உயிர் து(இ)ணையே வரு(மறை)வாயோ?
உயிர் து(இ)ணை டீசர் -2
மேளச் சத்தம் காதை கிழிக்க மக்களின் ஆரவாரம் இன்றி அமைதியாக இருந்தது அம்மண்டபம். மேளச் சத்தம் மட்டுமே அனைவரது செவியையும் நிறைத்தது.
ஐயரோ கருமமே கண்ணாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஓமகுண்டத்தின் முன்பு அமர்ந்திருந்த மணமக்கள் இருவரில், ஒருவரது முகம் எதையோ வென்றுவிட்ட களிப்பில் மெருகேறி மகிழ்வில் தத்தளித்தது என்றால், மற்றொருவரது முகமோ தன் முன்னே எரியும் அந்த நெருப்புத் தணலைப் போல் அநியாயத்துக்கு தகித்துக் கொண்டிருந்தது.
ஐயர் மந்திரத்தை ஓதி முடித்ததும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மஞ்சள் பூசிய தேங்காயின் மீது சுற்றி வைக்கப்பட்டிருந்த, பொன் தாலி கோர்க்கப்பட்டிருந்த பொன் மஞ்சள் கயிற்றை எடுத்து அவனிடம் நீட்டினார்.
அனைவரையும் அனல் விழிகளுடன் பொசுக்கி விடுவது போல் பார்த்த மணமகனாகப் பட்டவன் அதை கையில் வாங்கினான். நிமிர்ந்து தன் எதிரில் அசையாது சிலையென கல்மனங்கொண்டு நின்றிருந்தவளை வெறித்துப் பார்த்தவன் திரும்பி தன் அருகில் அமர்ந்திருப்பவளைப் பார்த்தான்..
ஒரு நிமிடம் கூட அந்த தாலியை தன் அருகில் இருப்பவளுக்கு கட்டவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் அவனால் அதை செய்ய முடியவில்லை. சட்டென்று மணமேடையை விட்டு எழுந்து நின்றான். ஏற்கனவே அமைதியில் மூழ்கி இருந்த மண்டபம் இப்போது இன்னும் பேரமைதியை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.
அவன் எழுந்த பின்பும் கூட அவன் அருகில் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்தவள் எழவில்லை. அமைதியாக நிமிர்ந்து அவனையே எதுவும் புரியாது பார்த்திருந்தாள்.
கையில் இருக்கும் மஞ்சள் தாலிக் கயிறுடன் மணமேடையை விட்டு இறங்கி கீழே வந்தவன், அவ்வளவு நேரம் இருக்கையில் அமர்ந்திருந்த மக்களிடையே அமராமல் நடைபாதையில் விரைப்புடன் நின்றிருந்த அவளை, விரைந்து நெருங்கியவன், “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு எனக்கு இப்பவும் புரியல. ஆனா நீ சொல்ற சப்ப காரணத்துக்காக என்னாலே இவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான் அழுத்தமாக அதேநேரம் அனைவருக்கும் கேட்கும் விதத்தில்.
“அப்போ இது தான் உன்னோட முடிவு இல்லையா?”என்றவளது குரல் ஏனோ ரொம்ப வித்யாசமாக இருந்தது.
“எப்ப மணமேடையை விட்டு எந்திரிச்சு வந்து உன் முன்னாடி இவ்வளவு தைரியமா நின்னேனோ அப்பவே இதுதான் என்னோட முடிவுன்னு எல்லோருக்குமே தெளிவா புருஞ்சுருக்கும். அதே போல நீ ஒண்ணும் சின்ன குழந்தை கிடையாது இது உனக்கு புரியாம போறதுக்கு”
“புரியாம இல்ல, ஒரு கிளாரிஃபிகேஷனுக்காக தான் கேட்குறேன், இதுதான் உன்னோட முடிவு இல்லையா?”
“திரும்பத் திரும்ப அதையே கேட்காத, இது தான் என்னோட முடிவு. நீ சொல்ற காரணத்துக்காக எல்லாம் என்னால இவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நாசமா போய்டும். இதுல எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டும் இல்லை, இன்னும் ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு, சோ தேவையில்லாம நீ ரொம்ப ரிஸ்க் எடுக்குறன்னு தோணுது?” என்றான்.
”சரி இந்த ரிஸ்க் எடுக்க நான் விரும்பல” என்றவள் மணமேடையில் இருந்த பெண்ணைப் பார்த்து,“சுபி குட்டி மேல எந்திரிங்க” என்றதும் அந்த பெண்ணும் எழுந்து நின்றாள்.
“கீழ வாங்க” என்று மீண்டும் அவள் இன்ஸ்ட்ரக்சன் கொடுத்ததும் ஏனோ சாவி கொடுத்த பொம்மை எப்படி செயல்படுமோ அதேபோல் குடுகுடுவென்று ஓடி வந்து அவள் அருகில் நின்றாள் அந்த பெண்.
“சுபி குட்டி உனக்கு விளையாடுறதுக்கு இந்த பொம்மை தான் வேணுமா, இல்ல வேற பொம்மையா இருந்தாலும் பரவாயில்லையா?” என்று கொஞ்சும் குரலில் அந்த பெண்ணின் கன்னம் தடவி கேட்டாள்.
“இல்ல டாலி, இந்த பொம்மை பாக்க அழகா இருக்கு, எனக்கு இந்த பொம்மையையே வாங்கி குடு” என்று வயது பெண் ஒருத்தி சிறு குழந்தை போல் எச்சில் ஒழுக வார்த்தைகளைச் சிதற விட்டாள்..
“சரி முதல்ல டாலி இந்த பொம்மைக்கு மாலை போட்டு மரியாதை பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த பொம்மையை உன்கிட்ட தர்றேன்” என்றவள் அந்த சிறுமியை அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர வைத்து விட்டு மணமகனானவனின் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றாள்.
அவனை மணமேடையில் அமர வைத்து விட்டு தானும் அருகில் அமர்ந்தவள் ஐயரிடம், “மறுபடியும் மந்திரத்தை சொல்லுங்க” என்றாள்.
மீண்டும் மணமகனிடம் இருந்து பெறப்பட்ட மாங்கல்யம் தேங்காயின் மீது வைக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை ஐயரின் மந்திரங்கள் அங்கே முழங்கியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் தாலியை எடுத்து ஐயர் அவன் கையில் கொடுக்க முகம் முழுவதும் பூரிப்புடன் அதை பெற்றுக் கொண்டான். ஆனால் இப்போது தன் முன் இருக்கும் அக்னி ஜூவாலையில் இருந்த தணலை இரவல் வாங்கி இருந்தது அவளது மதிமுகம்.
அனைவரையும் தெனாவட்டாக பார்த்தவன் எதையோ சாதித்து விட்ட மகிழ்வில் தாலியை அவளது கழுத்தின் அருகே கொண்டு சென்றான். அதுவரை தான் அவன் நினைவில் நிற்கிறது மறுகணம் கண்கள் சொருக மயங்கி மணமேடையிலேயே சரிந்தான். நொடியில் அவனைச்சுற்றி ரத்த வெள்ளமாக பரவியிருந்தது.
மணமகளோ கையிலிருக்கும் கத்தியுடன் எழுந்து நின்றவள், “ஏன்டா பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி, நல்லவன் மாதிரி என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி என் குடும்பத்துக்குள்ளேயே வர நினைப்பீங்க, ஆனா நானோ கேன சிறுக்கி மாதிரி நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிக்கிட்டு ஊமை மாதிரி இருப்பேன்னு நினைக்கிறீங்களா. அந்த அளவுக்கு நான் முட்டாள் கிடையாதுடா” என்று கீழே சரிந்து கிடந்த அவனை பார்த்து சொன்னவள் நிமிர்ந்து அனைவரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்.
ஓரமாக விழிகளில் வழியும் கண்ணீரோடு மலைத்து நின்றிருந்த அவனின் பெற்றோரை ஒருகணம் கூர்ந்து கவனித்தவள், “நீங்க என்னதான் நடந்ததை மறைக்க நெனச்சாலும் சரி அது எனக்கு தெரிஞ்சுருச்சு. எங்களோட குடும்பம் இப்படி போனதுக்கு நீங்க தான் காரணங்குறது எனக்கு என்னைக்கோ தெரியும். ஆம்பள பையன் இருந்தா கத்தியை குடுத்து வெட்டிட்டு வர சொல்லிருப்பாங்க. ஆனா நான் தான் பொண்ணாச்சே அதான் உறவாடிக்கெடுன்னு சொல்லி சொல்லியே தான் வளர்த்தாங்க. இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் இத்தனை வருஷமா காத்திருந்தேன், ஆனாலும் உங்க பையன் உயிர் வாழுறதுக்கு கடைசி சான்ஸ் குடுத்தேன்.
என் தங்கச்சியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவனை நல்லபடியா உயிர் வாழ வைக்கலாம்னு நெனச்சேன். ஆனா அவனோ அப்படிப்பட்ட பொண்ணு வேணா, நான் தான் வேணும்னு நினைச்சான் அதுக்கு தான் இப்படி சாக கிடக்குறான். சாகக்கிடக்குறான் என்ன நிச்சியமா சாகத்தான் போறான். இனி இவன் பிழைக்க மாட்டன், நீங்க இவனை எங்க கொண்டு போனாலும் பிழைக்க மாட்டான். ஏன்னா கத்தியில வீரியமான விஷம் தடவியிருந்துச்சு. பண்ணுன பாவத்துக்கு எல்லாருமே அதுக்குண்டான பலனை அனுபவிச்சு தானே ஆகணும். நீங்களும் அனுபவிங்க, இது மட்டுமில்ல இன்னும் உங்களுக்கு ஏகப்பட்ட பலன்கள் ஒண்ணு ஒண்ணு மேல ஒண்ணா வர காத்திருக்கு வெயிட் பண்ணுங்க” என்று சொன்னவள் அதே நிமிர் நடையுடன், முகத்தில் சிறிதும் சலனமின்றி கீழே இறங்கி வந்தவள் தன் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி இருந்தாள்.
அங்கிருந்த அனைவரும் உறைந்து நின்றிருந்தார்களே தவிர, அவளைத் தடுக்கவும் இல்லை வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மணமேடையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தவனின் உடலில் இருந்து அதிக்கப்படியான ரத்தம் வெளியேறியதால் அவனது வெண்பட்டு வேஷ்டி சட்டை செந்நிற குருதியில் குளித்திருந்தது. மெல்ல மெல்ல அவன் உயிரானது உடலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது..
———————————————————-
“அடியேய், உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா. என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கேன்னு உனக்கு தெரியுதா?”
“நான் என்ன பண்ணிட்டு வந்து இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்டி. ஆனா ஒண்ணும் தெரியாத அப்பாவியான எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை குடுத்துருக்குறதை நினைச்ச தாண்டி என்னால தாங்கிக்க முடியல.”
“இன்னொரு தடவை உன்னை அப்பாவின்னு சொன்ன அடிச்சு பல்லெல்லாம் பேத்துருவேன் நியாபகம் வச்சுக்கோ. உனக்கு என்னடி அவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துட்டாங்க உன் தங்கச்சியை கொண்டு போயி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க, அவளை கியூர் பண்றதுக்கு. உன்னை ஹாஸ்டல்ல சேர்த்திருக்காங்க அவ்வளவுதான் விஷயமே. உமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்துக்கிட்டு நீ வேலைக்கு தான் போற அதையும் ஞாபகம் வச்சுக்கோ. இதைப் பார்த்தா, அப்படி ஒண்ணும் உனக்கு பெரிய தண்டனையா கொடுத்த மாதிரி தெரியலையே. நீ செஞ்ச வேலைக்கு நியாயமா உன்னைப் புடிச்சு ஜெயில்ல தான் போட்டுருக்கணும் ஆனா விதி விளையாடிடிச்சே. உங்க அப்பா அம்மா இந்த அளவுக்கு உனக்கு பாவம் பார்த்ததே பெரிய விஷயம் மூடிக்கிட்டு படு ஏதாவது தொணதொணன்னு என்கிட்ட பேசிட்டு இருந்த நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்று எரிந்து விழுந்தாள் அவளது தோழி.
“ஏண்டி எப்ப பார்த்தாலும் எல்லாரும் என்னையே குறை சொல்றீங்க நான் எந்த தப்பும் பண்ணலையே?”
“வேணா ஸ்ரீ மறுபடியும் என்னோட கோபத்தை கிளராத பேசாம படு” என்று சொல்லி தன் தோழியை திட்டி விட்டு படுத்து உறங்க ஆரம்பித்தாள் மைவிழி.
மைவிழியையே வெறித்துப் பார்த்து விட்டு தானும் உறங்க ஆரம்பித்தாள் ஸ்ரீ.
நடுநிசி ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காணும் திசையெங்கும் காரிருளே வியாபித்திருந்தது. மழை வேறு அங்கொன்றும் இங்கொன்றுமாக தனது பயணத்தை தொடங்கி சட்டு சட்டென்ற சத்தத்துடன் பெய்து கொண்டிருந்தது. இடையிடையே பூச்சிகளின் ரீங்காரம் வேறு அந்த இரவு நேரத்தில் பெரும் சப்தம் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த
ஸ்ரீக்கு தன் மீது திடீரென்று யாரோ பாரத்தை வைத்து அழுத்துவது போல் இருந்தது. அவள் குரல்வளையை யாரோ நெரிப்பது போலிருக்கவும் மூச்சுவிடவே சிரமப்பட்டவள் பட்டென்று விழிகளைத் திறந்து தன் தோழியை கூப்பிட முயன்றாள். ஆனால் அவளால் கத்த முடியவில்லை. கைகள் இரண்டும் காற்றில் அலைபாய்ந்தது. விழிகள் இரண்டும் மேல்நோக்கி நிலை குத்தி நின்றது. கால்கள் இரண்டும் படுக்கை மெத்தையில் உராய்ந்து கொண்டிருந்தது. உடலோ தூக்கி தூக்கி போட்டது.
மூச்சடைத்தது, சுவாசம் தடைப்பட்டு போல் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டாள். வாயைத் திறந்து மூச்சுவிட முயன்றும் அவளால் மூச்சு விட முடியவில்லை, குரல்வளையில் அழுத்தம் கூடுவதைப் போல் உணர்ந்தாள்.
‘இன்னைக்கு நாம சாகப்போறோம்’ என்று அவள் எண்ணி நடுநடுங்கிய சில நிமிடங்களிலேயே சட்டென்று அவள் அந்த கட்டில் இருந்து விடுபட்டாள். சலனமே இல்லாமல் கட்டிலில் கிடந்தாள். விழிகளிலிருந்து கண்ணீர் கணக்கில்லாமல் கொட்டி தீர்த்திருந்தது.
தனது குரல்வளையை யாரோ அழுத்தமாக நெரித்தது போலிருந்தது, ஆனால் அவ்வறையில் அவளையும் அவளது தோழியையும் தவிர எவருமில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவள் வேக வேகமாக மூச்சு விட்டும், இறுமியும் தன்னை சரிப்படுத்திக் கொள்ள, அந்த சத்தத்தில் எழுந்து அமர்ந்த மைவிழி, “என்னடி ஆச்சு?” என்று கேட்க,
“ஒண்ணும் இல்லைடி நீ படு” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்தவள் கண்ணாடியின் முன்பு சென்று நின்று தன் கழுத்தைப் பார்த்தாள். கழுத்திலே யாரோ கை கொண்டு நெரித்ததுக்கான அடையாளமாய், சிவப்பு வரி கோடுகள் வளையமாக அவளது கழுத்தைச் சுற்றி அலங்கரித்திருந்தது.
அதைக் கண்டவளுக்கு நெஞ்சு கூட்டுக்குள் அழுத்தமாய் ஒரு பயம் எழுந்து அது உடலினுள் அசுர வேகத்தில் ஊடுருவுவதை உணர்ந்தவள் சட்டென்று விழிகளை மூடிக்கொண்டாள். பின்பு நிமிடங்கள் கழித்து விழிகளைத் திறந்தவள், பார்வையை கண்ணாடியில் பதித்தாள். அடுத்தகணம் தன் பின்னே நின்ற பிம்பத்தை கண்டு அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.
சரிந்த அவளது தேகமானது காற்றில் எவ்வித பிடிமானமும் இன்றி மேலெழுந்து அங்கிருந்து நகர ஆரம்பித்தது. அதன் பயணத்திற்கு கதவுகளும் தானே திறந்து வழி விட்டன. .
– உயிர் து(இ)ணை வரும்..