாதானம் படுத்துவாங்க. அத்தனை பேர் சொன்ன குறை எல்லாம் அவ சொல்லி முடிச்ச உடனே அவங்க அம்மா அவளோட நிறைய எல்லாம் எடுத்து சொல்லுவாங்க. உடனே அவ சந்தோசம் ஆகிருவா.
அந்த மாறி தான் நீங்க எனக்கு..! நான் பாக்கவேனா தைரியசாலி மாறி எல்லாத்துக்கூடயும் சண்ட போடலாம். ஆனா நா பண்ணுறது சரியா தப்பாங்கற பயமும் கேள்வியும் எனக்குள்ள எப்பவுமே இருந்திட்டே இருக்கும். ஆனா எனக்கு மொத மொத தைரியம் கொடுத்து என்ன சமாதனம் படுத்துனது நீங்க தான். எப்பவுமே என்னோட பிளஸ் பாயிண்ட்ட மட்டும் தான் எடுத்து சொல்லிட்டே இருப்பீங்க, இதோ இப்போ சொன்ன மாறி. ரொம்ப நாளா நா ஏங்குன என் அம்மாவோட அரவனைப்பும் கதகதப்பும் உங்க கிட்ட தான் எனக்கு கிடச்சிது..!”
தாய் போல் மனைவி அமைந்தால் வரம் என்பர்..
தாய் போல் கணவன் அமைந்தால் சொர்கம் என்று அறியாதோர்..!
“உங்க கூட இருந்தா சந்தோசமா, தைரியமா, நிம்மதியா இருக்கு”
” சில சமயம் உன்ன பக்கத்தில் இருக்க முடியாம போகுமே அப்போ என்ன பண்ணுவ? ” கலங்கிய விழியுடன் அவன் கேட்க, அவன் கரத்தை எடுத்து அவள் விரலோடு கோர்த்து கொண்டவள்.
” நீங்க என் கூட இல்ல எனக்குள்ள இருக்கீங்க. இப்பவும் எப்பவும்..!
நம்ம ஹார்ட் துடிச்சா தான் நாம உயிரோட இருக்கோம்னு அர்த்தம்.
ஆனா அது துடிக்குதா இல்லயானு தினமும் செக் பண்ணிட்டேவா இருக்கோம்? அது மாறி தான் இதுவும். நீங்க இருக்கீங்கற நெனப்பே எனக்கு போதும்”
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ‘