Loading

“🎉 Hey Lovelies… Exciting News! Introducing our brand new and India’s first Love Website. Your ultimate destination to find that special someone. Whether you’re looking for companionship, romance, or a soulmate, our platform is designed to help you discover meaningful connections. Join us in this journey of love and start your search today at “Eternal Cupid Connections”. Your Love Story begins here! ❤️ 

#LoveWebsiteLaunch #Eternal_Cupid_Connections”

“ஹேய் லவ்லீஸ்… ஒரு உற்சாகமான செய்தி! எங்கள் புத்தம் புதிய மற்றும் இந்தியாவின் முதல் காதல் வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி. சிறப்பு வாய்ந்த, உங்களுக்கென எழுதப்பட்ட அந்த ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான உங்கள் இறுதி இலக்கு. நீங்கள் நட்பு, காதல் அல்லது ஆத்ம பந்தத்தைத் தேடுகிறீர்களானாலும், அர்த்தமுள்ள உறவுகளைக் கண்டறிய உதவும் வகையில் எங்கள் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த அன்பின் பயணத்தில் எங்களுடன் இணைந்து உங்கள் தேடலை இன்றே Eternal Cupid Connections இல் தொடங்குங்கள்.  உங்கள் காதல் கதை இங்கே ஆரம்பமாகிறது!  ❤️”

எல்லா சமூக வலைத்தளங்களிலும் இச் செய்தி தான் ஹைலைட்டாகவும் ட்ரென்டாகவும் ஓடிக் கொண்டிருந்தது.

இன்றைய நவநாகரீக இளைஞர்களையும் யுவதிகளையும் கவரும் ஒரு செய்தி. அவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வலைத்தளம்.

லான்ச் செய்யப்பட்டு சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பயனாளிகளை சம்பாதித்தது Eternal Cupid Connections வலைத்தளம்.

எல்லா இடத்திலும் இவ் வலைத்தளமே பேசு பொருளாகக் காணப்பட்டது. 

இள வயதினர் மத்தியில் பிரசித்தி பெற்றது என்றாலும் சில பிற்போக்கு வாதிகளின் கண்டனத்தையும் பெற்றது.

இருந்தும் வெற்றி பெற்றது என்னவோ இளைய சமுதாயம் தான். 

புதிய தோழமைகள், புதிய உறவுகள் என்று தம் எல்லையை விட்டுக் கடந்து வந்து அனைவரும் உபயோகிக்க ஆரம்பித்தனர்.

அவ் வலைத்தளத்தை உருவாக்கிய கம்பனிக்கு முதல் நாளே கொள்ளை லாபம்.

இது இவ்வாறிருக்க, அதே இந்தியாவில், தமிழ் நாட்டில், சென்னையில் ஏற்கனவே பல பயனாளிகளை சம்பாதித்து, அநேகமானோர் அறிந்து வைத்திருந்த இவ் வலைத்தளத்தைப் பற்றி எதுவுமே அறியாது தம் காதலே பெரிதென சிறு குழந்தைகள் தோற்று விடும் அளவுக்கு மக்கள் சனம் நிறைந்த அக் கடற்கரையில் ஓடிப் பிடித்து விளையாடியது ஒரு காதல் ஜோடி.

மக்கள் அனைவரும் தத்தம் உலகில் மூழ்கி இருந்ததாலும் இவர்களைப் போலவே பல காதல் ஜோடிகள் அங்கு இருந்ததாலும் இவர்களின் செய்கை யாருக்கும் வித்தியாசமாகப் படவில்லை.

“லாவண்யா… நில்லு… ஓடாதே… என் கைக்கு மாட்டினா நடக்குறதே வேற…” என்றவாறு துரத்தியவனைத் திரும்பிப் பார்த்து நாக்கை துருத்தி அழகு காட்டி விட்டு பெண்ணவள் ஓடவும் முன்பை விட வேகமாக ஓடிச் சென்ற ரிஷப் பின்னிருந்து அவளை எட்டிப் பிடித்தான்.

“மாட்டிக்கிட்டியா? மாட்டிக்கிட்டியா? எனக்கே பழிப்பு காட்டுறியா?” எனக் கேட்டவன் லாவண்யாவின் இதழ்களைப் பிடித்துக் கிள்ள, “ஆஹ்… வலிக்கிது… சாரி சாரி… இனி இப்படி பண்ண மாட்டேன். விடு ரிஷப்.” எனக் கெஞ்சினாள் லாவண்யா.

லாவண்யா கெஞ்சவும் அவளை விடுவித்தான் ரிஷப்.

வெகுநேரம் ஓடிய களைப்பில் இருவரும் மணலில் சரிந்து படுத்து முழு நிலவை வெறித்தனர்.

அன்று பௌர்ணமி என்பதால் சுற்றியும் விளக்குகள் போட்டது போல் ஜொலித்தது.

ஒரு கரத்தை தலைக்கு பின்னால் கொடுத்து இன்னொரு கரத்தை மார்பிற்கு குறுக்காக பதித்தவாறு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் இருந்த ரிஷப்பை சில நொடிகள் கண் குளிர ரசித்த லாவண்யா ரிஷப்பின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

தன்னவளை அணைத்துக் கொண்ட ரிஷப், “என்னாச்சு லாவண்யா?” எனக் கேட்டான் ஆதுரமாக அவளின் தலையை வருடியவாறு.

“நத்திங் ரிஷப். ஜஸ்ட் எந்தப் பிரச்சினையும் இல்லாம லைஃப் லாங் இப்படியே உங்க நெஞ்சில தலை வெச்சி உங்க மனைவியா கூடவே இருக்கணும்.” என்றாள் லாவண்யா.

“அதுக்கென்ன? இருந்துட்டாப் போச்சு. இது பப்ளிக் ப்ளேஸ். சோ ரொம்ப நேரம் இருக்க முடியாது. பட் கூடிய சீக்கிரமா என் வீட்டுல, என்னோட மனைவியா, சகல உரிமையோடயும் லைஃப் லாங் இருக்கப் போற.” என ரிஷப் கூறவும் லாவண்யாவின் முகத்தில் புன்னகை.

💜💜💜💜💜

“அது எப்படி டி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன வீட்டுல பார்த்தாங்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்க முடியும்? பழகி பார்த்தா மட்டும் தானே அவன் நல்லவனா? கெட்டவனா? அவனோட பழக்க வழக்கங்கள் என்ன? இப்படி எல்லாம் தெரிஞ்சிக்க முடியும். அவன் இவன் கிட்ட விசாரிச்சாங்கன்னு அவங்க சொன்னா மட்டும் போதுமா? அப்பப்பா… என்னால எல்லாம் அந்த ரிஸ்க் எடுக்க முடியாதுப்பா. இது என் வாழ்க்கை. கடைசி வரை வாழப் போறது நான் மட்டும் தான். இருக்குற ஒரு வாழ்க்கைல நான் என் மனசுக்கு பிடிச்சவன தான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவும் காதலிச்சு மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” எனும் போதே அவளின் மனக்கண்ணில் தோன்றியவனின் நினைவில் முகம் மலர்ந்தாள் ஷனாயா.

இன்னும் இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு ஷனாயாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் தோழி வினிதாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

வீட்டில் பேசி நிச்சயித்த திருமணத்துக்கு சம்மதித்தது தவறோ என வினிதா யோசிக்க, அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்து ஷனாயாவுக்கு பரம திருப்தி.

அவளுக்கு ஏனோ இந்த வீட்டில் பேசி நடத்தி வைக்கும் திருமணத்தில் துளி கூட நம்பிக்கை இல்லை.

“நல்லா யோசிச்சுக்கோ வினி. வீட்டுல சொன்னாங்கன்னு சொல்லி இப்போ கழுத்த நீட்டினா உன் கழுத்துல விழப் போறது தாலிக் கயிறு இல்ல. தூக்குக் கயிறு. மனசுக்கு பிடிச்சவன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறது ஒரு தனி சுகம். அதுக்கு எல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும். என்ன பண்ண? உன் தலைவிதி. உனக்கு போய் இப்படி அமைஞ்சிருக்கு.” என்றாள் கையில் இருந்த குல்பியை சாப்பிட்டவாறு ஷனாயா வருத்தமாக.

சில நொடிகள் தீவிரமாக ஏதேதோ சிந்தித்த வினிதா ஷனாயாவைப் பார்த்து, “ஷனா… நீ ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு கிளம்பு. நான் இப்போவே போய் முதல் வேலையா கல்யாணத்த நிறுத்துறேன். நானும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குவேன். என் ஃப்ரெண்ட்ஸ் நீங்க எல்லாரும் ஜாலியா லவ் பண்ணி கல்யாணம் பண்ணுக்குவீங்க. நான் மட்டும் சுமாரையோ குமாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் பூரா அவனுக்கு கஞ்சி ஊத்தணுமா?” என்றவள் ஷனாயாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வேகமாகப் பறந்தாள்.

“வினி… வினி… என்னையும் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போடி…” என ஷனாயா கத்தியது எல்லாம் காற்றில் கரைந்து போனது தான் மிச்சம்.

“ஷிட்…” எனத் தரையைக் காலால் உதைத்த ஷனாயா எஞ்சிய குல்பியை மொத்தமாக விழுங்கிக் கொண்டு ஏதாவது ஆட்டோ வரும் வரை ஒரு ஓரமாகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்க, வேலை முடிந்து பலர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் அவளின் பார்வையில் பட்டது தூரத்தில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வண்டி.

‘அட நம்ம ஆளு.’ என எண்ணியவளின் கண்கள் பளிச்சிட்டன.

ஷனாயா இருந்த திசையில் தன் இரு சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த அஷ்வின் ஷனாயாவைக் கண்டதுமே வண்டியின் வேகத்தைக் குறைத்தான்.

அதனைக் கண்டும் காணாதது போல் இருந்த ஷனாயாவுக்கு ஒரு எண்ணம் தோன்றவும் அவ் வழியாக வந்த பேரூந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

தன் இரு சக்கர வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திய அஷ்வின் அதனைப் பூட்டி விட்டு விரைவாகப் பேரூந்தை நோக்கி ஓடினான்.

பேரூந்தின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்த ஷனாயா அஷ்வின் வேகமாக வந்து ஏறியதுமே ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். 

அஷ்வின் ஏறியதுமே பேரூந்து கிளம்ப, வேக மூச்சுக்களுடன் வந்து ஷனாயா அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

முகத்தில் குறும் புன்னகையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த ஷனாயாவின் வயிற்றில் அஷ்வினின் அருகாமையினால் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

சற்று முன்னோக்கி குனிந்த அஷ்வின் ஷனாயாவின் இருக்கையில் பின் இருந்தவாறே தாடையைப் பதித்து விழி அகற்றாமல் அவளையே நோக்கவும் ஜன்னல் வழியே வெளியே பார்வையைப் பதித்திருந்த ஷனாயாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஆனால் இருவரின் உள்ளங்களும் ஆயிரம் கதைகள் பேசின.

கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் ஷனாயாவை கடந்த ஒரு வருடமாக ஒரு தலையாகக் காதலித்துக் கொண்டிருக்கிறான் அஷ்வின்.

வேலை தேடி சென்னை வந்தவன் வேலையுடன் சேர்த்து காதலையும் தேடினான்.

அஷ்வின் தேடிய வேலை அதிகாரப்பூர்வமாகக் கிடைத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகின்றது.

ஆனால் அவன் தேடிய காதல் தான் இன்னும் அதிகாரப்பூர்வமாக, வாய் மொழி மூலமாக தன் காதலை வெளிப்படுத்தவில்லை.

ஷனாயாவைக் கண்டதும் காதல் கொண்ட அஷ்வின் டீனேஜர்ஸைப் போல் ஷனாயாவைக் காதல் என்ற பெயரில் ஸ்டாக்கிங் செய்து வலுக்கட்டாயமாக காதலை வரவழைக்க முயற்சிக்காது தன் மனதில் எழுந்த உணர்வுக்கு பெயர் நிச்சயம் காதல் தான் என்று முடிவான பின் நேராக ஷனாயாவிடம் சென்று ஷார்ட் என்ட் ஸ்வீட் ஆக தன் காதலை வெளிப்படுத்தவும் ஷனாயாவுக்கு அதிர்ச்சி என்றால் அவளுடன் நின்றிருந்த வினிதா ஆ என வாயைப் பிளந்து பார்த்தாள்.

ஷனாயா அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதிருக்கவும் முதலில் தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை வழங்கிய அஷ்வின், “இப்படி பட்டுன்னு வந்து சொல்லிட்டேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க. என் மனசுல பட்டத நான் ஓப்பனா சொல்லிட்டேன். அதுக்காக நீங்க என்னை காதலிக்கணும்னு கட்டாயம் இல்ல. என்னைப் பத்தி முழுசா சொல்லிட்டேன் நான். எனக்கு வரப் போற லைஃப் பார்ட்னர் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அப்படியே இருக்கீங்க நீங்க. அதே போல உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர் பத்தி நிறைய கற்பனைகள் இருக்கும். ஒருவேளை நான் அதுக்கு ஏத்தது போல இல்லாம இருக்கலாம். அதனால நீங்க நோ சொன்னாலும் ஒரு பிரச்சினையும் கிடையாது. ஓக்கே சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். பட் நோ சொன்னாலும் நிச்சயம் முழு மனசா ஏத்துப்பேன். வருத்தம் இருக்கத் தான் செய்யும். அதுக்காக உங்கள டார்ச்சர் எல்லாம் பண்ண மாட்டேன். நீங்க உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. நல்லா யோசிச்சு சொல்லுங்க. இது என் கார்ட். வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்திருக்கேன். அதனால டீனேஜ் பசங்க போல துரத்தி துரத்தி காதலிக்கவெல்லாம் எனக்கு டைம் இல்ல. உங்கள டெய்லி பார்க்கலன்னாலும் பேசலன்னாலும் என் மனசுல உள்ள காதல் அப்படியே தான் இருக்கும். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. ஸ்டாக்கிங் எல்லாம் பண்ண மாட்டேன் நான். பார்க்குற இடத்துல சின்னதா ஒரு ஸ்மைல், முடிஞ்சா உங்களுக்கு கன்வீனியன்ஸா இருந்தா மட்டும் ரெண்டு மூணு வார்த்தை பேச்சு. இல்லன்னா தூரத்துல இருந்தே உங்கள ரசிப்பேன். அவ்வளவு தான். நீங்க ஓக்கே சொன்னீங்கன்னா உங்களுக்காகவும் டெய்லி கொஞ்சம் நேரமாவது கண்டிப்பா செலவழிக்க ட்ரை பண்ணுவேன். நீங்க ஓக்கே சொல்ல முன்னாடி உங்க பின்னாடி எல்லாம் சுத்த மாட்டேன். பட் ஓக்கே சொல்லிட்டீங்கன்னா டெய்லி இல்லன்னாலும் என்னால முடிஞ்ச நேரம் அட்லீஸ்ட் உங்க வீடு வரையாவது உங்களுக்கு துணையா கூடவே வருவேன். நோ சொன்னாலும் முன்னாடி சொன்ன மாதிரி தான். பார்க்குற இடத்துல சின்னதா ஒரு ஸ்மைல் மட்டும். தேவதாஸா எல்லாம் மாறி உங்கள குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்க மாட்டேன். சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். இனிமே உங்க முடிவு தான். ஒருவேளை உங்களுக்கு ஓக்கேவா இருந்து நேரடியா சொல்ல தயக்கமா இருந்தா உங்க கன்னத்துல குழி விழுறது போல ஒரு குட்டி ஸ்மைல் பண்ணுங்க. ஐ வில் அன்டர்ஸ்டேன்ட். சரி அப்போ நான் கிளம்புறேன். ஐ லவ் யூ என்ட் ஈகர்லி வெய்ட்டிங் ஃபார் யுவர் ஸ்மைல்.” என்றவன் கிளம்பி சில நொடிகள் கழித்தே தோழிகள் இருவரும் தன்னிலை அடைந்தனர்.

“இப்போ என்ன டி நடந்துச்சு இங்க?” என அதிர்ச்சி மாறாமல் கேட்ட வினிதாவுக்கு புன்னகையைப் பதிலாக அளித்த ஷனாயா தன் கையில் இருந்த கார்டில் பதியப்பட்டிருந்த அஷ்வின் பெயரை ஆர்வமாக நோக்கினாள்.

அன்றே ஷனாயாவின் மனதில் மெல்லிய சாரலை வீசிச் சென்றான் அஷ்வின்.

அதன் பின் வந்த நாட்களில் அஷ்வின் கூறியது போலவே அதிகமாக அவனைக் காணவில்லை ஷனாயா. 

ஏதாவது சந்தர்ப்பத்தில் காண நேர்ந்தால் கூட அஷ்வினின் இதழ்கள் மலரும்.

பதிலுக்கு ஷனாயா இதழ் விரிக்காவிட்டாலும் அவளின் கண்கள் புன்னகைத்தன.

காதல் வசனம் பேசாமலயே ஷனாயாவின் மனதுக்குள் நுழைந்தான் அஷ்வின்.

அதன் பின் வந்த நாட்களில் அஷ்வினைக் காண நேர்ந்தால் தன் மனதை வெளிப்படுத்தும் விதமாக ஷனாயா அவனைப் பார்த்து புன்னகைக்க, றெக்கை இன்றியே வானில் பறந்தான் அஷ்வின்.

நேரடியாக தன் மனதை ஷனாயா வெளிப்படுத்தாவிடிலும் அவளின் முகமே அவளின் அகத்தை வெளிப்படுத்த, வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தன் வேலை முடிந்து வரும் வழியில் இன்று போலவே ஷனாயாவுக்கு துணையாக வருவான்.

சற்று நேரம் கழித்து ஷனாயா இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் அஷ்வினைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் இறங்கிக்கொள்ள, உடனே அவளைத் தொடராமல் ஓரிருவர் இறங்கிய பின் பேரூந்தை விட்டு இறங்கிய அஷ்வின் சில அடிகள் இடைவெளியில் தன்னவளைப் பின் தொடர்ந்தான்.

ஷனாயாவின் வீட்டுக்குச் செல்ல ஒரு குறுக்கு வீதியில் சற்றுத் தூரம் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாத அப் பாதை இருவருக்கும் வசதியாகிப் போயிற்று.

வழக்கம் போல நடைப் பயணம் மௌனமாகக் கழிய, ஒரு வித மோன நிலையில் ஷனாயாவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த அஷ்வின் அவள் நடையை நிறுத்தியதை அவதானிக்காது சென்று அவளை மோதிய பின் தான் தன்னிலை அடைந்தான்.

திடீரென அஷ்வின் வந்து மோதவும் தடுமாறிய ஷனாயா விழ முன் முதல் முறை தன்னவளின் கரம் தீண்டி அவளைத் தாங்கிப் பிடித்தான் அஷ்வின்.

முதல் தீண்டல் ஷனாயாவுக்கு பல வித உணர்வுகளை ஏற்படுத்த, தன்னவளைக் காக்க வேண்டிப் பிடித்ததால் அஷ்வினுக்கு தன் செய்கை புரிய வெகுநேரம் பிடித்தது.

“ஹேய் சாரி சாரி‌… நான் கவனிக்கல. சாரி…” என அஷ்வின் மனமுவந்து மன்னிப்பு வேண்ட, “இல்ல… பரவால்ல.” என முதல் முறை வாயைத் திறந்தாள் ஷனாயா.

தன்னவள் முதல் முறை தன்னுடன் பேசியதில் அஷ்வின் ஷனாயாவையே விழி அகற்றாமல் காதலுடன் நோக்க, “அ…அது… அது வந்து… நான்…” என வார்த்தை வராது தடுமாறினாள் ஷனாயா.

“ம்ஹ்ம்… நீங்க?” என அஷ்வின் குறும்புப் புன்னகையுடன் எடுத்துக் கொடுக்க, “அது… நான்… நான் … ஒன்னும் இல்ல… அப்புறம் சொல்றேன்.” என்ற ஷனாயா தான் சொல்ல வந்ததைக் கூறாது வெட்கம் பிடுங்கித் தின்ன, தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

“ஹேய் ஷனு… ஓடாதே… பார்த்து…” எனக் கத்திய அஷ்வினின் முகமும் வெட்கத்தில் சிவந்தது.

தன்னவளைத் தீண்டிய கரத்தைப் பார்த்த அஷ்வின், “யூ ஆர் சோ லக்கி மேன்.” என்றான் பொறாமையாக.

தன் அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்த அஷ்வின் குளித்து உடை மாற்றி வந்து இரவுணவைத் தயார் செய்ய ஆரம்பித்த நேரம் பார்த்து அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கவும் குழப்பத்துடன் அழைப்பை ஏற்று, “ஹலோ…” என்க, மறு முனையில் பலத்த அமைதி.

ஹலோ என பல முறை பேசியும் பதில் வராமல் போகவும், “ஹலோ… யாருங்க பேசுறது?” எனக் கேட்டான் அஷ்வின் கடுப்பாக.

மறுமுனையில் ஒரு மெல்லிய கணைப்புச் சத்தம் ஒன்று வரவும், “ஷனு…?” என ஆவலாகக் கேட்ட அஷ்வினின் முகத்தில் புன்னகை.

“ம்ம்ம்…” என மறு முனையில் ஷனாயா பதிலளிக்க, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான் அஷ்வின்.

“என்ன மேடம் கால் எல்லாம் பண்ணி இருக்கீங்க. என் கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என அறிந்தே கேட்ட அஷ்வினுக்கு இம் முறையும் வெறும், “ம்ம்ம்…” மட்டுமே பதிலாக வர, “ஓ… அப்போ எதுவும் இல்ல போல. சரி அப்போ தான் கட் பண்ணுறேன்.” என்றான் அஷ்வின் பொய்யாக.

“ஐயோ கட் பண்ணாதீங்க. ஐ லவ் யூ.” என்றாள் ஷனாயா பட்டென்று.

ஷனாயா தன் காதலைக் கூறவும் அஷ்வினின் கண்கள் சந்தோஷ மிகுதியில் கலங்கின.

அஷ்வின் எதுவும் பதிலளிக்காமல் போகவும் எங்கு அவன் அழைப்பைத் துண்டித்து விட்டானோ எனப் பயந்த ஷனாயா, “ஹலோ… ஏங்க… இருக்கீங்களா?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில் தயக்கமாக.

“கம் அகைன் ஷனு… என்ன சொன்ன இப்போ?” எனக் கேட்ட அஷ்வின் மீண்டும் தன்னவளின் குரலில் காதலைக் கேட்க விரும்பினான்.

“அது… அது… நானும் லவ் யூ…” என சொல்லி முடிக்கவே

பெரும்பாடு பட்டாள் ஷனாயா.

மறு நொடியே, “ஹுரே… என் ஷனு லவ்வ சொல்லிட்டா… ஐ லவ் யூ டூ ஷனு…” என அஷ்வின் கத்தவும் ஷனாயாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. நைஸ் ஸ்டார்ட் 🤩
      அஸ்வின் சூப்பர் 🥰