Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 9 ( 9.1 )

கணவர் இறந்த செய்தியை கேட்டு தேவகி உடைந்து போனாரெனில் , ஆதி கேசவனோ எத்தனை நேர்மையான தன் தந்தை , மூட நம்பிக்கை என்னும் அரக்கனின் கையில் சிக்கி இன்று தங்களையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டாரே என்னும் ஆதங்கத்தில் அவரை திட்டிக்கொண்டிருந்தார்.

பத்மா இன்னும் மயக்கத்திலேயே இருந்ததால் அவரிடம் தேவனின் இறப்பு செய்தியை கூற முடியவில்லை. 

 என்ன தான் தன் தந்தை தனக்கு இத்தனை பெரிய துரோகம் இழைத்தாலும் , மகன் என்னும் ஸ்தானத்திலிருந்து ஆதி கேசவன் அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளையெல்லாம் சரி வர செய்து முடித்தார்.

தேவனது நண்பர்கள் , உறவினர்கள் , காப்பகத்தில் வேலை செய்பவர்கள் என்று  அனைவரும் வந்து அவரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 

தானும் தன் கணவனும் செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வந்த தேவகி , தேவனது இறுதி சடங்கிற்கு வந்திருந்த அனைவரிடமும் , அப்பெண் குழந்தையை  தன் இரண்டாவது பேத்தி என்றும் , பிறந்து ஒரு வாரமே ஆனதாகவும் , மேலும் பத்மாவிற்கு  பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும் , ஆதலால் குழந்தை  அவருடன் இருந்தால் தொற்று ஏற்பட்டு விடும் என்பதால் தானும் , தன் மூத்த பேத்தியும் மருத்துவமனையிலிருந்து குழந்தையை தூக்கி கொண்டு வந்து விட்டதாகவும் , பத்மா இன்னும் சிகிச்சையில் இருப்பதால் தேவனின் இறுதி சடங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியவர் , தப்பி தவறி கூட அப்பெண் குழந்தை தத்துப்பிள்ளை என்று தெரிவிக்க வில்லை.

அதே நேரம் தங்கள் குடும்பத்தின் கருப்பு பக்கங்களை ஊரார் கண்களுக்கு தெரியாமல் மறைக்க விழைந்த தேவகி , தங்கள் காப்பகத்தின் அதிகாரி சங்கரனை அழைத்து குழந்தையை பற்றிய உண்மை எக்காரணம் கொண்டும் யாருக்கும் தெரிய கூடாது என்றவர்  , மேலும் அன்று தேவன் எப்படி இறந்தார் என்பதை பற்றி வெளியில் மூச்சு விட கூடாது என்றும் , யாரேனும் தேவன் மறைவை பற்றி விசாரித்தால் , தேவன் அன்று குழந்தைகளை காண காப்பகம் வந்தவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததாகவும் , அதில் பின் மண்டையில் பலத்த அடிபட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாகவும் , அங்கே அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும் என்று சங்கரனிடம் சத்தியம் வாங்கினார்.

சங்கரனும் ” அம்மா நா உங்க வீட்டு உப்பை தின்னு வளந்தவன் மா , நா போய் ஐயாவுக்கு கெட்ட பேர் வர மாதிரி நடந்துக்குவேனா மா ? இப்போ சொல்றேன் மா , என் உயிரே போனாலும் அன்னைக்கு நடந்தத நா யாருக்கும் சொல்ல மாட்டேன் மா . இது நா தெய்வமா கும்பிடுற என் தேவன் ஐயா குடும்பத்து மேல சத்தியம் மா ” என்று சத்தியம் செய்து குடுத்தார்.

தேவனின் இறுதி சடங்குகள் முடிந்து பத்து நாட்கள் கடந்திருக்க , இந்த பத்து நாட்களும் ஆதி கேசவன் பத்மாவை மருத்துவமனையில் அவருடனே  தங்கி கவனித்துக்கொள்ள , முதலில் ஆண் பிள்ளை பிறக்காத கோவத்தில் இருந்த 

பத்மா  ஆதி கேசவனிடம் எரிந்து விழுந்தார். பின் நிதர்சனம் புரிந்த பத்மா தன் மனக்குமுறல்களை எல்லாம் ஆதி கேசவனிடம் கொட்டியவர், தன் வருங்காலத்தை எண்ணி சில பல முக்கிய முடிவுகளையும் எடுத்தார். 

அதே நேரம் தன் தவறை உணர்ந்த தேவகி , இனி தன் வாழ்வில் எந்த ஓர் சூழ்நிலையிலும் அத்தவறை செய்து விட கூடாது என்னும்  முடிவில் உறுதியாக இருந்தவர் , இது வரை தன் மகன் குடும்பத்திற்கு செய்த பாவத்திற்கும் , தங்கள் குடும்பத்தை நம்பி அடைக்கலம் தேடி வந்த அக்குழந்தைக்கு அவர் செய்யவிருந்த அநீதிக்கும் சேர்த்து பிராயச்சித்தமாய் அக்குழந்தைக்கு என்றும் ஓர் நல்ல பாட்டியாய் இருப்பதற்கு முடிவு செய்தார்.

மறுபுறம் ஆதி கேசவன் தன் மனைவிக்கு எக்காரணம் கொண்டும் உண்மை தெரியவர கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் , அதே நேரம் தன் குடும்பம் தெரிந்தோ தெரியாமலோ ஓர் குழந்தையின் வாழ்க்கையில் விளையாடி விட்டது , அதற்கு பிராயச்சித்தமாய் அக்குழந்தையை தன் மகளாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த ஆதி கேசவன் , அதனூடே அக்குழந்தையின் தேவைகள் அனைத்தையும் தன்னால் முடிந்த மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று ஓர் பொறுப்பான தந்தையாக முடிவெடுத்தார்.

இவ்வாறு அனைவரும் தங்களுக்குள்ளே சில பல தீர்மானங்களையும் அதை தக்க வைத்துக்கொள்ள பற்பல முடிவுகளையும் எடுக்க , பாவம் அவர்கள் அறியவில்லை இவர்கள் எடுத்த முடிவுகளை நினைத்து காலம் கடந்து வேதனை பட போகின்றனர் என்று.

பத்து நாட்கள் நொடி பொழுதில் கடந்திருக்க , அன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பத்மாவை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தார்  தேவகி. தேவகியிருந்த கோளத்தை கண்டே பத்மா தேவன் தவறியதை புரிந்து கொண்டவர் , தன் மாமனாரின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருந்தியவர் , தேவகியை அணைத்துக்கொண்டு அழுகையில் கரைந்தார்.

” பத்மா என்ன மா இது குழந்தை மாதிரி அழுது கிட்டு ? அவருக்கு ஆயுசு அவ்ளோ தான் , அதான் அவர் நேரம் வந்தவுடனே சாமி கிட்ட போயிட்டாரு. இதுக்கு யார் என்ன பண்ண முடியும் ? விடு மா நடந்து முடிஞ்சத பத்தியே நினைச்சுகிட்டு இருந்தா நமக்கு தான் மன கஷ்டம் வரும், அதனால நடந்ததை எல்லாம் மறந்துட்டு , இனி நடக்க போறதை பாப்போம் வா. ” என்ற தேவகி பத்மாவை அழைத்துக்கொண்டு போய் வீட்டின் பொது அறையில் ஏற்கனவே குழந்தையின் நாமகரணம் விழாவிற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்த இடத்தில அமர வைத்தவர் , ஆதி கேசவனை அழைத்து ஐயிரை கூட்டி கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார்.

” என்ன அத்தை இப்போ எதுக்கு ஐயிர கூப்புட சொல்லுறீங்க ? முதல்ல இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க ? ” என்று வினவிய பத்மாவை நோக்கி , தேவகி 

” அது ஒன்னுமில்லமா , நம்ம பாப்பா பிறந்து பத்து நாள் ஆயிடுச்சுல , அதான் பாப்பாக்கு நாமகரணம் பண்ணிட்டு அது கூடவே உனக்கும் புன்னியதானம் பண்ணி தீட்டு கழிச்சிட்டு , நம்ம குல தெய்வம் கோயிலுக்கு பாப்பாவையும் தூக்கிட்டு போயிட்டு வந்துரலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நம்ம குடும்பத்து மேல யார் கண்ணு பட்டுச்சோ தெரியல , வரிசையா நிறையா அசம்பாவிதம் நடந்துருச்சு. நம்ம பாப்பா வந்த நேரமாச்சும் இனிமே நல்லது நடக்கணும்னு வேண்டிக்கிட்டு குல தெய்வ கோயிலுக்கு போய்  பொங்கல் வச்சிட்டு வருவோம்.” என்றவரை இடைமறைத்த பத்மா 

” இல்ல அத்தை , இப்போ என் மனசிருக்க நிலைமையில நா இந்த நாமகரணம் விழாவிலையும் கலந்துகல , கோயிலுக்கும் வர போறது இல்ல. அதே மாதிரி இனி இந்த குழந்தைய நீங்களும் உங்க மகனுமே கவனிச்சுக்கோங்க , அந்த பொறுப்ப நா உங்க கிட்டயே ஒப்படைக்குறேன். என் வாழ்க்கையில என் படிப்ப தவிர நா ஆச பட்டது போல எதுவுமே அமையல , இனிமேலும் நா ஆசைப்பட்டது எதுவும் நடக்காதுனு எனக்கு தெரியும். அதுனால நா இனிமே என் முழு கவனத்தையும் என் படிப்புலையும் , வேலையிலும் செலுத்த போறேன் .”

 

பத்மா கூறியதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்த தேவகி 

” ஏன் கண்ணு இப்படி எல்லாம் பேசுற ? முதல்ல ஆம்பள புள்ள , பொம்பள புள்ளைன்னு பிரிச்சு பாக்குறத நிறுத்து. எந்த புள்ளையா இருந்தா என்ன எல்லாமே உன் ரத்தம் தான ? ” என்றவர் முடிக்கும் முன்பே 

” ஏன் அத்தை நீங்க பேச மாட்டீங்க ? நீங்க ஆம்பள புள்ளை பெத்தவங்க , உங்களுக்கு எங்க பொம்பள புள்ள பெத்தவங்களோட கஷ்டம் தெரிய போகுது? உங்க பையன் உங்க கூட இருக்கறதுனால உங்களுக்கு நா பேசுறது புரியாது. இதே என் பொண்ணுங்க வளர்ந்து கல்யாணம் பண்ணி போயிட்டா, நான் தனி மரமா தான் நிக்கணும். இதெல்லாம் உங்களுக்கு புரியாது ? ” என்று தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்த பத்மாவை பார்த்து நன்றாக வாய் விட்டு சிரித்த தேவகி 

” அடி போடி பைத்தியக்காரி, இந்த காலத்துல எத்தனை புள்ளடி கல்யாணம் முடிஞ்சும் அப்பா அம்மாவோட இருக்கானுங்க ? எல்லாம் பொண்டாட்டி வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு பிரைவசி வேணும்னு தனி குடுத்தினம் போயிடுறானுங்க. அத விடு உன் பையன் உன் கூட இருக்கான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுறியே அந்த புள்ளையே உன்ன கல்யாணம் பண்ண புதுசுல தனி குடுத்தினம் போறேன்னு சொன்னவன் தான். ஆனால் நீ அத்தை , மாமானு எங்க பின்னாடியே குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துனத பார்த்து , தனியா போனா எங்க நீ ரொம்ப தனிமையா பீல் பன்னுவியோன்னு பயந்து தான் தனி குடுத்தினம் போகாம எங்க கூடையே இருக்கான். ” 

தேவகி கூறியதை கேட்டு அதிர்ந்த பத்மா , வாயை பிளந்து கொண்டு நிற்க , தேவகி மேலும் தொடர்ந்தார் 

” அதில்லாம நா தெரியாம தான் கேக்குறேன் , உனக்கு இந்த ரொமான்ஸ் எல்லாம் வராதா டி ? ” 

தேவகி நடுவில் எதற்கு இப்படி ஓர் கேள்வியை கேட்கிறார் என்பது புரியாமல் , பத்மா விழித்துக்கொண்டு நிற்க , தேவகியோ 

” அட சரியான ட்யூப் லைட். உன் பொண்ணுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி போயிட்டா , நீயும் உன் புருஷனும் மட்டும் தனியா எவ்ளோ ஜாலியா ஊர் சுத்தலாம் ? வாழ வேண்டிய வயசுல தான் குடும்பம் , புள்ள குட்டின்னு ஓடுறோம் , வயசான காலத்துலையாச்சும் கணவன் மனைவி தங்களுக்காக வாழ்ந்து வாழ்க்கைய நல்லா அனுபவிக்க வேண்டாமா ? ஹமம் என் புள்ள தான் இப்புடி வயசான காலத்துலையும் என்னையும் என் புருஷனையும் ரொமான்ஸ் பண்ண விடாம , கோந்து மாதிரி நாங்க எங்க போனாலும் ஓட்டிகிட்டே திரிவான். ஆனா நீ எவ்ளோ அதிர்ஷ்டக்காரி டி , உன் பொண்ணுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணி போயிட்டா , நீயும் உன் புருஷனும் நல்லா ஜாலியா இருக்கலாம். ஹம் எனக்கு தான் அதுக்கு குடுத்து வைக்கல , அதான் நீயும் உன் புருஷனும் நந்தி மாதிரி நடுவுல இருந்தீங்களே, சரியான ரசனை கெட்ட ஜந்துங்க ” என்றவர் தலையில் அடித்துக்கொண்டார்.

தேவகி சொல்வதை அதி தீவிரமாக கேட்டுகொண்டிருந்த பத்மா , அவரின் இறுதி வரியில் தன் கவலை மறந்து சிரித்தவர் , ” இருந்தாலும் இந்த வயசுலயும் உங்களுக்கு ரொமான்ஸ் கேக்குதா அத்தை ” என்று அவர் குமட்டிலேயே செல்லமாக குத்தினார்.

” ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல , சரி அத விடு பத்மா . நா சொன்னதயெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு. இந்த காலத்துலையும் ஆம்பள புள்ள கடைசி வரைக்கும் நம்ம கூடையே இருப்பான் , பொம்பள புள்ள பாதிலேயே விட்டுட்டு போயிடுவானு நினைக்காத. ஆணோ பொண்ணோ எந்த புள்ளையா இருந்தாலும் நாம நல்லா பார்துகிட்டா தான் அதுவும் கடைசி காலத்துல நம்மல நல்லா பாத்துக்கும். நா சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாரு ” என்ற தேவகி குழந்தையை வந்திதா கையிலிருந்து வாங்கி பத்மாவின் கையில் குடுத்தவர், தன் வீட்டு மலை மகள் , அலை மகள் , கலை மகள் மூவருக்கும் ஒரு சேர திருஷ்டி சுத்தி போட்டார்.

சரியாக அந்நேரம் ஆதி கேசவனும் ஐயிரை அழைத்துக்கொண்டு வந்துவிட , குழந்தையின் நாமகரணம் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தேவகி தான் அக்குழந்தைக்கு தைரியமே உருவான மலை மகளின் பெயரான  ” கௌரி துர்கா”  என்னும் பெயரிட்டார். பின் தேவகி கூறியதை போல், குடும்பமாக  குல தெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு வந்தனர். 

என்ன தான் தேவகி கூறியது அனைத்தும் நிதர்சனமாய் இருந்தாலும் , பத்மாவால் அதை சட்டென்று ஒற்றுக்கொள்ள முடியவில்லை , அதே நேரம் அவர் கூறிய ” நாம புள்ளைய நல்லா பாத்துக்கிட்டாதான் அதுவும் நம்மல நல்லா பாத்துக்கும் ” என்னும் வரியை தவறாக புரிந்துகொண்ட பத்மா , இரண்டு பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்றால் பணம் அதிகமாக செலவாகும் , இப்போதிருக்கும் சம்பளத்தை வைத்துக்கொண்டு அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள முடியாது என்றெண்ணியவர் ,தன்னுடன் வேலை பார்க்கும் தோழி ஒருவரின் மூலம் குஜராத்தில் இருக்கும் ஓர் பெரிய பையோடெக்னாலஜி 

நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். 

பத்மாவின் திறமையில் கவரப்பட்ட அந்நிறுவனமும் அவருக்கு அவர் கேட்ட அதிக சம்பளத்தில் வேலை வழங்கியது. வேலை கிடைத்த செய்தியை தன் கணவரிடமும் , மாமியாரிடமும் கூறிய பத்மா இப்போதே வேலையில் சேர போவதாக கூற , தேவகி பாட்டி தான் அவரை அதட்டி மிரட்டி குறைந்தது ஆறு மாதமாவது குழந்தையுடன் இருந்து அதற்கு தாய் பால் குடுக்க வேண்டும் என்று தங்க வைத்தார்.

ஆதி கேசவனோ எங்கே உண்மை தெரிந்தால் தன் மனைவி தன்னை வெறுத்துவிடுவாளோ என்னும் பயத்திலேயே பத்மா சொன்னதற்கெல்லாம் மண்டையாட்ட துவங்கினார்.

பத்மாவும் பல்லை கடித்துக்கொண்டு ஆறு மாதங்களை ஓட்டியவர் , சரியாக ஏழாம் மாத துவக்கத்திலேயே கௌரியையும் , வந்திதாவையும் தேவகியின் பொறுப்பில் விட்டு விட்டு குஜராத் சென்றுவிட்டார்.

ஆதி கேசவனும் முன்பு போல் இல்லாமல் , இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தகப்பனாக , அவர்கள் ஆசை படுவது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்கு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்னும் முடிவெடுத்தவர் , கல்லூரியில் பேராசிரியராக ஒருபுறம் வேலை செய்துக்கொண்டு , மறுபுறம் பங்குத் தரகராக ஓர் நிறுவனத்தில்  பணிபுரிய துவங்கியவர் , வார இறுதி நாட்களில் மட்டும் தான் வீட்டிற்கு வந்து தேவகி , வந்திதா  , கௌரி என்று மூவருடனும் நேரம் செலவழித்தார். அதுவும் அவருக்கு கௌரியை காணும் போதெல்லாம் அவர் கடந்த காலத்தின் கருப்பு பக்கங்கள் நினைவுக்கு வந்து அவரை இம்சிக்க , ஆதலால் கௌரியிடம் சற்று ஒதுங்கியே இருந்தார்.

வந்திதாவை  தாய் , தந்தையின் திடீர் பிரிவு வெகுவாக பாதிக்க , தன் கவனத்தை அவர்களிடமிருந்து திசை திருப்ப , கௌரியுடன் அதிக நேரம் செலவழிக்க துவங்கினாள். எட்டு மாத குழந்தையாய் கௌரியிருக்க , அவளை அவள் அக்காவும் , பாட்டியும் பொக்கிஷம் போல் பாதுகாத்தனர்.

தேவகி பாட்டி தன் இரு பேத்திகளுக்கும் அன்பை சரி சமமாக பகிர்ந்தார். அது மட்டுமா , எப்போதெல்லாம் வந்தி  “அப்பா , அம்மா வேணும் ” என்று கேட்டு அழுகிறாளோ , அப்போதெல்லாம் ஆதிக்கும் , பத்மாவிற்கும் அழைப்பு விடுத்து ,  அவர்களை அதட்டி , மிரட்டி வரவைத்து விடுவார்.

நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக உருண்டோட , இரண்டு வயது குட்டி தேவதை கௌரி முதல்  முதலில் தன் அக்கா வந்தியை பார்த்து ” அக்கா ” என்றழைக்க , ஆறு வயது வந்திதாவிற்கு சந்தோஷம் தாளவில்லை. தன் குட்டி தங்கை அவள் பொக்கை வாயை திறந்து ” அக்கா ” ” அக்கா ” என்று அழைப்பதையே ரசிக்க துவங்கினாள். கௌரி பேச துவங்கியதே ” அக்கா ” என்ற வார்த்தையில் தான்.

அடுத்து ” பாட்டி ” என்று தேவகியை நோக்கி அழைக்க அவரும் அகமகிழ்ந்து போனார். பின் குழந்தைக்கு ” அப்பா , அம்மா ” என்ற வார்த்தைகளையும் தேவகி சொல்லி குடுக்க , துரு துரு குழந்தையான கௌரி விரைந்து அவ்வார்த்தைகளையும் கற்றுக்கொண்டவள் , தன் பாட்டியை பார்த்து ” அப்பா ” என்றும் , அக்காவை பார்த்து ” அம்மா ” என்றும் அழைக்க துவங்கினாள்.

கௌரி எப்போதெல்லாம் அப்பா , அம்மா என்கிறாளோ அப்போதெல்லாம் வந்திதாவிற்கு பத்மா , ஆதியின் நினைவு வந்துவிட , யாரிடமும் பேசாமல் அறைக்குள் சென்று அழ தனிமையில் அழத்துவங்கினாள். தேவகி பாட்டியிடம் வந்திதா அழுவதை மறைத்தாலும்  , மூன்று வயது கௌரியிடமிருந்து அவளால் மறைக்க இயலவில்லை. குழந்தையும் தன் அக்கா , தான் எப்போதெல்லாம் அப்பா , அம்மா என்கிறோமோ அப்போதெல்லாம் அவள் அக்கா அழுகிறாள் என்பதை புரிந்து கொண்டவள் , அதற்கு பின் அப்பா , அம்மா என்று கூறுவதையே வெகுவாக குறைத்துக்கொண்டாள்.

வந்திதாவிற்கும் , கௌரிக்கும் அவர்கள் ஆசை படுவது எதுவாயினும் அடுத்த நொடியே கிடைத்தது , ஆனால் தாய் , தந்தையரின் அருகாமையும் , அன்பும் தான் அவர்களுக்கு என்றுமே எட்டா கனியாக போனது.

பெற்றோர் ஏ.டி.எம் மெஷினாக மாறிப்போயினர். தங்கள் பிள்ளைகளை பாசம் கொட்டி வளர்ப்பதற்கு பதிலாக , பணத்தை கொட்டி வளர்த்தனர். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது போல் தேவகி பாட்டியின் கண்பார்வையில் பிள்ளைகள் வளர்ந்ததால் , அளவிற்கு அதிகமாக பணமிருந்தும்  தவறான வழியில் செல்லவில்லை. 

காலம் ஆற்றாத காயங்கள் இவ்வுலகில் ஏதும் இல்லை. அது போலவே வந்திதா தன் தாய் , தந்தையரிடம் அவளுக்கு கிடைக்காத அன்பையெல்லாம் தன் தங்கை கௌரியின் மேல் திகட்ட திகட்ட அன்பை கொட்டினாள். கௌரியை பொறுத்தவரை தன் மேல் அன்பு செலுத்தவும் , அக்கறைகொள்ளவும் தன் அக்காவும் , பாட்டியும் இருக்கிறார்கள், அதற்கு மேல் வேறு யாரும் தேவையில்லை .

தேவகி பாட்டியும் தன் பேத்திகளிடம் ஓர் தோழியை போல் பழகியவர் , தன் மகனும் , மருமகளும் இல்லாத இடத்தை முயன்ற அளவு நிரப்பிக்கொண்டிருந்தார். 

எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருக்க , அப்போது தான் தேவகி பாட்டி கௌரியின் சில செயல்களை கண்டு அதிர்ந்தார்.

அப்படி கௌரி என்ன செய்தாள் ?

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருந்துச்சு🙄🙄🙄 அப்படி என்ன செஞ்சிருப்பா🤔🤔🤔 டேய் பென்ஜில் என் ஹீரோயினே என்ன பண்ண😳😳😳