Loading

 

வானத்து கதிரவன் உதயமாகும் முன்பே உறக்கத்தில் இருந்து எழுந்தார் காசி..

 

எப்போதும் போல் விடியும் முன்பே எழும் பழக்கம் உடைய அவரின் மகள் இன்னும் உறக்கத்தில் இருந்து எழவில்லையே என்று அவளின் அறையை எட்டி பார்க்கும் போது குருதி படிந்த கட்டில் மட்டுமே அவரை வரவேற்றது.

 

அறையை சுற்றி தேடி பார்த்தவர் மகளை காணாது, நேற்று மகள் கூறிய வார்த்தையில் அவரின் உள்ளமோ அச்சம் கொண்டது.

 

நேற்றிரவு காசி குடித்து விட்டு தள்ளாடிய படியே வீட்டிற்கு வர, தந்தையை இன்னும் காணாது வாசலின் திண்ணையில் கன்னத்தில் கையை வைத்து முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளின் விழியில் ஆடிக்கொண்டே வந்த தந்தையை கண்டு கண்ணீர் வடித்தது.

 

தினமும் ஒரு வேசியை அழைத்து வரும் தந்தை இன்று ஏனோ ஒரு கல்லூரி பெண் வயதில் இருப்பவளை அழைத்துக்கொண்டு வர, அவளும் ஏதும் பேசாமல் உள்ளே ஓடிச்சென்று மூலையில் நிமிந்து வைத்திருந்த விளக்கமாறோடு வெளியே வந்தாள் அவள்..

 

 அவள் தான் குறிஞ்சி….

போதையில் உள்ள காசியின் கண்களுக்கு விளக்கமாறு ஒரு சிறிய குச்சியை போல் தெரிய, மகள் குச்சியை வைத்து விளையாடுகிறாள் என  நினைத்த அடுத்த கணமே, அந்த கல்லூரி பெண் மீது தூக்கி வீசினாள் துடப்பத்தை.

 

அந்த பெண்ணுக்கோ கோவம் வர, பதிலுக்கு அவளும் அந்த துடப்பத்தை எடுத்து குறிஞ்சியை நோக்கி வீச, அவளின் மேல் விழாமல் கீழே விழ, அதை எடுத்து அந்த பெண்ணின் முடியை கொத்தாக பிடித்து, ” இந்தா டி நீ எல்லாம் ஒரு பொம்பளயா, யோவ் அப்பன் உனக்கு விவஸ்தையே கிடையாதா, பொண்ணுங்க துணை இல்லாம உனக்கு தூக்கம் வராதா, நீ எல்லாம் ஒரு அப்பன் உனக்கு போயி நான் பொண்ணா பொறந்தேன் பாரு, இதெல்லாம் பாக்க வேண்டியது என் தலைஎழுத்து” என்றாள் குறிஞ்சி.

 

” அடிங்க சிறுக்கி பெத்த மவளே, நீ பொறந்த நேரம் தான் டி என்னைய இப்படி பொண்ணுங்க பக்கம் திரும்பி பார்க்க வச்சது, நீ மட்டும் பொறக்காம இருந்து இருந்தா இந்நேரம் என் பொண்டாட்டி கோசலைகூட நிம்மதியா அனுபவிச்சு வாழ்ந்து இருப்பேன், உன்னைய பெத்து போட்ட அடுத்த வருஷமே போயி சேர்ந்துட்டா, இளம் ரத்தம் டி எனக்கு, எனக்கு இன்னும்  வயசுலாம் ரொம்ப ஆவல, நான் நினைச்சா நாளைக்கே உன்னைய கொடுமை படுத்த சித்தின்னு ஒருத்திய இழுத்துட்டு வந்து நிப்பேன் டி ” என்ற காசியை அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

 

மகளுக்கும் தந்தைக்கும் நடக்கும் வாக்குவாதத்தை தெருவெங்கும் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள் மக்கள்.

 

ஒருத்தர் கூட வாயை திறந்து பேசவில்லை.

தினமும் நடப்பது தானே என்று மக்களும் வேடிக்கை பார்க்க, காசியை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தாள் குறிஞ்சி..

 

” இந்தாரு என்னைய பெத்த ஒரே காரணத்துக்காக உன்னைய சும்மா வுடறேன், நானும் தினமும் உனக்கு எடுத்து சொல்லியும் நீ காதுல வாங்குறதே கிடையாது, ஆனா இன்னைக்கு இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க, இனி நான் உனக்கு மவளும் இல்லை எனக்கு நீ அப்பனும் இல்லை. பொறவு இந்த வூட்டுல உனக்கு இடமும் இல்லை, இப்போவே நீ இங்கேருந்து எங்கேடா கெட்டு எந்த இடத்துக்கு வேணா போ, இனி உன்னைய என்ன ஏதுன்னு தெருவுல போற நாயி கூட என்னான்னு கேட்காது, ” என்று கூறிய மகளின் வார்த்தைகள் இன்னும் அவரின் செவியில் ஒலித்து கொண்டே இருந்தது.

 

வீடு முழுக்க மகளை தேடியும் மகளை காணாது தலையில் அடித்துக்கொண்டு கதறினார் காசி.

அவரின் கதறல் அக்கப்பக்கதினரின் உறக்கத்தைக்கெட, அவர்களும் என்னவென்று கேட்க, அவரும் மகளை காணவில்லை என்று கூறியதும் அடுத்த நொடியே, ” அட என்னப்பா காசி உனக்கு விவரமே தெரில. உன் மவ ஒன்னும் கோவிச்சிட்டு போல, எங்கேனா ஓடி போயி இருப்பா, நானும் ஏழு மாசமா பாக்குறேன் உன் வூட்டுக்கு ஒரு அறியாத பயல் வரான் அதுவும் மொகத்தை மாஸ்க்போட்டு மறைச்சிட்டு, அவன் மொகமே சரியா எனக்கு தெரியாதுப்பா, அதுவும் வரப்ப கையில கட்டபையி எடுத்துட்டு வருவான் அந்த பயல் ” என்று தான் பார்த்ததை அப்படியே கூறினார் அந்த பெரியவர்.

 

காசியும் நெற்றியை நீவி யார இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருந்தாரே தவிர அவருக்கு பதிலேதும் கிடைக்க வில்லை.

 

மகள் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று விசாரித்தவருக்கு தலைவலி வந்தது தான் மிச்சமே.

 

மனதை கல்லாக்கி கொண்டு வீதியில் நடக்க, அவரின் பார்வையில் பட்டது என்னவோ அவர் தினமும் மது அருந்தும் பார் தான்.

 

உள்ளே சென்றவர் ஒரு நாற்காலியில் அமர அவரிடம் வந்து அமர்ந்தான் கிஷோர்.

 

அவரும் அந்த ஆடவனை ஏறிட்டு நிமிந்து பார்க்க, அதிர்ந்து தான் போனார்.

 

” டேய் நீயா? உன்னைய நான் பார்க்ககூடாதுனு இருந்தேன் டா, உன் முகத்துல இனி முழிக்கவே கூடாதுன்னு இருந்தேன் டா, எடுப்பட்ட பயலே என்னா டா வேணும் உனக்கு ” என்றதும், அவனோ ” அய்யோ அப்பா ஏன் டென்ஷன் ஆகறீங்க, ரிலாக்ஸ் இவ்வளவு கோவம் உடம்புக்கு நல்லது இல்ல, ஆமா குறிஞ்சி அக்கா காணாம போய்ட்டாங்கன்னு எனக்கே இப்ப தான் தெரியும், நானும் எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு வரும் வழியில தான் உங்களை பார்த்தேன். ஏன் அப்பா நீங்க திருத்தவே மாட்டீங்களா குடினால தான் அக்கா காணாம போய்ட்டாங்க, நீங்க குடிச்சிட்டு கண்டவளையும் இழுத்துட்டு கூத்தடிச்சிட்டு இருகறத்தை பார்த்து தான் குறிஞ்சி அக்கா வீட்டை விட்டே ஓடிபோய்ட்டாங்க ” என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்து, ” ஏன்டா எடுப்பட்ட பயலே அப்படினு அவ உங்கிட்ட சொன்னாளா நீ பாட்டுக்கு என் மேல பழியை தூக்கி போட்ட, பொறவு ரெண்டாவது தாரத்தோட பையன் கூட பாக்க மாட்டேன் கண்டதுண்டமா வெட்டி போட்ருவேன் ஆமா உன்னைய எவன் பார்க்குலாம் வர சொன்னான், நீயும் என்னைய போல குடிகாரனா மாறிட்டீயா டா ” என்றவரை நோக்கி மூக்கில் ஒரு குத்து வைத்தான் கிஷோர்.

 

” என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்னைய, நான் உனக்கு பையனா பொறந்தாலும் எங்க அம்மா வளர்ப்பு என்னைக்கும் தப்பா போகாது, நாளைக்கு காலையில நான் வீட்டுக்கு வந்து பாக்கறப்ப குறிஞ்சி அக்கா இருக்கனும், அப்படி அக்கா அங்க இல்லை பெத்த தகப்பன்னு கூட பாக்கமாட்டேன் நானே உன்னைய கொலை பண்ணி சுடுகாடு வரைக்கும் தூக்கிட்டு போயி தீ வைச்சி எரிச்சிடுவேன் ஜாக்கிரத்தை ” என்று விரலை நீட்டி எச்சரித்து சென்றான் கிஷோர்.

 

அவரும் மகனின் மிரட்டலில் சற்று ஆடித்தான் போனார்.

 

காசிக்கு இரண்டு மனைவிகள்.

 

முதல் மனைவி கோசலை. குறிஞ்சி பிறந்த அடுத்த வருஷமே தனது வாழ்வை முடித்துக்கொண்டு இறைவனிடம் சென்றார் கோசலை.

 

மனைவியின் இறப்புக்கு பிறகு குறிஞ்சியை தனிஆளாய் வளர்த்தார். பாசம் அன்பு இவையெல்லாம் கொடுத்து வளர்ந்திருந்தால் கூட பரவாயில்ல.

சுடு சொற்கள் அடிகள் போன்ற கொடுமைப்படுத்தியே மகளை வளர்த்தார் காசி.

 

குறிஞ்சியும் அவ்வப்போது தந்தையிடம் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஒடி தெரு மூனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் படுத்து உறங்கிவிட்டு விடியலில் தான் வீட்டுக்கு வருவாள்.

 

அப்படி ஒரு நாள் கண்களில் கண்ணீரோடு வந்தவளின் பார்வையில் பட்டது என்னவோ காசி வேறொரு பெண்ணோடு உல்லாசமாய் இருந்தது தான்.

 

அப்போது அவளுக்கு வயது வெறும் பத்து. பத்து வயதில் பார்க்க கூடாததை பார்த்தவுடன் “அப்பா ” என்று கத்த, ஊரே அவளின் வீட்டின் வாசலின் நின்றது.

 

ஊர்மக்கள் அவளிடம் என்னவென்று கேட்க அறையை நோக்கி கைகாட்டினாள் குறிஞ்சி.

ஊர்மக்களும் முகச்சுழிப்போடு அவளை தங்களோடு வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

 

அன்றிலிருந்து தந்தையிடம் அடிகள் வாங்காமல் இரவு நேரம் மட்டும் கோவிலில் உறங்கி விடியும் முன்பே வீட்டிற்கு வருவாள்.

 

அவரின் தந்தையும் போதையில் எப்படி உறங்குகிறோம் என  தெரியாது ஆடைகளை கலைக்கப்பட்டு மல்லாந்து குறட்டை அடித்து உறங்குவார்..

 

இதுயெல்லாம் அவளுக்கு பழகி போனது. பத்து வயதில் இருந்தே அவளின் தந்தையை பார்த்த குறிஞ்சிக்கு எங்கேயாவது ஓடிவிடலாம் என்று இருந்தது..

 

அவளின் பதிமூன்று வயதில் காசியால் கற்பை இழத்தார் செண்பகம்.

 

எத்தனையோ பெண்களின் வாழ்வில் விளையாடிய காசியால் செண்பகம் கருவுற்று செய்து நம்ப முடியாமல் போனது.

 

” ஏன் டி நான் எத்தனை பொம்பள கூட படுத்துட்டு இருப்பேன், ஆனா அவங்க என்கிட்ட துட்டு மட்டும் வாங்கிட்டு போவாங்க, இப்படி வயித்துல புள்ளைய சுமந்துட்டு இதுவரைக்கும் எவளும் வந்ததே இல்லை டி சிறுக்கி, உன்னைய நானு கல்யாணம் பண்ணிக்கவே முடியாது டி ” என்றதும் இன்னும் தகாத வார்த்தையால் அவரை திட்டுவார்.

 

செண்பகமும் அவரை பற்றி அறிந்தது தான். ஆனால் இப்படி கரு உருவாகும் என்று அவர் நினைத்து பார்க்காதது ஒன்று.

 

வயிற்றில் உதிர்த்த ஜீவனை அழிக்க தோன்றாது அதை கருவுள்ளே வளர்ந்து கொண்டே அவ்வப்போது குறிஞ்சியையும் அன்போடு பார்த்துக்கொண்டார்.

 

மாதங்கள் நகர்ந்துக்கொண்டே செல்ல, கிஷோர் என்ற அழகான ஆண்மகனை பெற்றெடுத்தார் செண்பகம்..

 

ஆண்மகன் பிறந்தது பற்றி கேள்வி பட்ட காசி நேராக சென்றது என்னவோ செண்பகத்தை காண தான்.

 

முன்பு போல் இல்லாது தற்போது தனது தோற்றத்தையும் குணத்தையும் முழுமையாக மாறிவிட்டார் செண்பகம்…

 

மருத்துவமனை வாசம் முடித்து விட்டு இல்லத்திற்கு வந்த அடுத்த நாளே அவரை பார்க்க சென்ற காசியை வாயில் வந்த வார்த்தைகளால் திட்டி அவரின் சட்டையை பிடித்து வெளியே தள்ளியது தான் செண்பகத்தை காசி கடைசியாக பார்த்தது.

 

அதன் பிறகு அவரின் மேல் உள்ள கோபத்தால் செண்பகத்தையும் கிஷோரையும் பார்க்க செல்லவில்லை.

 

நாட்கள் உருண்டோடியாது. குறிஞ்சி பூப்பெய்தல் ஆனதும் காசிக்கு தெரியாமல் அவளை தன்னோடு அழைத்து வந்து வீட்டிலே எளிமையாக விழாவினை கொண்டாடி தாய்மாமன் சீர் செய்த சொல்லி தனது தம்பியை கேட்டுகொண்டார் செண்பகம்.

 

தன் வயிற்றில் சுமக்காத பிள்ளையாக இருந்தாலும் அவளும் ஓர் பெண் மனுஷித்தானே.

 

அவளுக்கு தாய் இல்லாத குறைய போக்கினார் செண்பகம்..

 

இவையனைத்தையும் அறிந்த காசி செண்பகம் மேல் இருந்த கோபத்தை குறிஞ்சியின் மீது காட்டினார்.

 

முடியை பிடித்து அடிப்பது, பகலிலும் குடித்துவிட்டு வந்து தகறாது செய்வது, என்றிருந்த தந்தையை கண்டு அச்சம் கொண்டாள் குறிஞ்சி.

 

பள்ளி படிப்பை பன்னிரெண்டாவது வரைக்கும் அரசாங்க பள்ளியில் படித்த போது அறிமுகமானாள் ரேவதி.

அதே ஊரின் எல்லையில் தாத்தா பாட்டியோடு வாழ்ந்து வருகிறாள் அவள்.

அடிக்கடி ஊரின் எல்லையில் உள்ள அவளது தோழி ரேவதி வீட்டிற்கு சென்று போது தான் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுகுமாரன் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டது.

 

குறிஞ்சி ஒன்று அவ்வளவு அழகில்லை. மாநிறம் கொண்ட அவளின் விழியோ மான்விழியை போல் அழகா இருக்கும். எந்த அழகு ஒப்பணையையும் முகத்தில் போட்டு கொள்ள மாட்டாள்.

 

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”  என்ற பழமொழியை பின்பற்றி இதுநாள் வரை உதட்டு சாயம் கூட போட்டு கொள்ளவில்லை..

 

அவளின் பொறுமை குணம் அப்பாவித்தனம் அனைத்தையும் எடை போட்டு அவளை தன் வலையில் விழ சுகுமாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அது ரேவதியால் தடை பட்டது.

 

பக்கத்து வீட்டில் இருந்தவனை பற்றி ரேவதி அறியாதவளாக இருப்பாளா?

 

தோழியை காப்பாற்ற அவளிடம் சுகுமாரனின் குணத்தையையும் அவனை பற்றி தவறாகவும் கூறிய ரேவதியின் வார்த்தையை நம்பி அவனின் புறம் திரும்பாமலே தவிர்த்து வந்தாள் குறிஞ்சி.

 

முந்தைய நாள் இரவு கல்லூரி வயதில் உள்ள பெண்ணோடு வந்த தந்தையை ஆவேசமாக திட்டி வீட்டைவிட்டு வெளியே போ என்று  கூறிய சமயம் அந்த இருட்டில் ஒரு ஓரமாக மறைந்து கொண்டு நடப்பதை கவனித்து கொண்டு இருந்தான் சுகுமாரன்.

துடப்பத்தை கையில் எடுத்து தூக்கி அந்த பெண் மீது வீசிய போது அவளின் உடலை பார்வையாலே அங்குலமாக அளவெடுத்தான் அந்த கயவன்.

 

சண்டை முடிவுற்ற வரைக்கும் அங்கேயே நின்று குறிஞ்சின் உடலை ரசித்து பார்த்தவன், பின் அங்கிருந்த மக்கள் அவரவர் இல்லத்திற்கு செல்ல, அவளோ தந்தையோடு வந்த பெண்ணை தூரத்திவிட்டு அவரை இழுத்துக்கொண்டு கூடத்தில் படுக்கவைத்து அவரின் மீது போர்வையை போர்த்தி விட்டு, உறங்குவதற்காக அறைக்குள் செல்ல திரும்பம் போது, அவளின் முன்னால் வந்து நின்றான் சுகுமாரன்.

 

சற்று திடுக்கிட்டு அவனை பார்த்த பெண்ணவளின் கரங்கள் நடுங்கத் துவங்கியது.

 

அவனின் பார்வையில் காமம் தெரிய, அதை கண்டு கொண்ட பெண்ணவளோ  தன் பலத்தை முழுவதையும் திரட்டி 

அவனை தள்ளி விட்டு வெளியே ஓட பார்க்க நொடியில் இது தான் நடக்கும் என்று உணர்ந்த அந்த கயவனோ அவளின் கரத்தை பிடித்து அறைக்குள் தள்ளி தாழ்ப்பாள் போட்டு பெண்மையை சூறையாட முயற்சிக்க, அவளின் நல்ல நேரமோ கட்டலின் அடியில் வைத்திருந்த புல் அறுக்கும் அருவாளை எடுத்து அவனின் முதுகில் ஒன்று போட்டாள்.

 

அவள் போட்ட ஒரே போடில் அவனின் முதுகில் குருதி வழிந்தது.

 

வலியில் கூட அவளை அடைக்கும் வெறிகொண்ட சுகுமாரனின் கரம் பெண்ணவளின் கன்னத்தை பதம் பார்த்தது.

 

அவன் அடித்த அடியை விட தன் மானத்தை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற முடியோடு அதே அருவாளை எடுத்து அவனின் கழுத்தை நோக்கி குறிவைத்தாள் குறிஞ்சி.

 

அவனின் கழுத்தில் புல் அறுப்பதை போல் அறுத்துகொண்டே இருக்க , அவனின் நாடி துடிப்பு நின்ற பிறகே காளியின் உருவத்தை போல் அவனின் தலையில் ஒரே வெட்டு வெட்டினாள்.

 

பின்பு அங்கேயே  சிறிது நேரம் எதையோ பறிகொடுத்தவள் போல் தன்நிலைமையை மறந்து அமர்ந்து இருந்தவள், இரவு பூச்சிகளின் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த உடனே அங்கு உயிரற்ற உடலாக குருதி வெள்ளத்தில் இருந்தவனை இழுத்துக்கொண்டு வீட்டின் கொல்லைப்புறத்திற்கு வந்தவள் அங்கு ஒரு குழிதோண்டி அவனை புதைத்துவிட்டு கிணற்றடிக்கு சென்று ஒரு வாளி தண்ணீரை இறைத்து தன் மீது ஊத்திக்கொண்டு, உள்ளேவந்து உடையை மாற்றி கூடத்தில் போதையில் மல்லாந்து படுத்துக்கொண்டு இருந்த தந்தையை பார்த்தாள்.

 

பெண் சுகம் தேடி தினமும் வீட்டிற்கு வரும் தந்தையால் கூட அவளை காப்பாற்ற முடியவில்லை.

 

சிறிதுநேரம் அங்கேயே உறங்கிக்கொண்டு கொண்டு இருந்த தந்தையை வெறித்து பார்த்தவள் பின் ரத்தம் கறை படிந்த அவளின் அறையை சுத்தம் செய்துவிட்டு இல்லத்தை விட்டு வெளியேறினாள்.சுகுமாரனை வெட்டிய அருவாளோடு.

 

இது ஏதும் அறியாத காசியோ மகள் எவனோடு ஓடிவிட்டாள் என்று ஊர் சொன்னதை நம்பி அவளை தேடும் பணியை கைவிட்டு வழக்கம் போல் மது, மாதுவில் முழுங்கினார்.

 

நாட்கள் சென்றது மாதங்கள் சென்றது ஆனால் குறிஞ்சி எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடியாத கிஷோர் பொறுமை இழந்து நேரடியாகவே காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற போது, காவலர்கள் கூறியதை கேட்டவனுக்கு  அதிர்ச்சியே கொடுத்தது..

ஆம் ஏழு மாதங்கள் முன்னால் குறிஞ்சி சுகுமாரனை கொலை செய்தவுடன் அவள் நேராக சென்று நின்று சரணடைத்தது என்னவோ காவல் நிலையத்திற்கு தான்..

 

அவள் செய்த கொலையை வாக்கு மூலமாக வாங்கிக்கொண்ட அரசு தரப்பு வக்கீல் , அவளிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்க நான் யாருமில்லாத அனாதை என்று கூறியதை கூட நம்பாமல் அவளிடம் துருவி துருவி விசாரித்த போதிலும் அவளின் உறவுகளை பற்றி அவள் வாயை திறந்து உண்மையை சொல்லவே இல்லை.

 

எப்படி சொல்வாள் தனக்கு ஒரு தந்தை இருக்கிறார், அவர் ஒரு மொடா குடிகாரர், அவரால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று கூறி தனது வழக்கிலும் தந்தையை சிக்கி வைக்க மனமில்லாது அந்த வக்கீலிடம் கொலை செய்ததை மட்டும் எப்படி செய்தாள் என்று நடித்து காட்டி அருவாளை அவரிடம் ஒப்படைத்த பிறகே காவல் துறையினரிடம் அவளை அழைத்து சென்று கொலை செய்தது உண்மை தான் என்று அவளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவளுக்கு சிறை தண்டனை வாங்கிக்கொடுத்து விட்டு தனது கடமை முடித்து விட்டது என்பது போல் அங்கிருந்து சென்றவர் பிறகு அவளை பார்ப்பதற்காக யாருமே வரவில்லை.

 

சிறைசாலையில் கொடுக்கும் உணவை உண்டு அவளின் மூன்று வேளை வயிற்று நிரம்பியதே அவளும் போதுமானதாக இருந்தது.

 

குடிகார தந்தையோடு வாழ்வதை விட இந்த சிறைசாலையே அவளுக்கு பாதுகாப்பாக இருக்கிறதென்று அவளும் அங்கேயே நேரத்தை ஓட்டி வருகிறாள்.

பாவம் அவள் தன் மானத்தை காப்பாற்றுவதற்காக செய்த ஒரு கொலை கூட இந்த சமுதாயம் தவறு என்று கூறிய போது, பெண்மையை அடைக்க வெறிகொள்ளும் ஆண்களை ஏன் இந்த சமூகம் இன்னும் வெளியே விடுகிறது.

 

மும்பையின் ரெட்லைட் பகுதியில் இருக்கும் பெண்களை கூட நாடு கடத்தி அவர்களை கட்டாயப்படுத்தி அந்த விபசாரம் தொழிலில் தள்ளிய புரோக்கர்கள் கூட நிறைய பேர் இந்தியா மட்டுமில்லாத்து உலக

நாடுகளிலும் உள்ளார்கள்.

 

குறிஞ்சியை போன்று அநேகமான பெண்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு எப்போது தான் விடுதலை கிடைக்கும்..

 

அவளின் தண்டனை காலம் முடியும் வரை சிறைசாலையில் நிம்மதியாக இருக்க நாமும் விடைபெறுவோம்… 

    முற்றும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்