Loading

காதல் 16

“யாரையும் நிரந்தரமா என் வாழ்க்கை கூட பிணைச்சுக்கக்கூடாதுங்கிற என்னோட கொள்கைக்கு முதல் எதிரி யார் தெரியுமா? என் மனசு… ரெண்டாவது எதிரி ஜெர்ரி… இவங்க ரெண்டு பேரும் செய்யுற கூட்டுச்சதியில மூளை குழம்பித் திரியுற அப்பாவி நான்… ஜெர்ரி நானும் பழக ஆரம்பிச்சு முழுசா ரெண்டு மாசம் கூட ஆகல… பட் என்னமோ ரொம்ப நாள் அவ என் கூட இருக்குற மாதிரி ஒரு ஃபீல்… ஏன் இப்பிடிலாம் நான் யோசிக்குறேன்? ஒரு பக்கம் ஜெர்ரி இழுத்த இழுப்புக்கு ஓடத் தயாரா இருக்குற மனசு, இன்னொரு பக்கம் என் வாழ்க்கை இப்பிடி தான் நகரணும்னு நான் போட்டு வச்ச திட்டம் தவிடுபொடியாகிடுமோங்கிற பயம்… உஃப், I fell at the first hurdle… It seems, I ain’t going to overcome this situation”

 

-டாம்

 

டாமின் அன்னை லிண்டா மகனையும் ஆர்யாவையும் வீட்டில் கண்டதும் ஆர்ப்பரித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனைப் பார்த்ததும் சந்தோசத்தில் கண்ணீர் வந்துவிட்டது.

 

தனது பார்ட்னர் என ஆர்யாவை அவன் அறிமுகப்படுத்தி வைத்ததும் ஆச்சரியத்துடன் கூடிய ஒரு புருவ தூக்கல் மட்டுமே அவரது எதிர்வினை. இந்திய தாய்மார்களை போல அளவிடும் பார்வை இல்லை. தர்மசங்கடமான கேள்விகள் இல்லை.

 

மகன் எப்படி அவளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டானோ அப்படியே அந்த அன்னையும் அவளை ஏற்றுக்கொண்டார்.

 

கிடைத்த தனிமையில் அவர் ஆர்யாவிடம் வைத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்று மட்டுமே!

 

“உங்க ரெண்டு பேர் கிட்டவும் கம்பாடபிளிட்டி இருக்கு ஹனி… டாம் லாங் டேர்ம் ரிலேசன்ஷிப் மேல நம்பிக்கை இல்லாம என்னென்னவோ சொல்லிருப்பான்… அதுக்கு நானும் அவனோட அப்பாவும் பிரிஞ்ச சமயத்துல அவன் உளவியல் ரீதியா எதிர்கொண்ட சில பிரச்சனைகள் தான் காரணம்… இந்த உலகத்துல எந்த ஆணும் பெண்ணும் பிரியணும்ங்கிற ப்ரீ-மைண்ட்செட்டோட திருமண வாழ்க்கையில நுழையுறதில்ல… காலம் கடக்க கடக்க அவங்களுக்குள்ள ஏதோ ஒரு வெறுமை நிரம்பும்… அந்த வெறுமைய அன்பால நிரப்பி தோல் சுருங்குற வயசு வரைக்கும் ஒன்னா வாழுற எத்தனையோ கணவன் மனைவி அமெரிக்காவுல இருக்காங்க… என்னாலயும் எரிக்காலயும் எங்களுக்குள்ள வந்த வெறுமைய அன்பால நிரப்ப முடியல.. எங்களுக்குள்ள பரஸ்பர அன்பு குறைஞ்சு போய் ஒரு கட்டத்துல பிரியுறது தான் ரெண்டு பேரோட தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நல்லதுனு முடிவெடுத்தோம்”

 

“நீங்க டாம் பத்தி கொஞ்சம் யோசிச்சு…”

 

இந்திய குடும்பங்களின் பாதிப்பில் பொறுத்துப் போயிருக்கலாமென்ற வார்த்தை ஆர்யாவின் நாக்கு நுனி வரை வந்துவிட்டது.

 

அவள் வளர்ந்த குடும்ப பிண்ணனி, கலாச்சாரத்தை மனதிற்கொண்டு சிரித்தார் லிண்டா.

 

“டூ லவ்லெஸ் சோல்ஸ் நெவர் க்ரியேட் அ குட் ஃபேமிலி ஹனி… டாமுக்காக நாங்க ஒன்னா இருந்திருந்தா கட்டாயம் சந்தோசமா இருக்குற மாதிரி நடிச்சிட்டு இருந்திருப்போம்… அதனால எங்களுக்குள்ள இருக்குற வெறுமை இன்னும் பூதாகரமாகி நிலமை இன்னும் மோசமாகிருக்கும்… அதுக்குள்ள நாங்க சுதாரிச்சு எங்க வாழ்க்கையையும் டாமோட மனநலனையும் காப்பாத்திட்டோம்”

 

“பட் உங்க பிரிவோட பாதிப்பு டாமுக்குக் கல்யாணம், குடும்பம் மேல இருக்குற நம்பிக்கைய குலைச்சிடுச்சு ஆன்ட்டி”

 

“நாங்க சேர்ந்திருந்தோம்னா ரெண்டு பேரோட வார்த்தைப்போர், சண்டை சச்சரவால டாம் ஒரு க்ரிமினலா மாறிருப்பான்… எங்களோட பிரிவு ஒரு விதத்துல அவனைப் பாதிச்சாலும் அவன் பொறுப்பான குடிமகனா வளர்ந்து நிக்குறான்… அந்த வகையில நானும் எரிக்கும் பிரிஞ்சு அவனுக்கு நல்லது பண்ணிருக்கோம்னு தான் தோணுது”

 

தான் குற்றம் சாட்டியதைக் கூட புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட லிண்டாவை ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

 

“நீ நினைச்சா டாம் மனசை மாத்த முடியும் ஹனி… உன்னை அவன் எவ்ளோ காதலிக்கிறான்னு அவனோட கண்ணு சொல்லுது… இந்த உறவை நிரந்தரமாக்க முடியாதா?”

 

எந்த நாடாக இருந்தாலும் அன்னை மனம் விரும்புவது தனது பிள்ளைகள் நலமாக வாழவேண்டும் என்பதை தானே! ஆனால் டாம் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டானே!

 

அதோடு அவனை நிரந்தர உறவுக்குக் கட்டாயப்படுத்தமாட்டேன் என ஆர்யா வாக்கு வேறு கொடுத்திருந்தாள். அதை எப்படி மீறுவதென தயங்கினாள்.

 

லிண்டாவுக்கும் டாமின் குணம் பற்றி தெரியும் என்பதால் ஒரேயடியாக அவளை வற்புறுத்தவில்லை.

 

“இட்ஸ் ஓ.கே ஹனி… உன்னை நான் கம்பெல் பண்ணல… பட் எனக்காக கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாரு… நீங்க வாழ்க்கைல ஒன்னு சேர்ந்திங்கனா நான் சந்தோசப்படுவேன்… நீ மட்டும் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் ரியல்டர்ஸ் கன்சர்னை முழுக்க முழுக்க உன் கிட்ட ஒப்படைச்சிடுவேன் ஹனி… அவன் தான் என் பிசினஸ், அவங்க அப்பாவோட பிசினஸ் எதுவுமே வேண்டானுட்டானே”

 

நீங்கள் நிறுவன அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என்னாலான முயற்சியைச் செய்கிறேன் என அவரிடம் கூறிவிட்டாலும் அந்தச் சிந்தனையே ஆர்யாவுக்கு மலைப்பைக் கொடுத்தது.

 

அந்நேரம் பார்த்து டாம் வந்துவிட பேச்சு மறுபடியும் படிப்பு, பல்கலைகழகம், ஆர்யாவின் அமெரிக்க வாழ்க்கை குறித்து திரும்பியது.

 

டாம் ஆர்யாவை ஜேக்கப்ஸ் வெல் பகுதிக்கு அழைத்துச் சென்றானா என்று கேட்டார் லிண்டா. அவன் இல்லை என்றதும் அது கண்டிப்பாக பார்த்து ரசிக்கக் கூடிய பகுதி என்றவர் அங்கே அவளை அழைத்துச் செல்லும்படி கூறினார்.

 

டாம் உற்சாகத்துடன் சம்மதித்தான். ஆர்யாவும் அவனும் கிளம்பும்போது ஜேக்கப்ஸ் வெல் பகுதியில் நீந்தக்கூடாதென கண்டிப்பாய் சொல்லி அனுப்பி வைத்தார் அவர்.

 

காரில் அமர்ந்ததும் ஏன் நீந்தக்கூடாது என்று ஆர்யா கேட்க “நீயே வந்து பாரு… உனக்குப் புரியும்” என்றான் டாம்.

 

அந்தப் பகுதியை அடைந்ததும் வழக்கம் போல ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் ஆர்யா.

 

டாமின் புஜத்தைப் பற்றி அவனது தோளில் சாய்ந்தபடி நடந்தவள் ஜேக்கப்ஸ் வெல் எனப்படும் நீரில் மூழ்கியிருக்கும் குகையைப் எட்டிப் பார்த்ததும் அதிசயித்துப் போனாள்.

 

“இது டெக்சாஸ்லயே ரெண்டாவது பெரிய நீர்மூழ்கி குகை… இதுக்குள்ள இருக்குற பொங்கு நீருற்றுல ஒரு நாளைக்கு குறைஞ்சது ஆயிரம் காலன் தண்ணி ஊறும்னு சொல்லுவாங்க… இங்க இருந்து தான் சைப்ரஸ் க்ரீக்குக்குத் தண்ணி போகுது… இதோட ஆழம் ரொம்ப அதிகம்… நிறைய பேரு இந்த ஜேக்கப்ஸ் வெல்ல நீந்த ஆசைப்பட்டு இறந்து போயிருக்காங்க”

 

டாம் சொன்ன தகவல்கள் அவளை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தின.

 

“ஓ.கே… இட்ஸ் ஸ்விமிங் டைம்” என்றபடி டாம் அணிந்திருந்த டீசர்ட்டைக் கழற்றவும் ஆர்யா பதறிப்போனாள்.

 

“டாம்… ஆன்ட்டி ஸ்விம் பண்ணவேண்டாம்னு சொன்னாங்கல்ல?” கண்களில் கலவரம் மூள கேட்டாள்.

 

“அவங்க சொல்லுற எல்லாத்தையும் நான் கேக்கணும்னு அவசியமில்ல ஜெர்ரி” அலட்சியம் கொட்டிக் கிடந்தது அவனது பதிலில்.

 

“பட் டாம்… இது ரொம்ப ஆழமா இருக்கும் போல” கண்கள் மருட்சியில் அலைபாய ஆர்யா கூற, அதை அசட்டை செய்துவிட்டு நீரில் குதித்தான்.

 

அவன் குதித்ததும் ஆர்யாவின் இதயம் நின்றுவிட்டது.

 

“உள்ள இருக்குற நீரூற்றோட வேகம் நீந்துறப்ப நம்மளை உள்ள இழுக்கும்… லாஸ்ட் இயர் ஐ லாஸ்ட் மை கொலீக் ஹியர்”

 

யாரோ பேசிக்கொண்டது ஆர்யாவின் செவியில் விழுந்து வைத்தது.

 

பயத்தோடு உள்ளே நீந்துபவனைப் பார்த்தாள் ஆர்யா.

 

“டாம்! போதும் மேல வந்துடு” என்று அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவன் வரவேண்டுமே.

 

“கம் ஆன் ஜெர்ரி! இங்க நீந்துறது த்ரில்லா இருக்கு… நீ உக்காந்து வேடிக்கை பாரு”

 

சொன்னவன் முதுகுப்புற தசைகள் அசைய நீரில் அங்குமிங்கும் அனாயசமாக நீந்தினான்.

 

ஆர்யாவுக்கு மனமெங்கும் பயம். அவன் நீந்தி முடித்து மேலே வரும் வரை அந்தப் பயம் குறையாமல் நின்றவள் அவன் “ஜெர்ரி” என்று அவளை நெருங்கவும், ஆதங்கம் அதிகரிக்க பேச விருப்பமின்றி விறுவிறுவென காரை நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்குப் போய்விட்டாள்.

 

டாமிற்கு அவளது செய்கை தேவையற்ற நாடகமாகத் தோன்றியது.

 

ஈர உடல் காயும் அவகாசத்தைக் கூட கொடுக்காமல் டீசர்ட்டை அணிந்தவன் காரினருகே சென்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு ஆர்யாவை முறைக்க ஆரம்பித்தான்.

 

அவள் அவனது முகத்தைப் பார்க்க விரும்பாமல் திரும்பிக்கொள்ளவும் டாமிற்கும் கோபம் வந்துவிட்டது. வேகமாக காரினுள் சென்று அமர்ந்தான் “வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?” என்றான் சிடுசிடுவென.

 

“ஆன்ட்டி ஸ்விம் பண்ண வேண்டாம்னு சொல்லித் தானே அனுப்புனாங்க… நான் அவ்ளோ தூரம் போகாதனு தடுத்தேனே… ஏன் டாம் இப்பிடி என்னைப் பதறடிக்கிற?” கேட்கும்போதே கண்கள் கலங்கின ஆர்யாவுக்கு.

 

டாமிற்கோ அவளது வார்த்தைகள் அவன் மீது தேவையற்ற கட்டுப்பாட்டைத் திணிப்பதாகத் தோன்றியது. யாருக்கும் கட்டுப்படாமல் வாழவேண்டுமென்ற கொள்கை கொண்டவனாயிற்றே!

 

ஆர்யாவின் வார்த்தைகளுக்கு அடிப்படை அவன் மீதான அடக்குமுறை அல்ல, அக்கறை என்பதை புரிந்துகொள்ளாமல் கோபம் கொண்டான்.

 

“ஐ அம் நாட் அ கிட் ஆர்யா… நான் ஸ்விமிங்ல எத்தனை மெடல் வின் பண்ணிருக்குறேன் தெரியுமா? இதை விட ஆழமான இடத்துல கூட என்னால நீந்த முடியும்… முதல்ல இதை செய்யாத அதை செய்யாதனு என்னைக் கண்ட்ரோல் பண்ணுறத நிறுத்து… எனக்கு இது சுத்தமா பிடிக்கல”

 

அவன் கோபத்தில் வெடிக்க ஆர்யா திகைத்துப்போனாள்.

 

“அங்க நிறைய பேர் நீந்தப் போய் இறந்திருக்காங்கனு சொன்னதால தான் நான் கவலைப்பட்டேன் டாம்… உன் பாதுகாப்பு மேல எனக்கு அக்கறை இருக்கக்கூடாதா?”

 

“என் பாதுகாப்பு மேல என்னை விட வேற யாரும் அதிக அக்கறை காட்ட முடியாது ஆர்யா… நீ காட்டுனது அக்கறையா இருந்தா, முகத்தைத் தூக்கி வச்சிட்டு வந்திருக்கமாட்ட.. உன் பேச்சைக் கேக்காம நான் ஸ்விம் பண்ணுனது உன்னோட ஈகோவ ஹர்ட் பண்ணிடுச்சு… என்னைக் கட்டுப்படுத்தி வைக்க முடியலங்கிற கோவத்துல இப்பிடிலாம் பிஹேவ் பண்ணுற… தயவு செஞ்சு இந்த கண்ட்ரோலிங் பிஹேவியருக்கு அக்கறைனு பேர் வைக்காத”

 

மேலைநாட்டினர் பெரும்பாலும் பதின்வயதின் ஆரம்பத்திலேயே சுதந்திர மனப்போக்குடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் அவர்களில் பெரும்பான்மையோர் அடுத்தவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதையே டாமின் செய்கையும் பிரதிபலித்தது.

 

ஆனால் ஆர்யாவுக்கு அவன் தன்னை தூக்கியெறிந்து பேசுவதாகத் தோன்றியது. அமைதியாக அமர்ந்திருந்தவள் லிண்டாவின் வீட்டை அடைந்தபோது கூட டாமிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.

 

டாமின் உடை ஈரமாக இருப்பதைப் பார்த்த லிண்டா ஜேக்கப்ஸ் வெல்லில் நீந்தினாயா என்று அதட்டுவது போல கேட்க “டோண்ட் ஸ்டார்ட் டு அட்வைஸ் மீ மாம்” என அவரிடமும் கடினக்குரலில் பதிலளித்துவிட்டு உடைமாற்ற போய்விட்டான் அவன்.

 

அவனது குணாதிசயம் லிண்டாவுக்குப் பழகிப்போயிருந்ததால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஆர்யாவுக்கு அவனது கோபமும் சிடுசிடுவென்ற பேச்சும் புதிதல்லவா!

 

நான் என்ன தவறு செய்தேன் என பெண்ணவள் குழம்பிப்போனாள்.

 

அவன் மீது கொண்ட அக்கறை தானே என்னைக் கோபம் கொள்ள வைத்தது. அதை புரிந்துகொள்ள பார்க்காமல் எடுத்ததும் ஏன் கட்டுப்படுத்த நினைக்கிறாய் என எகிறியவனை அவளால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

அதிகநேரம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க விடாமல் மதுரிமா எதற்கோ ஆர்யாவின் மொபைலுக்கு அழைத்தாள். அவளிடம் பேசியபோது மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்லவும் ஆர்யா பதறிப்போனாள்.

 

“என்னாச்சு மது? உனக்கு எதுவும் ஹெல்த் இஷ்யூவா?”

 

“ஹேய்! உடனே டென்சன் ஆகாத… கைனகாலஜிஸ்ட்டை பாக்க வந்தேன்”

 

மதுரிமா அடுத்த குண்டை தூக்கிப்போடவும் ஆர்யாவின் இதயத்துடிப்பு நின்றே போனது.

 

“பீரியட் டிலே ஆகுது ஆர்யா… எப்பவும் கரெக்டா வந்துடும்… அதான் ப்ரெக்னென்சியா இல்ல ஹார்மோன் ப்ராப்ளமா செக் பண்ணிட்டுப் போக வந்தேன்”

 

அவள் சாதாரணமாகச் சொல்லவும் ஆர்யா திகைத்துப்போனாள்.

 

“வாட்? ப்ரெக்னென்சி செக்கப்பா? மது ஆர் யூ சீரியஸ்? இவ்ளோ சாதாரணமா சொல்லுற?”

 

“ப்ச்! இதுல யாராச்சும் விளையாடுவாங்களா? எப்பவும் நானும் நவீனும் கவனமா இருப்போம்… எப்பிடியோ தப்பு நடந்துடுச்சு… இப்ப நான் ப்ரெக்னென்ட் ஆனேன்னா ஸ்டடீஸ்ல பிரச்சனை வரும்… அதான் டாக்டர் கிட்ட பேசிட்டு ஒரு முடிவு எடுத்துடலாம்னு வந்தோம்”

 

மதுரிமா சாதாரணமாப் பேச ஆர்யாவுக்குத் தான் வெட்கம் பிடுங்கித் தின்றது. கூடவே அவள் மண்டையில் இன்னொரு அடி விழுந்தது.

 

மதுரிமாவை விடு, நீ நேற்று செய்த காரியத்தின் விளைவை யோசித்துப் பார்த்தாயா என்று மனசாட்சி கேள்வி கேட்டு அடித்த அடி அது.

 

“ஓ.கே மது… செக்கப் முடிச்சிட்டுக் கால் பண்ணு”

 

அழைப்பைத் துண்டித்தவளுக்குப் பயம் வந்தது. காதல் மயக்கத்தில் நடந்த எதற்காகவும் அவள் வருத்தப்படவில்லை. அவளே மனமுவந்து தான் டாமிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

 

அவள் பயந்தது குழந்தையைப் பற்றி எண்ணியே. டாமிற்கு குழந்தை என்றாலே எட்டிக்காய். அப்படிப்பட்டவனிடம் மதுரிமாவின் நிலையைக் காட்டி பேசினால் கூட பெரிதாய் அலட்டிக்கொள்ளமாட்டான். ஆனால் தனது நிலை?

 

குழப்பமும் பயமுமாக அப்படியே அமர்ந்தவளின் தோளை யாரோ அணைத்தார்கள். பார்க்காமலே அணைத்தவன் டாம் என்று அறிந்துகொண்டவள் எதுவும் பேசவில்லை.

 

டாம் அவளருகே அமர்ந்தவன் “சாரி டு ஸ்கோல்ட் யூ ஜெர்ரி… உன் வார்த்தை எல்லாமே என்னைக் கட்டுப்படுத்துற மாதிரி இருந்துச்சு” என்றான்.

 

போன நிதானம் அவனிடம் திரும்பி வந்திருந்தது.

 

“நீ ஜேக்கப்ஸ் வெல்ல வச்சு என்னை ஆர்யானு கூப்பிட்டதா ஞாபகம்”

 

மனம் தாங்காமல் வேதனை மண்ட பேசினாள் ஆர்யா.

 

டாம் அவளது முகத்தைத் தனது கரங்களில் ஏந்தினான். கண்ணுக்குக் கண் பார்த்தவன் மனம் வருந்தி தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டான்.

 

இனியும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் என்பதால் ஆர்யாவும் தனது கோபத்திலிருந்து இறங்கி வந்தாள்.

 

ஆனால் மதுரிமா சொன்ன செய்தி கொடுத்த பயமும் குழப்பமும் தீரவில்லையே!

 

அதை அப்படியே டாமிடம் கூறிவிட்டாள். அவனது பதில் என்னவாக இருக்குமென காத்திருந்தாள்.

 

“நேத்து இன்டென்சனோட எதுவும் நடக்கல… சில உணர்வுகள் நம்மளை சுலபமா மதிமயக்கிடும்… நேத்து நடந்ததுக்காக நான் வருத்தப்படல ஜெர்ரி… சப்போஸ் அதனால என்ன நடந்தாலும் ஐ வில் பி ரெஸ்பான்சிபிள்… போதுமா?”

 

“சப்போஸ் பேபி…?”

 

“அப்பிடியே இருந்தாலும் என்ன செய்ய முடியும்? எனக்குக் குழந்தை பெத்துக்குறதுல உடன்பாடு இல்லாத மாதிரி குழந்தைய கருவுல கொல்லுறதுலயும் உடன்பாடு இல்ல ஜெர்ரி”

 

டாமின் நிலைப்பாடு ஆர்யாவுக்கு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்தது.

 

“நீயா பேசுற டாம்?” என வாய் விட்டே கேட்டாள்.

 

டாம் முறுவலித்தபடியே “நான் தான் பேசுறேன்… என்ன செய்யுறது? என்னோட கொள்கைகளை உடைச்சே தீருவேன்னு இந்தியால இருந்து ஒரு ஏஞ்சல் வந்து டார்ச்சர் பண்ணுறாளே” என்றான் விளையாட்டாக.

 

அவனது கொள்கைக்கு எதிராக இருந்தாலும் குழந்தை என்று வந்தால் டாம் இளகிவிடுவான் என்றெண்ணி ஆர்யாவின் மனம் நெக்குருகிப்போனது.

 

அவனை அணைத்தவள் “யூ ஆர் டூ கைண்ட் டாம்… நீ மத்த ஆம்பளைங்க மாதிரி இல்ல” என்றாள் மனப்பூர்வமாக.

 

“ஜெர்ரிய மாதிரி ஒருத்தி என் லைஃப்ல வரலைனா நானும் மத்த ஆம்பளைங்க மாதிரி தான் இருந்திருப்பேன்.. பேபி பத்தி உன்னோட பயம் நியாயமானது.. அந்தப் பயத்துக்கு இனிமே அவசியம் வராம பாத்துக்கலாம்… சரியா?”

 

இப்போது ஆர்யாவின் கண்களில் புரியாத பாவனை.

 

“என் நிலைப்பாடு எப்பவும் உன்னைக் காயப்படுத்தக்கூடாதுல்ல ஜெர்ரி… அதே நேரம் என் மனசுல பதிஞ்சு போன கொள்கைய என்னால அவ்ளோ சீக்கிரம் மாத்திக்கவும் முடியாது… இதுக்கு ஒரே வழி நம்ம கொஞ்சம் கவனமா இருக்கணும்… இருந்துட்டா போச்சு”

 

இப்போது அவளுக்குச் சப்பென்று ஆனது. முழு மனதோடு காதலில் மூழ்குபவனின் பிள்ளையைச் சுமக்க அவளுக்குக் கசக்குமா என்ன? தனது காதல் குழந்தை – குடும்பம் பற்றிய அவனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா சற்று முன்னர் யோசித்தவள், அது டாமின் இரக்கச்சுபாவத்தின் வெளிப்பாடென புரிந்ததும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.

 

அத்தனை பாதுகாப்பையும் தாண்டி குழந்தை என ஒன்று உருவானால் அதை அழிக்க அவன் கட்டாயப்படுத்தமாட்டான். ஆனால் இரு மனங்கள் விரும்பி பெற்றோர் ஆவதில் இப்போதும் அவனுக்கு விருப்பமில்லை.

 

ஆர்யாவுக்குப் பெருமூச்சு வந்தாலும் இந்தளவுக்கு இறங்கி வந்தவன் பிற்காலத்தில் மனம் மாறுவான் என்று நம்பி அவனது தோள் சாய்ந்தாள்.

 

தங்களுக்குள் எழுந்த சிறிய பிணக்கைப் பேசித் தீர்த்துக்கொண்டார்கள் அந்தக் காதலர்கள்.

 

பேசினாலும் தீராத, தீர்வேயில்லாத பிரச்சனை ஒன்றை காலம் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கப்போவதை அறியாமல் டாமின் தோளில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்தாள் அவனது ஜெர்ரி.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
44
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்