ஒரு குரல் கர்ஜனையாக,”இங்க என்ன நடக்குது???”என்று கேட்டது. சமியும் ரிஷியும் வேகமாக எழுந்து நின்றனர். சமி திருட்டு முழி முழிக்க, ரிஷி சாதாரணமாக இருந்தான். அந்தக் குரலைக் கேட்டு ராமும் ஆகாஷும் வெளியே வந்தனர்.
“என்னாச்சு மாமா/வாசு??” என்று ஒரே நேரத்தில் ஆகாஷும் ராமுவும் கேட்டனர். வந்தது சமியின் பாப்ஸ் வாசுதேவன்.
“என்ன எதுக்கு கேட்குறீங்க?? இதோ இங்க நிக்குறாங்கள, இவங்ககிட்ட கேளுங்க.” என்று கோவமாகக் கூறினார் வாசு. சமி தன் தந்தையிடம் வந்து,”பாப்ஸ் நீங்க வரதை சொல்லவே இல்லை???”
“பாப்பு என்கிட்ட பேசாத. நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்ப்பார்கலை.”
“பாப்ஸ் நான் சின்ன வயசுல நண்டுனு ஒரு பையனைப் பத்தி சொல்வேன்ல அது நந்து பாப்ஸ்.”
“அதுக்கு இப்ப என்ன பண்ண??”
“பாப்ஸ்!!!” என்று சமி சினுங்க, வாசு அவளை முறைத்துப் பார்த்தார். சமி தன் அம்மாவிடம் சென்று,”யாம்ஸ் நீயாவது பாப்ஸ்கிட்ட சொல்லு. பார் என்கிட்ட கோவப்படுறார்.”
“அப்புறம் நீ பண்ண காரியத்துக்குக் கோவப் படாம கொஞ்சுவாங்களா?? இங்கப் பார் வாசு இதுக்கு காரணம் நீ தான். நீ கொடுத்த செல்லம் தான் காரணம்.”
“யாம்ஸ் உன்னை அப்பாவைச் சமாதானம் பண்ணச் சொன்னேன். ஆனால் நீ அவரை ஏத்தி விடுற!!! இது தான் சாக்குனு எங்களைப் பிரிக்கப் பார்க்காத அம்மா.”
“நான் எதுக்குடி உங்களைப் பிரிக்கனும்??”
“ஹிம். உனக்குப் பொறாமை பாப்ஸ் உன்னைவிட என் கூட க்ளோஸ்ஸா இருக்குறது.”
“அப்போ நீ என்ன பண்ணிருக்கனும்??? உன்னோட காதல்ல முதல்ல வாசுகிட்ட தான சொல்லிருக்கனும்??”
“ஆண்டி யுகி இன்னைக்கு காலைல தான் என்கிட்டயே தன் காதல்ல சொன்னா.”
“ஏய் நீ பேசாத.” என்று கோவமாகக் கூறினார் வாசுதேவன்.
“அங்கிள் உங்களுக்கு ஏன் என் மேல இவ்ளோ கோவம்??”
“என் பாப்புகுட்டிய இது வரைக்கும் யாரும் அதிர்ந்து கூட பேசுனது இல்லை. அவளை நீ எப்படிலாம் பேசுன?? உனக்கு என் பொண்ண நான் தர மாட்டேன்.”
“வாசு, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.”
“ராம் நீ எப்படி இதுக்கு ஒத்துக்கிட்ட??”
“எனக்கே இப்ப தான் தெரியும் வாசு.”
“அதான்ன தெரிஞ்சிருந்தா நீ விட்டுருப்பியா??”
“வாசு அது இல்லை. ரிஷி நல்ல பையன் தான். அன்னைக்கு ஏதோ கோவத்துல அப்படி நடந்நுக்கிட்டான். அதுக்காக அவன் ஒன்னும் தப்பான பையன் இல்லை.”
“ப்ச் ராம் நீயும் என்னடா இப்படி பேசுற?? அவன் என் பாப்புகுட்டிய கண்ட படி பேசிறிக்கான். இவன் எப்படி என் பொண்ண காதலிச்சான்.”
“அங்கிள் அதுக்கு நான் உண்மையிலே ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் அந்த சம்பவம் தான் எனக்கு யுகி மேல இருந்த காதல்ல புரியவைச்சது. நான் அன்னைக்குச் செஞ்ச தப்புக்கு இன்னைக்கு மன்னிப்புக் கேட்டுக்கறேன். சாரி அங்கிள். சாரி யுகி.” என்று சமியிடமும் வாசுவிடமும் கூற, சமி,வாசுவிடம்,”பாப்ஸ் போதும். ப்ளீஸ் எனக்காக. மாம்ஸ் சொன்ன மாதிரி நந்து கெட்டவன் இல்லை. ஏதோ அப்ப உள்ள சூழ்நிலை அப்படி ஆகிருச்சு பாப்ஸ்.”
“வாசு அதான் எல்லாரும் சொல்றாங்கள, எனக்கும் இந்தப் பையனைப் பார்த்தா தப்பா தெரியலை. அதான் மன்னிப்பு வேற கேட்டுடான்ல. அப்புறம் என்ன??” என்று யாமினி சொல்ல, சமி அவளைக் கட்டிக் கொண்டு கண்ணத்தில் முத்தம் குடுத்தாள்.
“யாமி என்ன நீயும் இப்படி பேசுற??” என்று வாசு கேட்டார். நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்குப் புரிந்தது வாசுவைச் சமாதானம் செய்ய வேண்டும் என்றால் யாமினி தன் பக்கம் இன்னும் ஸ்டார்ங்காக பேச வேண்டும் என்று. பிகாஸ் மற்றவர்களிடம் கோவக் குரலில் பேசிய வாசு யாமினியிடம் தன்மையாகத் தான் கேட்டார். அதனால் உடனே யாமினி அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று அவரின் காலடியில் உட்கார்ந்து,”அத்தை அன்னைக்கு நான் யுகிகிட்ட கோவப்பட்டது கூட அவ மேல உள்ள அன்பில் தான். அன்னைக்கு வேற யாராவது, ஏன் ஆர்த்தி குடிச்சுருக்கானு தெரிஞ்சுருந்தா கூட அந்த அளவுக்கு நான் ரியாக்ட் பண்ணிருக்க மாட்டேன். என் தலை எழுத்து அப்படினு விட்டுருப்பேன். ஆனால் அந்த இடத்துல யுகி இருந்ததுனால தான் எனக்கு கோவமே வந்தது. உரிமை உள்ள இடத்துல தான அத்தை கோவம் வரும்.”என்று ரிஷி யாமினியைத் தாஜா செய்ய, அவரும் யோசித்துவிட்டு வாசுவைப் பார்த்து,”வாசு ரிஷி சொல்றதுலயும் நியாயம் இருக்குல!! ரிஷி நம்ம சமியை ஒரு உயர்ந்த இடத்துல வைச்சுருக்கார். அது பொய்னு தெரிய வரும் போது கோவப்பட்டார். அதை தப்புன்னு உணர்ந்து மன்னிப்பு கேட்டாச்சு. உனக்கு தெரியாதா?? மன்னிப்பு கேட்குறவங்க மனுஷன், மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன். ஸோ நீ பெரிய மனுஷனா நடந்துக்க வாசு.” என்று கூறினார்.
“யாமி அதலாம் முடியாது. அவனை நான் மன்னிக்க மாட்டேன். ஏன் பாப்புக்குட்டி உனக்கு லவ் பண்ண வேற ஆள்ளே கிடைக்கலையா?? அதுக்கு இவன் தம்பி சஞ்சயை லவ் பண்ணிருந்தா கூட நான் ஏத்துகிட்டு இருப்பேன்.” என்று கூற, சமி வேகமாக,”பாப்ஸ் நான் ப்ரீத்திக்குத் துரோகம் செய்ய மாட்டேன் பா.” என்று கூறினாள். பெரியவர்கள் முழிக்க ஆகாஷ்,”சஞ்சயும் ப்ரீத்தியும் லவ் பண்றாங்க.” என்று கூறினான்.
“என்னடா சொல்ற?? ப்ரீத்தி இங்க வந்து இருந்த நாள்ள விரல் விட்டு எண்ணிடலாம். எண்ண கூட தேவையில்லை. அவ இங்க வந்ததே இரண்டு இல்லாட்டி மூன்று நாள் தான் இருக்கும். அப்புறம் எப்படி இது நடந்துச்சு???நானும் இங்க தான இருந்தேன்.”என்று ராம் கூற, ஆகாஷ் அவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று கூறினான்.
“சரி நீ யாரையாவது லவ் பண்றியா??”
“சை இல்லை அப்பா. ரொம்ப சாடா(sad a) ஃபீல் பண்றேன் பா.”என்று வருத்தப்பட்டுக் கூற, ராம் அவன் முதுகில் ஒரு அடி வைத்தார்.
“சரி சரி ரிஷி முதல்ல சமி படிச்சு முடிக்கட்டும். அதுக்கப்புறம் உங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்.” என்று யாமினி கூற, வாசு அதிர்ந்து அவரைப் பார்த்தார்.
“யாமி என்ன சொல்ற நீ?? நான் இன்னும் இதுக்கு ஒத்துக்கலை.”
“ப்ச் எப்பவும் உன் பாப்புகுட்டி சந்தோஷம் தான் முக்கியம்னு சொல்லுவல?? அப்புறம் என்ன?? ஒழுங்கா ஒத்துக்க.” என்று யாமினி கூற, வாசு,”எனக்கு யோசிக்க டைம் வேண்டும்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“நீங்க கவலைப்பட வேண்டாம். கண்டிப்பா ஒத்துக்குவார்.” என்று யாமினி கூறிவிட்டு வாசு பின்னே சென்று விட்டார்.
“ரிஷி ரொம்ப விவரம் தான் நீ. வாசுவோட வீக் பாய்ண்ட தெரிஞ்சு யாமினியை கரெக்ட் பண்ணிட்ட. கில்லாடி தான் போ.” என்று ராமுவும் அவனைப் பாராட்டினார். அப்பொழுது ரிஷிக்கு அழைப்பு வந்தது. அவன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தான். இவன் ஒரு உம் மட்டும் சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்தான்.
“அங்கிள் நாம போகாமலே சஞ்சயே எல்லா விஷயத்தையும் முடிச்சுட்டான்.”
“என்ன சொல்ற நந்து??”
“ஆமா யுகி..” என்று ஏதோ கூற வந்தான் ரிஷி. ஆனால் அவன் கூறும் முன் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க, கங்கா பாட்டி, முரளி மற்றும் வாசுகி நின்றிருந்தனர்.
“அம்மா சும்மா பிரச்சனை பண்ணாம வாங்க போகலாம்.”
“முரளி சும்மா இரு. இந்த எதிர்த்து பேசுற வேலைலாம் வேண்டாம்.”
“அம்மா போதும். இத்தனை நாள் உங்க பேச்சை கேட்டு நடந்துக்கிட்ட வரைக்கும் போதும். நான் என் பொண்ண கூப்பிட்டு போறது உறுதி. நீங்க வரதும் வராததும் உங்க இஷ்டம். தேவையில்லாம இங்க வந்து எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க!!!”
“டேய் என் பேத்தி இன்னைக்கு இப்படி பண்ணிருக்கானா அதுக்கு காரணம் இதோ நிக்குறால இவ தான. இவளை சும்மா விட சொல்றியா??”என்று சமியைக் காட்டி கேட்க, முரளி கோவத்துடன்,”என் பொண்ணோட நிலைமைக்கு சம்யுக்தா காரணம் இல்லை. நீங்க தான் காரணம்.” என்று அவரும் கத்த, சத்தம் கேட்டு வாசுவும் யாமினியும் வெளியே வந்தனர்.
“இங்கு எதுக்கு வந்து கத்திட்டு இருக்கீங்க??”
“என்னது கத்திட்டு இருக்கோமா??? எல்லாம் உன் பொண்ணாளா வந்தது!!! அவ இங்க வராமா இருந்திருந்தா ரிஷி என் பேத்தியை வேண்டாம்னு சொல்லிருப்பாளா??” என்று கங்கா பாட்டி ஆவேசமாகக் கத்த, இங்கு ரிஷியோ,”அய்யோ இந்த பாட்டி இப்ப தான் வரனுமா!!! இவரே அத்தை பேச்சு கேட்டு யோசிக்க டைம் கேட்டார். இந்த பாட்டி தேவையில்லாம பேசி இவரு ஒத்துக்காட்டி!!! அவ்ளோ தான். இதை நாம விடக் கூடாது.” என்று மைண்ட் வாய்சில் பேசிவிட்டு கங்கா பாட்டியிடம்,”பாட்டி போதும். என்னோட யுகி வராம இருந்துருந்தாலும் நான் உங்க பேத்தியை கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்.”
“என்னது உன்னோட யுகிய?? அப்போ என் பேத்தி?? அவளுக்கு ஒரு பதில் சொல்லு. உனக்காக அவ சாக துணிஞ்சிருக்கா. ஆனால் நீ இவ கூட சந்தோஷமா கூத்து அடிச்சுட்டு இருக்க. வெக்கமா இல்லையா உனக்கு??”
“பாட்டி நீங்க ரொம்ப பேசிட்டுங்க. உங்க பேத்தியோட நிலைமைக்கு முரளி அங்கிள் சொன்ன மாதிரி நீங்க தான் காரணம் நாங்க யாரும் இல்லை.”
“என்னடா ஓவரா பேசிட்டு போற!!! இங்க பார் ஒழுங்கா என் பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்க. இல்லாட்டி நடக்குறதே வேற!!!” என்று கத்த, ரிஷி அசராமல்,”உங்க பேத்தியை எப்பவும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது!!! உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க!!” என்று அவனும் கோவமாகக் கூறினான்.
“அப்போ உன் அப்பாவை நான் ஜெயில்ல தூக்கி போட்டாலும் பரவாலானு சொல்ற!! அப்படிதான??”
“அய்யயோ என்ன பாட்டி சொல்றீங்க??? எதுக்கு எங்க அப்பா ஜெயிலுக்கு போகனும்???”
“அதலாம் சொல்ல முடியாது. நீ என் பேத்தியை கல்யாணம் பண்ணாட்டி அதான் நடக்கும். அதை ஞாபகத்துல வச்சு நாளைக்குக் கோயில் வந்து சேர். உனக்கும் என் பேத்திக்கும் கல்யாணம்.” என்று பாட்டி கூற, இப்பொழுது ரிஷி சத்தமாகச் சிரித்தான். பாட்டி குழப்பமாகவும் கோவமாகவும் பார்க்க,”என்னடா இவன் இவ்ளோ நேரம் பயந்த மாதிரி பேசினான். இப்ப சிரிக்குறானு பார்க்குறீங்களா!!! உங்களால இப்ப ஒன்னும் பண்ண முடியாது. அதனால உங்க பேத்தியை நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கனவு கானாமல் உங்க வீட்டுக்குப் போய் தூங்குங்க. ஏனா இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் உங்களால தூங்கவே முடியாத.” என்று நக்கலாகக் கூறினான் ரிஷி.
“என்ன டா சொல்ற??”
“ம் சொராக்காக்கு உப்பு இல்லை. அடப் போங்க பாட்டி.”
“ஏய் எல்லாம் இவ இருக்குற திமிருல தான இவ்ளோ பேசுற??? இவ இல்லாம போய்டா நீ கண்டிப்பா என் பேத்திகிட்ட தான வரனும்.” என்று கூறிவிட்டு கொஞ்சமும் தாமதிக்காமல் தன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு சமியை குத்த வந்தார். அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. யாரும் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ரிஷி சட்டெனச் சுதாரித்து சமியைத் தன் பக்கம் இழுத்து அந்த கத்தியை தன் கையால் பிடித்து பாட்டியைத் தடுத்தான். அதற்குள் முரளியும் ராமுவும் வந்து கங்கா பாட்டியைப் பிடித்துக் கொள்ள, வாசு வேகமாக சமியின் கையைப் பிடித்துக் கொண்டார். ஆகாஷ் உள்ளே சென்று முதலுதவி பெட்டி கொண்டு வந்து யாமினியிடம் தந்தான். அவரும் ரிஷிக்கு முதலுதவி செய்து கையில் கட்டுப் போட்டார்.
“என்ன காரியம் அம்மா பண்ணிருக்கீங்க??? எங்க இருந்து உங்களுக்கு இவ்ளோ தைரியம் வந்தது?? அதுவும் கொலை பண்ற அளவுக்கு???”என்று முரளி கோவமாகக் கேட்க, வாசு கங்கா பாட்டியை எரித்து விடுவது போலப் பார்த்து,”என் பொண்ணு மேல இன்னொரு முறை உங்க கைப் பட்டுச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன். ராம் நான் இவங்க மேல கம்ப்ளைன்ட் தரேன் டா. பிடிச்சு உள்ள போடு.”
“நீ கம்ப்ளைன்ட் தர தேவையில்லை வாசு. இந்த அம்மா மேல ஆல்ரெடி நிறைய கேஸ் போட்டாச்சு. இவங்க சாகுற வரை இனிமே வெளில வர முடியாது.” என்று ராம் கூற, கங்கா பாட்டிக்கு அதிர்ச்சி. அவர் சுதாரித்து அங்கிருந்த கிளம்புவதற்குள் ஆறேழு போலிஸ் உள்ளே வந்தனர். வந்தவர்கள் ராம்க்கு சல்யூட் அடித்து விட்டு, பெண் போலிஸ் ஒருவர் சென்று கங்கா பாட்டி கையில் கைவிலங்கை மாட்டி,”பல வருடங்களுக்கு முன் நாராயணன், மனோஹர், ஜானகி மற்றும் ஈஸ்வர் என்பவர்களை கொலை செய்து அதை ஆக்ஸிடெண்ட்டாக மாற்றிய குற்றத்திக்கும், அந்த ஆக்ஸிடெண்ட் செய்தவர்களையும் கொலை செய்த குற்றத்துக்காக உங்களைக் கைது செய்கிறோம்.”என்று கூற,முரளியும் வாசுகியும் அதிர்ந்து நின்றனர்.