ரிஷி வேகமாக வீட்டினுள்ளே நுழைந்தான். அங்கே கங்கா தேவி பாட்டி,ஆர்த்தி,நளினி மற்றும் ப்ரகாஷ் உட்கார்ந்திருந்தனர். ரிஷி வருவதைப் பார்த்த பாட்டி,”என்னாச்சு ரிஷி?? என்னமோ என் சமி அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. அவ தப்பு பண்ணலைனு ப்ரூவ் பண்றேனு வீராப்பா சொன்னானே அவன் எங்க ஓடி போயிட்டான்??”
“நான் இங்க தான் இருக்கேன். எங்கயும் ஓடிப் போகலை.”
“சரி சொல்லு உன்னால ப்ரூவ் பண்ண முடிஞ்சதா??” அவன் எதுவும் சொல்லவில்லை.
“பாட்டி அவங்க எப்படி சொல்லுவாங்க?? தப்பு பண்ணது அவதான. அப்புறம் எப்படி ப்ரூவ் பண்ண முடியும்?? நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்ப்பார்க்கவில்லை சம்யுக்தா. ரிஷி, ஆண்டி, அங்கிள, சஞ்சய்லாம் உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தாங்க. இப்படி பண்ணிட்டியே. சை நீ லாம்…” என்று ஏதோ சொல்லும் முன் ரிஷி,”வாயை மூடு ஆர்த்தி!!” என்று கத்தினான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது வரை ரிஷி எதற்கும் கத்தியது இல்லை. ஏன் அவன் சத்தமாகக் கூட பேசியது கிடையாது. அப்படி இருந்த ரிஷி இப்பொழுது கத்தவும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கண்களில் நீலிக் கண்ணீருடன்,”ரிஷி எதுக்கு இப்படி கத்துறீங்க?? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்?? இவளுக்காக நீங்க என்னை திட்டுறீங்களா??” என்று கேட்டாள் ஆர்த்தி.
“எதுக்கு என் பேத்தி வாயை மூடனும்?? அவ சொன்னதுல என்ன தப்பு?? இதுல அவளை அழ வச்சுட்டு வேற இருக்க!! எவளோ ஒருத்திக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போற என் பேத்தியை கஷ்டப்படுத்துற??? ப்ரகாஷ் நீயும் பார்த்துட்டு சும்மா நிக்குற??”
“ரிஷி இந்த வீட்டுல என்ன நடக்குது?? நான் இங்க இருக்குறது உங்க கண்ணுக்கு தெரியுதா தெரியலையா?? எதுவா இருந்தாலும் நீ என்ட சொல்லிருக்கனும்!! அதை விட்டு நீயா என்னமோ பண்ணிட்டு இருக்க??” என்று ப்ரகாஷ் கேட்க!!
“அப்பா சாரி. நான் தான் தேவையில்லாம காலைலயே எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். ஒரு பத்து நிமிஷம் இருங்க அப்பா. ப்ளீஸ்.” என்று கூற, ப்ரகாஷ அமைதியாக இருந்தார். ஆர்த்திக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது எங்கே தன் ப்ளானை தெரிந்து கொண்டானோ ரிஷி என்று. பயத்தை வெளியில் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
ரிஷி சொன்னது போல பத்து நிமிடத்தில் அனு தன் பெற்றோருடன் அங்கு வந்தாள். அவளைப் பார்த்த ஆர்த்திக்குப் பயமாக இருந்தது.
“என்ன அனு இவ்ளோ காலையில் இங்க வந்திருக்க?? அதுவும் உன் அம்மா அப்பாவோட??” என்று ஆர்த்தி கேட்க, அனு எதுவும் கூறாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
“நான் தான் வரச் சொன்னேன்.” என்று ரிஷி கூற. ஆர்த்திக்கு இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை.
ரிஷி ஆகாஷ் மொபைலை வாங்கி screen mirroring மூலம் டிவியில் மொபைலை கனெக்ட் செய்தான். பின் அந்த வீடியோவை ஓட விட்டான். அதில் அனு மற்றும் ஆர்த்தி ஒரு வெயிட்டரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
“இங்க பாரு நீ நாங்க சொன்ன மாதிரி செஞ்சா நிறையா காசு வரும். என்ன செய்றீயா??”
“என்னா செய்யனும்னு சொல்லு மா கச்சிதமா நான் செஞ்சுடுவேன். ஆனா துட்ட ஒழுங்க குடுக்கணும் சரியா!!”
“அதலாம் ஒழுங்கா குடுத்துருவோம். அதோ(சமியைக் காண்பித்து) அந்த பொண்ணுக்கு 4 அல்லது 5 கிளாஸ் சரக்கு நீ தரனும். அதுவும் அந்த பொண்ணுக்கு தெரியாம சரியா.”
“என்னமா என்ன வம்புல மாட்டி விட்டுருவீங்க போல.”
“என்ன காசு அதிகம் எதிர்பார்க்குறியா?? நீ கேட்டத விட ஜாஸ்தி தரோம். நாங்க சொன்னதைச் செய்.” என்று கூற அவனும் தலை ஆட்டிவிட்டு அங்கிருந்துச் சென்றான். அதோடு வீடியோ முடிந்தது. அனுவின் பெற்றோர் அமைதியாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் வீட்டிற்கேச் சென்று இதைப் போட்டுக் காட்டி அனுவை கையோடு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ரிஷி கூறிவிட்டுத் தான் இங்கு வந்தான். கங்கா பாட்டி, நளினி மற்றும் ப்ரகாஷ் இதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைச் சமாளித்தே ஆக வேண்டும் என்று பாட்டி யோசிக்க ஆரம்பத்தி விட்டார்.
“எப்படி ஆர்த்தி இப்படிப் பண்ண உனக்கு மனசு வந்துச்சு?? நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்??” என்று சமி கேட்க, ஆர்த்தி பேசும் முன் பாட்டி முந்திக் கொண்டு,”அத எதுக்கு என் பேத்தி கிட்ட கேட்கிற?? அதோ அங்கே நிக்கிறாளே அனு அவகிட்ட கேளு.” என்று கூற அனைவரும் இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் பார்த்தார்கள்.
“நான் எதுக்கு அவகிட்ட கேட்கனும்?? என்ன இப்படி பண்ணது உங்க பேத்தி அதனால நான் உங்க பேத்திக் கிட்ட தான கேட்க முடியும்.”
“என் பேத்தி ஒன்னும் பண்ணலை. பண்ணது எல்லாம் அவ.” என்று அனுவை கை காட்டி கூற அனுவும் அவள் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.
“என்ன சொன்னீங்க உங்க பேத்தி ஒன்னும் பண்ணலையா??” என்று அனுவின் தந்தை கேட்க,
“ஆமா இந்த வீடியோ பாத்தீங்கள எல்லோரும். அவ தான் இப்படி பண்ண சொல்லி அந்த ஆள்கிட்ட சொல்லிருக்கா. என் பேத்தி எதுவும் சொல்லலையே.” இதைக் கேட்ட எல்லோரும் எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள்.
“ஆர்த்தி என்ன உன் பாட்டி இப்படி சொல்றாங்க?? நீயும் அமைதியா கேட்டுட்டு இருக்க!! நீ சொல்லி தான இத நான் செஞ்சேன். சம்யுக்தாவும் ரிஷி சாரும் பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு சாருக்கு குடிக்கிறவங்களை பிடிக்காதாம் அதனால் நாம சம்யுகாதவுக்கு குடிக்க குடுத்துறலாம்னு நீ தான சொன்ன.” என்று அனு கேட்க, எங்கே ஆர்த்தி உண்மையைச் சொல்லிவிடுவாளோ என்று அவள் கையை அழுத்திப் பிடித்து எதுவும் சொல்லாதே என்று கண்களால் சைகை செய்தார் பாட்டி. இது நொடியில் நடந்ததால் யாரும் கவனிக்கவில்லை.
“அனு நீ என்ன சொல்றனே எனக்குப் புரியலை. நீ செஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சதா சொல்ற!! உனக்கு என்னாச்சு?? நான் இப்படிலாம் பண்றது தப்புன்னு தான சொன்னேன்.”
“அய்யோ ஏன் ஆர்த்தி இப்படி பொய் சொல்ற?? நான் தான் இப்படி பண்றது தப்புன்னு சொன்னேன். இப்படி மாத்தி பேசுற??”
“நான் உண்மையைத் தான் சொல்றேன். நீ தான் பொய் சொல்ற!!”
“நான் நேத்து தான் சம்யுக்தாவ ஒழுங்கா பாத்தேன். அப்புறம் நான் எப்படி அப்படிப் பண்ணுவேன்??”
“என்ன கேட்டா??”
“ஏய் ஆர்த்தி நீ தான என்கிட்ட சம்யுக்தா வந்ததிலிருந்து ரிஷி சார் ஒழுங்கா பேச மாட்டேங்குறாங்க, சஞ்சயும் அந்த சம்யுக்தா பின்னாடி தான் சுத்துறான். அவளை எதாவது பண்ணனும்னு நீ சொல்லல??”
“இல்ல நான் அப்படிலாம் சொல்லல!!”
“அடிப்பாவ!!! நேத்து கூட ரிஷி சாரும் சம்யுக்தாவும் ஊர் சுத்திட்டு வந்திருக்காங்க. அதுவுமில்லாம அந்த சம்யுக்தா ரிஷி சார் கையைப் பிடிச்சுட்டு உள்ள போற. ரிஷி சாரும் எதுவும் சொல்லல. அவளை எதாவது பண்ணனும்னு நீ சொல்லலை??”
“இல்லை. நான் எதுவும் சொல்லல.”
“அப்புறம் எப்படி எனக்கு இதலாம் தெரியும்??”
“யாருக்குத் தெரியும்??”
“ஏய் எனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த பிரச்சனையுமில்லையே. அப்புறம் நான் எதுக்கு இப்படி பண்ணனும்??”
“ஏன் பிரச்சனை இல்லை. உனக்கு சஞ்சயை பிடிக்கும். காலேஜ்ல இவ சஞ்சய் கூடவே இருக்குறதுனால இவளை எதாவது செய்யனும்னு நீ தான் என்கிட்ட சொன்ன.” என்று ஆர்த்தி கூற, அனுவிற்கு பயங்கர கோவம் வந்து விட்டது.
“சீ நீ எல்லாம் ஒரு ப்ரண்ட். இவர்(ஆகாஷை கை காட்டி) எங்க வீட்டுலையே சொன்னாரு நீ பழியை என் மேல போட்டுருவனு. அப்பவும் நான் உன்ன காட்டி குடுக்கலை. எனக்கு சஞ்சயை பிடிக்கும் தான். நீ சொல்ற மாதிரி இல்லை. அவருடைய குணம் பிடிக்கும். அவர் என் லைஃப் பார்ட்னரா வந்தா நல்ல இருக்கும்னு சொல்லிருக்கேன் தான். அதுலாம் என் மாமா பையனை பார்க்கிறதுக்கு முன்னாடி. நல்ல வேளை உன்கிட்ட நான் சொல்லல எனக்கும் என் மாமா பையனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க. சொல்லிருந்தேன் நீ என் கல்யாணத்தையே நிப்பாட்டிருப்ப. சீ நீ இப்படி இருப்பனு தெரிஞ்சுருந்தா நான் உன்கூட பேசியே இருக்க மாட்டேன். அசால்டா ஆறு வருஷ நட்பை கேள்விக் குறி ஆக்கிட்ட. என் அப்பா என்னை ஃபாரின் அனுப்புறேனு சொல்லும் போது உன் கூட இருக்கனும்னு தான் நீ சேர்ந்த அதே காலேஜ்ல நானும் சேர்ந்தேன். ஆனால் நீ?? இப்படி ஒருத்திய என் வாழ்க்கைல பார்க்கலைனு நினைச்சுக்குறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். பின் திரும்பி தன் மொபைலை எடுத்து,”இதுல கால்ஸ்லாம் ஆட்டோ ரிகார்டிங் பண்ற மாதிரி செட் பண்ணி வச்சுருக்கேன். நேத்து நீ பேசுனதும் இதுல ரிகார்ட் ஆகிருக்கு. ஆனால் நான் இத போட்டு காமிக்க மாட்டேன். பிகாஸ் நான் உன்ன ப்ரண்டா நினைச்சேன். ஒரு ப்ரண்டுக்கு இன்னொரு ப்ரண்ட் துரோகம் பண்ணக் கூடாது. நான் பண்ண மாட்டேன். அதே மாதிரி இனிமே நீ என் ப்ரண்ட் கிடையாது.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். ஆர்த்தி அனு கூறிய வார்த்தையைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றாள். ஆர்த்தி நினைத்தது அனுவை இப்படிக்கு தப்பு செய்தவள் போல் காட்டிவிட்டு பின் அவளிடம் தன் நிலைமையைக் கூறி சமாதானம் செய்யலாம் என்று நினைத்தாள். ஆனால் அனு கடைசியாகக் கூறியதைக் கேட்ட பொழுது தான் எவ்ளோ பெரிய தப்பை அவள் செய்துள்ளாள் என்பதைப் புரிந்துக் கொண்டாள். காலம் கடந்த ஞானோதயம்.
“பாருங்க எவ்ளோ தப்ப செஞ்சுட்டு இப்படி பேசிட்டு போறானு. விடு ஆர்த்தி இவ இல்லாட்டி உனக்கு ப்ரண்டே இல்லையா என்ன?? இல்ல ப்ரண்டஸ் தான் வாழ்க்கையா?? அவ போற விடுடா.” என்று பாட்டி கூற. அங்கிருந்த அனைவரும் அவரை கேவலமாகப் பார்த்தனர்.
“எப்படி பாட்டி நீங்க இப்படி பேசுறீங்க?? நீங்க இப்படி இருக்குறதுனால தான் உங்க பேத்தி இப்படி இருக்கா.”
“ஏய் என் பேத்தி பத்தி எதாவது பேசுன உன்ன என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. அதைவிட நீ யாருடா என் பேத்தி பத்தி பேச?? முதல்ல இந்த வீட்ட விட்டு வெளில போ. இந்த எழவெடுத்தவ வந்ததுல இருந்து என் பேத்தி சந்தோஷமாவே இல்லை.” என்று கூற, ஆகாஷ்,”ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.!!! இந்த வீட்டுல இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் இங்க இருக்க எங்களுக்கு என்ன கிறுக்கு பிடிச்சுருக்கா?? நாங்க இங்க இருந்து போகத் தான் போறோம். ஆனால் அதுக்கு முன்னாடி ஒன்னு செய்யனும்.” என்று கூறிவிட்டு சமியை அழைத்து ஆர்த்தி முன் நிப்பாட்டி,”இவளுக்காக தான உன்ன இந்த கிழவி அடிச்சுச்சு. இப்ப நீ இவளை அடி.” என்று கூற ஆர்த்தியும் பாட்டியும் அதிர்ச்சியடைந்தனர்.
“ஏய் என் பேத்தியை இவ அடிக்குறதா?? கையை வெட்டிடுவேன்.” என்று பாட்டி ஆக்ரோஷமாக கூற, ஆகாஷ் கூலாக,”இவ இப்ப இங்க அடி வாங்கியே ஆகனும். இல்லாட்டி இந்த வீடியோவை போலிஸ்கிட்ட குடுத்து உங்க பேத்தியை அரெஸ்ட் பண்ண சொல்லுவேன். எப்படி வசதி??”
“அப்படினா இப்ப போனாலே அவளைத் தான் அரெஸ்ட் பண்ணனும். என் பேத்தியை இல்ல.”
“ஹா ஹா. நீங்க சொன்ன கதையை இங்க இருக்குற யாருமே நம்பலை. இதுல போலிஸ் நம்புமா?? அதவிட நேத்து அந்த வெயிட்டருக்கு எப்படி பணம் குடுத்தாங்க தெரியுமா?? உங்க பேத்தி கிரெடிட் கார்ட் மூலம் தான். இப்ப என்ன சொல்றீங்க??” என்று ஆகாஷ் கூற பாட்டிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“சமு அடி இவளை.”
“ப்ச் ஆஷ் இவங்கள மாதிரி நாமலும் இருக்கனும்னு அவசியம் கிடையாது. வா போகலாம்.”
“முடியாது சமு. இப்ப என்ன நீ அடிக்க மாட்ட அவ்ளோதான சரி விடு.” என்று கூறிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் ஆகாஷ் ஆர்த்தியை அடித்துவிட்டான். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என்று கூறிவிட்டு சமியை அழைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றான்.