Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 7 ( 7.2 )

பொங்கல் ஸ்பெஷல் அத்தியாயம்

அமுதனின் கேள்வியில் தன் மேலிருந்த தவறை உணர்ந்த ஆதி கேசவனின் கண்கள் கலங்கியிருக்க , அவரது நினைவுகளோ வந்திதா பிறந்த வருடத்திற்கு பின்னோக்கி சென்றது.

 பத்மா வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கடந்திருக்க , ஆதி கேசவன் பத்மா காதலுக்கு சாட்சியாய் பத்மா கருதரித்தார். பத்மா கருவுற்றிருப்பதை அறிந்த ஆதி கேசவன் அகமகிழ்ந்து போக , தேவன் – தேவகியோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாய் , பத்மா உண்டான நேரத்தை குறித்து கொண்டு நேரே ஓர் பிரபலமான ஜோசியரின் முன் நின்றனர். அஜோசியரும் கரு உண்டான நேரத்தை வைத்து கிரக நிலைகளை ஆராய்ந்தவர் , மகாலட்சுமியே அவர்களுக்கு பேத்தியாய் பிறக்க போவதாகவும் , பிறக்க விருக்கும் குழந்தையால் அவர்கள் குடும்பத்திற்கு சகல ஸௌபாக்கியமும் கிட்ட போவதாகவும் கூறினார்.

அவர் வார்த்தைகளை வேத வாக்காய் எடுத்துக்கொண்ட தேவன் தேவகி தம்பதியினர் , அதே உற்சாகத்தோடு வீட்டிற்கு சென்றனர். ஆனால் விதியின் சதியா , அல்ல இயற்கையின் நியதியா என்று தெரியவில்லை , பத்மாவிற்கும் அவர் வயிற்றில் உண்டாகியிருந்த சிசுவிற்கும் ஆர்.ஹெச் காரணி இணக்கமின்மை ( ஆர் .ஹெச் பாக்டர் இன்கம்படிபிலிட்டி  ) காரணத்தினால் , பத்மாவிற்கு கருகலைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட , பத்மாவை பரிசோதித்த மருத்துவர் இச்செய்தியை ஆதியிடமும்  , தேவன் , தேவகியிடமும்  கூறினார்.  

 தேவனுக்கும் , தேவகிக்கும் தங்கள் மூட நம்பிக்கை கண்ணை மறைக்க,  பத்மாவிற்கு கருக்கலைப்பு செய்வதை எதிர்த்தனர். அவர்களை எதிர்த்து பேசிய ஆதி கேசவனையும் , இக்குழந்தை பிறக்கிவில்லை என்றால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று பயமுறுத்தி அவரை சமாதானம் செய்தவர்கள், எக்காரணம் கொண்டும் இவ்விஷயம் பத்மாவிற்கு தெரிய கூடாதென்று அவர்கள் மேல் சத்தியமும் வாங்கி கொண்டனர்.

பின் மருத்துவரை சமாதானம் செய்ய விழைந்தனர்.  மருத்துவர் முதலில் இதற்கு ஒற்றுக்கொள்ள தயங்கினார். காரணம் அம்மாவிற்கும் சிசுவிற்கும்  ஆர்.ஹெச் காரணி இணக்கமின்மை நேர்ந்தால் , முதல் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை , ஆனால் ஆர்.ஹெச் ஆன்டிபாடீஸ் கலந்த தாயின் உதிரம் , முதல் குழந்தைக்கு பின் உருவாகும்  குழந்தையின் உயிரை குடித்து விடும் ( எரித்ரோபிளாஸ்டோசிஸ் பீடாலிஸ் ) . ஆதலால் முதலில் தயங்கிய மருத்துவர் , பின் வயதானவர்கள் கெஞ்சுவதை விரும்பாதவர் , ஆதி கேசவனிடம் எக்காரணத்தை கொண்டும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்று கண்டிப்புடன் கூறி பத்மாவிற்கு வைத்தியம் பார்க்க துவங்கினார்.

பாவம் இதை ஏதும் அறியாத பத்மா , ஒரு புறம் வேலைக்கும் சென்று கொண்டு மறுபுறம் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் நன்றாக கவனித்துக்கொண்டார். இது நாள் வரை தன் மனைவியிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லாத ஆதி கேசவன் , இன்று குழந்தை விஷயத்தை அவரிடம் மறைப்பதை நினைத்து உள்ளுக்குள்ளே வெந்து புழுங்கி கொண்டிருந்தார். ஆனால் தேவனும் தேவகியும் , அப்படி ஓர் நிகழ்வு நடந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் , மிகவும் சகஜமாக வளம் வந்தனர். 

காலம் யாருக்கும் நிற்காமல் அதிவேகத்தில் உருண்டோடியிருக்க , ஒன்பதாம்  மாதம் முடியும் நிலையில் பத்மாவிற்கு பிரசவவலி ஏற்பட , அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

கடும் போராட்டத்திற்கு பின் வந்திதா இப்புவியில் ஜனித்தாள். அந்த ஜோசியர் கூறியது போலவே அவள் பிறந்த நேரம் , ஆதி கேசவன் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த பங்குகளின் சந்தை மதிப்பு பல லட்சங்களாக அதிகரித்தது. அதனூடே அவர்கள் நடத்தி வந்த காப்பகத்திற்கும் பல பேர் நன்கொடைகளை வாரி இறைத்தனர். அது மட்டுமல்லாது ஆதி கேசவனுக்கும் , பத்மாவதிக்கும் அவரவர் நிறுவனங்களில் ஒரு சேர சம்பள உயர்வுடன் சேர்த்து பதவி உயர்வும் கிடைத்தது.

தேவனும் தேவகியும் இது எல்லாம் தங்கள் பேத்தி பிறந்த நேரம் தான் , என்று பெருமை பீற்றி கொண்டு வந்திதாவை தூக்கி வைத்துக்கொண்டு ஊரையே வளம் வந்தனர். ஆதி கேசவனும் கூட மெல்ல மெல்ல அவர்களது மூட நம்பிக்கைகளை நம்ப துவங்கினார்.

அதே நேரம் பத்மாவிற்கு எந்த ஓர் சூழ்நிலையிலும்  உண்மை தெரிய கூடாது என்பதில் குறியாக நின்றார். 

மனிதன் போடும் கணக்குகள் எல்லாம் சரியாக அமைந்து விட்டால் , மேலே கடவுள் என்ற ஓர் கணக்கு வாத்தியார் எதற்கு இருக்கிறான் ?

பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும் நன்மை தீமைகளை கணக்கிட்டு அவரவர் வினைக்கு பயனாய் இன்பத்தையும் துன்பத்தையும் சரி பாதியாக அளந்து குடுக்கும் கணித மேதையான கடவுளின் பார்வைக்குள் விழுந்தனர் நம் ஆதி கேசவன் குடும்பம்.

” விதை விதைத்தவன் வினையறுப்பான் ” 

வந்திதா பிறந்து மூன்று வருடங்களுக்கு பின் …

மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்த தேவனும் தேவகியும் மீண்டும் அதே ஜோசியரை சந்தித்தனர். எப்போதும் போல் இம்முறையும் ஜோசியர் அருள் வாக்கு கூறுவார் என்றெண்ணி சென்ற தேவன் தேவகி தம்பதியினர் அங்கே ஜோசியர் கூறிய செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். 

” தேவகி அம்மா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல உங்க குடும்பத்துல ஒரு பெரிய துர் மரணம் நடக்க போகுது. ஆனால் நீங்க நினச்சா அதை தடுக்கலாம். ” என்று ஓர் பீடிகையுடன் ஆரம்பித்தார் அஜோசியர்.

அவர் கூறியதை கேட்டு அதிர்ந்த தேவன் , ” ஐயா , என்ன இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறீங்க ? இதுக்கு எதாச்சு பரிகாரம் இருக்கா ? நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க ” என்று கேட்க , பதிலுக்கு அஜோசியரும் 

” நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க. எங்கம்மா ருத்ரசக்தி தாயி உங்க குடும்பத்து மேலே கோவமா இருக்கா. அவ கோவத்த தனிக்கனும்னா , உங்க குடும்ப வாரிச எங்க தாயிக்கு பலி குடுத்தாகணும். ” 

” சாமி என்ன சொல்லுறீங்க ? நீங்க தான வந்தி பாப்பா எங்க வீட்டு மகாலக்ஷ்மினு சொன்னிங்க. இப்போ என்ன எங்க பாப்பாவையே பலி குடுக்க சொல்லுறீங்க ? ” என்று தேவகி கோவத்தில் பொங்கி விட்டார்.

பதிலுக்கு அஜோசியர் ” தேவகி அம்மா நா சொல்லுறத கொஞ்சம் முழுசா கேளுங்க. நா பலி குடுக்க சொன்னது , உங்க மூத்த பேத்திய இல்ல . உங்க மருமக வயித்துல ஜனிக்க போற இரண்டாவது பேத்திய ” என்றவர் விஷமமாய் சிரித்தார்.

” என்ன சாமி சொல்லுறீங்க ? என் மருமகளுக்கு இரண்டாவது குழந்தை இறந்து தான் பிறக்கும்னு டாக்டர் சொன்னாங்க. அப்படி இருக்க எப்படி குழந்தைய பலி குடுக்குறது ? ” என்ற தேவனுக்கு தன் குடும்பத்தின் நிலையை நினைத்து கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.

” தேவன் ஐயா மருத்துவர் என்ன கடவுளா ? அவர் சொல்றதெல்லாம் அப்படியே வா நடக்க போகுது ? ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிக்கோங்க , அந்த ருத்ரசக்திக்கு படையல் போடுறதுக்காகவே உங்க மருமக வயித்துல ஒரு பெண் குழந்தை ஜனிக்க போகுது.” என்ற அஜோசியர் ஓர் குரூர சிரிப்பை உதிர்த்தார்.

” அதெல்லாம் இருக்கட்டும் சாமி , ஆனா ஒரு பச்சிளம் குழந்தையை போய் எப்படி பலி குடுக்குறது? இதுக்கு என் மகனும் மருமகளும் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. ” என்ற தேவகியை நோக்கி , போதும் என்பது போல் தன் கையை உயர்த்திக்காட்டிய அஜோசியர் 

” போதும் தேவகி அம்மா . என் கிட்ட இந்த வெட்டி கதையெல்லாம் பேசாதீங்க . உங்க வீட்டுல நிஜமாவே ஒரு துர்மரணம் நடக்க கூடாதுனு நினைச்சீங்கன்னா,  நா சொன்னத செஞ்சே ஆகனும். அதுவும் அந்த துர்மரணம் உங்க மருமகளுக்கு நடக்க தான் அதிகமா வாய்ப்பிருக்கு. உங்க மருமக உயிரோட இருக்கணும்னு நீங்க ஆச பட்டா , நா சொன்னத செயுங்க ” என்றவர் அங்கேயிருந்த ருத்ரசக்தி அம்மனை நோக்கி தன் கண்களை மூடி  நிஷ்டையில் அமர்ந்துவிட்டார்.

மூட நம்பிக்கை என்னும் கொடிய நோய் தேவனையும் தேவகியையும் ஆட்கொள்ள , அடுத்து அவர்கள் செய்த காரியத்தினால் இங்கே பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக்க பட்டது.

அப்படி தேவனும் தேவகியும் என்ன தான் செய்தனர் ? 

தொடரும் …

( பின் குறிப்பு – இந்நவீன உலகில் எரித்ரோபிளாஸ்டோசிஸ் பீடாலிஸ்கு மருந்து கண்டுபிடிக்க பட்டு விட்டது, ஆனால்  ஓர் இருவது , முப்பது வருடங்களுக்கு முன்  அத்தனை மருத்துவ வசதிகள் இல்லாததால் அம்மருந்ததை பயன் படுத்தும் முறை தெரியாமல் இருந்தது. அதனால் மருத்துவர்கள் பலர் ஆர்.ஹெச் காரணி இணக்கமின்மை நேர்ந்தால் சிசுவின் உடல்நலன் கருதி முயன்ற அளவு கருக்கலைப்பு செய்து வந்தனர். ) 

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      சிவா பேபி மீம் கரெக்டா தான் டா இருக்கு முதலே இந்த கிழவன் கிழவியே போட்டு தள்ளிருக்கனும், அவசர அவசரமா கல்யாணம் பண்ணாங்க இப்போ குழந்தையே கொல்ல போறாங்க😑😑😑😑😑😑