Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 10 ( 10.2 )

 

பின் திருமண சடங்குகள் அனைத்தும் விரைந்து நடக்க , வந்திதாவும் , அமுதனும் தனிமையில் தங்கள் துணையுடன் செலவழிக்க போகும் நேரத்தை எதிர் பார்த்து காத்திருந்தனர். 

விருந்தினர்கள் வந்த வண்ணமிருக்க , அதில் ஓர் அழையா விருந்தாளியாய் வருகை தந்தவரை கண்டு அமுதனின் நெற்றி யோசனையில் சுருங்கியதெனில் , வந்திதாவிற்கோ அவ்விருந்தாளியை கண்டு அடி வயிற்றில் இருந்து கோவம் பற்றி கொண்டு வந்தது.

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்த அவ்விருந்தாளி நேரே மணமேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க , வந்தியோ அவரை முறைத்து பார்த்தவள் ” உங்கள யாரு இங்க வர சொன்னா ? ” என்று வினவ , ” அது என்ன பாப்பா இப்படி பட்டுனு கேட்டுபுட்ட , நம்ம அமுதனோட கல்யாணத்துக்கு நா வராமையா இருப்பேன் ? முறைப்படி நீங்க தான் என்னை பத்திரிக்க குடுத்து அழைச்சிருக்கனும் , ஆனா உங்களுக்கு தான் முறைனா என்னனே தெரியாதே ” என்றவர் அந்த ” முறையில் “சற்று அழுத்தம் குடுக்க , அது வரை அவர் பேசியதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த அமுதன்

 ” ஏன் பா , நீங்க தான நா உங்க முகத்துலையே முழிக்க கூடாதுன்னு சொல்லி அன்னைக்கு உங்க மோடெல்ல இருந்து வெளிய அனுப்புனீங்க ? சரி நானும் உங்க வார்த்தைய மதிச்சு தான் அன்னைக்கு அப்புறம் உங்கள பார்க்கறதையே அவாய்ட் பண்ணேன்.

 நீங்க எங்கள எவ்ளோ அவமான படுத்தியிருந்தாலும் பரவால்ல , கல்யாணத்துக்கு உங்கள கூப்பிடலனா முறையா இருக்காதுன்னு தான் , கதிரோட சேர்த்து  உங்களுக்கும்   பத்திரிகை வைக்கட்டானு கதிர் கிட்ட கேட்டேன், ஆனா கதிர் தான் உங்களுக்கு என் மேலயும் , வந்தி மேலயும் இருக்க கோவம் இன்னும் குறையலன்னு சொன்னான் . சரி நானும் உங்க கோவம் குறஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா அதுக்குன்னு முறை தெரியாதவங்கன்னு சொல்லாதீங்க பா ” என்று அடக்க பட்ட கோவத்துடன் பேச , சரியாக அந்நேரம் அங்கே வந்த வல்லி பாட்டியும் 

” உன்ன யாரு இங்கயெல்லாம் வர சொன்னது ? உன் புள்ளைய அவன்  ஆசப்பட்ட பொண்ணோட இந்த புள்ளைங்க உன் சம்மதம் இல்லாம சேர்த்துவச்சாங்க . ஆனா அந்த ஒரே காரணத்துக்காக  இந்த புள்ளைங்களுக்கு எப்படியெல்லாம் சாபம் விட்ட ? இப்போ மட்டும் இந்த புள்ளைங்க மேல உனக்கு என்ன திடீர்னு அக்கறை வந்திருச்சு ? ஓஹ் கல்யாண வீட்ல ஓசி சோறு சாப்பிட்டு போலாம்னு வந்தியா ? ” என்று அவர் தன்மானத்தை சீண்டினார்.

அவ்விருந்தாளியும் பதிலுக்கு வல்லி பாட்டியை திட்ட வாயை திறக்க போகும் நொடியில் , அமுதனின் தோழன் கதிர் என்னும் கதிரவன் , விரைந்து மேடையில் ஏறி , அவரை தடுத்திருந்தான்.

” அப்பா நான் தான் உங்கள கல்யாணத்துக்கு வர வேணாம்னு சொலிருந்தேன்ல , அப்புறம் எதுக்கு வந்திங்க ? சரி வந்தது தான் வந்திங்க , மொய் எழுந்தனோமா ,அமுதன வாழ்த்துனோமா  , அப்படியே பந்தியில உட்கார்ந்து சாப்பிட்டு போனோமானு இருக்க வேண்டியது தான ? எதுக்கு அவன் கிட்ட பிரச்சனை பண்ணி கிட்டு இருக்கீங்க ? ” என்று வினவியவன் , கையோடு அவரை மண்டபத்திலிருந்து வெளியில் அழைத்து செல்ல விழைய , 

” ஓ இவ்ளோ நாள் நாலு செவுத்துக்குள்ள தான் இவனுக்கு சப்போர்ட் பண்ணி என்னை அசிங்க படுத்துவ , ஆனா இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி நாய துரத்துற மாதிரி துரத்தி அசிங்க படுத்துறல்ல ? ” என்று தன் மகன் கதிரை நோக்கி வினவியவர், அதே நேரம் அமுதனின் புறம் திரும்பி 

” டேய் உன்னால தான் டா , இன்னைக்கு எனக்கு இந்த நிலமை. என் புள்ளைக்கு மட்டும் அந்த பிச்சைக்கார குடும்பத்தோட பொண்ணு கார்த்திகாவ கல்யாணம் பண்ணி வச்சிட்டு நீ மட்டும் நல்லா வசதியான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி கிட்டல ? ” என்றவர் வெறி கொண்டு கத்த , 

” ஹலோ யார பார்த்து பிச்சைக்கார வீட்டு பொண்ணுன்னு சொன்ன ? உன் புள்ள தான், கட்டுனா என் பொண்ண தான் கட்டுவேன் , இல்லனா தற்கொலை பண்ணிப்பேன்னு  அமுதனையும் , வந்திதாவையும் மிரட்டி , அவுங்க தலைமையில என் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான். சும்மா ஓவரா சவுண்ட் விடாத , அதே மாதிரி இன்னோரு தடவ என் குடும்பத்த பிச்சைக்கார குடும்பம்னு சொன்னேனு வை , என் பொண்ண வர தட்சணை  கொடுமை பண்றிங்கன்னு போலீஸ்ல கேஸ் குடுத்து மொத்த குடும்பத்தையும் ஜெயில்ல தள்ளிடுவேன், ஜாக்கிரதை!! ” என்று கத்திய கார்த்திகாவின் தந்தை சம்பூரண லிங்கத்தை  சமாதானம் செய்த வந்தி ,  கதிரை விரைந்து அவன் தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூற ,

”  இப்போ சொல்லுறேன் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. இந்த அமுதனும் , வந்திதாவும் என்னை பகைச்சிகிட்டு எப்படி சந்தோஷமா வாழ்ந்துராங்கன்னு பாத்துறேன். டேய் அமுதா , இன்னையிலேர்ந்து சரியா ஆறு மாசத்துக்குள்ள உன்னையும் , இதோ உன் பக்கத்துல நிக்குறாளே இந்த வந்திதாவையும் வீடு , வாசல் , சொத்து , சுகம்னு எல்லாத்தையும் இழந்து நடுரோட்டுல நிக்க வைக்கல , என் பேரு சிவபிரகாசம் இல்லடா ” என்று சபதம் விட்டவர் மண்டபத்திலிருந்து  வெளியேறும் முன்பு , அமுதனை நெருங்கி , அவன் காதில் ” மை சன் … எப்படி என் நடிப்பு ? சும்மா தூள் கிளப்பிட்டேன்ல … ” என்று வினவ , பதிலுக்கு அமுதனோ ” ஓவர் ஆக்ட்டிங் பண்ணி எல்லாத்தையும் கெடுத்துட்டு , இப்போ வந்து ஆக்ட்டிங் சூப்பரான்னு கேக்குறீங்க ? முதல்ல இடத்த காலி பண்ணுங்க.. அங்க என் மாமனாரு உங்களையும் என்னையும் சந்தேகமா பாக்குறாரு .. ” என்று முகத்தை கோவமாக வைத்துக்கொண்டே சொல்ல , சிவபிரகாசமும் ” ச்ச நீ சொன்னன்னு உன் கல்யாணத்துல வந்து நடிச்சதுக்கு பதிலா , சினிமால நடிச்சிருந்தா ஆஸ்கர் அவார்டே கிடைச்சிருக்கும் … போடா ஸ்டுபிட் பெல்லொவ் ” என்றவர் அவனிடம் யாருக்கும் தெரியாமல் கல்யாண வாழ்த்து தெரிவித்து விட்டு , கோவமாக மண்டபத்தை விட்டு வெளியேறுவது போல் நடித்தவர் , மண்டப வாசலில் நின்று அமுதன் புறம் திரும்பி ஒரு முறை கண்ணடித்து விட்டு சென்றார்.

சிவபிரகாசம் சண்டையிட்டு சென்றதை மனதில் ” எதிரிக்கு எதிரி நண்பன் ” என்று குறித்துக்கொண்ட ஆதிகேசவன் , தனக்கு தெரிந்த ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து , அவரிடம் சிவபிரகாசத்தையும் , அவர் நடத்தும் உணவகத்தை பற்றியும்  விசாரிக்கவும் உத்தரவிட்டவர் , கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

சிவபிரகாசம் சென்ற பின் ஓர் பெருமூச்சை இழுத்துவிட்ட கதிர் , தன் நண்பனை நெருங்கி , தன் தந்தையின் செயலிற்கு மன்னிப்பு கேட்பது போல் நடித்தவன் , அமுதன் காதருகில் குனிந்து ” அப்பா ஆக்ட்டிங் ஓகே தான ?” என்று வினவ , அமுதனும் அதற்கு சம்மதமாய் தலையாட்டினான். பின் கதிர் புதுமண தம்பதியருக்கு திருமண வாழ்த்து  தெரிவித்து  , அவர்களுக்கு கல்யாண பரிசாக , ஓர் தொட்டிலையும் பரிசளித்தான்.

அவன் பரிசில் வெட்கம் கொண்ட வந்திதா ” என்ன கதிர் இந்த தொட்டில் ஐடியா எல்லாம் அந்த கார்த்திகா எருமையோடது தான ? ஐடியா எல்லாம் நல்லா குடுக்குது எரும , ஆனா அவ பெஸ்ட் பிரெண்ட் கல்யாணத்துக்கு மட்டும் வர மாட்டுறா. அவுங்க அப்பா தான் அவள கூட்டிட்டு வரல , நீயாச்சும் அவள கூட்டிட்டு வந்துருக்கலாம்ல ? ” என்று பாவமாக வினவ ,

” ஏன் வந்தி , அவளுக்கு இப்போ ஒன்பதாம் மாசம் நடந்துகிட்டு இருக்கு , வளைகாப்பு போட்டு அவுங்க அப்பா வீட்ல இருக்கான்னு உனக்கு தெரியாதா ? அது மட்டுமில்லாம அவ ரொம்ப வீக்கா இருக்கான்னு டாக்டர் அவள பெட் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க. அதனால தான் அவள கூட்டிட்டு வர முடியல. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் , கண்டிப்பா குழந்தையோட வந்து உன்ன பார்ப்பா. ”  என்று கதிர் பேசிக்கொண்டிருக்கும் போதே கார்த்திகாவின் தந்தை , சம்பூரண லிங்கம் வந்து புதுமண ஜோடிகளை வாழ்த்திவிட்டு, அவரும் அமுதன் காதில் , ” ஆக்ட்டிங் எப்படி இருந்துச்சு ? ” என்று வினவ , அவரையும் ” ஆக்ட்டிங் சுமார் தான் ” என்று அமுதன் கிண்டல் செய்ய , அவன் தோளில் செல்லமாக தட்டி விட்டு , கதிரை அழைத்துக்கொண்டு விடை பெற்றார்.

அவர்கள் சென்ற மறுநொடியே ஓர் பெருமூச்சை இழுத்து விட்ட அமுதன் , வல்லி பாட்டியை அழைத்து கௌரியையும் , சரணையும்  பற்றி விசாரிக்க , வல்லி பாட்டியும் ” அந்த சிவபிரகாசம் மண்டபத்துல நுழைஞ்ச அடுத்த செகண்டே நம்ம கௌரியையும் , சரணையும் ஒரு பூஜை சாமான் குறையுதுன்னு பொய் சொல்லி கடைக்கு அனுப்பி வச்சிட்டேன். நல்ல வேல இந்த சிவபிரகாசம் பேசுனத மட்டும் கௌரி கேட்டுருந்தானு வச்சிக்கோ , அப்புறம் என் அக்காவ எப்படி அப்படி பேசலாம்னு அந்த ஆள அடி வெளுத்துருப்பா. ச்ச இந்த கௌரி புள்ளைக்கு வந்திதாவ பத்தி யாராச்சும் ஏதாச்சும் சொல்லிட்டா பொசுக்குன்னு கண்ணு மண்ணு தெரியாம கோவம் வருது. அவள சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு  ” என்று வல்லி பாட்டி அலுத்துக்கொள்ள , அதை கேட்டு கோவம் கொண்ட வந்திதா 

” சும்மா எப்ப பார்த்தாலும் என் தங்கச்சியவே குறை சொல்லாதீங்க. அந்த ஆள் பேசுனது மட்டும் சரியா ? மணமேடைல இப்படி ஜோடியா நிக்கும் போது , கூடிய சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் நடு ரோட்டுக்கு வருவீங்க , அது இதுனு சாபம் விட்டுட்டு போறான். ச்ச எனக்கு எவ்ளோ மனசு கஷ்டமா இருக்கு தெரியுமா ? ” என்று அத்தனை நேரம் அடுக்கி வைத்திருந்த தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டியவள் கண்களும் கலங்கி விட்டது.

அதே நேரம் சரியாக கையில் ரெண்டு புதிய பன்னீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு , உடன் வரும் சரணை திட்டிக்கொண்டே மண்டபத்திற்குள் நுழைந்த கௌரி , மண மேடையில் தன் அக்கா கலங்கிய விழிகளுடன் நின்றிருப்பதை கண்டு பதறியவள் , பன்னீர் பாட்டில்களை சரணிடம் குடுத்துவிட்டு விரைந்து மணமேடை ஏறியவள் , வந்திதாவை தன் புறம் திருப்பி

” ஏன் அக்கா அழுவுற ? என்னாச்சு உனக்கு ? இதுக்கு தான் நா அப்போவே சொன்னேன் உனக்கு கல்யாணமே வேணாம்னு , நீ தான் அமுதன் என்னை நல்லா பார்த்துப்பான், நீ கவல படாதன்னு சொன்ன . ஆனா இப்போ பாரு கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகல , அதுக்குல்லையே உன்ன அழ வைக்குறான் ” என்றவள் தானும் அழுக , கௌரி அழுவதை காண முடியாமல் , அவளை சமாதானம் செய்யும் பொருட்டு , வந்திதா அவளை திசை திருப்பினாள்.

” துர்கி செல்லம் , நானே உன்ன பிரிஞ்சு எப்படி இருக்க போறேன்னு நினைச்சு பீல் பண்ணி அழுது கிட்டு இருக்கேன், நீ என்ன டானா உன் மாமா தான் என்னை அழ வச்சாருனு சொல்லிக்கிட்டு இருக்க ? போ டி , உனக்கு என் மேல பாசமே இல்ல போல , அதான் என்னை என் புருஷன் வீட்டுக்கு எப்போ டா பேக் பண்ணி அனுப்பலாம்னு  காத்துகிட்டு இருக்க போல ” 

தன் அக்கா தான் அழுவதை காண இயலாமல் தன்னை திசை திருப்புகிறாள் என்பதை புரிந்துக்கொண்ட கௌரி , தன்னை இத்தனை வருடம் தாய் ஸ்தானத்தில் இருந்து பார்த்து கொண்ட தன் அக்கா இனிமேல் தன்னுடன் இருக்க போவதில்லை என்பதை உள்வாங்கி கொள்ளவே கௌரியின் குழந்தை மனம் ஏற்க மறுத்தது.

” அக்கா ஆ ஆ , நிஜமாவே நீ என்னை தனியா விட்டு போக போறியா ? ” என்று விசும்பிக்கொண்டே சிறு குழந்தை போல் தலையை சாய்த்து கேட்க , அவள் கேட்ட தோரணையில் , வந்திதா கௌரியை கட்டியணைத்து கொண்டு வெடித்து அழ துவங்கினாள்.

 

கண்ணில் அன்பைச் சொல்வாளே

யாரும் இல்லை இவள் போலே

துன்பம் என்னைத் தீண்டாமல்

தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே

பூக்கள் தந்திடுவாள்

சில நேரம் சண்டைகளாலே

என்னை வென்றிடுவாள்

பேசாமல் போன பின்னாலே

மனதைச் சொல்லிடுவாள்

இவள் சொந்தம் போதும் என்னும்

எண்ணம் தந்திடுவாள்

கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று

கண்ணைக் கேட்கின்றேன்

கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால்

தினமும் அழுகின்றேன்

என்னை நானே காண்பது போலே

இவளைப் பார்க்கின்றேன்

என்றும் எங்கும் வழித் துணையாக

இவளைக் கேட்கின்றேன்….

தொடரும் …

கௌரியை பற்றிய உண்மையையும் , அவள் அமுதன் வந்திதா திருமணத்திற்கு எவ்வாறு சம்மதித்தாள் என்பதையும் அடுத்த பதிவில் காணலாம் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

பின் குறிப்பு – ஈசன் படத்தின் ” கண்ணில் அன்பை ” பாடல் வரிகளை கொண்டு கௌரியை பற்றிய சிறு குறிப்பை குடுத்திருக்கிறேன், அப்பாடலை முடிந்தால் ஒரு முறை கேட்டு பாருங்கள் , அதில் வரும் வரிகள் கௌரியின் குண நலன்களுடன் நன்றாக பொருந்தும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஏன் டா பென்ஜில் இதான் அந்த வில்லனா😔😔😔😔 என்னமா தம்மு கட்டி பேசாறாப்ல🤣🤣🤣 சிரிச்சு சில்லரையே செதற விட்டுறலாம் போல🤭🤭🤭🤭 இதுக்கெல்லாம் அசந்தா அது அமுதா,வந்தி ஆகிட முடியுமா😉😉😉