Loading

காலம் தாண்டிய பயணம் 19 

 

பூவிழியை அணைத்துக்கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரனோ, “ரசகுல்லா பண்ணித் தரேன்னு சொல்லிட்டு, பண்ணித் தரவே இல்லைல நீ, அன்னைலயிருந்து நான் ஸ்வீட் சாப்பிடுறதையே விட்டுட்டேன் தெரியுமா?” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

முதலில் புரியாமல் விழித்த பூவிழியோ, நொடியில் அவனைக் கீழே தள்ளி விட்டவள், “யார் நீ? என்ன தைரியம் இருந்தால் என்னை அணைத்திருப்பாய்? உன் சிரத்தைக் கொய்து பைரவனுக்குக் காணிக்கை ஆக்குகிறேன் பார்” என்று  அவளிடையில் இருந்த குருவாளை அவனை நோக்கி ஓங்க, அவள் கரமோ காற்றில் உறைந்திருந்தது.

 

கரத்தை அசைக்க முடியவில்லை அவளால்…

 

அவளை நெருங்கிய வான்மீகியோ, “தாயே, பொறுமை. அவன் பூவிழியான உன்னை அணைக்கவில்லை. அவனது தாயான உன்னையே அணைத்திருக்கிறான்” என்க,

 

பூவிழி புருவ சுருக்கங்களுடன் அவரையே பார்த்திருந்தாள்.

 

அவரோ, “ஆம் தாயே, உன் அடுத்த பிறவியில் உன் மகன் இவன். அவனது சிறுபராயத்தில் உன்னை இழந்து தவித்தவன். இங்கே உன்னைக் கண்டதும் உணர்வுப் பெருக்குடன் அணைத்துவிட்டான்” என்று விளக்கியவரோ,

 

அவளது கரத்தை மந்திரக் கட்டிலிருந்து விடுவிக்க, குருவாளை இறக்கிய பூவிழியோ கீழே விழுந்து கிடந்த மகிழை முறைத்தபடி தமையன் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

 

மகிழின் பார்வை அப்போதும் அவளிடமே இருக்க, அதனை உணர்ந்தவளோ திரும்பி அவனை கூர்மையாகப் பார்க்க, மகிழோ சட்டெனப் பார்வையை மாற்றிக்கொண்டான்.

 

அதைப் பார்த்திருந்த இனியாவிற்கு இறுக்கம் கலைந்து ஒரு புன்னகை தோன்றியது.

 

அது மகிழின் கண்களில் இருந்தும் தப்பவில்லை…

 

கண்களாலேயே அவளை மிரட்டியவன் எழுந்து அவளருகே அமைதியாக நின்றுகொண்டான்.

 

அடுத்தது ஒவ்வொருவராய் வான்மீகியிடம் சந்தேகம் கேட்க, அவர் சொல்ல என நேரம் கடந்தது.

 

மாலையானதும் மார்த்தாண்டனின் இடத்துக்குச் செல்ல, ஆண்கள் அனைவரும் தயாராக, இனியாவை அழைத்துச் செல்வது ஆபத்து எனக் கோயிலிலேயே விட்டுச் செல்வதாகவும் காவலுக்குப் பூவிழி இருப்பதாகவும் திட்டம் இருந்தது.

 

வான்மீகி எதையோ எண்ணியவராக மகிழையும் அங்கேயே இருக்கப் பணிக்க, ‘ஏன்’ என்ற கேள்வியுடன் அவரைப் பார்த்தான் அவன்.

 

“எதற்கும் ஒரு காரணம் இருக்கும் மகனே. நீ இங்கேயே இருப்பதுதான் உனக்கும் நல்லது, உன்னவர்களுக்கும் நல்லது” என்றதுடன் அவர் பேச்சை முடித்துக்கொள்ள, மித்ரனோ மகிழைப் பார்த்துக் கண்களை மூடித்திறந்தான்.

 

அடுத்து அவர்கள் நால்வர் பயணமும் அந்தக் காட்டை நோக்கித் தொடங்கியது…

 

 

அடுத்து நேரம் யாருக்கும் காத்திராமல் நகர்ந்து, இருள் நெருங்கி இருந்தது.

 

இப்போது அந்தப் பைரவன் கோயிலில் இனியாவும் அவளுக்குப் பாதுகாப்புக்காக மகிழும்தான் இருந்தனர்.

 

மக்களும் அந்த நேரத்தில் வெளியே வரமாட்டார்கள் என்பதால் மயான அமைதி நிலவ, அதுவே இனியாவுக்குத் தனிப் பயத்தைக் கொடுத்தது.

 

அவள் கண்ணில் படும் தூரத்தில், சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த மகிழ், அவளது பயத்தை உணர்ந்து அருகில் சென்று சற்று இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டான்.

 

அடுத்து கடந்த சில வினாடிகள் மௌனமாகவே கடக்க, இனியா பேச்சை ஆரம்பித்தாள்.

 

“நிஜமாவே காணாமப் போனது அத்தைதானா?” என்று கேட்டாள்.

 

அவனோ, “ம்ம்ம்ம், யாழினிம்மா தான். அப்பாவுடன் சேர்ந்து வாழலாம்னு வந்தவங்களைத்தான் இங்க கூட்டிட்டு வந்துட்டான் அந்த மார்த்தாண்டன்” என்றான்.

 

இனியாவோ, “என்னால் நம்பவே முடியலை, காலம் விட்டுக் காலம் வந்து இத்தனை நடந்திருக்கு. சின்ன வயசுலயிருந்தே அத்தை ஓடிப்போயிட்டாங்க, இவளும் அப்படியே போயிடுவானு ஆளாளுக்குப் பேசுவாங்க. அப்போதெல்லாம் இப்படிப்பட்டவங்க மத்தியில இல்லாம அத்தை எங்கேயோ சந்தோஷமா இருக்காங்க, அதுவே போதும்னு நினைச்சு நான் நிம்மதியாத்தான் உணர்ந்தேன். ஆனா, இப்போ அவங்க கஷ்டப்படுறாங்கன்னு நினைக்கும்போது எனக்கும் கஷ்டமா இருக்கு” என்றவளது கண்ணில் கண்ணீர்.

 

மகிழோ, “ஃபீல் பண்ணாத ஸ்பைசி, சீக்கிரமே அவங்களை இங்கயிருந்து பத்திரமாக் கூட்டிட்டுப் போயிடலாம்.  இனிமேல் அப்பா அவங்களைச் சந்தோஷமா வெச்சுக்குவாங்க” என்றான் சமாதானமாக…

 

கண்களைத் துடைத்துக் கொண்டவளோ, “ம்ம்ம்ம் கண்டிப்பா மாமா நல்லாப் பார்த்துக்குவாங்க. அத்தை ரொம்ப லக்கி, மாமா மாதிரிப் புருஷன் கிடைக்கிறது எல்லாம் வரம். யாருன்னே தெரியாத என்னையே அவ்வளவு நல்லா பார்த்துகிட்டாங்க” என்றாள் உணர்ந்து.

 

அவனுக்கோ, இப்படிச் சொல்பவளை ‘நானும் லக்கி’ எனச் சொல்ல வைக்க வேண்டும் என்று உள்ளே ஓர் ஆர்வம் பெறுக, அவனது பார்வை காதல் பார்வையாய் மாறி இருந்தது.

 

அதனை உணர்ந்துகொள்ளும் நிலையில் தான் அவள் இருக்கவில்லை.

 

ஏதோ ஞாபகம் வந்தவளாக, “அது என்ன ஸ்பைசி? இனியான்னே கூப்பிடலாமே?” என்றாள் கேள்வியாக…

 

இவனோ இருந்த மனநிலைக்குப் புன்னகையுடன், “இந்தக் கேள்வி இப்போதான் வந்திச்சா? முன்னமே கேட்பனு நினைச்சேன்” என்றவன்,

 

“உன் பெயர் இனியாதான, சோ ஷார்ட்டா ஸ்பைசி” என்றான் விசில் அடித்தபடி…

 

அவளோ, “இனியாவுக்கும் ஸ்பைசிக்கும் என்ன சம்பந்தம்? அப்படி கூப்பிடுறதா இருந்தா, ஸ்வீட்னுதானே கூப்பிட்டிருக்கணும்” என்றாள், தோழிகள் சிலர் அப்படி அழைப்பதை ஞாபகப்படுத்தி.

 

மகிழோ, “வாஸ்தவம் தான். ஆனா, எனக்கு ஸ்வீட் பிடிக்காதே! பிடிக்காததைச் சொல்லிப் பிடிச்ச உன்னை எப்படிக் கூப்பிட முடியும்? அதனால்தான் ஸ்பைசி” என்றான் கண் சிமிட்டி…

 

அந்த விழிமொழி அவளை ஏதோ செய்ய, ஏதோ ஞாபகம் வந்தவளாக, “நான் வந்த அன்னைக்கே ஸ்பைசின்னு சொன்னீங்களே! அதுக்கு முதலே என்னைத் தெரியுமா?” என்றவளுக்கு அன்றொரு நாள் அவன் கோபமாய்ப் பேசும்போது ஏதேதோ உளறிய அவன் பேச்சுக்களும் விட்டுவிட்டு ஞாபகம் வந்தது.

 

அதுவரை வைராக்கியமாய் எல்லாப் பிரச்சனையும் முடிந்தே தன் காதலை அவளிடம் உரைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த மகிழின் முடிவு அவளது ஒற்றைக் கேள்வியில் ஆட்டம் காணத் தொடங்கியது.

 

இரண்டு வருடமாக அவள்மீது காதல் கொண்டு தனியே போராடியவனுக்கு, உடையவள் அருகில் அமர்ந்து வினவுகையில், அவளிடம் அனைத்தையும் கொட்டிவிடவே மனது தவியாய்த் தவித்தது.

 

இருக்கும் இடம் மறந்தான். நிலை மறந்தான். அவள் ஒருத்தியே அவன் சிந்தையில்…

 

அவள் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவன், கண்களில் கேள்வியுடன் நகரப்போனவளைத் தடுத்து அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு,

 

“என்ன, என் காதல்ல உனக்குச் சொன்னாப் புரியுமா ஸ்பைசி? ரெண்டு வருஷமா உனக்கே உனக்கா பூட்டி வெச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முதல் ஒரு குட்டி ரோஜாப் பூ என் மனசைப் பறிச்சிட்டுப் போயிடுச்சு” என்றவன் கண்களில் தான் எத்தனை காதல்.

 

அவன் கண்களையே பார்த்திருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

 

கண்கள் மூலம் காதலைக் கடத்த எண்ணினானோ அந்தக் கள்வன். விடாமல் அவன் பார்வை அவள் விழிகளை ஊடுருவி இதயத்தை இம்சித்தது.

 

விழிகளைத் தாழ்த்திக் கொண்டவளோ கரத்தை உருவப்பார்க்க, அது முடிந்தால் தானே!

 

தன் ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தியவனோ அவளைக் காதல் கொண்ட அந்த நாளின் நினைவை அவளிடம் விளக்கத் தொடங்கினான்.

 

_________________

 

வருடம் இரண்டாயிரத்து இருபத்திரண்டு…

 

விஜயாவோ இனியாவிடம் அத்தனை பத்திரம் சொல்லித்தான் அவளைப் பேருந்தில் ஏற்றி விட்டிருந்தாள்.

 

அது இனியாவின் பள்ளியின் கடைசி வருடம் என்பதால் அன்று பள்ளிச் சுற்றுலா செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த நாள்.

 

இனியாவின் வீட்டில் அவளைப் போக விட்டது பெரிய சரித்திரம் தான்.

 

விஜயாவின் தொடர் போராட்டத்தின் விளைவில் தான் இனியாவிற்குச் செல்ல அனுமதியே கிடைத்திருந்தது.

 

அதிலும் ஆயிரம் கட்டுப்பாடுகள், கட்டளைகள். பெண் பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் பள்ளி என்பதால் மட்டுமேதான் இந்த அனுமதியும்.

 

ஒருவழியாய் பேருந்தில் ஏறி அமர்ந்த இனியாவிற்கு மனதெல்லாம் ஒரு சுதந்திர உணர்வுதான். அருகில் அமர்ந்திருந்த தோழியின் கரத்தைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தவளின் கரம் அத்தனை ஜில்லிட்டிருந்தது.

 

தோழியோ, “என்னாச்சு இனியா? பயப்படாதே, நான் இருக்கேன்ல” என்றாள். தோழி புதுப் பயணத்துக்குப் பயப்படுகிறாளோ என்று நினைத்து…

 

ஆனால் அவள் உணர்வுகள் பயம் அல்லவே!! சுதந்திரத்தை அனுபவிக்கும் குழந்தையின் உணர்வு!!

 

ஒரு நாள் பயணம் தான். அதிகாலையில் சென்று இரவுக்குள் வீடு திரும்பி விடுவர்.

 

இதோ, அவர்கள் பயணம் ஆரம்பித்துச் சென்னைக்கும் வந்து சேர்ந்திருந்தனர்.

 

ஓவியக் கண்காட்சி ஒன்றைப் பார்வையிடவே அவர்கள் அங்கு வந்திருந்தது.

 

காணும் ஒவ்வொரு ஓவியமும் இனியாவின் கண்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும்…

 

எப்போதும் வேலை, வேலை என்றே நாளைக் கடத்தும் அவளுக்கு இன்று ஆசுவாசமாய் ஒரு பொழுது…

 

அப்படியே ஓவியங்களுடன் ஓவியமாய் லயித்திருந்தவள் மீது ஒரு ஜோடி கண்கள் லயித்திருந்ததை அவள் அறியாது போனாள்.

 

அன்று மகிழின் தோழன் அசோக்கின் இந்நாள் மனைவி, அந்நாள் காதலி ஷில்பாவின் ஓவியமும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், மகிழும் அசோக், ஷில்பாவுடன் அங்கே வந்திருந்தான்.

 

‘மாட்டேன்’ என்றவனை ஷில்பா வற்புறுத்தி அழைத்து வந்திருக்க, காதல் ஜோடிக்குத் தனிமை கொடுத்துத் தள்ளி வந்தவனின் கண்ணில் பட்டாள் இனியாள்.

 

பார்த்ததும் அவன் மனதில் அவள் உருவம் ஓவியமாய்ப் பதிந்து போயிற்று.

 

பள்ளிச் சீருடையில் இல்லாமல் சாதாரண பாவாடை தாவணியில் இருந்ததால் அவள் பள்ளி மாணவி என்பதே அவனுக்குத் தெரியாமல் போனது.

 

அவள் செல்லும் இடமெல்லாம் அவனது கால்களும் நகர, மந்திரித்து விடப்பட்டவன் போலத்தான் அந்தக் கண்காட்சி கூடத்தினுள் வலம் வந்தான்.

 

சற்று நேரத்தில் ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்த இனியாவைத் தேடி வந்த அவள் தோழியோ, அவள் காதில் எதையோ சொல்ல, அவளும் ஓவியத்தைப் பார்த்தபடியே விருப்பமே இல்லாமல் தோழியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவளது சுருங்கிய முகம் அவனை ஏதோ செய்ய, கால்கள் தன்னால் அவள் பின்னே சென்றது.

 

நேரே அவர்கள் சென்ற இடத்தைப் பார்த்து அவன் தன்னைத் தானே நொந்துகொள்ளாத குறைதான்.

 

அவர்கள் வந்திருப்பதோ கழிவறைக்கு. தோழியின் அவசரம் உணர்ந்து அவளும் கூட வந்திருந்தாள்.

 

தோழிக்குக் காவலாக அவள் வெளியே நிற்க, இவனோ சற்றுத் தொலைவில் இருந்த மரத்தின் கீழ் அவளை நோட்டம் விட்டபடியே நின்றிருந்தான்.

 

தோழி வரும் வரை வெளியே நின்றிருந்த இனியாவின் காதில் ஏதோ மெல்லிய முனங்கும் ஓசை…

 

சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தவளோ என்னவென்று பார்க்க, அங்கே ஒரு சிறிய செடியின் பின்னே நாய்க்குட்டி ஒன்று வலியில் முனங்கிக் கொண்டிருந்தது.

 

பிறந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகி இருக்கும் அளவுக்குக் குட்டியாய் இருந்த அதனைப் பார்த்தவளுக்குப் பாவமாய் போய்விட, கையில் தூக்கிக்கொண்டவள் காயத்தை ஆராய, அவள் கெட்ட நேரம் அங்கிருந்த செடியின் மறைவில் இருந்ததனால், தாய் நாயை அவள் கண்டிருக்கவில்லை…

 

அதுவோ குறை உயிரில் கிடந்தாலும் குட்டியைத் தூக்கிய கோபத்தில் அவளைக் கடிக்கப் பாய, இதை எதிர்பார்க்காதவளோ உண்மையில் பயந்தே தான் போனாள்.

 

அத்தனை நெருக்கத்தில், இரத்தக் காயத்துடன் அந்தத் தாய் நாயை ஆக்ரோஷமாகப் பார்த்ததில் அவள் மூச்சே நின்றுவிடும் போலத்தான் இருந்தது.

 

அப்படியே நிலை தடுமாறி அவள் பின்னே சாய, பார்த்திருந்த மகிழ் நிலைமை உணர்ந்து அருகில் வருவதற்கு முன்னரே கீழே விழுந்தவளின் தலையில் கல் ஒன்று பலமாய் மோதியதில் காயமாகியிருந்தது.

 

அந்த நேரம் வெளியே வந்த தோழியோ, “இனியா!” என்ற சத்தத்துடன் அவளை நெருங்க, அதற்குள் மகிழ் அவளை மடியில் தாங்கியிருந்தான்.

 

“ஹேய் கேர்ள்,” என்று அவன் கன்னம் தட்ட, அவள் மயங்கியிருந்ததால் இவன் அழைப்பு அவளை அடைந்திருக்கவில்லை…

 

“அண்ணா, இனியாவுக்கு என்னாச்சுண்ணா?” என்று அப்போது வெளியே வந்த தோழி பதறியபடி  கேட்க,

 

இவனோ “ஒண்ணுமில்லமா, தலைல அடிபட்டிருக்கு. பிளட் வேற அதிகமா வருது. ஹாஸ்பிடல் கொண்டு போறது பெட்டர்” என்றவன் அவளைக் கையில் ஏந்திய பின்னர் தான் பைக்கில் வந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது.

 

அசோக்கிடம் கார் சாவி வாங்கலாம் என்ற எண்ணம் வர, இப்படியே அவளை உள்ளே தூக்கிச் செல்ல முடியாது என்பதால் அவளை அப்படியே அங்கே கிடத்தி,

 

“கொஞ்சம் பார்த்துக்கோமா. கார் சாவி எடுத்துட்டு வந்திடுறேன்” என்றவன் உள்ளே ஓடினானா, பறந்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்.

 

எத்தனை வேகமாய்ச் சென்றிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் அசோக்கைக் கண்டுபிடிக்க அவனுக்கு அடுத்த ஐந்து நிமிடம் எடுத்திருக்க, மீண்டும் வந்தபோது அந்த இடத்தில் இனியா இருக்கவே இல்லை…

 

அவள் விட்டுச் சென்ற அந்த நாய்க்குட்டியைத் தவிர, அதன் தாயோ குட்டியின் அருகே படுத்திருந்தது. அதற்கும் உடலில் காயம் என்பது பார்த்ததும் புரிந்தது.

 

எப்படி என்றும் அவனுக்கும் புரியவில்லைதான். ஆனால் அது உயிர் பிழைப்பது கடினம் என்று அதன் நிலை உணர்த்த, இரண்டு நாயையும் மிருக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அசோக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.

 

அதன்பின் அருகில் இருந்தவர்களிடம் அத்தனை விசாரித்தும் அவனுக்கு அவள் விபரம் எதுவும் தெரியவில்லை.

 

பள்ளியிலிருந்து கண்காட்சி பார்க்க வந்ததாகவும், அடிபட்டது தெரிந்து அழைத்துச் சென்றிருப்பதாகவும் மாத்திரமே தகவல் வர, எதுவும் தெரியாமல் எங்கே தேடுவான்?

 

ஆனாலும் விட மனமில்லாமல் ஒவ்வொரு மருத்துவமனைக்குமாய்ப் பறந்தான்.

 

அவள் நலமாக இருக்கிறாள் என்று தெரிந்தால் போதும் என்ற மனநிலைதான் அவனுக்கு, அவள் இரத்தம் வேறு அவள் சட்டையில் உறைந்திருக்க, கண்கள் கலங்கியது அவனுக்கு…

 

சற்று முன் பார்த்தப் பெண்ணுக்காக, தான் இப்படி அழுகிறோமா என்று அவனுக்கே ஆச்சரியம்.

 

எத்தனையோ காயத்தைப் பார்த்திருக்கும் மருத்துவ மாணவன் அவன், ஆனால் இன்று அவனவள் இரத்தம் உள்ளே ஏதோ செய்தது.

 

எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை…

 

இதுதான் இடம், இதுதான் பெயர் என்று அறிந்து தேடினாலே ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட நோயாளியைக் கண்டறிவது கடினம். இதில் எதுவுமே தெரியாமல் அவன் முகமும், அவள் நண்பி அழைத்த ‘இனியா’ என்ற பெயரையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கண்டுபிடிப்பது என்பது கடினம்தானே!!

 

தேடி ஓய்ந்து போனவன் இறுதியில் அசோக் இருக்கும் இடம் வர, நண்பனை அந்த நிலையில் கண்ட இருவருக்கும் கவலை தொற்றிக்கொண்டது.

 

அசோக்கோ, “என்னாச்சு மகி? ஏன் இப்படி இருக்க? யாருக்கு என்னாச்சுடா?” என்று கேட்க, அதற்குப் பதில் சொல்லாதவனோ,

 

“நாய்க்குட்டி எப்படி இருக்குடா?” என்று எதிர்கேள்வி கேட்டான்.

 

“நான் என்ன கேட்கிறேன், பதில் சொல்லாம நீ என்னடா திருப்பிக் கேட்கிற?” என்ற நண்பனின் தோளில் சாய்ந்த மகிழோ,

 

“எதுவும் கேட்காதே மச்சான். இங்க ஏதோ பண்ணுதுடா?” என்க, நண்பனின் குரலில் தெரிந்த இயலாமை அசோக்கை அடுத்துக் கேள்வி கேட்க விடவில்லை…

 

பெருமூச்சு விட்டவனோ, “தாய் நாயைக் காப்பாத்த முடியலை. ஆக்சிடென்ட் ஆகி இருக்கும் போல, அதோட காயம் ரொம்ப செப்டிக் ஆகியிருக்கு.  கொஞ்ச நாள் முன்னதான் குட்டி போட்டிருக்கு, அதுவும் இன்பெக்ஷன் ஆகிருக்கு… குட்டிக்குப் பெரிசா பாதிப்பு இல்லை, காயத்துக்கு மருந்து கொடுத்துப் பால் கொடுத்திருக்காங்க, டூ த்ரீ டேஸ்ல ரெக்கவர் ஆகிடும்” என்றான்.

 

அன்று தொடங்கிய தேடல் அவனவள்…

 

அவள் விட்டுச் சென்ற சின்னம் மட்டும் இன்றும் அவனுடன், அவன் பொம்மியாய்…

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்